அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட ‘வாதங்களும், விவாதங்களும்’ நூலுக்காக எழுதப்பட்டது ]

 வெங்கட் சாமிநாதன்“‘நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை’ என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்” (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் ‘எழுத்து’ இதழில் வெளியான ‘பாலையும், வாழையும்’ கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் ‘சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்’ என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது.  

  ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று. அறுபதுகளில், எழுபதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்த முற்போக்கிலக்கியப் படைப்புகளைக் காரமாக விமர்சித்தவர் வெ.சா. அதன் காரணமாக, ‘கலை சமுதாயத்திற்கே’ என்னும் முற்போக்கணியினரை, அவர்தம் கலைப்படைப்புகளின் தன்மையினைத் தன அறிவிற்கேற்ப , தர்க்கரீதியாக விமர்சித்த காரணத்தினால் வெ.சா.வைக் ‘கலை கலைக்காகவே’ என்று வாதிடும், ‘அழகியலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கு’மொரு’ அழகியல் உபாசகராகவும், சமுதாயப் பிரக்ஞையற்றவொருவராகவும் ஓரங்கட்டிவிடவும் சிலர் தலைப்பட்டனர். அவரை முக்கியமான விமர்சகராக ஏற்றுக் கொண்டு அதே சமயம் அவர் அறிவுத்தளத்தையொரு பொருட்டாகவே கருதியதில்லையென்றும், அவரது மொழி விமர்சனத்திற்குரிய தர்க்க மொழியல்லவென்றும் கூறித் தமது மேலாவிலாசத்தைக் காட்டும் முனைப்புகளும் நடைபெறாமலில்லை. வேறு சில இளம் படைப்பாளிகளோ அவரை ஞான சூனியமென்றும், அயோக்கியனென்றும் கூட வசை பாடினர். இவை பலவற்றுக்கு அவர் தன் பாணியில் பதிலிறுத்துள்ளார். அத்தகைய அவரது பதில்களில் சிலரைச் சீண்டியுமிருக்கிறார். தனது எழுத்தினைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘எல்லாமே தனி மனிதனாகவும், இந்தச் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவும், என் உணர்வுகளைத் தாக்கிய, சுற்றிச் சமூகத்தில் நடக்கும் அருவருப்பான நடப்புகளைப் பற்றிய என் எதிர்வினைகள்’ (‘விவாதமேடைச் சர்ச்சைகள்’; பக்கம் 4- முன்னுரையில்) என்று குறிப்பிடும் இவரது எண்ணங்களின் தர்க்கச் சிறப்பும், பரந்த வாசிப்புடன் கூடிய அறிவும் பிரமிக்க வைப்பன.. கலாநிதி கைலாசபதியின் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ பற்றிய இவரது ‘மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ என்னும் விரிவான ஆய்வுக் கட்டுரை, ‘பேராசிரியர் நா.வானமாலையின் ஆராய்ச்சி விநோதங்கள்’ போன்ற கட்டுரைகளும் அவற்றிற்கான எம்.ஏ.நுஃமான் போன்றவர்களின் எதிர்வினைககளும் தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்ப்பன. இவர்கள் விவாதங்களில் முரண்பட்டிருந்த போதிலும், அவை தர்க்கச் சிறப்பு மிக்கவை. ஆழமானவை. சிந்தனையினைத் தூண்டுவன. இவர்கள் தங்களது விமர்சனங்கள் தமது தனிப்பட்ட வாழ்வினுள் குறுக்கிட விடாது பார்த்துக் கொண்டனர். வல்லிக்கண்ணனை விமர்சிக்கும் அதே சமயம் சாகித்திய அகாடமி விருது தானாக அவரைத் தேடி வந்தததை மனம் திறந்து பாராட்டுவார். ஜெயகாந்தன் போன்றவர்கள் ஏற்கனவே சாகித்திய அகாடமி விருதுகள் பெற்றவர்களைவிட மேற்படி விருதினைப் பெறுவதற்கு உரித்துடையவர்களென்று தன் கருத்தினை உரத்து எடுத்துரைக்கும் வெ.சா. மறுநிமிடமே தினமணிக்கதிரில் அவரது ‘ரிஷி மூலம்’ போன்ற கதைகளை இனி பிரசுரிக்க மாட்டொமென்ற அறிவிப்பும் வந்தபின்னரும் தொடர்ந்தும் அவ்விதழில் தன் தொடர்கதைகளை எழுதிய அவரது சந்தர்ப்பவாதத்தினைக் கேள்விக்குட்படுத்துவார். சி.சு.செல்லப்பாவின் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். அதற்காக அவரைக் கடுமையாக விமர்சிக்கவும் தயங்க மாட்டார். இவ்விதமாகச் சுற்றிவர நிலவிய எதிர்ப்புகளின் மத்தியில், கடந்த ஐம்பதாண்டு காலமாகத் தனித்துத் துணிச்சலாகத தனது கருத்துகளைக் கூறுவதற்குத் தயங்காமல் வாழ்ந்து வருபவர். , உண்மையில் வெ.சா.வின் கலை பற்றிய பார்வை மற்றும் அவரது தர்க்கச் சிறப்பும், பரந்த அறிவும் அடங்கிய இருப்பு பற்றிய தத்துவவியற் பார்வை இவற்றின் மூலம் அவரை இனங்காண்பதே பொருத்தமானது. எந்தவிதப் பயன்களினதும் எதிர்பார்ப்பின்றித் தனது பங்களிப்பினை வழங்கிய வெ.சா.வின் பங்களிப்பு எந்தவிதக் காழ்ப்புணர்ச்சிகளுமற்று, அவரது படைப்புகளினூடு அறியப்பட வேண்டும்; வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதும் இக்கட்டுரையின் இன்னுமொரு நோக்கமாகும்.