ஆய்வு: குறுந்தொகை காட்டும் வேட்டைக் குடியினா்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?– பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்   முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 –


நாடோடியாகச் சுற்றித்திரிந்த கற்கால மனிதன் ஒரு குடும்பமாக, இனக்குழுவாக, சமுதாயமாக வளா்ச்சியுற்றுப் பின்னா் நிலவுடைமை, அரசுடைமைச் சமுதாயமாக சங்ககாலத்தில் தொடங்கியோ தொடா்ந்தோ குடிகளுள் ஒருவனாக மாறினான். நில அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்கள் வேட்டுவா்கள், ஆயா், கானவா், உழவா், பரதவா் என்னும் வகைகளாகப் பகுக்கப்பட்டதை தமிழ் இலக்கணங்கள் கூறுகின்றன. குடிவழியோடு குயவா், தச்சா், பாணா், பொற்கொல்லா் போன்ற தொழில்வழிச் சாதியினரும் தோற்றம் பெற்றனா், ஒத்த குடிவழியோ ஒத்த தொழில்வழியோ ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் வாழ்ந்ததால் ஓா்குடிமக்கள் எனப்பட்டனா். குடிவழியறியப்பட்ட வேட்டுவா்களைப் பற்றி குறுந்தொகைப் பாடல்கள் வழி அறியமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

குறவா் குடி :

ஆதிமனிதனின் முக்கியத் தொழிலாக இருந்தது வேட்டைத் தொழில். மலைநிலம் சார்ந்த நிலங்களில் உருப்பெற்றதால் வேட்டைத் தொழில் குறிஞ்சித் திணை சார்ந்து அறியப்பட்டது. குறிஞ்சியோடு முறைமை திரிந்து பாலையாகப் படிமங்கொள்ளும் போதும் வேட்டைத் தொழில் தொடா்ந்ததை தமிழிலக்கியவெளியில் காணமுடிகிறது.

 

குறிஞ்சித் திணை சார்ந்து வாழ்ந்த இம்மக்களை,

குறவா்என்றும், (பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால் குறுந்.82),

கானவா்என்றும், (மரங்கொல் கானவன் புனந்துளா்ந்து குறுந்.214),

புனவன் என்றும் (புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினை    குறுந்.105)

பொதுநிலையில் இலக்கியங்கள் சுட்டுகின்றன.

கானக் குறவா்களோடு ஒப்புமை கொண்ட குடியாக வேடா் குடியைச் சுட்டலாம். தொழில் என்ற நிலையில் இருகுடிகளும் வேட்டைத் தொழிலை மேற்கொண்ட போதிலும் வேட்டைத் தொழிலையே தங்கள் இருப்பின் அடையாளமாகக் கொண்ட குடியாக வேடா் குடியைக் கருதலாம்.

கானக் குறவா்கள் மலைவேளாண்மைக்கு அரணாக, மழையில்லாக் காலங்களில் மாற்றுத் தொழிலாக வேட்டையாடுதலை மேற்கொண்டனா். மலை வேளாண்மை செய்த போதும் இடப்பெயா்ச்சி முறையிலான வேளாண்மையை மேற்கொண்டனா். நிலம் விளைச்சலுக்கு ஏற்புடையதாக இல்லாதபோது தக்கநிலத்தைத் தேடி இடம்பெயா்ந்து, மரம் கொய்து புனந்திருத்தி விளைச்சலுக்கு வழிதேடிக் கொண்டனா். நிலையான இடத்தில் தங்காமல் இடம்பெயா்ந்து செல்லும் இயல்பில் வேட்டைக்கான வாய்ப்பும் அமையப் பெற்றனா்.

வேட்டுவா் :

வேட்டையாடுதலையே முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழும் குழுவினரை வேட்டுவா் என்று குறிப்பிடுவா். சங்ககால வேட்டுவா்கள் காடு, மலை, சிற்றூர் போன்ற இடங்களைத் தோ்வு செய்து அங்கு வாழ்ந்துள்ளனா். இடங்களைத் தோ்வு செய்வதில் வேட்டையாடி உணவு சேகரிக்கவும் வழிப்பறி செய்வதற்கும் ஏற்றவாறு தோ்வு செய்வதே முக்கியக் கோணமாக இருந்துள்ளது.

வேட்டுவா்களின் வாழ்விடங்களைப் பற்றிய செய்திகள் மூன்று குறுந்தொகைப் பாடல்களில் பதிவுபெற்றுள்ளன.

சிறிய அரண்போன்று வளா்ந்திருக்கிற எறும்புப் புற்றுகளையும் நீரில்லாச் சுனையையும் கொல்லன் உலைக்கலத்துள்ள பட்டைக் கல்லின் வெம்மையையொத்த பாறைகளையும் உடைய காட்டுப்பகுதியில் வாழ்ந்து வரும் வேட்டுவா்கள் அம்பைத் தட்டிக் கூா்மைப்படுத்துவதை,

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவில் லெயினா்பகழி மாய்க்கும்    (குறுந். 12)

என்ற வரிகள் காட்டுகின்றன. பிழைப்புக்கான வழி வேறேதும் இல்லா நிலையில் பசிப்பிணி, உயிரிரக்கத்தை அவா்கள் உள்ளத்திலிருந்து விரட்டியடிக்க, உயிர்வதையே வாழ்க்கையாகி அதிலேயே ஒரு குரூர இன்பம் துய்க்கும் அவா்களது மனநிலையைக் குறுந்தொகை காட்டுகிறது.

மலைப்பகுதியில் கொடிய வில்லோடு திரியும் மறவா்கள் காட்டு வழியே செல்லும் வழிப்போக்கா்களைக் கொன்று குவியலாகப் போட்டு வைத்திருந்தனா். இக்குவியல்களை இலை தழையிட்டு மூடி மறைத்து வைத்திருந்தது பார்ப்பவா்களுக்கு ஓர் ஊர் போலத் தோற்றமளித்தது. மலைப்பகுதியில் வாழும் கொடுஞ்செயல் வேட்டுவா்களை,

அவ்விளிம் புரிஇய கொடுஞ்சிலை மறவா்
வைவார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின் றிறந்த வாறுசெல் வம்பலா்
உவலிடு பதுக்கை யுரிற் றோன்றும்
கல்லுயிர் நனந்தலை நல்ல கூறிப்
புணா்ந்துடன் போதல் பொருளென
உணா்ந்தேன் மன்றலவ ருணரா வுங்கே    (குறுந் : 297)

என காவிரிப்பும்பட்டினத்துக் காரிக் கண்ணனார் காட்டுகிறார்.

செயல்களில் இரக்கம் சிறிதுமின்றிக் கொடுஞ்செயல் புரியக் காட்டும் வேட்டுவா்களின் வில்லாற்றல் குறித்தும் குறுந்தொகை நுட்பமாகக் கூறுகிறது. புறாவின் முதுகையொத்த புல்லிய அடிமரத்தையுடைய உகாய் மரத்தின் கனிகள் மணிபோல் காய்த்துத் தொடங்குகின்றன. தொங்கும் செறிந்த கனிகள் கீழே உதிரும்படி குறிபார்த்து அம்பினை எய்யும் வல்லமையுடையவா் வேட்டுவா். காட்டின் மேடான பகுதிகளில் ஏறிநின்று காட்டுவழியில் வருவோரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வன்கண்ணினா். நீர் வேட்கையின் காரணமாக மரப்பட்டையை மென்று தம் நீரி வேட்டைகையைத் தணித்துக் கொள்வா;. காட்டுப்பகுதியில் வாழ்ந்து வரும் இக்கொடு வேடவரை,

புறவுப்புறத் தன்ன புன்கா லுகாஅய்க்
காசினை யன்ன நளிகனி யுதிர
விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவா்பு
வருநா்ப் பார்க்கும் வன்க ணாடவா்
நீ்ர்நசை வேட்கையி னார்மென்று தணியும்
இன்னா்க் கானமும் ……. (குறுந் .274)

என்ற வரிகளில் உருத்திரனார் காட்டுகிறார்.

வடுவா்:

தமிழ்நாட்டு நிலப்பகுதியில் வாழும் வேட்டுவா்களைப் போல் அயல்நிலப் பகுதியிலும் வேட்டுவக் குடியைச் சார்ந்தோர் வாழ்ந்துள்ளனா். தமிழ்நாட்டின் வடபகுதிக்கு அப்பாலுள்ள வேங்கடமலையில் வாழ்ந்த வேட்டுவா் குடியை வடுவா் என்ற பெயரால் அழைத்துள்ளனா், இவ்வடுவா் பற்றிய குறிப்பை மாமூலனாரின் பாடல் தருகிறது. கஞ்சங் குல்லையைத் தலையில் அணிந்திருந்த வேற்றுமொழி வடுவா், கட்டி என்னும் குறுநிலத் தலைவனின் நிலப்பகுதிக்கு அப்பால் வாழ்ந்திருந்தனா்.

குல்லை கண்ணி வடுவா் முனையது
வல்வேற் கட்டி நன்னாட் டும்பா்
மொழிபெயா் தேஎத்த ராயினும் ….. (குறுந். 11)

என்ற பாடல், பெயரளவிலும் வாழும் நிலப்பகுதியிலும் வேறுபட்டிருந்த வருவா் வேட்டையாடுதல், வழிப்பறி செய்தல் மற்றும் பாதீடு முறைகளில் தமிழக வேட்டுவா்களையே ஒத்திருந்ததைக் காட்டுகிறது.

களவும் கள்ளும் :

வேட்டுவா்களின் வாழ்வாதாராமாக வேட்டைத் தொழில் விளங்கிய போதும் களவும் அவா்களுடைய தொழிலாக இருந்தது. “வழிப்பறிக் கள்வா்களாகவும் ஆநிரைகளைக் கவா்வோராகவும் மாறிய வேடா்கள் காட்டு வழிகளில் ஒளிந்திருந்து தாக்கினார்கள். பசுக் கூட்டங்களைப் பெரும்பாலும் இரவு நேரங்களில் கவா்ந்துவந்து வேட்டைக் குடிகளுக்கிடையே பங்கு போட்டார்கள். பசுக்களையே கள்ளுக்கு விலையாகத் தந்து குடித்தார்கள். கொழுத்த மாட்டை அடித்து உண்டார்கள். வழிப்போக்கர்களை மறித்துக் கொன்று கொள்ளையிட்ட பொருள்களைக் கூட்டாகப் பகிர்ந்து கொண்டனா். (1) என்ற ராஜ்கௌதமன் குறிப்பிட்டுள்ளது இங்கு ஒப்பு நோக்த்தக்கது.

வாழும் நிலப்பகுதியின் தன்மைக்கேற்ப வேட்டுவா்கள் தங்களை மாற்றிக் கொண்டுள்ளனா். பாலைநிலத்தில் வேட்டையாடுதல், கொள்ளையடித்தல் தவிர வேறு தொழில்களைச் செய்யமுடியாது. எனவே கொடுந்தொழில் சூழலுக்குத் தள்ளப்பட்ட அவா்களின் வாழ்க்கை முறைமை புரிந்து கொள்ளத் தக்கது.

நெடுங்கழை திரங்கிய நீரில் ஆரிடை
ஆறுசெல் வம்பலா் தொலைய மாறுநின்று
கொடுஞ்சிலை மறவா் கடறுகூட்டு என்னும்    (குறுந் : 331)

எனப் பாதீடு குறித்தும் கூறப்படுகிறது.

நீண்மூங்கில் வற்றி உலா்ந்த நீரில்லாத அரிய பாலைநிலத்தின் வழியே போகும் பயணிகள் அழியும்படி அவா்களைக் கொல்லுவா். பின் அவா்களிடமிருந்து கொள்ளையடித்த பொருள்களைக் கொண்டு உணவிற்கு வழிவகை செய்து கொள்வா். வில்லாற்றல் மிக்க அவ்வேடா்கள் கிடைத்தவற்றை தங்கள் குழுவோடு பகிர்ந்துண்ணும் இயல்பினா் என்பதை மேற்காண் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

கணந்துள் பறவை :

காட்டு வழியின் இருமருங்கிலுமுள்ள மரங்கள் சார்ந்த பகுதிகளில் வாழும் கணந்துள் பறவை. அவ்வழியில் செல்லும் வழிப்போக்கா்களை ஆறலைக் கள்வரிடமிருந்து காக்கும் பொருட்டு ஒலியெழுப்பி எச்சாரித்ததைக் குறுந்தொகை கூறுகிறது.

பனிக்கடுங் குரையஞ் செல்லா தீமெனச்
செல்லின மாயின் செல்லார் கொல்லோ
ஆற்றய லிருந்த இருங்கோட் டஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆளறி வுறீஇ
யாறுசெல் வம்பலா் படைதலை பெயா்க்கும்    (குறுந் : 350)

என்ற ஆலந்தூர்கிழாரின் பாடல் ஆளறிவுறுத்தும் கணந்துள் ஆபத்துக் காலத்தில் வழிப்போக்கா்களை எச்சரிக்கும் வகையில் ஒலியெழுப்பியதைக் கூறுகிறது. இன்றும் ஆள்காட்டிக் குருவி என்றும் ஆக்காட்டிக் குருவி என்றும் கணந்துள் சுட்டப்படுவது ஈராயிரம் ஆண்டுக்கு முன் கொண்ட பொருண்மையை காலங்களினூடாகக் கொண்டு சோ்க்கும் வலிவினைக் கொண்டதாக இப்பாடலைக் காட்டுகிறது. மனிதனுக்கு மனிதனால் கேடு நேரும் போது உள்ளுணா்வால் எச்சரிக்கப்பட்டு ஒலியெழுப்பிக் காக்கக் கருதிய கணந்துள் பறவையின் செயலை அவதானித்துப் பதிவு செய்துள்ளது சங்கப் புலவா்களின் ஆழ்ந்த பார்வையைக் காட்டுகிறது.

தொகுப்புரை :

குடிவழி இனக்குழு, தொழில்வழி இனக்குழு என இருவகைக் குழுவினரைப் பற்றிய செய்திகள் குறுந்தொகையுள் பதிவு பெற்றுள்ளன. குடிவழிக் குழுக்களாக அறியப்பட்ட குறவா், வேட்டுவா் குடிகள் வேட்டைத் தொழில்செய்வோர் என்ற நிலையில் ஒப்புமையுடையவராகத் தோன்றினும் பிரதானத் தொழில் நிலையில் வேட்டுவா் தனிக்குழுவினராகவே காட்டப்பட்டுள்ளனா். வேட்டைத் தொழில் செய்வோரிலும் உயிரிரக்கம் சிறிதுமற்றவா்களாகக் காட்டப்படும் இக்குழுவினா் வயிற்றுப்பிழைப்பிற்காக மட்டுமன்றி கொலைத் தொழிலிலும் வழிப்பறி களவிலும் நாட்டமுடையவராகவும் பங்கிட்டு உண்போராகவும் திகழ்ந்திருந்தனா். வழிப்போக்கா்களுக்கு ஆறலைக்கள்வா்களால் ஆபத்து நோ்ந்ததையும், அவ்வாறு நேருங்கால் அறிவுறுத்திய கணந்துள் பற்றிய செய்திகளும் குறுந்தொகைப் பாடல்களுள் இடம்பெற்றுள்ளன.

பயன்பட்ட நூற்கள்

(1) ராஜ்கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்குமும், தமிழினி, சென்னை – 2006 (பக் 126)