அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா என்னும் யுகபுருஷர்

அல்வாயூர்க் கவிஞர்  மு. செல்லையா என்னும் யுகபுருஷர்அறிமுகம்
வண்டுவிடுதூதும் வளர்பிறையும் அறியாதார் ஈழத்து இலக்கிய உலகில் இருக்கமுடியாது. சிறந்ததொரு கவிஞராகக் கால்பதித்து வேரூன்றிய திரு மு.செல்லையா அவர்களின் நுண்மதியும் பன்முக ஆளுமையும் அவரை ஓர் யுகபுருஷராக மிளிரச் செய்துள்ளது. நல்ல தமிழ் ஆசிரியராக, நிருவாகியாக, தலைசிறந்த கவிஞராக. சோதிடராக ஆற்றல் மிகுந்த தலைமைத்துவப் பண்புடையவராக வாழ்ந்து காட்டியமை அவருடைய பல்பரிமாணத் திறன்களுக்குச் சான்றாகும். கவிஞர் அவர்களுடைய தொலைநோக்கும் அவற்றை அடைவதற்குரிய காலத்தோடு ஒட்டிய செயற்பாடுகளும் முழுத்தமிழ்ச் சமுதாயமே போற்றுமளவுக்கு அமைந்திருந்தமை அவரது வெற்றியாகும். எமது சமுதாயங்களின் வளர்ச்சிப் பாதைகள் ஒவ்வொன்றிலும் கவிஞர் அவர்களின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளன. அவருடைய வகிபாகங்கள் ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் காலச்சூழலோடு ஒட்டிப் பார்க்கும்போது தெளிவாகப் புலப்படும்.

மு. செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகள்
திரு மு.செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகளை அவர் தலைமை ஆசிரியராகச் செயற்பட்டமை, ஆசிரியர்களை உருவாக்கியமை,  பாடசாலையை உருவாக்கியமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்து மாணவர்களை ஊக்குவித்தமை முதலிய விடயங்களின் கீழ் ஆராயலாம்.

வடமராட்சியில் செயற்பட்டுவந்த பல உயர்சைவப் பாடசாலைகள் மிகவும் மட்டுப்படுத்திய நிலையில் சிறுபான்மை மக்களுக்குக் கல்வி வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருந்தாலும் அவை உரியமுறையில் உரிமைகளை அனுபவிக்க இடமளிக்கவில்லை. அக்காலத்தில் கிறீத்தவ மதநிறுவனங்கள் உருவாக்கிய பாடசாலைகள்கூட உயர் சமூகத்தவரின் எதிப்புகளுக்கு அஞ்சியவையாக கற்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்த விரும்பாத சூழலில், எமது சமூகத்தவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்ய வேண்டுமானால் தனியானதொரு பாடசாலை அமைக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிகஉறுதியாக இருந்தனர். இத்தகைய முனைப்பான சிந்தனையே சைவகலைஞான சபையின் வழிநடத்தலால் தேவரையாளிச் சைவவித்தியாசாலை உருவாகக் காரணமாயிற்று. எமது சமூகத்தவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தேவரையாளிச் சைவ வித்தியாசாலையும் பிற்காலங்களில் தேவரையாளி இந்துக் கல்லூரியும் செய்த  பங்களிப்புப்பற்றி நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். தேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் உபாத்தியாயர் அவர்கள் 24 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறந்தமுறையில் அதனை நடாத்தி வெற்றிகள் கண்டார். இக்காலத்தில் தேவரையாளி சைவ வித்தியாசாலை ஓர் ஆரம்பப் பாடசாலையாக இருந்தாலும் பாடசாலையின் அயற்சூழலில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் கல்வியில் பங்கேற்பதற்குரிய விழிப்புணர்வு உண்டாயிற்று. பெற்றோரும் பிள்ளைகளும் கல்வியில் ஊக்குவிக்கப்பட்டனர்.

ஆயினும், இப்பாடசாலை எதிர்நோக்கிய முக்கியமான அறைகூவலாக சைவசமயம் கற்பிப்பதற்குப் போதிய ஆசிரியர்கள் இன்மை அமைந்தது. ஏனைய பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருந்தார்கள் எனினும் சைவப்பாடசாலை ஒன்றின்; அடிப்படைத் தேவைகளை அவ்வாசிரியர்களால் நிறைவுசெய்ய முடியவில்லை   

இத்தருணத்தில் உபாத்தியாயர் அவர்களின் முதன்மையானதும் முக்கியமானதுமான பணி பாடசாலைக்குத் தேவையான சைவஆசிரியர்களை உருவாக்குதலாக அமைந்தது. திரு கா.சூரன் அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்று,  தமது ஆற்றலை மேம்படுத்திக் கொண்ட உபாத்தியாயர் அவர்கள் தாமே முன்னின்று தமது மாணவர்களுக்கும் கற்பித்து அவர்களை ஆசிரியர்களாக உருவாக்கினார். ஆசிரியர் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் அன்றைய காலச் சூழலுக்கேற்ற எதிப்பார்ப்புகளைத் துரிதமாக மேம்படுத்தும் என்ற தொலைநோக்கு இங்கு வெற்றி காணப்பட்டுள்ளமை சமூக அசைவியக்கத்திற்கான அடிப்படையாகும். இன்று எங்கள் சமூகங்களில் அநேகர் ஆசிரியர்களாக இருப்பதற்கும் அவர்களின் வழிகாட்டலில் அநேகமானோர் கல்வியில் முன்னேறியிருப்பதற்கும் இப்பணி மூலக்கல்லாய் அமைந்தது.

தேவரையாளி இந்து ஆங்கிலக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்ட வேளையில் அக்கல்லூரியின் அதிபராக திரு.மூ.சி. சீனித்தம்பி அவர்கள் அதிபராகப் பதவியேற்றபோது பல்வேறு காரணிகளின் நிமித்தம் உபாத்தியாயர் அவர்கள் பாடசாலையை விட்டு விலக வேண்டியதாயிற்று. பிரச்சினைகளுக்குள்ளும் நன்மைகள் விளைவது போல இவ்விடயமானது அல்வாயூர் ஸ்ரீலங்காவித்தியாசாலையின் தோற்றத்துக்கு வித்திட்டது. அப்பிரதேசத்தின் கல்வியைச் சிறப்புற நிறைவேற்றுவதற்குரிய தேவையை உணர்ந்து அல்வாயூர் சிறீலங்கா வித்தியாசாலையின் ஆரம்ப கர்த்தாவாகச் செயற்பட்டவர். இந்த வித்தியாசாலையை ஆரம்பித்து வைப்பதில் திரு க. முருகேசு ஆசிரியர் அவர்களும் கவிஞர் அவர்களும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  தேவரையாளிச் சைவவித்தியாசாலையின் உருவாக்கத்தினால் வதிரி மற்றும் அல்வாய்க் கிராமங்கள் பயனடைந்தது போல அல்வாய் வடக்கு, மாறாம்புலம் மற்றும் புலோலி முதலிய கிராமங்கள் ஸ்ரீலங்கா வித்தியாசாலையின் மூலம் பெரும் பயனைப் பெற்றுக் கொண்டன.

இலங்கையில் கல்வி வாய்ப்புகளை விரிவாக்குவதில் 1945இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக்கல்வித் திட்டம் மிகவும் முக்கியமானதொன்று. இனம், மொழி, சாதி, சமயம், பால் மற்றும் வயது வேறுபாடின்றிக் கற்கும் ஆற்றலுள்ளவர்கள் எல்லோருக்கும் கற்பதற்கான வாய்ப்புகள் இத்திட்டத்தின்  மூலம்  உருவாக்கப்பட்டது. கல்வி ஓர் உரிமையாகப் பிரகடனப்படுத்தப்படலாயிற்று. ஆயினும் இலவசக் கல்வித் திட்டத்தின் நன்மைகளை எமது சமூகங்களிலுள்ளவர்கள் எவ்வளவு தூரம் பெற்றுக்கொண்டார்கள்? அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்த எமது பாடசாலைகள் முன்வராத நிலையில் இலவசக் கல்வியின் பயன்பாட்டினைத் திறந்துவிட முற்பட்டவர் திரு.மு.செல்லையா அவர்கள். அல்வாயூர் ஸ்ரீலங்கா வித்தியாசாலையில் தலைமையாசியராகப் பதவிவகித்த காலத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களின் மேம்பாடுகருதி அவர்களைப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு அமரச்செய்து சகல வசதிகளுங் கொண்ட மத்திய மகாவித்தியாலயங்களில் பயிலச் செய்துள்ளார்.  இவ்விடயமானது 1960 களில் எமது கிராமங்களில் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. புலமைப்பரிசில் பரீட்சையின் முக்கியமான நோக்கங்கள் இன்று மாற்றங்களுக்கு உள்ளான நிலையில் பரவலாக மாணவர்கள் எல்லோரும் பரீட்சைக்குத் தோற்றும் ஏற்பாடுகள் உள்ளன. சமூக அசைவியக்கத்தில் இதுவோர் முக்கியமான மைல்கல்லாகும். இதன் விளைவே  எமது கிராமங்களில் இன்று நாம் காணுகின்ற கல்விசார் முன்னேற்றமாகும். எமது புதிய சந்ததியினர் பல துறைகளையும் பயின்று பெற்றோருக்கும் கிராமங்களுக்கும் பெருமை சேர்க்கின்றனர்.

மு.செல்லையாவும் சமுதாய விடுதலைப் போராட்டங்களும்
யாழ்ப்பாணச் சமூகத்தில் புரையோடியிருக்கும் முக்கியமான பிரச்சினை தீண்டாமையாகும். பகுத்தறிவுடன்கூடிய சிந்தனைகளும் பல உபாயங்களுடனான போராட்டங்களும் நிகழ்ந்து வந்துள்ள போதிலும் தீண்டாமையின் தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை. அதன் கோலங்கள் பல வேறு வடிவங்களில் பிரதிபலிப்பதை இன்றுங் காண்கிறோம். தீண்டாமையின் கொடூரங்கள் குறைந்துவிட்டன என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற வேளையிலும் அதன் உண்மைத்தன்மையினை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். இன்றையநிலை இவ்வாறெனின் இற்றைக்கு ஐந்து அல்லது ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைகள் பற்றிச் சொல்லவா வேண்டும்?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த மதமாற்றம் தீண்டாமையிலிருந்து விடுபடுதற்கான மாற்றுவழியாக ஊக்குவிக்கப்பட்டிருந்தது. பலர் அதன் செல்வாக்குக்கு உள்ளாயினர். இச்செல்நெறி எமது கிராமங்களைப் பெரிதும் ஆட்கொள்ளாமல் இருந்தமைக்கு திரு செல்லையா போன்றவர்களின் உறுதியான முன்னெடுப்புகளே காரணமாக இருந்தன. சைவசமய மேம்பாட்டிற்கான உறுதியான செயற்பாடுகளை முன்வைத்து அதற்கு உதாரணமாக வாழ்ந்துகாட்டினார். இந்திய அரசியல் யாப்பினை வகுத்ததனால் புகழ்பெற்ற அம்பேத்கார் அவர்கள்கூட இந்தியாவில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவு மதமாற்றத்தாலேயே நிகழும் எனக்கருதி எல்லோரையும் பௌத்த மதத்தைத் தழுவச்செய்தார். உபாத்தியாயர் அவர்களோ மதமாற்றம் என்பதிலும் பார்க்க சைவனாக இருந்துகொண்டே உரிமைகளை வென்றெடுப்பதில் தீவிரமாகச் செயற்பட்டார். அதில் வெற்றியுங் கண்டார்.

இந்தியாவில் சமூகமாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட எம். என். ஸ்ரீநிவாஸ் என்னும் சமூகவியலாளர் அதனை விளக்கும் கொள்கையாக 1950களில் சமஸ்கிருதமயமாதலை (Sanskritization) முன்வைத்தார்.  அப்பொறிமுறை தொடர்பாக அம்பேத்கார் அவர்களும் ஒரு நூலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கொள்கையின்படி, ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது நடுத்தர வர்ணத்தைச் சேர்ந்த ஒருவர் தமது மரபுகள் மற்றும் சடங்குமுறைகள்சார் கருத்தியல்களை மற்றும் வாழ்க்கைமுறையை உயர் வருணத்தாரின் முறைகள் சார்ந்து வாழ்தல் சமஸ்கிருதமயமாதல் என வரையறை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய மாற்றமானது வருணப் படிமுறையமைப்பில் உயர் அந்தஸ்தைக் கோருவதாக அமையும்.   தீண்டாமை என்பது தூய்மையின் அடிப்படையில் அமையும் விடயம் என்பதால் பல்வேறு வருணங்களிலும் இடம்பெறுவோர் தமது வாழ்க்கைமுறையை உயர் வருணத்தினர் எனக் கருதப்படுவோரின் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள் சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதன் வாயிலாக தமது அந்தஸ்தினை மேம்படுத்த முனைதல் சமஸ்கிருதமயமாதலின் விளைவாகும். இக்கொள்கைபற்றி சைவசமயத்தினைப் பேணுவதில் தீவிரங்காட்டிய எமது முன்னோர்கள் அறிந்திருப்பதற்கு வாய்ப்புகள் இல்லையாயினும் அல்லது அவ்வாறு வாழ்வதால் யாழ்ப்பாணத்தவர்களின் அங்கீகாரம்    கிடைக்குமா அல்லது இல்லையா என்பதைப் பொருட்படுத்தாது தூய சைவ வாழ்க்கையைப் பின்பற்றுவதில் அக்கறைகாட்டியதோடு  அவ்வாழ்க்கை முறைக்கு மற்றவர்களை ஊக்குவித்தமையும் குறிப்பிடத்தத்தது. உபாத்தியாயர் அவர்கள் சைவத்தை வளர்ப்பதற்குக் கையாண்ட உத்திகள் உயர்ந்தோர் எனத் தம்மைக் கூறிக்கொள்வோரையும்  தலைகுனியச் செய்தது என்றனர் அவதானிகள். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் அவர் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்று அதற்குச் சான்றாக அமைந்ததென கலாசாலையின் நிருவாகியொருவர் தகுந்த சந்தர்ப்பத்தில் உபாத்தியாயர் அவர்கள் தானே தூயசைவன் எனச் சாதுர்யமாக மற்றவர்களுக்கு உணர்த்தினார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

உரிமைகுறைந்த மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்குக் இவருடைய தலைமையில் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது இவர்முன் வைக்கப்பட்டிருந்த வேண்டுகோளாகும். அக்காலகட்டத்தில் நிலவிய பிரச்சினைகளுள்ளே ஆலயப் பிரவேசம் முதன்மையானதாக அமைந்தது. ஆலயப்பிரவேசம் தொடர்பான  தீர்வுக்குரிய வழிமுறைகள் பல்வேறு கோட்பாட்டுப் பின்னணிகளை முன்வைத்தபோதிலும் அதற்கு  மிகவும் பொருத்தமான அணுகுமுறையாக “பொங்கியெழுதற்குப் பதிலாக பொறுமையோடு செயலாற்றுதல் வெற்றிதரும்” என்ற வழிமுறையை உபாத்தியாயர் முன்வைத்தார். அதனையே தேர்ந்தெடுத்தார். இவ்விடயத்தில் இவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனவாயினும் மாற்று வழிமுறைகளால் ஈட்டிய வெற்றிகள் நிலைத்திருந்தனவா என்ற வினாவும் எழாமல் இல்லை. தீண்டாமை சைவசமயத்திற்கு    உடன்பாடானதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் உபாத்தியாயர் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட “சைவஹரிஜன மகாசபை”  மகாநாட்டிலே உபாத்தியாயரின் கருத்துக்கள் சார்பாகப் பலர் உரையாற்றியதுடன் நின்றுவிடாது யாழ்ப்பாண நகரில் அமைந்த முக்கியமான கோயில்களான நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணை வரதராஜப் பெருமாள் கோயில், வண்ணை சிவன்கோயில் ஆகியன ஒரே நாளில் திறக்கப்பட்டமை பெரும் வெற்றியே. பின்னர் ஆலயப் பிரவேசச் செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் எமது முதற் தலைமுறை ஆசிரியர்கள் உருவாக்கிய சைவசமரச சங்கமும் கவிஞரின் மறைவோடு  அமைதிகண்டு கொண்டது. உபாத்தியாயர் அவர்கள் இன்னும் நீண்டகாலம் உயிரோடு இருந்திருந்தால் இவ்விடயத்தில் இன்னும் பல வெற்றிகளைக் கண்டிருப்பார். பிற்காலங்களில் புரட்சிகரமான வழிமுறைகளைக் கையாண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் எதிர்ப்பார்த்த வெற்றிகளைத் தரவில்லை. இன்று எமது கிராமத்தவர்களின் ஆலயம் தொடர்பான தேவைகள் முன்னேற்றகரமான முறையில் நிறைவுசெய்யப்படுவதால். ஆலயப் பிரவேசம் அவசியமற்றது எனக் கூறிவிடமுடியாது. மக்களின் அடிப்படை உரிமையென்றவகையில் இது நிகழ்ந்தே ஆகவேண்டும். இதனை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்கு  உபாத்தியாயர் கூறியதுபோல பொருத்தமான அணுகுமுறைகளே அவசியமானவை.

ஆறுமுகநாவலர் சைவசமயத்தைப் பாதுகாத்தவர் என்னும் பெருமையைப் பெற்றாலும் சைவசமயத்தைப் பின்பற்றும் மக்களைப் பாதுகாக்க முற்படவில்லை. சமயத்தின் புனிதத் தன்மை என்னும் போர்வையில் இடமளிக்காமல் செயற்பட்டுள்ளார். ஆனால், உபாத்தியாயர் அவர்களோ சைவத்தையும் அதனைப் பின்பற்றும். மக்களையும் பாதுகாக்க முற்பட்டவர் என்பதால் ஆறுமுகநாவலரிலும் பார்க்க உயர்ந்து நிற்கிறார்.

கவிஞரும் கவிதைகளும்
கவிஞர் மு.செல்லையாவுக்குக் கவிதை கைவந்தகலை. 1930 களின் பிற்பகுதியிலிருந்தே அவர் கவிதைகளை உருவாக்கத் தொடங்கிவிட்டார்.  கவிஞரின் கவிதைகள் பற்றித் தமிழ் அறிஞர்களும் திறனாய்வாளரும் எடுத்தியம்பிய கருத்துகள் இதற்குச் சான்றாகின்றன. அவருடைய கவிதைகளில் காணப்படும் கவிதைச் சிறப்புகள், கற்பனைச் செறிவு, தேசபக்தி முதலிய விடயங்களைப் போற்றிப் பேசாதார் இல்லை. கவிஞரது வளர்பிறையும் ஏனைய கவிதை நூல்களும் கட்டுரைகளும் மற்றும் நினைவுநூல் தொகுத்துத் தந்த விடயங்களும் இவற்றினைப் பதிவுசெய்துள்ளன. அல்வாயூரில் கவிஞர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அல்வாய் மனோகரா வாசிகசாலையின் தொடக்க விழாவில் கவிஞர் அவர்களின் ஆக்கங்களுக்குக் கிடைத்த ஊக்குவிப்பானது அவர் பல்வேறு புனை பெயர்களில் கவிதைகளை எழுதத் தூண்டியது.

வளர்பிறையின் முதற்பதிப்பு 1952 இல் வெளிவந்தது. இந்நூலே அவருக்குக் கவிஞர் என்ற பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது.  வளர்பிறையின் இரண்டாம் பதிப்பு 50 ஆண்டுகளின் பின்னர் 2002இல் அமரர் திரு நா.மு ஆறுமுகம் அவர்களின் நினைவாக அவர்களுடைய குடும்பத்தினரால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இரண்டாவது பதிப்பின் வருகையானது ஆய்வாளரும் இளஞ்சந்ததியினரும் கண்டு  வாசித்து இன்புற வழிகோலியது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் கவிதையுலகு செழிப்புற்று வளர்வதற்கு வளர்பிறையும் முன்னோடியாக இருந்துள்ளது. காலத்துக்குரிய நிகழ்வுகளையும் அவற்றிற்குத் தேவையான மாற்றங்களையும்  கருப்பொருளாகக் கொண்டு கவிதைகள் உருவாகும் என்பதற்கு வளர்பிறையும் புறநடையாக இருக்கவில்லை.  இலங்கைத் தேசியம், இந்தியத் தேசியம், மனித நேயம், பெண்களின் மேம்பாடு, முதியோரைப் போற்றுதல், இயற்கை அனுபவம், தொழில் மகத்துவம் தெய்வபக்தி மற்றும் சுகவாழ்வு முதலியன வளர்பிறையின் பாடுபொருள்களாக அமைந்தன. 1930கள் மற்றும் 1940களில் இலங்கையிலே மேற்சொன்ன விடயங்கள்மீது கவிதை பாடியோர் மிகக்குறைவு என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1950களில்  கவிஞர் பாடிய கவிதைகளும் எழுதிய கட்டுரைகளும் மற்றும் நகைச்சுவைக் கட்டுரைகளும் சமூக நோக்கு, சமூக விடுதலை  ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. அக்காலத்தில் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த குறைகளை நாசூக்காக எடுத்துக் கூறுவதற்குக் கவிஞர் கையாண்ட உத்திகளில் வலுவாக இருந்தது நகைச்சுவையாகும். கவிஞர் அவர்களுடைய கவிதைகள் பொருட்செறிவுடையவையாக இருந்தபோதிலும் அவற்றிலே எழுச்சிக்குரிய வீச்சு இருக்கவில்லை என்ற கருத்தினை பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்கள் தமது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் கவிஞரவர்கள் தமக்கேயுரிய பாணியில் சொல்ல முனைந்த கருத்துக்களைச் சொல்வதில் அச்சப்படவில்லை.

கவிஞர் அவர்களின் தனிச்சிறப்பை வெளிக்கொணர்ந்த இன்னொரு படைப்பாக “புதிய வண்டுவிடுதூது” அமைந்தது. இதன்கண் அமைந்த கற்பனைகளும் பொருளும் இலங்கை வானொலி நடத்திய கவிதைப் போட்டியில் தங்கப்பதக்கத்தை பரிசாகப் பெற்றுக் கொடுத்தது. இக்கவிதைத் தொகுதியை நயம்பட விமர்சித்து இரசிகமணி கனகசெந்திநாதன் எழுதிய நூலொன்று வரதர் வெளியீடாக வந்துள்ளது.

பதின்னான்கு நூல்கள் கவிஞரால் வெளியிடப்பட்டுள்ள. அவையாவன தேசிய கீதங்கள், சுகாதார சுலோகங்களும் கும்மியும், வளர்பிறை கவிதைத் தொகுதி, குமாரபுரக் குமரவேள் பதிகம், புதிய வண்டுவிடுதூது, தங்கத் தமிழ்க் கண், கதிர்காமக் கந்தப்பெருமாள் வேல் வெண்பா, முருகமூர்த்தி தோத்திரக் காரிகை,  பரீட்சைச் சித்திக்கான பாஷைப் பயிற்சி, கந்தவனநாதர் தோத்திரக் காரிகை, செல்வச் சந்நிதி சுப்ரமணிய சுவாமி துதி, வற்றாப்பளை அம்மன் துதி, அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் துதி. இன்னும் பல கவிதைகள் நூல்வடிவில் வராமல் உள்ளன. கவிஞரைப்  பற்றிய முழுமையான பார்வைக்கு தொகுப்பு உதவும்.

கவிஞரது கவிதைகளில் ஒரு மகாகவிக்குரிய சிறப்புகள் மிளிர்ந்துள்ளன என்ற கருத்தினையும் இலக்கியவாதிகள் முன்வைத்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளுதல் என்னும் விடயத்தில், இவ்வாறு மேலெழுந்தவாறு எழுதித் திருப்தியடைந்துவிடாமல்  மகாகவியின் கவிதைகளோடு கவிஞரின் கவிதைகளை ஒப்பிட்டு நிறுவுதல் வேண்டும் என்ற பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. கவிஞரின் படைப்புகளின் பூரணத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கு அவர் வழித்தோன்றிய கவிஞர்களும் புதிய ஆய்வாளர்களும் முன்வருதல் வேண்டும். அன்றேல் நாம் எல்லோரும் பெருந்தவறு செய்தோராக மாறுவோம்.


“அல்வாயூர்” பெயருக்குத் தனிச்சிறப்பு

கவிஞர் மு.செல்லையாவின் பெயரோடு அல்வாயூர் இரண்டறக் கலந்துவிட்டது. இதனால் அல்வாயூர் பெருமைகொள்கிறது. “அல்வாய் என்றவுடன் அகத்தில் தோன்றும் அமுதகவித் திருவுருவம் ஒன்றே நித்தச் சொல்லும்” “அல்வாயூர் நாமந் தன்னை அரங்கினில் அறியச்செய்த செல்லையா கவிஞன்” என்றவாறான கூற்றுகள் கவிஞர் அவர்களுக்குரிய தனியிடத்தைப் பறைசாற்றி நிற்கின்றன.

மனோகரா என்ற பெயர் இன்று எல்லா இடங்களிலும் புகழ்பரப்பி நிற்கின்றது என்றால் அது கவிஞரின் தொலைநோக்கின் விளைவாகும்.  1927 அளவில் எமது ஊருக்கென ஒரு வாசிகசாலையைத் தோற்றுவித்து “மனோகரா” என்ற அழகான பெயரையும்  என்றென்றும் மங்களம் பொங்கும் நிறங்களையும் தெரிந்தெடுத்து உதவியவர். வாசிகசாலையின் திறப்பு விழாவுக்கு ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களில் ஒருவரான பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதியார்  அழைக்கப்பட்டிருந்தார். அத்தினமே கவிஞர் அவர்கள் கவிதையூற்றெடுப்பதற்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்ட நாளாகும். ஆலடிப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் உருவாக்கத்தில் முன்னோடிகளில் முன்னோடியாகவும் கவிஞர் அவர்கள் இருந்துள்ளார்.

அம்மா வெளியே வா அம்மா!
அழகாய் மேலே பாரம்மா !
சும்மா இருந்த சந்திரனைத்
துண்டாய் வெட்டினதாரம்மா?  

வட்டத்தோசை சுட்டதுபோல்
வானிலிருந்த சந்திரனைத்
துட்டச் சிறுவன் யாருடைத்தான்
சொல்வாய் உண்மை தோன்றிடவே:

மட்டிப்பயலவன் வெட்டி விட்டு
மற்றப் பாதியை எங்கெறிந்தான் ?
கிட்ட மினுங்குங் கட்டியெலாம்
வெட்டிய மிச்சத் துண்டுகளோ ?
கவிஞர் மு.செல்லையா – வளர்பிறை

இப்பாடல் எமது பிள்ளைகளில் வாய்களில் என்றென்றும் ஒலிக்க வேண்டும். காந்தீயத்தில் ஆராத காதல் கொண்டு அதனை எங்கள் சமூகத்தில் பரவச்செய்த, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என வாழ்ந்த, எவரையும்  எதற்காகவும் வெறுக்காத மற்றவர் உயர்வில் அக்கறையுடன் கூடிய பரந்த மனங்கொண்ட “உள்ளத்தில் உண்மையொளியுள்ள” அல்வாயூர்க் கவிஞர் திரு மு.செல்லையா அவர்களின் பெயரும் புகழும் இன்னும் பல யுகங்கள் வாழும். (அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் நூலில் இடம்பெற்ற அணிந்துரை)