ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்சுரேஷ் அகணிஅறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களின் சில படைப்புக்களால் ஈர்க்கப்பட்டு அவரைப் பற்றிய எனது தேடலின் விளைவாக நான் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். இந்தப் பதிவைச் சக எழுத்தாளர்களுடனும் தமிழ் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் முகமாக எழுதிய இந்தக் கட்டுரை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு மலரில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதெனக் கருதுகின்றேன். 

ஈழத்து இலக்கியவானில் ஓளிவீசிப் பிரகாசித்த அ.ந.க 1968ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி  இவ்வுலகைவிட்டுச் சென்றார். ஈழத்தில் சிறந்த சிறுகதை ஆசிரியராக நாவலாசிரியராக படைப்பாளியாக விளங்கினார். ஏழை பணக்கார பேதம் சாதி சமய வேறுபாடுகள் முதலாளி தொழிலாளிப் பிரச்சினைகள் போன்ற விடயங்களில் நடுநிலைக் கருத்தை மூலக் கருவாகக் கொண்டு அதிக யதார்த்த இலக்கியப் படைப்புக்களைச் செய்தார். இவரின் இலக்கியச் சாதனைகள் கவிதை சிறுகதை நாவல் கட்டுரை நாடகம் மொழிபெயர்ப்பு எனப் பல வடிவங்களில் மிளிர்ந்தன. இவரின் பங்களிப்புக்கள் பத்திரிகைத் துறையையும் வானொலித் துறையையும் வலுவூட்டின. இவரின் அறிவூட்டல்கள் பலருக்கும் படிக்கற்களாக அமைந்தன. இவரின் எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது “அ.ந.க ஒரு சகாப்தம்” என்ற நூலில் “ அ.ந.க வின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுது அவரது துள்ளும் தமிழும் துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டுழ் படிக்கத் தூண்டும்” என்று கூறுகின்றார்.  அ.ந.க சிறுவயதில் தனது பெற்றாரை இழந்ததால் பாட்டியாருடன் வாழ்ந்திருக்கின்றார். இவர் பதினேழாவது வயதில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து தனிமையாக வாழ்ந்திருக்கின்றார். கண்டதைக் கற்றுப் புலமை தேடியவர். மறுமலர்ச்சிக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். இவரும் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்டவரே. அச்சகத் தொழிலாளருக்காகப் போராடினார். அச்சக முதலாளிகளின் வெறுப்பைச் சம்பாதித்தார். “சுதந்திரன்” போன்ற சில  பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றார். அரசாங்க தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். எமிலிஸோலாவின் “நானா” என்ற நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் ஆய்வினை பண்டிதர் திருமலைராயர் என்ற புனைபெயரில் எழுதினார். “மதமாற்றம்” என்ற நாடகத்தையும் “மனக்கண்” நாவலையும் எழுதியவர். இவர் ஆரம்ப காலத்தில் “கவீந்திரன்” என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். “எதிர்காலச் சித்தன் பாடல்”  “சத்திய தரிசனம்” “கடவுள் என் சோர நாயகன்” என்பவை இவர் எழுதிப் பாடிய பாக்களில் சில. “கசையடிக் கவிராயர்” என்ற புனைபெயரிலும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகளில் மலையகத் தொழிலாளரின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு எழுதிய “நாயினும் கடையர்” “இரத்த உறவு” போன்ற படைப்புக்கள் முக்கியமானவை.

பேராசிரியர் கா.சிவத்தம்பி தனது “தமிழ் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் “அ.ந.கந்தசாமியின் கதைகளோ வன்மையாகச் சமூகத்தைத் தாக்குபவை”. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வை நன்கு புலப்படுத்துவதில் சமர்த்தர் இவர். ‘இரத்த உறவு’ முக்கிய கதைகளில் ஒன்று” எனக் குறிப்பிடுகின்றார். இவரின் “மனக்கண்” நாவலை இவரது நண்பரான பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராஐன் வானொலி நாடகமாக அரங்கேற்றினார். இவர் “தேசிய இலக்கியம்” தொடர்பாகப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எமிலிஸோலாவைப் பற்றி “நான் விரும்பும் நாவலாசிரியர்” என்ற ஒரு கட்டுரைத்தொடரை எழுதியுள்ளார். அ.ந.க அவர்கள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட கதைகளையும் படைத்திருக்கின்றார். இவர் எப்பொழுதும் தனது எழுத்துக்களால் பிறர் பயனுறவேண்டும் என விரும்புபவர். இந்நோக்கில் இவர் எழுதிய “வெற்றியின் இரகசியங்கள்” என்ற நூலால் பலர் பயனடைந்திருப்பார்கள் எனலாம். என்னைக் கவர்ந்த இவர் பாடலின் சில கவிதை வரிகளையும் இங்கு மீட்டிட விரும்புகின்றேன்.

இவர் தனது பதினேழாவது வயதில் எழுதிய “சிந்தனையும் மின்னொளியும்” என்ற கவிதையும் “எதிர்காலச் சித்தன்” “வள்ளுவர் நினைவு” “நான் செய் நித்திலம்” “வில்லூன்றி மயானம்” “மாம்பொழிலாள் நடனம்” போன்ற கவிதைகளும் என் கவனத்தை ஈர்த்தன.

பூபாலசிங்கம் புத்தகசாலையால் பதிப்பிக்கப்பட்டதும் செங்கை ஆழியான் க.குணராசா அவர்களால் தொகுக்கப்பட்ட “ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள்” என்ற நூலில் 1936க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த இருபத்தைந்து முன்னோடிப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. “ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள்” என்ற நூலில் இடம்பெற்றிருந்த அ.ந.கந்தசாமி 1950இல் எழுதிய “நள்ளிரவு” என்ற சிறுகதையை வாசித்தேன். சிறை வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒருவனின் கதையாக இருந்தது. இவர் சிறுகதை எழுதுவதில் வல்லவரே எனத் தெரிந்து கொண்டேன். முற்போக்கு அணியைச் சார்ந்த அ.ந.கந்தசாமி அவர்கள் நாற்பது சிறுகதைகள் வரை எழுதியுள்ளார் எனவும் “ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு எழுத்தாளர் எழுதும் எல்லாச் சிறுகதைகளும் சிறந்த கதைகளாக அமைந்து விடுவதில்லை. அவ்வகையில் இவரின் பதினைந்து சிறுகதைகள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. “இரத்த உறவு” “நாயிலும் கடையர் “ “காளிமுத்து இலங்கை வந்த கதை” “பாதாளமோகினி” “நள்ளிரவு” “ஐந்தாவது சந்திப்பு” “பரிசு” “குருட்டு வாழ்க்கை” “உலகப் பிரவேசம்” “பிக்பொக்கட்” “சாகும் உரிமை” “கொலைகாரன்” “உதவிவந்தது” “வழிகாட்டி” ஆகிய கதைகளை இவரின் நல்ல கதைகளாகக் கருதுகிறார்கள். “இரத்த உறவு” “ஐந்தாவது சந்திப்பு” “நாயிலும் கடையர்” ஆகிய கதைகள் இவருக்குப் புகழை ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

கனக செந்திநாதன் எழுதிய “ஈழத்து இலக்கிய வளர்ச்சி” என்ற நூலில் “மறுமலர்ச்சி” என்ற பத்திரிகையில் பிரகாசித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களில் ஒருவராக அ.ந.கந்தசாமி அவர்களைக் குறிப்பிட்டிருந்தார்.  மேலும் இந்நூலில் அவர் முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவரது “இரத்த உறவு” என்ற கதை அவருக்குள்ள அரசியல் ஈடுபாட்டைக் காட்டியது என்பது கனக செந்திநாதன் அவர்களின் கருத்தாகும். முற்போக்குக் கதைகளுக்கு அ.ந.கந்தசாமி என்று குறிப்பிடும்படியாக அவரின் பங்களிப்பு இருந்தது.

அ.ந.கந்தசாமியின் “இரத்த உறவு” என்ற சிறுகதை செம்பியன் செல்வனின் “ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்” என்ற நூலில் இடம்பெற்றிருந்ததோடு இவரைப்பற்றிய கட்டுரை ஒன்றும் காணப்பட்டது. “இரத்த உறவு” கதையைப் படித்ததும் இவரின் படைப்புத் திறன் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் வலுவானது. இவரைப் பற்றி எழுதுவது எனக்குக் கிடைத்த பாக்கியம் என எண்ணினேன். தனது கற்பனையில் எவ்வளவு இலாகவமாக பரமசிவனையும் பராசக்தியையும் கொழும்பு ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்திருக்கிறாரே என மனதில் நினைத்தேன்;. உங்களில் யாராவது அந்தக் கதையைப் படித்திருக்காவிட்டால் நிச்சயம் தேடிப் படியுங்கள். “சமுதாயச் சூழ்நிலைகளே மனிதவுணர்வுகளை நிர்ணயிக்கின்றன என்ற கார்ல் மாக்ஸின் சித்தாந்தம் இவரின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது” எனச் செம்பியன் செல்வன் தனது நூலில் குறிப்பிடுகின்றார். 
அந்தனி ஜீவா எழுதிய “ஈழத்தில் தமிழ் நாடகம்” நூலில் “1956க்குப் பின்னர் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களின் “மதமாற்றம்” என்ற நாடகமே புத்திஜீவிகளின் பாராட்டைப் பெற்றதாகக் குறிப்பிடுகின்றார்”.

கலாநிதி க குணராசா(செங்கை ஆழியான்) எழுதிய “ஈழத்துச் சிறுகதை வரலாறு” நூலில் இருபத்தாறு ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராக அ.ந.கந்தசாமி குறிப்பிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கவிதை சிறுகதை நாடகம் கட்டுரை என எல்லாவற்றிலும் உள்ள திறமை இவரின் பொதுவுடைமைத் தன்மை  ஆகியவற்றின் காரணமாக இவர் மேலும் உயர்ந்து காணப்பட்டார். “சாகித்திய மண்டலத்தார் நடாத்திய பாவோதல் விழாவில் அ.ந.கந்தசாமி வாசித்த “கடவுள் என் சோரநாயகன்” என்ற கவிதையை அக்கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தமிழ் அறிஞர் தென் புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை; ஒரு நூற்றாண்டுக்கு ஒரு தடவைதான் இவ்வாறான நல்ல கவிதை தோன்றும் எனக் குறிப்பிட்டார்” என இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழுலகம் அ.ந.கந்தசாமி என்ற இலக்கியப் படைப்பாளியை என்றும் மறந்து விட முடியாது. வாழ்க அ.ந.க புகழ்!

இவரைப்போன்று படைப்பிலக்கியத்தில் முன்னோடிகளாகப் பலர் உள்ளார்கள். இவர்களைப் பற்றி நாமெல்லாம் அறிந்த கொள்வதும் மீண்டும் மீண்டும் பதிவு செய்வதும் அவசியமாகின்றது. எங்களுடன் சமகாலத்தில் வாழும் முக்கிய எழுத்தாளர்களின் சாதனைகளும் பதிவுசெய்யப்பட வேண்டியதே. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு எனது வாழ்த்துக்கள். நன்றி

உசாத்துணை நூல்கள்:
1.“ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள்” செங்கை ஆழியான் க.குணராசா பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு 2001
2.“ஈழத்து இலக்கிய வளர்ச்சி” கனக செந்திநாதன் அரசு வெளியீடு கொழும்பு 1964
3.“அ.ந.க ஒரு சகாப்தம்” அந்தனி ஜீவா மலையக வெளியீட்டகம்கண்டி 2009
4.“ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்” செம்பியன் செல்வன் முன்னோடிகள் திருகோணமலை 1973
5.“ஈழத்தில் தமிழ் நாடகம்”; அந்தனி ஜீவா அகரம் சிவகங்கை 1981
6.“ஈழத்துச் சிறுகதை வரலாறு” கலாநிதி க குணராசா(செங்கை ஆழியான்) ஆனந்தா அச்சகம் யாழ்ப்பாணம் 2001

முன் பதிப்பு – நன்றி – கனடா எழுத்தாளர் இணையம் – 20ம் ஆண்டு மலர்

suresa@gmail.com