அன்புள்ள தோழியே கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

book_anpulla5.jpg - 10.71 Kbண்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட சப்ரா அக்ரம், தற்போது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறையில் கல்வி கற்கும் மாணவியாவார். இவரது கன்னிக் கவிதைத் தொகுதி கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெளிவந்திருக்கின்றது. 52 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் சிறியதும் பெரியதுமான 42 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இவர் பாடசாலைமட்ட கவிதைப் போட்டிகளிலும், மாவட்ட ரீதியான கவிதைப் போட்டிகளிலும் பங்குபற்றி பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக நோக்குமிடத்து சிறு வயது தொடக்கம் முதுமை வரை பெண்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். பருவ வயதை அடைந்துவிட்டால் அவள் படும் துன்பங்கள் ஏராளம். குடும்ப வாழ்க்கைக்குள்ளும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாண்டி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக்கூடிய வலிமை பெண்களுக்கு இயற்கையாகவே கிடைத்ததல்ல. தொடர் போராட்டங்களினால் கற்றுக்கொண்ட பாடங்களாக அவை அமைந்துவிடுகின்றன. சிறந்த மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக ஒரு பெண் பல பரிணாமங்களைப் பெறும்போதும் தனக்கேயுரிய தனித்துவத்தில் அவள் தலைசிறந்து விளங்குகின்றாள். தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் படிக்கல்லாகத் திகழ்கின்றாள்.

பூவை இவளோடு மலரும் நாளை (பக்கம் 04) எனும் கவிதை வரிகள் இதை உணர்த்துகிறது இவ்வாறு…

பனித்துளிகளைத் தாங்கும்
மெல்லிய இதழ்களைப் போல
பழிகளைத் தாங்கும் இதயம் இங்கே..
இமைகளைக் கெஞ்சம் மூடிட்ட போதிலும்
இதயத்தில் நாளங்கள் துடித்திடுமே
உன் வழியில் தடைகள் தடுத்திட்ட போதும்
உன் வலிமை தடைகளை வென்றிடுமே!

தம்மைப் பற்றிய நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டும். முடியும் என்ற சொல்லை முன்னோர் சொன்ன வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். என்னால் முடியாது – எனக்குத் தெரியாது போன்ற எதிர்மறை எண்ணங்களை அடியோடு விட்டொழித்தால்தான் சாதனைகளை நம் தோழனாக்கலாம். சாதிப்பதற்கு உறுதியான குறிக்கோளும், விடாமுயற்சியும் இருத்தல் அவசியமாகும்.

இது நடக்குமா? என்னால் முடியுமா? போன்ற தயக்கங்களின் காரணமாக பலருக்கு எத்தனையோ வெற்றிகள் எட்டிப் பறிக்க முடியாத கனியாகவே இருக்கின்றன. வாழ்க்கையில் சாதித்துவிட்டுப் போனவர்கள் எல்லாம் போராடாமல் அதனைப் பெறவில்லை. வருடங்களை தியாகம் செய்து கண்டுபிடிப்புளை உலகறியச் செய்த விஞ்ஞானிகள் தொடக்கம், இமய மலையில் ஏறி வெற்றியைப் பெற்றவர்கள் வரை அனைவரும் சாதனை எனும் படிக்கட்டுக்களில் தவழ்ந்துபோய் வெற்றியெனும் உச்சத்தைத் தொட்டவர்கள்தாம். எளிதில் எதுவும் கிடைத்து விடுவதில்லை. அவ்வாறு கிடைப்பவை நிலைத்துவிடுவதுமில்லை. நம்பிக்கை (பக்கம் 06) என்ற கவிதையினூடாக நம்பிக்கையீனங்களை நம்மத்தியிலிருந்து தகர்தெறிய வேண்டும் என்கிறார் நூலாசிரியர் ஷப்ரா.

நம்பிக்கை என்ற சக்தி உள்ள
எந்த மனிதனும்
சவால்களுக்கு முகங்கொடுக்க அஞ்சுவதில்லை!

கடலைத் தாண்டி கரையைத்
தொட்டால்தான்
அதற்குப் பெயர் அலைகள்..
தடைகள் தாண்டி
வெற்றி பெற்றால்தான் சாதனைகள்!

தாயைப் பாடாத கவிஞர்கள் இல்லை. தாயன்புக்கு ஈடு இணையில்லை. உலகத்தில் உள்ள அனைத்து உறவுகளிலும் நமக்காக உண்மை அன்பை உதிரக்கூடிய ஒரு உறவுகளில் தாய் முக்கியமானவர். ஒரு குழந்தையின் வளர்ப்பு தொடக்கம் அனைத்து விடயங்களிலும் கரிசனை காட்டி நல்லவனாக அவனை வளர்த்தெடுப்பதில் தாயின் பங்கே அதிக பங்களிப்புச் செய்கின்றது. ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதில் தாயின் பிரார்த்தனைகள் மிகவும் கண்ணியத்துக்குரியவை. மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றிலும் தாய்க்குத்தான் முதலிடம். தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்ற அடிகளிலும் தாயைப் பற்றியே முதலில் சொல்லப்படுகின்றது. தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு என்ற நபி பெருமானின் கூற்றும் தாயின் சிறப்பை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. அன்னையைப் பற்றிய நூலாசிரியரின் பல கவிதைகளில் தாய் (பக்கம் 07) இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உந்தன் உறவால்
எந்தன் இரவுகள்
பகல்போல் ஆனதே..
உன் வழிகளில்
என் வாழ்விற்கான வழியை
நான் அறிந்தேன்..

நான் வலிகொண்ட போது
உன் விழி நீர் சிந்திய வேளை
அதுவே என் வாழ்க்கை வானத்தில்
நீராவியாய் சேர்ந்து
என் திறமைகள் மழைத் துளியாக்கி
என் நிகழ்காலத்தை நிறம்பெற வைத்து
வருங்கால வானவில்லை
வசந்தமாய் வர வைத்ததே!

அமாவாசை ஆசைகள் (பக்கம் 09) என்ற அழகிய குறியீட்டுக் கவிதை தன்னகத்தே பல செய்திகளைக் கெண்டுள்ளது. நிலவு காட்டிச் சோறு ஊட்டும் நிகழ்வினூடாக வாழ்க்கையை சித்திரித்துக் காட்டுகின்றார். முழு பிரபஞ்ச சோகம் இந்தக் கவிதையில் இழையோடியிருக்கின்ற பாங்கு இரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது. ஒரு வனாந்தர இருட்டுக்குள் சிக்குப்பட்ட ஜீவன் வெளியே போவதற்கு வழியற்று தவிக்கும் தவிப்பை இந்தக் கவிதை தந்துவிடுகின்றது.

அசையாத மொட்டைமாடி
தூண்களிடையே அமர்ந்து
அமாவாசையில் அழிந்துபோகும்
அம்புலியைக் காட்டி
அன்னம் அளித்தாய்
ஏனென்று இன்றுதான் புரிகிறது..

என்னுள்ளே துளிர்விடும் ஆசைகளும்
அன்பு ஏக்கங்களும்.. எண்ணங்களும்
அழிந்து அடிச்சுவடே மாறிப்போகும்
என்பதை எச்சரிப்பதற்காகவா அன்னையே..?

ம்.. நீ அன்னம் இட்ட தோரணையிலே
கூறிவிட்டாய் எனக்காக அகழிகள்
வெட்டப்பட்டுள்ளது என்பதை..
அட நான்தான் புரிந்துகொள்ளவில்லை!

நட்புக்காக உயிரைக் கொடுப்பது எளிது – ஆனால் உயிரைக் கொடுக்கக் கூடிய நட்பு கிடைப்பதுதான் அரிது என்று சொல்வார்கள். நட்பு என்ற பெயிரில் நடிக்கும் சில விஷமிகளால் நட்பின் கற்பே சூறையாடப்பட்டுவிட்டது. நட்பு தாயன்புக்கு ஈடானது. அதில் மாசு இருப்பதில்லை. வாழ்க்கை எனும் பாதையில் எதிர்ப்படும் பள்ளங்களை நிவர்த்திக்கக்கூடிய சக்தி நட்புக்கு உண்டு. சந்தோசத்தை இரட்டிப்பாக்குவதும், சோகத்தை பாதியாக்குவதும் நட்புக்கு கிடைத்த வரம். தோழனின் தோள் சாய்ந்து கண்ணீர் விடும் சுகம் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எதிர்பார்ப்புகள் இன்றி தொடரும் புனித நட்புபற்றி மகுடத் தலைப்பில் அமைந்த அன்புள்ள தோழியே (பக்கம் 23) கவிதை பின்வருமாறு இயம்புகின்றது.

அன்னை தந்தைபோல் – நீ
எந்தன் சொந்தமா?
இரத்த பந்தமாய்
உடன்பிறந்த சொந்தமா?

விழுகின்ற நிழலை
நிலம் தாங்குவதுபோல்
தவறி விழும்போது
தாங்கும் கைகள் உனதே!

கன்னித்தொகுதி என்று சொல்ல முடியாதளவுக்கு ஷப்ராவின் கவிதைகள் மனதை வசீகரிக்கின்றன. கவிதையின் கருக்களில் பொதிந்துள்ள சமுதாயக் கருத்துக்கள் படிப்பினையாக இருக்கின்றன. கவிதை எழுதும் திறமை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதை அழகாக பயன்படுத்திக்கொள்வதே நம் திறமை. இலக்கிய உலகுக்குப் புதியவரான ஷப்ராவை வரவேற்பதுடன் எதிர்காலத்தில் இன்னும் பல சிறந்த  படைப்புகளைத் தர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் – அன்புள்ள தோழியே
நூல் வகை – கவிதை
நூலாசிரியர் – அக்ரம் சப்ரா
வெளியீடு – கலாசார அலுவல்கள் திணைக்களம்

poetrimza@gmail.com