” எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. எப்பொழுதும் சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள்.” என்று ஒரு நண்பர் சொன்னார். இத்தனைக்கும் அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர்கள் பலரை நண்பர்களாகக்கொண்டவர். கோயில்கள் மற்றும் பல்கலாசார பொது அமைப்புகளில் அங்கம் வகித்து கசப்பான அனுபவங்களினால் நொந்து நூலாகிப்போனவர். கசப்பான அனுபவங்களை சுமந்தவாறு, தொடர்ந்தும் பல அமைப்புகளில் ஈடுபாடு காண்பித்துக்கொண்டிருப்பவர்.
” நீங்கள் சொல்வது உண்மைதான். எழுத்தாளர்களிடையே ஒற்றுமை இருக்காதுதானே…? பாண்டியன் சந்தேகம் தீர்ப்பதற்காக அவன் மனைவி கூந்தலில் வரும் வாசனை இயற்கையானதா..? செயற்கையானதா..? என ஆராய்ந்து சண்டை பிடித்தவர்கள் சிவனும் நக்கீரனும். கம்பரும் ஒட்டக்கூத்தரும் பிடிக்காத சண்டையா…? என்னதான் சண்டை பிடித்தாலும் சிவன், நக்கீரனை எரித்தவாறு எமது தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் உயிரோடு எரிக்கமாட்டார்கள். ஆனால், எழுத்தால் எரிக்கப் பார்ப்பார்கள்!!!
தத்தம் எழுத்துக்களினாலேயே கருத்தியல்களை எதிர்ப்பார்கள். அரசியல் மற்றும் பொது அமைப்புகள், கோயில்களில் பொலிஸ் வருமளவுக்கு சண்டைகள் நடக்கின்றன. எமது எழுத்தாளர்கள் அந்தளவிற்குச் செல்லமாட்டார்கள்” என்று எமது எழுத்தாளர் வர்க்கத்தின் மகிமை பற்றிச்சொன்னேன். யாழ்ப்பாணத்தில் 1960 களில் கூழ்முட்டை எறிந்த எழுத்தாளர்கள் மறைந்துவிட்டார்கள். புகலிடத்தில் சமகால எழுத்தாளர்கள் வேறு வழிகளில் தமது எதிர்ப்புகளை காண்பிக்கிறார்கள். பிரான்ஸில் வதியும் கோமகன் தொகுத்திருக்கும் நேர்காணல் நூலான குரலற்றவரின் குரல் பற்றி எழுத முற்பட்டபோதுதான் மேற்கண்ட உரையாடல் நினைவுக்கு வந்தது. எழுத்தாளர்கள் அனைவருமே ஒரேநேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய சாதனைதான். அச்சாதனையை நிகழ்த்தியிருப்பவர் கோமகன். இவரது இயற்பெயர்: இராஜராஜன். ‘இராஜ ராஜா’ வுக்குரிய கம்பீரத்தோற்றம் கொண்டவர். அவர் எழுத்தாளர்களிடத்தில் முன்வைத்திருக்கும் கேள்விகளிலும் கம்பீரம் தெரிகிறது. குரலற்றவரின் குரல் பற்றி சொல்வதற்கு முன்னர் கோமகன் பற்றிய சிறிய அறிமுகத்தை தருகின்றோம்.
எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒரு பேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலான இதழ்கள், இணைய இதழ்களில் எழுதிவரும் கோமகன், இதுவரையில் சுமார் முப்பது சிறுகதைகளைப் படைத்திருப்பவர். கோமகனின் தனிக்கதை என்ற சிறுகதைத்தொகுப்பும் வெளியாகியிருக்கிறது. நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் எழுதியிருப்பவர். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து ‘நடு’ என்னும் இணைய இதழை வெளியிட்டுவரும் அதன் பிரதம ஆசிரியர். சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் என்று மொத்தம் மூன்று சிறப்பிதழ்களை இதுவரையில் ‘நடு’ வரவாக்கியிருக்கிறது. பிரான்ஸிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி இதழில் கோமகன், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர் யோ. கர்ணனின் நேர்காணலை பதிவுசெய்த முதல் அனுபவத்தின் தொடர்ச்சியாக மேலும் 13 பேரைத்தொடர்புகொண்டு இந்த நேர்காணல் தொகுப்புக்காக உழைத்திருக்கிறார்.
Continue Reading →