அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் : மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா. கண்காட்சி – கருத்தரங்கு – பட்டிமன்றம் – மெல்லிசை, நடன அரங்கு – ஆவணப்படக்காட்சி.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனைத்துலக பெண்கள் தின விழா  2017

அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் – பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( 11-03-2017) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையில் நடைபெறும்.

இவ்விழாவை மெல்பனில் வதியும்  கலை, இலக்கியம், கல்வி சார்ந்த சமூகப்பணியாளர்கள் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள்.  திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்களின் தையல் நுண்கலை கைவினைக் கண்காட்சியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். இவ்விழாவில் இடம்பெறும் கருத்தரங்கில் மெல்பனில் வதியும் மூத்த இளம் தலைமுறையினர் பங்குபற்றும். திருமதி மங்களம் வாசன்  அவர்களின் தலைமையில் இடம்பெறும் கருத்தரங்கில், செல்வி மதுபாஷினி பாலசண்முகன் ” பாரதியும் பெண்விடுதலையும் ” என்ற தலைப்பிலும் செல்வி மோஷிகா பிரேமதாச  ” மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணியின் சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்” என்னும் தலைப்பிலும் உரையாற்றுவர்.

அண்மையில் மெல்பனில் மறைந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய நினைவுரையை வானொலி ஊடகவியலாளர் திரு. பொன். குமாரலிங்கம் நிகழ்த்துவார்.

 

திருமதி ஜெயபாரதி கனகசபேசன்  ”  பெண்களின் ஆளுமைப்பண்புகள்: அன்றும் இன்றும் ” என்னும் தலைப்பில் உரையாற்றுவார்.
மெல்பன் சுருதிலயா இசைக்கல்லுரி மாணவர்கள் வழங்கும் – திருமதி சுமதி சத்தியமூர்த்தி தயாரித்தளிக்கும்  பெண்ணிய மெல்லிசைப்பாடலரங்கு, மற்றும் மெல்பன் நிருத்தா இன்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் (Niruththa Indian fine arts) மாணவர்கள்  வழங்கும்   ஶ்ரீமதி நிருத்தா தர்மகுலேந்திரனின் தயாரிப்பில் நடன அரங்கும் இடம்பெறும்.

” பெண்கள் தொழிலுக்குச் செல்வது சுமையா…? சுகமா…?”  என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள பட்டிமன்றத்தின் அணி -01 இல்    திரு. எம்.ருத்ராபதி,   திருமதி எம். அபிராமி    ஆகியோரும்   அணி – 02 இல்  திரு. ஜெ. ஜெயகாந்தன், செல்வி. ஜெ. கீர்த்தனா ஆகியோரும் வாதிடுவர். இந்நிகழ்ச்சியின் நடுவராக  திரு. எஸ். பொன்னரசு உரையாற்றுவார்.

செனல் 4 தயாரித்து பல சர்வதேச விருதுகளைப்பெற்ற  “சல்மா” – Walking Towards Ourselves: Indian women tell their stories ” ஆவணப்படமும் இவ்விழாவின் இறுதி நிகழ்ச்சியாகக் காண்பிக்கப்படும்.  நிகழ்ச்சிகளை திருமதி பானு ஶ்ரீகௌரி சங்கர் தொகுத்து வழங்குவார். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் துணைச்செயலாளர் திரு. இரகுபதி பாலஶ்ரீதரன் திருச்செந்தூரன்  நன்றியுரையாற்றுவார்.

letchumananm@gmail.com