ஆய்வு: சங்காலப் பெண்பாற் புலவர்களின் உயரிய ஆளுமைகள்

முன்னுரை

அவ்வையார்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

 சங்க காலப் பெண்பாற் புலவர்கள்

 அறம், மறம், காதல், இன்பம், இயற்கை, இவற்றோடு இணைந்து வாழ்ந்த சங்காலப் பெண்டிர், கல்வியறிவும் பெற்றிருந்ததால் படைப்பாளிகளாகத் திகழ்ந்து பெண்டிர் வாழ்க்கையைப் பதிவு செய்தனர்.  அகப்பாடல்களின் ஆணிவேர்களாகப் பெண்கள் திகழ்ந்தனர்.  தலைவி, தோழி, விறலி, நற்றாய், செவிலித்தாய் என்று பெண்மையின் மீதே அகப்பாடல்கள் கட்டமைக்கப்பட்டன.

 சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்துள்ள எழுத்தாளர் ந. முருகேச பாண்டியன், அவர்களின் எண்ணிக்கை குறித்த முரண்களை அவரது நூலில் பதிவு செய்துள்ளார்.  “இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்கப்பாடல்களைப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை 473 ஆகும்.  சில பாடல்களைப் பாடிய கவிஞர்களின் பெயரினை அறிய இயலவில்லை.  இத்தகைய கவிஞர்களில், பெண்களின் எண்ணிக்கை 41.  பெண் கவிஞர்களின் எண்ணிக்கை குறித்துத் தமிழறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளன.  பெண் கவிஞர்களின் எண்ணிக்கையினை உ.வே.சா. 38 எனவும், எஸ். வையாபுரிப்பிள்ளை 30 எனவும், ஔவை துரைசாமி பிள்ளை 34 எனவும், புலவர் கா. கோவிந்தன் 27 எனவும், ஔவை நடராசன் 41 எனவும், ந. சஞ்சீவி, 25 எனவும் முனைவர் தாயம்மாள் அறவாணன் 45 எனவும் குறிப்பிடுகின்றனர்“1 என்கிறார்.

 பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகளிருந்தாலும் முப்பதிற்கும் மேற்பட்ட புலவர்கள், தனித்துவம்மிக்க பெண்மொழியில் கவிதைகள் படைத்தனர் என்பது புலனாகிறது.

தனித்துவம் மிக்க பெண்மொழி

 “முதலில் காதலைச் சொல்பவளாகப் பெண் இருக்கக்கூடாது.  மனத்தின் உணர்வுகளைப் பெண்கள் வெளிப்படையாக ஆண்களிடம் காட்டக் கூடாது.  தம் உடலையும் மனத்தையும் உயிரையும் ஆணுக்காகவே அர்ப்பணிக்க வேண்டும். தனித்துவம் மிக்க உரிமைக்குரலை எழுப்பக்கூடாது” போன்ற பெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பிதங்களை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்பாற் புலவர்கள் தம் கவிதைகள் மூலம் உடைத்தெறிந்தனர்.

 தமக்கென சுதந்திரமான பரப்பினை, வெளியினை உருவாக்கி, தனித்துவமிக்க பெண் மொழியால் பிரிவுத்துயரினை, இளமை பயனற்று அழிவதை, மசக்கையின் விளைவினை, விரகதாபத்தை, உணவு சமைக்கும்போது ஏற்பட்ட தாளிப்பு மணத்தை, கைம்மைத் துன்பத்தை, மணல்வீடு கட்டிச் சிறுசோறு சமைத்து விளையாடியதைப் பெண்மொழியால் பெண்பாற்புலவர்கள் அழகாகக் கவிதையாக வடித்தளித்தனர்.

இற்செறித்தலுக்கு எதிரான கலகக்குரல்

 திருமண வயதிலிருந்த தம் மகளின் களவொழுக்கத்தை அறிந்த தாய், அவளை இற்செறிக்கிறாள். மலைப் பகுதியில் சூரியனின் வெம்மை தாங்கமுடியாமல் கருகிக் கிடந்த வள்ளிக் கொடியைப் போல அவளது உடலழகு அழிந்ததுத்  தோழியர் கூட்டமும் வருந்தியது.

 “பல வேலைப்பாடுகள் மிக்க கப்பல்களைப் பெரிய விளங்கிக் காணும் பெரிய துறையில் வைக்கப்பட்டிருக்கும் செருக்கைத்தரும் மதுச்சாடியைப் போன்ற என் இளைய அழகு வீட்டு வாயிலிலேயே அழிந்தொழியும்.  யாம் இவ்வீட்டிற்குள்ளிருந்தே முதுமையடைந்து மடிவோம்” என்று நற்றிணை (295) நெய்தல் திணைப்பாடலில் ஔவையாரின் அழகுத் தலைவி இற்செறிப்புக்கு எதிரான கலகக் குரல் எழுப்புகிறார்.

 “முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
 புறம் அழிந்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்
 ஆயமும் அழுங்கின்று, யாயும் அஃது அறிந்தனன்,
 பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை,
 கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம்
 இளநலம் இற்கடை ஒழியச்
 சேறும், வாழியோ! முதிர்கம் யாமே“2

 “மயக்கம் தரும் மதுச்சாடியைத் தூக்கி அருந்தாவிட்டால் நாட்பட்டு மதுவீணாகி விடும்.  இற்செறித்தால் இளமை கெட்டு முதுமையடைந்து வீட்டிற்குள்ளே இறந்துபோக நேரிடும்” என்று இற்செறிப்புக்கு எதிரான கலகக் குரலை ஔவையார் எழுப்புகிறார்.

ஆற்றாமை வெளிப்பாடு

 காதல் என்ற உணர்வு, ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவானது. காமநோய் இரு பாலாரையும் வாட்டக் கூடியது.  தம் மனத்தில் தோன்றிய காமநோய் முளைவிட்டு மரமாக வளர்ந்து மலர்களைச்  சொரிந்தது, அப்போதும் தலைவர் வரவில்லை என்று அகநானூறு (273) பாலைத் திணைப்பாடலில் ஔவையார் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார்.  “விசும்பு விசைத்து எழுந்த” எனும் பாடலில் 

 “தலைவரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு
 முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
 அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள்நீடி,
 ஊரோர் எடுத்த அம்பல்அம் சினை,
 ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பி,
 புலவர் புகழ்ந்த நார்இல் பெருமரம்
 நிலவரை எல்லாம் நிழற்றி
 அல் அரும்பு ஊழ்ப்பவும், வாரா தோரே”3

என்று காமத்தை மரமாக உருவகித்துத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்திய ஔவையார், “இடைபிறர் அறிதல்…” எனத் தொடங்கும் அகநானூற்றுப் (303) பாடலிலும் தன் ஆற்றாமையைப் பேய்கனவு உவமைமூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.  “நம்மை மற்றவர் அறிந்து கொள்வர் என்பதற்கு அஞ்சிப் பேயைக் கனவில் கண்டதைப் பிறரிடம் கூறாததைப் போன்று, நாம் நமது ஆற்றாமையை மறைத்து வைத்தோம்.  ஆனால் பல சிறப்புகளை உடைய நாமம் நமக்கே தெரியாமல் நம்மையும் மற்றவர்க்குக் காட்டியது” என்ற பொருளில் ஔவையார்.

 “இடைபிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து,
 பேஎய் கண்ட கனவில், பல்மாண்
 நுண்ணிதின் இயைந்த காலம் வென்வேல்”4

என்று பாடுகிறார்.  கழார்க்கீரன் எயிற்றியாரின் “பெய்து புறந்தந்த பொங்கல் வெண்மழை” எனத் தொடங்கும் அகநானூற்றின் (217) பாலைத்திணைப் பாடல், பொருள்வயிற்பிரிந்த தலைவனது பிரிவின் ஆற்றாமையால் துடித்த தலைவியை நமக்குக் காட்டுகிறது.  “பறவைகளின் கூட்டம் கல்லென்று ஒலிக்க, தம் தலைவரைப் பிரிந்த மகளிர் அழகிழந்து நடுங்கப் பனிப் பருவம் வந்தது.  இந்தப் பருவமானது பொருள் வயின் பிரிவார்க்கு ஏற்ற ஒன்று” என நினைத்து எத்தகைய சிறந்த பொருளைப் பெறுவதாய் இருந்தாலும் பிரியாதீர் என்ற எமக்குத் துணையாய் உள்ள உமக்குக் கூறுவேன் என்று நீ தலைவருக்குக் கூறவும் அதைக் கேட்டும் அவர் எம்மைவிட்டுப் பிரிந்ததைக் கண்டு, அவரால் நுகரப்பட்டுக் கைவிடப்பட்ட பாழ்மேனியை நாம் கண்டு, அக்காமநோய் மேலும் வருந்துவதால், உள்ளத்தில் வலிமை குன்றி அவரோடு புணர்தலை விரும்பிக் கடும்பனியால் வருந்திப் பற்களைத் தீப்பற்றுமாறு கடித்து நடுக்கம் கொள்வோம் எனும் பொருளில் அப்பாடலை எயிற்றியார் ஆற்றாமையால் இயற்றியுள்ளார்.

அறிவியல் பதிவுகளை அமைத்துக் பாடினர் குமுழிஞாழலார் நப்பசலையார்

இருபதாம் நூற்றாண்டை அறிவியல் நூற்றாண்டென்றே கொண்டாடுமளவுக்குப் புதிய கண்டுபிடிப்புக்களை ஏராளமாகக் கண்டுவருகிறோம்.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்பாற்புலவர் பெருமக்கள் உயிரினத்தையும் பயிரினத்தையும் அறிவியல் நோக்கோடு நுட்பமாகக் கவனித்து அகக்கவிதைகளின் பின்னணியாக அவற்றைக் கொண்டுவந்து மனவுணர்வுகளை மென்மையாகப் பதிவு செய்துள்ளனர்.  
 
“ஒடுங்குஈர் ஓதிநினக்கும் அற்றோ?

 நடுங்கின்று, அளித்து என் நிறைஇல் நெஞ்சம்
 அடும்புகொடி சிதைய வாங்கி, கொடுங்கழிக்
 குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,
 நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
 கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை…”5

நிறை கர்ப்பம் அடைந்த பெண்ஆமை மணல் மேட்டில் மறைந்து நின்று புலால் நாறும் முட்டையை இட்டு மறைத்து வைக்கும், பிளவுடைய வாயைப் பெற்ற ஆண் ஆமை, குஞ்சு வெளிப்படும் வரை அம்முட்டையைப் பாதுகாக்கும் என்ற அரிய விலங்கியல் செய்தியை நப்பசலையார் பதிவு செய்த நுட்பம் வியத்தற்குரியது.

வாழ்க்கை பற்றிய பேருண்மையைப் பதிவுசெய்த காமக்காணிப் பசலையார்

 வாழ்க்கை பற்றிய பேருண்மையை நற்றிணை (243) யின் பாலைத்திணைப் பாடல் வாயிலாகக் காமக்காணிப் பசலையார் அருந்திறத்தோடு வெளிப்படுத்துகிறார்.

 “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்கிறார் குமரகுருபரர்.  “செல்வோம் செல்வோம்“ என்று சென்றுகொண்டே இருக்கும் தன்மைபெற்ற செல்வத்தைத் தேடிக் காதலியரை விட்டுப் போக வேண்டாம் என்ற உண்மையைக் காமக்காணிப் பசலையார் உணர்த்துகிறார்.

 “வாழ்க்கை சூதாட்டக்கருவியைப் போல நிலையற்றது.  சூதாட்டக்கருவி மாறி மாறி விழுவதைப் போல வாழ்க்கை மாறிக்கொண்டேயிருக்கும்.  எனவே தலைவனையே நினைத்து வாழும் காதலியரைப் பிரிய வேண்டாம் என்ற பொருளில்

 “தேம்படு சிலம்பில் தென் அறல் தழீஇய
 துறகல் அயல தூமணன் அடைகரை,
 அலங்கு சினை பொதுளிய நறு வழ மாஅத்துப்
 பொதும்புதோறு அல்கும் பூங்கண் இருங்குயில்,
 கவறு பெயர்த் தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
 கையறத் துறப்போர்க் கழறுவ போல,
 மெய்உற இருந்து மேலா நுவல,
 இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
 பிரிதல் ஆடவர்க்கு இயல்பு எனின்,
 அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே!”6

 “வாழ்வின் பொருள், பொருள் தேடுதல் மட்டுமன்று, பொருள்பட வாழ்ந்து காதலரோடு மகிழ்ந்திருத்தல்” என்று பசலையார் உணர்த்துகிறார்.

கைம்மைக் கொடுமையினைப் பதிவு செய்த தாயங்கண்ணியார்

 சிறுவயதிலேயே மணம்முடித்துக் கணவனை இழந்து, தலைமையிரை நீக்கி, வளையலைக் களைந்து, அல்லி அரிசியுண்ணும் கணவனை இழந்த பெண்டிர் நிலையைப் புறநானூற்றுப் பாடலில் (250) உவமையாகப் பயன்படுத்தித் தாயங்கண்ணியார் யாவரையும் கண்கலங்க வைத்துள்ளார்.

 “குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
 இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
 கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்,
 கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி, 
 அல்லி உணவின் மனைவியொடு, இனியே
 புல்லென்றனையால் வளம்கெழு திருநகர்!
 வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
 முனித்தலைப் புதல்வர் தந்தை
 தனித் தலைப் பெருங்காடு முன்னிய பின்னே”7

கைம்மைத் துயரினை அனுபவித்த பெண்ணினத்தைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாகப் பாட முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

 புறநானூறு இலக்கியத்தில் (246) பூதப் பாண்டியன் தேவியார் பாடிய “பல் சான்றீரே! பல் சான்றீரே!” என்ற பாடலும் இக் கொடுமையை முன் வைக்கிறது.  நெய் கலவா நீர்ச்சோறு, எள் துவையல், புளிசோ்த்த வேளைக் கீரை ஆகியவற்றை உண்டும்.

 கல் மேல் துயின்றும் கைம்மை நோன்பியற்றிய பெண்டிர் பட்ட மன வேதனையைப் பூதப் பாண்டின் தேவியார் உணர்த்தி உள்ளார்.  மாறோக்கத்து நப்பசலையார் புறநானூற்றில் (280) பாடிய “என்னை மார்பில் புண்ணும் வெய்ய…” எனும் பொதுவியல் திணைப் பாடலில் தலைவன் மார்பில்பட்ட புண்ணில் வண்டுகள் மொய்ப்பதால் வீட்டில் வைத்த விளக்கு அணைகிறது என்று கொடுமையை வெளிப்படுத்துகிறார்.  கைம்மைக் கொடுமையைப் பெண்கவிஞர்கள் மன வேதனையோடு வெளிப்படுத்தியுள்ளனர்.

வீரம் செறிந்த வீரப்பெண்டிர்

 வீரம் நிறைந்தவர்களாகச்  சங்காலப் பெண்டிர் இருந்தனர்.  முதல்நாள் போரில் தந்தையை இழந்தாள்.  இரண்டாம் நாள் போரில் கணவனை இழந்தாள்,  இன்றைய நாளில் போர் முழக்கம் கேட்டவர் தன் குடிப்பெருமையைக் காக்க எண்ணித் தன் குடிகாக்கும் ஒரே மகனுக்கு எண்ணெய் தடவி வெள்ளாடை உடுத்தி வேலைக் கையில் தந்து போர் முனைக்குச் சங்ககாலப் பெண் அனுப்பினாள் என்ற செய்தியை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் (279) பாடல் விளக்குகிறது.

 “கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே,
 மூதில் மகளிராதல் தகுமே,
 மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
 யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே,
 நெடுநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
 பெருநிலை விலங்கி, ஆண்டுப் பட்டனனே
 இன்னும், செருப்பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி
 வேல்லைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
 பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி,
 ஒரு மகன் அல்லது இல்லோள்
 செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே” 8
 
முடிவுரை

 பெண்மை உயரிய ஆளுமையின் அடையாளம்.  நுட்பமான அறிவுணர்வின் அடையாளம், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பாற்றல் மிக்கவர்களாகத் திகழ்ந்த பாலினம், தனித்துவம் மிக்கவர்களாகத் தன்னுணர்வினை அழகாகத் திறத்தோடு வெளிப்படுத்திய இனம்.  சங்க இலக்கியப் பெண்பாற்புலவர்கள் மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தித் தம்மை இயல்பாக வெளிப்படுத்தினர்.  ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் வரும் காட்டுப் பூனையும், ஔவையாரின் கவிதைகளில் திரும்பத்திரும்ப வரும் பாம்பும் பல செய்திகளை உணர்த்துவதாய் அமைகின்றன.  பச்சைப் புளியை விரும்பி உண்ணும் தலைச்சூல் மகளிரின் மசக்கையை கச்சிப்பேட்டு நன்னாகையாரின் “அம்மவாழி தோழி”,  எனும்  குறுந்தொகைப் (287) பாடல் உணர்த்துகிறது.

 இந்செறித்தலுக்கு எதிரான பதிவைப் பெண்பாற் புலவர்களால் சிறப்பாகத் தர முடிந்துள்ளது.  காமஉணர்வினை வெளிப்படையாக உணர்த்தி ஆற்றாமையைச் சுதந்திரமாகச் சொல்ல முடிந்த அவர்களின் திறம் பாராட்டுக்குரியது.  ஈராயிரம் ஆண்டுகளான பின்னரும் விலங்கினங்களை உற்று நோக்கி அவற்றின் இயல்புகளை நம்மால் இலக்கியமாக்க முடியாநிலையில், அன்றே ஆமையைப் பற்றியும் இதர விலங்கினைப் பற்றியும் பதிவு செய்து அறிவியலுக்கு வித்திட்ட திறம் வியக்க வைக்கிறது.

 “கணவனை இழந்ததால் யாவற்றையும் இழக்க வேண்டுமா?“ என்ற வினா எழுப்பிய பெண்பாற் புலவர்களின் கலகக்குரல் பெண்ணியத்திற்கு அடித்தளமாக அமைகிறது.  ”வீரம் என்பது ஆணுக்கு மட்டுமன்று, பெண்ணுக்கும் உரியது“ என்று போர்ச் செய்திகளைப் பாடிய திறமும், மன்னனுக்கு ஆலோசனை கூறி, தூதுவராகச் சென்றதும், வலிமையான சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் திறமையான ஆளுமைப் பதிவுகள் மொத்தத்தில் சங்ககாலம் ஆளுமையுடைய பெண்களின் சுதந்திரமான பொற்காலம் என்பது சாலப் பொருத்தமாக அமைகிறது.

சான்றெண் விளக்கம்

1. ந. முருகேசபாண்டியன், சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள், ப.2.
2. நற்றிணை, பா. 295.
3. அகநானூறு. பா. 273.
4. மேலது, பா. 303.
5. மேலது, பா. 160.
6. நற்றிணை, பா. 243.
7. புறநானூறு, பா.250.
8. மேலது, பா. 279.   

nellaimaha74@gmail.com