ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர்

- முனைவர் பா.சத்யா தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -முன்னுரை
சங்க காலச் சமூக மக்கள் தொடக்கத்தில் இனக்குழுச் சமூகமாக வாழ்ந்தனர். தங்களுக்கான ஐந்திணைப் பகுப்பில் அவரவர்களுக்கான வாழ்வுச் சூழலை மேற்கொண்டனர். ஆனால் வேளாண்மையின் செழிப்பும், வாணிபத்தின் வளர்ச்சியும் மேம்பட மெல்ல நிலவுடைமைச் சமூகம் தோற்றம் பெற்றது. இதன் விளைவாக அரசர்களும் நிலக்கிழார்களும் உருவாயினர். பெண்களையும் நிலத்தையும் உடைமைப் பொருள்களாகக் கருதினர். அதில் பெண் பண்பாட்டையும் குடும்ப அமைப்பையும் கட்டிக்காக்கும் பொறுப்புடையவளாக நியமிக்கப்பட்டாள்.

தமிழ்ச் சமூகம் அரசர்களும் நிலக்கிழார்களும் தலைமை ஏற்று வழி நடத்திய போதும் அடிமை முறையோ தீண்டாமை முறையோ வழக்கத்தில் இருந்ததாகத் தென்படவில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற நிலையிலேயே சமூக வாழ்வு சூழல் நிகழ்ந்ததை அறிய முடிகிறது. பேரரசர்களின் தோற்றத்திற்குப் பின்னரே போர்ச்சூழலில் பிறநாட்டின் வீரர்களை சிறைப்பிடித்தலும் பெண்ணைப் பொருளாக எண்ணி கொள்ளையிட்டு கொணர்தலும் நடந்தேறியது. இவ்வாறு கொள்ளையிட்டு கொணர்ந்தப் பெண்களே “கொண்டி மகளிர்” எனப்பட்டனர்.

ஆரியர்களின் நுழைவுக்கு பின்னர் இச்சூழல் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழக வரலாற்றில் இவர்களின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகச்சூழலில் பெண்கள் இரண்டாம் தரப்படுத்தப்பட்டதும் ஒதுக்கப்பட்டதும் இதன் பின் தான் அதிகரித்தது எனலாம்.

“கி.பி.3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் சாசனம் ஒன்றின்படி நிலத்தோடு அதனைச் சேர்ந்த ஆட்களும் தானமாக அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது”என்று ‘இந்தியாவில் வரலாறு’ எனும் நூல் (மாஸ்கோ 1979-பக்:194) கூறும் குறிப்பும் கவனிக்கத் தக்கது.

இன்னும் குறிப்பாக அடுத்த நாட்டுக் கூட்டத்தினருடன் சண்டையிட்டு, வெற்றி கொண்ட பிறகு அவர்தம் ஆடு, மாடு செல்வங்களைக் கொள்ளையடித்து வந்ததோடு அவர்தம் வீட்டு – நாட்டுப் பெண்களையும் அடிமைப் பெண்களாகப் பிடித்து வந்த செய்திகளும் வெகு சில (வென்றவர் பெருமை கூறும்) இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.

கொண்டிமகளிர் – பெயர்க் காரணம்
“கொண்டி மகளிர் என்பது விலைமகளிரைக் குறிக்கும் பெயராகும்” என கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொருள் தருகிறது. www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/K11_concordance.html எனும் இணையம் பின் வருமாறு கொண்டி மகளிர்க்கு விளக்கம் தருகிறது. பகைவர் மனையோராய்ச் சிறைப்பிடித்து வரப்பட்ட மகளிர்; இவர்களைத் தெய்வத் தொண்டிற்குப் பயன்படுத்துதல் அரசன் ஆற்றற்குப் புகழ்தருவது. (பட். பாலை. 246 – 249 நச்.)

www.agarathi.com கொண்டி மகளிர்க்கு இருபொருள் தருகிறது
1. capative women – சிறைப் பிடிக்கப்பட்ட மகளிர்
2. prostitutes – பரத்தையர் .

‘பட்டினப்பாலை” (வரி:246) கூறும் ‘கொண்டி மகளிர்’ எனும் தொடருக்குத், ‘தோற்றார் பால் பிடித்து வந்த ‘மகளிர்’ என்று பழைய உரையாசிரியரே பொருள் கூறுகிறார்.

கொண்டி மகளிர் என்போர் கொண்டு வரப்பட்ட மகளிர் என்ற பொருளே ஏற்புடையது. அதில் சிலர் ஏவல் ஆளாகவும் சிலர் யாருக்கும் அடங்காதப் பெண்களாவும் சிலர் பரத்தையராகவும் இது போல இன்னும் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம். ஏனெனில் அவர்கள் எதிரி நாட்டில் அடிமைகளாக்கப்பட்ட காரணத்தினால் எந்த உரிமையும் சலுகையும் கிடைக்க வாய்ப்பு இல்லை பிறர் ஏவும் எந்த வேலையானலும் செய்ய வேண்டிய கட்டயத்திலேயே இருந்திருப்பர். இதனால் அவர்களின் வாழ்வு பரிதாபத்துக்குரிய ஒன்றாகவே இருந்திருக்கும். இத்தகைய வாழ்வுச்சூழல் ஆய்வுக்குரியதாகும்.

“பெண்ணடிமைகளின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது. அவர்கள் விளைநிலங்களிலும் வீடுகளிலும் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதோடு கிழார்களின் காமலீலைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். தோல்வியடைந்த மன்னர்களின் மனைவிமார்கள் அரசர்களின் மனைவியர் (Halm) பட்டியலில் சேர்க்கப்பட்டனர் படைத்தலைவர், பார்ப்பனர், நிலப் பிரபுக்களின் இற்பரத்தையராக., காதற் பரத்தையராக, சேரிப்பரத்தையாக்கப்பட்டனர். அகப்பாடல்களில் இடம்பெறும் செவிலித்தாய்கள் இப்படி வந்த அடிமைகளாக இருக்க முடியும். சில பெண்ணடிமைகள் கோயில்களை மெழுகி, விளக்கேற்றி வைத்து வாழ்ந்தனர். அவர்களுக்குக் கொண்டி மகளிர் என்று பெயர்”. என சங்க காலத் தமிழ்ச் சமுதாயத்தில் அடிமை முறை எனும் ஆய்வுக் கட்டுரையில் முனைவர் ந. பிச்சமுத்து குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் கொண்டி மகளிர் என்றால் பரத்தையர் எனக் கொள்ளவது ஏற்புடையதல்ல என்ற கருத்தின் அடிப்படையிலேயே இக்கட்டுரை ஆராயப்படுகிறது.

கொண்டி மகளிர் சொல்லாட்சி
தமிழ் இலக்கியங்களில் மூன்று நூல்களில் மட்டுமே கொண்டி மகளிர் எனும் சொல் இடம் பெறுகின்றன. சங்க காலத்தின் சற்றுப்பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தப் பட்டினப்பாலை (வரி 246) மதுரைக்காஞ்சி (வரி 583) மற்றும் சங்கம் மருவிய காலமாகிய கிபி ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த மணிமேகலை (18:108-109) என்பனவாகும்.

இவற்றை நோக்கும் போது சங்கால பிற்காலத்தில்தான் போரில் வெற்றி பெற்ற மன்னர் தோற்ற மன்னரின் மனைவியரையும் பிற பெண்களையும் சிறைப் பிடித்து வரும் வழக்கம் உருவானதோ? என எண்ண இடமுள்ளது.

“உற்பத்தி சக்திகள் உயராத, வளராத அன்றைய சமுதாயம் இயங்க, வளர அடிமை முறை தேவைப்பட்டது. அத்தியாவசியமாக இருந்தது; இந்த அடிமைகளும் உற்பத்திக் கருவிகளாகவும், பேசும் கருவிகளாகவும் கருதப்பட்டார்கள். இது கிரேக்க நாட்டுக்கும் பொருந்தும், தமிழ்நாட்டிற்கும் பொருந்தும். தமிழகத்தில் அன்றைய நிலையில் சிறை பிடித்து கொண்டு வரப்பட்ட பெண்களைப் பற்றி குறிப்பிடுகிற பட்டினப் பாலையாசிரியர் அவர்களை கொண்டி மகளிர் என்று சொல்கிறாராம்.

சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வாழ்ந்த மருத நிலப் பகுதிகளிலும் உபரி உற்பத்தியைக் பெருக்க இன்றையது போல் இயந்திரங்கள் வளராத அக்காலத்தில் அடிமைகளைப் பயன்படுத்தியது தவிர்க்க முடியாத சமூக விளைவாக இருந்தது. அன்றைய தமிழகத்திலும், கேரளத்தில் பெரும்பகுதியும் மூவேந்தர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது என்பதனை நினைவில் கொண்டால், பிறர் நாடு என்பது பெரும்பாலும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியினையே குறிக்கும். எனவே, போரில் தோற்ற தமிழ் மன்னர்களின் மனைவியர்களும், அந்நாட்டு மகளிரும் அடிமைகளாகப் பகைவர் நாட்டில் பணி புரிந்துள்ளது தெளிவு” என நூலாசிரியர் (தமிழகத்தில் அடிமை முறை) ஆ.சிவசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.

பட்டினப் பாலை
கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்
பரு நிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப்
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் (246-251)

மேற்குறித்த பாடல் வரிகளுக்கு சூழலுக்கு ஏற்ப சில உரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

போரில் சிறைப் பிடித்துக் கொண்டுவரப்பட்ட பகையரசர்களின் மனைவிமார்கள், ஊரரர் நீர் உண்ணும் நீர்த்துறையில் நீராடி எழுந்து, அந்திப் போதில், மெழுகித் தூய்மை செய்து, அவியாத விளக்கேற்றிவைத்து, மலர்தூவி அணி செய்ய, பலரும் வந்து தொழ. ஊர்ப் பொதுவிடத்தே “கம்ப” வடிவிலான கடவுளும் வழிபடப்பட்டது என்பதற்கு நச்சினார்க்கினியார் பின் வருமாறு உரைக்கூறுகிறார்.

“மகளிர் பலரும் நீருண்ணும் துறையிலேச் சென்று முழுகி மெழுகும் மெழுக்கத்தினையும், அவர்கள் அந்திக் காலத்தே கொளுத்தின அவியாத விளக்கத்தினையும்,

உடைய பூக்களைச் சூட்டின தறியினையுடைய அம்பலம். கந்து – தெய்வம் உறையும் தறி, வம்பலர் சேக்கும் பொதியில் – புதியவர்கள் பலரும் ஏறித் தொழுதற்குத் தங்கும் பொதியில். பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்ப மகளிர் வைத்தார். அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதி, ” என்று நச்சினார்க்கினியார் உரை விளக்கம் தந்துள்ளார்.

மேலும் பழங்காலத்தில் கற்களில் தெய்வத்தை நிறுத்தி வழிபட்டனர். “நடப்பட்ட ஒரு மரக்கட்டை, ‘கந்து’ எனப்பட்டு வழிபடப்பெற்றது. அக்கட்டையில் தெய்வம் இருப்பதாக மக்களால் நம்பப்பட்டமையின் அது கடவுளாகவே கருதப்பட்டது.’’  என்று ந.சுப்பிரமணியன்,  சங்க கால வாழ்வியல்,  ப. 422 எனும் நூலில் குறிப்பிடுகிறார்.மேலும் பொதியில் எனப்பட்ட மன்றங்களில் ஒரு மேடையில் இத்தகு கந்துகள் இருந்தன என்றும் அதற்கு கொண்டி மகளிர் குளிர்ந்த நீரிற் படிந்து மன்றத்தினை மெழுகுவர் ஆனால் நாளடைவில் பேணாரின்மையால் அவ்வம்பலங்கள் பாழாயின. அதனால் அங்கு குடிகொண்டிருந்த தெய்வங்கள் இடம்பெயர்ந்து சென்றன எனக் கூறப்படுகிறது.

இச்சூழலே கரிகாலன் வெற்றி மற்றும் வீரச் சிறப்பின் போது பின்வருமாறு உரைக் கூறப்படுகிறது. கரிகாலன் வெற்றிக்கு முன் பகைவர் நாட்டில் அந்தி நேரம் வந்ததும் கொண்டி மகளிர் ஆற்றில் குளித்துவிட்டு வந்து ஊர்மன்றத்தை மெழுகிப் பூ வைத்து அங்கிருந்த தூணில் விளக்கேற்றினர். அவர்களும் அங்கு வரும் புதியவர்களும் மன்றிலிருந்த கந்திற் பாவையைத் தொழுதனர். கரிகாலன் வெற்றிக்குப் பின்- வழிபட்ட அந்தத் தூண்கள் இவனது வெற்றிக்குப் பின் வெறுங் கல்லுத் தூணாக மாறியது. களிறும் பிடியும் புணர்ச்சிக்காலத்தில் அதில் உரசிக்கொள்ளும்படியும், உறைவிடங்களாகக் கொள்ளும்படியும் ஆயிற்று என மன்னனின் வீரம் முன்னிறுத்தப்படுகிறது.

கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா வேறு பொருள் தருகிறது. அதாவது காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கொண்டிமகளிர் அந்தி வேளையில் நீராடி, மறங்களில் விளக்கேற்றி வைத்துக்கொண்டு ‘வம்பலர்’ என்னும் புத்திளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் தூணைப் பற்றிக்கொண்டு புதியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பர் என்பது பரத்தையர் என்ற பொருளில் கூறுப்படுவதாகும்.

மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையில் காணும் போது; பக்தி என்ற நிலையிலும், வீரச்சிறப்பைக் கூறும் போதும், பரத்தையர் என்ற நிலையிலும்; பெண்கள் மன்றங்களை தூய்மை செய்து விளக்கேற்றியச் செய்தி மாறுபடவில்லை.மேலும் கொண்டி என்பதற்கு

கொள்ளை என்று பொருள் கொண்டு, பிறர் நாட்டில் கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர்கள் என்பதற்கு கொண்டி மகளிர் என்று அர்த்தப்படுமாம். இந்தப் பெண்கள் காவிரிப் பூப்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றும் பணி செய்தவர்களாம். என தமிழகத்தில் அடிமை முறை எனும் நூலில் ஆ.சிவசுப்ரமணியம் குறிப்பிடுகிறார். இதன் வழி பட்டினப்பாலை கூறும் கொண்டி மகளிர் ஏவல் மகளிராக இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

மதுரைக்காஞ்சி
ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்
ஒண் சுடர் விளக்கத்து, பலர் உடன் துவன்றி,
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான, கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி, குண்டு நீர்ப்
பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி, நீர் நனை மேவர,
நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர (579-589)

இங்கு குறிப்பிடப்படும் கொண்டிமகளிர் யாருக்கும் அடங்காமல் கொண்டித்தனம் செய்யும் மகளிர் என்ற பொருளில் கூறப்படுகிறது.

கொண்டி மகளிர் இசை முழக்கத்துடன் நடனப் பொய்தல் ஆடுவர்.கொண்டி மகளிர் என்போர் மாயம் செய்யும் வரைவின் மகளிர் அல்லர். யாருக்கும் அடங்காமல் கொண்டித்தனம் செய்யும் மகளிர்.பிறரது நெஞ்சை நடுங்கச் செய்பவர்கள்.வானவ மகளிர் மற்றவர் மயங்க ஆடுவர்.யாருக்கும் எந்த உடலின்பமும் தர மாட்டார்கள். இவர்கள் தங்க வளையல் மின்னும்படியும் பூண்டிருக்கும் புதிய அணிகலன்கள் பொலியும்படியும் பலராகக் கூடி விளக்கு வெளிச்சத்தில் விளையாடுவார்கள்.இந்த வானவ மகளிர் போல் கொண்டிமகளிர் நள்ளிரவில் கூடி விளையாடுவர்.யாழில் பண் இசைத்துப் பாடுவர். முழவிசைக்கேற்ப ஆடுவர்.ஆழமான நீர்த்துறைகளை அடுத்துக் குவிந்திருக்கும் மணலில் விளையாடுவர். ஆடும் விளையாட்டில் சலிப்பு தோன்றும்போது அதனை விட்டுவிட்டுப் பூப்பறிக்கும் விளையாட்டில் ஈடுபடுவர். நீரில் நனைவதைப் பொருட்படுத்தாமல் குவளை மலர்களைப் பறித்து அதன் காம்புகளை நன்றாக அலசிவிட்டுக் கட்டாக மனைக்குக் கொண்டுசென்று அழகுபடுத்தி வைத்துக்கொண்டு பொய்தல் விளையாட்டு விளையாடுவார்கள்.(பொய்தல் என்பது பொருள்களை மறைத்தும், ஆள் மறைந்தும் விளையாடும் விளையாட்டு)

இங்கு குறிப்பிடப்படும் கொண்டிமகளிர் ஏவல் மகளிராகவோ, பரத்தையராகவோ திகழவில்லை. மாறாக தனக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து கொண்டும் விளையாட்டில் ஈடுபட்டும் மேலும் பிறரை அச்சுறுத்தும் பெண்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. ஆண்களின் ஆசைக்கு இணங்காதப் பெண்களாகத் திகழ்ந்ததனால் கொண்டித்தனம் செய்யும் மகளிர் என ஆண் தலைமைச் சமூகம் இவர்களுக்கு பட்டம் கொத்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

மணிமேகலை
நாடவர் காண நல்லரங்கேறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக் கணைதூவச்
செருக்கயல் நெடுங்கட் கருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர் (18: 103 – 109)

இலக்கணப்படி அமைந்த நல்ல அரங்குகளில் ஏறி நாட்டினர் பலரும் காணும் வண்ணம் ஆடலையும் பாடலையும் எழிலையும் புலப்படுத்தி, வண்டுகளாகிய நாணினையுடைய கரும்புவில்லைக் கொண்ட அநங்கன் அரும்புகளாகிய அம்புகளைப் பொழிய, போர்செய்யுற் கயல் மீனையொத்த நீண்ட கண்களாகிய சுருக்கு வலையால் அகப்படுத்தி தமதாடல் முதலியவற்றைக் கண்டோருடைய உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டு மனையிற் சென்று, பண்போலும் இனியமொழிகளால் பொன் ஆடை முதலிய பல பொருள்களை வாங்கி, தேனையுண்டு மலரைத் துறக்கும் வண்டினைப் போலப் பொருள் கொடுத்தாரைப் பின்பு துறக்கும் பரத்தையர்.

என்பதில் பின்வரும் கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன.

1. அரங்குகளில் ஏறி ஆடலையும், பாடலையும் எழிலையும் புலப்படுத்துவோர்.
2. கண்களால் ஆடவரை அகப்படுத்தி அவரை மயக்கி பொன், ஆடை, மணி முதலியவற்றை வாங்கிப் பொருள் வற்றிய பின் அவரைத் துறப்போர்.

இவ்விதமான வரையறுக்கப்பட்ட சமூகச் சூழலில் கணிகையர் குலத்தில் வாழ்ந்து பின் அதை துறந்த மாதவி மற்றும் மணிமேகலையின் துறவு நகைப்பிற்குரியதாக அன்று கணிக்கப்பட்டதில் வியப்பேதுமில்லை. சித்திராபதி மணிமேகலையைத் துறவிலிருந்து திசை திருப்புவதற்காக அவளை விரும்பும் உதயகுமரனை நாடுகின்றாள். இத்தகைய நிலைமைகள் இவ்விருவரதும் குலமரபு மீறலைச் சவால்களுக்குள்ளாக்கின.

கணிகையர் குலத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அவள் தான் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஏனையோரால் வினவப்படுகிறது. சமூகம் விதித்த அமைப்பிலேயே அவள் வாழ வேண்டும் என வற்புறுத்துகிறது. உதயகுமரன் அதுவும் நாட்டை ஆளும் அரசனுடைய மகன் பரத்தமை தொழிலில் ஈடுபடாமல் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு வரும் மணிமேகலையை இழிவாகக் கூறுவதிலிருந்து, அவளுக்கும் அக்குலத்திற்கும் இருந்த சமூக மதிப்பின்மை புலனாகிறது.
எவ்வாறாயினும் மணிமேகலையைத் தன் குலமரபிற்கிணங்க வாழ்விக்க முடியாதென்பதை மாதவி திட்டவட்டமாக வசந்தமாலைக்கு உரைப்பதனூடாக சித்திராபதிக்கும் அவள் சார்ந்த சமூகத்திற்கும் உணர்த்தி விடுகின்றாள். இங்கு கொண்டி மகளிர் என்பது கணிகையர் குலத்தைக் குறிக்கும் சொல்லாக எடுத்தாளப்பட்டுள்ளது.

முடிவாக
பட்டினப்பாலை கூறும் கொண்டி மகளிர் ஏவல் மகளிராக இருந்துள்ளனர்.

மதுரைக்காஞ்சி குறிப்பிடும் கொண்டி மகளிர் தனக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து கொண்டும் விளையாட்டில் ஈடுபட்டும் மேலும் பிறரை அச்சுறுத்தும் பெண்களாகவும் இருந்துள்ளனர்.

மணிமேகலையில் கொண்டி மகளிர் என்பது கணிகையர் குலத்தைக் குறிக்கும் சொல்லாக எடுத்தாளப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட சான்றுகளின் வழி கொண்டி மகளிர் என்போர் பரத்தையர் அல்ல என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

மேலும் ஆண் தலைமை சமூகங்களாக வாழ்ந்தக் குடிகள்; போர் அடிமைகளாக்கப்பட்ட பொழுது, பெரும்பாலும் பெண்களே கைக்கொள்ளப்பட்டுக் கொணர்ந்து வரப்பட்டு ‘கொண்டி மகளிர்’ ஆக்கப்பட்டனர் என்பதையும் சான்றுகளின் வழி உய்த்துணர முடிகிறது .

பயன்பட்ட நூல்கள்

1. ந.சுப்பிரமணியன்,  சங்க கால வாழ்வியல்
2. மாஸ்கோ, இந்தியாவில் வரலாறு
3. ஆ.சிவசுப்ரமணியம் ,தமிழகத்தில் அடிமை முறை
4. மாதையன் பெ., சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்

பயன்பட்ட இணையங்கள்
https://ta.wikipedia.org/s/5uax
http://agarathi.com/word/கொண்டிமகளிர்
http://sangailakkiyam.com/index.php
www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/K11_concordance.html
http://www.yarl.com/forum3/topic/147605-சங்ககாலப்-போர்முறைகளும்-விதிகளும்/

bpsstree@gmail.com

* கட்டுரையாளர் – – முனைவர் பா.சத்யா தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை –