ஆய்வுக் கட்டுரை: விந்தைக் கவிஞன் விந்தன்!

எழுத்தாளர் விந்தன்தமிழ் எழுத்து மரபில் கவிதை, பாடல், சிறுகதை, நாவல், கட்டுரை, இதழ், பதிப்பு எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்த ஆளுமைகளுள் விந்தனும் குறிப்பிடத்தக்கவர். 1916 – இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரில் பிறந்த கோவிந்தன் எனும் இயற்பெயர் கொண்ட விந்தன், வறுமையின் காரணமாக நடுநிலைப் பள்ளியைக் கூட முடிக்க முடியாமல் தம் குலத்தொழிலான இரும்புப் பட்டறை வேலையை செய்து வந்தார். பின்னர் சூளை பட்டாளத்தில் பொதுவுடமை இயக்கத்தினர் நடத்திய இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்விக் கற்றார். பின்னர் 1941 – இல் கல்கி இதழில் அச்சுக்கோர்ப்புப் பணியில் சேர்ந்து அவ் இதழின் துணை ஆசிரியராக உயர்வு பெற்றார்.

1951 – இல் திறைத்துறையில் இணைந்து அன்பு, பார்த்திபன் கனவு, குலேபகாவலி ஆகிய படங்களுக்குப் பாடல்களும் திரைக்கதை வசனமும் வாழப்பிறந்தவள், மணமாலை, குழந்தைகள் கண்ட குடியரசு, சொல்லுத் தம்பி சொல்லு ஆகிய படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதினார். இவை மட்டுமன்றி முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி, விந்தன் கதைகள், இரண்டு ரூபாய், ஏமாந்துதான் கொடுப்பீர்களா?, மகிழம்பூ, நாளை நம்முடையது, முதல்தேதி, எங்கள் ஏகாம்பரம், இதோ ஒரு மக்கள் பிரதிநிதி, நவீன விக்கிரமாதித்தன், ஓ மனிதா! ஆகிய சிறுகதைகளையும் கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, சுயம்வரம், தெருவிளக்கு ஆகிய நாவல்களையும் எம்.கே.டி.பாகவதர், நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளையும் பாட்டில் பாரதம், பசி கோவிந்தம், புதிய ஆத்திச்சூடி –பெரியார் அடிச்சுவட்டில் ஆகிய கவிதை நூல்களையும் வேலை நிறுத்தம் ஏன்?, சேரிகள் நிறைந்த சென்னை, விந்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தனும் புகையிலையும் ஆகிய கட்டுரைகளையும் எழுதி தமிழ் எழுத்து மரபில் நீங்கா இடம் பெற்றவர் கவிஞர் விந்தன். ஆனால் அவரது நூற்றாண்டினை (1916-2016) கொண்டாடிய நிலையிலும் தமிழ்ச்சமூகம் அவரை இன்றளவும் முன்னெடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கதே. பொதுவுடமைவாதியாக பன்முகத் தளத்தில் ஆளுமை செலுத்திய விந்தனின் கவிதைகளையும் பாடல்களையும் இக் கட்டுரை முன்னெடுக்கின்றது.

கவிதைகள்
1956 இல் விந்தன் ‘பசி கோவிந்தம்’ என்ற சிறுநூல் எழுதினார். அந்த நூலைப் பற்றி டாக்டர் ஆ.ரா. வெங்கடாசலபதி அவர்கள், புலவர் த.கோவேந்தன் எழுதிய புதுநாநூறு என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோட்டத்தில் “இராஜாஜியின் பஜ கோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் ‘பசி கோவிந்தம்’ எழுதினார். இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவண் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்து விட்டது. அவருடைய பஜ கோவிந்தத்தை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார் விந்தன். இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ, நாவலையோ எழுதும் போதுகூட ஆசிரியர் கூற்றாகப் பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங்களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்குக் கதையை நடத்திச் செல்லத் தெரியாது. அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற்காகவே எழுதப்பட்ட ‘பகடி’ நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடைநூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை’ என்று புடைத்து விடுகிறார் விந்தன்” எனக் குறிப்பிடுகிறார். பசி கோவிந்தத்தில் முப்பத்தொரு பாடல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில பாடல்கள். 

பசி கோவிந்தம் பசி கோவிந்தம் 
பசி கோவிந்தம் பாடு 
பரலோகத்தில் இடந்தேடலாம் 
பசி கோவிந்தம் பாடு! 
படிக்காதிரு படிக்காதிரு 
படிக்காதிரு பயலே! 
படித்தால் எமன் வரும்போதுனைப்
பகவான் கைவிடுவார்! 
பணமேனடா பணமேனடா 
பணமேனடா பயலே? 
பணத்தாசை வளர்ந்தாலது 
பணக்காரர் மேல்பாயும்! 
படுவாய் தினம் படுவாய் தினம் 
படுவாய் தினம் பாடுபடுவாய் 
பசித்தாலது பகவான் செயல்
பஜ கோவிந்தம் பாடு!
பாரதம் வாழி பாரதம் வாழி 
பசி கோவிந்தம் பாட பசிதந்த
பாரதம் வாழி!

மேலும் பசி கோவிந்தம் எழுந்த விதம் பற்றிக் கூறுகையில் “வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங்கடல் வாலிபம்; பசிமிக்க பாரதத்தில் வறுமைமிக்கோர் அதைக்கடப்பது கடினம்; ஆயினும் வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவது போல வாழ்க்கையில் சிலர் வாலிபக்கடலைத் தாண்டி விடுகின்றனர். அதற்கேற்ற வசதியும் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது. சுவாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும் சுகானுபவத்தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்த்து வரும் அவர்களுடைய பரம்பரை சொத்துக்களையும் பாராதீனப்படுத்தி, பசிக்குப் பலியாகும் கோடானு கோடி மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்யவேண்டுமே என்கிற நோக்கத்தால் எழுந்ததே இந்தப் பசி கோவிந்தம் பாட்டு” என்கிறார் விந்தன்.

விந்தன் பழமை வாதத்தை முழுவதுமாக எதிர்த்தார். பெரியார் அறிவுச் சுவடி 1973 – ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஆத்திசூடி, உலகநீதி, கொன்றைவேந்தன் ஆகிய சமயச் சார்பு நீதி நூல்களின் வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் அறிவுச்சுவடி என்னும் நூலில் எழுதியுள்ள பகுத்தறிவைத் தூண்டும் கவிதைகள் அவரின் கவிதைத் திறனுக்குச் சான்றாகும். 

சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
ராவண காவியம் ரசித்துப் படி 
மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை
பீடை என்பது பிராமணியமே
முக்தியால் வளர்வது மூடத்தனமே
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
ஆலயம் தொழுவது சாலவும் தீது
கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை
கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்
கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை
கோயில் இல்லா ஊரில் குடி இரு
(பெரியார் அறிவுச்சுவடி, ப.14)

என்றும் பெரியார் அறிவுச்சுவடி ஆத்திசூடி வடிவில் அமைக்கப்பட்டது. இதைப்போல உலகநீதியைச் சமூக நீதியாக விந்தன் எழுதியுள்ளார்.

மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்
மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம்
சிந்திக்கும் முன் எதையும் செய்ய வேண்டாம்
செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்
பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்
படித்துவிட்டு பகுத்தறிவை இழக்க வேண்டாம்
எம்மதமும் சம்மதமே என்ற மேலோன்
ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே

மதச்சார்பற்ற அரசு, சமூக வாழ்க்கையில் மடங்களின் ஆதிக்கம், ஊழ்வினை அல்லது புனர்ஜென்மம் பற்றிய விந்தனின் கண்ணோட்டத்தில் அறிவு வாதத்தின் செயற்பாட்டைக் காணலாம்.

திதி யென்றும் திவசமென்றும் கொடுக்க வேண்டாம்
தின்பவர்கள் பிதுர்க்களென்று எண்ண வேண்டாம்
கோமாதா குலமாதா ஆக வேண்டாம்
கோமியத்தில் குணநலனைக் காண வேண்டாம்
சாணியையும் பிள்ளையாராய்ச் செய்ய வேண்டாம்
சரணமென்று விழுந்தவனை வணங்க வேண்டாம்
முட்டாள் தனத்தையெல்லாம் முறியடித்தோன்
மூதறிஞன் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!  (சமூக நீதி)

பாடல்கள்
விந்தன் இயல்பாகவே தம்மை முற்போக்குச் சிந்தனையில் ஈடுபடுத்திக்கொண்டவர். ஆகவேதான் இவரது படைப்புகள் அனைத்தும் வறுமை, ஏமாற்றம், தோல்வி, இயலாமை போன்ற அவலங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தானே ஒரு உழைப்பாளியாக இருந்ததால் உழைக்கும் மக்களின் இன்னல்களை நன்கு அறிந்தவர் விந்தன். அதனால் இவரது திரைப்பாடல்களில் தொழிலாளர்களின் இன்னல்கள் மிகுதியாகச் சித்தரிக்கப்படுகின்றன.

1953 – ஆண்டு வெளிவந்த அன்பு திரைப்படத்தில், இந்த உலகம் அதன் வளங்கள் முதலிய அனைத்தும் தொழிலாளர்களின் கடும் உழைப்பினால் பெருகுகின்றன. அதே உழைப்பாளி உழைப்பினின்று அந்நியப்படுவதால் செல்லாக்காசு அளவுக்கு மதிப்பிழந்து போகின்றான் என்பதை,

இயற்கையின் செல்வமெல்லாம்
ஏழையால் பெருகுது
சேர்க்கை பணம் ஒருவனை ஏய்த்து
செல்லாக்காசு ஆக்குது     (அன்பு)

என்ற திரை இசைப்பாடல் அடிகளின் மூலம் காட்டுகின்றார். அதேபோல் உழைப்பாளி ஏமாற்றப்பட்டு வறுமையில் தள்ளப்படுகின்றான் என்பதை,

சேர்க்கை பணம் ஒருவனை ஏய்த்து
செல்லாக்காசு ஆக்குது

என்ற வரிகள் மூலம் காட்டுகிறார். செல்லாக்காசு என்னும் கூட்டுச்சொல் எல்லாவகையான மக்களும் பேச்சு வழக்கில் பயன்படுத்தக்கூடியக் கூடியச் சொல்லாக இருக்கிறது. இந்தச் சொல் மூலம் கவிஞர் தான் சொல்ல வந்த கருத்தினை; ஏழைத் தொழிலாளியைக் காட்சிப்படுத்துகிறார்.

விந்தன் பசியின் கொடுமை எத்தகையது என்பதைத் தமது சுய வாழ்வில் அனுபவித்தவர் என்பதால் இவரது பாடல்களில் இயல்பான சிந்தனை மேலோங்கியுள்ளது.

ஒண்ணும் புரியவில்லை தம்பி – எனக்கு
ஒண்ணும் புரியவில்லை தம்பி
கண்ணு ரெண்டும் சுத்துது
காதை அடைக்குது
கஞ்சி கஞ்சி என்று வயிறு
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்குது
கடவுளை நம்பினேன் கற்பூரம் செலவு
கல்வியை நம்பினேன் காசெல்லாம் செலவு
மனிதனுக்கு மனிதன் மனமிரங்கவில்லை
மானத்தோடு வாழ மார்க்கம் ஏனோ இல்லை!
சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குது
ஆலையிலே அவனாவி புகையாகப் போகுது

என்று பசியின் கொடுமைகளை பாடியுள்ளார். அன்பு திரைப்படத்தில் விந்தன் நாற்பது அடிகள் கொண்ட ஒரு நெடும் பாடலை எழுதியுள்ளார்.

சுத்தாத இடமில்லே கேட்காத பேரில்லே
சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே
செத்த பின்பு சிவலோகம் செல்ல வழிகாட்டும்
பித்தர்கள் ஏனிந்த நாட்டிலே

என்று தொடங்கும் பாடலில் சமூகக் கொடுமைகளை, மனிதநேயமற்ற மனிதர்கள், ஏழைகள் பேரில் கடவுள் காட்டும் கஞ்சத்தனத்தையும் பிற சமூகச் சீர்கேடுகளையும் சாடுகிறார். 

இப்பாடலைப் பற்றி “அன்பு என்னும் படத்திற்கு விந்தன் எழுதிய இருபத்து நான்கு அடிகளைக் கொண்ட பாடல் சமூக சாஸ்திர சம்பிரதாய முதலாளித்துவக் கொடுமைகள் அனைத்தையும் உணர்ச்சிப் பொங்க எடுத்துகூறுகிறது. மேலும் விந்தன் பெரிதும் மதிக்கும் உலக எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலில் வரும் பஞ்சாலையில் உழைக்கும் தொழிலாளியின் வியர்வை ஆவியாக மாறி ஆலையில் புகையாகப் போகிறது என்னும் கருத்தை வலியுறுத்தியுள்ளார்” (திரையுலகில் விந்தன், ப.61) என்ற பரமசிவம் அவர்களின் கூற்று இங்கு நினைக்கத்தக்கது.

1954 – ஆம் ஆண்டு வெளிவந்த கூண்டுக்கிளி திரைப்படத்தில் ‘கொஞ்சுங்கிளியான பெண்ணை’, ‘பார் மகளே பார்’ மற்றும் ‘எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே’ ஆகிய பாடல்களை இயற்றியுள்ளார். அப்பாடல்களிலும் விந்தன் இவ்வுலக நிகழ்வுகளை சாடுகிறார்.

பஞ்சபூதச் சாட்சியெல்லாம்
நெஞ்சமில்லாச் சாட்சி என்று
தொட்டுமாலை சூட்டுவது
சரியா? தப்பா?
மண்ணும் பொண்ணும் மாயை யென்று
மக்களுக்குச் சொல்லிவிட்டு
பெண்ணைப் பார்த்துக் கண்ணடித்தால்
சரியா? தப்பா? (கூண்டுக்கிளி, பாடல் 1)

மனிதனுக்கில்லாத இதயம்
மண்ணுக்கிருப்பதை பார்! பார்!
மாடிவீட்டு எச்சில் இலைக்கு
மண்டை உடையுது பார்! பார்! (பார்)
பணத்தால் பாத பூஜை செய்யும்
பரம பக்தரைப் பார்! பார்! (பார்) (கூண்டுக்கிளி, பாடல் 2)

1955 – இல் ‘ஆர்.ஆர் பிக்சர்ஸ்’ எனும் திரைப்பட நிறுவனம் தயாரித்த ‘குலேபகாவலி’ எனும் திரைப்படத்தில் ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ, போ போ’ எனும் காதல் பாடலை எழுதியுள்ளார். அதில் காதலர்கள் பாடுவதாய் அமைந்த வரிகள்:

ஆண்: பன்னீர்த் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே

பெண்: பாலூட்டும் நிலவு தேன் ஊட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே

ஆண்: கனி இதழ் காதல் தீர்க்குமே

பெண்: காண்போம் பேரின்பமே

1960 – ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி அவர்களின் ‘பார்த்திபன் கனவு’ எனும் திரைப்படத்திற்கு ‘இதயவானிலே உதய நிலவே’ என்ற பாடலை எழுதினார். அதில் ஒத்த எண்ணங்கள் கொண்ட காதலர்களின் மனநிலையை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

“ஆண்: இருளகற்றும் ஒளியென்றன்னை
எண்ணும் நீ யாரோ?
எண்ணும் நீ யாரோ?
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ?
காதல் கண்களோ?

இதவானின் உதய நிலவே
எங்கே போகிறேன் – நான்
எங்கே போகிறேன்!

பெண்: ஆசை மிஞ்சி நேசக் கரங்கள்
அணைக்க உன்னை நீ ளுதே
அணைக்க உன்னை நீ ளுதே
பறந்து வந்து உன்னைத் தழுவப்
பாழும் சிறகில்லையே!
பாழும் சிறகில்லையே! (பார்த்திபன் கனவு)

விந்தனின் சமகாலப் படைப்பாளர்கள் பகட்டான வாழ்விற்காக போலி வரிகளையும், துதிப்பாடல்களையும் எழுதிய நிலையில் விந்தன் மட்டும் தாம் வாழும் காலத்தை மய்யமாகக் கொண்டே பாடுபொருள்களைத் தேர்வு செய்து எழுதியவர். அவர்தம் கவிதைகளிலும் பாடல்களிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, தொழிலாளர்களின் இன்னல்கள், சமூகச் சீர்கேடுகள், மூடத்தனங்கள், குடும்ப உறவுகளின் உண்மை அன்பு பாடிய விந்தன் உள்ளபடியே விந்தைக் கவிஞன் என்பதில் ஐயமில்லை.

துணை நின்ற நூல்கள்

•பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை.
•விந்தன், (17.1.1972-திசம்பர் 1972) பாட்டினில் பாரதம், தினமணிக் கதிர், சென்னை.

மின்னஞ்சல்: drnprabu@gmail.com

* கட்டுரையாளர் : – முனைவர் நா.பிரபு, உதவிப் பேராசிரியர், முதுகலை (ம) தமிழாய்வுத்துறை, சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை 606 603 –