அவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை

- வெங்கட் சாமிநாதன் -ஐம்பது வருடங்களாயிற்று. தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் புரட்சியே நிகழ்ந்துள்ளது. வேறு எதில் புரட்சி நிகழ்ந்துள்ளதோ இல்லையோ, தமிழ்க் கவிதை என்று இப்போது சொல்லப்படுவதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்க் கடற்கரையோரங்களில், கிழக்கு இந்திய தீவுகளில், சுமத்ராவில் சுனாமி வீசிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோமே. கடற்கரையோர சாலைகளில் கார்கள் மிதந்து கொண்டிருந்தன. காவிரியில் வெள்ளம் வந்தால் ஒரு வருடம் தான் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமாகும். ஆனால் அடுத்த வருடங்களில் விளைச்சல் அமோகமாக இருக்கும். வெள்ளம் கொண்டு சேர்த்த வண்டல் மண்ணின் கொடை. ஆனால் தமிழ்க் கவிதையில் நிகழ்ந்துள்ளது சுனாமியா, காவிரி வெள்ளத்தின் ஆரம்ப நாசமா, என்று கேள்வி எழுந்தால், அவரவர் கவித்வ உணர்வைச் சார்ந்து தான் பதில் வரும்.. அதுவும் முடிவற்று வாதிக்கப்படும். ஒரு காலத்தில் ஏதும் திருமணமோ, பொங்கலோ, வாழ்த்துச் செய்தி அனுப்ப வெண்பா எழுதாத தமிழ்ப் பண்டிதர்களே கிடையாது. வெண்பா தான் மிகக் கஷ்டமான வடிவம் என்பார்கள். பண்டிதர்களுக்கும் வாழ்த்துப் பெற்றவர்களுக்கும் அது பற்றிக் கவலையில்லை. வந்தது கவிதைதானா என்பது பற்றியும் யாரும் கவலைப்பட்டதில்லை. அது உணரப்படுவது மாத்திரமே. சீரும் தளையும் ஒழுங்காக இருந்தால் அது கவிதை தான். அங்கு கவி பாடுதலும் அரங்கேற்றமும் சுலபமாக இருந்த காலம். இலக்கண அமைதி இருந்தால் போதும். அதிகம் போனால் பொருட் குற்றம் பார்த்த காலத்தில் நக்கீரர்கள் இருந்தார்கள். இப்போது பொருட் குற்றம் பார்ப்பது கருத்து சுதந்திரத்தில் கற்பனையில் கை வைப்பதாகும். இருந்தாலும் அந்தக் காலத்தில் ஏதோ ஒரு வரைமுறை இருந்தது.

புதுக்கவிதை என்று ஒரு புது வடிவமொன்று, எந்தக் கட்டுப்பாடும் அற்ற ஒன்று பிறந்ததும் தமிழ்ப் பண்டிதர்களின் குத்தகையில் இருந்தது பொதுச் சொத்தாயிற்று. முப்பதுகளிலும் நாற்பது களிலும் நடந்த ஆரம்ப முயற்சிகளுக்கு அறுபதுகளில் தான் பலன் கிடைக்கும் சூழல் உருவாயிருந்தது.  நாற்பதுகளில் பிரசுரமாகி எந்த சலனமும் அற்று மறந்திருந்த ந.பிச்சமூர்த்தி  யின் பெட்டிக்கடை நாரணன் என்ற கவிதை, அதன் எழுத்து பத்திரிகை 1959- மறுபிரசுரத்தில் தமிழ் கவிதையையே புதியதொரு வரலாற்றுப் பிரவாஹத்தில் கொணர்ந்து சேர்த்து விட்டது.

பலத்த எதிர்ப்புக்கும் கிண்டலுக்கும் ஆளான அது இவற்றுக்கிடையே எதிர்த்தவர்களின் கூடாரத்திலிருந்தே புதுக்கவிதை அவர்கள் உள்வாங்கிக்கொண்ட வடிவிலும் அர்த்தத்திலும் அவர்கள் பாணியிலேயே அமோக விளைச்சல் கண்டது. வானம்பாடி குழுவில் பண்டிதர்களே அதிகம். முற்போக்கு வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்த போதும் இது நிகழ்ந்தது. அசை, சீர், தளை, சந்தம் எதுகை மோனை எல்லாம் மறந்தாயிற்று. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றால் கொண்டாட்டம் தானே. ஆனால் இதிலும் ஒவ்வொரு கவிதையும் தானே நிர்ணயித்துக்கொள்ளும் சொல்லப்படாத, முன் தீர்மானமில்லாத ஒரு தாள கதி உண்டு என்பது தெரிந்து கொள்ளப்படவில்லை. அந்த தாளம் உணரப்படுவதே அல்லாது விதிக்கப்பட்டதல்ல என்பதும் தெரிந்து கொள்ளப்படவில்லை

இப்போது தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் கவிஞர்கள் கூட்டம் ஒன்று காட்சி தருகிறது.. விருதுகளோடும் பட்டம் பொன்னாடைகளோடும். பல லட்சங்கள் விற்பனை கொண்ட பத்திரிகைகளும் அறுசீர் விருத்தம் கேட்பதில்லை. வருவதைப் பிரசுரித்து விடுகிறார்கள்.

இதுவும் ஒரு வகை புரட்சிதான். சுநாமி அலை வீச்சுத்தான். இதற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. சொல்ல புதுமையான அனுபவமும் புது அர்த்தங்கள் கொண்ட காட்சியும் கொண்டவர்களுக்கு இது சுதந்திரம் தருகிறது.

சுதந்திரம் என்று சொன்னவுடனே எனக்கு நினைவுக்கு வருவது,

கர்ப்ப வாசலுக்கு வெளியே
காத்திருப்பது
அரவணைப்பா அரளியா
நிச்சயமில்லை
பிறக்கிறாள்.

என்னும் லாவண்யாவின் கவிதை வரிகள் சில. கவனிக்க வேண்டியது பிறக்கும் ஜீவன் “ள்” என்று முடியும் ஜீவன். எதைச் சொல்ல வருகிறது இது? இது முன்னர் கவிதைப் பொருளாகியிருக்குமா, என்ன வடிவில் என்று யோசிக்கத் தோன்றுகிறது.

இதே கவிமனம் வேறொரு தமிழ் வாழ்க்கை அனுபவத்தை

பாற்கடலைப் பார்க்கப் போனேன்
பைக்குள்
சுருட்டிக்கொண்டு வந்திருக்கிறேன்

என்று நடை பயிலும் ஒரு கவிதை

பொய் சொல்லுதற்கும் ஒரு வரைமுறை இல்லையா?

என்று முடிகிறது. இது ஏதும் சற்று முன் ஃபாஷனாகியிருந்த மந்திர யதார்த்த வார்த்தை ஜால சமாசாரம் இல்லை. தமிழ் நாட்டின் கலாசாரத்தில் சகஜமாகிவிட்ட அர்த்தமற்ற பொய்யான வார்த்தைப் பெருக்கைச் சொல்கிற யதார்த்தம். மனதைப் பாதித்தது எது பற்றியும் அவசியமற்ற வார்த்தை ஒதுக்கி அதற்கேற்ற வடிவில் எழுதலாம் என்ற சுதந்திரத்தில் பிறந்தது இது. இதை எழுதியது லாவண்யா தனது ஐம்பத்தைந்தாவது வயதில் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வெளியிட்ட இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் என்ற தொகுப்பில்.  அதில் இருந்தவை 42 கவிதைகள். லாவண்யா அது வரை எழுதியவை இக்கவிதைகளைத் தவிர வேறு ஏதும் எழுதியவராகத் தோன்றவில்லை அவர். இப்போது அதற்குப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு 60 பக்கங்களில் 53 கவிதைகள். 67 வயது காலத்தில் அவரது மொத்த இலக்கிய பங்களிப்பு இவ்வளவே.

55 – ம் வயதில் முதன் முறையாக கவிதை எழுதத் துணிவது தமிழுக்கு புதுமையாக இருக்கக் கூடும். தன் எழுபதாவது வயதில் ஓவியம் வரையத் தொடங்கி தன் எண்பது வயதுக்குள் நவீன இந்திய ஓவியத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுவிட்ட  தாகூர் முன்னுதாரணம் நமக்கு உண்டு. ஆனால் நம் கதையே வேறு. தமிழ் வரலாற்றில் தேவியே தரிசனம் தந்து பாலூட்டிச் சென்றதும், பால் கசியும் அக் குழந்தை “தோடுடைய செவியன்” என்று பாடத் தொடங்கி தன் பதினெட்டு வயதுக்குள் பல்லாயிரம் பாடல்களைப் பாடியதும் தான் தெரியும். ஆண்டாளும் சுந்தரரும் தம் பதினேட்டு வயதுக்குள் தம் பக்தியும் கவித்வமும் கொண்ட வரலாற்றை முடித்துக்கொண்டனர். அவர்கள் எல்லாம் கவி பாடியவர்கள். 19- நூற்றாண்டு வள்ளலார் வரை. உட்கார்ந்து கவிதை எழுதியவர்கள் இல்லை. அவர்கள் உள்ளிருந்த கவித்வ ஆவேசம் உந்த கவி பாடியவர்கள்.

தன் கவித்வ ஆற்றலால் தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பு என்று ஆவேசமுற்றுப் படைத்தவை அல்ல. லாவண்யாவின் கவிதைகள். அத்தகைய ஆவேசம் ஏதும் இவரது ஆளுமையில் இல்லை. தான் தன் காலத்தில் தன்னைச் சுற்றிய உலகில் காணும் நிகழ்வுகள் தன்னைப் பாதித்த, தான் அவற்றை உணர்ந்த பாங்கில் அது தன் சம காலத்தியவர் உணர்ந்ததிலிருந்து வேறு பட்டிருப்பதைப் பதிவு செய்யும் உந்துதலில் பிறந்தவை இக்கவிதைகள். தன் உணர்வுகளும் தன்னை அவை பாதித்ததும் மற்றவர்களிடமிருந்து வேறு பட்டிருப்பதே வேடிக்கையும் கிண்டலும் இதிலிருந்து மீளும் நம்பிக்கையின்மையும் இவற்றில் பதிவாகியுள்ளன. ரொம்பவும் பணிவும் அடக்கமும் கொண்டவர். புதுக்கவிதை வடிவம் தந்த துணிவில் ஏதோ தனக்குப் பட்டதை எழுத வந்தவர் தான். இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் என்று சொல்வதைப் பார்த்தால் இது ஏதும் மந்திர யதார்த்தம் சமாசாரமோ இல்லை ஸ்ட்ரக்சுரலிஸ்மோ இல்லை போஸ்ட் மாடர்னிஸமோ என்று எண்ணத் தோன்றும். அந்தச் சூறாவளி தான் வீசி ஓய்ந்து விட்டதே. இவர் பயமுறுத்துபவர் இல்லை. சுற்றி நடப்பது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. பெரும்பாலோர் ரொம்பவும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள் அந்த வேடிக்கையை.  ஆனால் இவர் கொஞ்சம் அவநம்பிகைப் பேர்வழி. அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொள்கிறார்.

கடவுளின் கதை தான் இரண்டாம் பதிப்பின் முதல் கவிதை.

நமதைப் போலவே
அவருடைய கதையும்
கந்தல்தான்,
நம்மைப் போலவே
அவர்க்கும் முகங்கள்
நான்கைந்தாறென
நம்மைப் போலவே
அவர்க்கும் நொண்டிக்கால்
நம்மைப் போலவே அவரும்
தரையிலொரு கால்
அந்தரத்திலொரு காலென
சர்க்கஸ் வித்தைகள் செய்கிறார்.
பேட்டை ரவுடியைப் போல
வாள் வேல் உலக்கையென
ஆயுதங்களோடிருக்கிறார்
……..  இப்படி நிறைய நீண்டு செல்கிறது

நம்மைப் பற்றிய யதார்த்தம் கடவுளை வர்ணிக்கும் பாவனையில் சொல்லப்படுகிறது. ஆனால் இவை யாவும் நம் பெருமையாக அலங்கார வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. ”அவர்களைச்” சொல்ல முடியுமா? கடவுள் தான் நமக்கு எளிதாக கிடைக்கும் பலியாடு.

நிஜம் என்னும் கவிதையை முழுதுமாகவே தரவேண்டும்.

நிஜம்
ஒன்றாயில்லை.

மண்ணின் நிஜமும் விண்ணின் நிஜமும்
ஒன்றாயில்லை.

நீரின் நிஜமும் தீயின் நிஜமும்
ஒன்றாயில்லை.

காற்றின் நிஜமும் கல்லின் நிஜமும்
ஒன்றாயில்லை.

நேற்றின் நிஜமும் இன்றின் நிஜமும்
ஒன்றாயில்லை

கோவின் நிஜமும் குடியின் நிஜமும்
ஒன்றாயில்லை

ஆணின் நிஜமும் பெண்ணின் நிஜமும்
ஒன்றாயில்லை.

உந்தன் நிஜமும் எந்தன் நிஜமும்
ஒன்றாயில்லை.

பழைய பொய்களும் புதிய பொய்களும்
ஒன்றாயிருக்கின்றன.

இது வெளிப்படையாகத் தெரியும் உண்மையும் யதார்த்தமும். ஆனால் நமக்கு அது சௌகரியப்படுவதில்லை. நம் காரியங்களுக்கு குந்தகமாக உள்ளது.

நமக்கிருப்பது  கவிதை

நமக்குத்தெரியும் ஒரு 
பொம்மலாட்டத்தில்
நாம் மன்னர்களென்று

……………..

நமக்குத் தெரியும்
மன்னர்கள், குறுநிலமன்னர்கள்
பெருநில மன்னர்கள், மாமன்னர்கள்
பெருமாமன்னர்களின் பிரஜைகள்  நாமென்று

…………………..

நமக்குத் தெரியும்
பசுக்களை, பச்சை மரங்களை, பறவைகளை,
சாய்த்தது யாரென்று

……………..

நமக்குத்தெரியும்
எப்போதெல்லாம்
கண்களை, காதுகளை, வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று

நமக்குத் தெரியும்
நமக்கிருப்பது ஒரே உயிர்
அதை எளிதில் விடக்கூடாதென்று

இதையே இன்னொரு வழியில் சொல்லிப் பார்க்கலாம். அல்லது நம்மைப் பற்றிய இன்னொரு சொல்லப்படாத அடையாளமும் உண்டு. அதுவே நான்  கவிதையில் ஆரம்ப வரிகளும் கடைசி வரிகளும்.

நான் அதுவெனில்
என் அடையாளம் இன்னொன்றாகிறது
அதுவே நானெனில்
என் அடையாளம் என்னை இழக்கிறது
…………..
உலகின் கதவுகள் எனக்குத் திறக்க
ஊனமானவனின் மைந்தன் நான்
இவர்கள் என் அடையாளங்கள்
அது – அல்ல.

இன்னொரு காட்சியில் இந்நாளைய புதிய கடவுள்

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
மலர்மாலை நட்சத்திரக் கிரீடத்தோடு
பீரங்கி ரதத்தில் வந்தார் புதுக்கடவுள்

வல்லவன் கடவுளென்பதால்
வணங்கினார் அனைவரும். நானும்
ஒரு நாள் ஞானியாவேனென்று
கடவுளின் தூதன் ஒருவன் கட்டியங்கூறியிருந்தான்.

சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. அதற்கான சாட்சியம் இப்போது இல்லை என செய்தித்தாள்களில் படித்த நினைவு. இருப்பினும் லாவண்யா ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில வரிகள் மாத்திரம். புதிய கோயில் என்ற கவிதையிலிருந்து.

வருடம் சரியாக நினைவில்லை
குத்து மதிப்பாக பத்து வருடங்களுக்கு முன்பென
வைத்துக்கொள்ளலாம். நீண்ட மதில் சுவர் மீது
ஆணிகள் இரண்டிற்கு மஞ்சள் பாவாடை
கட்டியிருந்தது. மறுமுறை அவ்வழி போக
செங்கற்கள் மூன்று குங்குமம் பூசி நின்றன…..

இப்படித் தான் அக்கோயில் படிப்படியாக எழுகிறது. குடமுழுக்கு நடக்கிறது. ஜனத்திரள் மொய்க்க, அது பக்தர்கள் வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கும் அம்மன் என்று புகழ் பரவுகிறது.

பொங்கல் வைக்கும் பெண்களுக்கு
லாட்டரியில் பரிசு விழுகிறது. ஆறுவாரம்
யுவர்களும் யுவதிகளும் தரிசித்தால்
காதல் கைகூடுகிறது. விவாகரத்தானவர்களுக்கு,
புதுப் புருஷனோ புது மனைவியோ வாய்க்கிறது
அரவாணிகள் பெண்களாகவும் அருள்பாலிக்கிறாள்
குஷ்பாத்தாள்
திருப்பதிக்கு இரண்டாமிடம் தான் என்கிறார்கள்

பின் குறிப்பு: திருச்சியிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்தபடி அருள் பாலிக்கிறாள் குஷ்பாத்தாள்.

நம்மிடையே தென் மாவட்டங்களில் கிராமங்களில் வாழ்ந்து இடையில் சோக முடிவில் மறைந்த பெண்களுக்கு கோவில் எழுப்பி அவர்களைத் தெய்வங்களாக வழிபடும் மரபு உண்டு. அது இங்கு சற்று மாறிய வடிவம் கொண்டுள்ளது. எல்லாம் பக்தியில் பிறந்தவை தான். இது பக்தியின் ஒரு வடிவம் தான்.

இத்தொகுப்பின் கடைசிக் கவிதை சனாதனம்  சற்று நீண்டது. அதன் கடைசி வரிகள் சில கண்ணகியை நோக்கிய சில கேள்விகளுடன் முடிகின்றன.

பதிவிரதையின் கோபம் பொல்லாதது
வாம பாக ஸ்தனத்தைத் திருகினாள்
ஆகாசத்திலெறிஞ்சாள். மந்திர யதார்த்தம்
அக்னி பகவான் க்ஷணத்தில் பிரசன்னமானார்
ப்ராம்மணாள், தர்மிஷ்டாள், பிள்ளைகள்
காமதேனுங்கற பசு, பதிவ்ரதா ஸ்த்ரீகள்
விருந்தாளை விட்டு விடு. கூடல் நகரின்
“தீத்திறத்தோர் பக்கம் சேர்த்தி” என்னு
அம்பாள் அக்னிப்ரயோகம் பண்ணாள்.
சூப்பர். ஆனாலுமெனக்கொரு சந்தேகம்.
கணவனுக்காக இத்தனை செய்தவள்
கணவனை உயிர்ப்பித்துக் கொடென்று
தீக்கடவுளிடம் ஏன் கேட்கவில்லை.”

லாவண்யா ஒரு சினிக் என்றேன். பாருங்கள் இந்த கடைசிவரிகளுடன் முடியும் ஒரு கவிதையை.

எப்பொழுதெனத் தெரியாத பொழுதில்
எவ்வழியெனத் தெரியாத வழியில்
என்னவெனத் தெரியாத மனதில்
எப்படிக் கடவுள் நுழைந்தாரென்று
என்னைக் கேட்கிறாய்.
நானுமதையேதான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் தம் ஐம்பதாவது வயதில் இப்படி ஒரு மொழியில், வடிவில், தன் இத்தகைய சிந்தனைகளை கவிதையாக்கப் போகிறேன் என்று வந்திருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. காரணம் கவிதையின் கட்டுக்கள் தளர்த்தப் பட்டுள்ளதும், பாடு பொருளும் சுதந்திர வெளியில் உலாவத் தொடங்கியதும் தான். என்பதைச் சொல்லத் தான் கவிதை பெற்ற மாற்றங்களை மாற்றங்கள் தந்த சூழலைச் சொல்லத் தொன்றியது.

கடலின் மீது ஒரு கையெழுத்து:  (கவிதைத் தொகுப்பு) லாவண்யா: விருட்சம் வெளியீடு. 6/5 போஸ்டல் காலனி, முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33  பக்கம் 62. விலை ரூ 30

vswaminathan.venkat@gmail.com