ஆய்வு: செவ்வியல், நாட்டார் சமயங்களில் மோகினித்தொன்மம்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?‘தன்னையறிதல்’ என்பது தத்துவத்தளத்தில் தொடர்ந்து விவாதத்திற்குள்ளாகி வருகின்ற கருத்தாகும். சுயத்தை அறிந்து கொள்வது, சுயத்தை வரையறை செய்வது என்பதெல்லாம் மற்றவைகளை (Others) அறிந்து கொள்வதோடும், மற்றவைகளை வரையறை செய்வதோடும் தொடர்புடைய செயல்பாடாகவே இருப்பதை இன்றைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே ஒவ்வொரு மனிதத்தன்னிலையும் தனது இருப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, மற்றவைகளைத் தனக்கு ஏற்றாற்போல் வரையறை செய்வதில் கவனமாக செயல்படுகின்றன.

மனித சமுதாய வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவே இருந்துவந்துள்ளது என்பதை மார்க்ஸியர்கள் கண்டுணர்ந்த பிறகு, பெண்ணியம், தலித்தியம், பின்காலனியம் போன்ற சிந்தனைகளும் மானுட வரலாற்றில் நடைபெற்றிருக்கின்ற ஒடுக்குமுறைகளை, போராட்டங்களைப் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றன. சமூக ஒடுக்குமுறைகள் ஆயுதப்போராட்டங்கள் மூலமாக மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியாகவும் நடைபெறுவதை மேற்கண்ட சிந்தனைகள் சுட்டிக்காட்டியபிறகு மனித சமுதாயத்தின் கருத்தியல் சட்டங்களை ஐயத்துடனேயே அணுக வேண்டியிருக்கிறது என்பது உண்மையாகும்.

மேட்டிமைச்சக்திகளால், ஒடுக்கப்பட்டோர் மீது அதிகாரத்தை செலுத்துகின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கருத்தியல் சட்டகங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு மாற்றாக ‘பண்பாட்டு அரசியலை’ (Cultural Politics) நிகழ்த்துகின்றன என்று இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் அந்தோனியா கிராம்சி கூறும் கருத்துக்கள் இன்றைய நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இந்தியச்சூழலில் பால் அடிப்படையிலும், மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளுக்கான கருத்தியல் சட்டங்களை வழங்குகின்ற பணியைச் செய்பவையாக இந்து மதத்தின் பல்வேறு புனிதப்பிரதிகள் திகழ்கின்றன. இந்தப் புனிதப்பிரதிகளின் கருத்தியல் மேலாண்மையை அம்பேத்கர், பெரியார் போன்ற அறிஞர்கள் பல்வேறு தளங்களில் விமர்சனப்படுத்தியுள்ள நிலையில், ஆண் எனும் தன்னிலை தன்னுடைய மற்றமையாகக் கருதும், பெண்ணின் உடலைப் பெறுதல் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் மோகினித்தொன்மத்தைச் செவ்வியல், நாட்டார் சமயங்களின் பின்புலத்தில் இக்கட்டுரை ஆராய்கிறது.

உடல்களின் மாற்றம் பற்றிய மீமானுடக்கதைகள் தொன்மங்களிலும் நாட்டார்வழக்காறுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன என்றாலும், இவைகளைப்பற்றிய ஆய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றிருக்கின்றன. அந்தவகையில் மேல்நாட்டு ஆய்வாளர் பிரந்தாபெக் மற்றும் ஏ.கே.ராமனுஜன் ஆகியோர் சாதிய அடிப்படையில் உடல்கள் பெறும் மாற்றத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி நரசிம்ம அவதாரம், பாகம்பிரியாள் ஆகியவைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், பேராசிரியர் அரங்க நலங்கிள்ளி உளப்பகுப்பாய்வு அடிப்படையில் பிள்ளையார் தொன்மத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்.

ஆண், பெண்ணின் உடலைப் பெறுதல் பற்றிய தொன்மங்கள்
தொன்மங்கள் மானுட மனத்தின் பல முக்கியமான பிரச்சனைகளைக் கதை வழியில் கூறுகின்றன எனத் தொன்மவியலாளர்கள் கூறுகின்றனர். ஆண், பெண் உடலைப் பெறுவது என்ற தொன்மப் புனைவு மனித மனத்தின் புதிரான செயல்பாடுகளில் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது. மேலை நாட்டுத் தொன்மங்களில் திரிசீயஸ்,லோக்கி, போன்ற ஆண்கள் பெண் உடலைப் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மரபில் புதன் எனும் கிரகம், சுத்யும்னன் எனும் அரசன், கிருஷ்ணன், நாராயணன், அர்ஜுனன் ஆகிய ஆண்கள் பெண் உடலைப் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மோகினித் தொன்மம்
விஷ்ணு என்னும் ஆண் கடவுள் அழகிய பெண்ணாக வடிவம் பெறுவதை ‘மோகினி’ எனக் குறிப்பிடுவர். இந்த மோகினியைப்பற்றியக் கதைநிகழ்வுகள் செவ்வியல் சமயத் தொன்மங்கள், நாட்டார் சமயத்தொன்மங்கள் என இரண்டு நிலைகளிலும் காணப்படுகின்றன.

செவ்வியல் சமயத்தில் மோகினித் தொன்மம்
வடமொழியில் எழுதப்பட்டு, இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் பரவலாக அறியப்படுகின்ற பதினென்புராணங்கள், இந்து சமயத்தின் புனிதப்பிரதிகளாகக் கருதப்படுகின்றன. இந்து சமயத்தின் கருத்தியல் சட்டகங்களாகத் திகழ்கிற இப்புராணங்களில் பத்ம புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், மச்ச புராணம், ஆகியவற்றில் ‘மோகினியைப்பற்றியக் கதைகள் பல விதமாகக் காணப்பட்டாலும், மூன்று வகையான கதைகளே சில வேறுபாடுகளுடன் மேற்கண்ட புராணங்களில் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த மூன்று வகையான கதைகள் இங்கு விளக்கப்படுகின்றன.

முதல் கதை அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தது பற்றியது. தேவர்களும், அசுரர்களும் சாகாமல் சிரஞ்சீவியாக இருப்பதற்குத் தேவையான அமிர்தத்தைப்பெற, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வெளிவந்தபோது, அதைப்பகிர்ந்துகொள்வதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இந்தச்சண்டையைப் போக்கும் விதமாகவும், சரியாகப் பங்கிட்டு தரும் வகையிலும் விஷ்ணு, மோகினி என்கிற அழகிய பெண்ணுருவம் எடுத்து தேவர்களையும், அசுரர்களையும் ஓரிடத்தில் அமரச்செய்தார். தன்னுடைய அழகால் அசுரர்களை மயக்கிய மோகினி தேவர்களுக்கு அமுதத்தை வழங்கியதோடு, அசுரர்களிடையே சண்டையை ஏற்படுத்தி அவர்களை அழித்தார்.

இரண்டாவது கதை பத்மாசூரனின் அழிவைப்பற்றியது. பத்மாசூரன் என்கிற அசுரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான், விரும்பிய வரத்தைக் கேட்கும்படி அவனிடம் கூறினார். தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் எரிந்து சாம்பலாகும்படியான வரம் தனக்குத் தந்தருள வேண்டுமென்றான் அசுரன். சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தைத் தந்துவிட்டார். கேட்டுப்பெற்ற வரத்தின் வல்லமையைச் சோதித்துப்பார்க்க விரும்பிய அசுரன் சிவ பெருமானின் தலையிலேயே கைவைக்க முயன்றான். சிவன் அந்த இடத்திலிருந்து ஓடி மறைந்தார். இந்த இக்கட்டான சூழலில் இருந்து சிவனைக் காப்பாற்ற விஷ்ணு அங்கு வந்தார். வந்தவர் அனைவரையும் மயக்கும் மோகினி வடிவத்தை ஏற்றார். மோகினியைப் பார்த்தவுடன் அசுரன் சிவனை விட்டுவிட்டு அப்பெண்ணைப் பின் தொடர்ந்து ஓடினான் “நீ குளித்துவிட்டு வந்தால் நான் உன்னுடையவள்” என்று மோகினி கூறினாள். அவள் பேச்சைக்கேட்ட அசுரன் குளித்துவிட்டு ஒரு துண்டால் தன் தலையைத் துடைத்துக்கொள்ளும் போது அவன் கரம் தலையில் பட்டுவிட்டது. பத்மாசூரன் எரிந்து சாம்பலாகிவிட்டான்.

மூன்றாவது கதை ‘விகண்டன் என்ற அசுரனின் அழிவைப்பற்றியது. விகண்டன் எனும் அசுரன் தன் தந்தையைக்கொன்ற நகுஷனைக் கொல்வதற்குச் சக்திபெற விஷ்ணுவைக்குறித்து தவம் செய்தான். அத்தவம் பலித்தால் தீமை ஏற்படும். எனக்கருதிய விஷ்ணு அழகிய மோகினி வடிவம் கொண்டு அசுரனை மயக்கினார். அசுரன் மோகினியை மணம் செய்து கொள்ள விரும்பினான். திருமணம் நிகழ வேண்டுமென்றால் ஏழுகோடி ‘கமோடா’ மலர்களைக்கொண்டு சிவனை பூஜிக்க வேண்டும் என்று மோகினி வேண்டுகோள் விடுத்தாள். ‘கமோடா’ மலர்கள் என்பவை கமோதா என்ற பெண்ணின் சிரிப்பிலிருந்து வெளிப்படும் மஞ்சள் மலராகும். இந்த மலரைக் கொண்டு சிவனை வழிபட்டால் நன்மை நடைபெறும். மாறாக அந்தப்பெண் அழும் போது சிவப்பு நிற மலர்கள் வெளிப்படும். இந்த சிவப்பு நிற மலர்களைக்கொண்டு சிவனை வழிபட்டால், சிவன் கோபமடைந்து வழிபட்டவரை அழித்துவிடுவார். இத்தகைய செய்திகளை அறியாத விகண்டன் கமோதா அழும்போது வெளிப்படும் சிவப்புநிறப் பூக்களை வைத்து வழிபட்டதால் சிவன் அவனை அழித்தார்.

மேற்கண்ட மூன்று கதை நிகழ்வுகளிலும் மோகினியின் அழகினாலும், சூழ்ச்சியாலும் அசுரர்கள் அழிக்கப்பட்டனர் என்ற கருத்து தொடர்ந்து இடம் பெற்றுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. இக்கருத்தினை மேலும் ஆராயும் போது, விஷ்ணு என்கிற ஆண், தனது மற்றமையான பெண் வடிவத்தை ஏற்கும் செயல்பாடானது, ஆண்களுக்கு ஏற்றாற்போல், அழகான பெண்கள் சூழ்ச்சிமிக்கவர்கள், ஆண்களை ஆபத்தில் சிக்கவைப்பவர்கள், நேரடியாகப் போரிடாமல் தந்திரமாக ஏமாற்றுபவர்கள் என்று பெண்ணைப்பற்றிய ஒரு வரையறையை உண்டாக்குவதற்காகவே புனையப்பட்டது என்பது தெரிகிறது.1 விஷ்ணுவை இந்து சமயத்தின் ஆண் கடவுளாக கருதும் போது, இந்து சமயம் தனது கருத்தியல் சட்டங்களின் வழியே பெண்ணின் பிம்பத்தை எவ்வாறு சித்திரித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

தாய்வழிச்சமூகத்தில் அனைவருக்கும் உணவினைப் பங்கிட்டு வழங்கும் உரிமை பெண்களிடம் இருந்ததைப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்ணின் இந்த உரிமையை கொச்சைப்படுத்தும் வகையில் அமுதத்தைப் பங்கிட்டு தருவதில் மோகினியின் செயல்பாடு ஒருதலைபட்சமாகவே அமைந்திருக்கிறது என்பதை மேற்கண்ட ‘பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற தொன்மம்’ உணர்த்துகிறது பெண்ணின் உரிமையைத் தவறாகச் சித்திரித்து அந்த உரிமையை ஆண் கையகப்படுத்த நினைக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இத்தொன்மத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பேராசிரியர் அரங்க நலங்கிள்ளி கூறுவது போன்று, பெண்ணின் ஆற்றலுக்கு பயந்த ஆண் பெண்ணின் மீது தாய்மை என்ற புனைவைச் சூட்டியது போலவே (ஞா.ஸ்டீபன், ப.91) மோகினித் தொன்மத்திலும் பெண்ணின் ஆற்றலுக்குப் பயந்த ஆண், பெண் வடிவங் கொண்டு பெண்ணின் உரிமையை கொச்சைப்படுத்துவதோடு பெண்ணைச் சூழ்ச்சி மிக்கவளாகவும், தந்திரமாக அழிப்பவளாகவும் சித்தரித்திருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நாட்டார் சமயத்தில் மோகினித்தொன்மம்
நாட்டார் சமயம் நிறுவன சமயத்திற்கு எதிர் நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறினாலும், இவ்விரு சமயங்களிடையே கொண்டு கொடுத்தல்கள் இருந்து கொண்டு இருக்கின்றன என்பதே உண்மையாகும். தொன்மங்களைப் பொருத்த வரையில் இந்த கொண்டு கொடுத்தல் உறவானது, பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. மோகினித் தொன்மம் செவ்வியல் தொன்மமாகப் பலரால் குறிப்பிடப்பட்டாலும், தமிழக நாட்டார் சமயத்தில் ஐயனாரப்பன் கதையிலும், அரவான் கதையிலும் மோகினித்தொன்மம் இடம்பெற்றிருக்கிறது.

ஐயனார் பிறப்புக்கதையில் மோகினித்தொன்மம்

ஐயனார் பிறப்புக்கதையைப் பொறுத்தவரை செவ்வியல் சமயத்தின் மோகினித் தொன்மக்கதையான பாற்கடலைக் கடைந்த கதை, பத்மாசூரனை அழித்தக்கதை ஆகியவற்றின் அடியொற்றியே கதை நிகழ்வுகள் அமைந்திருந்தாலும், முடிவில் சிவனுக்கும் மோகினி வடிவம் கொண்ட விஷ்ணுவுக்கும் ஐயனார் குழந்தையாகப் பிறப்பதாக நாட்டார் சமயத்தொன்மம் குறிப்பிடுகிறது. தமிழகத்தில் ஐயனார் வழிபாட்டை ஆராய்ந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆசிவக, சமண, பௌத்த சமயங்களின் தாக்கத்தினால் உருவான தெய்வமாகவே ஐயனாரைக் குறிப்பிடுகின்றார். பேராசிரியர் மு.அருணாசலமும் ஐயனார் வழிபாட்டைப் புத்த, சமண சமயங்களின் வழிவந்தவை என்று கூறுவதோடு உள்ளது என்பதைக்கூறி கி.பி.16-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஐயப்பன் வழிபாடும், ஐயப்பன் பற்றிய பிறப்புத் தொன்மமும் கேராளவில் வழக்கில் இல்லை என்று கூறுகிறார். (மு.அருணாசலம், ப.82-83). இக்கருத்துக்களின் அடிப்படையில் மேற்கண்ட மோகினித்தொன்மத்தை ஆராயும் போது, ஐயனார் எனும் அவைதீக நாட்டார் தெய்வத்தை, இந்து சமயத்தின் சார்பாக மேல்நிலையாக்கம் செய்ய இத்தொன்மம் புனையப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

எனவே ஐயனார் பிறப்புக் கதையில் இடம்பெறும் மோகினித்தொன்மத்தைச் சமய அரசியலினால் உருவாக்கப்பட்ட இந்து சமயத்தின் அடியொற்றிய நாட்டார் தொன்மமாகவே கருத வேண்டியுள்ளது. இத்தொன்மத்தை மற்றொரு கோணத்தில் ஆராயும் போது மோகினியோடு சிவன் இணைந்து குழந்தையை உண்டாக்குவது என்பது ‘மோகினி’ எனும் சுதந்திரமான பெண்ணைக் குடும்ப அமைப்பிலும், தாய்மை குணத்தோடும் இணைக்கும் முயற்சியின் குறியீட்டாக்கமே இத்தொன்மக்கதை என்பதும் தெரிகிறது. பேராசிரியர் மு.அருணாசலம் இந்து சமயத்தில் சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்களின் தன்மைகைளைப் பற்றிக் கூறுகிற போது சிவன் கட்டுப்படுத்துபவர், விஷ்ணு அனைவரையும் காப்பவர் என்கிறார். (மு.அருணாசலம், ப.37) இந்தக் கருத்தின் அடிப்படையில் மேற்கண்ட தொன்மத்தைப் புரிந்து கொள்ளும் போது கட்டுப்படுத்துகிற ஆற்றல் நிறைந்த ஆணாக சிவனும், காத்தல் நிறம் கொண்ட பெண்ணாக விஷ்ணுவும் குறியீட்டாக்கம் பெற்றுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, இந்து சமய மதிப்பீடுகளைக் கதை வழியே வெளிப்படுத்தும் நோக்கில் ஐயனார் பிறப்புக்கதையில் மோகினித்தொன்மத்தன்மையோடு பால்அரசியலை நிகழ்த்தியிருக்கிறது என்பது தெரிகிறது.

அரவான் கதையில் மோகினித்தொன்மம்
திரௌபதியம்மன் திருவிழாவிலும், அரவான் திருவிழாவிலும் மோகினித்தொன்மக்கதை சடங்கு, தெருக்கூத்து பிரசங்கம் ஆகியவற்றின் இடம்பெற்றிருக்கிறது. வடபுல மகாபாரதக்கதையில் குறிப்பிடப்படாத தமிழ் நாட்டுக்கதையாகவே மோகினித்தொன்மக்கதை அரவான் கதையோடு இணைத்துக் கூறப்படுகிறது என்று அ.அ.மணவாளன் குறிப்பிடுகிறார். (இரா.சீனிவாசன்,ப.33) இக்கதையின் படி நாககன்னிகைக்கும் பாண்டவ மன்னன் அர்ஜுனனுக்கும் பிறந்த மகன் அரவான் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் பாரதப்போர் நிகழும் நேரத்தில் காளியின் முன்பு களபலியாவதற்கு முப்பத்திரண்டு அங்க இலட்சினம் பொருந்திய வீரன் தேவைஎன்ற நிலையில் ‘அரவானை’ பலியிட அனைவரும் தீர்மானிக்கின்றனர். தனக்குத் திருமணம் நடந்த பிறகே களபலியாகத் தயாராக இருப்பதாய் அரவான் கூறுகிறான். திருமணம் முடிந்த அடுத்த நாளில் இறக்கப்போகும் அரவானை மணம் செய்துகொள்ள யாரும் முன்வராத நிலையில் கிருஷ்ணன் மோகினி வடிவங்கொண்டு அரவானைத் திருமணம் செய்து கொள்கிறார். இறுதியில் அரவான் காளியின் முன் களபலியாகி இறக்கிறான்.

இக்கதை வடபுல மகாபாரதக்கதையிலும், தொடக்க கால தமிழ்ப் பாரத நூல்களிலும் இல்லை என்பதோடு கி.பி.9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெருந்தேவனாரின் பாரதவெண்பாவே இக்கதை நிகழ்வை முதன் முதலாக பதிவு செய்கிறது என்று அ.அ.மணவாளன் குறிப்பிடுகிறார். (இரா.சீனிவாசன், ப.33) இந்நூல் பல்லவர் காலத்தைச் சார்ந்தது என்பது முக்கியமானதாகும். திரௌபதிவழிபாட்டோடு இணைந்த சமயம் சார்ந்த பனுவலாக மகாபாரதம் தமிழகத்தில் பரவியதைப்பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் துளசிராமசாமி பல்லவர்களுக்கும் – சாளுக்கியர்களுக்குமிடையே நடைபெற்ற அரசியல் போராட்டத்தின் விளைவாகப் பல்லவர்கள் தாங்கள் ஆட்சி செய்த வட தமிழகப்பகுதிகளில் போர் பற்றிய சாதகமான கருத்தியலை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் பாரதம் படிக்க மானியம் வழங்கினர். பாரதம் படிக்கும் நிகழ்வு கோவிலை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டதால் பாரதக்கதையோடு தொடர்புடைய திரௌபதியம்மன் கோயில்கள் உருவாக்கப்பட்டதோடு, அம்மன் கோவில்கள் திரௌபதியம்மன் கோவில்களாகி மாற்றப்பட்டன என்கிறார்.

அரவான் கதையில், களபலி பற்றிக் கருத்துரைக்கும் பேராசிரியர் த.பழமலய், தமிழ் மரபில் போருக்குச் செல்வதற்கு முன்பாக வெற்றி பெறவேண்டி வீரர்கள் காளியின் முன்பு நவகண்டம் கொடுத்தல் எனும் சடங்கின் வழியே தலையை வெட்டி காளியின் முன் வைத்து வழிபடுவர் என்று கூறுகிறார். (இரா.சீனிவாசன், ப.146-147). அரவான் களபலி நிகழ்வு வளமைச் சடங்கோடு தொடர்புடையதாக இருக்கிறது என்று கூறும் பேராசிரியர் இரா.சீனிவாசனின் கருத்தினை அடிப்படையாகக்கொண்டு அரவான் கதையை ஆராயும் போது ஆண்-பெண் இணைவின் வழி பயிர்களின் உற்பத்தியை அதிகமாக்கமுடியும் என்ற தொல்குடியினர் தாந்திரீக மரபு நம்பிக்கையின் தொடர்ச்சியாக அரவான் – மோகினி இணைவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

மேற்கண்ட கருத்துக்களின் பல்லவர் காலத்தில் பக்தி இயக்கமும் தோற்றம் கொண்டது என்பதின் அடிப்படையில் பார்க்கும் போது, பல்லவ அரசர்கள் தங்களது அரசியல் நடவடிக்கைகளுக்குச் சார்பான கருத்தியலை மக்களிடம் பரப்பும் நோக்கில் தமிழ் மரபின் வழியாகவும், தொல் குடியினரின் நம்பிக்கை வழியாகவும், இந்து மதக்கடவுளான கிருஷ்ணனை இணைக்கும் பொருட்டு அரவான் தொன்மத்தை உருவாக்கியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. எனவே அரவான் கதையில் மோகினித்தொன்மத்தின் செயல்பாடென்பது நாட்டார் சமயத்தை இந்துக் கடவுளின் அடிப்படையில் மேல்நிலையாக்கம் செய்வதற்கும், பல்லவ அரசர்களின் அரசியல் நடவடிக்கைக்கு உதவுகிற வகையிலும் அமைந்திருக்கிறது எனலாம்.

இத்தொன்மத்தை மேலும் ஆராயும் போது, பெண் என்பவள் ஆணின் பாலியல் தேவையை நிறைவு செய்வதற்கு மட்டுமே உரியவள் என்கிற கருத்து கூறப்படுகிறது. இக்கருத்திற்கு ஏற்பவே ஆண் கடவுளான கிருஷ்ணன் பெண்ணாக மாறி ஆணின் பாலியல் தேவையை நிறைவு செய்கிறான். சர்வ வல்லமை படைத்த கடவுளாக இருந்தாலும் பெண்ணாக மாறிய பின்பு மனிதனான ஆணிடம் அடங்கி அவனது விருப்பங்களை நிறைவேற்றுவதே தர்மம் என்ற ஆண்மைய கருத்தியலை இந்தத்தொன்மம் வெளிப்படுத்துகிறது எனலாம்.

இதுவரை செவ்வியல், நாட்டார் சமயங்களின் பின்புலத்தில் மோகினித் தொன்மத்தை ஆராய்ந்ததின் வழி செவ்வியல் சமயத்தில் மோகினித் தொன்மத்தின் செயல்பாடு என்பது, பெண் தெய்வங்களின் வீரம் நிறைந்த போர் ஆற்றலுக்கு எதிராகப் பெண்களைப்பற்றிய தவறான மதிப்பீடுகளை உண்டாக்குகின்ற வகையிலும், தாய்வழிச்சமூகத்தில் பெண்களுக்கு இருந்த உரிமையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நாட்டார் சமயத்தில் மோகினித்தொன்மத்தின் செயல்பாடு என்பது, நாட்டார் வழிபாட்டில் இருக்கின்ற அவைதீகக் கடவுள்களை இந்து சமயத்தில் இணைத்து மேல்நிலையாக்கம் செய்வதவற்கும், தொல்குடி நம்பிக்கைகளை இந்து சமயத்தின் அடிப்படையில் மறு உயிர்ப்பு செய்வதற்கும், பெண் என்பவள் ஆண்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டவள் என்ற கருத்தினைப் பரப்பும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

துணை நூல்கள் :
1. அருணாசலம்.மு, முருகேசன்.சிவ(மொ.ஆ) ‘தமிழ் வழிபாட்டு மரபுகள்’, சந்தியா பதிப்பகம், சென்னை.
2. சீனிவாசன்.இரா, (தொ.ஆ) ‘தமிழகத்தில் பாரதம் வரலாறு கதையாடல்’ மாற்று வெளியீடு, சென்னை.
3. ஞானசம்பந்தன்.அ.ச, ‘பதினென் புராணங்கள்’ கங்கை புத்தக நிலையம், சென்னை.
4. ஸ்டீபன்.ஞா (தொ.ஆ), ‘பண்பாட்டு வேர்களைத் தேடி’ நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம், பாளையங்கோட்டை.

kannan.sarvaganan@gmail.com

* கட்டுரையாளர்: முனைவர் இரா. மணிக்கண்ணன், உதவிப்பேராசிரியர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம்.