அறிவித்தல்: திருக்கோணேஸ்வரம் – வரலாறு உள்ளிட்ட தொகுப்பு நூல்

நூல் அறிமுகம்: திருக்கோணேஸ்வரம் - வரலாறு உள்ளிட்ட தொகுப்பு நூல்அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு, வணக்கம்.  இலங்கைத் தமிழர்களின் – குறிப்பாக சைவ மக்களின் ஆன்மீக வாழ்வியல் தொன்மையின் நிலைக்களனாக விளங்குவது திருக்கோணேஸ்வரம்.  ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, கணிசமான இடர்களை பல கோணங்களிலிருந்தும் சந்தித்து அவ்வப்போது நேர்ந்த அழிவுகளிலிருந்து மீண்டும் மீண்டும் நிமிர்ந்தெழுந்து இன்றைக்கும் உயிர்ப்புடன் திகழ்வது திருக்கோணேஸ்வரம்.  எண்ணிக்கையில் அதிகமான இலக்கியங்களால் புகழ்ந்து பாடப்பட்ட சீரிய திருத்தலம் திருக்கோணேஸ்வரம். திருஞானசம்பந்தர் உள்ளிட்ட தேவார முதலியரால் தேவாரம் பாடப்பெற்ற புண்ணிய சேத்திரம்.  திருமூலர், பட்டினத்தார், அருணகிரிநாதர், சேக்கிழார் ஆகிய அருளாளர்களினால் ஆக்கப்பட்ட பாடல்களில் வைப்புத்தலமாகப் பாடப்பட்டு ப10சிக்கப்பட்ட திருக்கோயில். இராவணேஸ்வரனால் வழிபடப்பட்டதும், குளக்கோட்டனால் புனரமைக்கப்பட்டதுமான வரலாற்றுத் தொன்மை கொண்ட அருளாலயம்.  இதுகாலவரை பல பெரியார்கள் திருக்கோணேஸ்வரம் சார்ந்து அவரவர் காலங்களில் உபயோகத்திலிருந்த அச்சு சாதனங்கள் வாயிலாக மிகுந்த பிரயாசைப்பட்டு பதிப்பித்து வெளியிட்ட ஏடுகள், கல்வெட்டுகள், சாசனங்கள், புராணங்கள், பிரபந்தங்கள், செய்யுள் இலக்கியங்கள், வரலாறுகள், ஆய்வுகள், தோத்திரங்கள், கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகள் எண்ணில் அடங்காது.  அச்சுக்கலை பெரிதும் வளராதிருந்த காலமது.  வசதியீனங்களுக்கு மத்தியில் எழுதப்பட்ட பல நூல்கள் – எங்கள் பார்வைக்கும் பராமரிப்புக்கும் அகப்படாமல் எங்கெங்கோ தனித்தனியாகத் தேங்கிக் கிடந்து காலஓட்டத்தில் எங்கள் ஒட்டுமொத்த கவனமின்மையினால் எதிர்காலச் சந்ததியினரின் கைகளுக்கு கிடைக்காமல் போகலாம். அத்தகைய துர்ப்பாக்கிய நிலைக்கு இடங்கொடாமல் அவைகளைத் தேடிக் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து ஒரு முழுமையான நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறோம். புராணங்கள் தொடங்கி வரலாற்று ஆய்வுகள் வரை வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்ட இந்நூல் திருக்கோணேஸ்வரம் பற்றி அறிய ஆர்வமுள்ள அடியார்கள், தமது உயர்படிப்பு தேவை நோக்கி உண்மை வரலாற்றினைத் தேடும் மாணவர்கள், ஆலயங்கள், ஆன்மீக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,  பாடசாலைகள், வாசிகசாலைகள், சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டு அன்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் பயனளிக்கும் பெட்டகமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.  திருக்கோணேஸ்வரத்தைப் பற்றி யார் யார் எந்தெந்த அனுபவத்தினைப் பெற விரும்புகிறார்களோ அந்தந்த அனுபவத்தினைப் பெற்றுப் பயனடைய இந்நூல் உதவும்.

 மொத்தத்தில் – இந்நூல் திருக்கோணேஸ்வரம் பற்றி இதுவரை தெரிந்திருக்கும் அனுபவத்திலிருந்து தெரியாத அனுபவத்திற்கு எம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக அமையக்கூடியது.  கோணேசப் பெருமானின் புகழ் பாடும் இவைகள் ஆலயத்தின் பெருமைகளினூடே திருகோணமலை மண்ணின் வளம், மக்களின் வாழ்வு, ஆன்மீகம், கலாச்சாரம், கலை இலக்கியம், என்கிற அனைத்தையும் ஒருசேரத் தொட்டுச் செல்கின்றன.  தாம் வாழ்;ந்த சமூகத்தை, சமயத்தை, மொழியைக் குறித்த அக்கறையோடும், சக மனிதர்கள் மீது கொண்ட எல்லையற்ற நேசத்தோடும் திருக்கோணேஸ்வரத்தை மையமாகக் கொண்டு தத்தம் காலத்து வாழ்வையும் வரலாற்றையும் ஒரு சேரச்சொல்லிச் சென்றிருக்கிறார்கள் இவற்றை ஆக்கிய பெருமதிப்பிற்குரிய பெரியோர்கள். இத்தொகுப்பு நூலினை அழகுற அச்சிட்டுத் தந்திருக்கிறார்கள் கொழும்பு யுனிஆர்ட்ஸ் நிறுவனத்தினர்.  இந்;துசமயப் பேருலகம் பெருமையோடு இந்நூலை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இந்து சமயப் பெருமக்கள் அனைவரையும் குறிப்பாக திருகோணமலை மண்ணில் வாழும் அனைத்து மக்களையும் இந்நூல் சென்றடைய வேண்டும் என்பதற்காக லாபநோக்கமற்ற விலை நிர்ணயிக்கப்பட்டது.  பெரியவர்கள் மட்டுமல்லாது இளம் வயதினரும் படித்து அறிந்து பயன்பெற வேண்டுமென்பதே எங்கள் பிரார்த்தனை.

நூலின் பெயர்: திருக்கோணேஸ்வரம்
வெளியீடு: திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை
முதற்பதிப்பு: 09.02.2014, பக்கங்கள்: ஏஐஐஐ 10 1004, விலை: ரூ. 1250
தொகுப்பாசிரியர்:  கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம், செயலாளர்,
திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை
வடிவமைப்பும் அச்சுப்பதிவும்:  யுனிஆர்ட்ஸ் (பிறைவேட் லிமிட்டட்), கொழும்பு 13

கோணேஸ்வர ஆலயத்திலும், திருகோணமலை நகரசபை வளாகத்தில் அமைந்திருக்கும் கோணேஸ்வர ஆலய பணிமனையிலும் (வார நாட்களில் காலை 9 – மாலை 7 வரை) இந்நூலினை நேரில் பெற்றுக் கொள்ளலாம். தபாலில் பெற்றுக் கொள்ள விரும்புவர்கள் நூலின் விலையோடு உள்ளுர் தபால் செலவாக ரூ.800 அனுப்பி நூலினைப் பெற்றுக் கொள்ளலாம்.  மேற்குறித்த பணத்தினை எமது வங்கிக் கணக்கிலிட்டு, வங்கிச்சீட்டினை அல்லது அதன் பிரதியினை எமது பணிமனைக்கு தபாலில் அனுப்பி வைத்தும் நூலினைப் பெற்றுக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்கின் பெயர்: திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை
கணக்கிலக்கம்: 70109163
இலங்கை வங்கி, திருகோணமலை

வெளிநாடுகளில் வாழும் எமது உடன்பிறப்புகளது அன்றாட வழிபாட்டிற்கும் ஆன்மீக ஈடேற்றத்திற்கும் உற்ற துணையாக விளங்கிக் கூடிய இந்நூலினைப் பெற்றுக்கொள்ள, தயவுசெய்து எமது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  நிறுவனமாகச் செயற்படும் அன்பர்கள் தங்கள் உறுப்பினர்களுக்குத் தேவையான நூலின் எண்ணிக்கையை அறியத்தந்தால், உரிய முறையில் அனுப்பி வைக்க ஆவன செய்யப்படும்.  மிக்க நன்றி.  
 
அன்பே சிவம்.

பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன், தலைவர் |   கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம் செயலாளர்
thirukoneswaram@hotmail.com
1094263267588 – ஆலயம்
1094262226688 – பணிமனை
1094263204382 – செயலாளர்

thirukoneswaram@hotmail.com