ஆய்வு: கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடுகள் (நான்காம் நிலை)

- முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 -அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் யாத்த நூல்  தொல்காப்பியம். தமிழ்மொழியின் காலத்தொன்மை பண்பாடு, நாகரிகச் சிறப்பு முதலியவற்றை நுவலும் முதன்மை ஆதாரமாக இந்நூல் திகழ்கிறது. உலகில் தோன்றிய இனங்களில் பொருளுக்கு இலக்கணம் வகுத்தது தமிழினமாகும். ஏனைய மொழிகள் யாவும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கண்டுள்ள நிலையில் தமிழ்மொழி, பொருளை அகவாழ்வு என்றும், புறவாழ்வு என்றும் வரையறுத்து வாழ்வை நெறிப்படுத்தியது. இவ்வகவாழ்வு களவு, கற்பு என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இக்களவுக்கால மெய்ப்பாடுகளுள்  ஒன்றான நான்காம் நிலைக்குரிய மெய்ப்பாடுகளைக் கலித்தொகையில் பொருத்திப் பார்ப்பதாகக் இக்கட்டுரை அமைகின்றது.

மெய்ப்பாடு
உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடே மெய்ப்பாடு ஆகும். இளம்பூரணர், “மெய்ப்பாடென்பது புலன் உணர்வின் வெளிப்பாடு. அது மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று” என்பர்.

அகத்திணை  மெய்ப்பாடுகள்

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப    ”      (தொல்.பொருள்.அகத்.நூ.1)

என்றவாறு, அகத்திணைகளைக் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று மூன்றாகப் பகுப்பது தமிழ் மரபு. கைக்கிளை என்பது ஒரு தலை வேட்கை பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; ஆதலின் ஒத்த அன்புடைய ஐந்திணையே சிறந்தது என்பதால் இதனை நடுவணைந் திணைக்குள் அடக்குகிறார் தொல்காப்பியர். அகவாழ்வில் களவு, கற்பு என்ற இருநிலைகள் உள்ளன. களவுக் காலத்திற்கு உரியனவாக 24 மெய்ப்பாடுகளையும், கற்புக் காலத்திற்கு உரியனவாக 10 மெய்ப்பாடுகளையும்  தொல்காப்பியர் பாகுபடுத்தியுள்ளார்.

களவுக்கால மெய்ப்பாடுகள்
நல்லூழின் ஆணையால் காதலர் இருவர் தம்முள் கண்ட காட்சி, வேட்கை, இருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லாம் அவையே  போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என அவர்தம் உணர்வு நிலைகளைப் பத்தாகப் பகுப்பது மரபு. இவற்றை வடநூலார் அவத்தை என்பர். இவற்றில் முதல் ஆறு உணர்வு நிலைகள் மட்டும் மெய்ப்பாட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு  நிலைகளுள் முதல் மூன்று நிலைகள் புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும், அடுத்த மூன்று நிலைகள் புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும் வரையறுக்கப்படுகின்றன.

 

புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடு
தம் உள்ளத்து பெருகும் புணர்ச்சி வேட்கையைத் தலைவி மெய்ப்பாடுகளால் தலைவனுக்குப் புலப்படுத்துவாள். அகத்திணையின் பாடுபொருளான உள்ளம் இயைந்த உடலுறவும், உடலிழைந்த உள்ள உறவும் புணர்ச்சிக் காலத்துத் தலைவியிடம் தோன்றுவதாகும். இத்தகு புணர்ச்சிக்குப் பின் களவுக் காதல்  பெற்றோர்க்கும், உற்றோர்க்கும் ஊரார்க்கும் தெரியும் நிலை ஏற்படும்போது தலைமக்களிடம் பன்னிரெண்டு மெய்ப்பாடுகள் தோன்றுகின்றன.

நான்காம் நிலை
இயற்கைப் புணர்ச்சியினின்று நீங்குந் தலைமக்களிடம் தோன்றும் களவுக் காலத்தின் நான்காம் நிலை மெய்ப்பாடுகளாகப் பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்னும் நான்கினைத் தொல்காப்பியர்  கூறுகின்றார். இதனை,

“பாராட்டெடுத்தல் மந்தப வுரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
எடுத்த நான்கே நான்கென மொழிப”
(தொல்.பொருள்.மெய்.நூ.264)
என்னும் நூற்பாவின் மூலம் அறியலாம்

பாராட்டெடுத்தல்
புணர்ச்சிக்குப் பின் தலைமக்களுள் தலைவன் தலைவியையோ தலைவி தலைவனையோ உளமகிழ்ந்து பாராட்டுதல் இயல்பு. தலைமக்களின் அழகும், அன்பின் பெருமையும், நல்லியல்புகளும் பாராட்டுதலுக்குக் காரணமாகின்றன. காதல் வயப்பட்ட நிலையில் காதலரின் பாராட்டு மொழிகள் அவர்தம் அன்பின் பெருமையைப் புலப்படுத்துவதோடு அவர்களுக்கு மனமகிழ்வையும் அளிக்கின்றன. இம்மெய்ப்பாடு மனமொன்றி உயிருக்குயிராகத் திகழும் காதலர்களிடம் தோன்றுவதாகும். இதற்கு இளம்பூரணர், “தலைமகன் நின்ற நிலையும் கூறிய கூற்றையும் தனித்த வழியும் எடுத்து மொழிதல்” என்கிறார்.

கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடான பாராட்டெடுத்தல் இடம்பெற்றுள்ளது.
“முல்லை  முகையு முருத்து நிரைத்தன்ன
பல்லும் பனைத்தோளும் பேரம ருண்கண்ணு
நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய
சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்று கிற்பார் யார்?”
(முல்.க.15-18)

என்னும் பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன. முல்லை அரும்பு போலவும், மயிலிறகின் குருத்து போலவும் வரிசையாக அமைந்துள்ள பற்களைக் கொண்டவள் நீ மூங்கிலனைய பருத்த தோளையும் கொண்டவள்; கண்டாரைக் கொல்லும் பார்வையைக் கொண்டவள். அவை யாவும் என்னை நல்லவன் என்று எண்ணி என்னை நம்புகின்றன. எனினும், நீ என்னை அறியாதவள் போலப் பேசுகின்றாய்! நீ சொல்வன்மை கொண்டவள். உன்னிடம் பேசி வெல்ல இயலுமோ? எனத் தலைவன் கூறுவதன் மூலம் பாராட்டெடுத்தல் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது. இக்கருத்திற்கேற்ப, குறிஞ்சிப்பாட்டில் பாராட்டெடுத்தல் என்னும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது. இதனை,

“ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண்தொடி
அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி
மடமதர் மழைக்கண் இளையீர்”        (குறி.பா.139-141)
என்கிறார் கபிலர். ஐந்து வகையாக ஒப்பனைச் செய்திருந்தத் தலைவியின் கூந்தல் அழகினைத் தலைவன் பாராட்டினான். பிறகு தலைவியின் ஒளியுடைய வளைவுகளையும், மெல்லிய சாயலையும் பாராட்டினான். அத்துடன் அழகிய வளைந்தக் கொப்பூழினையும் குளிர்ந்தக் கண்களின் நோக்கினையும் பாராட்டினான். இவ்வாறுத் தோழி செவிலியிடம் மொழிவதில் பாராட்டெடுத்தல் புலனாகின்றது. வள்ளுவர்,
“பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து”            (குறள்.1089)

என்று கூறுகிறார். தலைவிக்கு இயல்பான அழகும் நாணமும் இருப்பதால் வேறு அணிகள் தேவையில்லை என்று கூறுவதில் பாராட்டெடுத்தல் புலனாகின்றது.

மடந்தப உரைத்தல்
பெண்டிர்க்கு இயல்பாக உள்ள குணங்களில் ஒன்று மடம் ஆகும். தலைவி தன் உள்ளத்து வேட்கையினைத் தலைவனிடம் மடம் கெடக்கூறுதலே மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாடாகும். இதற்குத் தமிழண்ணல், “மடந்தப உரைத்தல் என்பது இதுவரை அடக்கமாய்ப் பேசாதிருந்தவள் அது மாறும்படி, தலைவனிடம் சிலவற்றைப் பேசத் தொடங்குவாள்” என்கிறார்.

கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடான மடந்தப உரைத்தல் இடம்பெற்றுள்ளதை,

‘அன்னையோ? மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை
யின்றி யமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய்

“நின்றாய் நீ சென்றீ யெமர்காண்பர் நாளையுங்
கன்றொடு சேறும் புலத்து”            (முல்.க.10: 20-23)

என்னும் பாடலடிகளின் மூலம் அறியமுடிகின்றன. இங்கேயே நின்று கொண்டிராமல், நீ செல்லுவாயாக! நீ இங்கு இருப்பதை என் தாய், தந்தையர் பார்த்துவிடுவர்; ஆகவே, இங்கிருந்து சென்றுவிடு. இன்றேபோல் நாளையுங் கன்றுகளோடு மேய்புலத்திற்குச் செல்வேன் அங்கு வருக எனத் தலைவனிடம் தலைவி கூறுவதன் மூலம் தலைவிக்கு மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுவதை அறியமுடிகின்றது இக்கருத்திற்கேற்ப,

“வாரா தவணுறை நீடினேர்வளை
யிணையீ  ரோதி நீழத்
துணைநனி யிழக்குவென் மடமை யானே”    (ஐங்.269: 3-5)

என்னும் ஐங்குறுநூற்றுப் பாடலில் தலைவன்  பிரிந்து மணம் புரியாது நீட்டிப்பின், தலைவியின் உடல் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகி, அவர்தம் களவொழுக்கத்தை வெளிப்படுத்தும். அதனால் தலைவி இறந்து படுதல் கூடும். எனவே முன்பு இவற்றையெல்லாம் ஆராயாது தலைவனோடு கொண்ட அன்பு மடமையாலாகும் என்று தலைவி கூறுவதன் மூலம் அவளுக்கு மடந்தப உரைத்தல் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்
களவொழுக்கத்தில் இன்னகுமாரிக்கு இன்னானோடு காதலுண்டு அல்லது அவனோடு அவளுக்குத் தொடர்புண்டு என ஊராரும், சேரியாரும் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு தலைவி நாணமடைவதே ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்னும் மெய்ப்பாடாகும். இதற்குக் க.வெள்ளைவாரணார், “தனது களவொழுபக்கம்  சிறிது வெளிப்படும் நிலையிற் சுற்றத்தார் கூறுங்கடுஞ் சொற்களை முனியாது ஏற்றுக்கொண்டு இது புறத்தார்க்குப் புலப்பட்டு அலராய் விரியுமோ என நாணும் உள்ளக் குறிப்பினாதல் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்னும் மெய்ப்பாடாகும்” என்கிறார்.

கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடான ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் இடம் பெற்றுள்ளதை,

“இன்ன வுவகை பிறிதியாதி யாயென்னைக்
கண்ணுடைக் கோல ளலைத்தற் கென்னை
மலரணி கண்ணிப் பொதுவனோ டெண்ணி
யலர் செய்து விட்டதிவ் வூர்”        (முல்.க.5:62-65)

என்னும் பாடலடிகள் விளக்குகின்றன என் தாய் தன் கோலால் என்னைத் துன்புறுத்திய செயற்கண்டு, என் தலைவனொடு எனக்கு இருக்கும் உறவைப் பற்றி இவ்வூரார் அலர் தூற்றினர் எனத் தலைவி கூறுவதன் மூலம் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுவதை அறியமுடிகின்றது. இக்கருத்திற்கேற்ப,

“யானே யீண்டை பேனே என்னலனே
ஆனா நோயொடு கான லஃதே”
துறைவன் தம்மூ ரானே;
மறைஅல ராகி மன்றத் தஃதே”        (குறுந்.97)

என்னும் குறுந்தொகை பாடலில் தலைவன் குறித்துச் சென்ற காலத்தில் வாராததால், தலைவியின் களவு அலர் ஆனதைக் கண்டு தலைவி நாணம் கொள்வதன் மூலம் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

கொடுப்பவை கோடல்
தலைவன் அன்பினால் கொடுப்பவற்றைத் தலைவி விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் கொடுப்பவை கோடல் என்னும் மெய்ப்பாடாகும். இதற்குச் ச.சே.சுப்பிரமணியன், “தலைமகன் அன்பினால் கொடுத்த தழை, கோதை, தார், கண்ணி, தோள்மாலை முதலியவற்றை மறுக்காது ஏற்றுக்கொண்டு அவற்றைப் பாராட்டும் உள்ளம் உடையவளாதல்” என்கிறார்.

கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடான கொடுப்பவை கோடல் இடம் பெற்றுள்ளதை

“பல்லினத் தாய மகன்சூடி வந்ததோர்
முல்லை யொருகாழுங் கண்ணியு மெல்லியால்
கூந்தலும் பெய்து முடித்தேன்”            (முல்.க.15:4-6)

என்னும் பாடலடிகளின் மூலம் அறியமுடிகின்றன. ஒருநாள் ஆயர் மகனொருவனைச் சந்தித்தேன்; அவன் தான் சூடிவந்த முல்லை மலர்களையும், அவற்றால் தொடுக்கப் பெற்ற மாலையொன்றையும் எனக்குத் தந்தான். அவற்றை நான் என் கூந்தலுள் செருகி முடிந்துக் கொண்டேன் எனத் தோழியிடம் தலைவி கூறுவதன் மூலம் அவளுக்குக் கொடுப்பவை கோடல் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுவதை அறியமுடிகின்றது, அக்கருத்திற்கேற்ப,

“கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப்
பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத்
தகைவனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து
ஒலிபல் கூந்தல் அணிபெறப் புனைஇக்”        (நற்.313 :1-4)

என்னும் நற்றிணைப் பாடலில் தலைவன் வேங்கை மரத்தின் பூக்களைத் தலைவிக்குச் சூட்டினான். தலைவி அவற்றை ஏற்றமையால் கொடுப்பவை கோடல் புலனாகின்றது.

முடிவுரை
மெய்ப்பாடு உள்ளத்துணர்ச்சிகளை வெளிப்படுத்தி, மனித வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வாழ்வில் இயக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தது. தொல்காப்பியர் கூறிய அகத்திணை மெய்ப்பாடுகளைக் களவுக்கால மெய்ப்பாடுகள் என்றும், கற்புக்கால மெய்ப்பாடுகள் என்றும் பகுக்கப்படுகின்றன. இக்களவுக்கால மெய்ப்பாடுகளுள் புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகளான பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்னும் நான்கு மெய்ப்பாடுகளும் கலித்தொகையில் இடம் பெற்றுள்ளன என்பது புலனாகின்றது

பார்வை நூல்கள்
1. சு.துரைசாமிபிள்ளை உரை (1966), நற்றிணை, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
2. எஸ்.வையாபுரிப்பிள்ளை (1967), சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், சென்னை.
3. க.வெள்ளைவாரணார் உரை (1986)  மெய்ப்பாட்டியல் உரைவளம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
4. திருக்குறள் பரிமேலழகர் உரை (2002), சாரதா பதிப்பகம், சென்னை.
5. தமிழண்ணல் (2006) தொல்காப்பியம் பொருளதிகாரம் தொகுதி-2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
6. ச.வே.சுப்பிரமணியன் (2009) தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளக் கோவை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
7. இளம்பூரணர் உரை (2010) தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை.
8. இரா.மணியன் உரை (2010) கலித்தொகைக் காட்சிகள், கவின்மதி பதிப்பகம், சென்னை.
9. கு.சுந்தரமூர்த்தி (2012) தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

semmozhitamil84@gmail.com

* கட்டுரையாளர்: – முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 –