ஆய்வு: இலக்கிய நோக்கில் தமிழ் இணையத் திரட்டிகள்!

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை!இணையத்தின் வாயிலாக தமிழ் மொழியின் வளர்ச்சியினை அதிகரிக்க முடியும் என்பதனை இன்றைய இணையத் தமிழ் ஆசிரியர்கள் வலைத்தளம், வலைப்பதிவு, மின் இதழ், விக்கிபீடியா போன்ற பல தளங்களில் தங்களின் இலக்கிய பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். இணையத்தில் தமிழைக் கொண்டு சென்று அதன் வளர்ச்சியை விரிவுபடுத்த கீழ்க்கண்ட நான்கு நிலைகள் கையாளப்படுகின்றன..
1. வலைத்தளங்களின் மூலம் பரவலை அதிகரித்தல். 2. வலைப்பூக்களின் மூலம் பரவலை அதிகரித்தல். 3. திரட்டிகள் மூலம் பரவலை அதிகரித்தல் 4. சமூகக் குழுக்கள் மூலம் பரவலை அதிகரித்தல் என்ற நான்கு நிலைகளில் தமிழினை இணையத்தில் வளர்ச்சியடையச் செய்ய முடியும்.

வலைப்பூக்களில் பதிவுகளைச் செய்யும் ஆசிரியர்களின் இலக்கிய ஆர்வத்தினைக் கொண்டு அவர்கள் தங்களின் பங்களிப்பினைப் ஆற்றியிருக்கும் தன்மையினைப் பொருத்தும் வலைப்பூக்களின் தொகுப்பான வலைப்பூத் திரட்டிகளைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

வலைப்பூத் திரட்டிகள்
 ”தமிழில் ஒருங்குறியீட்டு முறை பயன்பாட்டிற்கு வரத்தொடங்கியவுடன் இணையத்தில் தமிழ் உலா வெகுவாக நடந்தேறி வருகிறது. இவ்வுலா வலைப்பூக்கள் வழியாகவே பெரிதும் நடைபெற்று வருகிறது. கணக்கிட முடியாத அளவிற்குப் பல்கிப் பெருகி வரும் வலைப்பூக்களைத் திரட்டி ஒரே தளத்தில் பார்வையிடுகின்ற வாய்ப்பை ஏற்படுத்தக் கொடுக்க சிலர் முனைந்துள்ளனர்.”1 இத்தகைய நிலையே திரட்டிகள் எனப்படுகின்றன.

பல்வேறுபட்ட மனிதர்களால் பல்வேறுபட்ட இலக்கிய ஆக்கங்களையும் தங்களின் பதிவுகளில் வெளியிடுவதன் மூலம் அனைவராலும் வாசிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டாலும் அனைத்துவிதமான வலைப்பூக்களையும் பெரும்பான்மையானவர்கள் வாசிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட வலைப்பூக்களை தொகுக்கும் தன்மையை பிளாக் அக்ரிகேட்டர் என்று ஆங்கிலத்திலும் வலைப்பூ திரட்டி என்று தமிழிலும் அழைக்கப்படுகின்றது. ”வலைப்பூக்களில் குறைந்த அளவு மூன்று பதிவுகளைப் பதிந்த பின்பே திரட்டிகளில் இணைத்து கொள்ள முடியும் என்பது அடிப்படை நியதியாகும். செய்தியின் தலைப்பு, செய்தி வெளியிடப்பெற்ற நாள், நேரம் செய்தியை அனுப்பியவர் பெயர், பார்ப்பவர்களின் எண்ணிக்கை போன்றன திரட்டிகளில் தரப்பெறுகின்றன.”2

தமிழில் திரட்டிகள்
”திரட்டிகள் என்பது அனைத்து ப்ளாகின் பதிவுகளையும் ரகம் வாரியாக தொகுத்து வெளியிட பயன்படுபவையாகும்.”3 தமிழில் வலைப்பூக்களைத் திரட்டித் தரும் திரட்டிகள் இருபதிற்கும் மேல் உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட திரட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிடத்தக்கது.

1. இண்ட்லி   – ta.indli.net
2. தமிழ்மணம்  – www.tamilmanam.net 
3. தமிழ் BM   – www.tamilbm.com
4. திரட்டி   – www.thiratti.com
5. தேன்கூடு   – www.thenkoodu.in
6. நம்குரல்   – www.namkural.com
7. மகளிர்கூடல்  – www.magalirkoodal.com
8. வலைச்சரம்  – blogintamil.blogspot.in
9. வலைப்பூக்கள்  – www.valaipookal.in

போன்ற திரட்டிகள் இன்றளவும் இயங்கி வருகின்றன. இவற்றில் இலக்கிய நோக்குடனும் தரத்துடனும் பதிவினை வெளியிடும் திரட்டிகளில் அவற்றைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு அப்பதிவுகள் முன்னுரிமை பெறுகின்றன. பலதரப்பட்ட தகவல்களையும் இத்திரட்டிகள் வழங்கி வருகின்றன.

திரட்டியின் வகைகள்
திரட்டிகளைப் பொறுத்த வரையில் இரண்டு விதமாகக் கூறப்படுகின்றது.            1. தானாகவே திரட்டும் திரட்டிகள். 2. பதிவு செய்து கொண்ட பின்பு செய்திகளைக் காட்டும் திரட்டிகள் என இருவகையாகப் பிரிக்கலாம். இதில், தானாகவே திரட்டும் திரட்டிகள், வலைப்பூ தளத்தில் இணைக்க தமது திரட்டி முகவரியை அளிக்கிறது. இதன்மூலம் புதிய பதிவுகள் திரட்டியில் தெரியவருகின்றன.
பதிவு செய்த பின்பு செய்திகளைக் காட்டும் திரட்டிகள், வலைப்பூவின் இடுகைகளைச் செய்த பின்பு திரட்டியில் பதிவு செய்த பிறகுதான் திரட்டியில் வெளியாகும்.

இண்ட்லி
தமிழில் வெளிவரும் இணைய திரட்டிகளில் இண்ட்லிக்கு தனிப் பெருமையும் முக்கியத்துவமும் உள்ளது. ஈழத்தை மையமாகக் கொண்டு தொகுக்கப்படும் திரட்டியாக இது அமைந்துள்ளது. இன்றளவும் இயங்கிவரும் இத்திரட்டி பலதரப்பட்ட தகவல்களையும் ஒன்று திரட்டி வழங்குகின்றன. ”இணையத்தில் உள்ள உங்களை கவர்ந்த தமிழ் தொடர்பான பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் தளம்.”4 என்ற வாசகத்துடன் இதன் பணி தொடர்கிறது.

இதில். வலிப்போக்கன். விமரிசனம், அதீத கனவுகள், மதிப்பு போன்ற வலைப்பூக்களிலிருந்து இலக்கியம், திறனாய்வு, விமர்சனம் என்று பல பதிவுகள் பரவிக்கிடக்கின்றன. மேலும், நடைமுறை நிகழ்வுகளும் அதிலுள்ள சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் பறைசாற்றுவதாய் இத்திரட்டி அமைந்துள்ளது.

தமிழ்மணம்
இணையத்தில் அதிகப் பதிவுகளையும் (இன்றைய நிலவரப்படி 25.04.015 – 12010), அதிகப்படியான பின்னூட்டங்களையும் (535) கொண்டு தமிழ்மணம் திரட்டி முதலிடம் வகிக்கின்றது. தினமும் புதுப்பிக்கப்பட்டும் புதிய புதிய பதிவுகளைப் பெறும் ஓட்டுகளின் அடிப்படையில் பதிவுகள் முன்னுரிமை பெறுகின்றன. கதை, சிறுகதை. கட்டுரை, மரபுக்கவிதை, கவிதை, திறனாய்வு, விமர்சனம், ஆன்மிகம், நடப்பு நிகழ்வுகள் என இலக்கியம்  சார்ந்த அனைத்தையும் திரட்டிக் கொடுக்கின்றன.

 இதில் 24.05.2015 தேதியில் பதிவேற்றிய ஊமைக்கனவுகள் என்னும் வலைப்பூவில், ”உயிர்மெய் – 216, முற்று ஆய்தம் – 8, உயிர் அளபெடை – 21, ஒற்று அளபெடை – 42, குற்றியலுகரம் – 37, குற்றியலிகரம் – 36, ஐகாரக்குறுக்கம் – 3, ஓளகாரக்குறுக்கம் – 1, மகரக்குறுக்கம் – 3, ஆய்தக்குறுக்கம் – 2 என்று சார்பெழுத்துக்களின் தொகை 369 என நன்னூல் சூத்திரத்தில் வகைப்படுத்திக் காட்டுகிறது.”5 என்று தமிழ் இலக்கணத்தினைப் பற்றிய பதிவு இடம் பெற்றுள்ளது நோக்குதற்குரியது.

மேலும் இதில் முகப்பு, இடுகைகள், பதிவுகள், ம திரட்டி, குறிச்சொற்கள், வாசகர் பரிந்துரை, ஈழம், சினிமா, இசை, நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், நிகழ்வுகள் என்னும் தலைப்புகளின் கீழ் அதிகம் பதிவுகள் பதியப்பெற்றுள்ளது.

தேன்கூடு
 கவிதை, கதை, சங்க இலக்கியம், சினிமா,தொழில்நுட்பம், அறுசுவை, ஆன்மீகம், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, நாட்டு நடப்பு என பல்துறை தகவல்களையும் அள்ளித்தரும் இணைய பதிவுகளைக் கொண்டதாக தேன்கூடு திரட்டி அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள tvrk.blogspot.com என்ற வலைப்பூவில், சங்க இலக்கியம் தொடர்பான, ”காக்கைப் பாராய்க் கடன்” என்னும் பொருளில் அமைந்த குறுந்தொகைப் (210) பாடலின் விளக்கமாக இடம்பெற்றுள்ளது. ”திண்ணிய தேரையுடைய நள்ளி யென்னும் உபகாரியினது காட்டிலுள்ள இடையர்களுக்குரிய பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு, தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில் முற்றும் ஒருங்கே விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய வெம்மையையுடைய சோற்றை, ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும் என் தோழியாகிய தலைவியினுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டு விருந்தினர் வரும்படி கரைதலைச் செய்த காக்கைக்கு இட்ட உணவே சிறந்தது ஆகும்.”6 என்ற பதிவினைப் பாராய் கடனாய் விளக்கியுள்ளமை அறிய முடிகிறது.

தமிழ் BM
வலைப்பூ தொகுப்பினைக் கொண்டுள்ள இத்திரட்டியில் பலதரப்பட்ட பதிவுகளையும் காணமுடிகிறது. இதில் சேர்ந்துள்ள பூனைக்குட்டி வலைப்பூவில், ”அளபு என்றால் அளவு (Measurement)  கலவையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எழுத்துக்களை எவ்வளவு கால அளவில் ஒலிக்க வைப்பது என்பதை விளக்குகிற இலக்கணம் அளபெடை. தமிழில் இன்னின்ன எழுத்தை இவ்வளவு நேரம் ஒலித்து உச்சரிக்க வேண்டும் என்று அளவு உண்டு. இந்த கால அளவுக்கு மாத்திரை என்று பெயர்.”7 என்று மாத்திரைக்கு இலக்கணம் கூறுகிறார் ஆசிரியர்.

நம்குரல் 
இணையத்தில் காணப்படும் மற்றொரு திரட்டி நம்குரல் ஆகும். முகப்பிலேயே ”தினமும் ஒரு குறள்” என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறளினையும் அதற்கான விளக்கத்தினை ஆங்கிலத்திலும் வெளியிடுகிறது.

பதிவர்கள்
 2011ஆம் ஆண்டு முதல் இப்பதிவு, வலைப்பூக்கள் திரட்டியாக பதிவர்கள் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.  விமர்சனம், கலந்துரையாடல், கவிதை, கட்டுரை, ஆன்மீகம் என பலதுறை சார்ந்த பதிவர்களின் பதிவுகள் இதில் அதிகம் காணப்படுகின்றது.

மகளிர் கூடல்
பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இத்திரட்டி தமிழ் மகளிருக்கான முதல் திரட்டி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, மகளிரால் பதிவு செய்யப்பட்ட வலைப்பூக்களை இஃது எடுத்துக் கூறுகிறது. இதில்,

”நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்”8

என்று கந்தரனுபூதியில் விநாயகர் வணக்கமாக அருணகிரிநாதர் கூறியுள்ளதற்கு பல விநாயகர் உருவங்களையும் ஒப்பிட்டு விளக்கம் கூறியிருக்கிறார் இவ்வலைப்பூ ஆசிரியர் தேனம்மைலெட்சுமணன்.

திரட்டிகளின் திரட்டி
பூக்களின் தொகுப்பாக வெளிவரும் திரட்டிகளையெல்லாம் ஒன்று திரட்டி, “தமிழ்ப்புள்ளி”9 (tamil point) என்ற பெயரில் வெளியிடுகின்றது. நீச்சல்காரன் என்னும் புனைப்பெயருடன் இதன் ஆசிரியர் இதனை வெளியிடுகிறார்.

முடிவுரை
திரட்டிகள் என்று அழைக்கப்படும் இந்த வலைப்பூ திரட்டிகள் தமிழில் தோற்றுவிக்கப்பட்ட பிறகு தனித்தனியாக இருந்த வலைப்பூக்கள் பெரும்பாலும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு பெரிய இலக்கியமாக இணையத்தில் வலம் வருகின்றது. உலகளவில் உள்ள அனைத்து பதிவர்களையும் ஒன்றிணைக்கும் ஊடகமாகவும் இது திகழ்கிறது. இதில், ஒரே பதிவர் பல திரட்டிகளில் இணைப்பு வைத்திருப்பதால் அவரது பதிவு பல திரட்டிகளிலும் வெளியாகின்றது. இது படிப்பவர்களிடையே அலுப்பினையும் சோர்வினையும் ஏற்படுத்துகிறது. இத்தகு நிலையை மாற்றப்பட வேண்டும். பெரும்பாலான திரட்டிகள் புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இலாப நோக்கமில்லாது செயல்படும் இத்தகைய வலைப்பூ திரட்டிகள் தமிழ்மொழியின் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பங்கினையும் அவற்றின் மூலம் தமிழ் மொழி தனது வளர்ச்சியினை புதுப்பாதையில் கொண்டு செல்கிறது என்பதனையும் அறிய முடிகிறது.

துணை நூற்பட்டியல்
1. முனைவர் க. துரையரசன், இணையமும் இனிய தமிழும், ப. 100
2. தி்ண்ணை இணைய இதழ், தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கம் பணியும் – ஓர் மதிப்பீடு, பார்வை நாள் 24.04.2015
3. சுமஜ்லா, நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம், ப.76
4. www.ta.indli.net.
5. www.tamilNaman.net, oomaikkanavugal.blogspot.com.,Dt. 24.04.2015
6. www.thenkoodu.in, tvrk.blogspot.com., Dt. 24.04.2015
7. www.tamilbm.com, poonaikutti.blogspot.com Dt: 24.04.2015
8. www.magalirkodal.blogspot.com. Honeylaksh.blogspot.in,. Dt.26.05.2014
9. www.Dev.neechalkaran.com/p/aggregators.html

bremkrishna@gmail.com