ஆய்வு: கற்புக்கால மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
கற்புக்கால மெய்ப்பாடுகளாவன, தெய்வமஞ்சல், புரையறந்தெளிதல், இல்லது காய்தல், உள்ளது உவத்தல், புணர்ந்துழி உண்மை, பொழுது மறுப்பாதல், அருள்மிக உடைமை, அன்புமிக நிற்றல், பிரிவாற்றாமை, மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ ஆகியவற்றை தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.24)  இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

1:1 தெய்வம் அஞ்சலும் அகநானூறும்
தெய்வமஞ்சலென்பது, “தெய்வத்தினை யஞ்சுதல்” (இளம்.மெய்.24) எனவும், “தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தபாதரும் இன்னாரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட்டோன்றும்;  அங்ஙனம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வமஞ்சலென்றா னென்பது மற்றுத் தனக்குத்  தெய்வந் தன் கணவனாகலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சபடுந் தெய்வந் தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூஉந் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது.” (பேரா.மெய்.24) எனவும், “சூள்பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற் றொழுவது நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று.” (பாரதி.மெய்.24) எனவும், “தலைமகனா லுணர்த்தப்பட்டு அவன் தெய்வத்தை அஞ்சி வழிபடல். தெய்வமாவது-ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலாயினோரும், குல தெய்வமுமாம். குலதெய்வம் – இறந்துபோன முன்னையோர். அஞ்சி வழிபாடும் உள்ளக்குறிப்பு மெய்ப்பாடெனப்படும்.” (குழந்தை. மெய்.24) எனவும், “களவின் கண்ணும் வரைவின் கண்ணும் “பிரியேன் பிரியின் தரியேன்” எனச் சூளுரைத்த தலைவன் கற்பின்கண் பொதுவாக  ஓதல் முதலியவற்றின் கண்ணும் சிறப்பாகப் பரத்தையின் கண்ணும் பிரிந்தவழி அச்சூளுரை காரணமாகத் தலைவற்கு ஊருநேருங்கொல் எனக் கருதி முழுமுதற் பொருளல்லாத பூத தத்துவ பொருளாகவும் கிளவியாகத்துள் தெய்வஞ் சுட்டுவனவாகவும் கூறப்பெற்ற தெய்வங்களைத் தலைவி அஞ்சுதலாம். பரவுதல், வேண்டல் என்றாற் போலக் கூறாமல் அஞ்சுதல் எனக் கூறியமையான் தெய்வம் என்றது சிறுதெய்வம் என்பது பெறப்படும்.”  (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

தலைவனின் சூள் பொய்த்தவழி அவனுக்குத் துன்பம் நேருமோ என அஞ்சும் தலைவி தெய்வத்தைப் போற்றல் தெய்வமஞ்சலெனப்படும். இங்கு தெய்வமெனப்படுவது ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலானோரைச் சிறப்பாகக் குறிக்கும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறுந்.87, கலி.88 ஆகிய பாடல்களையும், பேராசிரியர் கலி.16, 75, தொல்.கற்.5 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.87 ஆம் பாடலையும் குழந்தை, கள.6 ஆம்  நுற்பாவையும், பாலசுந்தரம் கலி.16, 75 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 1:2  புரையறந் தெளிதலும் அகநானூறும்
புரையறந் தெளிதலென்பது, “ ‘கடன்மிக் கனவே’ என்ற வழிப் பரத்தைமை கண்டு புலவாது இதனைப் போற்றல் இல்லுறை மகளிரிக்கியல் பென்னும் அறத்தினானே எனக்கூறியவாறு கண்டுகொள்க.”  (இளம்.மெய்.24) எனவும், “தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துப்படுதல்.” (பேரா.மெய்.24) எனவும், “உயர்ந்த மனையறம் உணர்ந்தோம்புதல். ‘புரை’  ஈண்டு உயர்ச்சிப் பொருட்டு.”  (பாரதி.மெய்.24) எனவும், “இல்லறவாழ்க்கை என்பது கொண்டானை உவப்பித்தலும் மக்கட்பேறெய்துதலுமாகிய இவையேயன்றி இயல்புடை மூவர்க்குத் துணைபுரிதலும் ஐம்புலத்தாறு ஒம்பலும் பிரிவிடையாற்றலும் பிறவும் உயர்ந்த அறமெனத் தெளிந்து ஒழுகுதலாம்.” (பாலசுந்.மெய்.24.) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர்.
இதுகாறும் தலைவனுடைய செயல்பாட்டிற்கு மனம் வருந்திய தலைவி, இதுதான் இல்லற இயல்பென உணர்ந்து அவனுடைய செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதலும், மனையறத்தின் செயல்பாடுகளை உணர்ந்து செயல்படுதலும் புரையறந் தெளிதலெனப்படும். இதனை விளக்க, பேராசிரியர் குழந்தை, தாசன் ஆகியோர், கலி.75 ஆம் பாடலையும், பாரதி, குறுந்.181 ஆம் பாடலையும், பாலசுந்தரம் கலி.75, நற்.110 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:3 இல்லது காய்தலும் அகநானூறும்
இல்லது காய்தலென்பது, “தலைமகன்கண்ணில்லாத குறிப்பினை யவன் மாட்டு உளதாகக் கொண்டு காய்தல்” (இளம்.மெய்.24) எனவும், “களவின்கட்போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக்கொண்டு காய்தல்.”(பேரா.மெய்.24) எனவும், “தன்வயின் உரிமையான் எழுங்காதல் மிகுதியான் மனையறக்கிழத்தி தலைவன் தவறு புரியாவழியும் அவன்பால் தவறு கற்பித்து ஊடல் கொண்டு சினத்தல்.”(பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தான் உரிமைப்பூண்டவழி தலைவனிடம் தோன்றாத குறிப்பினையும் தோன்றியதாய் கொண்டு அன்பால் ஊடல் கொள்ளுதலே இல்லது காய்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், இராசா, தாசன் ஆகியோர் குறள்.1314-ஐயும், பேராசிரியரும் குழந்தையும் கலி.93 ஆம் பாடலையும், பாரதி குறள்.1313 ஐயும், பாலசுந்தரம் கலி.98, குறள்.1313 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:4 உள்ளதுவத்தலும் அகநானூறும்
உள்ளதுவத்தலென்பது, “உள்ளதனை யுவர்த்துக் கூறுதல் அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல்.” (இளம்.மெய்.24) எனவும், “தலைமனாற் பெற்ற தலையளி உள்ளதேயாயினும், அதனை உண்மையென்றே தெளியாது அருவருத்துநிற்கும் உள்ளநிகழ்ச்சி.” (பேரா.மெய்.24) எனவும். “தலைவன் மெய்யாகச் செய்யும் அன்பினை மறுத்துப் பொய்யென வெறுத்தல்.” (பாரதி.மெய்.24) எனவும், “தலைவன் தான் தண்ணளி செய்த உவப்பிங்குங்காலும் அவன்தன் பரத்தமையை எண்ணித் தலைவி அவன் செயலை மாயமென மயங்கி நீக்குதல்.” (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகன் உள்ளபடியே தலைவியை மகிழ்விக்க நினைந்து செய்யும் செயல்களைத் தலைவி தன்னை பிரிய நினைத்தே இவற்றையெல்லாம் தலைவன் செய்கிறான் என நினைத்து. வெறுத்தலே உள்ளத்துவத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.78ஆம் பாடலையும், பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர் கலி.69 ஆம் பாடலையும், மேலும், பேராசிரியர்,

“வேப்புதனை யன்ன நெடுங்கண் ணீர்ஞெண்
டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல
தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளற்
றிதலையின் வரிப்ப வோடி விரைந்துதன்
னீர்மலி மண்ணளைச் செறியு மூர.” (அகம்.176)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில் வேம்பின் அரும்பையொத்த நீண்ட கண்களையுடைய நீருவாய் ஞெண்டு இரையைத் தேடுகின்ற வெள்ளிய குருகுக் கஞ்சி அயலிலுள்ளதாகி தழைத்த பகன்றையையுடைய அரிய அள்ளலாகிய சேற்று நிலத்தின்கண் தேமலைப்போல வரிபொருந்த ஓடி விரைந்து தன்னுடைய நீர்மலிந்த மண்ணிற் கிண்டிய புற்றின்கண் அடங்கியிருக்கு மூரனே! எனத் தலைமகன் வாயில் வேண்டிச் சென்றவழிப் பிறர் கூறும் பழிக்கு வந்தாயென்று தோழி வாயின் மறுத்தது இது. இதிலுள்ள குறிப்புப் பொருளாவது பரத்தையர் சேரியில் பரத்தையொருத்தியின் அழகில் திளைத்திருத்த தலைவன் பழி ஏற்படுவதை அஞ்சி, அப்பரத்தை தனது மார்பில் செய்த குறி இருக்கத் தன் வீட்டிற்கு விரைந்து வரலானான் என்பதாகும். இது பரத்தமையைக் கூறுகிறது. உள்ளத்துவத்தல் இதில் வெளிப்படவிலை. தலைவனிடம் இருந்த குறியைக் கொண்டே தோழி அவன் வாயிலை மறுக்கிறாள். உள்ளத்துவத்தலென்பது அவனிடம் இல்லாத குறியை இருத்தலாக கொண்டு உவத்துக் கூறுதலே யாகும்.

இம்மெய்ப்பாட்டினை விளக்க பாரதியும் பாலசுந்தரமும்,
“……  ……… ………………………. ……………………………..
………………………….  ……………………………… இன்று வந்து,
ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்
மாசில் கற்பின் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழி சாயினைப் பற்றியெம்
முதுமை எள்ளல்அஃ தமைகுந் தில்ல
………  …………………… ………………………….
இளமை சென்று தவந்தொல் லஃதே
இனிஎவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே” (அகம்.6)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், இன்று இங்கு வந்து எனது மார்பில் தோன்றிய தேமலையும், கற்பினையும் உடைய புதல்வனது தாய் என்று வஞ்சனையும் வணங்கிப் பொய்ம்மொழி கூறி என்னுடைய முதுமையை இகழாது இருக்க. தீப்போலும் தாமரை மலர்களை உடைய நீர் மிக்க வயலில் அழகிய உள்துளையுடைய வள்ளைக் கொடியினை உழக்கி வாலை மீனைத் தன் கூறிய பற்களால் தின்ற நீர்நாய் முட்கள் பொருந்திய தண்டினை உடைய பிரம்பினது பழைய தூருகளில் தங்கியிருக்கும் இடமாகிய மத்தி என்பவனது கழாஅர் என்ற ஊரினை ஒத்த எமது இளமை கழிந்து பழையதாயிற்று. நீ பொய்ம்மொழி எங்களுக்குச் சொல்லுவது எவ்வாறு இனியதாக அமையும்? எனத் தலைமகள் பரத்தையிடமிருந்து மீண்டு வந்து உண்மையாக தலைவியின் இயல்பைப் பாராட்டும் தலைமகனை நோக்கிக் கூறியது. இது உள்ளதுவத்தலின் பாற்படும்.

1:5 புணர்ந்துழி உண்மையும் அகநானூறும்
புணர்ந்துழியுண்மையென்பது, “புணர்ந்தவழி யூடலுள் வழி மறைத்துக் கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல்.” (இளம்.மெய்.24) எனவும், “முன்கூறிய இல்லது காய்தலும் உள்ளதுவத்தலுமாகிய விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சி.” (பேரா.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். புணர்ச்சிக் காலத்து உண்மையாக உள்ளம் மகிழுமாறு செய்வன செய்யும் நிகழ்ச்சி புணர்ந்துழி உண்மையாகும். இதனை விளக்க இளம்பூரணர், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர், ஐந்.ஐம்.30 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:6  பொழுது மறுப்பாதலும் அகநானூறும்

பொழுது மறுப்பாதலென்பது, “தலைவன் வரும்பொழுது நியமமின்றி மறுப்பு வந்துழிப் பொழுதினைப் பற்றி நிகழும் மனநிகழ்ச்சி” (இளம்.மெய்.24) என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இதனை பொழுது மறுப்பாதல் என இளம்பூரணர், இராசா, தாசன் ஆகியோர் பொருள் கொண்டுள்ளனர். பேராசிரியரும், குழந்தையும் இதனை பொழுது மறுப்பாக்கம் என பொருள் கொண்டுள்ளனர்.

“பொழுதுமறுப் பாதல் – இளம். பாடம், பதிப்பு 2, 17; பொழுதுமறுப் பாக்கம் – பேரா. பாடம், சுவடி 73, 115, பதிப்பு 16; ” (ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம், உரைவளக் கேவை, மெய்ப்பாட்டியல், ப.171) என ச.வே.சுப்பிரமணியம் தமது உரைவளக் கோவையில் குறிப்பிட்டுள்ளார். இதில் பேராசிரியர் கொண்ட பாடமே சுவடியில் காணப்படாலும். இருவர் கொண்டுள்ள பாடத்தின் பொருளும் ஒன்றாகவே இருக்கும் பொருட்டு இரண்டும் ஒன்றே எனக் கொள்க. பொழுது மறுப்பாக்கமென்பது, “களவின்கட் பகற்குறியும் இரவுக்குறியுமென வரையறுத்தாற் போல்வதோர் வரையின்மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமென்றவாறு; எனவே, களவுக்காலத்துப் பொழுது வரைந்து பட்ட இடப்பாட்டினீங்கிய மனநிகழ்ச்சி ஆக்கமெனப்படும்”  (பேரா.மெய்.24) எனப் பேராசிரியர் கூறியுள்ளார். களவின் கண் குறியிடத்து வரையறுத்தல் போலல்லாமல் கற்புக் காலத்து வரையறையின்மையின் அப்பொழுது மறுத்தலாகிய ஆக்கமென்பது பொழுது மறுப்பாக்கமாகும். அதாவது, இரவுக் காலத்து நிலவின் வெளிச்சம், பகற்பொழுதின் தமர் உலவல் போன்ற இடையூறுகளால் உடன் இருந்தும் புணரா தன்மையாகும். இதனை விளக்க இளம்பூரணர். கலி.144, அகத்திணை.48 ஆகியவற்றையும், பேராசிரியர், குறுந்.178 ஆம் பாடலையும், குழந்தை குறுந்.178, கற்.5 ஆகியவற்றையும், தாசன், கலி.144 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:6:1 புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப்பாக்கமும் அகநானூறும்
மேலே இளம்பூரணர், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர், புணர்ந்துழியுண்மை என்பதை தனியாகவும், பொழுது மறுப்பாக்கம் என்பதை தனியாகவும் பிரித்து இரு மெய்ப்பாடுகளாகப் பாடம் கொண்டுள்ளனர். ஆனால், பாரதியும் பாலசுந்தரமும் புணர்ந்துழி யுண்மைப் பொழுது மறுப்பாக்கம் என்பதனை ஒரே மெய்ப்பாடாக பாடங்கொண்டுள்ளனர். இதனை பாரதி,

“இத்தொடரைப் ‘புணர்ந்துழியுண்மை’, ’பொழுது மறுப்பாக்கம்’ என பிரித்தெண்ணிப் பதினொன்றாக்குவர் பேராசிரியர். இது ’சிறந்தபத்தும்’ எனத் தெளித்துக்கூறிய சூத்திரச் சொற்றொடர்ச் செம்பொருளொடு முரண்படுவதால், அஃதுரையன்மை அறிக. பதினொன்றைப் பத்தென எண்ணலாமெனுந் தன் கொள்கைக்கு, “ஒன்பதும் குழவியொ டிளமைப்பெயரே” எனு மரபியற் சூத்திர அடியை மேற்கோள் காட்டினார். மரபியற் சூத்திரத்தில், “ஒன்பதும் குழவியொடு” என்பதை “குழவியொடு ஒன்பதும்” என மொழிமாற்றினும் எண், பத்தாகாமல் ஒன்பதேயாகும். இங்கு, மொழிமாற்றினும் பேராசிரியர் கொண்டபடி எண் பத்தாகாமல் பதினொன்றாகின்றதாதலின், சொல்லொடு பொருள் முரண எண்ணுதற்கு அம் மரபியற்சூத்திரம் மேற்கோளாகாமை வெளிப்படை.” (பாரதி.மெய்.24)

என பாரதி பேராசிரியர் கொண்ட பாடத்தினை மறத்துரைத்துள்ளார்.

இதில் தொல்காப்பியர் இச்சூத்திரத்து பத்து மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார் என்பதைச் ’சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே’ என்பதன் வழி தெளிவாகக் காணப்படுதலான், பேராசிரியர் இச்சூத்திரத்து கூறப்படும் மெய்ப்பாடு பதினொன்று என்பது எற்புடையதாகாது. அதேபோல் இம்மெய்ப்பாட்டுத் தொடரை ஒன்றாகக் கொள்ளும் பாரதி, பாலசுந்தரம் ஆகியோரின் கருத்தும் ஏற்புடையதாகாது. இதனை,

“ ‘புணர்ந்துழியுண்மை பொழுது மறுப்பாக்கம்’ எனவரும் இத்தொடர், பகர வொற்றின்றிக் காணப்படுதலான் புணர்ந்துழியுண்மையும் பொழுது மறுப்பாக்கமும் என இரண்டு மெய்ப்பாடுகளாகவே உரையாசிரியர் இருவரும் கொண்டனர். அன்றியும் ’பொழுது மறுப்பு ஆக்கம்’ என்பதே மெய்ப்பாடதலின் அதனைப் ’புணர்ந்துழி யுண்மைப்பொழுது’ என அடைகொடுத்தோதல் வேண்டாமையாலும், தலைவி தலைவனுடன் தடையின்றிக் கூடியிருக்கும் மகிழ்ச்சிக் காலத்தில் தலைவியது திரியற்ற உள்ளத்தின் உண்மையியல்பாகிய மெய்ப்பாடு கற்பியலுக்கு இன்றியமையாததாய்ச் சிறப்பாக எடுத்துரைக்கத்தகுவ தொன்றாதலாலும். அதற்குக் காரணமாயமைந்ததே ‘பொழுது மறுப்பாக்கம்’ என்னும் மெய்ப்பாடாதலின் முறையே காரியமும் காரணமுமாயமைந்த இவ்விரு மெய்ப்பாடுகளையும். ஒன்றென எண்ணுதல் பொருந்தாதாகலானும் முன்னையுரையாசிரியர்  இருவர் கூறியவண்ணம் இவ்விரண்டினையும் தனித்தனி மெய்ப்பாடுகளாகக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும்.” (க.வெள்ளைவாரணன், தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் உரைவளம், ப.௨௧௰)

என வெள்ளைவாரணர் கூறியுள்ளார். எனவே, புணர்ந்துழி யுண்மை பொழுது மறுப்பாக்கம் எனக்கொண்ட பாடம் பொருந்தாது. புணர்ந்துழியுண்மை என்பது தனி மெய்ப்பாடு; பொழுது மறுப்பாக்கம் என்பது தனி மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாட்டினை விளக்க பாரதி, குறுந்.32 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளார். அகநானூற்றுப் பாடல் எதுவும் எடுத்தாளப்படவில்லை.

1:7 அருள்மிகவுடைமையும் அகநானூறும்

அருள்மிகவுடைமையென்பது, “தலைமகன்மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை” (இளம்.மெய்.24) எனவும், “களவுக் காலத்துப் போலத் துன்பமிகுதலின்றி அருண்மிகத் தோன்றிய நெஞ்சினளாதல்” (பேரா.மெய்.24,) எனவும், “முன் களவில் தலைவனருளை வேண்டிய தலைவி, கற்பில் தலைவனை அருளோடு பேணும் பெற்றி” (பாரதி.மெய்.24,) எனவும், “தலைவனது புறத்தொழுக்கம் முதலியவை பற்றி முனியாது அவனது தலைமைப் பாட்டினைப் போற்றி ஒழுகல்” (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். அருள்மிகவுடைமையென்பது இதுகாறும் தலைவனின் அருளினை எதிர்பார்த்திருந்த தலைவி அவனது அருள்கிட்டிய வழி அவனை அருளோடு பேணும் நிலை அருள் மிகவுடைமையாகும். இதனை விளக்க பேராசிரியரும், குழந்தையும், நற்.1 ஆம் பாடலையும், பாரதி, குறுந்.252 ஆம் பாடலையும், பாலசுந்தரம் கலி 67 ஆம் பாடலையும், மேலும் பாலசுந்தரம்,

“களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையா
நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணி னெனல்லனோ” (அகம்.16)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், அப்பெண் களவாட வந்த ஒருவன் களவாடிய பொருளோடு அகப்பட்டு நிற்பதைப் போன்று முகம் கவிழ்ந்து நாணத்துடன் நிற்றாள். அவளை நின் பரத்தை என்று உணர்ந்து கொண்டேன். அவள் வருத்தும் தெய்வம் போன்று அழகாய் இருந்தாள். அதனால் அவளும் உனது மகனுக்குத் தாயாதல் பொருந்தும் தானே என்பது பரத்தை மாட்டு சென்ற தலைவன்மீது கோபம் கொள்ளாது இது உலக இயல்பு என உணர்ந்து அவன் மாட்டு அருள்மிக்க நின்றது.
மேலும், இளம்பூரணரும் தாசனும்,
“நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே…..
………………………………….   …………………………….
வடுவாழ் புற்றின வழக்கறு நெறியே” (அகம்.88)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், ஊருக்கு அச்சமின்றி சென்று சேர்ந்தாரோ? என எண்ணவேண்டி உள்ளது. ஏனென்றால் புலியைக் கொன்ற யானை, கன்னத்தில் மதநீர் ஒழுகத்திரியும். அம்மதநீரில் வண்டுகள் கூட்டமாக மொய்க்கும் அவற்றின் ஒலியை யாழிசையோ எனக்கூர்ந்து மலைப் பிளவுகளில் உள்ள அசுணம் உற்றுக் கேட்கும். மூங்கில் நிறைந்த காட்டில் வளைந்த விரல்களையுடைய கரடியானது புற்றாஞ் சோற்றை புற்றில் இருந்து எடுக்கும்போது பாம்பு இறக்கும். அத்தகைய செல்லுதற்கரிய வழியில் தலைவன் அச்சமின்றி மீண்டும் சேர்ந்தானோ? என்பதில் தலைவன் மீதான தலைவியின் அருள் புலப்பட்டுள்ளது.

1:8  அன்புமிக நிற்றலும் அகநானூறும்
அன்புமிக நிற்றலென்பது, “அன்பு புலப்பட நிற்றல்” (இளம்.மெய்.24) எனவும், “களவுக் காலத்து விரிந்த அன்பெல்லாம் இல்லறத்தின்மேற் பெருகிய விருப்பினானே ஒழுங்குதொக நிற்றல்.” (பேரா.மெய்.24) எனவும், “கொழுநன் கொடுமை உளங்கொளாமல், அவன்பாற் காதல் குறையாதொழுகல்.” (பாரதி.மெய்.24) எனவும், “புரையறந்தெளிந்த அறிவினளாயினும் புலவி, புணர்ச்சி உவகையைத் தோற்றுவித்தலின் தலைவன் மாட்டுச் செல்லும் தன் பேரன்பினைத் தலைவி அவற்குப் புலப்படாது மறைத்தல்.” (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தலைவன்பால் காதலன்புமிக நிற்றல் அன்புமிக நிற்றலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணர், சிற்றட்டகம். (எண் இல்லை) பாடலையும்;  பாரதி, குறுந்.60, 288 ஐந்.எழு.2 ஆகிய பாடல்களையும், பாலசுந்தரம், கலி.73, 79 ஆகிய பாடல்களையும், பேராசிரியரும் குழந்தையும்,

“எம்போற்,…………….. புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து
நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய
வென்ன கடந்தளோ மற்றே” (அகம்.176)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், எம்மைப்போலப் புல்லிய உளைபோன்ற மயிரினையுடைய புதல்வனைப் பயந்து நெல்லையுடைய நெடுநகர்க்கண் நின்னையின்றியிருப்ப என்ன கடமையையுடையள் என்பது தோழி கூற்று, இதில் புதல்வற்பயந்து நின்னின்றுறையுங் கடத்தினம் யாமென்றமையின் இஃது அன்புதொக நிற்றலானது.

1:9  பிரிவாற்றாமையும் அகநானூறும்
பிரிவாற்றாமை என்பது, “பிரிவின்கண் ஆற்றாமை” (இளம்.மெய்.24) எனவும், “களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறுபோலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமை; என்னை? புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்தல் கற்பிற்கு வேண்டுவதன்றாகலி னென்பது.” (பேரா.மெய்.24) எனவும், “களவிற்போலக் கற்பிற் றலைவி காதலை மறைத்தல் வேண்டாமையின் தலைவன் பிரிவைத் தாங்கா தழுங்குதல்.” (பாரதி.மெய்.24) எனவும், “தலைவன் தன் தலையாய கடமை பற்றிப் பிரிதலை ஆற்றியிருத்தல் முல்லை சான்ற கற்பொழுக்கத்திற்குச் சிறப்புடையதெனினும் தலைவி தன் கழிபெருங் காதல் காரணமாக ஆற்றாமை தோன்ற நிற்றல்.” (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தலைவனின் பிரிவை தலைவி ஆற்றாது ஒழுகுதல் பிரிவாற்றாமை எனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1151-ஐயும், பேராசிரியரும் குழந்தையும் கலி.2-ஆம் பாடலையும், பாரதி நற்.284 பாடலையும்,

“ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மைய அழிபடர் அகல
வருவர் மன்னாற் றோழி!…..
……………….   ………………… வாடை
கடிமனை மாடத்துக் கங்குல் வீசத்
திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிரைவளை யூருந் தோளென
உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே” (அகம்.255)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இதில், பனிகாலம் வந்துவிட்டது. வயல்களும் குலங்களும் நிறைந்தன. வாடைக்காற்று வீசுகின்றது. அதனால் துன்பம் மிகுகின்றன. கருவிற மலர்களும், பகன்றைச் செடியின் பூக்களும், பாகற் கொடிகளின் இலைகளும், கூதளம் செடியின் இலைகளும், கொடிகளும் அசைந்து இரவெல்லாம் உறங்கவிடாமல் என் உடலைக் குத்துகிறது. அதனால் உடல் மெலிந்தது. வளைகள் கழன்றன என்னிடம் அன்புடையோர் யாராவது தலைவனிடம் சென்று என் துன்பத்தைக் கூறினால் உடனே அவர் விரைந்தோடி வருவார். ஆனால் அவரிடம் சென்று கூறும் அன்புடையர் ஒருவரும் இல்லையே எனத் தலைவி பிரிவாற்றாது தவித்தலை இப்பாடல் கூறுகின்றது.

1:10  மறைத்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇயும் அகநானூறும்
மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ என்பது, “மறைந்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல்லாகிய அலர் மாட்சிமைப்படாத கிளவியொடுகூட என்றவாறு. மறைந்தவை யுரைத்த புறஞ்சொல்லாவது – அலர். மாணாமையாவது – அவ்வலர் மட்சிமைப்படாமற் கற்புக்கடம் பூண்டல்.” (இளம்.மெய்.24) என இளம்பூரணர் கூறியுள்ளார். தான் மறைத்துரைத்த அலராகிய புறஞ்சொல்லின் தீமையகற்றி சொல்லாடுதல் மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇயாகும். இதனை விளக்க இளம்பூரணர், கலி.89, நற்.149 ஆகிய பாடல்களையும், தாசன். நற்.149 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:10:1  மறைந்தவை யுரைத்தலும் அகநானூறும்
மறைந்தவை யுரைத்தலென்பது, “களவுக் காலத்து நிகழ்ந்தவற்றைக் கற்புக்காலத்துக் கூறுதல்.” (பேரா.மெய்.24) எனவும், “முன் ஒளிந்த நிகழ்ச்சி பின் உவந்தெடுத்து துரைப்பது.” (பாரதி.மெய்.24) எனவும், “சென்ற காலத்து நிகழ்ந்தவற்றை ஓர் ஏதுவைப்பற்றி எடுத்துப் பேசுதல்” (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ என இளம்பூரணர், இராசா, தாசன் ஆகியோர் பாடம் கொள்ள; பேராசிரியர், புலவர் குழந்தை, பாரதி, பாலசுந்தரம் ஆகியோர், மறைந்தவை யுரைத்தல் என்பது தனியாகவும், புறஞ்சொன் மாணாக்கிளவி என்பது தனியாகவும் பிரித்து இரண்டு மெய்ப்பாடுகளாகப் பொருள் கொண்டுள்ளனர். இதில் தாம் கொண்டுள்ள பாடமே சரியெனும் பாரதி,

“இளம்பூரணர் இச்சூத்திரத்தில் மெய்ப்பாடு பத்தெனவே எண்ணினார், எனின், அவர் இத்தொடரைப் பிரித்திரண்டாக்கி, மறைந்தவை யுரைத்தல் புறஞ் சொல்மாணாக்கிளவி எனும் வேறுபடும் இரண்டை இணைத்து ஒன்றாகப் பத்தெண்ணி, அமைவுகாட்டுவர். மறைந்தவை யுரைத்தல் தனி மெய்ப்பாடாதலானும், புஞ்சொல்மாணாக் கிளவிக்கு இவ்வடை வேண்டப்படாமையானும், அவ்விரண்டையும் இணைத்தல் ஏலாமை அறிக.” (பாரதி.மெய்.24)

என கூறியுள்ளார். ஆனால், இளம்பூரணர் கூறும் ‘மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ’ என்பதே பொருந்தும், ஏனெனில் ஆசிரியர் ’சிறந்தப்  பத்தும் செப்பிய பொருளே’ என்பதன் வழி இச்சூத்திரம் உணர்த்தி நிற்பது பத்து மெய்ப்பாடுகளே என்பது தெளிவு. எனவே ஏனையோர் பிரித்தோதும் மரபு பொருந்தாது. இம்மெய்ப்பாட்டினை விளக்க பேராசிரியர், குழந்தை, (அகம்.26(9-16)) பாரதி (அகம்.26 (4-26)) பாலசுந்தரம் (அகம்.26 (8-16)) ஆகியோர்,

“………….. …………………………. …….. வளங்கே ழூரனைப்
புலத்தல் கூடுமோ தோழி!……..
…….  …………….. ……………… ……………………….
…………….. ………………….. மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவையென மயங்கி
யானோம் என்னவும் ஒல்லார், தாமற்
றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே
……….. ………………. ……………………….. …………………  ……………………….
நெஞ்சறை போகிய அறிவி னேற்கே.” (அகம்.26)  (பாரதி)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், முயங்கலை விடுகவென்று சொல்லத் தாம் மயங்கி யாம் ஒழியுமென்னவும் உடன்படாராய் இம்முலைகளைப் பாராட்டிய பருவமுமுள. இப்பொழுது புதல்வனைத் தடுத்த பாலொடு சாய்ந்து தேமலையணிந்த இனிய மென்முலைகளை அகலம்பொலிய முயங்கலை யாம் வேண்டினேம். தாம் தீம்பால் படுதலை அஞ்சினர். பருவம் என்றது களவுக்காலத்தைக் குறித்ததென்பர். எனவே இது களவில் நிகழ்ந்ததைக் கற்பில் கூறினமையின் மறைந்தவை யுரைத்தலென்றானது. மேலும் பேராசிரியரும் குழந்தையும் கள.6 ஆம் நூற்பாவையும் எடுத்தாண்டுள்ளனர்.

1:10:2 புறஞ்சொன் மாணாக் கிளவியும் அகநானூறும்
புறஞ்சொன் மாணாக்கிளவியென்பது, “தலைமகற்கு வந்த புறஞ்சொல்லின் பொல்லாங்கு குறித்து எழுந்த கிளவி, அவற்கு வரும் பழிகாத்தலுந் தனக்கு அறமாதலின் அதுவுங் கற்பின் கண்ணே நிகழுமென்பது.” (பேரா.மெய்.24) எனவும், “தலைவற் கெய்தக் கூடிய பழியுரையை மாற்றுஞ் சொல் கூறுதல். புறஞ்சொல் – பிறர் கூறும் பழிச்சொல், அலர். மாணாக் கிளவி – மாண்+ஆ. மண்ஆய கிளவி – மாட்சிமையாகிய சொல்;  பிறர்கூறும் பழிச்சொல்லை வெறுத்துக் கூறுதலென்பதாம்.” (குழந்தை.மெய்.24) எனவும், “தலைவனைப் புறத்தூற்றும் புன்சொற்பெறாத தலைவி அதை வெறுத்து மறுப்பது. புறஞ்சொல் நன்றாகாதென வெறுக்குந் தலைவியின் மறுப்புரை, புறஞ்சொல் மாணாக்கிளவி என்று கூறப்பட்டது.” (பாரதி.மெய்.24) எனவும், “புறத்தார் கூறும் புன்சொல்லைப் பெறாது வெறுத்தலேயன்றித் தானும் புறஞ் சொல்லற்கு ஒவ்வாது நிற்றல்.” (பாலசுந்.மெய்.24.) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தலைமகன் நடத்தையின் வழி ஏற்பட்ட அலரினை மறுத்துரைக்கும் தலைவியின் சொல்

‘புறஞ்சொன் மாணாக் கிளவி’ யாகும். இதனை விளக்க பாரதி, குறுந்.96 ஆம் பாடலையும், பேராசிரியரும் குழந்தையும்,
“களிறு கவர் கம்பலை போல
வலரா கின்றது பலர்வாய்ப் பட்டே” (அகம்.96)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் குறுமகளைக் கொண்டனை என்ப. அது, களிற்றைப் பிடித்த காலத்துப் பேரொலிபோலப் பலர்வாய்ப்பட்டு அலராகின்றது எனத் தலைவி ஊடல் கொண்டுள்ளாள் எனக் கூறி தோழி வாயில் மறுத்தது. இது பிறர் கூறும் பழிச்சொல்லுக்கு தலைவனை வெறுத்துரைத்ததால் புறஞ்சொன் மாணாக் கிளவியானது. மேலும் பாலசுந்தரம்,

“………….  ………………. ……………………….. ஊரன்
காமம் பெருமை யறியேன், நன்றும்
உய்ந்தனென் – வாழி, தோழி!……..
…………… …………….. ………………………..ஆதிமந்தி போல,
ஏதம் சொல்லிப் பேது பெரிதுறலே” (அகம்.236)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில் தோழீ! நம் ஊரில் வாழும் தலைவனுடைய காமம், பெருமை இவற்றை நாம் அறியவில்லை. அவர் நேற்று இரவில் சந்தனமும், பட்டாடையும் அணிந்து ஒரு பரத்தையோடு காலங்கழித்து, இன்று காலை வைகறைப் பொழுதில் நம் வீட்டுக்கு வந்தார். வந்தவர் என்னைக் கண்டவுடன் மகளிரைப் போல நாணிக் கூனி படுக்கையறையில் இருந்தார் அதைக்கண்ட என் நெஞ்சு உருகிவிட்டது……… ஆதிமந்திபோல என்னைத் திரிய விடாமல் வீடு வந்து சேர்ந்தார். பித்துக் கொண்டு திரியாமல் யான் தப்பித்தேன் எனத் தன் ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுகிறாள். இதன் குறிப்பு, அவரது விருப்பம் பெரிதாயினும் பெருமையும் உடையவர் என்பதை அறிந்து கொண்டேன். இப்பொழுது அந்த அறியாமையை நினைத்து என் நெஞ்சம் வருந்துகிறது. என்பதாகும். இதில் தலைவன் புறத்தொழுக்கத்தையும் நியாயப்படுத்திக் கூறும் தலைவியின் சொல்லே புறஞ்சொன் மாணாக்கிளவியாகும். இதனை இளம்பூரணர் அலர்மிகாக் கிளவிக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

1:11  புறநடை
அலர்மிகாக் கிளவி என்பதை மேற்கூறிய பத்துக்குப் புறநடையாக இளம்பூரணர் கூறி அதனை விளக்க அகம்.96 ஆம் பாடலை எடுத்துக்காட்டியுள்ளார். இதனை மேலே விளக்கப்பட்டது. மேலும், பாலசுந்தரம், தலைவன் புறையறந் தெளிதல், தலைவன் மறைந்தவை உரைத்தல் எனும் இரண்டையும் புறநடையாகக் கொண்டுள்ளார். அவற்றுள் தலைவன் புறையறந் தெளிதலென்பதை விளக்க,

“தூநீர்ப் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணியுரு விழிந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே” (அகம்.5)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், தனது கண்ணின் பாவையை மறைத்து நிற்கும் நடுக்கத்தைச் செய்யும் நீரையுடைய பார்வையுடன் தன் புதல்வனை மார்பில் அணைத்து அவன் தலையில் உள்ள மாலையை மோந்து பெருமூச்சு விட்ட காலத்து அந்தமலர் பொலிவிழந்து இருந்த காட்சியைக் கண்டபோது நாம்பிரிந்து செல்வோம் என்ற எண்ணத்தைத் தவிர்த்தோம் என்பது தலைவன் புறையந் தெளிதல்.
தலைவன் மறைந்தவை யுரைத்தலென்பதை விளக்க,

“முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, ‘யாழநின்,
மநெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை‘என,
இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்,
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயில்வர,
அகம்மலி உவகையள் ஆகி,முகன் இகுந்து
ஒய்யென இறைஞ்சி யோளே – மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்குஈர் ஓதி, மாஅ யோளே” (அகம்.86)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், அவளை அடையும் பெருவிருப்புடன் முகத்தை மூடியிருந்த ஆடையை நீக்கினேன் – அவள் அஞ்சிப் பெருமூச்சு விட்டாள் நான் அவளிடம் உன் உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் சொல் எனக் கேட்டளவில் மானின் செருமிக்க பார்வையுடன் ஒடுங்கிய கூந்தலுடன் கூடிய தலைவி சிவந்த மணிகள் பதித்த ஒளி பொருத்திய குழையை அணிந்த காதுகள் அசையாது உள்ளத்து மகிழ்வை வெளிக்காட்டாதவளாக முகத்தைத் தாழ்த்தி வெட்கத்துடன் நின்றாளென்பது தலைவன் மறைந்தவை உரைத்தலாகும். தெய்வம் அஞ்சல் முதல் மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ வரை கூறப்பட்ட பத்து மெய்ப்பாடுகளும் தலைமக்கள் ஒருவரை யொருவர் கண்டு அளவாளவும் நிலையில் இடையூறு ஏதேனும் நேருமோ என வருத்தமுற்று மனம் சிதையாது கூடும் கூட்டத்தில் நிகழ்வதனால் இவை தலைமகன் தலைமகளை வரைத்தபின் நிகழும் மெய்ப்பாடுகளாகும்.

1:2. முடிவுரை
1. மனன் அழிந்தவழி புலப்படும் பத்து மெய்ப்பாடுகளில், உள்ளத்துவத்தல், அருள்மிக உடைமை, அன்புமிக நிற்றல், பிரிவாற்றாமை, மறைந்தவையுரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி (மறைந்தவையுரைத்தல், புறஞ்சொல் மாணாக்கிளவி) எனும் ஐந்து மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடலை எடுத்தாண்டுள்ளனர்.

2. மனன் அழிந்தவழி புலப்படும் பத்து மெய்ப்பாடுகளில், உள்ளத்துவத்தல், அருள்மிக உடைமை, அன்புமிக நிற்றல், பிரிவாற்றாமை, மறைந்தவையுரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி (மறைந்தவையுரைத்தல், புறஞ்சொல் மாணாக்கிளவி) எனும் ஐந்து மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடலை எடுத்தாண்டுள்ளனர்.

3. பேராசிரியரும் குழந்தையும் மனன் அழிந்தவழி புலப்படும் மெய்ப்பாடுகள் பதினொன்று என்கின்றனர். ஏனைய உரையாசிரியர்கள் அனைவரும் பத்து மெய்ப்பாடுகள் என்கின்றனர். தொல்காப்பியரே பத்து மெய்ப்பாடுகள் என கூறியவிடத்து, பேராசிரியரும் குழந்தையும் இவ்வாறு கொளல் பொருந்தாமையாகும்.

துணைநூற்பட்டியல்
(அ). தொல்காப்பிய உரை நூல்கள்
1. இராசா.கி., (உரை), தொல்காப்பிய பொருளதிகாரம் (பகுதி-2), பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை. பதி.2013.
2. இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம் (பாகம்.2), சாரதா பதிப்பகம், சென்னை-14, பதி.2014.
3. சோமசுந்தரபாரதி, ச, (உரை), தொல்காப்பியம் பொருட்படலப் புத்துரை, மெய்ப்பாட்டியல், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதி.1975.
4. தாசன். மு.,(உரை) தொல்காப்பியக் களஞ்சியம், பொருளதிகாரம் (பகுதி-2), அபிலா பதிப்பகம், மேலப்பொட்டக்குழி, குமரி மாவட்டம், பதி.2011.
5. பாலசுந்தரம். ச.,(உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி காண்டிகையுரை (களவு , கற்பு, பொருள், மெய், உவமை), தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பதி.1989
6. புலவர் குழந்தை (உரை),  தொல்காப்பியம் பொருளதிகாரம், அர்ஜித் பதிப்பகம், நாகர்கோவில், பதி.2012.
7. பொன்னையா. நா(பதி.), பேராசிரியர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம் (பாகம்.2), திருமகள் அழுத்தம், சுன்னாகம், பதி.1943.
(ஆ) அகநானூற்று உரைநூல்கள்
1. கேசிகன், புலியூர்., அகநானூறு மூலமும் உரையும்(3-தொகுதிகள்), சாரதா பதிப்பகம், சென்னை-14, பதி.2016.
2. சுப்பிரமணியன். ச.வே., அகநானூறு தெளிவுரை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பதி.2009.
3. செயபால். இரா., அகநானூறு மூலமும் உரையும்(2-தொகுதிகள்) , நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை-98, பதி.2004.
4. சோமசுந்தரம். பொ.வெ., அகநானூறு- களிற்றியானைநிறை, கழகம்,1970.
5. பரமசிவம், மா., அகநானூறு இராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், இராசகுணா பதிப்பகம், சென்னை-91, பதி.2016.
6. மீனவன். நா, அகநானூறு மூல

periyaswamydeva@gmail.com