அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய குறிப்புகள் சில…

– அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றயது. –

- அறிஞர் அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமியின் ‘நாயினுங் கடையர்’ அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் ‘காளி முத்துவின் பிரஜா உரிமை’ படித்ததுண்டா? அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின.  இரு கதைகளும் சான்று. “போர்க்குணம் மிக்க எழுத்தாளன் தான் உண்மையான இலக்கியவாதி” என டால்ஸ்டாய்யும் கார்க்கியும் சொன்னதின் அர்த்தம்- அந்தப் போர்க்குணம் மிக்க எழுத்து அ.ந.க., அ.செ.முவிடம் அக்காலமே வெளிப்பட்டது. இருவரையும் மனிதாபிமானம் மிக்கோர் என்பேன்.

ஒரு படைப்பாளியின் சிருஷ்டிகளைப் படியாமல் மேலெழுந்தவாரியாக ‘ஆகா ஊகூ’ என்று இலக்கியத்தை மலட்டுத்தனமாக்கும் கேடுகெட்ட நிலை இன்னும் விட்டபாடில்லை. படியாமலே விமரிசிக்கும் ‘மேதைகளு’ம் உண்டு. ஓர் சமயம் ஓர் இலக்கிய ஆர்வலர் நான் எதிர்பாராத ஒரு கேளிவியைத் தூக்கிப் போட்டார் – “சில விமர்சகர்கள் மேடையில் பேசினாலும் பத்திரிகையில் எழுதினாலும் புத்த்கம் வெளியிட்டாலும் கனதியாக – பல்வகை உத்திகளில் ஓயாமல் எழுதுகிற அ.ந.கந்தசாமியையோ உங்களையோ ஏன் குறிப்பிடுவதில்லை”. “குருடர்கள் யானை பார்த்த கதை தெரியும் தானே?” என்று திருப்பிக் கேட்டேன்.  ஒரு வகையில் பார்த்தால் எழுதிகிறவனுக்கு விளம்பரம் ஆபத்துத் தான். விளம்பர ஓடுகாலித்தனம் இலக்கியக்காரனுக்கு விழுக்காடு என்பதை இன்னும் நம்பாத – புரியாத கலை இலக்கிய ‘மேதாவி’கள் நம் மத்தியில்  செப்பமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியிருப்பதும் நல்லதுதான். கம்பு எடுத்தால் அடியெடுத்து ஓடாமல் விழுந்து படுக்கிற மாடுகளும் உண்டு தானே.

‘ஐரோப்பியக் கனவான்’ போன்ற அநகவின் தோற்றம், நடையுடை பாவனை, எளிமை மனங்கொண்ட தமிழ் இலக்கியக்காரரை அவர்பால் அண்டவிடாது என்று என்னால் தவறாகக் கணிக்கப் பட்டதால் சொற்ப காலம் நான் எட்டியே இருந்தேன். சொல்லப் போனால் தவறான் கணிப்பும் ஆய்வும் அவர் மனசின் தவறுகளை உணர்த்த உதவுகிறதுதான்.

1947லிருந்து 1952 வரை அநக என்மட்டில் பேசிக் கொள்ளப்படுகிறவராக மட்டுமே திகழ்ந்தமை, ‘ஐரோப்பியக் கனவான்’ மாதிரியான அவர் பிம்பம்தான். பழைய யாழ்ப்பாணத்தைப் பெயர்த்து வந்து, ‘இது தான் நவீன கலாசாரம்’ என்று சொல்லியிருக்கக் கூடாதா? பேய்த்தனமாக அவர் அதையும் செய்யவில்லை.

பிரான்ஸ் இலகியகர்த்தா எமிலி சோலாவின் நாவலை அநக தமிழில் மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ வார இதழில் படித்தபோது எழுந்த மேலுணர்வு அவர்பால் காந்திற்று. எமிலிசோலாவின் ‘திரேசா’ நாவலில் எப்பவோ மனம் பறி கொடுத்திருந்தேன். ஆறுமுக நாவலரின் கலப்புத் தமிழுரை நடை நமக்கெல்லாம் ஐதீற்வரம் போடுகிறது. நாவலர் சமூகத்தைப் பிசகாக வழி நடத்தியவர்தான். எனினும் ‘தவறான வழியில் இன்பத்திற்குப் பதில் துன்பமே விளையும்’ என்னுமவர் தம் ஒரு கருத்தியலை எமிலி சோலாவின் ‘திரேசா’ நாவலில் படித்து வியந்த காலம் அது. ‘நானா’ நாவல் சுதந்திரனில் அநக விரும்பியபடி வரவில்லை. அவர் கொதிப்படைகிறார் என்று அறிந்தேன். ஆங்கில வார இதழ் ‘ரிபியூன்’, ‘வீரகேசரி’, ‘சுதந்திரன்’ பத்திரிகைகளில் இருந்தபோதும் ‘தேசாபிமானி’, ‘ரிபியூன்’ இரண்டிலுமே சுதந்திரமாக எழுதினார்.

அநக பற்றி அறிந்ததெல்லாம், ‘அவர் ஆற்றலை முற்றாக வெளிப்படுத்தும் சாதனம் வெளியே இருக்கவில்லை’ என்று பின்னாளில் அவருடன் கொண்ட நெருக்கம் எனக்கு நிரூபித்தது. அவர் வேகத்திற்கு அக்காலம் வானொலியும் சரியாக ஈடு கொடுக்கவில்லை. ‘இலக்கியக்காரன் புளுகுணிச் சித்தன்’ என்று மிதவாதி நினைப்பதால் கனதியான எழுத்தும் புலுமாசாகத் தோன்றுகிறது என்ற ஆத்திரம் அவருக்கும் இருந்தது.

மனம், வாக்கு, காயம், சிந்தனை, செயல் – காற்றாடி போல் சுழன்றடிக்கும் காரிய தீரர். சகல் துறைகளையும் இலக்கியத்திற் பரி சோதித்து விடுகிற அவர் வேகம் என் துரித கதிக்குச் சாணை தீட்டிற்று. சாக்கடைகளிலும், கோபுர வாசல்களிலும் அவர் பாதங்கள் பதிந்தன. இலக்கியம் அவரிடம் இயக்கமாக இருந்தது.

கொழும்புக் கோட்டை மணிகூண்டுக் கோபுர முன்றல் நடைபாதையில் செ.கணேசலிங்கன் சகிதம் முதன் முதலில் கண்டேன். என் கற்பனையில் உருவகித்த மனிதராகத் தோன்றவில்லை. கூரிய கண் மின்னி என் உள்ளத்தில் ஆழ்ந்து காந்தி எழுந்த கிளர்வுப் பொறி சதிரமடங்கச் சிலிர்த்தது. ‘இவர் தான் ஏ.என்.கே’ என்று செ.க அறிமுகம் படுத்தியபின், என்னை அறிமுகம் செய்து வைத்த பாணியை அவரும் ஏற்றதாக இல்லை என்பதை அவர் சொற்கள் வெளிப்படுத்தின.

“எங்களுக்கு வெளியாலயும் அடிபடுகிற பெயராச்சே” என்று செ.கவைப் பார்த்து அ.ந.க கூறியவிதம் அப்படியாகவிருந்தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையே அநக ‘எங்கள்’ என்று குறிப்பிட்டார். கொடுத்த கைலாகு க்ஷணவேலை வாஞ்சையுள் அமுங்கிக் கிடந்தது. 

மார்க்சிச அறிஞர் கே.ராமனாதன், கே.கணேஷ், அ.ந.கந்தசாமி, பி.ராமநாதன், எச்.எம்.பி.முஹிதீன், கே.டானியல், என்.கே.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி,  இளங்கீரன், ஜீவா,  பசுபதி என்று இமுஎசவுள் பரந்த இறுக்கம் என்னளவிலும் கட்சி -சித்தாந்தம்-இலக்கியம் என்றும் போயிற்று. அ.ந.க, பி.ராமநாதன்,பிரேம்ஜி, எச்.எம்.பி.முஹிதீன் நாளடைவில் எனக்கு நெருக்கமாயினர். இலக்கிய வளர்ச்சிக்கான விமர்சனப் பார்வை அ.ந.க.வில்தான் அதிகம் ஊற்றெடுத்து நின்றது.

மார்க்ஸியம், மதம், சங்கீதம்,உளவியல்,செக்ஸ்,வரலாறு, மானிடவியல், விஞ்ஞானம், சமூகவியல், இலக்கியம், கணிதம், மருத்துவம், என்று அவர் படியாத நூல்களில்லை. நூல்களை அவர் உயிர் போல் நேசித்தார். அவருடனான தோழமையானது சர்ச்சை, தர்க்கம், வேக இயக்கம், விவாதம் என்றாகியது. சில விவாதங்கள் விடியும்வரை நீண்டதுண்டு. அவர் மேடை அலங்காரச் சொற்பொழிவாளர் அல்லர். கருத்தினை ஆழ அகல விரிவாக்கி விளக்கும் பேரறிஞர் சாகரம் என்று அவர் உரை விரிந்து நின்றது. 

இமுஎச ஊடாக அநக என் இறுக்க நெருக்கம், இயக்க இலக்கியப் பரிணாமம் ஒரு தோழமைக்குள்ள இலக்கணமாகத் திகழ்ந்தது. டானியலுக்கும் ‘பாட்டாளிப் பாவலன்’ என்ற இரத்தினசிங்கத்திற்கும் அடுத்து உள்ளார்த்தமாக இணைந்த உயிர்ப்பான இலக்கிய உன்னிப்பு என்மட்டில் அநகவோடு தான் இருந்தது. வீதி, நடைபாதை, குச்சுத்தெரு,சாக்கடை, ஹொட்டல்,தேநீர்க்கடை என்றெல்லாம் அவர் முழக்கம் இலக்கிய மூச்சோடு இடையறாது கலந்து நிற்கும். அவர் எப்போதும் ஓர் அபூர்வவாதியாக எனக்குத் தோன்றினார். எவரையும் இலகுவில் ஆகர்ஷிக்கும் தன்மை கொண்டவரெனினும், தான் சொல்வதை ஒப்புவிக்கும் வரை ஒரு சர்வாதிகாரி போல் அட்டகாசிப்பார். அசட்டை, அசமந்தம், மறைத்து பேசுதல், சிரித்துச் சமாளித்தல், மெளனித்தல் அவருக்கு ஆகாத விஷயங்களாதலால் சர்வாதிகாரத்தனம் அவர் பால் வந்து விடுவதில் நியாயமிருப்பதை உணர எனக்குச் சொற்ப காலம் எடுத்தது.

சங்கீதக் கச்சேரி, சதுராட்டம்,நாடகம், சினிமாக் கலை,குச்சு விட்டுச் சமாச்சாரங்கள் இந்தக் கனவானுக்கு இலக்கியக் கருவூலங்களாக அமைந்து விடுகின்றன. பாட்டாளி – தொழிலாளி வர்க்க மக்கள் ‘இலக்கியம் என்றால் எந்தக் கடைச்சரக்கு?’ என்று கேட்கக் கூடியவர்களுடனும் இவர் மணிக்கணக்கில் சம்பாஷிக்கையில் ஒரு தொழிற்சங்கவாதியாகவும் காண்போம்.

லடிஸ் வீரமணி, ஸ்ரனிஸ் கலைதாசன்,சுகந்தன், அந்தனி ஜீவா, ஓவியர் குமார், இக்பால் என்று கொழும்பு கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டி என விரிந்த அவரின் இளவட்டச் சிஷ்யர்கள் நாளடைவில் என் தோழர்களாக – நண்பர்களாக ஆகினர். மகா கவியின் கவிதா சாரங்களை லடிஸ் வீரமணி நாடகமாக வாலாயமாக்கிய வல்லமை அநகவிலிருந்துதான் பிறப்பெடுத்தது. அநகவால் பிரத்தியேகமாக ஆகர்ஷிக்கப்பட்ட தன்மையை – அதன் வளர்ச்சியை -இன்று அந்தனி ஜீவாவில் காணலாம்.

இலக்கிய உலகில் எவரையும் ‘உருவாக்குவது’ என்ற போலித் தனத்தை அவர் வெறுத்தார். ‘ஊக்குவிப்பது’, ‘உருவாக்குவது’ என்றெல்லாம் கோஷிக்கும் வணிகமயம் அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. லட்சிய ஆவேசிப்போடு எழும் கிளர்வுக்குக் களம் கொடுப்பது, நெறிப்படுத்துவது,வழிகாட்டுவது, விமர்சிப்பதும் என்றெல்லாம் சொல்லுகின்ற அநக, எழுத்தை விளக்கமாக, தெளிவாக, கலாபூர்வமாக ஆளுமைப்படுத்தும் விதம் அவர் சிறுகதை,நாவலில் பிசகின்றி வெளிப்பட்டது. எடுத்த ஈட்டி குறித்த ஆளை நோக்கி நேரிடை பாயும் முனைப்பாக அவர் கருத்தியலைச் செலுத்துகின்ற பாங்கு அவர் சமப் படைப்பாளிகளையும் வியக்கச் செய்தது. அவருக்குப் பின் தன் கருதுகோளை இயல்பான செல்நெறிகையினூடாகத் துணிந்து சொல்லும் முனைப்பு டானியல் படைப்பில் அதிகம் வெளிப்பட்டது.

எமது கால ஆரம்பத்தில் ஈழத்திலே சிறுகதையினை உயிர்ப்பாகப் படைத்தவர் டானியல். எனினும் அநக, எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் போல் வெவ்வேறு பாணியில் எழுதும் ஆற்றல் டானியல் எழுத்தில் இல்லை. ‘சகல ஆக்கங்களுக்கும் ஒரே பாணியை – நடையைக் கையாள்தலை ஒரு ‘தனித்துவமாக’க் கொள்ளப்படுவது முழுப் பலவீனமே தவிர பலமல்ல’ என்று அநகவும், எஸ்.பொ.வும், நானும் ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தோம்.

அநக கல்விமான் என்பதை விடப் படிப்பாளி, படைப்பாளி, நுட்பமான மூளைசாலி என்பதே சரி. புரியாத விஷயம் என்று எதுவுமே அவரிடம் மல்லுக் கட்டியது கிடையாது. ஆய்வு, தேடல், விமர்சிப்பு எதையும் அறிய அவாவும் மனம் அவர் இயற்கைப் பண்பாக இருந்தமையாலேயே ஓர் இயக்கம் போல் அவர் வீறாகச் செயற்படவும் முடிந்தது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, பத்திரிகை ஆசிரியர் என்றெல்லாம் அவர் இலக்கியம் அளாவி நின்றது.

அவர் கருத்தை எடுத்துச் சொல்லும் விறுத்தம் ஊசி முனையாகப் பாய்ச்சுகினும் இலக்கியம் அவர் உள்ளாத்ததிற்கு மாறாக ஒருபோதும் ஊறு செய்ததில்லை. அவர் பேச்சில் அகங்காரம் ஒறுப்பாகவும், ஆவேசத் தொனி அட்டகாசித்து  வேகமாகவும் பாயும். போர்க்குணம் மிக்க அவர் வீச்சான எழுத்து அவரின் இலக்கிய நயத்தைக் கெடுத்ததில்லை. கரு, உரு,அழகு, எளிமை, தெளிவு அவர் படைப்புகளை உன்னதமாக்கின. பதத்திற்கு ஓர் அவிழாக 1966இல் தினகரனில் அவர் எழுதிய ‘மனக்கண்’ என்ற பெரிய நாவல் சான்று. கேலி, கிண்டல்,சாட்டை, நகைச்சுவை அவர் எழுத்துக்கு அங்கதம் சேர்த்தது.

‘சமூகவியலை அகிலன் சரியாக எடைபோடாத படைப்பாளி ஆயினும் அகிலனின் எளிய, தெளிவான, அழகான தமிழ் நடை அவர் நாவல்களுச் சிறப்புச் சேர்த்தது என்ற கருத்தில் அநகவும் நானும் ஒருமித்திருந்தோம்.

‘மனக்கண்’ நாவலை நூலாக்க செ.க.ஏற்பாடு செய்கிறார் என்று பி.ராமநாதன் ஒருமுரை எனக்குச் சொன்னார். பதிலாக அநகவின் ‘வெற்றியின் இரகசியங்கள்’ கட்டுரைத் தொகுதிதான் வந்தது. அதில் அவர் உளவியலை வெளிப்படுத்தும் விதம் அக்காலம் இந்திய எழுத்தாளர் அப்துல் ரகுமான் எழுதிக் குவித்த இயக்கவியல் மறுப்பு வாத நூல்களுக்குச் சரியான சாட்டையடி என்றும் சொல்வேன்.

‘மனக்கண்’ நூலாகாத குறையை நிவர்த்திக்குமுகமாக அதை வானொலி நாடகமாக்கி வாரந்தோறும் ஒலிபரப்பிய சில்லையூர் செல்வராசன் அநகவைத் தக்க முறையில் கெளரவித்தமை செல்வராசனுக்கும் பெருமை சேர்த்தது. எனினும் அது நூலாக வரும் வரை தாகம் தணியாது.

ஓர் இலக்கியவாதிபோல் கருத்தியலை ஜனநாயக பூர்வமாக வலுப்படுத்தும் பிரசார வேட்கை அவரிடம் இயல்பாகவிருந்தது. ஆனால், எழுதத்தெரியாத இலக்கியத்திற்கு நடையாய்  நடந்து விளம்பரம் தேடும்  பாமரத்தன வெறி அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. அதனால்தான் அவர் இலக்கியக் களத்தில் சுத்த வீரன் போல் இருந்தார். 1959இல் எழுதிய எனது ‘எரிமலை’ நாவலை அநக படித்து  விட்டு, “இது உடனே நூலாக  வரவேண்டும். கணேசலிங்கனிடம் கொடுத்தால் இந்தியாவில்  போடுவார்” என்றார். ‘பொற்காலம்’ தாமதித்தே விடியும்’  என்பதும் சரிதான்.

அநகவின் ‘மதமாற்றம்’ நாடகம்  நான்  பார்த்ததில்லை. இலங்கை பூராவும் மதமாற்றம் நாடகம் பற்றியே பேச்சு.  பேர்னாட் ஷா நாட்கங்களுக்கு ஈடாக   விமர்சிக்கவும் பட்டது.  சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை நெறியாள்கை அந்நாடகத்திற்கு மெருகூட்டியதாகவும் பேசப்பட்டது. ‘மதமாற்றம்’ விமர்சிக்கப்படாத பத்திரிகை இல்லை. அதனைப் பார்க்கும் போசிப்பினை இழந்தமை இன்றும் கவலை.

“அப்பேர்ப்பட்ட நாடகக் கருவின் மையக்கரு என்ன?” என்று ஒருநாள் அவரிடமே கேட்டேன். வழக்கம்போல் அவர் ‘கல’த்துச் சிரித்தார். “நல்ல முழு முட்டாள்களின் படுபயங்கர முட்டாள்தனமே அதன் மூலக்கரு” என்று சுருக்கமாக சொன்னார். 

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த யுவதிகள் மதங்களால் ஒன்று சேரமுடியாமல் தங்கள் வாழ்வை மதமாற்றம் செய்து ஈற்றில் தனிமைப்பட்டு வெறுமையாய்ப் போன அவலத்தை அமபலப்படுத்துகிறதாக நாடகம் அமைகிறது. வாழ்க்கைக்காக மதம் என்ற  அறியாமையும்   போய் மதத்திற்காக   வாழ்வு என்றாகிவிட்ட   மூடத்தனத்தை அதில் அவர் நேர்த்தியாகக் கையாண்டிருப்பதாகவும் விமர்சகர்கள் வியந்தனர். பேர்னாட் ஷாவுக்குப் பின் இப்படியான  கருவைக் கையாண்டு வெற்றி கண்டவர் அநக ஒருவர்தான் என்றும் விமர்சனங்கள் கூறின.

“இலக்கியம் கடைச் சரக்கல்ல” என்னும் நேர்மையான போர்க்குணம் மிக்க எழுத்தாளன் கூற்றுக்கு இலங்கையில்  நானறிந்தவரை இலக்கணமாகத் திகழ்ந்தவர் அநக  ஒருவர்தான்.

குறிப்பு- அநகவின் இலக்கிய வாழ்கையைச் சொல்வதாயின் ஒரு நூல் எழுத வேண்டும். இது சிலேடையான ஓர் அவசரக் குறிப்பு மட்டுமே


நன்றி: தினகரன் ஆகஸ்ட் 18, 1991இல் ‘அ.ந.கந்தசாமியும், அ.செ.மு.வும்  அசல் யாழ்ப்பாணிகள்’ என்னும் தலைப்பில் வெளியான கட்டுரை