ஆய்வு: தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியல்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

இடைச் சங்ககாலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற அரும் பெரும் மூத்த நூலை ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) என்பவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியம் -எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களைக் கொண்டJ. அவை ஒவ்வொன்றும் ஒன்பது இயலாக வகுக்கப் பட்டுள்ளன. இதில், பொருளதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாக அமைக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாடு என்ற சொல்லுக்கு, புகழ், உண்மை, உள்ளத்தின் நிகழ்வு புறத்தார்க்கு வெளிப்படுத்தல், இயற்கைக் குணம் ஆகியவற்றை அகராதி கூறும். இதில் மெய்ப்பாட்டியல் என்ற இயல் கூறும் தன்மையினை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.

மெய்ப்பாட்டியலை- மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை என ஐவகையாக வகுத்துக் காண்பர் தொல்காப்பியர்.

(1)    மெய்ப்பாடுகளின் வகை
1. விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று கூறுவர்.

‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப.’ – (பொருள். 245)

2. மேற்கூறப்பட்ட பதினாறு பொருளும், எட்டாக வரும் இடமும் உண்டு. அவையாவன, குறிப்புப் பதினெட்டனையும் சுவையுள் அடக்கிச் சுவையை எட்டாக்கி நிகழ்த்துவதாகும்.

‘நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.’ – (பொருள். 246)

3. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் மெய்ப்பாடு என்பர்.

‘நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்ப.’ – (பொருள். 247)

(2)    எண்வகை மெய்ப்பாடுகள்
4. இகழ்தல், இளமை, அறிவின்மை, மடமை என்று சொல்லப்பட்ட நான்கிடத்திலும் நகை தோன்றும். எள்ளல் என்பது தான் பிறரை எள்ளி நகுதலும், பிறரால் எள்ளப்பட்ட விடத்துத் தான் நகுதலும் என இருவகைப்படும்.

‘எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப.’ –  (பொருள். 248) 

5. இனி, அழுகை பற்றிக் காண்போம். இழிவும், இழத்தலும், அசைதலும், வறுமையும் என்று சொல்லப்பட்ட நான்கிடத்திலும் அழுகை தோன்றும்.

‘இழிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே.’  – (பொருள். 249)

6. மூப்பும், பிணியும், வருத்தமும், மென்மையும் என்னும் நான்கின் பொருட்டிலும் இளிவரல் தோன்றும் என்பர்.

‘மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யhப்புற வந்த இளிவரல் நான்கே.’  –  (பொருள். 250)

7. இன்னும் மருட்கை பற்றிக் கூறுமிடத்து, புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் நான்கிடத்தும் அறிவு நிரம்பப்பெறாத வியப்புத் தோன்றும் என்றும் கூறுவர்.

‘புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே.’ –  (பொருள். 251)

8. தெய்வம், விலங்கு, கள்வர், அரசர் என்னும் நால்வகையாலும் அச்சம் தோன்றும் என்பர்.

‘அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.’ –  (பொருள். 252)

9. கல்வி, தறுகண், புகழ், கொடை ஆகிய நால்வகையாலும் பெருமிதம் உண்டாகும் என்பர்.

‘கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்Nகு.’ –  (பொருள். 253)

10. உறுப்புக்களைக் குறைத்தல், குடிப்பிறப்புக்குக் கோள் சூழ்தல், கோள்கொண்டலைத்தல், கொலைக்கு ஒருப்படுதல் என்னும் நால்வகை வெறுக்கத்தக்க செயல்களால் வெகுளி உண்டாம்.

‘உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ன
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.’ – (பொருள். 254)

11. துன்பத்தை விலக்கிய உவகையான செல்வ நுகர்ச்சி, ஐம்புலன்களால் நுகர்தல், காமநுகர்ச்சி, விளையாட்டு ஆகிய நால்வகைகளால் உவகை உண்டாம் என்பர். 

‘செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே.’ –  (பொருள். 255)

12. முதல் அவத்தை:- இதிற் கூறப்படும் பொருளுடைமை, மகிழ்ச்சி இன்புறுதல், நடுநிலைமையில் நிற்றல், எல்லாவுயிர்க்கும் அருள் செய்தல், தன்மை பேணுதல், அடக்கம், நீக்க வேண்டியவைகளை நீக்கி ஒழுகல், அன்பு, அளவிற் குற்றமாயினும் குணமாயினும் மிகுதல், பிறரை வருத்தல், சூழ்ச்சி, வாழ்த்துதல், நாணுதல், துஞ்சல், உறக்கத்தின்கண் வாய்ச்சோர்வு படல், சினத்தல், எண்ணுதல், அஞ்சுதல், சோம்பல் கருதுதல், ஆராய்ச்சி, காரிய விரைவு, உயிர்ப்பு, கையாறு, துன்பம், மறதி, பிறராக்கம், பொறாமை, வியர்த்தல், ஐயம், ஒருவனை நன்கு மதியாமை, நடுக்கம், ஆகிய முப்பத்திரண்டும் மெய்ப்பாட்டுள் வருவனவாம்.

‘ஆங்கவை, ஒருபாலாக ஒருகால்
உடமை இன்புறல் நடுவுநிலை அருளல்
தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக்
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்
நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனாஅ
முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை
கருதல் ஆராய்ச்சி  விரைவயிர்ப் பெனாஅக்
கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை
வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ
அவையும் உளவே அவையலங் கடையே.’ – (பொருள். 256)

(3)    ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள்.

13.  புகுகின்ற முகத்தினை விரும்புதல், நெற்றி வியர்வை அடையப் பெறுதல், நகையுண்டாதலை மறைத்தல், மனமழிதலைப் பிறர்க்குப் புலனாகாது மறைத்தல் ஆகிய நான்கும் முதலவத்தையின் மெயப்பாடு எனக் கூறுவர்.

‘புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப.’ – (பொருள். 257)

14. இரண்டாம் அவத்தை:- கூந்தலை விரித்தல், காதணியைக் கழற்றுதல், முறையாக அணிந்துள்ள அணிகளைத் தடவுதல், ஆடையைக் குலைத்து உடுத்தல் ஆகிய நான்கும் இரண்டாம் அவத்தையின் மெய்ப்பாடுகளாம்.

‘கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த்து உடுத்தலொடு
கெழீஇய நான்கே இரண்டென மொழிப.’ –  (பொருள். 258)

15. மூன்றாம் அவத்தை:- அல்குலைத் தடவுதல், அணிந்தவைகளை ஒழுங்கு செய்தல், இற்பிறப்புக் கூறி மறுத்தல், இரு கைகளையும் மேலெடுத்தல் ஆகிய நான்கும் மூன்றாவது அவத்தையின் மெய்ப்பாடுகளாகும்.

‘அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு
சொல்லிய நான்கே மூன்றென மொழிப.’  –  (பொருள். 259)

16. நான்காம் அவத்தை:- பாராட்டிக் கூறுதல், மடமை கெடுமாறு உரைத்தல், அருளற்ற பேச்சுக்களால் அலராயிற்று என்று நாணுதல், கொடுப்பவைகளைக் கொள்ளுதல் ஆகிய நான்கும் நான்காம் அவத்தையின் மெய்ப்பாடுகளாம்.

‘பாராட் டெடுத்தல் மடந்தப உரைத்தல்
ஈரமில் கூற்றம் ஏற்றலர் காணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ
எடுத்த நான்கே நான்கென மொழிப.’ – (பொருள். 260)

17.  ஐந்தாம் அவத்தை:- ஆராய்ந்து உடம்படுதல், விளையாட்டுத் தொழிலை மறுத்தல், மறைந்தொழுகுதல், கண்டவழி மகிழ்தல்  எனப்பட்ட  நான்கும்,  ஐந்தாம்  அவத்தைக்குரிய மெய்ப்பாடுகள் என்றுரைப்பர்.

‘தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தலொடு
பொருந்திய நான்கே ஐந்தென மொழிப.’ – (பொருள். 261)

18.  ஆறாம் அவத்தை:- தலைமகன் கோலம் புரியுங்கால் மனமழிதல், பொலிவழிந்து தோன்றல், கலக்கமுற்றுக் கூறல், செயலறவு தோன்றக் கூறல் ஆகிய நான்கும், ஆறாம் அவத்தையின் மெய்ப்பாடுகளாம்.

‘புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல்
கலங்கி மொழிதல் கையற வுரைத்தல்
விளம்பிய நான்கே ஆறென மொழிப.’ – (பொருள். 262)

19. அகத்திணைக்கு நிமித்தம்:- மேற்கூறப்பட்டனவும், அத் தன்மையன பிறவும் அவற்றோடு பொருந்தி நிலைபெற்ற வினையுடைய நிமித்தமாம் என்று கூறுவர்.  அன்ன பிறுவுமாவன, நோக்கானை நோக்கி இன்புறுதல், நோக்குங்காலைச் செற்றார்போல நோக்குதல், மறைந்து காண்டல், தற்காட்டுறுத்தல் போல்வன. அவத்தைகள் பத்து. அவற்றுள் ஐந்திணைக்கண் வருவன ஆறும் மேற்கூறப்பட்டுள்ளன. ஏழாவது அவத்தை பெருந்திணைக்குரியதாம். எட்டாவது உன்மத்தம், ஒன்பதாவது மயக்கம், பத்தாவது சாக்காடு என்பனவாம்.

‘அன்ன பிறவும் அவற்றோடு சிவணி
மன்னிய வினைய நிமித்தம் என்ப.’ – (பொருள். 263)

20. நிமித்தமாகா இடம்:- உயிர் மெலிந்தவிடத்துச் செயலானது இல்லாமற் போதலும் உண்டு. எனவே, இயற்கையும் நிகழும் என்றவாறாம்.

‘வினையுயிர் மெலிவிடத்து இன்மையும் உரித்தே.’ –  (பொருள். 264)

(4)   ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள்.

21. கைக்கிளைக்கு உரியதோர் மெய்ப்பாடு:- நடுவிடத்தாம் ஐந்திணை அல்லாத கைக்கிளைப் பொருளிடத்து, முன்கூறப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உளவாம்.

‘அவையும் உளவே அவையலங் கடையே.’ –  (பொருள். 265)

22.  பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள்:- இன்பநலத்தினை வெறுத்தல், துன்பத்திடத்தே புலம்பல், உருவெளிப்பாடு கண்டு வருந்தல், குற்றம் ஆராய்தல், பசியால் வருந்தி நிற்றல், பசலை பரத்தல், உணவைக் குறைத்தல், உடல் இளைத்தல், உறங்காமை, கனவை நனவென மயங்குதல், தலைவன் கூற்றைப் பொய்யாகக் கொள்ளுதல், உரைத்த மாற்றத்தை மெய்யெனக் கூறல், தலைவன் குறிப்புக்கண்டு ஐயப்படல், தலைவன் உறவினரைக் கண்டதும் மகிழ்தல், அறத்தினை அழித்துக் கூறுமிடத்து நெஞ்சழிந்து கூறல், எவ்வுடம்பாயினும் தன்னோடு ஒப்புகை கொள்ளுதல், தன் மகனோடு ஒக்குமென்று பிறிதொன்றைக் கண்டவிடத்து மகிழ்தல், தன் மகன் பெயர் கேட்டு மகிழ்தல், மனங்கலங்குதல் என்பன பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாம்.

‘இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்
பசியட நிற்றல் பசலை பாய்தல்
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்
கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்
பொய்யாக் கோடல் மெய்யே என்றல்
ஐயஞ் செய்தல் அவன்தமர் உவத்தல்
அறனழிந் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல்
எம்மெய் ஆயினும் ஒப்புமை கோடல்
ஒப்புவழி யுறுத்தல் உறுபெயர் கேட்டல்
நலத்தக நாடில் கலக்கமும் அதுவே.’ –  (பொருள். 266)

(5)   புறனடை.
23. மனனழியாத நிலையில் நிகழ்வன:- களவு இடையீடுபட்டவிடத்தில் வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல், வெறுப்பினைப் பிறர்க்குத் தோன்றாவாறு மெய்யின்கண்ணே நிறுத்தல், அச்சத்தினால் கூட்டத்தின் அகன்று ஒழுகுதல், சேர்க்கையை விலக்குதல், தூது விட்டபொழுது வெறாமை, உறங்கிப் பொருந்துதல், காதல் அளவுகடந்து வருதல் ஆகிய கூற்று நிகழ்துதலன்றி உள்ளக் கருத்தினை மறைத்தமர்ந்திருத்தல் ஆகிய எட்டு மெய்ப்பாடும் வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாவனவாம். இவை நடுவண் ஐந்திணைக்குரியது.  

‘மூட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்
அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல்
தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்று
ஆயிரு நான்கே அழிவில் கூட்டம்.’ –  (பொருள். 267)

24. இதுவும் மேலது. தெய்வம் அஞ்சுதல், குற்றமற்ற அறத்தினைத் தேர்ந்து தெளிதல், இல்லாததை உள்ளதாகக் கொண்டு வெறுத்தல், தலைவனது தலையளியை வெறுத்தல், மன நிகழ்ச்சி உண்மையைக் கூறுதல், பொழுதினை மறுத்தல், அருள் புலப்பட நிற்கும் நிலை, அன்பு புலப்பட நிற்றல், பிரிவினைப் பொறாமை, மறைத்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல் ஆகிய சிறந்த பத்தும் நடுவண் ஐந்திணைக்குரியனவாம்.

‘தெய்வம் அஞ்சல் புரையறத் தெளிதல்
இல்லது காய்தல் உள்ள துவர்த்தல்
புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாதல்
அருண்மிக உடைமை அன்புமிக நிற்றல்
பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல்
புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇr;
சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே.’ –  (பொருள். 268)

25.  மெய்ப்பாட்டிற்குரிய ஒப்புமைகள்:- ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த ஆண்டும், ஒத்த அழகும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் ஆகிய பத்து வகையும், தலைவன் தலைவியரிடையே ஒத்திருக்க வேண்டிய ஒப்புமைப் பகுதிகளாகும் என்பர்.

‘பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.’ –  (பொருள். 269)

26. காமக்குறிப்பு ஆகாதன:- அழுக்காறு, அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி, தம்மைப் பெரியோராக  நினைத்தல், புறங்கூறுதல், கடுஞ்சொல் கூறுதல், முயற்சியின்மை, தம்முடைய  குலச்சிறப்பை எண்ணித் தம்மை மதித்து இன்புறுதல், பேதைமை, மறதி, தான் காதலிக்கப்பட்டவரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வார் என ஒப்பிட்டு நினைத்தல் என்று கூறப்படும் குணங்கள், ஆகிய பத்தும் தலைமக்கட்கு இருத்தல் கூடாதென்று அறிஞர் கூறுவர். 

‘நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்.’  –  (பொருள். 270)

27.  மெய்ப்பாட்டின் நுட்பம்:- கண்ணினாலும் செவியினாலும் நன்றாக அறிந்து கொள்ளும் அறிவுடைய மக்கட்கல்லாது, மெய்ப்பாட்டுப் பொருள் கொள்ளுதல், ஆராய்தற்கு அருமையுடையதாகும்.

‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்விடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே.’ –  (பொருள். 271) 

முடிவுரை
இதுகாறும் மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை ஆகிய ஐந்து பெரும் பகுதிகளில் மெய்ப்பாட்டின் தன்மைகளைப் பார்த்தோம்.

முதலாவதான மெய்ப்பாடுகளின் வகையில், அவற்றின் வகை, அவற்றின் தொகை, அவற்றின் பெயர் ஆகியவை கூறப்பட்டுள்ளன. இரண்டாவதான எண்வகை மெய்ப்பாடுகளில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டும் மெய்ப்பாடு என்று கூறுவர். இந்த எட்டில் ஒவ்வொன்றும் தோன்றுவதற்கு நான்கு காரணங்கலால் எழும் என்றும் காட்டுகின்றார் தொல்காப்பியர். உதாரணமாக, இகழ்தல், இளமை, அறிவின்மை, மடமை என்று சொல்லப்பட்ட நான்கிடத்தும் நகை தோன்றும். இவ்வண்ணம் இந்த எட்டுக்கும் 32 காரணங்கள் காட்டப்பட்டுள்ளன. மூன்றாவதான ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் என்பதில் குறிஞ்சித் திணை, முல்லைத் திணை, பாலைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை ஆகிய ஐந்திணைக்கண் வரும் ஆறு அவத்தைகளும் கூறப்பட்டுள்ளன. நான்காவதான ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள் என்பதில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரு திணைகள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன. ஐந்தாவதான புறனடை என்ற பகுதியில் ஐந்திணைக்குரியனவும், தலைவன் தலைவியர்களுக்கிடையே உள்ள ஒப்புமைகளும், தலைமக்கட்கு ஒவ்வாத காமக்குறிப்புகளும், மெய்ப்பாட்டின் நுட்பங்களும் பதிவாகியுள்ளன.

இனி, மெய்ப்பாட்டியலில் இழிவு, இழத்தல், வறுமை, மூப்பு, பிணி, புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம், தெய்வம், விலங்கு, கள்வர், அரசர், கல்வி, புகழ், கொடை, கொலை,  காமநுகர்ச்சி, விளையாட்டு, மகிழ்ச்சி, இன்புறல், அருள் அடக்கம்,   பிறரை வருத்தல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், சினத்தல், அஞ்சுதல், சோம்பல், ஆராய்ச்சி, உயிர்ப்பு, மறதி, துன்பம், பொறாமை, வியர்த்தல், ஐயம், மதியாமை, நடுக்கம், காதல், தலைவன் தலைவியரிடையே பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, வயது, அழகு, அன்பு, நிறை,  அறிவு, அருள், செல்வம் ஆகிய பத்து வகையான ஒத்த ஒப்புமைகள் பார்த்தல், அழுக்காறு, தம்மைப் பெரியோராக நினைத்தல், புறங்கூறல் ஆகிய சொற்பதங்கள் மனித வாழ்வியலை நோக்காகக் கொண்டனவாய் அமைந்துள்ள சிறப்பு தொல்காப்பியரைச் சாரும்.

wijey@talktalk.net