ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் காப்புத் திருவிழாவும் இயற்கை வாழ்வும்

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -உயிரிகளின் அறிவுநிலையானது ஒன்றன் படிநிலையிலிருந்து அடுத்தவொன்றின் வளர்ச்சியாக அமைந்திருப்பதை உணரவேண்டியது இன்றியமையானதகும். தம் சூழலைச்  சுற்றி வாழும் உயிரிகளை உற்றுநோக்கி, இணங்கி வாழும் நிலையானது மனிதனின் பகுத்தறிவின் நோக்கமென்று கூறுவதில் மிகையில்லை. மனிதனின் பகுத்தறிவின்  வளர்ச்சிக்கு இப்படிநிலையே மூலமாக இருந்திருக்கக்கூடும். அந்நிலையில் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் பலநிலைகளில் அரிய தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.

தமிழர்களின் நிலவமைப்பிற்கும், புறத்திணைக்கும் பெயர்க்குறியீடாக  அதற்கேற்ற தாவரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்தவொன்றாகும். இது தமிழர்களின் சூழலியல் அறிவிற்குத் தக்கச் சான்றுமாகும். நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்கள் தம் மரபார்ந்த சடங்கான “சக்கலாத்தி” எனும் நிகழ்வில் பயன்படுத்தும் தாவரங்களையும் அதன் குறியீட்டு நிலையினையும் இக்கட்டுரையானது விளக்கி ஆய்கின்றது.

நீலகிரியில் வாழ்கின்ற படகர்களின் வாழ்வியலானது பல்வேறு கலாச்சார, பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கியது. முன்னோர் வழிபாட்டினைத் தமது ஆதி வழிபாட்டாகக் கடைப்பிடித்து வருகின்ற படகர்கள் தம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் வழியில் தாம் வாழ்வதனைக் காட்டும் விதமாக நிகழ்த்தப்படும் சடங்கே இந்தச் ‘சக்கலாத்தி’ எனும் நிகழ்வாகும். இது படகர்களின் புத்தாண்டாகவும் கொள்ளப்படுகின்றது.

படகமொழியில் ‘சக்க’ என்பது சுவர்கத்தினைக் குறிக்கின்றது. சுவர்க்கத்திற்கு ஒரு கதவுண்டு எனும் நம்பிக்கை படகர்களிடமும் நிலவுகின்றது. அவர்தம்  இறுதிச்சடங்கின்போது இறந்தவரின் ஆன்மாவினைப் புனிதப்படும் சடங்கில் ‘சக்கத அடி தரெயலி’ என்ற வார்த்தையும் இடம்பெறுகின்றது. அதவாது சுவர்கத்தின் கதவுகள் இந்த ஆன்மாவிற்குத் திறக்கட்டும் என்பதே இவ்வரியின் பொருளாகும்.

மறுமை உலகத்தில் வாழ்கின்ற தம் முன்னோர்கள் அடிக்கடி இம்மை உலகத்திற்கு வந்து தம்மைக் கண்டுச்செல்வர் என்பதும், தமக்கு ஏதேனும் இடர் வரும்போது அவர்கள் வந்து பாதுகாப்பார்கள் என்பதும் படகர்களின் உறுதியான நம்பிக்கையாகும். ‘சத்த ஹெத்தப்ப பந்து உத்த எத்த காத்தனா’ (இறந்த பாட்டனார் வந்து உழும் எருதினைக் காப்பார்) என்ற இவர்களின் பழமொழியொன்றும் இவர்களின் இந்நம்பிக்கையைத் தெளிவுப்படுத்துகின்றது.

கார்த்திகை மாதத்தில் இவர்கள் மேற்கொள்ளும் இந்தச் ‘சக்கலாத்தி’ எனும் சடங்கானது இவர்களின் முன்னோர்களின் நிமித்தமாகவே நிகழ்த்தப்படுகின்றது. தம் முன்னோர்களின் ஆன்மாவினை அழைத்து அவர்களுக்குப் படையிலிடுவதையும், தம் மகிழ்ச்சியையும், மரபு வழுவாமையினையும் வெளிக்காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது. இச்சடங்கின் பெயரும் இத்தன்மையினை அடியொற்றியே அமைந்துள்ளது.

இச்சடங்கின் முதல் கட்டமாக குறியீட்டுத் தன்மைக்கொண்டு ஏழு  வகையானத் தாவரங்களைக் கொண்டு வீட்டின் கூரையில் காப்பிடுகின்றனர். இந்நிகழ்வினை இவர்கள் “காப்பு செக்கோது” என்றே அழைக்கின்றனர். “செக்கோது” என்ற படகச்சொல்லிற்குத் திணித்தல் என்று பொருளாகும். பூக்கும் மற்றும் பூவாத தாவரங்களின் கூட்டாகத் திகழும் இந்த ஏழு வகையானத் தாவரங்களும் வெவ்வேறுத் தன்மைகளையும் அத்தன்மைக்குரிய குறியீட்டு நிலையினையும் கொண்டவை.

‘தொட்ட கிலிகிஜ்ஜே’, ‘குன்ன கிலிகிஜ்ஜே’, ‘கெச்சிகே’, ‘உத்தரனே’, ‘கொதுங்கு’, ‘ஓம்புரி’, ‘பெள்ளெ முள்ளி’ என்ற இந்த ஏழு தாவரங்கள் இடம்பெற சில இடங்களில் தும்பையும் விரவ எட்டாகவும் விளங்குகின்றது. மேற்சொன்ன “ஓம்புரி” என்ற தவாரம் கடுமையான விஷத்தன்மைக் கொண்டதாகும். இத்தாவரத்தின் விடம் உயிரைக்கொல்லும் அளவிற்குத் திறன்கொண்டது. மேலும் இத்தாவத்திலிருந்து வெளிவரும் பால் கண்களில் படநேரின் அது பார்வையிழப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அபாயம்கொண்டது. இந்தத் தாவரத்தினை இவர்கள் இச்சடங்கின்போது தம் இல்லத்தில் காப்பாக இடுவதன் குறியீடு இவ்வில்லத்திற்கு வருகின்ற தீயத் தன்மைகள் அழிபடவேண்டும் என்பதாகும். இத்தாவரத்தின் பெரும் வீரியம் கொண்ட நஞ்சைப்போல வீட்டினை நெருங்கும் தீமையை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதே இத்தாவரத்தின்மீதான படகர்களின் குறியீட்டு நிலையாகும்.

அடுத்த நிலையில் “பெள்ளெ முள்ளி” எனும் தாவரம் முள்தன்மைக் கொண்டது. இத்தாவர இன வகையினைச் சார்ந்த மற்றொரு தாவரத்திலிருந்து காய்க்கின்ற “முள்ளியண்ணு” எனும் மஞ்சள் நிறமுடைய கனிவகை இவர்களின் மரபார்ந்த கனிவகையுள் ஒன்றகும். மேலும் சடங்கார்ந்தும் பயன்படுத்தும் தன்மைக்கொண்டது. குழந்தைகளுக்குப் பெயரிடும்போது இவர்களின் மரபின்படி “கச்சு கங்குவ” எனும் வெண்கலத்தட்டில் உற்றப்படும் பாலுடன் இந்த முள்ளிப் பழத்தினையும் இட்டு, அப்பாலினை மூன்றுமுறை குழந்தையின் வாயில் ஊட்டி, அக்குழந்தைக்கு தம் முன்னோர்களின் பெயரினை இடுகின்றனர்.

நீலகிரிவாழ் தோடர் இன மக்களின் வாழ்விலும் இந்தத் தாவரம் சடங்கியல் நிலையில் இன்றியமையானதாகத் திகழ்கின்றது. அவர்களின் கோயிலுக்குப் பூசாரியைத் தேர்வுசெய்யும்போது இம்முட்செடியின் இலையினைச் சுருட்டி அதில் பால் மற்றும் நீரினை ஊற்றி குடிப்பதை முக்கியமானச் சடங்காக மேற்கொள்கின்றனர். இத்தகைய மரபியல் நிலையில் முக்கியத்துவம் கொண்டதாக விளங்கும் இந்தத் தாவரத்தினைப்  படகர்கள் ஆண் தன்மையின் குறியீடாகவும், அம்முள்ளானது வீட்டினை அண்டும் தீயவைகளைக் குத்தி அழிக்க வேண்டும் எனும் நிலையிலும் இச்சடங்கில் பயன்படுத்துகின்றனர்.

படகர்களால் “சவுனக் காக்கெ” என்று அழைக்கப்படும் செம்போத்து பறவை பெரும்பாலும் இம்முட் புதரிலேயே கூடுக்கட்டும் வழக்கம் கொண்டவை. இந்தச் செம்போத்துப் பறவையினைக் காண்பதைப் படகர்கள் அவ சகுணமாகக் கருதுகின்றனர். இப்பறவையைக் காண நேர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் எனும் நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். சிறு அளவிலானக் காயங்கள் போன்ற அங்கபாதிப்பாவது  ஏற்படும் என்று உறுதியாக நம்புகின்றனர். எனவே இப்பறவையினைக் கண்டதும் “சவுனா.. சவுனா.. சவுனா..” என்று மூன்றுமுறைக் கூறி, தரையில் மூன்று முறை எச்சில் உமிழ்கின்ற விநோத வழக்கினையும் இவர்களின் சில ஊரில் வாழ்கின்ற மக்கள் கொண்டுள்ளனர்.

அடுத்ததாக இச்சடங்கியல் தாவரத்தொகையிலுள்ள ‘கெச்சிகெ’ என்பது ஒரு விதமான முட்தாவரமாகும். இதையும் தம் விளைநிலம் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்புக் கருதிய நம்பிக்கையுடன் இச்சடங்கில் இடுகின்றனர். முட்தன்மைக் கொண்ட தாவரங்கள் தீய சக்திகளை, கண்ணேற்றினை அழிக்கக்கூடியவை எனும் நம்பிக்கை இவர்களின் பல வழக்காறுகளில் விரவியுள்ளன.

எருமைமாட்டின் பால்வரத்துக் குறைவதற்குக் கண்ணேற்றினை முதற்காரணியாகக் கொள்கின்ற படகர்கள் எருமைக்குப் பால் கறப்பதைப் பொறமையுடன் பார்ப்பதை பெரும் பாவமாகக் கருதுகின்றனர். அவர்களின் இறப்புச் சடங்கார்ந்த புனிதப்படுத்தும் சடங்கில் ‘கறத எம்மெய கண்ணெத்தி நோடிதது பாபா’ (எருமையைப் பால்கறக்கும் போது பொறமைக்கண்ணுற்று பார்த்தது பாவம்) என்று அமைகின்ற வார்த்தையொன்று அவர்களின் மரபார்ந்த இவ்வழக்கினை நமக்குப் புலப்படுத்துகின்து. இந்நிலையில் பால்வரத்துக் குறைந்த எருமையின் பால்மடியினை “துரசெ முள்ளு” எனும் ஒருவிதமான முட்செடியினைக் கொண்டு முன்றுமுறை லோசக அடிப்பதனால் அதன்மேல் இருக்கும் கண்ணேறு கழியும் என்றும் நம்புகின்றனர். நம்பிக்கைச் சார்ந்த இவர்களின் கால்நடை மருத்துவமாகவும் இது விளங்குகின்றது.

இக்காப்புச் செடிகளில் இடம்பெரும் “தொட்ட கிலிகிஜ்ஜெ”, “குன்ன கிலிகிஜ்ஜெ” எனும் பூக்கும் தாவரங்கள் இரண்டும் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூப்பவை. ‘கிளிட்டோரியா டெர்னெஷியா’ எனும் ‘ஃபேபேஸி’ குடும்ப வகையினைச்சார்ந்த இத்தாவரங்கள் படகல்லி, சிறகல்லி, கொடியல்லி எனும் அல்லிஇதழ் வகைகளைக்  கொண்டது. இத்தாவரங்கள் பூப்பது இவர்களின் இச்சடங்கியல் சார்ந்த பருவத்தின் குறியீடாகும். மேலும் ‘எம்மாட்டி’ என்று வழங்கப்படும் இவர்களின் இந்த இறுதி மாதத்தின்,  இவர்களின் கால்நடைசார்ந்த முக்கியமான வழக்காற்றிற்கு வழிகோலுகின்றது.   

ஆதிகாலம் தொட்டு எருமை வளர்ப்பினையும் தம் முக்கியமான தொழிலாக மேற்கொண்டு வருகின்ற படகர்கள் எருமையினை ‘எம்மெ’ என்று அழைக்கின்றனர். இந்தச் “சக்காலத்தி” சடங்கு நிகழும் ஆங்கிலமாதமான திசம்பர் மாதத்தினை, தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தினைப் படகர்கள் அவர்களின் மாத வரையறையில் ‘எம்மாட்டி’ என்று அழைக்கின்றனர். இது இவர்களின் புத்தாண்டிற்கான துவக்கமாகவும் திகழ்கின்றது.

எம்மெ + ஓட்டி என்பதே எம்மாட்டி என்று மருவியிருக்கலாம். அதவாது, எருமையினை ஓட்டிச் செல்வது என்பதே இம்மாதத்தின் பெயர்க்காரணமாகும். மேலும் எருமைகளை அடைக்கின்ற பட்டியினை இவர்கள் “எம்மட்டி” என்று அழைக்கின்றனர். அதாவது படக மொழியில் “அட்டி” என்பதற்கு ஊர் என்று பொருள். அதாவது எருமைகளின் ஊர் என்று பொருள் கொண்டது இப்பெயர். இந்நிலையில் எருமைகளின் ஊரிற்குச் செல்வது என்ற பொருளும் இம்மாதத்திற்குப் பொருந்தும்.

படகர்களின் வாழ்விடமான நீலகிரியில் பனிக்காலம் தொடங்கி கடும் பனிப்பொழிவிற்கு ஆளாகும் இந்தப் பருவத்தில் இவர்களின் “ஆதிச் சீமையாக” (தம் வாழ்களத்தின் பெரும்பிரிவினைப் படகர்கள் “சீமெ” என்று அழைக்கின்றனர்) விளங்கும் கூடலூர்ப்பகுதிக்கு தம் எருமை மந்தைகளை ஒட்டிச் செல்கின்றனர். கடும் பனிப்பொழிவில் புற்களெல்லாம் கருகி எருமைகளுக்கு உணவுப்பற்றாக்குறை ஏற்படும் என்பதற்காக இம்முறையினைப் பின்பற்றுகின்றனர்.

இந்தக் காலச்சூழல் கருதி எருமைகளை ஓட்டிச்செல்லும் போது இடையே ஓய்வு எடுப்பதற்கும், இக்காலச்சூழல் முடியும்வரை மந்தைகளைப் பராமறிப்பதற்கும் இவர்களால் உருவாக்கப்பட்ட இடம் தான் “எம்மட்டி” என்பது. பனியின் தாக்கம் குறைந்தபிறகு எருமை மந்தையினை மீண்டும் “மேக்குநாடு சீமெ”, “குந்தெ சீமெ”, “தொதநாடு சீமெ”, “பொரங்காடு சீமெ” ஆகிய சீமெகளுக்கு ஓட்டிவருவர்.

தம் வாழ்வியலில் தவிர்க்கமுடியாத உயிரினமாக எருமைமாட்டினைக் கொண்டுள்ள படர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள் எல்லாவற்றிலும் எருமைக்கு முக்கியமான இடமும், புனிதத் தன்மையும் உண்டு. நீலகிரியில் வாழ்கின்ற தொன்மையான இனக்குழு மக்களுள் இறைச்சி உண்பவர்களாகப் படகர்கள் இருந்தாலும் இவர்கள் எருமையை உண்பதில்லை. நீலகிரியில் வாழ்கின்ற கோத்தர் இன மக்கள் மட்டும் எருமை இறைச்சியை உண்கின்ற வழக்கினைக் கொண்டவர்கள். எனவேதான் படகர்களைப் போலவே மரபார்ந்து எருமையுடன் தம் வாழ்வியலைக் கட்டமைத்த, எருமையின் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்ற தோடர் இன மக்கள் நீலகிரியின் கைவினைக் கலைஞர்களாக விளங்கும் கோத்தர்களிடமிருந்து உணவிற்குரிய மண்சட்டியினை அவர்களே நேரடியாகப் பெறுவதில்லை. படகர்களின் வழியேப் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்தச் சடங்கில் அங்கம் வகிக்கும் இந்தக் “குன்ன கிலிகிஜ்ஜெ”, “தொட்ட கிலிகிஜ்ஜெ” எனும் பூக்கும் தாவரங்கள் காலநிலைக் குறியீடாகவும், “குன்ன கலிகிஜ்ஜெ” என்பது பெண்தன்மையின் குறியீடாகவும், “தொட்ட கிலிகிஜ்ஜெ” என்பது ஆண் தன்மையின் குறியீடாகவும் கொள்ளப்படுகின்றது. வீட்டிலுளள்ள பெண்களும், ஆண்களும் ஆரோக்கியமாக விளங்க வேண்டியும், வீட்டிலுள்ள பெண் மற்றும் ஆணின் ஆரோக்கியத்தை வெளிக்காட்ட வேண்டியும் இத்தாவரத்தினைப் பயன்படுத்துகின்றனர்.

“பண்டா” என்ற இவர்களின் எருமைகளே படகர்களின் பெரும் சொத்தாகும். பெரும் செல்வமான ஆநிரைகளைக் கவர்தலையே போரின் முதல் நிலையாகக் கருதும் சங்கவாழ்வின் தொடர்ச்சி இவர்களின் வாழ்வியலில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இந்த எருமை மந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், நிலைப்பிற்காவும் “உத்தரனெ” எனும் தாவரத்தினை இச்சடங்கில் இடுகின்றனர்.

பால் பண்டம் சார்ந்த பொருட்களைப் புழங்கும் நிலையில் பெரும் சுத்தம் என்பது அடிப்படையானதாகும். இந்நிலையில் மரபார்ந்து தம் வாழ்களத்தில் மிகையளவிலான சுத்தத்தினைப் பேணும் படகர்களின் “ஆகோட்டு” எனும் பால் பொருட்களை வைக்கின்ற அறை மிகுந்த சுத்தம் மற்றும் புனிதத்தன்மைக் கொண்டதாக விளங்கி வருகின்றது.  சுத்தத்தின் குறியீடாக இச்சடங்கில் “கொதுங்கு” எனும் மிகவும் சுத்தமான இடத்தில் மட்டுமே வளரும் தாவரத்தினை இடுகின்றனர். வீட்டில் சுத்தம் நிலைப்பெற வேண்டிய நோக்கத்துடனேயே  இத்தாவரத்தினை இடுகின்றனர்.

சுத்தத்தின் மற்றொரு குறியீடாக இச்சடங்கில் தும்பை மலரினையும் இவர்கள் இடுகின்றனர். போர்களம் சுத்த வீரத்தினை வெளிப்படுத்தும் இடமாக விளங்கிய நிலையில், சுத்த வீரத்தின், களங்கமின்மையில்  குறியீடாக இடப்பட்ட தும்பையின்  குறியீடு இன்றளவும் படர்களிடம் தொடர்கின்றது. மரபார்ந்த பல வழிபாடுகளில், சடங்குகளில் இவர்கள் தும்பை மலரினை மட்டுமே பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இச்சடங்கிற்குரிய எல்லாத் தாவரங்களும் மூலிகைத்தன்மைக் கொண்டவையாகவும், இவர்களின் மருத்துவத்திற்குப் பயன்படுபவையாகவும் விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தாவரங்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து, அதை ஐந்து பகுதியாகப் பிரித்து, தம் வீட்டின் கூரையில், வீட்டின் மூத்த ஆண் இட்டு இச்சடங்கினை மேற்கொள்கின்றனர்.

இந்தக் காப்புத் தாவரங்களை இவர்கள் வீட்டினுள் எடுத்துச் செல்வதில்லை; பெண்கள் தொடுவதில்லை. காப்பிட்டு மூன்று நாள் கழித்து இத்தாவரங்களை எடுத்து தம் வீட்டின் கூரையின் மீது வீசுகின்றனர். அத்தாவரங்களைத் தரையில் வீசினால் யாரேனும் மிதித்துவிடக்கூடும் என்பதற்காக, அதன் புனிதநிலையினைக் காக்க இவ்வாறு செய்கின்றனர்.

இவ்வாறு மரபார்ந்து தம் முன்னோர்கள் மேற்கொண்டுவந்த இந்தச் சடங்கில் வழிவழியாக காப்பிடப் பயன்படுத்திவந்த தாவரங்களைக்கொண்டு காப்பிட்டு, தம் முன்னோர்களை அழைத்து, தம் மரபுவழுவாமையினை வெளிப்படுத்துகின்றனர். தம் இல்லங்களில் இக்காப்புத் தாவரங்களின் குறியிட்டுத் தன்மைக்குரிய சூழல் தொடர்ந்து நிலவி, வளமான வாழ்வுத் தொடரவேண்டும் என்றும் தம்முன்னோர்களிடம் கோரிக்கை வைத்து வணங்குகின்றனர்.

பெண்கள், ஆண்கள், கால்நடைகள், வேளாண்மை ஆகிய ஒருங்கிணைந்த ஆரோக்கியமான வாழ்வியல் சூழல் நிலவுவதையும், அது தொடர வேண்டும் என்ற அவாவினையும் இயற்கையினை முன்னிறுத்தி வெளிப்படுத்துகின்றனர். இந்தத் தாவரங்களை இட்டு எருமை மந்தைகளை ஓட்டிச்செல்வதற்கான காலத்தை அறிவுறுத்தவும் செய்கின்றனர். இந்தக் காட்டுத் தாவரங்கள் அனைத்தும் காடுகளில் தானாக வளர்பவை. மரபு மற்றும் இயற்கையோடு அமைந்துள்ள இந்தச் சடங்கானது படகர்களின் இயற்கை மற்றும் மரபறிவிற்குத் தக்க சான்றாகும்.

துணைநின்றவை –
1.. ஆ.இரமகிருஷ்ணன், பொறங்காடு சீமை வழிபாட்டு மரபுகள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 1992
2. கோ.சுனில்ஜோகி, நீலகிரி பெறங்காடு சீமை படகர் இன மக்களின் மூலிகை மருத்துவம், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2012.
3. கோ.சுனில்ஜோகி, நீலகிரி படகரின மக்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்கு பொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015
குப்பியம்மாள், ஒரசோலை, வயது 80, நேர்க்காணல்
இலட்சுமியம்மாள், தாந்தநாடு, வயது 75, நேர்க்காணல்
ஆலாகவுடர், மர்லகம்பை, வயது 60, நேர்க்காணல்
பெள்ளாகவுடர், குண்டாட, வயது 58, நேர்க்காணல்      
மாதியம்மாள், திம்பட்டி, வயது 78 , நேர்க்காணல்