அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் – வெளியீட்டு விழா!

அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் படைப்புக்கள் உள்ளடங்கிய பெருந்தொகுதியின் வெளியீட்டு விழா எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

கவிஞர் மு. செல்லையா ஈழகேசரிக்காலப் படைப்பாளிகளில் ஒருவர். சைவப்பெரியார் கா. சூரனின் மாணாக்கர் பரம்பரையின் முதல் வித்து. அவரிடம்  சமயம், மொழி, இலக்கியம், ஆகியவற்றைக் கற்றதோடல்லாமல் தமிழில் விசேட தேர்ச்சி பெறும்பொருட்டு கரவெட்டிப் பண்டிதர் திரு க. மயில்வாகனம் உபாத்தியார் அவர்களிடம் இலக்கண இலக்கிய நூல்களையும் சமய அறிவுக்கு அடிப்படையாக புராணத்தையும் சைவப்பெரியார் அவர்களின் வழிகாட்டலிலேயே கற்றுத்தேர்ந்தார். பிற்காலத்தில் மதுரைப் பண்டிதர் பரீட்சைக்காக பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களிடமும் வித்துவான் ந. சுப்பையாபிள்ளையவர்களிடமும் பாடங்கேட்டார்.

1927 ஆம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து கொண்டு வெளியேறினார். தேவரையாளிச் சமூகத்தின் மத்தியில் இருந்து தோன்றிய முதலாவது பயிற்றப்பட்ட சைவஆசிரியன் என்ற பெருமையும் பெயரும் கவிஞர் அவர்களுக்கே உரியது. பண்டிதர், ஆசிரியர், தலைமையாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், சோதிடர், சமூக விடுதலை விரும்பி, சமூக முன்னோடி ஆகிய பல்பரிமாண ஆளுமை மிக்கவர். சைவசமய அபிமானியாகவும் காந்தீயக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தின்மீது ஆராக் காதல் கொண்டு கதர் உடையணிந்து காந்தியவாதியாகவே தன் வாழ்வை மேற்கொண்டவர்.

இப்பெருந்தொகுதியின் பதிப்பாசிரியர்களாகிய கலாநிதி சு. குணேஸ்வரன் மற்றும் திரு மா. செல்வதாஸ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கவிஞர் மு. செல்லையாவின் படைப்புக்களைத் தேடிக் கண்டடைந்து 632 பக்கங்களில் பெருந்தொகுதியாக்கியிருக்கிறார்கள்.

மேற்படி நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக கல்வியியற்பீடப் பேராசிரியர் மார்க்கண்டு கருணாநிதி அவர்கள் தலைமை வகிக்கிறார். நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபாரக் கற்கைகள் பீடாதிபதி கலாநிதி அ. புஸ்பநாதன் அவர்களும் வடமராட்சி  வலயக் கல்விப் பணிப்பாளர் திரு யோ.ரவீந்திரன் அவர்களும் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் திரு சி. வன்னியகுலம் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்குகிறார்கள்.

நூலின் அறிமுகவுரையை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறைத் தலைவரும் எழுத்தாளருமான இ. இராஜேஸ்கண்ணன் வழங்கவுள்ளார். நூல் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்களும் மதிப்பீட்டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் வழங்கவுள்ளனர்.

இப்பெருந்தொகுதியின் சிறப்புப் பற்றி பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் குறிப்பிடும்போது “ கவிஞரின் பன்முக ஆளுமையைப் பதிவு செய்யும் இப்பெருந்தொகுப்புக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றிலே குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உண்டு. கவிஞரைப் பற்றி ஆய்வுசெய்வோர் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. கவிஞர் மு.செல்லையா அவர்களின் ஆற்றலை, திறனை,  ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அவர் வீற்றிருந்த சிம்மாசனத்தைக் கண்டவர்கள் மகிழவும் காணாதவர்கள் இனிக் கண்டு வியக்கவும் இப்பெருந்தொகுப்பு வழி வகுக்கும்.” எனக் குறிப்பிடுகிறார்.

இத்தொகுதியின் முக்கியத்துவம் பற்றி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் குறிப்பிடும்போது  “அல்வாயூர் மு. செல்லையாவின் (1906 -1966) பிரதிகள், சைவமும் காந்தியமும் இணையும் கருத்துநிலைப் புள்ளியிலிருந்து மேற்கிளம்புவன. இவை, காலனிய மற்றும் பின்காலனிய கால, ஈழத்துத் தமிழ் விளிம்புநிலைச் சமூகமொன்றின் மொழிவழி வெளிப்பாடுகளாய் அமைவன. அதேவேளை, மரபார்ந்த சைவத்தமிழ் மேட்டிமை மரபுபின் புறமொதுக்கற்; பின்னணியில், மேற்படி சைவத்தமிழ்ப் புலத்திலேயே தன்னை மறுநடவு செய்துகொண்ட, விளிம்புநிலைச் சமூகமொன்றின் வரலாற்றை வாசிக்கவும் இப் பிரதிகள் பெரிதும் உதவுகின்றன. சைவ – கிறிஸ்தவ சமரச நன்நிலை, தமிழும் சிங்களமும் இரு கண்கள், இனம், மொழி ஆகிய எல்லைகள் நீங்கிய பார்வை, இலங்கை – இந்தியத் தோழமைச்சால்பு முதலியவற்றால் அவரது தேசியவாதம் கட்டமைவுபெற்றது. அவரது, ஆணவமலம் நீக்கமுறும் தேவபாகப் பிரதியாயினும், மலமகற்றும் தொழிலாளரின்  துயரகற்றும் மானுடபாகப் பிரதியாயினும் அவை, ஈழத் தமிழ்ப் பண்பாட்டரசியற்புலத்தைப் பிரதிபலித்து நிற்பவை. அவ்வகையில் ஈழத்தின் பிரபந்தமரபு, கவிதைமரபு, கதைமரபு, ஊடகமரபு, வியாசமரபு, பாடநூலாக்கமரபு ஆகிய அறுவகை மரபிலும் செல்லையாவின் தடம் முக்கியமானதும், விரிவான ஆய்வுக்குரியதுமாகும். இலக்கியத்தின்வழி நிகழும் சமூக வரலாற்றாய்விலும் விளிம்புநிலைத் தமிழ்ப்புலமையாளர் பற்றிய வரலாற்றாய்விலும், செம்பதிப்பாக வெளிவரும் இப் பெருந்தொகுதி புத்தொளியைப் பாய்ச்சுகிறது.” எனக் குறிப்பிடுகிறார்.

கவிஞரின் தொலைநோக்குப் பார்வை பற்றி பேராசிரியர் மா. கருணாநிதி குறிப்பிடும்போது, “கவிஞர் அவர்களுடைய தொலைநோக்கும் அவற்றை அடைவதற்குரிய காலத்தோடு ஒட்டிய செயற்பாடுகளும் முழுத் தமிழ்ச் சமுதாயமே போற்றுமளவுக்கு அமைந்திருந்தமை அவரது வெற்றியாகும். எமது சமுதாயங்களின் வளர்ச்சிப் பாதைகள் ஒவ்வொன்றிலும் கவிஞர் அவர்களின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளன. அவருடைய வகிபாகங்கள் ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் காலச்சூழலோடு ஒட்டிப் பார்க்கும்போது தெளிவாகப் புலப்படும்.” என்று எழுதுகிறார்.

எம்மிடையே வாழ்ந்து தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பாடுபட்ட மு.செல்லையா போன்றோருடைய இலக்கியப் படைப்புக்களின் வெளிவருகைக்கு தமிழ் இலக்கிய உலகு ஆதரவு கொடுத்து இளைய தலைமுறைகளின் பல்துறை ஆற்றலுக்கு வழிசமைக்கவேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாக உள்ளது.

kuneswaran@gmail.com