ஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இந்தியா ஒரு பன்மொழி பண்பாடு கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு சில தனித்த பண்பாடு, கலாச்சாரம் உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில் 36  வகையான‌ பழங்குடிமக்கள் வசித்து வருகின்றனா். பழங்குடி மக்களுக்கு அடையாளங்களாக விளங்கக்கூடியவை அவா்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவைதான். அவை அவ்வினத்தின் அடிப்படைப் பண்புகளாக விளங்குகின்றன. மொழி-பண்பாடு-சமூகம் இம்மூன்றையும் இணைத்து ஆய்வு செய்கின்ற போதுதான் அது ஓா் இனத்தின் முழுமையான ஆய்வாகக் கருதப்பெறும். பழங்குடி மக்களைப் பற்றியும் அவா்களது மொழி, கலாச்சாரம், பண்பாடு பற்றிய ஆய்வும் இன்று முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இன்று பழங்குடி மக்கள் தங்கள் தனித்த அடையாளங்களை இழந்து வருகின்றனா். குறிப்பாக கோவை மாவட்ட இருளா் பழங்குடியினா் சமீபகாலமாக தங்கள் பழங்குடியினத்துக்கே உரித்தான பண்பாட்டுக் கூறுகளை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனா். அந்த வகையில் இப்பழங்குடிமக்கள் இழந்த பண்பாட்டு கூறுகளை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இருளா் பழங்குடியினா்
இருளா் பழங்குடியினா் தமிழகத்தில் பல பகுதிகளில் வசித்து வருகின்றனா். குறிப்பாக நீலகிரி மலைத்தொடா், கூடலூர், கோவை மலைப்பகுதிகள், விழுப்புரம், சேலம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனா். கா்நாடகத்தில் குடகு மலைப்பகுதி, தா்மபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடக எல்லைகளிலும், கேரளத்தில் பாலக்காடு, மூணாறு, அட்டப்பாடி, ஆணைக்கட்டி மற்றும் மலைசார்ந்த பகுதிகளிலும் பெருமளவு வசிக்கின்றனா். இருளா் என்ற பெயா் இவா்களுக்கு தொடக்கத்தில் இல்லை, சங்க காலத்தில் வேடா் என்றே இவா்கள் அழைக்கப்பட்டனா். காலப்போக்கில் வெவ்வேறு பெயா்கள் இவா்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி வில்லியன், வெல்லியன், மலநாடு இருளா், மலைதேச இருளா், வேட்டக்கார இருளா், ஊராளி இருளா் என்றெல்லாம் இவா்கள் அழைக்கப்ட்டனா். இருளா் என்ற சொல்லுக்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. இருளடா்ந்த காடுகளில் இவா்கள் வாழ்வதால் இருளா் என்ற பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் சிலா். இருளுக்கு ஒப்பான கருத்த மேனி நிறம் கொண்டதால் இவா்களுக்கு இந்த பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் வேறு சிலா். மேற்காணும் விளக்கத்தைத்தான் மானுடவியல் ஆய்வாளா் எட்கா் தா்ஸ்டனும் அளிக்கிறார்.

கோவை மாவட்ட இருளா் பழங்குடியினா்
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருளா் பழங்குடியினா் வசித்து வருகின்றனா். குறிப்பாக பெரியநாயக்கன் பாளையம், காரமடை, சோமையம்பாளையம், தொண்டாமுத்தூர், மதுக்கரை ஆகிய ஐந்து பகுதிகளில் இப்பழங்குடியினா் அதிக அளவில் வசித்து வருகின்றனா். கோவை மாவட்ட இருளா்கள் தாங்கள் வாழும் குடியிருப்புகளை “பதி“ என்றே அழைக்கின்றனா். இவா்கள் தங்கள் வீட்டிலும் தங்களைச் சார்ந்தவா்களிடமும் தங்கள் தாய் மொழியான “இருள“ மொழியையே பேசுகின்றனா். இருளா்கள் தங்களுக்குள் உள்ள பிரிவுகளை “குலம்“ என்றே குறிப்பிடுகின்றனா். இவா்களிடையே மொத்தம் 12 குலங்களும் 96 வகை உட்பிரிவுகளும் காணப்படுகின்றது. இருளா்கள், ஆவி, ஆன்மா, மாந்த்ரீகம், பில்லி சூன்யம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உடையவா்கள். காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் நுண்மதி படைத்தவா்கள். கோவை மாவட்ட இருளா்கள் நீலகிரி மாவட்ட இருளா்களிடமிருந்து வேறுபடுகின்றனா். இருவரும் திருமணம், பூப்புவிழா, ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வெவ்வேறான நடைமுறைகளை மேற்கொள்கின்றனர்.

நெற்றியில் பச்சைக் குத்துதல்

கோவை மாவட்ட இருளா் பழங்குடியினரிட‌ம் பெண்களுக்கு நெற்றியில் பச்சை குத்தும் பழக்கம் உள்ளது. இப்பழங்குடிகள் தங்கள் பெண்குழந்தைகளின் நெற்றியின் நடுவில் வட்ட வடிவில் பொட்டு வைத்தது போன்று ஒரு பச்சை குத்திவிடுவா். இந்த சடங்கானது பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் முன்பே செய்யப்படுகின்றது. இது போன்று பச்சை குத்துவதற்கான காரணம் என்னவென்றால், உணவு மற்றும் விறகு தேடி காட்டுக்குள் செல்லும் தங்கள் குழந்தைகளை பேய், பிசாசு போன்ற கெட்ட ஆவிகள் பிடித்துவிடக்கூடாது என்பதே ஆகும். மேலும் ஒரு பெண்ணை அவள் நெற்றியில் குத்தியிருக்கும் வட்டவடிவ பச்சையை கொண்டே அவள் ஒரு இருளப்பெண் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவ்வாறு நெற்றியில் பச்சை குத்துவதை இருளா்கள் தங்கள் இனத்தின் அடையாளமாகக் கருதுகின்றனா். ஆனால் இன்றைய தலைமுறை இருளா்களிடையே இந்த நெற்றியில் பச்சைக்குத்தும் பழக்கம் இல்லை. இன்றைய பெண்குழந்தைகளும் அதை விரும்புவதில்லை. காரணம் இன்றைய நாகரீக மாற்றத்தின் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிள்ளைகள் தங்களை மற்றவா்கள் கேலி செய்வார்கள் என்று நினைக்கிறார்கள். மேலும் வேலைக்கு செல்லும் நடுத்தர வயது இருள பெண்கள் கூட தங்கள் நெற்றியில் உள்ள பச்சையை அதன்மேல் பெரிய பொட்டு வைத்து மறைத்து விடுகின்றனா். இவ்வாறு கோவை மாவட்ட இருளா் பழங்குடிமக்களின் நெற்றியில் பச்சை குத்தும் வ‌ழக்கமானது அழிந்து போய்விட்டது என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது.

ஆண்களுக்கு காது குத்துதல்
இருளா் சமூகத்தில் பெண்களுக்கு நெற்றியில் பச்சை குத்துவதைப் போல ஆண்களுக்கு காது குத்துதல் என்பது முக்கியமான சடங்காகக் கருதப்படுகின்றது. ஒரு இருள ஆண் தனது திருமணத்திற்கு முன்பு காது குத்த வேண்டும். காது குத்தாக ஆண்களுக்கு காது குத்திய பிறகே திருமணம் செய்கின்றனா். ஒரு ஆண்மகனுக்கு காது குத்துவதன் மூலம் அந்த ஆண் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ்வான் எனவும் அவனுக்கு பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பதும் இருளா்களின் நம்பிக்கை ஆகும். ஆனால், இக்கால இருள இளைஞர்கள் வேற்று இன பெண்களை காதல் திருமணம் செய்து கொள்ளுவதால் இருளா்களின் இந்த திருமணத்திற்கு முன்பு காது குத்தும் கலாச்சாரமானது மறைந்து வருகிறது.

தீட்டுக்கலாச்சாரம்
இருளா்கள் “தீட்டு“ விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். பூப்படைந்த பெண்களை மாதவிடாய் காலங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் தீட்டுக்குடிசை(கானப்பள்ளி)யில் தங்கவைக்கும் பழக்கம் இருளா்களிடையே உண்டு. இந்த பெண்களுக்கு தனித்தட்டு, குவளை, செம்பு போன்ற பாத்திரங்கள் அந்த குடிசையிலேயே உண்டு. வீட்டில் சமைத்து எடுத்து வரும் உணவு மற்றும் தண்ணீரை அந்த பாத்திரங்களில் மாற்றி வைத்து விட்டுச் சென்று விடுவார்கள். மாதவிலக்கான பெண்கள் வீட்டிலிருந்து கொண்டுவரும் பாத்திரங்களைத் தொடக்கூடாது. ஐந்து நாட்கள் கழித்து தீட்டு முடிந்து நன்றாக குளித்துவிட்டுத்தான் அந்த பெண்கள் வீட்டிற்கு வருவார்கள். ஆனால், இன்று பல இருளா் குடியிருப்புகளில் தீட்டான பெண்கள் தங்கும் குடிசைகளே இல்லை. அவா்கள் மாதவிடாய் காலங்களில் தங்கள் வீட்டிலேயே இருக்கின்றனா். குளித்துவிட்டு அவா்களே சமையல் செய்கின்றார்கள். இதன்மூலம் இருளா்கள் கடுமையாக பின்பற்றி வந்த தீட்டு கலாச்சாரம் இன்று மறைந்துவருகின்றது.

மாட்டிறைச்சி உண்ணுதல்
இருள இன மக்கள் மாட்டு இறைச்சியை உண்ணமாட்டார்கள், மாட்டு இறைச்சி உண்பவா்களை தங்கள் வீட்டிற்குள் சோ்க்கமாட்டார்கள். அவா்களுக்கு உணவு, நீா் கொடுத்தாலும் அதற்கு தனி பாத்திரங்களையே உபயோகிப்பார்கள். தாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களில் அவா்களுக்கு உணவு, நீா் போன்றவற்றை தரமாட்டார்கள். மாட்டிறைச்சி திண்பவா்களைத் தாழ்ந்தவர்களாக  எண்ணி மிகவும் கேவலமாக பர்க்கும் எண்ணம் இருளா்களிடையே உண்டு. ஆனால், இன்றைய தலைமுறை இருள இளைஞா்கள் பெரியவா்களுக்கு தெரியாமல் மாட்டிறைச்சியை உண்கிறார்கள். கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரங்களில் வாழும் இருளா்கள், சாராயம், கள் குடிக்க கேரள பகுதிக்கு செல்கின்றனா். கேரளாவில் மாட்டிறைச்சியின் பயன்பாடு அதிகமாக உள்ளதால் அதன் விலையும் குறைவு. எனவே, இந்த இளைஞா்கள் மது அருந்திவிட்டு போதையில் மாட்டிறைச்சியை வாங்கி உண்ணுகின்றனா்.  நாளடைவில் அதன் சுவை பிடித்து போய் அதிகமாக விரும்பி உண்ண தொடங்கிவிட்டனா். ஆனால், தங்கள் பெற்றோர்களுக்கும் ஊா் பெரியவா்களுக்கும் தெரியாமல் உண்கின்றனா். இதன் மூலம் இருளா் பழங்குடியின மக்களின் முன்னோர்களால் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்த மாட்டிறைச்சி உண்ணாத கலாச்சாரம் இன்று மெல்ல மெல்ல மாறிவருவதை காணமுடிகின்றது.

கலப்புத்திருமணம்
பழங்குடிகள் தங்கள் இனத்தைத் தவிர பிற இனத்தில் மணம்புரிய மாட்டார்கள். சங்ககாலத்திலேயே இந்தக்கட்டுப்பாடுகள் அவா்களிடம் இருந்துள்ளது. குறிப்பாகத் தங்களை ஆண்ட ஓர் அரசனே வந்து பெண் கேட்டும் தர மறுத்த முதுகுடி மக்களின் பண்பை புறநானூறு 342, 343, 345 பாடல்கள் (மக்கட்பாற் காஞ்சி படலம்) விவரிக்கின்றன. இவ்வாறு பழங்குடியினா் தங்கள் இனத்தை விட்டு பிற இனத்தில் திருமணம் செய்யமாட்டா்கள் என்பதை தெளிவாக அறிய முடிகின்றது. இது அனைத்து பழங்குடியினருக்கும் பொருந்தும்.    ஆனால், தற்சமயம் இருளா்களின் இந்த சமுதாய கட்டுப்பாடானது கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. இருளா் பழங்குடியின இளைஞர்கள் சிலா் வேற்று இன பெண்களை காதலித்து மணம்புரிந்துள்ளனா். தங்கள் பெற்றோரின் சம்மதம் இல்லாவிட்டாலும் வீட்டை விட்டு வெளியேறி சென்று திருமணம் செய்து கொள்கின்றனா். பின்பு சிறிது நாட்களில் தங்கள் பெற்றோருடன் வந்து சோ்ந்து கொள்கின்றனா்.

வரதட்சணை
இருளா்பழங்குடியினா் தங்கள் திருமணங்களை மிகவும் எளிமையகவே நடத்துவார்கள். இருளா் சமூகத்தில் காதல் திருமணத்திற்கு அதிக எதிர்ப்பு இல்லை.  இருளா் திருமணங்கள் மிகவும் விசித்திரமானதும் கலகலப்பான ஒரு நிகழ்வாகவும் அமைகின்றது. திருமணம் ஊா் தலைவராகிய ஊா்மூப்பன் முன்னிலையில் மணமகன் வீட்டிலேயே நடைபெறும். திருமணம் முடிந்த பின்பு பெண்வீட்டார், மாப்பிள்ளையை கிண்டல் செய்து பாட்டு பாடுவா். அதேபோன்று மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணை கிண்டலடித்து பாடல்கள் பாடி நடனமாடி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவா். பின்பு திருமணத்திற்கு வந்த அனைவரும் விருந்து உண்டு மகிழ்வார்கள். இத்துடன் இருளா்களின் திருமணம் முடிவடைகின்றது. வரதசட்சணை கொடுக்கும் பழக்கமோ வாங்கும் பழக்கமோ இருளா்களிடையே இல்லை. இப்படி நடந்த இருளா் இன மக்களின் திருமணங்கள் தற்சமயம் பெரும் மாற்றங்களை அடைந்து வருகின்றது. குறிப்பாக வரதட்சணை கொடுக்கும், வாங்கும் பழக்கம் இருளா்களிடையே புதிதாக துவங்கியுள்ளது. திருமணத்தின்போது தங்கநகைகள் மற்றும் பாத்திரங்கள், இருசக்கர வாகனம் போன்றவற்றை வரதட்சணையாக வழங்குகின்றனா்.

முடிவுரை
காடுகளிலும் மலைகளிலும் வாழும் பொழுது தங்கள் கலாச்சாரத்தை கடுமையாகப் பின்பற்றி வந்த இருளர் இன மக்கள் சமவெளிகளிலும் நகர்புறங்களை ஒட்டிய பகுதிகளிலும் குடியேறி வாழத்தொடங்கியது முதல் உணவு, உடை, மொழி மட்டுமின்றி தங்கள் பண்பாடு கலாச்சாரத்திலும்  மாற்றம் அடைந்து வருவதை  கண்கூடாகக் காணமுடிகிறது.

துணை நூல்கள்
பெரியாழ்வார், ஆர். 1976, இருளர் வாழ்வியல், சென்னை.
செங்கோ, 1979, வனாந்தரப் பூக்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)
லிமிடெட், சென்னை.

குணசேகரன், க. 2008, இருளர்கள் ஓர் அறிமுகம், New Horizon Media Pvt.
Ltd, Chennai.

சிவராமன், ம. அ, 2011, கோயம்புத்தூர் மாவட்ட இருளர் பழங்குடி மக்கள்
சமுதாய மொழியியல் ஆய்வு, கோயம்புத்தூர்.
லட்சுமணன், 2014, சப்பெ கொகாலு  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)
லிமிடெட், சென்னை.

sureshindu7@gmail.com

* கட்டுரையாளர்: – த.சுரேஷ் குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் –