ஆய்வு: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு

1.0. முன்னுரை

- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா? அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா? எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அவ்விரு கவிஞர்களின்  சிறப்புகளை,

1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு
2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள்   என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.

1.1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு

குறுந்தொகை 312ஆம் பாடல் (காண்க: 1. 2.1) தலைவன் தலைவியின் நுண்ணறிவை நினைத்து வியப்புருமாறு அமைந்துள்ளது. அதாவது, இரவில் கலவி இன்பத்தில் தன்னுடன் களித்தவள் பகலில் தன்னை யாரென வெளிக்காட்டாது இருக்கும் இயல்பு எத்தன்மையது எனத் தலைவியின் நுண்ணறிவை நினைத்துப் பார்க்கின்றான் தலைவன் என்பதாகும். இதே கருத்தைக் காதா சப்த சதி 189ஆம் பாடலும் (காண்க: 1. 2. 3) புலப்படுத்துகின்றது. இருப்பினும் சிறுவேறுபாடு உண்டு. குறுந்தொகை களவுக் குரியதாகவும், காதா சப்த சதி கற்புக் குரியதகவும் அமைந்திருப்பதேயாம்.

1.2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள்

குறுந்தொகை 312ஆம் பாடலைப் பாடிய கபிலரும், காதா சப்த சதியின் 189ஆம் பாடலைப் பாடிய விக்கிரமனும் தம்சமகால காட்சிகளைப் பதிவு செய்வதில் வேறுபட்டே நிற்கின்றனர். அதனை,

1. கன்னி மலரணியாமை
2. வரலாற்றுக் குறிப்பு: மலையமான் திருமுடிக்காரி
3. பெண்ணின் இயல்பும் பெண்ணடிமை கருத்தியலும்

எனவரும் மூன்று வகைகளில் விளக்கம் காணப்படுகின்றது.

1.2.1. கன்னி மலரணியாமை

இற்றைக் காலத்தில் கூந்தலில் மலர் அணியும் வழக்கம் மணம் ஆன, ஆகாதோருக்கு ஒரு மரபாக அமைந்து கிடக்கின்றது. இம்மரபு அற்றைக் காலத்தில் (சங்க காலம்) மணமாகாத பெண்டிருக்கு மறுக்கப்பட்டுள்ளதென்பதை,

இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே    – குறுந். 312

எனவரும் குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது என்பார் வ.சுப. மாணிக்கம். அவர்தரும் குறிப்பு வருமாறு:

பண்டைத் தமிழகக் கன்னி மலர்சூடாள் என்பதும், மலர் சூடின் கன்னியாகாள், ஒருவனை வரித்தாள் என்பதும் நம் பழஞ் சமுதாய வழக்கு. இக்கருத்து கற்றார்க்கு இன்று வியப்பாகவும் புரட்சியாகவும் தோன்றும், தோன்றக் கூடும். இவ்வழக்கம் இந்நாள் தமிழகத்து இல்லாமையும் இருக்க இயலாமையும் கண்டு பலர் மலைக்கவும் மலைப்பர் (2007:130).

இக்கருத்தை ஒட்டியப் பதிவு விக்கிரமன் (காதா.189) பாடலில் காணப்பெறவில்லை.

1.2.2. வரலாற்றுக் குறிப்பு: மலையமான் திருமுடிக்காரி

கபிலர் தம் சமகாலத்திய கொடை வள்ளல் குறித்துப் பதிவு ஒன்றை விட்டுச் சென்றுள்ளார். அப்பதிவாவது மலையன் என்பதாகும். இச்சொல்லாட்சி மலையமான் திருமுடிக்காரி எனும் வள்ளல் பெருமானைக் குறிக்கும் என்பது உரையாசிரியர்களின் கருத்து. அவ்வுரையாசிரியர்கள் (பொ.வே. சோமசுந்தரனார், ரா. இராகவையங்கார், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை) தரும் குறிப்புகளில் உள்ள சான்றுகளாவன:

… அடுபோர்
எஃகு விளங்கு தடக்கை மலையன்    – குறுந். 198

பேரிசை முள்ளூர்
பலருடன் கழிந்த வொள்வாண் மலையன்   – நற். 170

செவ்வேள்
முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி   – அகம். 209

மலையன் … முள்ளூர்
காரியூர்ந்து பேரமர் கடந்த மாரியீகை மலையன் – புறம்.158

இவ்வடிகள் மட்டுமின்றி புறநானூற்றுப் பாடல்களில் 121 முதல் 126 வரையிலானவை அம்மன்னன் குறித்த முழுமையானப் பதிவுகள் என்பதும் குறிப்பிடத்தக்கவை. அம்மன்னன் குறித்து ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் (புறநானூறு) கருத்துரை ஈண்டுச் சுட்டிக்காட்டத்தக்கது.

திருக்கோவலூர்க்கு மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் பண்டை நாளில் மலாடு என்ற பெயரால் வழங்கப் பெற்று வந்தது. அதற்குக் கோவலூரே தலைநகர். கபிலர் காலத்தே அக்கோவலூரிலிருந்து ஆட்சி புரிந்த வேந்தன் திருமுடிக்காரி யென்பான். இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். இவனது குதிரைக்கும் இவன் தன் பெயரை வைத்துப் பேணினன் (2008:335).
இதுபோன்ற சமகாலத்திய வரலாற்றுக் குறிப்பை விக்கிரமன் (பிராகிருதம்) தம் பாடலில் விடுத்துச் செல்லவில்லை.

1.2.3. பெண்ணின் இயல்பும் பெண்ணடிமை கருத்தியலும்

கபிலர் பெண்ணின் நுண்ணறிவை குறித்து மட்டும் சுட்டிச் செல்ல, விக்கிரமன் தலைவி புலவியினால் ஊடல் கொண்டாலும், பின்பு அவ்வூடலைத் தணிவிக்கும் செயலில் அவளே இறங்குகின்றாள் என்ற இயல்பான தன்மையைச் சுட்டிக் காட்டியுள்ளார். அதனை,

 பகலெலாம் சினந்து பாரா முகமாய்
அகப்பணி யெல்லாம் ஆற்றி விட்டு
பிழைபெரி தென்று பெருந்துயர் கொளினும்
என்னடிக் கீழ் துயில் ஏந்திழை நினைப்பேன்   – காதா. 189

எனவரும் பாடல் புலப்படுத்துகிறது. இப்பாடலுள் மற்றொரு தன்மையான பெண்ணடிமைத் தனமும் காணப்படுகின்றது. அஃதியாங்கெனின் ஊடலானது இருவருக்கும் இடையே நிகழ்கின்றது. அவ்வூடலில் தலைவி மனதளவில் பெருந்துயர் எய்துகின்றாள். இருப்பினும், தம் இல்லத்து ஆற்ற வேண்டிய கடைமைகளை முடிக்கின்றாள். இதுவரை தலைவி என்ன செய்கின்றாள் என்பதை மட்டுமே தலைவன் நோட்டம் இடுகின்றான். இறுதியில் தலைவியே இரங்கி வந்து நான் என்றுமே உன் காலடியே கதி என்று கிடப்பேன் எனக் கூறுகின்றாள். அதனை என்னடிக் கீழ் துயில் ஏந்திழை நினைப்பேன் எனும் அடி வெளிபடுத்திக் காட்டுகின்றது. இது ஆணாதிக்கத் தன்மையையும் தந்தைவழி சமூகத்தை நிலைப்படுத்தும் முயற்சியேயாம். அக்கருத்து இருபாலரும் இணையானவர்கள் என்பதைக் காட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தந்தைவழிச் சமூகத்தை நிலைப்படுத்தும் முயற்சி இன்றும் நடப்பியல்சார் உண்மையே.

 முடிப்பாக, கபிலர் (தமிழ்), விக்கிரமன் (பிராகிருதம்) ஆகிய இரு கவிகளும் காதல் புலப்பாட்டுக் கருத்தியலில் ஒருமித்து நின்றாலும், சமகாலத்தியப் பதிவுகளை அக்காதல் புலப்பாட்டுக் கருத்தியலுடன் இணைத்துப் பேசுவதில் வேறுபட்டு நிற்கின்றனர் என்பது புலப்படுகின்றது. இது அவரவரின் தனித்தன்மைகள் எனலாம்.

துணைநின்றவை

1. இராகவையங்கார் ரா.(உரை.), 1993, குறுந்தொகை விளக்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.
2. கந்தையா ந.சி. (உரை.), 2008, அகநானூறு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
3. துரைசாமிப் பிள்ளை ஔவை சு. (உரை.),2008, நற்றிணை, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
4. ………………………, 2008, புறாநானூறு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
5. செல்வராசு அ., 2008, இலக்கிய இலக்கணப் புரிதல், எழில், திருச்சி.
6. சோமசுந்தரனார் பொ.வே. (உரை.), 2007, குறுந்தொகை, கழக வெளியீடு, சென்னை.
7.  மணவாளன் அ. அ., 2011, இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம், நியூசெஞ்சுரி புத்தகாலயம், சென்னை.
8. மாணிக்கம் வ. சுப., 2007, தமிழ்க் காதல், சாரதா பதிப்பகம், சென்னை.
9. ஜந்நாதராஜா மு.கு. (மொ. ஆ.), 1981, காதா சப்த சதி, விசுவசாந்தி பதிப்பகம், இராசபாளையம்.

neyakkoo27@gmail.com