ஆய்வு: சமூகமாற்றமும் சாதீயத்தேய்வும் – புதியசுவடுகளை முன்வைத்துச் சில குறிப்புகள்

தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள்சின்னராசா குருபரநாத்“தமிழில் மாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு சுவை பொருந்தியதாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தமிழுக்குப் புதிய உரைநடை நவீனமான நாவலெனும் இலக்கிய வடிவம் வேதநாயகம்பிள்ளையினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதிலிருந்து. நாவல் எனும் இலக்கிய வடிவம் பல்வேறு வளர்ச்சிக்கு உட்பட்டு இந்நூற்றாண்டிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகவும் மிளிர்கின்றது.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பாரிய இலக்கியப் புரட்சியின் விளைவாக பல புதிய இலக்கிய வடிவங்கள் தமிழுக்குள் அறிமுகமாயின. இவ் இலக்கிய வடிவங்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் வெவ்வேறு பொருள் நிலைகளில் வெளிப்படுத்தின. இவ் இலக்கிய வடிவங்களுள் நாவலும் சிறுகதையும் தனிமனித உணர்வுப் பிரச்சினைகளை மிகச் சிறப்பாக, உணர்ச்சிப் பூர்வமாக புதியதோர் தளத்தில் வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக ஈழத்தில் தோற்றம் பெற்ற நாவல்கள் ஈழத்திற்கே உரித்தான அரசியல், பொருளாதார, சமுதாய, சமயப் பிரச்சினைகளை கருவூலமாகக் கொண்டு தோற்றம் பெற்றன. தமிழகச் செல்வாக்கும், மேலைத்தேய பிரக்ஞையும், படித்த மத்தியத்தர வர்க்கத்தின் தோற்றமும் ஈழத்தில் சிறந்த நாவல் இலக்கியத் தோற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்தன. குறிப்பாக ஈழத்தில் 1950, 60 களில் ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இலக்கிய இயக்கங்களின் தோற்றங்களும் 1970களில் சிறந்த சமுதாயச் சிந்தை கொண்ட நாவல்கள் தோற்றம் பெறுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.

ஈழத்து நாவல் இலக்கியப் பரப்பில் 1960, 1970 காலப்பகுதியில் சிறந்த பொற்காலம் என்நு கூறலாம். இக்காலப் பகுதியில் நாவல் பல்வேறு நோக்கங் கருதி பல்வேறுபட்ட சமுதாய பார்வையோடு சமூக பிரக்ஞையோடு படைக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் செ. கணேசலிங்கன், கே. டேனியல்,தி. ஞானசேகரன் போன்றோர் பல்;வேறு சிந்தை கொண்ட ஈழத்து சமுதாயப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நாவல்களை வேறுபட்ட நிலைகளில் நின்று வெளிப்படுத்தி இருந்தனர். அந்தவகையில், தி. ஞானசேகரன் குறிப்பிடத்தக்க இடத்தினை பெற்றவராக விளங்குகின்றார்.

தி. ஞானசேகரன் இதுவரை பல நாவல்களையும் குறுநாவல்களையும் எழுதியுள்ளார். அவரது முதல் நாவலான “புதிய சுவடுகள்” யாழ்ப்பாண பிரதேசத்தை களமாகக் கொண்டது. அவரது “புதிய சுவடுகள்” யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாக விளங்குகின்றது.

தி. ஞானசேகரனின் புதிய சுவடுகள் யாழ்ப்பாண பிரதேசத்தின் கிராம பகைப்புலத்தில் சாதிப் பிரச்சினையை இயல்பாகச் சித்தரிக்கும் படைப்பாக மிளிர்கிறது. 1960, 70 களில் ஈழத்தின் சாதியத்தின் பெயரால் இழைக்கப்பட்ட சாதியக் கொடுமைகளை தி. ஞானசேகரன் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாண தமிழர் சமுதாயத்திற் புரையோடிப் போயிருக்கும் சாதியமைப்பு சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளமையையும் எத்தனையோ விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்வதனையும் இந்நாவலில் தொட்டுக் காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண கிராமியப் புலத்திலே உயர் சாதியினர் தாழ்ந்த சாதியினருக்கென தனியான பேணியோ அல்லது தேங்காய்ச் சிரட்டையோ வைத்திருப்பர். தமது வீட்டில் வேலை செய்யும் தாழ்ந்த சாதியினருக்கு உணவோ தேனீரோ அந்ந பேணியிலோ அல்லது சிரட்டையிலோ கொடுப்பர். இந்த சாதிய ஏற்றத் தாழ்வுக் கொடுமைகளை தி. ஞானசேகரன் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.

செல்லப்பர் வீட்டில் வேலை செய்யும் மாணிக்கத்திற்கு பார்வதி சுவரின் மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பேணியில் தேனீர் குடிக்கக் கொடுப்பதனை நாம் அவதானிக்கலாம். இவ்வாறான ஏற்றத் தாழ்வினை செ. கணேலிங்கனின் “நீண்ட பயணம்” என்னும் நாவலிலும் நாம் காணலாம்.

பொதுக் கிணற்றிலோ, பாடசாலைக் கிணற்றிலா, கோயில் கிணற்றிலோ தாழ்ந்த சாதியினர் கொடி பிடித்து தண்ணீர் அள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை ஞானசேகரன் மாணிக்கம் என்னும் பாத்திரத்தின் பள்ளிப் பருவ வாழ்க்கையின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

“இடைநேரங்களில் பாடசாலை மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடுவார்கள். விளையாட்டு முடிந்ததும் தாகம் தீர பாடசாலைக் கிணற்றில் தண்ணீர் அள்ளிப் பருகுவார்கள். மாணிக்கம் பாடசாலைக் கிணற்றிலே கொடி பிடித்து தண்ணீர் அள்ளக் கூடாது”.

இவ்வாறான தீண்டாமைக் கொடுமையின் விரிவை கே. டேனியலின் (தண்ணீர்) நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது.

சமுதாயத்தின் உயர் சாதியினர் தாழ்ந்த சாதியினரை தம் அடிமைகளாக பாவித்திருந்தனர். தாழ்ந்த சாதியினருக்கு கருத்துச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை. அவர்கள் உயர் சாதியினருக்கு கட்டுப்பட்டு அடிமைநிலை வாழ்வு வாழ வேண்டிய நிலை காணப்பட்டிருந்தது. இந்நிலையினை செ. கணேசலிங்கன், கே. டேனியலின் நாவல்களில் விரிவாகக் காணலாம். சில தாழ்ந்த சாதியின மூத்தவர்கள் அடிமை நிலை வாழ்வில் அமிழ்த்தப்பட்டிருக்கும் நிலையினைக் காணலாம். இதற்கு தக்கதோர் பாத்திரம் சிறந்த எடுத்துக்காட்டு.

உயர்சாதி வர்க்கத்தினர், தாழ்ந்த சாதியினத்தவர்களைத் தீண்டத்தகாதவர்களாகவே கருதியிருந்தனர். 1950களுக்கு முன்னர் தோற்றம்பெற்ற தீண்டாமைக்குச் சாவுமணி, தீண்டாமைக்குச் சவுக்கடி, நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் போன்ற நாவல்கள் தீண்டாமைக் கொடுமைகளைச் சித்தரிக்கின்றன. எனினும் இவையனைத்தும் தொடக்கப்புள்ளியே. 1960, 1970 களில் இந்தத் தீண்டாமைக் கொடுமை பல்வேறு நிலைகளில் பிரக்ஞையோடு வெளிப்படுத்தப்பட்டது.

“அடியே எளியச் சாதிக்காரன் கடிச்சுப் போட்டுக் குடுத்த மாங்காயை ஏனடி சாப்பிட்டனி? இனிமேல் அவனோடை சேர்ந்து பள்ளிக்கூடம் போகப்பிடாது”

என செல்லப்பர் ஏசுவதிலிருந்து இதனை நாம் இந்நாவலில் காணலாம்.

1970 களில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ்வியலில் தாழ்ந்த சாதியினர் உயர்சாதியினரின் வயல்களில் வேலை செய்வதையும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும், அடிமைகளாகவும் கருதப்பட்டிருந்ததையும் நாம் காணலாம். தாழ்ந்த சாதியின மக்கள் தனியாக வயல் வாங்கி வேலை செய்ய முடியாது. உயர் சாதியினரினர் தாழ்ந்த சாதியினருக்கு வயல் நிலங்களை விற்க மாட்டார்கள். தம் சாதியினர் உயர் சாதியினர் வயல்களிலேயே வேலை செய்ய வேண்டும். சில தம் சாதியினர் இந்த அடிமைநிலையில் முற்றுமுழுதாக மூழ்கியிருப்பதையும் நாம் காணலாம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக கோவிந்தன் என்னும் பாத்திரம் விளங்குகின்றது.

“பொத்தடா வாயை… உனக்கு நாக்கு நீண்டு போச்சு. எங்கடை அப்பன், பாட்டன் காலத்திலையிருந்து நாங்கள் கமக்காரர் சொன்ன வேலையைச் செய்து கொண்டு தானே வாறம்”

என்ற கோவிந்தனின் கூற்றில் இருந்து இதனை நாம் காணலாம்.

உயர் சாதியினப் பெண்ணான பார்வதியைக் காப்பாற்றுவதற்காக செல்லப்பன் என்னும் தாழ்ந்த சாதியின இளைஞன் கிணற்றுக்குள் குதிக்கின்றான். பார்வதியைக் காப்பாற்றுகின்றான். எனினும் செல்லப்பன் தாழ்ந்த சாதியினத்தவன் என்பதால் அவனுக்கு எதிர்ப்புக் கிளம்புகிறது. இத்தகைய தீண்டாமையின் உச்சக்கட்டத்தை,

“என்னதான் இருந்தாலும் கொடி பிடிச்சு அள்ளக் கூடாத ஒரு கீழ் சாதிக்கு கிணத்துக்கை குதிக்கிற அளவுக்கு துணிவு வந்ததுக்குக் காரணம் நீங்கள் குடுத்த இடந்தான்”

என்ற துரைசிங்கத்தின் கூற்றில் நாம் காணலாம்.

உயர்சாதியின வர்க்கத்தினர் தாழ்ந்த சாதியினருக்குப் பொருளாதார ரீதியாகவும் பல தடைகளை விதித்திருந்தனர். தாழ்ந்த சாதியினர் உயர் சாதியினரின் வயல்களிலேயே குத்தகைக்கு வேலை செய்ய வேண்டும். தாழ்ந்த சாதியினர் தமக்கெனச் சொந்தமாக நிலங்களை வாங்க முடியாது. விவசாயமும் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டிருந்தது. தாழ்ந்த சாதியினர் தவறு செய்யும்

வேளைகளில் அவர்கள் உயர் சாதியினரால் பொருளாதார ரீதியாக அடக்கப்பட்டிருந்தனர். இதனை  தி. ஞானசேகரன் வெளிப்படுத்தத் தவறவில்லை.

“நாங்களும் எங்களுடைய ஒற்றுமையைக் காட்டுறதெண்டால் ஊரிலை இருக்கிற கீழ் சாதிக் குடும்பங்கள் எல்லாத்தையும் குடியெழுப்ப வேணும். அவங்கள் தோட்டம் செய்யிற குத்தகைக் காணியளை மறிக்க வேணும். கள்ளச் சீவிற பனையளை நிப்பாட்ட வேணும்”

என்ற துரைசிங்கம் பாத்திரத்தின் கூற்றில் இருந்து இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

தாழ்ந்த சாதியினர் உயர் சாதியினருடன் காதல் தொடர்போ, திருமணத் தொடர்போ ஏற்படுத்த முடியாது. அவ்வாறான தொடர்புகள் ஏதும் ஏற்பட்டால் அது சமூகத்தில் பெரும் குழப்பத்திற்கும் கண்டனத்திற்கும் உரிய விடயமாக மாறிவிடும். உயர் சாதியினத்தவளான பார்வதியும் தாழ்ந்தயினத்தவனான செல்லப்பனும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். அவர்கள் இருவரும் தாம் வாழும் சமூகத்தில் தம்மால் வாழ முடியாது என்பதற்காக முத்தையன்கட்டுக்குச் சென்று வாழ்கின்றனர். எனினும் பார்வதியின் தகப்பனும் துரைசிங்கமும் முத்தையன்கட்டுக்குச் சென்று பார்வதியையும் செல்லப்பனையும் பிரித்துக் கொண்டு வருகின்றனர். இதனால் பார்வதி இறக்க நேரிடுவதோடு உயர் சாதியினரான செல்லப்பா தன்னுடைய சமூகத்தவராலேயே தீண்டத்தகாதவராக ஒதுக்கப்படுகின்றார். இதற்குக் காரணம் தாழ்ந்த சாதியினத்தவனான செல்லப்பனைப் பார்வதி விரும்பித் திருமணம் செய்தமையேயாகும். இவ்வாறான சாதியதத்தின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகளை செ. கணேசலிங்கனும் தன்னுடைய நாவல்களிலே வெளிப்படுத்தியுள்ளார்.

அறுபதுகளைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் சாதிப் பிரச்சினை தொடர்பான நாவல்கள் பல இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் பல சாதிப் பிரச்சினை, ஒரு வர்க்க சார்புடைய பிரச்சினை எனவும் அதனைக் கிளர்ந்தெழும் மக்கட் போராட்டம் மூலமே தீர்க்கலாம் எனவும் கருத்தினை வெளிப்படுத்தின. இதற்கு செ. கணேசலிங்கனின் “நீண்ட பயணம்” நல்லதோர் சான்றாகும். ஆனால் தி. ஞானசேகரனின் இந் நாவல் மேற்குறிப்பிட்ட நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தியலைக் கொண்டது.

புதிய சுவடுகள் என்ற இந்த நாவலும் சாதியத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றது. சமூக விமர்சன நோக்கில் நடைமுறைச் செயற்பாட்டின் அடிப்படையில் இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. உயர் சாதியினரிடம் நிகழ்ந்து வரும் மனமாற்றங்களையும் இயல்பாக சமுதாயம் மாறிவரும் நிலையையும் சாதிக் கட்டுப்பாடுகள் தளர்ந்து வரும் நிலையையும் இந்நாவல் பேசுகின்றது. காலப்போக்கில் சாதியம் அழிந்துவிடும் என எதிர்வு கூறுகின்றது. இறுக்கமான சாதிக்கட்டுப்பாடுகள் மெது மெதுவாகத் தளரத் தொடங்கியுள்ளன என்பதை இந்நாவலில் தி. ஞானசேகரன் புலப்படுத்த முயற்சிக்கின்றார். சமூகத்தில் சாதியத்தின் பெயரால் இழைக்கப்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுக் கொடுமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இறுக்கமான சாதியக் கட்டுப்பாடுகள் மெது மெதுவாகத் தளரத் தொடங்கியுள்ளன என்பதை நாவலில் புலப்படுத்த முயற்சிக்கின்ற ஆசிரியர் இக் கருத்தியலுக்கு சிறந்த குறியீடாக மாணிக்கனுக்கும் பார்வதிக்கும் பிறந்த குழந்தையை சமுதாயம் அங்;கிகரிப்பதாக அமைந்துள்ளது. அந்தவகையில் தி. ஞானசேகரனின் “புதிய சுவடுகள்” என்ற நாவல் இன்றைய சமுதாய மாற்றத்திற்கான முதல் சுவடுதான்.

உசாத்துணை
ஞானசேகரன், தி. (2004) புதிய சுவடுகள்,சென்னை : மணிமேகலைப் பிரசுரம்.
சுப்பிரமணியன், நா. (2009) ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி,கொழும்பு – சென்னை : குமரன் புத்தக இல்லம்.
கைலாசபதி, க. (1968) தமிழ் நாவல் இலக்கியம்,சென்னை : பாரிநிலையம்.

அனுப்பியவர்: sellathuraisutharsan@gmail.com