ஆய்வு: செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில்

முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113ஓவியக்கலை என்பது காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் ஓர் உயர்ந்த கலையாகும். மனிதன் நாகரிகம் அடையும் முன் காட்டுமிராண்டிகளாக வாழும் காலத்திலேயே ஓவியக்கலை தோன்றிவிட்டது. எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியக் கலை என்றால் மிகையில்லை. தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும் சிதைந்த நிலையிலும் குகைகளிலும் பழைய அரண்மனைகளிலும் கோயில்களிலும் வேறு கட்டடங்களிலும் காணப்படுகின்றன. ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புகள் பல சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் ஓவியம் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற சிலப்பதிகாரம் அடிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக் கூறியிருக்கின்றார். ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானதாகும். ஓவியம் பேசும் செய்திகளும் உணர்த்தும் கருத்துக்களும் மிகப்பலவாகும். இத்தகைய தொல்தமிழரின் ஓவியக்கலையைச் செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில் என்ற தலைப்பின் வாயிலாகக் காண்போம்.

ஓவியக் கலை

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (Composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடுதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில் நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒருகலை ஆகும். 

ஓவியக்கலையானது பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (Abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. மோனாலிசா ஓவியம் இத்தாலிய ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ்பெற்ற கலைநயமிக்க ஓவியங்களில் ஒன்றாகும்.

ஓவிய நூல்

ஓவியம் பற்றித் தனித்த நிலையில் விளக்கும் முழுமையான பண்டைய ஓவிய நூல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் இவை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஓவிய நூல்கள் வழக்கில் இருந்து, காலப்போக்கில் கலைவரலாற்றாசிரியர் கரங்களில் சிக்காது மறைந்து போயிருக்க வேண்டும். தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலையின் குறிப்புகளால் தமிழ்மொழியில் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட ஓவிய நூல் இருந்தது என்று கூறலாம்.

நாட்டிய மகளிர் ஓவிய நூலினைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். அதன்படி மாதவி அந்நூலினைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவளாக விளங்கினாள் என மணிமேகலை சுட்டக் காணலாம்.

நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்
கற்றுத்துறை போகிய பொற்றொடி நங்கை (மணி.2:30-32)

சித்திரகாரப் புலி என்று பெயர் பெற்ற மகேந்திரவர்மப்பல்லவன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த தட்சிண சித்திரம் என்ற நூலுக்கு உரையெழுதியுள்ளான். இதனை மாமண்டூர் குடைவரைக் கோயிலிலுள்ள அவனது கல்வெட்டு தெரிவிக்கிறது. இதனால் தென்னிந்திய ஓவிய மரபுகளைத் தெரிவிக்கும் ஓவிய நூல்கள் தமிழகத்தில் இருந்துள்ளன என அறியலாம். வடமொழியில் இயற்றப்பட்ட சிற்ப நூல்களிலிருந்து ஓவியம் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. ஆனால் தனித்த நிலையில் ஓவியம் பற்றித் தெரிவிக்கும் பழமையான ஓவிய நூல்கள் வடஇந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை. விஷ்ணு தர்மோத்திரம், அபிலாஷ்தார்த்த சிந்தாமணி, சிவ தத்துவ ரத்தினாகரம், சில்ப ரத்தினம், நாரத சில்பம், சரசுவதி சில்பம், பிரஜாபதி சில்பம் முதலியவை சித்திரங்கள் பற்றித் தெரிவிக்கும் நூல்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இந்நூல்கள் ஓவியத்தின் தன்மை, வகைகள், செயல்முறை, வண்ணங்கள், துணைக் கருவிகள், மூலப் பொருட்கள், நற்பண்புகள், குறைகள், நடைமுறை, திறனாய்வு மரபுகள் பற்றிக் கூறுகின்றன. விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள சித்திர சூத்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே பண்டைய ஓவியக்கலை நுட்பம் பற்றித் தெரிவிக்கும் தலைசிறந்த பகுதியாகும். மேற்கண்ட ஓவியம் பற்றிய நுட்பங்கள் இதில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. 

ஓவிய உறுப்புகள்

ஓவியம் பின்வரும் ஆறு அங்கங்களைக் கொண்டதாக உள்ளது.

1. ரூபபேதம் – உருவ வேறுபாடு
2. பிரமாணம் – அளவுப் பொருத்தம்
3. பாவம் – உணர்ச்சி, சுவை (ரசம்)
4. லாவண்ய யோஜனம் – பளபளப்பு, கவர்ச்சித் தோற்றம்
5. சாதுருச்சியம் – உருவ ஒற்றுமை
6. வர்ணிக்கா பங்கம் – மேடு பள்ளங்கள் காட்டும் வகையில் வண்ணங்கள் கொடுத்தல்

ஓவியத்தைப் பின்வரும் நான்கு பிரிவுகளாக விஷ்ணு தர்மோத்தரம் வகைப்படுத்துகிறது.

1. சத்தியம் – இயற்கைத் தன்மையானது
2. வைணிகம் – இசைத் தன்மை நிறைந்தது
3. மிச்ரம் – கலப்புத் தன்மையுடையது
4. நாகரம் – நாகரிகத் தன்மை மிக்கது

வர்த்தனைகள்

ஓவியத்தை வகைப்படுத்திய பின்னர் படிப்படியாக ஓவியத்தில் நிறம் மாற்றுவதற்கு வர்த்தனை என்று பெயரிட்டு அதனைப் பின்வரும் மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகிறது விஷ்ணு தர்மோத்தரம்.

1. பிந்துஜ வர்த்தனம் – புள்ளிகளால் ஓவியம் தீட்டுவது
2. பத்ரஜ வர்த்தனம் – வளைகோடுகள் இட்டு நிழல் வண்ணம் காட்டுவது
3. ரைகீச வர்த்தனம் – நுண்ணிய கோடுகளால் படிப்படியாக நிறம் மாறுவது

ஓவியமும் ஓவியரும்

ஓவியக்கலையை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி என்று சுட்டுகின்றனர். ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப் புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என்று அழைக்கப்படுகின்றனர். ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர். நற்றிணைப் பாடல் (118:7) ஒன்று ஓவியரை ‘ஓவ மாக்கள்’ என்கிறது. ஆண் ஓவியர் சித்திராங்கதன் எனவும், பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் அழைக்கப்படுகின்றனர்.

மணிமேகலையில் ஓவியர், ஓவிய மாக்கள், வித்தகர் என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். ஓவியத்தை வட்டிகைச் செய்தி என்று மணிமேகலை கூறுகிறது. வட்டில்களில் வண்ணங்களைக் கொண்டு சித்திரம் வரைவதால் ஓவியம் வட்டிகைச் செய்தி என்று சொல்லப்பட்டுள்ளது. ஓவியத்தைக் குறிக்க ‘ஓவம்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் கையாளப் பட்டுள்ளது. அழகிய வீடு, நகர், கட்டடம் ஆகியவை ஓவத்திற்கு ஒப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளன.

ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர் (பதிற்.88:28)
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் (புறநா.251 :1)
ஓவத் தன்ன வினைபுனை நல்லில் (அகநா.98:11)

ஓவியம் புலப்படுத்தும் கருத்தைக் குறிப்பிடும் போது ‘ஓவச் செய்தி’ என்று அகநானூறு(5:20) தெரிவிக்கின்றது.

ஓவியக் கலைஞர்களைப் பற்றியும் அவர்களது அருந்திறன் குறித்தும் நற்றிணை, மதுரைக்காஞ்சி போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. மதுரைக்காஞ்சியோ, எக்காட்சியினையும் தமது ஓவியத்திற்குள் கொண்டு வந்து ஒப்பிட்டுக் காட்டுவர்; ஓவியர்கள்,எதனையும் நுட்பமாக உணர்ந்தவர்கள். ஆழமான நோக்குடையவர் என்று கூறுகிறது. இதனால் அவர்களைக் ‘கண்ணுள் வினைஞர்’ என்று பெயரிட்டு இங்கும் பதியப்பட்டுள்ளது. 

எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற்
கண்ணுள் வினைஞர் (மதுரைக். 516 – 518)

‘கண்ணுள் வினைஞர்’ என்ற சொல்லுக்குப் பத்துப்பாட்டு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “நோக்கினார் கண்ணிடத்தே தம்தொழிலை நிறுத்தலின் கண்ணுள் வினைஞர்” என்று உரை எழுதியுள்ளார். எனவே சிறந்த ஓவியர்கள் என்பவர்கள் காண்பவர்களின் கண்களில் தாம் வரைந்த காட்சியை நிறுத்தும் திறன் படைத்தவர்கள் என்று அக்காலத்தில் கருதப்பட்டமை சிறப்பிற்குரியது.

துகிலிகை

கண்கவரும் ஓவியம் வரைவதற்காகப் பயன்படுத்தப் பட்ட தூரிகையை நற்றிணைப் பாடல் ஒன்று ‘துகிலிகை’ என்று குறிப்பிடுகிறது. மென்மையான தூரிகையைப் பாதிரி மலரோடு ஒப்பிட்டுக் கூறுகிறது. மேலும் தூரிகைக்குரிய இறகுகளை அரக்கைக் கொண்டு ஒட்டிச் சேர்த்து, சங்ககால ஓவியர்கள் உருவாக்கியுள்ளனர் இதனை நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.

ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி (நற்.118) 

சிலப்பதிகாரத்தில் ஓவியம்

சிலப்பதிகாரத்திலும் ஓவியக் கலைஞர்கள் கண்ணுள் வினைஞர் என்று சுட்டப்படுகின்றனர், (சிலம்பு.5:30). ஓவியம் வரையப் பட்ட திரைச் சீலைகள் பற்றிச் சிலம்பு தெரிவிக்கிறது. மாதவியின் நடனம் அரங்கேற்றப்பட்ட மேடையில் இத்தகைய ஓவியத் திரைச் சீலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஓவிய எழினி என்று அழைக்கப்பட்டன. அரங்கேற்ற மேடையின் விதானத்தில் அனைவரும் தொழுது போற்றும்படியாக நால்வகை வருண பூதங்களின் உருவங்களை ஓவியமாக எழுதி வைத்தனர். மேடையின் மேல்விதானம் அழகுறக் காட்சியளிப்பதற்குச் சித்திரம் வரைந்த திரைச் சீலைகளைக் (மேற் கட்டி) கட்டி வைத்தனர் என்று சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையால் அறிய முடிகிறது. 

ஓவிய எழினி

ஓவிய எழினி என்பது நாடகமேடையில் பல வண்ணங்களில். தீட்டப்படும் திரைச்சீலையாகும். கோவலனும் மாதவியும் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் (புகார்) புன்னை மரத்து நிழலில் ஓவியம் வரையப்பட்ட திரைச் சீலைகளை அறை போன்றுகட்டி மறைவாக்கி அதனுள் கட்டிலின் மீது இருந்தனர் என்று சிலம்பின் கடலாடு காதை உரைக்கிறது. 

புன்னை நீழற் புதுமணற் பரப்பில்
ஓவிய எழினி சூழவுடன் போக்கி
விதானத்துப் படுத்த வெண்கால் அமளிமிசை (சிலம்பு.6:168-170)

மணிமேகலையில் ஓவியம்

மணிமேகலையில் ஓவியத்தைப் பற்றிய பல குறிப்புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. புனையா ஓவியம் என்பது கோட்டினால் வரைந்த வண்ணம் தீட்டப்படாத ஓவியம். புனைந்த ஓவியம் என்பது சித்திரம் – வண்ணங்களினால் புனைந்து அமைத்த ஓவியம். புனையா ஓவியம் பற்றி மணிமேகலையில் பல இடங்களில் வருகின்றது. வீட்டினுள் புகுந்து, எளிய கோலத்துடன் அலங்காரப் புனைவின்றி அசையாது நின்ற மணிமேகலையைப் புனையா ஓவியத்திற்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார் சாத்தனார். 

மனையகம் புகுந்து மணிமே கலைதான்
புனையா ஓவியம் போல நிற்றலும் (மணி.16:130-131)
புனையா ஓவியம் புறம்போந் தென்ன (மணி.22:88) 

தலைவனைப் பிரிந்ததால் மிகுந்த ஆடை அலங்காரங்கள், புனைவுகள் இல்லாமல் வருத்தத்துடன் எளிமையாகக் காட்சியளித்த தலைமகளை (பாண்டிமாதேவி) நெடுநல்வாடை புனையா ஓவியம் போல இருந்ததாகத் தெரிவிக்கிறது.

புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் (நெடுநல்.147)
இவ்வடிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் “வண்ணங்களைக் கொண்டெழுதப் படாத ஓவியம்” என்று பொருள் கூறுகின்றார்.

வட்டிகைச் செய்தி

புகாரில் தன் காதலியுடன் யாழ் வாசித்துக் கொண்டிருந்த எட்டி குமரன் திடீரெனச் சிந்தனை வயப்பட்டவனாய் ஓவியம் போன்ற அசைவற்று இருந்தான். அசைவற்று இருந்த அவன் நிலையை வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவை போன்று இருந்ததாகச் சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.

தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தோன்…. (மணி.4:55-58)

சித்திரம் வல்ல ஓவியர் தமது கைத்தொழிலால் சிறப்புடன் வரைந்து வைத்த ஓவியச் சீலையைப் போர்த்தியது போன்று உவவனம் (ஒரு தோட்டம்) பூம்புகாரில் இருந்தது என்று மணிமேகலை கூறுகிறது.

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் (மணி.3:167-169)

தவத்துறவிகள் உறைந்த தவச்சாலைகள், பெரிய மாளிகை, வீடுகள் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து வைக்கப்பட்டிருந்ததாக மணிமேகலை குறிப்பிடுகிறது. வஞ்சி மாநகரில் புத்தத் துறவிகள் இருக்கும் தவச்சாலையில் ஓவியம் வரையப் பட்டிருந்ததாக மணிமேகலை குறிப்பிடுகிறது. 

சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்
கோலங் குயின்ற கொள்கை யிடங்களும் (மணி.28:66-67)

பூம்புகாரில் சுடு மண்ணால் (செங்கல்லால்) கட்டப்பட்ட வீடுகளின் வெளிப்புறத்தில் பூசப்பட்ட வெண்சுதையில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இவற்றில் வானவர் முதலிய பல்வகை உயிர்களின் உருவங்கள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தன. அவ்வழியே சென்ற மக்கள் கண்ணைக் கவர்ந்த அவ்வோவியங்களைக் கண்டு மகிழ்ந்து நின்று கொண்டிருந்தனர் என்று மணிமேகலை எடுத்துரைக்கிறது. 

வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியங் கண்டுநிற் குநரும் (மணி.3:126-131) 

ஓவியம் தீட்டப்படும் இடங்கள்

செவ்வியல் கால மக்கள் அரண்மனை, வீடு, பொது இடங்கள் ஆகியவற்றில் வண்ண ஓவியங்களை வரைந்து வைத்தனர். மன்னனது மாளிகை, அரசன் ஓய்வெடுக்கும் இடம், அந்தப்புரம் போன்ற இடங்களில் ஓவியங்கள் வரையப்பட்டமையை செவ்விலக்கியம் வெளிப்படுத்துகிறது. பாண்டிய நாட்டின் மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் ஓவியங்கள் வரையப்பட்ட மண்டபம் ஒன்று இருந்தது. இது எழுத்து நிலை மண்டபம் என்றும் எழுதெழில் அம்பலம் என்றும் அழைக்கப் பட்டதாகப் பரிபாடல் கூறுகிறது. முருகனுக்குரிய குன்றத்திலுள்ள இம்மண்டபத்தில், காமன் தனது மெல்லிய மலர்க்கணையைக் கொண்டு அவனது சிறப்பு மிக்க தொழில் நுட்பம் சிறந்து விளங்கும்படி வரைந்தது போன்ற வண்ண ஓவியம் வரையப் பட்டிருந்தது என்று பரிபாடல் சுட்டுகிறது.

நின் குன்றத்து
எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர் (பரி.18:27-29)

இரதியும் மன்மதனும் காட்சிதரும் உருவங்கள் இம்மண்டபத்தில் வரையப் பட்டிருந்தன. மேலும் கௌதமனின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு வந்த இந்திரன் பூனை வடிவில் வந்து கௌதமன் வீட்டில் நுழைந்தது, நிறையழிந்த அகலிகையின் கோலம், வீட்டிற்குத் திரும்பி வந்த கௌதமன், அகலிகை மீது கோபம் கொண்டு அவளைக் கல்லாக்கியது முதலிய காட்சிகள் பரங்குன்றத்து எழுத்து நிலை மண்டபத்து ஓவியத்தில் இடம் பெற்றிருந்தன. இதனைப் பரங்குன்றத்திற்கு வந்தவர்கள் கண்டு ஆவலுடன் ஒன்றிப்போய் அங்குள்ள காட்சிகளைக் குறித்துப் பேசிக் கொண்டனர் என்று பாடல் குறிப்பிடுகிறது. 

இரதி காமன் இவளிவன் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இவளக லிகைஇவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படிவிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல யெழுத்துநிலை மண்டபம் (பரி.19:48-53)

பாண்டியரின் அரண்மனையில் சித்திரங்கள் நிறைந்த ஒரு தங்குமிடம் இருந்தது. இது சித்திர மாடம் என்று அழைக்கப் பட்டது. பாண்டியன் நன்மாறன் இச்சித்திர மாடத்தில் தங்கியிருந்த போது உயிர் நீத்ததாகப் புறநானூறு தெரிவிக்கிறது. இதனால் இம்மன்னன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டமை சுட்டத்தக்கது. மதுரையில் பாண்டியரின் அரண்மனையில் அழகுமிக்க ஓவியங்கள் இருந்ததாக நெடுநல்வாடை கூறக்காணலாம். பாண்டியனது அரண்மனையின் அந்தப்புரச் சுவர்கள் செம்பினை உருக்கிச் செய்தது போன்று உறுதியாக இருந்தன. வெள்ளியைப் போன்று வெண்மையான சுதை பூசிய அச்சுவர்கள் மீது மலர்கள் பூத்துக் குலுங்கும் கொடிகள் வண்ண ஓவியமாக வரையப்பட்டிருந்தன என்று நெடுநல்வாடை தெரிவிக்கிறது.

வெள்ளி யன்ன விளங்கும் சுதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பின் நல்லில் (நெடுநல்.110-114)

அரையான பாண்டிமாதேவி அமர்ந்திருந்த அந்தப்புரக் கட்டிலுக்கு மேலே இருந்த விதானச் சுவரில் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. இவற்றில் மேட இராசி முதலிய இராசிகளின் உருவங்கள் இருந்தன. மேலும் பாண்டியரது குல முதல்வனான சந்திரனோடு அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சியும் தீட்டப் பட்டிருந்தது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்திருந்த பாண்டி மாதேவி அவ்வோவியத்தைக் கண்டு தானும் உரோகிணியைப் போன்று எப்போதும் கணவனோடு சேர்ந்திருக்க முடியவில்லையே என்று வருத்தங் கொண்டதாக நெடுநல்வாடை கூறுகிறது.

புதுவது இயன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்நிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா (நெடுநல்.159-163)

புகார் பட்டினத்துச் சோழர் அரண்மனையில் வெளிப்புறத்துச் சுவர்களின் மீது ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன. அதன் வழியே சாலையில் சென்ற தேர்களால் சேறும் தூசியும் எழும்பி அவ்வோவியங்கள் மீது படிந்திருந்தன. இதனால் வெண்மை நிற அரண்மனைச் சுவர்கள் சாம்பலில் புரண்ட ஆண் யானை போன்று தோன்றியது என்று கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பாடல் குறிப்பிடக்காணலாம்.

தேரோடத் துகள்கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டும் (பட்டினப். 47 – 50)

தொல்தமிழ் மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்படுத்தினர். இதனைத் தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறியலாம். தமிழ்நாட்டில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஓவியமே சித்திர எழுத்துக்களாகவும் நாளடைவில் மொழிக்குறியீடுகளாகவும் வளர்ச்சியடைந்துள்ளன. அழகிய ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் ஆகும். அவ்வரைகோடுகள் மேல் சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்கள் பூச அழகிய ஓவியங்களாக உருவெடுக்கும். அக்காலத்தில் ஓவியங்கள், வரைவதற்கென்று தனியிடங்கள் அமைந்திருந்தன. இவ்விடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.

தொல்தமிழகத்தில் நாடாளும் அரசர் வாழும் அரண்மனைகள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களின் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், துணிகள் ஆகியவற்றில் ஓவியங்களை வரைந்து அழகு செய்தனர். ஓவியங்களில் நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய மனித இயல்புகளையும், வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை முதலிய மெய்பாடுகளையும், உத்தமம், மத்திமம், அதமம் மற்றும் தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்குரிய‌ ஓவிய மரபுகளாக விளங்குகின்றன. சங்க காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்து போகத் தொடங்கியது. மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவ மன்னர்கள் ஆவர்.

பல்லவர்கால ஓவியங்களைப் பனமலை, திருமலை மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர்கோவில் முதலிய இடங்களில் சிதைந்த தோற்றத்தோடு காணலாம். திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன. புதுக்கோட்டைக்கு அருகில் சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றுதலுக்கு உரியன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அவனிப சேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தில் மதுரை ஆசிரியர் இளம்கௌதமன் இவ்வோவியங்களை வரைந்தார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன் அரசி ஓவியங்கள் ஆகியவை நம் கண்ணை கவர்வனவாக அமைந்துள்ளன.

சோழர் கால அழகிய ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் காணலாம். சேரமான், சுந்தரர் கயிலைச் செல்லும் காட்சி, சிவபெருமான் முப்புரம் எரித்த காட்சி, நாட்டிய மகளிர், மாமன்னன் இராசராசன் ஆகியவை வரலாற்றுச் சிறப்பை உணர்த்துவன. திருவரங்கம், திருப்பதி, தில்லை, திருவாரூர், குடந்தை, மதுரை, காஞ்சி, முதலிய இடங்களில் விஜயநகர நாயக்க மன்னர்களின் ஓவியங்கள் எழில் மிகுந்தவையாகும். கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் ஓவியக்கலை நன்கு வளர்ச்சியுற்றது. ஓலைகளிலும், கண்ணாடிகளிலும் தந்தங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பெற்றன. வண்ணங்களின் வனப்புக்கேற்ப இரத்தினங்கள் பதிக்கப்பெற்றன. ஓவியர்களின் கைவண்ணங்களை இன்றும் கோவில் கூரைகளிலும் சுவர்களிலும் மரச்சிற்பங்களிலும் காணலாம். பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மைச் சிறப்புடன் தமிழர் பாரம்பரிய ஓவியக் கலையைக் காப்பது நமது கடமையாகும்.

துணைநூற்கள்

1. மாத்தளை சோமு. வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். (2005)
2. உ. வே. சாமிநாதையர், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் 1889
3. மலைபடுகடாம், பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, I 1956
4. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940
5. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு,. வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,. 2ஆம் பதிப்பு,. 1958

tamilveppp@gmail.com

 

*கட்டுரையாளர் – – முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 –