அஞ்சலி: மூத்த ஊடகவியலாளர் ‘ஈழநாடு’பெருமாள் மறைவு!

ஊடகவியலாளர் பெருமாள்..இன்று வெளியான ‘காலைக்கதிர்’ பத்திரிகைச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. .கூடவே துயரினையும் தந்தது. பழம்பெரும் பத்திரிகையாளர் ‘பெருமாள்’ அவர்கள் தனது எண்பத்தியாறாவது வயதில் மறைந்த செய்தியே அது. ‘காலைக்கதிர்’ செய்தியின்படி அவர் ஈழநாடு செய்தி ஆசிரியராகவும், பின்னாளில் உதயன் பத்திரிகையின் ஆசிரியபீடத்திலும் பணியாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்துக்கேற்ப் அவரது உடல் கையளிக்கப்பட்டதாகவும்  மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் அவர்களின் மறைவு என் நினைவுகளை அசை போட வைத்து விட்டது. என் இலக்கிய வாழ்க்கையில் அவரை நான் ஒருபோதுமே மறக்க மாட்டேன். என் எழுத்துலகத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் என்னை ஊக்குவித்த பத்திரிகையாளர்களில் அவர் முதலிடத்திலிருப்பவர். இவ்வளவுக்கும் இன்றுவரை அவரை நான் ஒரு தடவை கூடச் சந்தித்ததில்லை. அவர் எப்படியிருப்பார் என்பது கூடத் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் எப்பொழுதும் என் நெஞ்சில் அவருக்கு எப்போதுமோரிடமிருக்கும்.

அக்காலகட்டத்தில்தான் நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். சிரித்திரன் சஞ்சிகையில் என் முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் கல்விப்பொதுத் தராத உயர்தர வகுப்பில் , விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதன்பின் நான் எழுதிய சிறுகதை ‘அஞ்சலை என்னை மன்னித்து விடு’. அது வீட்டு வேலைக்காரியாகப்பணிபுரியும் ஏழைச்சிறுமியிருத்தியைப்பற்றிய சிறுகதை. அதுவே ஈழநாடு பத்திரிகையில் வெளியான எனது முதற்சிறுகதை. அப்பொழுது ஈழநாடு வாரமலர் ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவர் பெருமாள் அவர்கள். அதன்பின் எனது சிறுகதைகளான ‘இப்படியும் ஒரு பெண்’ , ‘மணல் வீடுகள்’, ‘பல்லி சொன்ன பாடம்’ ஆகியவை ஈழநாடு வாரமலரில் வெளியாகின. இவற்றைத்தொடர்ந்து ‘நியதி’ என்னும் உருவகக் கதை, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் இரண்டு, புத்தாண்டுக் கவிதையொன்று, யாழ்நகரிலுள்ள பழமையின் சின்னங்களைப்பேணப்படுதலின் அவசியம் பற்றிய கட்டுரை ஆகியவை ஈழநாடு வாரமலரில் வெளியாகியன. அவற்றை வெளியிட்டு என்னை ஊக்குவித்தவர் பெருமாள் அவர்கள். ஆரம்பத்தில் என் பால்யப் பருவத்தில் என் ஆக்கங்களுக்குக் களம் அமைத்துத்தந்தது ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலர். பின்னர் என் பதின்ம வயதுகளில் என் எழுத்துலகத்தின் அடுத்த கட்டத்தில் களமமைத்துத் தந்த முக்கியமான பத்திரிகை ஈழநாடு. அக்காலகட்டத்தில் அதற்கு உறுதுணையாகவிருந்தவர் பெருமாள் அவர்கள்.

நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த சமயம் ஈழநாடு அப்பத்திரிகையின் வாரமலரில் எழுதிக்கொண்டிருந்த இளம் எழுத்தாளர்களைப்பற்றிய காவலூர் ஜெகநாதனின் கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தது. என்னையும் பற்றி எழுதும்படி காவலூர் ஜெகநாதனை அது வேண்டியிருந்தது. காவலூர் ஜெகநாதனும் தொடர்புகொண்டிருந்தார். தபால் மூலம் கேள்விகளை அனுப்பியிருந்தார். அத்துடன் என் புகைப்படத்தை புளக் செய்து அனுப்பும்படியும் கோரியிருந்தார். நானும் படிப்புச் சூழல் காரணமாக என் புகைப்படத்தை அனுப்பவில்லை. அந்நேர்காணலும் வெளிவராமலேயே போனது. அவ்விதம் என்னை நேர்காணல் செய்யும்படி கோரியதும் பெருமாளாகத்தானிருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். ஏனெறால் அவர்தான் அப்போதும் ஈழநாட்டில் வாரமலர் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது நான் அராலி வடக்கில் வசித்து வந்தேன். அம்மா (நவரத்தினம் டீச்சர்) அராலி இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகக் கற்பித்துக்கொண்டிருந்த கால்கட்டம். அராலி வடக்கிலிருந்து ஒரு பெண்மணி நாங்கள் பாடசாலை செல்வதற்காக யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் பயணிப்பார். அவரை எல்லோரும் ஈழநாடு அக்கா அன்று கூறுவார்கள். அவர் ஈழநாடு பத்திரிகையில் பணிபுரிவதால் அவர் அவ்விதம் அழைக்கப்பட்டார். அவரையே பின்னர் பெருமள் அவர்கள் திருமணம் செய்ததாகவும் அறிந்தேன்.

‘ஈழநாடு’ அக்காவுக்கும் ‘டீச்சரின்’ மகனான நானே ஈழநாடு பத்திரிகையில் எழுதுபவன் என்பது என் அம்மா மூலம் தெரிந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். ஏனென்றால் அவர் ஓரிரு தடவைகள் என் சகோதரிகளிடம் பெருமாள் அவர்கள் என்னைப்பற்றிக்கதைத்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். சகோதரிகள் கூறியிருக்கின்றார்கள்.

பத்திரிகையாளர் பெருமாளின் மறைவு பற்றிய செய்தி அவரைப்பற்றிய நினைவலைகளை எழுப்பி விட்டது. பெருமாள் அவர்களின் பிறந்த வீடு மலையகம். புகுந்த வீடு யாழ்ப்பாணம். மலையகத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்துப் பத்திரிகை உலகில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பெருமாள் அவர்கள். அவரது இலக்கியப்பங்களிப்புகளில் முக்கியமானது அவர் ஈழநாடு வாரமலர் ஆசிரியராகவிருந்து வளர்த்து விட்ட எழுத்தாளர்கள்தாம். இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் பலரை அவர் அவர்கள்தம் படைப்புகளை ஈழநாடு வாரமலரில் வெளியிட்டு ஆதரித்தார். அவ்வகையில் அவரால் ஊக்குவிக்கப்பட்டு உருவானவர்களில் நானுமொருவன் என்பதை எப்பொழுதுமே நான் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் அவர் பங்களிப்பு முக்கியமானது; எப்பொழுதும் நினைவுகூரப்படும்.

ngiri2704@rogers.com