ஆய்வு: கருத்துக் களவோ….? எனக்கது தெரியாது…!”

எழுத்தாளர் க.நவம்ஒருநாள் இளைஞனொருவன், ஒரு பத்திரிகை  ஆசிரியரிடம் கவிதை ஒன்றைப்.பிரசுரிப்பதற்கெனக் கொண்டுபோய்க் கொடுத்தான்.

அதனைப் படித்துவிட்டு, “இந்தக் கவிதையை நீயே எழுதினாயா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“ஆம், ஒவ்வொரு எழுத்தும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தான், இளைஞன்.

ஆசிரியர் மிக மரியாதையுடன் எழுந்து நின்றார். “வணக்கம், உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி  அடைகிறேன், எட்கார் அலன்போ அவர்களே! நீண்ட
நாட்களுக்கு முன்னரே நீங்கள் இறந்துவிட்டதாக நான் நினைத்தது தவறுதான்!”

எழுத்து என்பது மனித நாகரிக வளர்ச்சிப் போக்கின் ஒரு பிரதான மைல்கல். இது உணர்வுகள், சிந்தனைகள், செய்திகள் என்பவற்றைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வழிமுறை. இந்த உணர்வுகளும், சிந்தனைகளும், செய்திகளும் புதுமையானவையாகவும் கட்டுக்கடங்காதவையாகவும் மனதில் பொங்கிப் பிரவகிக்கின்றபோது, அவற்றை எழுத்தில் பதிக்க வேண்டும் என்ற உந்துலையும் உத்வேகத்தையும் பெறுகின்றவர்கள், எழுத்தாளர்கள்.

அறிவு, ஆர்வம், ஆற்றல், தேடல், தெளிவு கொண்டவர்களுக்கு எழுத்துக்கலை கைகூடிவர வாய்ப்பு உண்டு. இவையேதுமின்றி, முடவன் கொம்புத் தேனுக்குக் கொண்ட ஆசை போன்று, குறுக்கு வழியில் எழுத்தாளராக வேண்டும் என்ற சிலரது பேராசையே, எட்கார் அலன்போ போன்ற புகழ்பூத்த எழுத்தாளர்கள் பலரும் இந்நாட்களில் அடிக்கடி புத்துயிர் பெற்றுவரக் காரணமாகிப் போய்க் கிடக்கின்றது!

இவ்வாறான எழுத்துச் சூழலில், எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் பத்திரிகையாளர்களும் பிரசுரிப்பாளர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய – கருத்துக் களவு, பதிப்புரிமை, ஆக்கவுரிமை, சர்வதேச நியம நூல் இலக்கம், சர்வதேச நியமத் தொடர் இலக்கம் போன்றன குறித்த, சில முக்கிய தகவல்களை முன்வைப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

கருத்துக் களவு (Plagiarism)
இன்னொருவரது மொழிப் பாவனைகளை, எழுத்துக்களை, சிந்தனைகளை, கருத்துக்களை அல்லது படைப்புக்களை அச்சொட்டாகப் பிரதிசெய்து, அவற்றைத் தமதென்று உரிமை பாராட்டி, வெளிப்படுத்துவது கருத்துக் களவு எனப்படும்.

ஒரு தவறான அபகரிப்பு நடவடிக்கையான இக்கருத்துக் களவானது, எழுத்துத்துறையில் இந்நாட்களில் சர்வ சாதாரணமாக இடம்பெற்றுவரும் பெருத்த மோசடி; ஒழுக்கம், சட்டம்சார் விதிமுறைகளுக்கு முரணான, கண்ணியமற்ற செயற்பாடு. இது பதிப்புரிமைச் சட்டங்களை மீறுவதனால், சம்பந்தப்பட்டவர்களைச் சில சமயங்களில் பாரதூரமான சட்டப் பிரச்சினைகளுக்குள் இட்டுச் செல்லக்கூடிய ஆபத்துக்களைக் கொண்டது.

கருத்துக் களவில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சுயகருத்துக் களவு (Self Plagiarism), தற்செயலான கருத்துக் களவு (Accidental Plagiarism), நேரடியான கருத்துக் களவு (Direct Plagiarism) என்பன பிரதானமானவையாகும்.  ஒருவர் தனது சொந்தக் கருத்தினை அல்லது எழுத்தினை, அது முன்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தம்மால் பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடாமல், மீண்டும் பயன்படுத்துதல் சுயகருத்துக் களவு எனப்படும். ஓர் எழுத்தின் மூலத்தைக் குறிப்பிடாமல் அலட்சியம் செய்தல், தவறாகக் குறிப்பிடுதல், அல்லது உள்நோக்கமின்றி மூலப் பிரதியுடன் ஒருமைப்பாடுடைய சொற்களை, சொற்றொகுதிகளை, வாக்கிய அமைப்புக்களைப் பயன்படுத்துதல் தற்செயலான கருத்துக் களவு எனப்படும். எங்கிருந்து பெறப்பட்டது என்ற பண்புக்கூற்றோ அல்லது மேற்கோள் குறியோ இன்றி, இன்னொருவரது கருத்தை, வார்த்தைக்கு வார்த்தை படியெடுத்தும், வெட்டியொட்டியும் தனதென உரிமை பாராட்டிப் பயன்படுத்துதல், நேரடியான கருத்துக்களவாகும். இதுவே மிகவும் பாரதூரமான கருத்துக் களவு எனக் கருதப்படுகின்றது.

ஒரு மாணவர் மேற்கொண்ட கருத்துக் களவு கண்டுபிடிக்கப்பட்டால், குறிப்பிட்ட பாடநெறியிலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ அல்லது பல்கலைக் கழகத்திலிருந்தோ அவர் தடுத்து நிறுத்தப்படலாம்; வெளியேற்றப்படலாம். அம்மாணவரது கல்விசார் விபரப் பதிவேட்டில் (Academic Transcript) இத்தகவல் இடம்பெறும் பட்சத்தில், அவரது எதிர்கால வாழ்வு பாதிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.

அறிவுத்துறைசார் (Intellectual) கருத்துக் களவில் ஈடுபட்டவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியேற்படக்கூடும். அத்துடன், பெருந்தொகையான அபராதம் செலுத்தவேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்படலாம் என்பதை, முக்கியமாக மாணவர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இணையத் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியானது, இந்நாட்களில் கருத்துக் களவுக்கு ஏதுவாக அமைந்திருக்கும் அதேவேளை, கருத்துக் களவு கண்டறிகருவி (Plagiarism Checker) என்னும் மென்பொருளையும் அது புதிதாகக் கண்டுபிடித்துத் தந்திருக்கின்றமையால், பலரது கருத்துக் களவையும் கண்டுபிடிப்பது இப்போது இலகுவாகிவிட்டது. இவ்வாறான கருவிகள் தமிழிலும் பாவனைக்கு வரும் காலம் அதிக தூரத்தில் இல்லை என நாம் நிச்சயம் நம்பலாம்!

‘There is no such thing as an original idea’ என்று ஆங்கிலத்தில் ஒரு மூதுரை உண்டு. மூலமுதலான ஒன்று என்று எதுவும் கிடையாது. எமக்குத் தெரிந்த எல்லாமே நாம் எங்கோ, எப்போதோ, எவரிடமிருந்தோ கற்றறிந்தவையே. நமது சொந்தக் கருத்துக்களல்லாத – இவ்வாறு கற்றறிந்த ஒரு கருத்தை நாம் மீளப் பயன்படுத்தும்போது, அது எங்கு, எப்போது, எவரிடமிருந்து கற்றறியப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுவதே பண்பு. இதன்பொருட்டு, பிறரது கருத்தை அல்லது எழுத்தை, அல்லது மொழிப்பாவனையை ‘மேற்கோள் குறி’ இட்டுப் பயன்படுத்த வேண்டும். மேலும், பிறரது கருத்து ஒன்றினைப் பயன்படுத்தும்போது, அது யாரால், எங்கு, எப்போது வெளியிடப்பட்டது போன்ற விபரங்கள் அடங்கிய, ’உசாத்துணைப் பட்டியல்’ ஒன்றை இணைத்துக்கொள்வது மிகமிக முக்கியம். இவை, எழுத்து ஒன்றின் நாணயத்திற்கும் நம்பகத் தன்மைக்கும் இன்றியமையாதனவாகும்.

பதிப்புரிமை (Copyright)
மூலமுதலான அல்லது அசலான இலக்கிய, ஓவிய, நாடக, இசை மற்றும் கலைப் படைப்பு ஒன்றினை ஆக்குவதற்கு, மீளாக்குவதற்கு அல்லது நிகழ்த்துவதற்குத் தேவையான பிரத்தியேக சட்ட உரிமையே பதிப்புரிமை எனப்படும். படைப்பாளியே பொதுவாகப் பதிப்புரிமைக்கு உரியவரான போதிலும், படைப்பாளி அவ்வுரிமையைத் தாம் விரும்பும் பிறிதொருவருக்கும் வழங்க முடியும்.

குறிப்பிட்ட ஒரு படைப்பினைப் பயன்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்குமான பிரத்தியேக உரிமையைப் படைப்பாளிக்கு வழங்கும் சட்டத்தின் வரையறையானது, நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும். மேலும் இது ஓர் அறுதியான உரிமையல்ல; ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகக்கூடியதாகும்.
பதிப்புரிமை கோரும் குறிப்பிட்ட படைப்பின் பிரதியுடனும், அதற்குரிய கட்டணத்துக்கான காசோலையுடனும் விண்ணப்பப் படிவம் ஒன்றைப் பூர்த்திசெய்து, அந்தந்த நாட்டின் பதிப்புரிமை அலுவலகத்தில் அல்லது புலமைச் சொத்து அலுவலகத்தில் (Intellectual Property Office) அதனைச் சமர்ப்பித்து, ஒரு படைப்புக்கான பதிப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். படைப்பு ஒன்றுக்கான பதிப்புரிமை © எனும் குறியீட்டினாலோ அல்லது “Copyright” எனும் வார்த்தையினாலோ அல்லது “Copr.” எனும் சுருக்க வார்த்தையினாலோ குறிப்பிடப்படுவது வழக்கம். அத்துடன் பதிப்புரிமை பெறப்பட்ட வருடம், பெறுபவரது பெயர் அல்லது பிறரால் பெரிதும் அறியப்படும் அவரது புனைபெயர், பதவி என்பனவும் படைப்பில் குறிப்பிடப்படுவதுண்டு.

படைப்பாளிகள் தமது படைப்புக்களைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கு, இப்பதிப்புரிமைச் சட்டம் வழிவகுக்கின்றது. மேலும், படைப்பாளிகள் தமது படைப்புகள் மூலமாக வருவாய் பெறுவதற்கும், பிறரால் அவை களவாடப்படுவதைத் தடுப்பதற்கும் ஏதுவாக இருப்பதே பதிப்புரிமையின் பிரதான குறிக்கோளாகும்.

ஆக்கவுரிமை (Patent)
ஒரு புதிய கண்டுபிடிப்பினை அல்லது ஒரு புத்தாக்கத்தினை நிகழ்த்துவதற்கும், அதனைப் பிறருக்கு விற்பனை செய்வதற்குமான உரிமையைக் கண்டுபிடிப்பாளாருக்கு வழங்குமுகமாக, அரசால் அல்லது அரசால் நியமிக்கப்பட்ட முகவர் நிறுவனத்தால் வெளியிடப்படும் சாற்றுரையே (Declaration) ஆக்கவுரிமை  அல்லது புலமைச் சொத்துரிமை அல்லது அறிவுசார் சொத்துரிமை  எனப்படும். ஆக்கவுரிமை புத்தாக்கங்களின் பாதுகாப்பையும், அவற்றால் ஏற்படும் நன்மைகளைப் புத்தாக்குனர்கள் பெற்றுக்கொள்வதையும் உறுதிப்படுத்துகின்றது. இதனூடாக, மென்மேலும் புத்தாக்குனர்களுக்கு உதவியும் ஊக்குவிப்பும் அளிக்கப்படுகின்றது. இது ஒரு நாட்டின் பொருளாதார, தொழில்நுட்ப அபிவிருத்தியை மேம்படுத்த உதவுகின்றது.

புத்தாக்குனருக்கான ஏகபோக உரிமையை உறுதிப்படுத்தும் பொருட்டே அரசு ஆக்கவுரிமையை அவருக்கு வழகுகின்றது. இதன் பிரகாரம், குறிப்பிட்ட காலம் வரை, பிறர் இதனைத் தயாரிக்கும், பயன்படுத்தும், விற்பனை செய்யும் உரிமையை, அரசினால் வழங்கப்படும் இந்த ஆக்கவுரிமை தடைசெய்கின்றது. இவ்வுரிமைகள் அனைத்தையும் புத்தாக்குனருக்கே ஆக்கவுரிமையூடாக அரசு வழங்குகின்றது. புதியதொரு கண்டுபிடிப்புக்கான ஆக்கவுரிமையைப் பெற விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பத்தை அந்த நாட்டின் ஆக்கவுரிமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புலமைச் சொத்துச் சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப, விண்ணப்பத்தை ஆக்கவுரிமை அலுவலகம் பரிசீலனை செய்யும். ஆக்கவுரிமைக்கான தேடல் அறிக்கையுடன், முறைசார்ந்த தேவைகள்  நிறைவேற்றப்படுமானால், விண்ணப்பதாரிக்கு ஆக்கவுரிமை வழங்கப்படும்.
எனவே, ஆக்கவுரிமை, புதியதொரு கண்டுபிடிப்புடன் தொடர்புடையது என்னும் வகையிலும், பதிப்புரிமை, கலைப்படைப்பு ஒன்றின் கருத்து வெளிப்பாட்டுடன் தொடர்புடையது என்னும் வகையிலும், ஒன்றிலிருந்து மற்றையது வேறுபடுகின்றது என்பது இங்கு கவனிப்புக்குரியது.

சர்வதேச நியம நூல் இலக்கம்  (International Standard Book Number / ISBN)
ISBN என ஆங்கிலத்தில் பொதுவாக அழைக்கப்படும் சர்வதேச நியம நூல் இலக்கம் என்பது ஒவ்வொரு நூலுக்குமான தனித்துவமான இலக்கமாகும். அச்சிடப்பட்ட ஒவ்வொரு நூலினையும் சர்வதேச ரீதியில் இனங்காண அல்லது அடையாளங்காண உதவுவதே இவ்விலக்கத்தின் நோக்கமாகும். வெளியீட்டாளர்கள், விநியோகத்தர்கள், நூலகத்தினர்கள், வாசகர்கள் அனைவரும் ஒரு நூலினை இவ்விலக்கத்தின் மூலம் இலகுவாக அடையாளம் காணவும் முடியும்.

சர்வதேச நியம நூல் இலக்க முகவர் நிலையத்துடன் இணைந்து செயற்படும்,  ஒரு நாட்டினது உள்ளூர் முகவர் நிலையத்திடமிருந்து இவ்விலக்கத்தைக் கொள்வனவு செய்துகொள்ளலாம். ஒரு நூலின் ஒவ்வொரு பதிப்புக்கும் ஒவ்வொரு இலக்கம் வழங்கப்படும். இது 2007 தை முதலாம் திகதிக்குப் முன்னர் பெறப்பட்டதாயின், 10 இலக்கங்களைக் கொண்டதாகவும், அத்திகதிக்குப் பின்னர் பெறப்பட்டதாயின், 13 இலக்கங்களைக் கொண்டதாகவும் காணப்படும்.

கையிருப்புக் (Stock) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும், வரிசைப்படுத்தலுக்கும், பட்டியலிடலுக்கும் வெளியீட்டாளர்கள், நூல் விற்பனையாளர்கள், நூலகத்தினர்கள் ஆகியோரால் ISBN பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட பதிப்பாளரை அடையாளம் காணவும், ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழான நூலொன்றின், குறிப்பிட்ட ஒரு பதிப்பினை அடையாளம் காணவும் இது உதவுகின்றது

எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை அச்சிடுவதற்கு முன்னர், தாம் வாழும் நாட்டின் தேசிய நூலகத்திற்கு விண்ணப்பித்து, ISBN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கனடாவில் Library and Archives Canada அலுவலகத்தில் உள்ள ISBN Canada பிரிவில் இதனைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்விலக்கத்தை நூலில் இடம்பெறச் செய்வதன் மூலம், இந்நூலினை உலகின் எப்பாகத்திலிருந்தும் இனங்காணுதல் இலகுவாகிவிடும்.

சர்வதேச நியம தொடர் இலக்கம் (International Standard Serial Number / ISSN)
சர்வதேச நியமத் தொடர் இலக்கம் அல்லது பன்னாட்டுத் தரத் தொடர் எண்  என்பது ஓர் எட்டு இலக்கத் தொடர் எண் ஆகும். இது பத்திரிகைகள், சஞ்சிகைகள், இதழ்கள் போன்ற பருவ வெளியீடுகளை (Periodic Publications) அடையாளப் படுத்துவதற்கென வழங்கப்படும் ஒரு தனித்துவமான இலக்கமாகும். மேலும், ஒரே தலைப்பில் பல்வேறு பிரதிகளையும், தொகுதிகளையும் கொண்ட நூல்களை அடையாளம் காண்பதற்கும், இவையொத்த ஏனைய பயன்பாடுகளுக்கும் சர்வதேச நியமத் தொடர் இலக்கம் உதவுகின்றது. 

இதன் மூலம் ஒரு நாட்டில் வெளியிடப்படும் பருவ இதழ்களை (Periodic Journals) அந்நாட்டு, பிறநாட்டு வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்து வைப்பதற்கு ஏதுவாகிறது. பருவ இதழ்களுக்கான இத்திட்டம் பற்றிய தகவல்களையும் விபரங்களையும் ஒரு நாட்டின் தேசிய நூலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். சகபாடிகள் என ISSN,  ISBN என்பன அழைக்கப்படுகின்ற போதிலும் – ISSN பத்திரிகைகள், சஞ்சிகைகள், இதழ்கள் போன்ற பருவ (Periodic) வெளியீடுகளையும், ISBN  பொதுவாக நூல்களையும் அடையாளப்படுத்த உதவுகின்றன எனும் அடிப்படையில் ஒன்றிலிருந்து மற்றையது வேறுபடுகின்றது.

முடிவாக – எண்ணங்கள், உணர்வுகள், தகவல்கள் எழுத்தில் வடிக்கப்படும்போது, அதில் நாணயமும் நாகரிகமும் பேணப்பட வேண்டும். மூலமுதலான எழுத்தின் உரிமை மீறப்படாத வகையில், பதிப்புரிமை, புலமைச் சொத்துரிமை என்பவற்றின் சட்ட திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும். “எனக்கது தெரியாது” எனக் கூறி, உண்மையை மூடி மறைத்தல், ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு சாக்குப் போக்கு. கருத்துக் களவு, பதிப்புரிமை, ஆக்கவுரிமை என்பன குறித்த அறிவும் தெளிவும், எழுத்தின் உண்மைத் தன்மையையும், நீண்டகால உயிர்தரிப்பினையும் உறுதிசெய்ய உதவக்கூடியன. எழுத்தில் உண்மையைக் கடைப்பிடிக்காதவன், ஒரு விற்பனையாளனே அன்றி, ஓர் எழுத்தாளன் அல்லன்! பாலில் வெண்மை இரண்டறக் கலந்ததுபோல, எழுத்திலும் ஊடுபாவாக உண்மை கலந்திட வேண்டும்! என்றும் ’உண்மை நின்றிட வேண்டும்!’

நன்றி:
Plagiarism: A How-not-to Guide for Students, Barry Gilmore
Think for Yourself: Avoiding Plagiarism, Kristine Carlson Asselin
The Copyright Handbook: What Every Writer Needs to Know by Stephen Fishman
The Canadian Intellectual Property Office (CIPO) brochure
https://en.wikipedia.org/plagiarism/copyright/patent/ISBN/ISSN
சுபமங்களா, மே 1991, மலர் 4; இதழ் 1; பக்கம்: 61:
சுவடி ஆற்றுப்படை, பாகம் 4, அல்ஹாஞ் எஸ்.எச்.எம். ஜெமீல்.; பக்கம்: 13/14
இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலக வெளியீடு

Navam K Navaratnam <nknavam@gmail.com>