ஆய்வு: தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் – (தமிழ்நேயம் இதழ் முன்வைத்து)

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.தொன்மைக்காலத்தில் தமிழர் நாகரிகம் தன்னளவில் சிறந்து விளங்கியது என்று நாம் பெருமையோடு பேசிக்கொண்டாலும் தற்காலச் சூழலில் உலகமயமாதல் முதலிய பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் உண்டு என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இந்தச்சிக்கல் குறித்து கோவையிலிருந்து வெளிவரும் தமிழ்நேயம் என்ற இதழில் ஒரு விரிவான விவாதம் (தமிழ்நேயம் இதழ்-26 ஆகஸ்டு2006, இதழ்-27அக்டோபர் 2006) நடைபெற்றது. இந்த விவாதம் குறித்து இவ்ஆய்வு அமைகிறது.

நாகரிகமும் பண்பாடும் வேறு வேறு என்று கருதப்பட்டாலும் நாகரிகம் என்பதே பண்பாடு என்னும் பொருளில் இக்கட்டுரை அமைகிறது. ‘பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ (580) என்னும் குறள் இப்படிக் கருதுவதற்கு ஆதாரம்.

1.தமிழர் நாகரிகம் – தொன்மைக்காலம்:

சிந்துவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் தான் என்ற கருத்து இன்று அழுத்தமாகக் கூறப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் சுமேரிய நாகரிகம் போன்ற பிற நாகரிகங்களோடு தொடர்பு கொண்டிருந்தது. சங்ககால நாகரிகத்தினுள்ளும் சிந்துவெளி நாகரிகத்தின் பல்வேறு கூறுகள் காணப்படுகின்றன என்று மருதநாயகம் சுட்டிக்காட்டுவது ஈண்டு நோக்கத்தக்கது. ஆகவே சிந்துவெளி நாகரிகம் முற்றாக அழிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை.

உலகின் மூத்த செவ்வியல் நாகரிகம் எனப்படும் கிரேக்கம், கீப்ரு, சீனம், சமற்கிருதம் என்று கூறப்படும் நாகரிகங்களை ஒத்த தன்மையும், கூடுதலாகத் தனித்தன்மையும் உடையது சங்ககால நாகரிகம். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தோற்றுவித்த நாகரிகம், உண்மையில் மிகச்சிறந்த நாகரிகமாகத்தான் இருக்கமுடியும்.

சுனித்குமார் சட்டர்ஜி முதலிய அறிஞர்களின் கருத்தை இங்குக் குறிப்பிடுவது தகும். ‘இந்திய நாகரிகம் என்று சொல்லப்படுவதன் மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்ற போதிலும் அடித்தளம் முழுவதும் தமிழர் நாகரிகமாகத்தான் இருந்தது. நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, அறிவியல், கணிதவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, தமிழிசை, கணிதம், தமிழ் மருத்துவம் முதலியவற்றை இந்திய நாகரிகத்திறகு ஈந்தது தமிழர்நாகரிகம். சாங்கியம், நியாயம், வைசேடிகம், ஆசீவகம், உலகாய்தம், சார்வாகம் என்ற இந்திய தத்துவ தரிசனங்களின் முன்னோடிகள் தமிழரே ஆவர்.

தமிழர்களின் கடல் வணிகம் மேற்கில் கிரேக்கத்தையும் கிழக்கில் சீனத்தையும் கொண்டதாக விளங்கியது. கடல் வணிகர்கள் மூலம் தமிழர் நாகரிகம் உலகம் முழுவதும் பரவியது, பாவாணர், சாத்தூர் சேகரன் போன்ற அறிஞர்களின் கருத்தின்படி உலகநாகரிகத்திற்கு ஆதாரமான நாகரிகம் தமிழர்நாகரிகம்.

சங்ககாலத்தை உள்ளடக்கிய தமிழர்ச்சமூகத்தில் சாதிகள் இல்லை. சங்ககாலத்திலேயே ஆரியர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தனர் என்றாலும் அவர்களின் வைதீகம் தமிழர் வாழ்வை பாதிக்கவில்லை.

சங்ககாலத்தை அடுத்து வந்த களப்பிரர்காலம் இருண்ட காலமல்ல. இக் காலத்தில் சமணம், பௌத்தம் ஆகியவை உள்நுழைந்தன. இவை தமிழர்களின் அறவியலை மேலும் வலுப்படுத்தின. சங்ககாலத்தினுள்ளும் தமிழர் வாழ்வில் குறைகள் இல்லாமல் இல்லை. கள்ளுண்ணல், சூதாட்டம், பரத்தையரோடு வாழ்தல் போன்ற குறைகள் இருந்தன. இக்குறைகளைச் சமணரும் பௌத்தரும் கண்டித்தனர். சமணமும் பௌத்தமும் கடவுளை மறுத்தன. துறவுக்கு முதன்மை தந்தன. புலனடக்கம், தவம் போன்றவற்றை வற்புறுத்தின. இவை காரணமாக சைவமும் வைணவமும், சமணத்தையும், பௌத்தத்தையும் கடுமையாக மறுத்தன. சைவமும் வைணவமும் ஒருவகையில் தமிழர் சமயங்கள். நாளடைவில் சமணமும், பௌத்தமும் செல்வாக்கிழந்தன. இவ்வகைக் கருத்துகளைத் தமிழ்நேயம் இதழில் முன்வைத்தவர் ஞானி. (இ.26, ப.5,6)

இவர் கருத்துகளை மேலும் வலுப்படுத்தும் முறையில் சிலவற்றை மா.நடராசன் குறிப்பிடுகிறார்.

தமிழர் நாகரிகம் அன்பு, அறம், வாய்மை ஆகியவற்றிற்கு அழுத்தம் தந்தது. எல்லாவுயிர்களிடத்தும் அன்பு கொள்ளவேண்டும் என்ற உலகப் பொதுமையை இலக்கியங்கள் வற்புறுத்தின.

சமூகத்தில் நிலவிய ஏற்றதாழ்வுகள் மற்றும் சாதியைக் கடிந்தது. சமத்துவமும் சமதர்மமும் நிலவின. தெய்வத்தை ஏவல் கொண்டது என்பதற்கு கண்ணகி (சிலப்பதிகாரம்) சான்று.

ஐந்திணை நிலங்களின் நிலத்தெய்வங்களும் இயற்கையும் சிறந்தனவாகப் போற்றப்பட்டன. இதன் பிறகு பெருந்தெய்வங்கள் தமிழகத்தில் நுழைந்தன.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ , ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்’, ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்ற பொதுமைக் கருத்துகள் தமிழ்இலக்கியத்தினுள் காணலாம். இவ்வகை கருத்துகள் காலந்தோறும் தோன்றிய தமிழ் இலக்கியங்களின் வழியே தங்கியிருந்தன.

சித்தரிலக்கியம் மட்டுமல்லாமல் வள்ளலார், பாரதி, பெரியார் போன்றவர்களும் சித்தர்களின் தொடர்ச்சி. தமிழர்களின் உயரிய பொங்கல் விழா இயற்கையையும் உயிரினங்களையும் கொண்டாடியது. இவ்வாறு சங்ககாலத்திலும் அடுத்து வந்த இடைக்காலத்திலும் தமிழர் நாகரிகம் சிறந்திருந்ததது என்பதில் ஐயமில்லை.(இ.27, ப.67,68)

2. தமிழர் நாகரிகம் – இடைக்காலம்:

இடைக்காலத்தில் சமயங்கள் ஆதிக்கம் பெற்றன. வைதீகம் தமிழர் வாழ்வினுள் பரவலாக நுழைந்து ஆதிக்கம் பெற்றது.

மனிதச்சார்பான உலகியல் நாகரிகத்தையே தமிழர் நாகரிகம் கொண்டாடியது என்பதற்கு மாறாக உள்நுழைந்த ஆரியநாகரிகம் மேலுலக வாழ்வை மேன்மைப்படுத்தியது. யாகங்கள், தொன்மங்கள், சடங்குகள், மந்திரம், மனுநீதி ஆகியவை தமிழர் வாழ்வுக்குள் நுழைந்தன.

தமிழ் நிலமன்னர்கள் ஆரியர்களை வரவேற்றனர் அவர்களுக்கு ஊர்களையும் வளமான நிலங்களையும் தந்தனர். கோவில்களுக்குள் பார்ப்பனர் நுழைந்தனர். தமிழர் வெளியேறினர். சமற்கிருத கல்விக்கு மன்னர்கள் ஆதரவு தந்தனர். தமிழ்க்கல்வி பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. ஊர்ப்பெயர்கள் முதலியவை சமற்கிருதமயமாயின. ஒருவகையில் இது தமிழர் மீது நடந்த படையெடுப்பு என்று க.ப.அறவாணன் கூறுவதை மறுப்பதற்கில்லை.

தமிழ்வாழ்வுக்குள் சமயம் ஆதிக்கம் பெற்ற போதிலும், தமிழ் வாழ்வை முற்றாக அழித்துவிடவில்லை. பெரியபுராணம், கம்பராமயணம் முதலியவை இதற்குச் சான்றுகள். சித்தர்கள் தமிழ் நாகரிகத்தைக் காத்தனர். இவ்வாறு ஞானி கூறுகிறார்.

3. தமிழர் நாகரிகம் – தற்காலம்:

இக்காலத்தில் சமயங்களும் சாதி,சடங்குகள் முதலியனவும் தமிழர் வாழ்வை கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாக்கின என்ற போதிலும் இருபதாம் நூற்றாண்டில் இவற்றை எல்லாம் கண்டிக்கும் முறையில் தமிழ்அறிஞர்கள் தமிழ்வாழ்வை மீண்டும் தழைக்கச் செய்யும் முறையில் பாடுபட்டனர்.

பதினெழு-பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழகத்திற்கு வந்த கிறித்துவ துறவிமார்கள் தமிழை எழுச்சிப் பெறச் செய்தனர். எல்லிசு, கால்டுவெல் போன்றவர் தமிழ்மொழியின் தனித்தன்மையை எடுத்துரைத்தனர். சமற்கிருத மொழியின் துணையின்றி தமிழ் தனித்தியங்கும் வல்லமை பெற்றது.

தொன்மைத் தமிழிலக்கியங்கள் கண்டறியப்பட்டன. உ.வே.சா., போன்றவர்கள் தமிழ்த்தொண்டு புரிந்தனர். மெல்ல மெல்லத் தமிழில் மறுமலர்ச்சி தோன்றியது. சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டதோடு சங்க இலக்கியங்களும் வெளிவந்தன.

தமிழர் வாழ்விலிருந்த மூடநம்பிக்கைகளை முற்றாக களையவேண்டும் என்ற முறையில் பகுத்தறிவியக்கம் தோன்றியது. ஆட்சியிலும் சமூகத்திலும் இருந்த பார்ப்பனர் செல்வாக்கைக் கடியும் முறையில் பார்ப்பனரல்லாதவர் இயக்கம் தோன்றியது. இவற்றோடு தனித்தமிழியக்கமும் வலுப்பெற்றது. இக்காலத்தில் தமிழ்பற்றென்பது காற்றில் கலந்திருந்தது. தமிழ்மொழிக்கும், தமிழாசிரியர்களுக்கும் பெரும் மரியாதை இருந்தது.

இவ்வளவும் நடைபெற்ற காலத்திற்குப் பிறகு என்ன நேர்ந்தது என்பது பற்றிச் சொல்ல வேண்டும்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா 1947இல் விடுதலை பெற்றது. அரசியல் விடுதலை என்பது முழுமையானதாக இல்லை. பொருளியல் விடுதலைபற்றிச் சொல்வதற்கில்லை. தமிழகமும் இத்தகைய அரைகுறை விடுதலையைத்தான் பெற்றது.

ஏற்கெனவே தமிழ்நாகரிகத்திற்கு இருந்த நெருக்கடிகளோடு மேலும் சில நெருக்கடிகள் சேர்ந்து கொண்டன. விடுதலை கிடைத்தால் நாட்டுக்கும் நமக்கும் என்னவெல்லாம் கிட்டும் என்ற கனவுகள் பொய்த்தன. சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் வறுமை தீர்வதாகத் தெரியவில்லை. பெயரளவில் சோசலிசம் பற்றிய பேச்சு இருந்த போதிலும் முதலாளிய பெருக்கத்திற்கே எல்லா வாய்ப்புகளும் கிடைத்தன. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன. தமிழுக்கு முன்பிருந்த மரியாதை குறையத் தொடங்கியது. மெல்ல மெல்ல ஆங்கிலத்திற்கே அதிகாரம் வாய்த்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகள் சுருங்கின. ஆட்சிமொழித் தமிழ் என்று சட்டம் இயற்றிய போதிலும் ஆட்சியில் தமிழுக்குக் கிடைத்த இடம் பெரிதாக இல்லை. பள்ளிகளில் தமிழ்ப்பயிற்று மொழியாக இல்லை. நீதிமன்றத்தில் தமிழ் நிறைவாக இல்லை. கோவில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லை.

1967இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போதிலும் தமிழுக்கும் தமிழருக்கும் பயன்தரும் முறையில் ஆட்சிமாற்றம் இல்லை. 1980’க்குப் பிறகு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்நிய மோகம் அதிகரித்ததால் நெருக்கடிகள் மேலும் கூடுதலாயின. மேற்கத்திய நாகரிகத்திற்குப் பெரும் வாய்ப்பு இங்குக் கிடைத்தது. மக்களின் உணவு, உடை ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நகரங்களில் படித்தவர் மத்தியில் ஆங்கிலமே பேச்சு மொழியாயிற்று. தமிழ்நாட்டிற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ‘காவிரி நீரில் நமக்குரிய உரிமையைக்கூட நம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லையே. ஆனால் நம் சொந்த நெய்வேலி நிலக்கரியையும் அதனின்று பெறும் அனல் மின்சாரத்தையும் பிறமாநிலத்தினருக்கு – காவிரி நீரையும் முல்லைப்பெரியாற்று நீரையும் நமக்குத் தரமறுக்கும் கல்நெஞ்சக்காரர்களுக்கு – பங்கிட்டுக்கொடுக்க நாம் தவறவில்லையே.’ (இ.26,ப.24) என்று தங்கப்பா வருந்திக் கூறுவதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

கட்சியிலும் மற்ற துறைகளிலும் ஊழல்கள் பெருகின. தமிழ்வாழ்வில் அறத்திற்கு மரியாதை இல்லை. நுகர்வுவெறி உச்சஅளவில் ஏற்பட்டது. சாதிவெறி தலைதூக்கியது. ஊடகங்களில் தமிங்கலமே இடம்பெறுகிறது. தமிழ்வாழ்வில் என்றுமே இருந்த பெண்ணடிமைத்தனம் என்பது தொடர்ந்து நீடித்தது. பாலியல் வக்கிரங்கள் கடுமையாயின. இளைஞர்கள் தகவல்தொழில் நுட்பத்திற்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டதன் காரணமாக கடும்மன உலைச்சலுக்கு ஆளாகினர். மனநோய் காப்பகங்களும் முதியோர்இல்லங்களும் பெருகின. இயந்திரங்களின் பெருக்கத்தாலும் வாகனப் பெருக்கத்தின் காரணமாகவும் சுற்றுச்சூழல் நாசமாயிற்று.

இப்பொழுது இன்னும் சிலர் கூறும் கருத்துகளைப் பார்ப்போம். உலக நாகரிகமே கேள்விக்குரியதாகிவிடும் பொழுது தமிழ்நாகரிகம் மட்டும் வாழ்ந்துவிடும் என்று பேசுவதில் என்ன பொருள் இருக்க முடியும் என்று பூரணச்சந்திரன் கேட்கிறார். டிஜிட்டல் நாகரிகம் மேலோங்கி இருக்கிற நிலையில் தமிழ்நாகரிகத்திற்கு என்ன இடம் கிடைக்கும் என்று கேட்கிறார் பேராசிரியர் ஜீவா மேலும் அவர்,

தமிழ்நாகரிகத்தில் தலித்துக்கு என்ன இடம் இருக்கமுடியும். தமிழர் நாகரிகமும் தலித் நாகரிகமும் நெருங்கி வருமானால் தமிழர் நாகரிகம் உயிர்ப்புப் பெறும். எல்லாக்காலத்திலும் தமிழ்ச்சமூகத்தில் பெண்ணுக்கு உரிமை இல்லை என்பது அனைவரும் அறிந்த செய்தி. இன்றைய உலகில் ஆதிக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்தச்சமயத்தில் பெண்ணுரிமை பற்றிய குரலும் ஓங்கிஒலிக்;கிறது. எப்படியும் பெண்ணுக்கு நீதி கிடைக்கும். பெண் அடிமைத்தனத்தை ஏற்கும் எந்தச் சமுதாயத்திலும் ஆணுக்கு விடுதலை இல்லை என்று கருதுகிறார் பேராசிரியர் கமலி.

தமிழர் நாகரிகம் என்பது ஒன்றல்ல பல என்று கூறும் சுதாகர் பழம்பெருமை பேசியது போதும் இனிப்புதிய உலகம் பற்றிப் பேசுவோம். நவீன கால உலகில் தமிழன் தன்னைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் என்கிறார்.

தமிழனுக்கு அகத்திலும் புறத்திலும் உள்ள பகை பற்றி இப்பொழுது கூடுதலாகக் கவனம் கொள்ள பேண்டும். தமிழ் என்று பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழைப் பொருட்படுத்தவில்லை. தமிழுக்கு எதிரி பார்ப்பனர் என்று ஒயாது பேசித் தம்மை மறைத்துக்கொள்பவர்கள் அகப்பகைவர்கள். தமிழை வைத்து பிழைப்பவர்களிடமிருந்து தமிழ் தன்னை மீட்டுக்கொள்ள வேண்டும் இவ்வாறு கருதுகிறார் இ.ஜி.சுந்தர்.

தமிழனுக்கு இன்றைய சூழலில் உள்முகப்பார்வை தேவை என்கிறார் மோனராசு. தமிழன் தன் வரலாற்றை இன்னொரு முறை திரும்பிப்பார்த்து எப்பொழுது யாரால் கெட்டோம், நாம் கெடுவதற்கு நாமே காரணமாகி இருந்தோம் என்றெல்லாம் சிந்திக்கவேண்டும் என்கிறார்.

4. இந்நிலையில் தான் தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாகரிகத்திற்கு இன்னும் இருக்கிற வாய்ப்புகள் எவை என்பது பற்றிப் பார்க்கலாம்.

தமிழ்மொழி இன்றும் இருக்கின்றது. தமிழ்இலக்கியங்கள் இன்றும் முன்னைய நாகரிகம் பற்றிப்பேசுகின்றன. தமிழ்நாகரிகத்தை மீட்கவேண்டும் என்ற குரலும் கேட்கிறது. தமிழுக்குச் செம்மொழித்தகுதி பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது. இதன்காரணமாக தமிழரின் தொன்மைகுறித்த தமிழியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகள் உச்சஅளவில் நடைபெறுகின்றன. ‘கா.இராசன் போன்றவர்களின் அகழாய்வு தரும் தகவல்கள் ‘அன்று தமிழ்ச்சமூகம் ஒட்டுமொத்தமாக ஒரு வலிமை வாய்ந்த சமூகமாக உலகளாவிய வாணிகப் பெருக்கம் கொண்ட, மிக அதிக வளர்ச்சி பெற்ற ஒரு சமூகமாக இருந்தது என்பதை உணர்த்துகிறது’.(பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், ப.489).

பகுத்தறிவு இயக்கமும் தமிழியக்கமும் முற்றாக ஒழிந்துவிடவும் இல்லை. ஆங்கில மோகத்திற்கு இடம்கொடுத்தவர்கள் ஒரு கோடி என்றாலும் மீதமிருக்கிற ஆறுகோடி பேரால் தமிழ்மொழியும் தமிழர் நாகரிகமும் காப்பற்றப்படும் என்பதில் ஐயமில்லை.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் என்பது உண்மையில்லை. தமிழ்மரபு என்று கூறியது மறையாது. தமிழிசை ஒழிந்துவிடாது. நாட்டுப்புறக்கலைகள் அழிவதற்கில்லை. தமிழ்விழாக்களுக்கும் குறைவில்லை. தமிழ்மருத்துவத்திற்கு வாய்ப்பு கூடிவருகிறது.

இடைக்காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான கோவில்கள், சிற்பங்கள் முதலியவற்றிற்கு மரியாதை குறையவில்லை. இவையெல்லாம் தமிழ்நாகரிகத்தின் சின்னங்களாக உலகம் அறிந்திருக்கிறது.

தமிழ்மக்களின் புறத்தோற்றம் பல மாறுதல்களுக்கு இடம் தந்த போதிலும் தமிழ்மக்களின் அகத்திற்கு அழிவில்லை. தமிழ்ப்பண்பாடு பற்றி இன்னும் பேசுகிறோம். தமிழ்இலக்கியங்களைக் கொண்டாடுகிறோம். தமிழ்வாழ்வை என்றும் நிலைநிறுத்தக்கூடிய பழமொழிகள் ஆயிரக்கணக்கில் இன்றும் உள்ளன. முன்பு எக்காலத்தை விடவும் தமிழனுக்கு இன்று உலகப்பார்வை கிடைத்திருக்கிறது.

தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். புலம்பெயர்தல் ஒரு கொடுமை என்றாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் தமிழ் உலகமொழியாயிற்று.

உலகமயமாதல் சூழலில் தமிழ்நாகரிகத்திற்கு நேர்ந்த பெரும் நெருக்கடி – முதலாளியத்திற்கு கூடுதலான அதிகாரம் கிடைத்திருப்பது. எனினும் மார்க்சு கூறியபடி தொழிலாளி வர்க்கம் வெல்லும். முதலாளியம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக்கொள்ளும் என்பதில் மாற்றமில்லை.(இ.26, ப.29)

தமிழ்த்தேசியம் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது. தேசிய இனங்களின் தன்னுரிமையைப் பெற்றுக்கொள்ளும் முறையில் இந்தியாவில் கூட்டாட்சி ஏற்படவேண்டும். தமிழினத்திற்கும் இத்தகைய தன்னுரிமை வாய்க்குமென்றால், ‘தேசிய இனம் என்னுமிடத்தில் தமிழர்’ என்று பதியும் முறை நடைமுறைப்படுத்தப்படுமானால் (இ.27,ப.35) தமிழன் தலைநிமிர்ந்து நிற்கமுடியும் என்கிறார் தனராசு. தமிழ்நாகரிகத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறெல்லாம் நாம் சிந்தித்து செயல்படமுடியுமானால் தமிழ்நாகரிகம் மீண்டும் சிறப்பு பெற இயலும் இல்லையென்றால் எத்தணையோ நாகரிகங்கள் அழிந்தது போல தமிழர் நாகரிகமும் அழியும். இத்தகைய அழிவைத் தமிழர் ஒப்புக்கொள்ள முடியாது.

பார்வை நூல்கள்:
1. தமிழ்நேயம் இதழ்-26 ஆகஸ்டு-2006, இதழ்-27அக்டோபர்- 2006-ஆசிரியர். ஞானி
2. அறவாணன்.க.ப. தமிழர் சமுதாயச் சிந்தனைகள், தமிழ்க்கோட்டம்,2013.
3. கணியன் பாலன், பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், எதிர் வெளியீடு,2016.
4. திருக்குறள். தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு. உலகத்தமிழ் அறக்கட்டளை,2000.
5. மருதநாயகம்.ப. தமிழின் செவ்வியல் தகுதி, இராசகுணா பதிப்பகம்,2012.


* கட்டுரையாளர்: இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, நேருகலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்105. –

jothimeenaav@gmail.com