ஆய்வு: தொல்காப்பியச் செய்யுளியலும் பேராசிரியரின் திறனாய்வு அணுகுமுறையும்

- முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி. -முன்னுரை
அறிவுக்கும் உயர்வுக்கும் இடங்கொடுத்து வளர்ந்து வரும் அரிய பெரிய துறைகளுள் திறனாய்வுத் துறையும் ஒன்று. ஒரு பொருளின் திறனைப் பற்றி ஆராயும் இத்திறனாய்வுக் கலையில் ‘முடிவுகூறல்’ என்பது இன்றியமையாதது. இதனடிப்படையில், நம்முடைய தொன்மையான இலக்கிய மரபுகளைக் காத்து நிற்கும் அறிவுக் கருவூலமான தொல்காப்பியத்தில் மறைந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்தறிந்து, தமிழ் மரபை வாழச் செய்த பெருமைக்குரியவர் பேராசிரியர். மொழி நூல் மட்டுமல்ல, ‘ஆழமான கவிதையியல் நூல் தொல்காப்பியம்’ என்பதை அறிவுறுத்தும் செய்யுளியலில், பேராசிரியர் கையாண்டுள்ள திறனாய்வு முறைகளை நுண்ணிதின் உணர்த்துவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேர்பு நிரைபு எண்ணிக்கை
நேரசை நான்கு, நிரையசை நான்கு என்பது தொல்காப்பியர் முதலான யாப்பியலார் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து. ஆனால், தொல்காப்பியத்தில் நேர்பு, நிரைபசைகளின் எண்ணிக்கையைக் கூறுவதில் உரையாசிரியர்கள் தங்களுக்கென தனிததொரு கருத்தினைக் கொண்டுள்ளனர்.

“இருவகை யுகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப”
[தொல்காப்பியம் – செய்யுளியல் – நூற்பா 316]

என வரும் நூற்பாவிற்கு இதனையடுத்து வரும்

“குறிலிணை யுகர மல்வழி யான”
[தொல்காப்பியம்- செய்யுளியல்-நூற்பா 317]

என்ற நூற்பாவினையும் கருத்தில் கொண்டால் தனிக்குறிலாகிய நேரசையின் பின்னர் இருவகை உகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை என்பது புலனாகிறது. எனவே, நேர்பசை ஆறு, நிரைபசை எட்டு என வரும். இக்கருத்தினையே இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமது உரைத் திறத்தால் விளங்க வைப்பர். ஆனால், பேராசிரியர் நேர்பு, நிரைபசைகளின் பின்னர் வரும் உகரம் ‘ஒருசொல் விழுக்காடுபட’ இயைந்து வர வேண்டுமென்கிறார்.

குற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை மூன்றும், முற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை இரண்டுமாக நேர்பசை ஐந்தாகவும், குற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை நான்கும், முற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை இரண்டுமாக நிரைபசையின் விரி ஆறாகப் பேராசிரியரால் பகுக்கப்பட்டுள்ளது. சூத்திரத்தில் பொதிந்து கிடக்கும் உண்மைப் பொருளின் தெளிவை இலக்கண உலகிற்கு அறிமுகப்படுத்தும் திறனாய்வுப் பணியைச் செவ்விதின் செய்தவர் பேராசிரியர் என்பதற்கு ஆதாரமாக இச்சூத்திர உரை விளங்குகிறது.

ஒற்றடுத்து நிற்கும் உரியசை
நேர்பு, நிரைபு என்ற இவ்விரு அசைகளும் உரியசைகள் ஆகும்.

“குற்றிய லுகரமு முற்றிய லுகரமு
மொற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே”
[தொல்காப்பியம்-செய்யுளியல்-நூற்பா 322]

என்ற சூத்திரம் வருமொழியில் வல்லெழுத்து வரும்போது ஒற்றொடு தோன்றி நிற்றலும் உரியசைக்கு உரியது என விளக்குகிறது. இதற்கு உரை கூறிய இளம்பூரணர்,

“இருவகை யுகரமும் ஒற்றொடு தோன்றித் தனியசையாகி நிற்கவும் பெறுமென்றவாறு”
[தொல்-பொருள்-இளம்பூரணர் உரை பக்க எண்-399]

என்ற கருத்தினைக் கூறி, வேண்டும், கண்ணும் என வரும் சொற்களைச் சான்றாகக் காட்டுவார். சூத்திரம் “நிற்கவும்” என மொழிந்திருப்பதால் உம்மை எதிர்மறையாயிற்று. எனவே, இளம்பூரணரின் கருத்தும், சான்றுகளும் இச்சூத்திரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாததாய் அமைந்துள்ளது. ஆனால், நூலாசிரியனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுதலும், புரிய வைத்தலும் என்ற உயரிய கொள்கையினை இங்கு கடைபிடித்த பேராசிரியர்,

“இங்ஙனம் வருமொழியொற்று மிகின் அவை கொண்டு நேர்பும் நிரைபுமாமெனவே உண்ணும் எனவும் நடக்கும் எனவும் நிலைமொழி ஒற்று நின்றவழித் தேமாவும் புளிமாவுமா வதல்லது நேர்பசையும் நிரைபசையுமாகாதென்பதாம்”.
[தொல்-பொருள்-பேராசிரியர் உரை பக்க எண் 322]

என்று முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உரை யாத்துள்ளார். பேராசிரியரின் இவ்வுரை விளக்கம், திறனாய்வாளர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகளுள் ஒன்றான முடிவுகளை எடுத்துரைக்கும் மனப்பாங்கினை நினைவுபடுத்துவதாய் அமைந்துள்ளது.

சீர்களின் முறைவைப்பு
சீர்கள் அனைத்தையும் வகைப்படுத்தி வாய்பாடு கூறினால் அச்சீர்கள் ஒரே வகைமுறையில் கூறப்படுதல் இல்லை என்பது புலப்படும்.

“இயலசை மயக்க மியற்சீ ரேனை
யுரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர்”
[தொல்காப்பியம் – செய்யுளியல்-நூற்பா 325]

என்ற நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர்,

“ மயக்கம் என்றது தம்மொடு தாம் மயங்குதலும் தம்மொடு பிறிது மயங்குதலுமாம்”
[தொல்காப்பியம் -செய்யுளியல்-நச்சினார்க்கினியர் உரை பக்க எண்17]

என்று விளக்கமளித்துள்ளார். அஃதாவது, நேர்நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை என வரும் முறை வைப்பைக் குறிப்பிடுகிறார். நச்சினார்க்கினியரின் இம்முறையில் சீர்களைச் சுட்டுதல் எளிமையானதாக அமைந்திருப்பினும், பேராசிரியரின் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்ற சீர்முறைவைப்பே பெரும்பான்மை வழக்குடையதாக இன்றும் அமைந்துள்ளது. எளிமையைச் சுட்டும் நச்சினார்க்கினியரின் முறை வைப்பைக் காட்டிலும் பேராசிரியரின் முறை வைப்புச் சுட்டப்படுவது சமுதாயச் சூழ்நிலைகளைத் தாண்டி நிலைத்திருக்கும் திறனாய்வாளனின் நிலைத்த புலமையை நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

பாக்கள் இயலும் திறம்
ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என நான்காகப் பிரித்துக் கூறப்படும் இப்பாக்களில் வஞ்சியை ஆசிரியப்பாவிலும், கலியை வெண்பாவிலும் அடக்கி அவற்றையும் இரண்டாக வழங்கும் ஒரு முறையைத் தொல்காப்பியர்,

“ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை
வெண்பா நடைத்தே கலியென மொழிப”
[தொல்காப்பியம் – செய்யுளியல்-நூற்பா 420]

என்ற சூத்திரத்தில் விளக்குகிறார். இச்சூத்திரத்தில் குறிப்பிடப்படும் ‘நடைத்தே’ என்பது பாக்கள் இயலும் திறத்தையே குறிக்கும். வஞ்சிப்பா ஆசிரியப்பா போன்ற நடையை உடையது என்றும், கலிப்பா வெண்பாவினைப் போன்ற நடையைக் கொண்டது என்றும் கூறுவார் இளம்பூரணர். இப்பகுதிக்கு உரை கூறிய பேராசிரியர்,

“ஆசிரியத்து விகற்பமாகித் தூங்கலோசை விரிந்தடங்கும் வெண்பாவின் விகற்பமாகிக் கலிப்பா விரிந்தடங்கும்”.
[தொல்காப்பியம் -செய்யுளியல்-பேராசிரியர் உரை பக்க எண் 438]

என்று பொருளுரைக்கிறார். இவ்விளக்கத்தைக் கூர்ந்து ஆராய்ந்தால், சூத்திரத்தின் பொருளைத் தெளிவுற காட்டும் கோட்பாட்டின் அடிப்படையில் பேராசிரியரின் கருத்து நுட்பமும், திறனாய்வின் சிறப்பும் வெளிப்படுகிறது.

கலிவெண்பாட்டு
“ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலாற்
றிரிபின்றி வருவது கலிவெண் பாட்டே”
[தொல்காப்பியம் – செய்யுளியல்-நூற்பா 456]

என்ற சூத்திரம் இறுதி வரை ஒரு பொருளைக் குறித்து வரும் தன்மையை உடையதாய், வெள்ளடியியலால் திரிபின்றி வருவது கலிவெண்பாட்டு எனக் குறிப்பிடுகிறது. இதற்கு உரை கூறிய இளம்பூரணர்,

“வெள்ளடியியலா னென்றமையான் வெண்டளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவும் பிற தளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவுங் கொள்க”

[தொல்-பொருள்-இளம்பூரணர் உரை பக்க எண் 475]

எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பேராசிரியர் கலிவெண் பாட்டினை இரண்டாகப் பிரித்து பாகுபடுத்தும் நெறிமுறையைக் கற்றுத் தருகிறார். அவற்றை,

[i] வெண்பா இலக்கணம் சிதையாமல் ஒரு பொருள் நுதலி வருவது
[ii] வெண்பா இலக்கணம் சிதைந்து ஒருபொருள் நுதலாமல் வருவது

எனப் பிரிக்கலாம். பேராசிரியரின் இத்தெளிவான முடிபினை இளம்பூரணருரையில் காண முடியாத நிலை உள்ளது. குறித்தப் பொருளை மறைத்துக் கூறாமல் தெளிவாக எளிய முறையில் எடுத்துரைக்கும் திறனாய்வுப் பணியைப் பேராசிரியர் மேற்கொண்டுள்ளார் என்பது இச்சூத்திர உரையால் புலனாகிறது.

முடிவுரை
மூலநூலை விளக்குவதிலும்,விளக்கும் முறையிலும் உரையும், திறனாய்வும் ஒன்றுபடுகின்றன. திறனாய்வு முறையில் நூற்பாக்களுக்கு விளக்கந் தரும் பேராசிரியர் மூலநூலில் புலமை, பல்துறைச் செய்திகளையும் அறிந்து வைத்திருக்கும் ஆற்றல், மூலநூலின் மெய்ம்மையை மெய்ப்பித்தல், முடிவுகளைத் துணிந்து சொல்லக் கூடிய மனப் பக்குவம் என்ற இவ்வனைத்து திறனாய்வாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகளையும் உடையவராக தன் உரையின் வாயிலாக ஒவ்வொரு சூத்திரத்திலும் வெளிப்படுகிறார்.

இன்று தமிழிலக்கிய உலகிற்கு திறனாய்வுக் கலையை அறிமுகம் செய்து, திறனாய்வாளர்களின் மனதில் ஆய்வு மனப்பாங்கை வளர்த்து அவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர்கள் பேராசிரியர் போன்ற உரையாசிரியர்களே எனில் அது மிகையாகாது.

துணைநின்ற நூல்கள்
ஆதி நாராயணன், கி., உரையாசிரியர்களும் திறனாய்வுக் கோட்பாடுகளும், பாரதி புத்தகாலயம், சென்னை, 2006.
இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1988.
இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், பொருளதிகாரம் பகுதி-3, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2001.
கணேசையர் (ப.ஆ), தொல்காப்பியம், பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, இரண்டாம் பதிப்பு – 2007.
சுந்தரமூர்த்தி, கு., (உ.ஆ), தொல்காப்பியம், பொருளதிகாரம் – செய்யுளியல், நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1965.

ashokalai2011@gmail.com

* கட்டுரையாளர் –  முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி.