அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்!

தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ரஎப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர்.  தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர்.  தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர்.  எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்.  அடக்கம் மிகுந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம்  மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும்  நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.

அவர் 1974-ல் இறந்த போது அவர் சொத்து எதுவும் விட்டுச் செல்லவில்லை. குடும்பம் வறிய நிலையில் தான் இருந்தது. அவர் குமாரர்கள் தம் வழிச் சென்றுவிட்டனர். இது எங்கும் அனேகமாக நேர்வது தான். அவரது இரண்டாவது மகள், பாப்பா தான் வீடுகளில் சமையல் வேலை செய்து தன் தந்தையையும் தாயையும் காப்பாற்றி வந்திருக்கிறார். திஜர வின் மறைவிற்குப் பின்னும் இதே நிலை. 2008-ல் தமிழக அரசு திஜர வின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கி ஆறு லட்சம் ரூபாய் வழங்கியது. அந்த ஆறு லட்ச ரூபாயைப் பங்கு போட்டுக்கொண்டனர் திடீரென தோன்றிய திஜரவின் சட்டபூர்வமான வாரிசுகள் அனைவரும். இதுவும் அனேகமாக எங்கும் நடப்பது தான். அதில் திஜரவையும் தாயையும் காப்பாற்றி வந்த பாப்பாவின் பங்கு மிகச் சிறியதாகியது. அதுவும் தான் இருந்த வறிய நிலையில் கடன் கொடுத்தவர்களூக்குப் போயிற்று.

இப்போது, தந்தை திஜரவையும் தன் தாயையும், காப்பாற்றி வந்த பாப்பா வுக்கு 86, இப்போது அவரையும் தன் 50 வயது அக்காவையும் காப்பாற்றி வருவது அவரது இரண்டாம் மகள், திஜர வின் பேத்தி, 48 வயது சத்திய பாமா. அவர் குழந்தைகளுக்கு பாட்டு வகுப்பு நடத்தி அதில் வரும் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்தது. அம்மா அக்கா இருவருமே முதுமையின் தேக உபாதைகளால் துன்புறுபவர்கள். அவர்களுக்கான மருத்துவ செலவும் சேர்ந்து கொள்ள அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இரண்டாம் பேத்தியினதாகியது.

தீக்ஷை பெற்று சன்னியாசியாக தனித்து வாழ்ந்த வந்த மலர்மன்னன் தான் அவர்களைத் தான் இருந்த இடத்திற்கு அழைத்துப்  பாதுகாத்து வந்துள்ளார் கடந்த சில வருஷங்களாக. அவரும் இப்போது மறைந்துவிட்டார். மலர் மன்னன் தன் கடைசி வருடங்களில் சத்தியபாமாவின் பாட்டு வகுப்புக்களையும் நிறுத்தச் சொல்லி அவர்களது முழு பாதுகாப்பையும் தாமே எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர்களது பெயரில் ஒரு வைப்பு நிதி ஒன்று வசூலித்து ஏற்படுத்தி விட்டால் அதிலிருந்து வரும் வட்டி இவர்களை ஓரளவுக்குக் காப்பாற்றும் என்பது அவரது திட்டமாக இருந்திருக்கிறது.  அவரது மறைவிற்குப் பிறகு, அந்தத் திட்டமும் நிறைவேறாது அவரது பாது காப்பும் அற்ற நிலையில் திஜரவின் பேத்தி இருவரும் அவர்களது முதிய தாயும் விடப்பட்டுள்ளனர். குறைந்த வாடகையில் அவர்கள் இருப்பது மலர்மன்னன் இருந்த இடம் தான். மலர் மன்னன் இறந்ததும் அவரது குடும்பத்தார் வந்து மலர்மன்னனின் புத்தகம் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர்.

எனது வேண்டுகோள் நாம் எல்லோரும் அவரவருக்கு முடிந்த அளவில் செய்யும் பொருள் உதவி மொத்தமாக வறிய நிலையில் அனாதையாகி விட்ட இவர்களூக்கு உதவக்கூடும். ஆறு லட்சம் அரசின் நிதி உதவி பெற்ற குடும்பம் என்ற பெயர்  அழுத்தி வதைக்கும் வெற்று பாரமாகவே இவர்களுக்கு ஆகியுள்ளது வாழ்க்கையின் தரும் முரண்களில் ஒன்று. எனவே திரும்பவும் எனது வேண்டுகோள். அவரவர் சக்திக்கு ஏற்றபடி உதவி அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரங்கள்.

R. Sathyabama, SB A/c No. 37950100001010,
IFSC code BAR8 ‘O” THICE, Micr code  600012047
Bank of Baroda, Thiruvanmiyur Branch,
Chennai

அவரது முகவரி: R.Sathyabama,  18/37, MuthuLaxmi Road,
Laxmipuram (near Pamban Swami mutt)
Chennai-41  PIN 600 041

vswaminathan.venkat@gmail.com