ஆய்வு: சங்க இலக்கியங்களில் பண்பாட்டு பதிவுகள் (3)

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –


முன்னுரை:
பண்படுவது பண்பாடாகும். பண்படுதல் என்பது சீர்படுத்துதல்,செம்மைப்படுத்துதல் எனப் பொருள்படும்.

‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்‘1(கலி.பா.133.8)

என்று கலித்தொகை விளம்புகிறது.

பண்பாடு என்பது தனிமனித ஒழுக்கத்தையும், தனிமனிதன் என்ற வட்டம் கடந்து குழு வாழ்க்கையையும் ஒரு சமுதாயத்தின் அல்லது பெரும் பகுதியின் முதன்மைப் பண்பாடாகும். சங்ககால மக்கள் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுச் செழுமையும் கொண்டவர்கள் ஆவர். சங்க கால மக்களின் செயல்கள் அனைத்தும் இருபெரும் பிரிவுகளாக இருப்பவை. அகம் புறம் என்ற உணர்வு நிலைகள் ஆகும்.

விருந்தோம்பல் பண்பு:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே இல்லறத்தில் தலையாய நெறியாகும். முன்பின் அறியாத புதிய மனிதர்களை வரவேற்று உபசரிப்பதே ‘விருந்தோம்பல்’எனப்படும். நம்முடைய உறவினர்களைப் போற்றி உபசரிப்பது விருந்தோம்பல் அல்ல. விருந்து என்ற சொல்லிற்கு புதுமை என்று பொருள் கூறுகிறார் தொல்காப்பியர்.

தன் கணவனுடன் ஊடல் கொண்டிருந்தாலும் விருந்தினர் வந்தால் வரவேற்று உபசரிப்பதன் மூலம் தன் சினத்தை மறைத்துக் கொள்வாள் தலைமகள் என்று நற்றிணை விளக்குகிறது. விருந்தினர் வருவதை கண்ட தலைவன் தானும் அவர்களோடு கலந்த கொள்கின்றான். விருந்தினர் நடுவே அவனை வெறுத்து ஒதுக்க விரும்பாத தலைவி ஏதும் கூறாமல் விருந்து சமைப்பதிலேயே ஈடுபட்டு விடுகிறாள்.

‘அட்டிலோளே அம்மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே’2(நற்- 120)

என்று தலைவியின் அமைதியை வியந்த தலைவன் பாடியுள்ளதைக் காணலாம்.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனின் விருந்தோம்பல் பண்பைக் குறிப்பிடும் பரணர் பெரும உன்னை நாடி வந்த புலவர்கள் உண்பனவற்றை ஓம்பாது உண்ணச் செய்தனை, அவருடன் அமர்ந்து உண்டனை, இன்பச் சுவை நல்கும் பாணர் கூத்தர் முதலியவர் நிரம்பப் பெறுமாறு நீ நல்ல பொன் அணிகளை எல்லையில்லாது தந்தனை என்கிறார். இதனை

‘உறுவர் ஆர ஓம்பாது உண்டு
நகைவர் ஆரநன்கலம் சிதறி’3 (பதிற்று 55:10-11)

என்று அடிகள் சுட்டுகின்றன.

உயர்ந்த சிந்தனை:
சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உயர்ந்த சிந்தனைகளே பண்பாட்டுக்கு அடிப்படையாகும். இலக்கியங்கள் எண்ணற்ற அறிவியல் சிந்தனைகளை எடுத்துரைக்கின்றன. அறிவியல் சிந்தனைகள் நம்மை நெறிப்படுத்துகின்றன. இதனை

நாடா கொன்றேர் காடா கொன்றேர்
அவலா கொன்றேர் மிசையா கொன்றேர்
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!’4

என்ற பாடலில் ஒளவையார் நாடு, காடு, பள்ளம், மலை இவையெல்லாம் பெருமைக்குரியது அன்று. எங்கு நல்ல ஆடவர் இருக்கின்றாறோ அந்த நிலமே பெருமைக்குரியது என்கிறார்.
நிலத்தில் வாழும் மக்கள் எவ்வாறு இருத்தல் வேண்டுமென்பதனைக் கலித்தொகைப் பாடல் எடுத்துரைக்கிறது.

‘ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்குதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்த ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை’5(கலித்தொகை-133)

என வாழ்க்கைக்கு எவையெல்லாம் தேவை என்பதை விதிமுறைகளாகக் கூறியுள்ளார் சோழன் நல்லுருத்திரன்.

இல்வாழ்க்கை:
இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இன்றியமையாதது ஒத்த அன்பு. ஒத்த அன்பே காதலெனப்பட்டது. ஒருவரிடம் இன்னொருவருக்குள்ள பெரு விருப்பத்தைத் தம் இனிய காதல் மொழிகளால் வெளிப்படுத்தினர்.

‘நின்ற சொல்ல நீடுதோன்றினியர்
என்றும் என்றோள் பிரிபறியலரே
தாமரைத் தன்தாதூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை’6 (நற் -1)

என்று காதலி தன் காதலனின் ஒழுக்கத் தன்மையைப் போற்றி மகிழ்கின்றாள்.

‘இம்மை மாறி மறுமை யாயினும்
நீ யாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’7 (குறு -49)

என்கிறாள் இப்பிறவியிலும் மட்டுமின்றி மறுபிறவியிலும் அவனே கணவனாக வேண்டும் என்ற விருப்பம் இருவரின் இணைப்பின் அன்பினை வெளிப்படுத்துகின்றது.

மனைவி தன் பிறந்த வீட்டில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த போதும் தனக்கு மாலை சூட்டிய கணவனின் வீடு வறுமையுடையதாக இருப்பினும் தன் தாய் வீட்டை எண்ணாது தன் கணவனின் வீட்டையே பெரிதெனக்கொள்வதாக ஐங்குறுநூற்று பாடல் அழகுறக் கூறுகிறது.

‘அன்னாய் வாழி வேண்டன்னைய் நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ 
மானுண் டெஞ்சிய கலிழிநீரே’8 (ஐங் -203)


மனித நேயம்:

மனிதநேயப் பண்பினைச் சுட்டிக் காட்டுவதில் சிறப்புப் பெற்று விளங்குன்றன. சங்க இலக்கியங்கள் ஓரறிவுயிரையும் தன் உடன்பிறப்பாகக் கருதும் செம்மை உள்ளத்தை

‘விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய் பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே’9 (நற் -175)
என்ற நற்றிணைப் பாடல் சிறப்பாக விளக்குகிறது.

‘ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்போல புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்’10 (புற :1-5)

'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் - பசுவும், பசு ஒத்த பார்பனரும், பெண்களும், நோயரும் இறந்தபின் இறுதிக் கடன் செய்யும் நல்ல புதல்வர்களைப் பெறாதவர்களும், உங்களுக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேடிக் கொள்ளுங்கள், நாங்கள் உங்கள்மீது போhத்; தொடுக்கப்போகிறோம் என அறிவிப்பு செய்த பின்னரே போர் நடைபெற்றன.

பெருஞ்சித்திரனார் குமணனிடம் சென்று புகழ் பாடிப் பரிசில் பெற்று இல்லறம் வருகின்றார். பெற்ற செல்வத்தினை தன் மனைவியிடம் கொடுத்து, இன்னாருக்கு என்று என்னாது அனைவருக்கும் கொடுப்பாயாக எனக் கூறி தனது மனிதநேயத்தைப் புறநானுற்றில்(163 பாடல்) காட்டியுள்ளார்.

வீரச் சிறப்பு:
போரின்கண் வெற்றி ஒன்றே குறிக்கோளாய் கருதிப் போர் புரிந்தாலும் சில மனித உரிமைகள் மதிக்கப்பட்டு போர்கள் நடைபெற்றன. களத்தில் தோற்று புறமுதுகு இட்டு ஓடும் ஒருவரின் மீது தன் வில்லில் உள்ள அம்பை எய்தாது நின்ற வீரத் தமிழ்க்குடி மறவனின் மறப்பண்பினையும் போர் நெறியும் போற்றுதலுக்குரியதே ஆகும்.

‘காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டுஇடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!’11(புறம் 41:1-3)

உயிரைக் கொல்வதற்குக் காலனும் காலம் பார்ப்பான் அவ்வாறு பாராமல் வேல்முதலாம் கருவிகளைக் கொண்ட படைவல்லோர் அழியுமாறு வலிமை மிக்க வேந்தனே என்கிறார்  கோவூர்கிழார்.

 

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்’12 (புறம் 74: 1-2)

பிறக்கும் போதே குழந்தை இறந்து பிறந்தாலும், குழந்தையின் முழுவடிவம் அமையாமல் தசைத் தடியாகவே பிறந்தாலும் அவற்றை ஆள்அல்ல என்று எண்ணாமல் வாளால் பிளப்பர்.   போரில் வீரமரணம் எய்தும் ஒருவனுக்கு நடுக்கல் எடுப்பது பண்டைய மரபு. இம்மரபை ஒட்டி எழுப்பப்பட்ட நடுக்கல்லைச் சுற்றி இரும்பாலான வேல், கேடயம் போன்ற
ஆயுதங்களை நிறுத்தி அரணமைப்பது வழக்கமாக இருந்தது என்பதை,

‘ஒன்னாத் தெவ்வர் முன்நின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின், களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’13(புறம்.335)

பகைவரை எதிர்த்து நிற்கும் ஆற்றலுடைய தந்தங்களைக் கொண்ட யானையையும் கொன்று தானும் போரில் இறந்தான். இவ்வீரனுக்கு நடுக்கல் நட்டும்,நெல்லைத் தூவியும் வழிபட்டனர்.

முடிவுரை:
சங்கப் பாடல்களின் வாயிலாக தமிழர்களின் வாழ்வும் பண்பாடும் இன்றைய மக்களுக்கு எடுத்தக்காட்டாக அமைந்துள்ளது. பண்டையத் தமிழர் பண்பாட்டில் தலைசிறந்து விளங்கியது விருந்தோம்பலாகும். பழந்தமிழர்கள் பண்பட்ட மனதோடும் உயர்ந்த சிந்தனையோடும் வாழ்ந்த வந்தது, நாம் புகழ்வதற்குரியனவாய் உள்ளன. விழுப்புண் படாத நாளெல்லாம் பயனின்றிக் கழிந்த நாளாக பண்டைத் தமிழர் கருதிய போதும், தமக்கெனச் சிறந்த போரியல் மரபும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.

அடிக்குறிப்புகள்:
1.    கலித்தொகை, அடி-133:8
2.    நற்றிணை, அடி-120
3.    பதிற்றுப்பத்து, அடி-55:10-12
4.    புறநானூறு, அடி-187
5.    கலித்தொகை, அடி-133
6.    நற்றிணை, அடி-1
7.    குறுந்தொகை, அடி-49
8.    ஐங்குறுநூறு, அடி-203
9.    நற்றிணை, அடி-175
10.    புறநானூறு, அடி-9:1-5
11.    மேலது, அடி-41:1-3
12.    மேலது, அடி- 74:1-2
13.    மேலது, அடி- 335:9-12

பார்வை நூல்கள்:
1.    அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
2.    பக்தவச்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல்
3.    தி.சு.நடராசன், தமிழின் பண்பாட்டு வெளிகள்
4.    இ.சுந்திரமூர்த்தி, இலக்கியமும் பண்பாடும்.

கட்டுரையாளர்: பேராசிரியர் நா.செய்யது அலி பாத்திமா, பிஷப் கால்டுவெல் கல்லூரி மறவன்மடம், தூத்துக்குடி

அனுப்பியவர்:
முனைவர் வே.மணிகண்டன் – thenukamani@gmail.com