ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை ஃபூக்கோதொல்காப்பியத்தின்படி தலைவன் – தலைவி மறைவாக ஒழுகும் களவு ஒழுக்கத்தை வரையறுப்பதே களவு இலக்கியக்கொள்கையின் வேலை. அத்தகைய களவில் தலைவனுக்குச் சார்பாக இயங்கும் பாங்கன், தலைவிக்குச் சார்பாக இயங்கும் தோழி இடம்பெற்றிருப்பது பொருத்தமுடையது. களவு ஒழுக்கத்திற்கு எவ்வகையிலும் சார்பாக இயங்காத செவிலி, நற்றாய் பாத்திரங்கள் களவில் ஏன் இடம்பெற்றிருக்கிறது? களவுக்குப் பொருத்தமற்ற செவிலி, நற்றாய் இருவரில் நற்றாய் குடி பொறுப்பிற்கு உரிமையானவள்; செவிலி தலைவியின் குடிச்செயலைப் பின்பற்றி தலைவியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றிருப்பவள். குடிசார்ந்து நேரடி உரிமையைப் பெற்றிருப்பதால் களவுக்குப் பொருத்தமற்ற நற்றாய் பாத்திரம் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இவ்ஆய்வுக் கட்டுரைக்கு ஃபூக்கோவியல் சிந்தனை கருவியாகக் கொள்ளப்படுகிறது. காரணம் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படுகிற இடத்தில் மாறிய பொருளுக்கும் மாற்றப்படுகிற பொருளுக்கும் இடையில் நடந்தவற்றைக் குறித்த ஆராய்ச்சியில் மிகுகவனம் செலுத்தியது ஃபூக்கோவியல் சிந்தனை. ஃபூக்கோ உற்பத்தியை நிகழ்த்தக்கூடிய ஒரு பொருள் குறித்த ஆராய்ச்சியை அவ்வரலாற்றின் பின்னணியில் ஆராய்பவர். ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட இலக்கியவிதிகள் மொழியாலான ஒரு பொருள். அது இலக்கியவிதிகளை உற்பத்தி செய்யக்கூடியது. எனவே பூக்கோவியல் சிந்தனையைக் களவில் வைத்து விளக்க இடமுண்டு. மேலும் இங்குக் களவு கற்பாக மாற்றப்பட்டதற்கு இடையில் நற்றாயின் செயல்முறைகள் அமைந்திருக்கின்றன. அதற்குரிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தி விளக்குவதற்கு முன் ஃபூக்கோவியல் சிந்தனையில் கட்டுரையை விளக்குவதற்குப் பயன்படக்கூடிய பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.

ஃபூக்கோவிய அதிகாரச் சிந்தனை
ஃபூக்கோவிய அதிகாரம் (Power) என்பது இதுவரை நாம் அறிந்து வைத்திருக்கின்ற ஒருவர்/ஒன்று மற்றொருவர்/மற்றொன்று மீது செலுத்துகிற ஆதிக்கம் சார்ந்த ஆற்றல் அல்ல. சமூகம் உறவுகளால் ஆனது. அந்த உறவுகள் ஒவ்வொரு கணப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கம் ஒன்று மற்றொன்றை மாற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தை நிகழ்த்துகிற ஆற்றலை ஃபூக்கோவியல் அதிகாரம் என்ற சொல்லால் குறிக்கிறது. ஃபூக்கோவிய “அதிகாரம் ஒரு நிறுவனம் அல்ல, மற்றும் ஒரு அமைப்பும் அல்ல…. அது ஒரு பெயர்” (Foucault,1998:93). அதிகாரம் தன்னிச்சையான இயக்கம் கொண்ட ஒரு பொருள் அல்ல. உறவுகளுக்குள் இருந்துகொண்டு அதனை இயக்கிக்கொண்டு இருக்கிற ஒன்று. உறவுகள் இல்லாமல் ஆகிறபோது அதிகாரமும் இல்லாமல் ஆகிவிடும்

ஆற்றலால் அமைந்த உறவுகள் அதிகார உறவுகளாகும் (Power relations). அதிகாரம் உறவுகொள்ளும்போதுதான் மாற்றம் நிகழ்கிறது. இங்கு ஒரு கேள்வி எழும். அது மாறுகிற செயல் ஆற்றலற்றதா? என்பதாகும். மாறுகிற செயல் ஆற்றலற்றது இல்லை. மாறாகக் குறைவான ஆற்றல் கொண்டது. அதாவது பயிற்சி பெறுகிற இடத்தில் இருப்பது. அதேசமயம் பயிற்சி பெறுகிற அதிகாரம் இல்லாமல் மாற்றியமைக்கிற அதிகாரம் இல்லை. “அதிகாரம் இங்கோ அங்கோ இடமாக்கப்பட்டது இல்லை” (Foucault,1980:98) என்பது சுட்டத்தக்கது. “அதிகார உறவுகள் உள்நோக்கம் மற்றும் தன்னிலையின்மையும் ஒருசேரப் பெற்றவை” (Foucault,1998,94). உள்நோக்கம் இருக்கிற இடத்தில் தன்னிலை தவிர்க்கமுடியாதது. ஆனால் ஃபூக்கோ அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார். ஃபூக்கோ இதனை விளக்க வெவ்வேறு பொருண்மையிலான இரு சொற்களைக் கையாள்கிறார். ஒன்று உத்தி (Tactic) மற்றொன்று சூழ்ச்சி (Strategy).

 ஃபூக்கோஉத்தி (Tactic)
அதிகாரம் உற்பத்தியைச் செய்யக்கூடியது. அவ்வுற்பத்தி செயல் ஒன்று மற்றொன்றை மாற்றுவதன்வழி நிகழ்த்தப்படுகிறது. அந்த உற்பத்தியை உள்நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிற உறவுகளின் ஆற்றல் உத்தி ஆகும். இது உற்பத்தி சார்ந்த தன்னிலையைக் கொண்டது. எனவே அது உள்நோக்கமுடையது. இது அதிகார உறவின் ஒரு பகுதி.

சூழ்ச்சி (Strategy)
ஒரு குறிப்பிட்ட உற்பத்தி சார்ந்த உள்நோக்கம் கொண்ட உத்திகளை ஒருங்கிணைக்கக்கூடிய ஒன்று சூழ்ச்சி ஆகும். இது சமூக அங்கீகாரம் பெற்ற ஒன்று. இந்தச் சூழ்ச்சி உத்திகளுக்கு மாறான விளைவுகளை உண்டாக்கக் கூடியது. இவ்விளைவுகளுக்குத் தன்னிலை கிடையாது. காரணம் உத்திகளின் நோக்கங்களும் விளைவும் வேறு வேறு. அதேபோல சூழ்ச்சியும் விளைவுகளைத் திட்டமிட்டு உருவாக்குதில்லை. அதனுடைய வேலை ஒருங்கிணைப்பது மட்டுமே. இவ்வொருங்கிணைப்பு உத்திகளைப் பொருத்தது. எப்படி எதிரிகளைப் பொருத்து சூழ்ச்சி அமையுமோ அதுபோன்றதுதான் விளைவு. இந்தச் சூழ்ச்சிக்கு உள்ளார்ந்த ஒரு நோக்கமுண்டு. அது தடை (Resistance) ஆகும். இந்தச் சூழ்ச்சியால் ஏற்படும் விளைவு தன்னிலையற்றது. இது அதிகார உறவுகளின் மற்றொரு பகுதி.

உத்தி, சூழ்ச்சி அதாவது செயல் ஒன்று விளைவு மற்றொன்று என்று அமைந்திருக்கின்ற அதிகார உறவைத் தமிழ்ச் சூழல் அடிப்படையில் பின்வரும் பழமொழியைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். அது ‘புள்ளையார் புடிக்க போய் குரங்கானது போல’ என்பதாகும். இப்பழமொழி செயல் ஒன்று விளைவு மற்றொன்று என்பதனையே உணர்த்துகின்றது. உத்தி, சூழ்ச்சி என்ற கலைச்சொல்லாக்கம் பொருள் அடிப்படையில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூழ்ச்சி உலகம் தழுவிய ஒன்றாக ஃபூக்கோவியல் கூறுகிறது. அதனடிப்படையிலே கட்டுரை சூழ்ச்சியை மையமிட்டு அமைகிறது. முதலில் நற்றாயின் செயல்முறைகளைத் தொகுத்துக்கொள்வோம். நற்றாய் செயல்முறைகளுக்குரிய நூற்பாக்களைச் சுட்டி அதற்கு விளக்கம் எழுதுதல் பக்கம் மிகும் என்பதாலும் வாசிப்பிற்கு சோர்வைத் தரும் என்பதாலும் இங்குத் தவிர்க்கப்படுகிறது.

நற்றாய் செயல்முறைகள்
தலைவி குறித்து செவிலி அறிந்துகொள்ளும் உணர்வுநிலை நற்றாய்க்கும் ஒத்தமைந்தால் செவிலிக்குரிய பதின்மூன்று கிளவிகள் நற்றாய்க்கும் விலக்கப்படாது (பொருள்.114), தலைவியைக் காப்புச் செய்வாள் (பொருள்.109), செவிலி அறத்தொடு நின்ற வழி நற்றாய் தலைவி குறித்து அறிந்துகொள்வாள் (பொருள்.136), தலைவன் உடன்போக்குச் சென்ற இடத்து கனவு நிகழ்தல் (பொருள்.196), தலைவி உடன்போக்குச் சென்ற பின் தலைவியின் அறியாமையை உயர்ந்தோரிடத்து வினவுதல் (பொருள்.115), நற்றாய் தலைவி உடன்போக்கு போகியவிடத்து தன்னை, தலைவனை, தலைவியை சுட்டி நிமித்தம் பார்த்தமை, மொழிப்பொருள் கூறியமை, தெய்வத்திடம் வேண்டியமை, நன்மை தீமை வழி வருகிற அச்சம் ஆகியவைகளைக் கூட்டி மூன்று காலத்துடன் விளக்கி தோழியிடமும் கண்டோரிடமும் புலம்புதல் (பொருள்.39), உடன்போக்கு போகிய தலைவியை அழைத்துவரல் (பொருள்.44), தலைவனோடும் தலைவியோடும் நற்றாய் கூற்று நிரம்ப அமையாது இருத்தல் (பொருள்.493), உயிர், நாணம், மடனுக்குரியவளாக இருத்தல் (பொருள்.198), செறிவு, நிறைவு, செம்மை, செப்பு, அறிவு, அருமை முதலான குணங்களைக் கொண்டிருத்தல் (பொருள்206), பால் வழுவிய கிளவி கிளத்தல் (பொருள்.197).

நற்றாயின் செயல்முறைகள் உயிர், நாணம், மடன், செறிவு, நிறைவு, செம்மை, செப்பு, அறிவு, அருமை முதலான பண்புருக்களைக் (Characterization) கொண்டு  ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இக்குணங்கள் பால் வழுவிய  கிளவி உண்டு மற்றும் தலைவனோடும் தலைவியோடும் நற்றாய் நிரம்ப பேசமாட்டாள் ஆகிய பொதுவிதிகளை உருவாக்கி அதன்வழி நற்றாயின் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகின்றன. இவ்வாறு பண்புருவாக்கங்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு அமைந்திருக்கின்ற நற்றாய் பாத்திரம் ஒரு வடிவம் ஆகும்.

களவு ஒழுக்க முறைமைகள் களவு வாழ்வைத் தயாரிக்கக்கூடியவை. களவு வாழ்வு என்பது களவு வெளிப்படாது வரைதல் ஆகும். இத்தயாரிப்பு தலைவன் தலைவியை, பாங்கனை, தோழியை மாற்றியமைத்தலால் நிகழ்கிறது. இம்மாற்றியமைத்தல் தலைவன் தலைவி மீது கொண்டிருக்கும் பாலியலால் நிகழ்த்தப்படுவதால் பாலியல் ஒருவகை ஆற்றல் ஆகும். தலைவி, பாங்கன், தோழி மாற்றியமைவதிலும் பாலியலே முதன்மை வகிக்கிறது. இந்தப் பாலியல் ஒவ்வொருவரையும் மாற்றியமைத்துக் களவு வாழ்வைத் தயாரிப்பதால் ஒருவகை அதிகாரமாகும். களவு வாழ்வுத் தயாரிப்பு தலைவன், தலைவி, பாங்கன், தோழி முதலான உறவுகளால் திட்டமிடப்பட்டுச் செய்யக்கூடியது. தயாரிப்பை நோக்கி திட்டமிட்டு அமைக்கப்பட்ட உறவுகளின் செயல் ஒருவகை உத்தி ஆகும். இது காட்சியில் தொடங்கி பகற்குறி, இரவுக்குறி வரை நீள்கிறது. குறி வழியிலான கூட்டத்திற்குத் தொடர்ந்து தலைவன் வருகையில் களவு அலராகிறது. களவு அலராதல் களவு வாழ்வுத் தயாரிப்புக்கு மாறானது. அங்குச் செவிலி இணைகிறாள். நற்றாய் அங்கு இணைதலும் விலக்கப்படாது என்று நூற்பா கூறுவதன்வழி நற்றாயின் இணைவும் களவு அலரில் நிகழ்கிறது. இவ்விணைவிலிருந்து நற்றாயின் செயல்முறைகள் தொடங்குகின்றன. இச்செயல்முறைகள் களவு அலராகிய பிறகு தொடங்குவதால் களவு வாழ்வுக்குப் பொருத்தமற்றவை. ஆனால் களவு வாழ்வில் ஒன்றாக அமைந்திருப்பவை. அவ்வாறு அமைந்திருக்கின்ற நற்றாயின் செயல்முறைகளை (Actions) இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று களவு வெளிப்படுதல் மீதான செயல்முறை. இரண்டு உடன்போக்குச் சென்றது மீதான செயல்முறை.
களவு வெளிப்படுதல் மீதான செயல்முறை

களவு அலராவதில் தொடங்கும் செவிலியின் பதின்மூன்று கிளவிகள் நற்றாயின் உணர்வுநிலைக்கும் விலக்கப்படாததால் நற்றாயின் செயல்முறையும் களவு அலராகிய இடத்து தோழியிடம் வினாவலில் தொடங்குகின்றது. தலைவியின் செயல்முறைகள் ஐயத்தை ஏற்படுத்தும் இடத்து காப்புச் செய்வாள். காவல் தமர்நிலையில் அமையும். அங்கு இவளும் ஒரு நபர். தலைவியின் களவுச்செயலை செவிலி அறத்தொடு நின்றவழி நற்றாய் அறிந்துகொள்வாள். இதுவரையிலான நற்றாயின் செயல்முறைகள் அனைத்தும் களவு வெளிப்படுதல் மீது அமைந்திருக்கின்றன. இது களவு வாழ்வுக்குச் சார்பானதன்று. ஆனால், களவு குறித்து ஐயப்படுதல், காவல் செய்தல் எல்லாம் களவு வாழ்வுத் தயாரிப்புக்கு மாறான செயல்முறைகள் என்பதாலும் நற்றாய் குடிமாந்தர் என்பதாலும் களவு வெளிப்படுதல் மீதான செயல்முறைகள் குடிச்செயலுக்குச் சார்பானது என்ற முடிவுக்கு வரலாம்.

உடன்போக்குச் சென்றது மீதான செயல்முறை
ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வைதலைவியின் உடன்போக்கை அறிந்தபின் தோழியிடத்தும் கண்டோரிடத்தும் நற்றாய் புலம்பல், தமர்நிலையில் சென்று உடன்போக்குச் சென்ற தலைவியை மீட்டுக்கொண்டு வருதல், தலைவி உடன்போக்குச் சென்ற பின் தலைவியின் அறியாமையை உயர்ந்தோரிடத்து வினவுதல் முதலான செயல்முறைகள் தலைவி உடன்போக்குச் சென்றதன்மீது அமைந்திருக்கின்றன. இது களவு வாழ்வுத் தயாரிப்புக்குச் சார்பானதன்று. ஆனால், உடன்போக்கு மீதான விருப்பமின்மையை நற்றாய் வெளிப்படுத்துவதன்வழியும் நற்றாய் குடிமாந்தராக இருப்பதன் வழியும் உடன்போக்குச் சென்றது மீதான செயல்முறைகள் குடிக்குச் சார்பானது என்ற முடிவுக்கு வரலாம்.

களவு வாழ்வுக்குத் தொடர்பில்லாத நற்றாய் செயல்முறைகள் குடிக்குச் சார்பானது என்றவகையில் குடிச்செயல் ஆகும். குடியின் இயல்பு கரணம் வழிப்பட்ட கற்பை முன்னிறுத்தும் கொடைக்குரிய மரபாக இருக்கின்றது. கொடைக்குரிய செயலாக இருப்பதால் நற்றாயின் குடிச்செயலை கற்புச் செயல் என்று கூறிவிடமுடியாது. காரணத்திலிருந்தே கற்புச் செயல் தொடங்குகின்றது. களவு வெளிப்பட்ட பிறகு நற்றாயின் குடிச்செயல் தொடங்குவதால் களவுக்கும் உரியதன்று. ஆனால் களவுக்கும் கரணத்தோடு கூடிய கற்புக்கும் இடையில் இருக்கிறது என்றவகையிலும் உடன்போக்கை எதிர்க்கிறது என்றவகையிலும், உடன்போக்குச் சென்றபின் செவிலி கற்பின் ஆக்கத்து நிற்றலாலும் (பொருள்.113), குடி கொடைக்குரிய மரபாக இருப்பதனாலும் கற்பை தனது செயல்களின்வழி அடுத்த தலைமுறையினருக்குப் பரப்புகின்றனர் என்ற முடிவுக்கு வரலாம். இவை முழுவதும் மற்றொரு செயல்பாடாக இருப்பதால் களவுக்கு மாறான கற்பு உத்தி ஆகும். இரண்டு வெவ்வேறு உத்திகள் இங்கு இணைகின்றன. இந்த இணைவு எப்படி நிகழ்கிறது?

காப்புச் செய்தல் மற்றும் உடன்போக்கை ஏற்றுக்கொள்ளாத நற்றாயின் செயல்முறைகள் களவுக்கு எதிரானதுதானே? என்ற கேள்வி எழலாம். நற்றாய் களவுக்கு எதிராக இயங்குவதாகப் பார்க்க முடியாது. ஏனென்றால் களவு வெளிப்பட்ட பிறகே நற்றாயின் குடிச்செயல் தொடங்குகின்றது. அம்பல் மற்றும் அலரில் களவு வெளிப்படுத்தப்படுகிறது. அதற்குக் காரணம் தலைவன் ஆவான். அம்பல், அலர் ஊராரால் செய்யப்படுகிறது. ஊர் என்பது பல குடிகளின் தொகுதி.  எனவே அம்பல், அலர் செய்யப்படுவதை சமூகச் செயல் என்று குறிப்பிடலாம். கற்பில் இடம்பெறும் கரணம் சமூக ஏற்பின் குறியீடு. ஆகவே சமூகச் செயலை கரணத்தோடு கூடிய கற்பை நோக்கமாகக் கொண்டது என்ற முடிவுக்கு வரலாம். சமூகச் செயல் வெளிப்படுத்தும் களவு தலைவனால் வெளிப்படுத்தப்பட்டது. எனவே களவை வெளிப்படுத்த வேண்டிய நோக்கம் அம்பல், அலருக்கு  இல்லை. என்றாலும் அம்பல், அலரில் களவு வெளிப்படுத்தப்படுகிறதே? அம்பல் அலரின் களவு வெளிப்பாடு தலைவனின் இணைவால் களவுச் செயல் மற்றும் சமூகச் செயலின் நோக்கத்திற்கு மாறாக நிகழ்வது. களவு சமூக ஏற்பு வடிவம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இடம்பெறும் நற்றாயின் குடிச்செயலில் காப்புச் செயல்முறை களவு அலராதலைத் தடுக்கிறது. உடன்போக்கு மறுத்தல் செயல்முறை களவு வெளிப்பட்ட வழி நிகழும் கற்பைத் தடுக்கிறது. களவு அலராதலைத் தடுத்தலும் களவு வெளிப்பட்ட வழி நிகழும் கற்பைத் தடுத்தலும் களவு வெளிப்படுத்தலுக்கு எதிரானது. இது கரணத்தோடு கூடிய கற்பைச் சாத்தியப்படுத்தும் குடிச்செயலின் நோக்கமாகும். களவு வெளிப்பாட்டுச் செயலுடன் குடிச்செயல் இணைந்ததால் களவு வாழ்வுத் தயாரிப்புக்கு மாறாக வேறொன்று நிகழ்கிறது. அது களவுச் செயலின் விளைவாகும். இவ்விளைவு களவு மற்றும் கற்பு உத்தியை இணைக்கும்  ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்னும் சூழ்ச்சியால் நிகழ்ந்தது. எப்படி என்றால் களவு மற்றும் கற்பு உத்திகளின் களவு மற்றும் கற்பு வாழ்வுத் தயாரிப்பில் ஒருத்திக்கு ஒருவன் தன்மை இழையோடுகிறது.

களவு வெளிப்படுதல் சமூகச் செயல் களவுச் செயலுடன் இணைந்ததால் விளைந்ததாகும். அதேபோல உடன்போக்கு குடிச்செயல் களவு வெளிப்படுத்தல் செயலுடன் இணைந்ததால் விளைந்ததாகும். களவு வெளிப்படுதல் மற்றும் உடன்போக்கு போதல் நிகழ்வு சமூகம் மற்றும் குடிச்செயலின் உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டது. எனவே தன்னிலையற்றது. தன்னிலையற்ற விளைவை உண்டாக்கக்கூடிய ஒன்று ஃபூக்கோவிய பார்வையில் சூழ்ச்சி ஆகும். இங்குக் களவு வெளிப்படுதல் மற்றும் அது உடன்போக்காக மாறுதல் நிகழ்வு இரண்டு உத்திகளையும் இணைத்த ஒருத்திக்கு ஒருவன் சூழ்ச்சியால் அமைந்தது. இந்த ஒருத்திக்கு ஒருவன் அக்கால சமூகச் சூழ்ச்சி என்பதனை அம்பல், அலர்  உணர்த்துகின்றது. களவு வெளிப்பட்டு அது உடன்போக்காக மாறுவதில் நற்றாயின் குடிச்செயல் இடம்பெற்றுள்ளதால் நற்றாய் வடிவம் களவு வெளிப்பாட்டை உடன்போக்காக மாற்றும் சூழ்ச்சியின் வடிவமாகும்.

துணைநின்ற நூல்கள்
Foucault, M. 1980, Power/Knowledge Selected Interviews and Writings 1972 -1977, Colin Gordon (Ed.), Colin Gordon and Others (Tr.), Vintage Books, Newyork.
Foucault, M. 1998, The Will to Knowledge The History of sexuality Volume 1, Reprinted, Robert Hurley (Tr.), Penguin Books, London. 
தொல்காப்பியர் 1991, 1995, 1998, 2015, தொல்காப்பியம் – பொருளதிகாரம் (உரைவளம்) அகத்திணையியல், களவியல், செய்யுளியல் பகுதி – 4, பொருளியல், ஆ.சிவலிங்கனார் (தொகு.), கோ.விசயராகவன் (பதி.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

rajakavina@gmail.com

 

* கட்டுரையாளர் –  – இரா.இராஜா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்மொழி & இலக்கியப்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி – 605014. –