ஆய்வு: அகநானூற்றில் காட்டுயிரி வாழிடச் சூழலும் மனிதத் தலையீடும்

- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -முன்னுரை
காட்டுயிரி என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து வகையான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவையாகும். காட்டுயிரிகளை, அவை வாழ்கின்ற இடங்களில் பாதுகாப்பாகவும் எவ்வித இடையூறின்றியும் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்குச் ‘சூழல் பாதுகாப்பு’ எனப்படுகிறது. இத்தகையச் சூழல் பாதுகாப்பைப் பழந்தமிழர் காட்டுயிரிகளுக்குக் கொடுத்து வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். ஆயினும் காட்டுயிரிகளின் வாழிடச் சூழல், மனிதர்களின் தலையீடு காரணமாகப் பெரும் விளைவுகளை எதிர்கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்வாய்வுக் கட்டுரை சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூற்றின் வழி காட்டுயிரிகளின் வாழிடச் சூழலில் மனிதத் தலையீடு குறித்து விரிவாக ஆராய முற்படுகிறது.

காட்டுயிரிகளும் வாழிடச் சூழலும்
மனிதர்களிடமிருந்து தனித்து வாழக்கூடிய காட்டுயிரிகளுக்கு அவற்றைச் சுற்றியிருக்கின்ற சூழலே பாதுகாப்பான வாழிடச் சூழலாகும். காட்டுயிரிகளான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவை வாழக்கூடிய தகுந்த சூழல் அமைப்புகள் காடுகளில் இருந்தே கிடைக்கின்றன.

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீம்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்”    (அகம்.2)

என்னும் பாடல்வரிகள் காட்டுயிரிகளின் வாழிடச் சூழலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். குறிஞ்சி நிலத்தில் வாழையின் பெரிய குலையிலுள்ள முதிர்ந்த இனிய கனியாலும் பலாவின் முற்றிய சுளையாலும் பாறையில் அமைந்த பெரிய சுனையில் உண்டான தேனை ஆண் குரங்கு உண்டு, அருகிலிருந்த மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற மாட்டாது, அதன் நிழலிடத்து இருந்த மலர்ப்படுக்கையில் மகிழ்ந்து உறங்கியது என்னும் வருணனை, வளமையும் செழிப்பும் மிக்க காட்டுயிரிகளின் வாழிடச் சூழலை அழகுற எடுத்துரைப்பதாகும். தம் வாழிடத்தில் பாதுகாப்பை உணர்ந்து இனிது உறங்கும் குரங்கு, துய்ப்போர் இன்மையால் தாமாகவே பழுத்து உதிரும் பழ மரங்கள் எனும் இவை மனிதத் தலையீடு இல்லாத அழகிய வாழிடச் சூழலை உணர்த்தி நிற்கின்றன.

தாவரங்களின் வாழிடச் சூழலில் மனிதத் தலையீடு
பழந்தமிழர் தாவரங்கள் குறித்த ஆழமான அறிவைப் பெற்றிருந்தனர். தாவரங்களின் வாழிடச் சூழல் இயற்கையாகவும் பழந்தமிழரின் தொலைநோக்குச் சிந்தனையாலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. அதே வேளையில் இயற்கையால் ஏற்படும் அழிவுகளையும் மனிதர்கள், விலங்குகளால் ஏற்படும் அழிவுகளையும் தாவரங்கள் சந்தித்துள்ளன. ‘மனிதனால் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இழைக்கப்படும் பெருந்தீங்குகளே காடுகளுக்கு மிகுந்த கேட்டைத் தருகின்றன’ என்கிறார் சிவ. மங்கையர்க்கரசி (சூழலியல் தமிழ். ப.46)

“ ——————கிளையொடு கலி சிறந்து
சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும்
குன்ற நாட! ” (அகம்.172)
“நறுவிரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக்குரல் சிறுதினை”    (அகம்.388)

என்னும் பாடலடிகள் குறவர்கள் தாம் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியைச் சந்தன விறகால் தீமூட்டிச் சமைத்ததையும், தினைப்புனம் அமைக்கும் பொருட்டு மலைச்சாரலில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டதையும் எடுத்துரைக்கின்றன. உயர்ந்த, அடர்ந்த வனப்பகுதியுள் மட்டுமே வளரக்கூடிய அரிய, உயர்சாதி மரமான சந்தன மரங்கள் அழிவுக்குள்ளான செய்தி காட்டுயிர்த் தாவரங்களின் பாதுகாப்பற்றச் சூழலை வெளிப்படுத்துவதாகும்.

பழந்தமிழர் இயற்கையோடு ஒன்றிய வாழ்வை வாழ்வை வாழ்ந்தவராயினும் காடழித்து தினைப்புனம் அமைத்தனர் என்னும் செய்தி காட்டு வளம் அழிய அடித்தளம் அமைத்தனர் என்று கருதவே இடமளிப்பதாக உள்ளது.

இன்று வளம் நிறைந்த பல மலைகள் சுற்றுலாத் தலங்களாக மாற காட்டுயிர்த் தாவரங்கள் சந்தித்து வரும் அழிவுகள் ஏராளம். எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டே மலைப்பாதைகளும் விடுதிகளும் பொழுதுபோக்கிடங்களும் உருவாகி வருகின்றன. இன்று மட்டுமல்ல, அன்றும் இந்நிலை இருந்ததை அகநானூற்றுப் பாடல்கள் சான்று பகருகின்றன.

“மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்”    (அகம்.251)

“விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும்”    (அகம்.69)

என்னும் பாடலடிகள் மோரியர்கள் தம் தேரின் சக்கரங்கள் தடையின்றிச் செல்லும் பொருட்டு அருவிகள் பாயும் மலைகளை உடைத்துப் பாதைகளை உண்டாக்கினர் என்பதை அறிவிக்கின்றன. அருவிகள் பாயும் மலை என்பதனால் மலை வளமான காடுகளும் அழிவைச் சந்தித்திருக்கக்கூடும் என்பதை அறியலாம். எனவே மனிதனது அதீத தேவைகளாலும் நாகரிக வளர்ச்சியாலும் மலைகளும் காடுகளும் சூறையாடப்பட்டு, அவை தம் வாழிடச் சூழல் அழிவை ஏற்பதை இதனால் அறிய முடிகிறது.

விலங்குகளின் வாழிடச் சூழலில் மனிதத் தலையீடு
உயிர்ச்சூழல் குறித்த சிந்தனை தமிழருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. பண்டைத் தமிழரது அக வாழ்விலும் புற வாழ்விலும் உயிரினங்கள் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருந்தன.

“புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகளக்
கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி
மெல்லியல் அரிவை! கண்டிகும்
மல்லல் ஆகிய மணங்கமழ் புறவே”    (ஐங்.414)

என்னும் பாடல் பறவைகளும் விலங்குகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து இனிது மகிழ்ந்து திரிய, செடிகளும் கொடிகளும் பூத்துக் குலுங்க, வளம் பொருந்திய முல்லை நில வாழிடச் சூழலை அழகுற வருணிக்கிறது.

ஆயினும் காட்டு விலங்குகளைப் பழக்கிப் போருக்குப் பயன்படுத்துவது, யானைகளைக் கொன்று தந்தங்களை எடுப்பது, இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வது போன்றவை மனிதத் தலையீட்டின் கொடிய விளைவுகள் ஆகும். இவை விலங்குகளின் வாழ்வியல் கட்டமைப்பையும் வாழிடச் சூழலையும் பெரிதும் பாதிப்பன ஆகும்.

“பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிமடை அம்பின் வல்வில் கானவன்
பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்”    (அகம்.282)

மலைப் பக்கத்தே வேட்டைக்குச் சென்ற வேட்டுவன் தன்னோடு போரிட்டு இறந்துபட்ட யானையின் வெண்ணிறக் கொம்பினைக் கருவியாகக் கொண்டு நீர்வளம் மிக்க நெடுவரையில் பொன்னை அகழ்ந்தெடுத்தான் என்னும் செய்தி தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்பட்ட அவலத்தை எடுத்துரைப்பதாகும்.

மேலும் மனிதர்கள் கள் குடிப்பதற்காக யானைக் கன்றுகளைப் பிடித்து வந்தும், யானைகளைக் கொன்று தந்தங்களைப் பறித்து வந்தும் அவற்றைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்துள்ளனர் என்பதை,

“கறை அடி மடப்பிடி கானத்து அலற
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து
கருங்கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து
பெரும் பொளி வெண் நார் அழுந்து படப்பூட்டி”    (அகம்.83)

“அரியலாட்டியர் அல்குமனை வரைப்பில்
மகிழ்நொடை பெறாஅராகி நனைகவுள்
கான யானை வெண்கோடு சுட்டி
மன்றுஓடு புதல்வன் புன்தலை நீவும்
அருமுனைப் பாக்கத்து”    (அகம்.245)

என்னும் பாடல் வரிகளில் காணலாம். பெண்யானை அலற ஆண்யானைக் கன்றைப் பிடித்து வந்து, அதனைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்தனர் என்னும் செய்தி காட்டு விலங்குகளின் குடும்ப அமைப்பும் வாழிடச் சூழலும் மனிதனின் அற்ப ஆசைக்காக அழிவுக்கு உள்ளானதை எடுத்துரைப்பதாகும்.

“பல்பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகுஆ வீழ்த்து, திற்றி தின்ற
புலவுக்களம்”    (அகம்.249)

என்னும் பாடலடிகள் மனிதர்கள் காட்டுப்பசுவைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்ற செய்தியை எடுத்துரைக்கின்றன.

காட்டு விலங்குகளான யானைகளைப் பிடித்து வந்து அவற்றைப் பழக்கி, பயிற்றுவித்துப் போருக்குப் பயன்படுத்திய செய்திகள் சங்க இலக்கியத்தில் ஏராளமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பறவைகளின் வாழிடச் சூழலில் மனிதத் தலையீடு
“கருப்பொருள்களுள் ஒன்று புள் என்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தங்களுக்குள் கொள்ளும் உறவு, தமது சுற்றத்துடன் கொள்ளும் உறவு, உயிருள்ளவற்றோடும் உயிரற்றவற்றோடும் கொண்டிருக்கும் உறவு திணையம் எனப்படும்” என்கிறார் சூழலியல் ஆர்வலர் பாமயன் (திணையியல் கோட்பாடுகள், ப.27). இத்திணையம் என்பதே வாழிடச் சூழல் ஆகும்.

“எரிமருள் வேங்கை இருந்த தோகை”    (ஐங்.294)
என வேங்கை மரத்துள் இருந்த மயிலையும்,

“—————————————குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்”    (அகம்.341)

என மாமரத்துடன் குயிலுக்கு இருந்த நெருக்கத்தையும்

“பராரைப் பெண்ணை சேக்கும் கூர்வாய்
ஒரு தனி அன்றில்”    (அகம்.305)

எனப் பனைமரத்துடன் அன்றில் பறவைக்கு இருக்கும் உறவையும் சங்க இலக்கியப் பாக்கள் பரவலாக எடுத்துரைக்கின்றன. ஆயினும் மனிதத் தலையீட்டால் பறவைகள் தம் இரையை இழப்பதும் தம் வாழிடம் விட்டு வேறிடம் பெயர்வதும் சங்கப் பாடல்களிலேயே காணக்கிடைக்கும் செய்திகளாகும்.

குளிர், தட்டை போன்ற கருவிகளைக் கொண்டு மலை வாழ் குறவர்கள் தினை கவர வரும் கிளிகளை அச்சுறுத்தி விரட்டும் செய்திகள் குறிஞ்சித் திணைப் பாடல்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. 

மனிதர் எழுப்பும் பேரொலிக்கு அஞ்சி பறவைகள் தன் இருப்பிடத்தை விட்டு வேறிடம் செல்லும் செய்திகளும் அகநானூற்றில் காணப்படுகின்றன.

“பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீம்குலை வாழை ஓங்குமடல் இராது
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்”    (அகம்.141)

வயிரம் பாய்ந்த உலக்கையால் அவல் இடிக்கும் ஓசைக்கு அஞ்சி, சிறிது தொலைவே பறக்க இயலும் சூல் கொண்ட வெண்குருகு, வாழையின் ஓங்கி உயர்ந்த மடலில் தங்கியிராமல் மாமரத்தின்கண் குறுகப் பறந்து சென்று தங்கும் என்னும் வருணனையும்,

“வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரின் பிளிற்றி, பெண்ணை
அகமடல் சேக்கும்”    (அகம்.40)

என்னும் பாடலில், வயல்களில் வெண்ணெல் அரிவோர் ஒலிக்கும் பறையொலிக்கு வெருவிய நாரை, ஊதுகொம்பு போல் ஒலித்துப் பனைமரத்தின் உள்மடலில் சென்று தங்கும் எனக் கூறப்பட்டுள்ள வருணனையும் வளம் கருதி கூறப்பட்டிருப்பினும் மனிதர்கள் உண்டாக்கும் பேரோசைக்கு அஞ்சி பறவைகள் வேறிடம் பெயர்தல் என்னும் செய்தி சிந்திக்கத்தக்கதாகும். இது ஒலிமாசினால் ஏற்படும் விளைவு எனலாம்.

முடிவுரை
நீர்ப்பரப்பு, நிலப்பரப்பு என்னும் இவற்றை ஆதாரமாகக் கொண்ட இயற்கை, அவற்றைச் சார்ந்து வாழ்கின்ற பல்லுயிரிகள், அவற்றின் பாதுகாப்பு என்பன எக்காலத்திலும் மனிதனின் தலையீடு காரணமாகப் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தே வந்துள்ளன. தன் வாழிடத்தின் மீதான பேரார்வமும் தன்னலமும் நாகரிக வளர்ச்சியும் பேராசையும் கொண்ட மனிதனால் காட்டுயிரிகள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டு வந்தமைக்கு அகநானூற்றுப் பாடல்கள் சான்றாக அமைவதுடன் காட்டுயிரிப் பாதுகாப்பின் மீதான கவன ஈர்ப்பையும் உணர்த்தி நிற்கின்றன எனலாம்.

துணை நின்ற நூல்கள்
1. சிவ. மங்கையர்க்கரசி, சூழலியல் தமிழ்
2. பாமயன், திணையியல் கோட்பாடுகள்
3. யாழ். சு. சந்திரா, இலக்கியமும் சூழலியலும்
4. முனைவர் சி. சேதுராமன், சுற்றுச்சூழல் பயில்வுகள்

suthamathi64@gmail.com

* கட்டுரையாளர்:  முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி – 627008