அறிமுகம்: கலைஞர் டிலிப்குமாரும், ‘தாய்வீடு’ பத்திரிகையும் பற்றி….

திலிப்குமார்பொதுவாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து நூற்றுக்கணக்கில் இலவசப்பத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றின் அடிப்படை நோக்கம் பணம் சம்பாதிப்பது. அதனையே அடிப்படையாகக்கொண்டு வெளியாவதால், எனக்குத்தெரிந்து கொள்கைகப்பிடிப்புள்ள எழுத்தாளர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் சிலர் கூட இவ்விதப்பத்திரிகைகளை வெளியிடத்தொடங்கியதும் வியாபாரிகளாக உருமாறியதைக் கண்டிருக்கின்றேன். இவ்விதமான இலவசப்பத்திரிகைகளில் எனக்குத்தெரிந்து ஒரு பத்திரிகை மட்டுமே இலவசப்பத்திரிகையாக வெளிவரும் அதே சமயம் தரமான சமூக, கலை, இலக்கியப் பத்திரிகையாகவும் வெளியாகின்றது. அதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது கொள்கைப்பிடிப்புள்ள கலைஞர் , எழுத்தாளர் ஒருவரிடமிருந்து அப்பத்திரிகை வெளியாவதுதான். இவரை நான் முதலில் அறிந்து கொண்டது நாடக நடிகராக. டொராண்டோ, கனடாவிலுள்ள தேடகம் போன்ற அமைப்புகளின் நாடகங்களில் நடித்த , நடிப்புத்திறமையுள்ள நடிகர்களிலொருவராகவே அறிந்திருக்கின்றேன். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒருவராகவே அறிந்திருந்தேன். அவர்தான் தாய்வீடு மாதப்பத்திரிகையின் ஆசிரியரும் , வெளியீட்டாளருமான டிலிப்குமார் ஜெயரட்ணம். ஆரம்பத்தில் எழுத்தாளர் ‘அசை சிவதாசன்’ வீடுவிற்பனை முகவராக உருமாறியபோது வெளியிட்ட ‘வீடு’ பத்திரிகை நின்றுபோனபோது அதனைப்பொறுப்பெடுத்து “தாய்’வீடு'” மாதப்பத்திரிகையாக வெளியிடத்தொடங்கினார். இவரும் எனக்குத்தெரிந்த ஏனைய சிலரைப்போல் பணம் சம்பாதிப்பதையே அடிப்படையாகக் கொண்டு வழி மாறிச் சென்று விடுவாரோ என்று ஆரம்பத்தில் எண்ணியதுண்டு. ஆனால் அவ்விதமில்லாமல் தாய்வீடு பத்திரிகையைத் தரமானதொரு கலை, இலக்கிய, சமூக, அரசியல் பத்திரிகையாகவும் வெளியிட்டுக்கொண்டும், அதே சமயம் அதனையொரு வருமானம் ஈட்டும் சாதனமாகவும் நிலைநிறுத்திக்கொண்டு இன்றுவரை வெளியிட்டு வருகின்றார் டிலிப்குமார்.

இவ்விதமாகப் பத்திரிகையின் தரத்தை பேணுவதில் மிகவும் அவதானமாவிருந்து அவர் தாய்வீடு பத்திரிகையை வெளியிட்டு வருவதை அதில் வெளியாகும் படைப்புகளின் தரமும், நேர்த்தியான வடிவமைப்பும் எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு முக்கிய காரணங்களாக நான் கருதுவது அவரது கலையுலக ஆளுமையும், சக எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அரவணைத்துச் செல்வதில் அவரது திறமையும்மே என்பேன். ஓவியர் கருணாவும் அவரும் கூட்டுச்சேர்ந்ததும் இன்னுமொரு முக்கிய காரணம். கருணாவின் ஓவியத்திறமையில் தாய்வீட்டின் வடிவமைப்பு சுடர்விட்டுப்பிரகாசித்தது.

‘தாய்வீடு’ பத்திரிகையின் முக்கிய அம்சங்களாக அடிக்கடி அது வெளியிட்டு வரும் பல்வேறு ஆளுமைகள் பற்றிய சிறப்பிதழ்களும், இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளிலும் (கவிதை, கதை, மொழிபெயர்ப்பு என்று), அது வெளியிட்டு வரும் படைப்புகளும் விளங்குகின்றன. தாய்வீடு பத்திரிகையில் கனடாவில் வாழ்ந்து வரும் முக்கியமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கலாம். தாய்வீடு பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலுள்ள எழுத்தாளர்கள்: அருண்மொழிவர்மன், ‘கவிஞர்’ சேரன், துஷி ஞானப்பிரகாசம் , ஞானம் இலம்பேட், பொன்னையா விவேகானந்தன், க.கங்காதரன் & ரவிசந்திரிகா.

இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விடயத்தையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். என் அன்னையாரின் மறைவின்போது டிலிப்குமார் அம்மாவின் புகைப்படத்தைப் பிரதியெடுத்து , மரத்தில் அழகியதொரு சிற்பமாக உருவாக்கிக்கொண்டு வந்து தந்திருந்தார். அதனை நான் ஒருபோதுமே மறக்க மாட்டேன்.

‘தாய்வீடு’ பத்திரிகையை வாசிக்க விரும்பினால் நாட வேண்டிய இணையத்தள முகவரி: www.thaiveedu.com  தற்போதுள்ள சூழல் காரணமாக ‘தாய்வீடு’ பத்திரிகை இணையப்பதிப்பாகவே வெளியாகின்றது. விரைவில் சூழல் மாறி மீண்டும் அச்சிலும் வெளிவருமென்று எதிர்பார்ப்போம். அதற்காக வாழ்த்துகின்றோம்.

ngiri2704@rogers.com