ஆய்வு: தொல்குடியும் தொல்தமிழும்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழ்மொழியில் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையானதாக வைத்து போற்றத்தக்கது தொல்காப்பியமாகும். தமிழ் மொழிக்குரிய வரைவிலக்கணமாக அமைந்த இந்நூலானது இலக்கண மரபுகளாக எழுத்து, சொல், பொருள் மரபுகளையும் அதன் பயன்பாட்டு முறைகளையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறது. அதிலும் குறிப்பாக, பொருளதிகாரத்தில் அகப்புற மரபுகளையும், மரபியல் என்ற இயலில் தமிழ் மொழிக்குரிய வழக்கு மரபுகளையும் மிக விரிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழ்மொழியின் இருநிலை வழக்கு மரபையும் அதில், வழக்கு மரபாக வழங்கி வருவனவற்றைத் தமிழினம் இடையறாமல் பின்பற்றி வருகின்றது என்பதையும் மரபியலில் பல நூற்பாக்களில் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அத்தகைய மரபுச் சொற்கள்  பன்னெடுங்காலமாக வழக்கிலிருந்து  ஈராயிரமாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பிய மரபியலில் இடம்பெற்றுள்ளன. எழுத்து வழக்கற்று பேச்சுவழக்கினை மட்டுமே கொண்டுள்ள திராவிட தொல்பழங்குடிகளின் வழக்கில் அத்தகைய மரபுச்சொற்கள் வழங்கி வருவது வியப்புக்குரியதே. அத்தகு சொற்களைக் கண்டறிந்து இம்மொழிகளின் உறவு நிலைகளை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்பழங்குடிகள்
மனித குலமானது பல்வேறு இனங்களாகவும், தேசிய இனங்களாகவும், சமூகங்களாகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவற்றுள் மிகவும் தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடிமக்களாவர். பழங்குடிகளே, மனிதகுலத்தின் தொன்மையான நிலையினையும் அதன்பிறகு ஏற்பட்டுள்ள பல்வேறு படிநிலை வளர்ச்சியினையும் அறிந்துகொள்ள சான்றாக உள்ளனர்.  இந்தியா முழுவதும் பல பழங்குடி சமூகங்கள் இருந்தபோதும் தென்னிந்திய அளவில் பழங்குடிகளை மதிப்பிடுவது என்ற நிலையில் சென்னை அரசு அருங்காட்சியகக்; கண்காணிப்பாளராக இருந்த எட்கர்தர்ஸ்டன் 1885ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியா முழுவதும் குலங்களையும் குடிகளையும் ஆராய்ந்து 2000க்கும் மேற்பட்ட பழங்குடிகள், சாதிகள், குலப்பிரிவுகள் இருப்பதாக இனங்கண்டார். அதன்பின்னர் இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம் 1985இல் இந்தியா முழுவதும் 4635 சமூகங்கள் உள்ளதெனவும் அவற்றுள் பழங்குடி சமூகங்கள் 461 என்றும் ஆய்வின் வழி வெளிக்கொணர்ந்தது. தமிழக அரசுpன் அட்டவணைச் சாதிகள் அமுலாக்கச் சட்டப்படி (1976) தமிழகத்தில் 36 பழங்குடிச் சமூகங்கள் உள்ளன எனவும் வரையறுத்தது. மற்றொரு நிலையில், இந்தியாவில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைப்புக்குள்ளாகின. அதனால் எல்லைகள் மாற்றம் பெற்றன. இதனால் பழங்குடிகள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டனர். இதில் மாநில அளவில் பழங்குடிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு மைய அரசு பழங்குடிகளுள் மிகத் தொன்மையானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அரசின் உதவிகளை தர எண்ணியது. இதனால் 1969ஆம் ஆண்டு ‘சிலுஆவோகுழு’ ஒன்றை அமைத்து இந்திய அளவில் தொன்மைப் பழங்குடிகளை இனங்காணுமாறு பணிக்கப்பட்டது. அவ்வாறு வரையறுப்பதற்குப் பின்வரும் காரணிகள் அடிப்படையாகக் கொண்டது அக்குழு. அவை.

1.    வேளாண் முறை தோன்றுவதற்கு முந்தைய தொழில் நுட்பத்தை மட்டுமே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டிருத்தல்;.
2.    மக்கள் தொகையின் எண்ணிக்கை பெரிதும் உயராமல் இருத்தல் அல்லது குறைந்து கொண்டே செல்லுதல்.
3.    மிகவும் பின்தங்கிய வாழ்க்கை முறையைக் கொண்டிருத்தல்;.
4.    மிகக் குறைவான கல்வியறிவு கொண்டிருத்தல்;.

என்பதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 75 தொன்மையான பழங்குடிக் குழுக்கள் இனங்காணப்பட்டன. அவற்றுள் தமிழகத்தில் மட்டுமே ‘தொதவர்’, ‘கோத்தர்’, ‘குறும்பர்’, ‘பணியர்’, ‘இருளர்,’ ‘காட்டுநாயக்கர்’ ஆகிய ஆறு சமூகங்களும் ‘தொன்மைப் பழங்குடி குழுக்கள்’ இருப்பதாக வரையறுக்கப்பட்டன. இவ் ஆறு தொல் பழங்குடிக் குழுக்களும் நீலகிரி மாவட்டத்தில்தான் இன்றளவும் வசித்துவருகின்றனர். இத்தகைய பழங்குடிகள் பேசும் மொழிகளானது பல்வேறு வகைகளாக உள்ளன. பிற சமூகத் தொடர்பின் காரணமாகவும், அவர்களின் வாழ்வியல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாகவும் அவர்களின் மொழிச் சூழலும் மாறுபட்டுள்ளது. எனினும் எழுத்து வழக்கும் இலக்கிய இலக்கண வளமும் கொண்டு வழங்கிவரும் மொழிகளின்  சொற்கள் வழக்கிறந்து போகும் நிலையில் பேச்சு வழக்கினை பேச்சு வழக்கினை மட்டுமே கொண்டுள்ள பழங்குடிகளின் வழக்கில் இன்றளவும் அத்தகு மரபுச்சொற்கள் வழங்கி வருவது வியப்புக்குரிய ஒன்றாகும்.

சொற்கள்.
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறது தொல்காப்பியம். சொற்கள் மானுட சமூகத்தில் அதன் பொருண்மையை உணர்த்தி காலந்தோறும் கடத்தப்பட்டு அதனால் ஊடாடப்படுகின்றது. அத்தகைய சொற்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றாற் போல் இடுகுறியாகவோ, காரணத்தாலாகவோ ஆக்கம் பெற்று மக்கள் தம் பயன்பாட்டில் இடம்பெறுகின்றது. ஒரு சொல்லானது அதன் தளத்தில் வாய்மொழியாக ஆக்கம் பெற்று அச்சொல் காலவெள்ளத்தில் மக்களால் வழிவழியாக வழங்கப்பட்டு, நிலைபெற்று இலக்கிய வழக்காகி செம்மை நிலையை அடைகின்றது. மக்களின் பயன்பாட்டைப் பொறுத்து அச்சொற்களானவை நிலைபெற்றும் வழக்கொழிந்தும் மாற்று வடிவத்தினையும், மாற்றுப் பொருளையும் பெற்றும் வழங்கிவருகின்றது.

சொற்கள் தனியாக இருக்கும் பொழுது, அவற்றுக்குப் பொருளை வெளிப்படுத்தும் ஆற்றல் முழுவதாக இல்லை. பல சூழ்நிலைகளிலும் கருத்துக்களிலும் பொதுவாக வரக்கூடிய சொற்கள் சந்தர்ப்பத்தைப் பொறுத்தே பொருளை உணர்த்துவன என்கிறார் வேலுப்பிள்ளை.1 மேலும், சொற்கள் சில இடங்களில் ஒரு பொருளையும், வேறுசில இடங்களில் அப்பொருளோடு தொடர்புடைய இரண்டாவது பொருளையும் உணர்த்துகின்றன என்றும், இவ்வாறு வரும் சூழலில் இரண்டாவது பொருளே முதற்பொருள் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படும். இவ்வகையில் தோன்றும் சொல், பொருள் மாற்றங்களையே சிறப்புப் பொருட்பேறு, பொதுப்பொருட்பேறு, உயர்பொருட் பேறு, இழிபொருட் பேறு, நுண்பொருட் பேறு, பருட்பொருட் பேறு என்றெல்லாம் வகைப்படுத்துவர் என விளக்குகின்றார். மொழியியலாளர்களில் சசூர் என்பவர் மொழிக் கூறுகளைக் குறிகளாகக் கொண்டு, அக்குறிகள் எண்ணக் கூறுகளைக் குறிப்பதாகவும், இந்த எண்ணக் கூறுகளைக் குறிக்கும் குறியின் வடிவமைப்பைக் குறிப்படிவம் எனக் கொள்வார். குறிகள் ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள தொடர்பின் அடிப்படையில் மதிப்பைப் பெறுகின்றன என்கிறார். இவ்வாறு குறிகளின் குறித்தல் பண்பும், அவை பெறும் மதிப்பும் இணைந்து பொருளுணர்த்தும் என்கிறார். உல்மன் என்ற மொழியியலார் மொழிக் கூறான சொல்லின் பொருளை ஆக்டன் – ரிச்சர்டு என்ற அறிஞர்கள் வெளியிட்ட பொருண்மை முக்கோண விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லுக்கும், சொல் சுட்டுகின்ற எண்ணக் கூறுகளுக்கும் இடையிலான பரஸ்பர திருப்பல் உறவு என சொல் உணர்த்தும் பொருண்மை நிலையை வரையறுக்கிறார். தொடர்களை அடிப்படையாகக் கொண்டு பொருண்மையினை வரையறுக்கிறார் சாம்ஸ்கி.

தொடர்களின் பொருள் என்பது அத்தொடரில் அங்கமாகத் திகழும் சொற்களின் பொருள்களைச் சுட்டுவதன் மூலம் பெறப்படும் எனக் கருதுவார். மற்றொரு அறிஞரான் கட்ஸ் சொற்கள் குறிக்கும் எண்ணக் கூறுகளில் பொருள் கூறுகள் உள்ளன எனவும், தொடரின் பொருளைச் சொற்களின் பொருள்களிலிருந்து ஏவல் விதிகளின் (Projection rules) பெற முடியும் என விளக்குவார். மேற்காணும் மொழியியலாரின் வரையறைகளைத் தவிர சொற்கள் உணர்த்தும் பொருண்மையினை விளக்க கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருளணு விளக்கக் கோட்பாடும் ஒன்று. “நெருக்கமான பொருட்களைக் காட்டும் சொற்களை ஒரு சேர நிறுத்தி, அவைகளின் பொருள் ஒற்றுமை வேற்றுமைகளுக்கான காரணிகளைக் கண்டு அவைகளைப் பொதுமைப்படுத்துவதன் மூலம் பொருளனுக்கள் இனங் காணப்படுவதாக இக்கோட்பாடு விளக்கி நிற்கின்றது”. இக்கோட்பாடு சாம்ஸ்கி, கட்ஸ், நைடா போன்ற மொழியியலறிஞர்களாலும், லவுண்ஸ்பரி, வெலி ஸ்ட்ராஸ் போன்ற மானுடவியலறிஞர்களாலும் கைக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். இவ்வாறு மொழியில் சொற்களும் அவை உணர்த்தும் பொருண்மை என்பதும் அம்மொழியை முழுமையுடையதாக ஆக்குகின்றன. மேற்காணும் நிலைகளினின்றும் சொற்களுக்கும் அவை குறித்து வரும் பொருளுக்கும் உள்ள உறவு நிலையைக் கொண்டு பொருண்மையானது உள்ளதைக் காண முடிகின்றது.

தொன்மைச் சொற்கள்
குரங்கின் ஏற்றைக் கடுவன் என்றலும்
மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ்வாய் வெருகினைப் புசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள் நிறப்பன்றியை ஏனம் என்றலும்
எருமையுள் ஆணினைச் கண்டி என்றலும்
முடியவந்த அவ்வழக்கு உண்மையின்
கடியல் ஆக கடன் அறிந்தோர்க்கே.
(தொல் – மரபியல்)

தொல்காப்பியர் இந்நூற்பாவுள் இலக்கிய வழக்குச் சொற்களுக்கு நிகரான உலக வழக்குச் சொற்களை கூறி இம்மரபுச்சொற்கள் வழக்கறும் நிலையிலுள்ளதைச் சுட்டுகிறார். இத்தகைய நிலைக்கு முற்றிலும் மாறாக,கூடலூர் பகுதியில் வசிக்கும் தொல் பழங்குடிகளான பணியர் முள்ளு குறும்பர், காட்டு நாயக்கர், தேனு குறும்பர், பெட்ட குறும்பர் ஆகியோரின் பேச்சு வழக்கில் பெருமளவில் பழந்தமிழ்ச் சொற்கள் வழங்கி வருவதைக் கள ஆய்வின் வழிகாண முடிந்தது. சங்க இலக்கியங்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படும் அச்சொற்களின் தொன்மையானது பல்லாண்டுகள் இருந்தபோதும், இன்றளவும் பேச்சு வழக்கினை மட்டுமே கொண்டுள்ள பழங்குடிகளின் வழக்கில் இன்றளவும் வழங்கி வருவது திராவிட மொழிகளின் இடையே காணப்படும் உறவு நிலையினையும், மரபுத் தொடர்ச்சியினையும் காட்டுவதாக அவதானிக்க முடிகின்றது. அத்தகைய தொன்மைச் சொற்கள் சிலவற்றைக் காண்போம்.

கூகை
மரப்பொந்தினுள் வாழும் கூகையைக் கோட்டான் என்கிறார் தொல்காப்பியர். எனினும் கூகையைக் கோட்டான் என்றல் வழக்கிழந்த சொல்லாகவே தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். ஆனால், இன்றளவும் ‘கோட்டான்’ என்ற சொல்லானது தமிழ் மொழி வழக்கில் கோட்டானை ஆந்தை என்கின்றனர். கூகை என்ற சொல் கோட்டான் என்ற பொருளையே தொல்காப்பியத்தில் பெற்று வந்துள்ளது. இவைதவிர, புறநானூற்றுப் பாடல்களில் (238:2-5, 240:6-9) காணப்படுகின்றது. இங்கும் ‘கூகை’ ‘கோட்டான்’ என்ற பொருண்மையினையே பெற்று வந்துள்ளது. பழங்குடிகளுள் முள்ளு குறும்பரிடம் இக்கூகை என்ற சொல் ‘கூம்’ என்று மரபுச்சொல்லாக வழக்கில் உள்ளதைக் காணமுடிகின்றது. இச்சொல் வழக்கானது சங்க காலத் தொன்மைத் தொடர்ச்சியாகவே இன்றளவும் பழங்குடிகளின் வழக்கில் உள்ளதைக் காணமுடிகின்றது.

கிளி –தத்தை

செவ்வாய்க் கிளியினைத் ‘தத்தை’ என்கிறார் தொல்காப்பியர். இவற்றுள் தத்தை என்ற சொல் வழக்கிழந்த சொல்லாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இச்சொல்லை விளக்கும் பேராசிரியர் ‘தத்தையென்பது பெருங்கிளியாதலிற் சிறு கிளிக்கும் அப்பெயர் கொடுத்தலமையுமென்றவாறு’ செவ்வாய்க் கிளி என்பதனை சிறு கிளி மேற்கொள்க’ என்கிறார். இவ்விளக்கத்தினின்று தத்தை என்பது பெருங்கிளி எனவும் சிறுகிளியே செவ்வாய்க் கிளி எனவும் உணர்த்தப்படுகின்றது. எனினும்,தத்தை என்ற சொல்லானது கிளி, தமக்கை என்ற பொருண்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால், மலையாள மொழியில் ‘கிளி’என்பதைத் தத்தை என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஆனால், இன்றளவில் தமிழ் மொழியில் தத்தை என்ற சொல் வழக்கொழிந்து ‘கிளி’ என்பது பொதுவான வழக்காக இடம்பெற்று விட்டது. இவற்றுள் பழங்குடியினர் மொழிகளில் ‘கிளி’,‘கெய்ல்’ ‘தத்தா’ என்ற சொற்களில்  கிளியை வழங்கி வரும் போதிலும், இப்பகுதியின் பொது வழக்காக ‘தத்தை’ என்ற சொல்லே வழக்கில் உள்ளதைக் காணமுடிகின்றது. இச்சொல் வழக்கை மலையாள மொழியினரும், பழங்குடியினரும் பொதுவாகக் கொண்டுள்ளனர். ஆனால், தமிழர்களிடையே கிளி என்ற சொல் வழக்கில் உள்ளதைக் காணமுடிகின்றது. எனவே, கூடலூர் பகுதியில் கிளி –தத்தை என்ற சொற்களை அரவரவர் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தி பழந்தமிழ் மரபைக் காத்து வருகின்றனர்.

வெருகு
‘வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும்’ என்கிறார் தொல்காப்பியர். இதற்கு உரைகூறும் உரையாசிரியர் பிற உயிர்களை மறைந்திருந்து கவ்வும்  கொடியவாய் காட்டுப் பூனை என்கின்றார். வெருகு என்ற சொல் ஆண் பூனை, காட்டுப் பூனை, மரநாய், செடிவகை, வெண்கிடை, மெருகு போன்ற பொருண்மைகளைக் கொண்டுள்ளது. (தமிழ்ப்பேரகராதி) எனினும்,தொல்காப்பியர் கால வழக்கான ‘வெருகு’ எனும் சொல் வழக்கு பழங்குடியினர் பயன்பாட்டில் இன்றளவும் உள்ளது. எனினும் இச்சொல் பொருண்மை விரிவினைப் பெற்றுள்ளது. பிற உயிர்களைத் தின்னும் கொடிய பூனை வகையின உயிரினத்தையும், காப்பி பழங்களைத் தின்னும் ஓர் உயிரினத்தையும் ‘வெருகு’ என்ற ஒரே சொல்லால் கூடலூர் பகுதியில் வழங்கி வருவதைக் காணமுடிகின்றது. மற்றொரு நிலையில் வெருகினைக் குறிக்கும் ‘பூசை’ என்ற சொல் இப்பழங்குடிகளின் வழக்கில் இல்லாமல் இருக்கக் காரணம் ஏற்கனவே பூனையைக் குறிக்க ‘பூச்ச’ என்ற சொல் இங்கு வழக்கில் இருப்பதே ஆகும். எனினும் வெருகு என்ற சொல் பழங்குடியினர் வழக்கில் இன்றளவும் உள்ளது பழந்தமிழின் தொன்மைத் தொடர்ச்சியாகும்
.
சிதல்
‘சிதலும் எறும்பும் மூவறினவே’ என்கிறது தொல்காப்பியம். ‘சிதல்’ என்ற சொல் கரையானைக் குறிக்கும் சொல்லாகும். கரையான் என்ற சொல் வழக்கானது பிற்கால வழக்கென்ற போதிலும் தொல்காப்பியர் கால வழக்கான சிதல் என்பது இன்றளவும் பழங்குடிகளில் பணியர், முள்ளு குறும்பர், காட்டு நாயக்கர், பெட்ட குறும்பர்  வழக்கில் இருப்பதைக் காணமுடிகின்றது. அதனை ஒலிப்பு முறையில் செதல் எனவும் சில பழங்குடிகள் வழங்கி வருகின்றனர். எனவே, இச்சொல் வழக்கானது திராவிட மரபுத் தொடர்ச்சியேயாகும்.

மந்தி
தொல்காப்பியம் ‘மந்தி’ என்ற சொல்லைக் குரங்கு, மூசு, ஊகம் ஆகியவற்றின் பெண்பாற் பெயர்களாக குறிக்கிறது. ஆனால் கலித்தொகையில் மந்தி என்ற சொல்லைக் குரங்கு என்ற பொருண்மையில் கையாண்டுள்ளனர். ‘மந்தி உயங்கா’ (கலி. 13:5). ஆனால்,அகநானூற்றில் ‘மந்தி கடுவனோடு’ (அகம். 378:21) என்பதில் பெண் குரங்கினைச் சுட்டி வந்துள்ளது. இவ்வாறு மந்தி எனும் சொல் குரங்கினையும், பெண் குரங்கினையும் சுட்டி வருவதைக் காணமுடிகின்றது. மேலும்,மந்தி எனும் சொல் வண்டு, ஆடுதின்னாப் பாளை, சூரியன் ஆகிய பொருள்களையும் பெற்றுள்ளது. கூடலூர் பகுதியில் பழங்குடிகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தவர்களிடமும் ‘மந்தி’ என்ற இச்சொல் இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் வாழும் குரங்கின் ஒருவகையினையே குறிப்பிடுகின்றது. அக்குரங்கானது சாதாரணமாகக் காணப்படும் குரங்குகளைப் போல் அல்லாமல் தோற்றத்தில் பெரிதாகவும் அடர்ந்த வனப் பகுதியில் வாழ்வதாகவும் இருக்கிறது. புலிகளின் தாக்குதலை மானினங்களுக்கு எச்சரிப்பதும் இம்மந்திகளே. இதனை ‘லாங்கூர்’ என விலங்கியலாளர்கள் அழைக்கின்றனர். இத்தகைய குரங்கின் வகையினையே மந்தி என்று அழைக்கின்றனர். எனினும், இச்சொல் சங்க காலம் முதல் இன்றளவும் வழங்கி வருவது எண்ணத்தக்கது.

கால்
‘கால்’என்ற சொல் நாலிலொன்று, பாதம், பூவின்தாள் எழுத்தின் கால், தேருருள், வண்டி, கோல், குறுந்தறி, நெசவுத்தறியின் மிதி, கைப்பிடி, தூண், பற்றுக்கோடு, முளை, மரக்கன்று, மகன், வமிசம், இனமுறை, பிறப்பிடம், வாய்க்கால், வழி, நடை, இடம், வனம், முனை, அளவு, பின்னுவதற்கு வகுத்த மயிரின் பகுதி, கிரணம், மழைக்கால், காற்று, வாதரோகம், பஞ்சபூதம், பொழுது, செவ்விதடைவு, காலன், இயமன், கருநிறம், ஏழனுருபுளொன்று, ஒரு வினையெச்ச விகுதி முதலான பொருண்மைகளைக் கொண்டுள்ளது. (தமிழ்ப்பேரகராதி).கூடலூர்ப்பகுதியில் இச்சொல் வழக்கானது பொதுவாக கால் எனும் உடலுறுப்பு, மூங்கிலின் அடிப்பகுதி ஆகியவற்றைப் பெற்று வழங்கி வருகின்றது. ஆனால், பழங்குடிகளுள் காட்டு நாயக்கர்களின் வழக்கில் மட்டும் இச்சொல் காற்று என்பதைக் குறித்து வருகிறது. கால் எனும் சொல் காற்று என்ற பொருளில் சங்கப் பாக்களில் பரவலாகக் காணப்படுகின்றது. அவை நற்றிணையில் ‘காலொடு பட்ட மாரி’ (2:9),‘கால் ஏமுற்ற’ (30:7),‘கால்பொரு நரல்’ (62:1) முதலான அடிகளில் காணலாம். இவ்வாறு சங்க இலக்கியத்தில் காணப்படும் கால் என்ற இச்சொல்லானது பழங்குடிகளான காட்டு நாயக்கர் வழக்கில் காணப்படுவது மரபுத் தொடர்ச்சியேயாகும்.

மனை
சங்க இலக்கியத்தில் ‘மனை’ என்ற சொல் வீட்டைக் குறித்து வந்துள்ளது. தொல்காப்பியமும் ‘மனையோள்’ என இல்லத்தாளைக் குறிக்கின்றது. இவ்வாறு சங்க இலக்கியத்திலும், தொல்காப்பிய வழக்கிலும் காணப்பட்ட மனை என்ற சொல் வழக்கு தொல்பழங்குடி மக்களான காட்டு நாயக்கர் வழக்கில் வீட்டைக் குறிக்கும் சொல்லாக ‘மனெ’ என இன்றளவும் வழங்கி வருகின்றது. கன்னட மொழியிலும் ‘மனெ’ என்ற சொல் வீட்டைக் குறிக்கின்றது. எனினும், இச்சொல் வழக்கு இவர்களிடம் மட்டுமே காணப்படுகின்றது.

உகிர்
‘உகிர்’என்ற சொல் அகநானூற்றில் நகத்தைக் குறிக்கும் சொல்லாகும். ‘உகிர் அன்ன’ (அகம். 99:1). கூடலூரில் உள்ள தேனு குறும்பரிடமும் காட்டு நாயக்கரிடமும் ‘உகிர்’ என்ற சொல் முறையே ‘உகிரு’,‘உகிர்ரு’ என நகத்தையே குறித்து வருவதைக் காணமுடிகின்றது. இது தொல் வழக்கின் தொடர்ச்சியேயாகும்.

மேற்காணும் சில பழந்தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டு நிலையில்  நீலகிரி மாவட்டத்தின்  தொல்பழங்குடிகளின் வழக்கில் வழங்கிவருவது திராவிடமொழி மரபுத் தொடர்ச்சியேயாகும். இப்பழங்குடிகள் பேசும்மொழிகள் எழுத்துவழக்கற்றும் இலக்கியவளமற்றும் இலக்கண வளமற்றும் உள்ளது எனவும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் உள்ள இம்மக்களால்தான் பேசப்பட்டு வருகின்றது எனும் நமது பொதுப்புத்தியினூடே இம்மொழிகளைத் தவிர்த்தால் அதனால் ஏற்படும் இழப்பென்பது திராவிடமொழிக்குடும்பத்திற்கும், அதிலும் குறிப்பாக அதனோடு மிகநெருங்கியுள்ள தமிழ்மொழிக்கும்தான். மாறாக இக்கருதுகோளை முன்னிருத்தி தமிழகப்பழங்குடிகளிடம் இம்மொழி ஆய்வை விரிவுபடுத்தினால் அது தமிழின் செம்மொழித்தனித்தன்மையை மேலும் விரிவாக்கும். திராவிடமொழிக்குடும்ப உறவை மேலும் வழுப்படுத்தும்.

பார்வை நூல்கள்
1.    எட்கர் தர்ஸ்டன். (1901)தென்னிந்தியக் குலங்களும்       குடிகளும்,தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சை.
2.    கால்டுவெல். (2004) திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், முல்லைநிலையம்,     சென்னை.
3.    சங்க இலக்கியத் தொகுதிகள் (2004) நீயுசெஞ்சுரிபுக் ஹவுஸ் வெளியீடு,     சென்னை.
4.     தொல்காப்பியம். (2007) , உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு , சென்னை.
5.    பக்தவத்சல பாரதி .சீ. (2009) தமிழகப்பழங்குடிகள், அடையாளம் வெளியீடு,     திருச்சி
6.    பூபதி எஸ். (1998) தமிழ்நாட்டின் மொழிச்சூழல், தமிழ்ப்பல்கலைக்கழக     வெளியீடு, தஞ்சை.

ealiesdurai@gmail.com

* கட்டுரையாளர்:    – முனைவர் செ.துரைமுருகன், தமிழ்துறை உதவிப்பேராசிரியர்,  குமரகுரு  பன்முகக் கலை அறிவியல் கல்லூரி ,கோவை, தமிழ்நாடு –