ஆய்வு: தொல்காப்பிய அங்கமும் அழகும்

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னைதமிழ்மொழி மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தொன்மைச் சிறப்பு மொழி. இதில் தற்போது கிடைக்கும் செவ்விலக்கிய நூல்களுள் மிகவும் தொன்மையான முதல்நூல் தொல்காப்பியமே என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ் மக்களின் வாழ்வியல் கோட்பாடுகளையும் அவர்தம் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் பெருமை உடையது. வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து அவற்றை இலக்கியமாகப் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துத் தந்தது தொல்காப்பியம். இதன் சிறப்பும் பயனும் அங்கமும் அழகும் மிகப்பெரிய அளவில் பட்டியலிட்டுக் காட்டலாம். எனினும் இவற்றைச் சுருக்கமாக ஆராய்வோம்.

தொல்காப்பியர்

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் என அழைக்கப்படுகிறார். பல தொன்மைக்காலப் பெரும்புலவர்களின் வரலாறு சரிவர அறியப்படாதவாறு போன்று இவர் வரலாறும் அறியப்படவில்லை. தொன்மையான காப்பியக்குடி என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர் ஒரு சாரார். தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூலை இயற்றியமையால் இவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இவர் அகத்தியர் மாணவர் என்றும் அறியப்படுகிறார்.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தொல்காப்பியம் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் கருத்துகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் தொல்காப்பியக் காலத்திற்கு மாறான, தொல்காப்பியர் கூறாத புதிய இலக்கண, இலக்கிய வழக்காறுகள் நுழைந்துள்ளன. எனவே தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலே என்பதே பெரும்பாலோர் கருத்தாக அமைந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொல்காப்பியருக்கு முற்பட்டோர்

தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திலும் அதற்கு முன்னரும் இலக்கண ஆசிரியர் பலர் வாழ்ந்து வந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறிய முடிகிறது. இது பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. ‘என்ப’, ‘என்மனார் புலவர்’, ‘யாப்பறி புலவர்’, ‘தொன்மொழிப் புலவர்’, ‘குறியறிந்தோர்’ எனத் தம் காலத்திற்கு முன்னுள்ளோரைத் தொல்காப்பியர் தம் நூலில் குறிப்பிடுகின்றார். தமிழின் பல இலக்கணக் கோட்பாடுகளைத் தமக்கு முன்பிருந்த இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளதாகத் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுவது, தமிழ் மிகு பழங்காலத்திலேயே இலக்கிய இலக்கணச் செம்மை பெற்றிருந்தது என்பதை அறியத் துணைபுரிகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் சிறப்பாகும். இடைச்சங்கத்தாருக்கும் கடைச்சங்கத்தாருக்கும் தொல்காப்பியம் இலக்கணமாக இருந்தது என இறையனார் களவியல் உரையாசிரியர் குறிப்பிடுவதும் அறியத்தக்கது.

தொல்காப்பியத்தின் அமைப்பு முறை

இவ்விலக்கண நூல் நூற்பா யாப்பில் அமைந்துள்ளது. இது, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஒன்பது இயல்கள் அமைந்துள்ளன. இவ்வியல்களின் பெயர்களைக் கீழ்க்காணும் பட்டியலில் காணலாம்.

எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம்

1. நூன்மரபு கிளவியாக்கம் அகத்திணையியல்
2. மொழிமரபு வேற்றுமையியல் புறத்திணையியல்
3. பிறப்பியல் வேற்றுமைமயங்கியல் களவியல்
4. புணரியல் விளிமரபு கற்பியல்
5. தொகைமரபு பெயரியல் பொருளியல்
6. உருபியல் வினையியல் மெய்ப்பாட்டியல்
7. உயிர்மயங்கியல் இடையியல் உவமவியல்
8. புள்ளிமயங்கியல் உரியியல் செய்யுளியல்
9. குற்றியலுகரப் புணரியல் எச்சவியல் மரபியல்

எழுத்ததிகாரம்

“எழுத்து எனப் படுப,
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப;
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. ”(தொல்.எழுத்து.1)

எனத் தொடங்கும் இப்பகுதியில் உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டுமாகிய முப்பது முதல் எழுத்துகள், அவை முறையே குறில், நெடில் என்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் பகுக்கப்படுதல், சார்ந்து வரும் இயல்புடைய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் எழுத்துகள் ஆகியவை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சொல்லின் முதலிலும் இறுதியிலும் வருபவை இன்னின்ன எழுத்துகள் என்பதும் விளக்கப்பட்டுள்ளன.

எழுத்துக்களின் ஒலிகளின் அளவு (மாத்திரை), அவை பிறக்கும் முறைகள் போன்றவற்றை நீண்ட பழங்காலத்திலேயே கணித்துக் கூறிய தொல்காப்பியரின் பேரறிவை வியக்காமலிருக்க இயலாது. இவ்வதிகாரத்தின் பெரும்பகுதியும் சொற்கள் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் நின்று புணரும் புணர்ச்சி இலக்கணத்தையே விளக்குகிறது. புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி என்றும் வேற்றுமை அல்லாத புணர்ச்சி என்றும், இயல்பு புணர்ச்சியென்றும், விகாரப் புணர்ச்சி என்றும் பாகுபாடு செய்து விளக்குகின்றார் ஆசிரியர். எழுத்துகள் இணைவதும் எழுத்துகளாலாகிய சொற்கள் இணைவதும் ஆகிய இலக்கணம் மிகத் தெளிவான முறையில் விளக்கப்பட்டுள்ளது. எழுத்துகளின் மாத்திரை பற்றிக் கூறும் போது தமிழ்நாட்டில் வழங்கிய இசை இலக்கணத்தையும் தொல்காப்பியர் தமது நூலில் குறிக்கின்றார். இதனை நரம்பின் மறை என்று சுட்டுவதைக் காணலாம்.

சொல்லதிகாரம்

“உயர்திணை என்பனார் மக்கள் சுட்டே;
அஃறிணை என்பனார் அவரல பிறவே;
ஆ இரு திணையின் இசைக்குமன சொல்லே.”(தொல்.சொல்.1)

எனத் தொடங்கும் இப்பகுதியில் தமிழ் இலக்கணத்தில் சிறப்பாக அமைந்த கூறுகளுள் திணைப் பாகுபாடும் ஒன்று. உயர்திணை அஃறிணை என்ற அடிப்படையிலே பெயர்கள் தோன்றுவதனை விளக்கி, இருதிணைக்கும் உரிய ஐந்து பால்களையும், அவற்றுக்கு உரிய ஈறுகளையும் விளக்குகின்றார் தொல்காப்பியர். வேற்றுமை உருபுகள், அவை உணர்த்தும் பொருள்கள், ஒரு வேற்றுமைப் பொருளை இன்னொரு வேற்றுமையின் உருபு கொண்டு உணர்த்தும் வேற்றுமை மயக்கம், இருதிணைப் பெயர்களும் விளியேற்கும் மரபு, விளியை ஏற்காத பெயர்கள் முதலானவை பற்றி விளக்கப்பட்டுள்ளன.

சொற்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் ஆகியவற்றின் பொது இலக்கணமும், அவற்றின் பாகுபாடுகள், பெயரெச்சம், வினைஎச்சம், வினைமுற்று, தெரிநிலை முற்று, குறிப்பு முற்று, வியங்கோள், எதிர்மறை முற்றுகள் ஆகியனவும், வேற்றுமைத்தொகை, உவமைத்தொகை, வினைத்தொகை முதலான தொகைச் சொற்களின் இலக்கணமும், சொற்கள் பொருள் உணர்த்தும் முறையும், செய்யுளில் பயன்படும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொற்களின் தன்மைகளும் சொல்லதிகாரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

பொருளதிகாரம்

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்,
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.” (தொல்.பொருள்.1)

எனத் தொடங்கும் இப்பகுதியில் பொதுவாகப் பொருள் என்பது எழுத்தாலாகிய சொல்லால் வெளிப்படுவது. அதாவது இலக்கியம். இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு. ஆகவே பொருள் இலக்கணம் என்பது வாழ்க்கைக்கும் அதன் மொழிவழி வெளிப்பாடாகிய இலக்கியத்திற்கும் வழிகாட்டும் இலக்கணம் ஆகும். இப்பொருள் இலக்கணம் தமிழுக்கே உரிய சிறப்பான ஒன்று. இது அகம், புறம் என்ற இரு பிரிவுகளை உடையது. இப்பொருளதிகாரம் இலக்கியங்களை உருவாக்கும் படைப்பாளன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை பகுத்துக் கூறுகின்றது. கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்னும் ஏழு அகத்திணைகளும், அவற்றின் கூறுகளும் அகத்திணை இயலில் சொல்லப்பட்டுள்ளன. அகத்திணை ஒவ்வொன்றிற்கும் புறமாகப் புறத்திணைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளன; அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாகும்.

அகத்திணை இலக்கியம் களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் (கைகோள்) அமைகிறது. இவ்விரு ஒழுக்கங்களிலும் இடம் பெறும் மாந்தர், அவர்களின் பல்வேறு இயக்கங்களின் போது அவர்கள் பேசும் பேச்சுகள் முதலியனவே களவியலிலும் கற்பியலிலும் விவரிக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாட்டியலில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, வெகுளி, உவகை, அச்சம், பெருமிதம் என எட்டு மெய்ப்பாடுகளும் அவற்றிற்குரிய நிலைக்களன்களும் விளக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாடுகள் நடைமுறை வாழ்வில் காணத்தக்கவை; இலக்கியத்தில், நாடகத்தில் நாம் காண்பவை என்பதை அறிவீர்கள். செய்யுளியலில் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா போன்ற நான்கு வகையான யாப்புகளும் விளக்கப்பட்டுள்ளன. இலக்கியப் படைப்பின் வடிவமைப்புக்கும் பொருளமைப்புக்கும் தேவையான இன்றியமையாத இலக்கணத்தைச் செய்யுளியல் எடுத்துரைக்கிறது.

மரபியல் உயர்திணைப் பொருள்களையும் அஃறிணைப் பொருள்களையும் அவற்றின் அறிவுத் தகுதி கொண்டு பாகுபடுத்திக் காட்டுகிறது. அவற்றை எவ்வாறு அழைப்பது எனும் மரபுகளையும் சுட்டிக்காட்டுகிறது.

தொல்காப்பியத்தால் வெளிப்படும் சிறப்புச் செய்திகள்

தொல்தமிழ் இலக்கண நூல்களுள் சிறிதும் சிதையாமல் முற்றும் கிடைத்திருப்பது தொல்காப்பியம் மட்டுமே. இலக்கண நூல்களுள் முதன்மையான நூலாகக் கொள்ளப்படுவதும் இந்நூலேயாகும்.

தமிழில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் உரிய பல இலக்கிய இலக்கணங்களை உடையதாய் விளங்கியது. அம்மூவகையினுள் இசையும் நாடகமாகிய இரண்டன் இலக்கிய இலக்கணங்கள் மறைந்துவிட்டன. இயற்றமிழின் இலக்கிய, இலக்கணங்களே இப்பொழுது இருக்கின்றன. இயற்றமிழின் இலக்கணமானது எழுத்து, சொல் பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து பகுதியினை உடையது. இவற்றுள் எழுத்து, சொல், யாப்பு, அணி என்னும் நான்கு இலக்கணங்கள் பிற மொழிகளிலும் காணலாம். ஆனால் அந்நான்கு இலக்கணத்தோடு பொருளுக்கும் இலக்கணம் கண்ட ஒரே மொழி தமிழே எனலாம்.

தொல்காப்பியம்-தமிழின் பழைமையையும் பெருமையையும் பறைசாற்றும் நூல். பண்டைக்காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக்குடியின் பிறந்த சிறந்தோர் ஒருவராற் செய்யப்பட்ட ஒப்பற்ற நூல். காப்பியம் என்பது தமிழ்நாட்டோடு தொடர்புற்றுத் தமிழ்க்குடியைக் குறிப்பதாகவே அறியப்படுகிறது.

எழுத்து, சொல், பொருள் என்னும் மூப்பொருளும் முறையே மூன்று அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளன. இதில் எழுத்தும் சொல்லும் தமிழ்மொழியின் அமைதியைக் கூறுகின்றன. பொருளில் உலகத் தோற்றத்தில் முதற்கண் நிலைபெற்ற தொல்தமிழ்ப் பெருங்குடி பற்றிய செய்திகளை எடுத்துரைக்கின்றன. எனவே தொன்மைக் காலத்திலேயே நிலங்களைப் பகுத்து வாழத் தெரிந்தவன் தமிழனே எனபதை அறியலாம்.

பெரும் புலவன் பனம்பாரனாரால் தொல்காப்பியப் பாயிரத்திலேயே ”ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என இவர் சிறப்பிக்கப்படுகிறார். வடமொழிக்கு ஐந்திரம் என்ற இலக்கணமே முற்பட்டிருந்ததென்பதும் அதற்குப் பின்னரே பாணினீயம் தோன்றியதென்பதும் வடநூலாரும் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். தமிழிலக்கண நூலுணர்ச்சி பாயிரத்தின் முற்பகுதியில் ”முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலந் தொகுத்தோனே போக்கறுபனுவல்” எனத் தெள்ளிதின் உரைத்தமையால், சங்க காலத்துக்கு முற்பட்ட தமிழிலக்கணநூல் முழுவதும் அவர் கண்டவர் என்பதும், அந்நூற்பொருள் முழுவதையும் தாம் முறைப் படுத்தினார் என்பதும், விரிந்து கிடந்த நூற்பொருளை தம் நுண்மான நுழைபுலத்தால் – அகன்ற ஆழமான அறிவால் தொகுத்துக் கூறியமையால் இந்நூல் எவ்வகைக் குற்றமற்று விளங்குகிறது.

மக்கள் பெருக்கத்திற்குக் காரணமாயிருந்த தொல்தமிழ்க் குடியினரிடத்தே, அத்தன்மைக்கேற்பக் காதலும் வீரமும் சிறந்திருந்தமையால் அவ்விரண்டையும் நுனித்தறிந்து வரையறை செய்து விரித்து பேசுவதே பொருளதிகாரம் ஆகும்.

பொருள் இலக்கணத்தில் அகம் புறம் எனப் பகுத்த பாகுபாடு என்றும் எங்கும் பொருந்தி வருவது சுட்டத்தக்கது. அகப்பொருளுக்கும் புறப்பொருளுக்கும் இலட்சிய நோக்கில் உயர்ந்த மரபுகளைப் படைத்தளித்தது தொல்காப்பியம். முன்பே நாம் கண்டதுபோல, வாழ்க்கைக்கும் அதன் மொழி வழி வெளிப்பாடாகிய இலக்கியத்திற்கும் இணைப்புப் பாலமாக நின்று வழியமைத்தது தொல்காப்பியரின் மேன்மையைக் காட்டும். இலக்கியப் பொருளை, அகம், புறம் என இருபெருங் கூறுகளாகப் பிரித்து அவைகளைத் திணை, துறை எனப் பகுக்கும் ஒழுங்கமைந்த, செப்பமான அமைப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.

அக வாழ்வு என்பது, இல்வாழ்வு, இல்லற வாழ்வு, உள்ளத்தால் வாழும் உணர்வு வாழ்வு. புற வாழ்வு என்பது அக வாழ்வில் இருந்து கிளர்ந்து விரிவாக்கமுற்று உலக வாழ்வாகத் திகழ்வது. அக வாழ்வு இல்லையெனில், புற வாழ்வு இல்லை. அறம் என்பதன் தோற்றமே அக வாழ்வின் தோற்றம். அறம் தழுவிய அக வாழ்க்கை கைகோள் எனப்பட்டது. ‘கை’ என்றால் ஒழுக்கம் என்று பொருள். ‘கோள்’ என்றால் கொள்ளுதல் என்று பொருள். அறத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள அக வாழ்க்கையாகிய இல்வாழ்க்கையைப் பற்றி விரிவாகத் தொல்காப்பியம் கூறுகிறது.

பழங்காலத்திலேயே தமிழ் மக்கள் காதலைத் தூயமுறையில் கண்டறியும் பேருணர்வுடன் வாழ்ந்த செய்தியையும் பாரில் தோன்றிய பல்வேறு மக்கட் கூட்டத்தினரிடையே மேம்பட்டுத் தோன்றுவதற்கான குணமாய் தமிழரின் முறைப்படுத்திய வீரவுணர்வுச் செய்தியையும் நயம்பட எடுத்துரைக்கும் அரிய வரலாற்று நூலாகப் போற்றப்படுகிறது.

அகத்திணைக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்னும் ஏழு திணைகளை வகுத்த தொல்காப்பியம் அவற்றின் புறங்களாக, முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழு புறத்திணைகளையும் அமைத்துள்ளது. திணைப் பெயர்கள் தமிழர்களுக்கு மிகவும் அறிமுகமான மலர்களின் பெயர்கள். தமிழர் வாழ்வாகிய அகம் புறம் என்னும் இரண்டும் பூக்களால் குறியீடு பெற்றமை, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்களின் சீர்மையை வெளிப்படுத்துகின்றது.

தமிழ் மக்களின் தனிச்சிறப்புப் பெற்ற நாகரிகம், பண்பாட்டு பெருமையைப் உணர்த்த வந்த ஒரு ஒப்பற்ற நூல் என்பதும் நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய செய்தியாகும்.

தொல்காப்பியர் காலம் வடமொழி வியாகரணம் இயற்றிய பாணினியின் காலத்திற்கு முற்பட்டதென்பது பெரிதும் கருதத்தக்கதாக அமைகிறது. இன்றைக்கு சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே மொழிக்கு மட்டுமின்றி மனித வாழ்விற்கும் இலக்கணம் கூறிய நம் தொல்காப்பியம் போன்ற பிறிதொரு நூல் உலக மொழிகளில் எங்கும் இல்லை எனப் பன்மொழிப் புலவர்களும் பேரறிஞர்களும் வல்லுநர்களும் ஆய்வாளர்களும் கண்டு தெளிந்து நமக்கு உணர்த்தியுள்ளமையும் நாம் அறிதல் வேண்டும். இத்தகு பல்வகை மேன்மைச் சிறப்புடைய தொல்காப்பியத்தைக் கற்று உலகிற்கு உணர்த்தி நமது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல் தமிழரின் கடமையாகும்.

துணைநூற்கள்

தாமோதரம்பிள்ளை சி.வை(ப.ஆ), 1891,தொல்காப்பியம் எழுத்ததிகாரம்-நச்சர், வித்தியாநு பாலன யந்திரசாலை சென்னபட்டணம்   
கந்தசாமி முதலியார்(ப.ஆ), 1923, தொல்காப்பியம்-சொல்லதிகாரம் செனாவரையம். வர்த்தமானதரங்கிணீசாகை அச்சுக்கூடம்
வேணுகோபாலப்பிள்ளை.மே.வீ (ப.ஆ), 1941, தொல்காப்பியம்-சொல்லதிகாரம் -நச்சர்   
தாமோதரம்பிள்ளை சி.வை(ப.ஆ), 1885, தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சர் ஸ்காட்டிஸ் பிரஸ் சென்னை.
பவானந்தம்பிள்ளை.ச(ப.ஆ), 1916, தொல்காப்பியம்- பொருளதிகாரம்- நச்சர்   

drmaha08@gmail.com

* கட்டுரையாளர் – – முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 –