ஆய்வு: பண்டைத் தமிழகத்தின் எல்லை

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -பண்டைத் தமிழகத்தின் எல்லை
தொல்காப்பியர் காலத்தில் பண்டையத் தமிழகம் இலக்கண இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியல் கூறுகளிலும் சிறந்து விளங்கியது. இதற்குச் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் சான்றாக அமைகிறது. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தற்கால இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருந்த பண்டைத் திராவிடம், தொல்காப்பியர் காலத்தில் சுருங்கிக் காணப்படுகிறது. அது தமி்ழ்கூறும் நல்லுலகமாகச் சிறப்புற்று நின்றிருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் தமிழ்கூறும் நல்லுலகமாகச் சிறந்து விளங்கியது என்பதை,

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆஇரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

(பனம்பாரனார் பாடிய தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம்)

பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் அறியமுடிகிறது. இப்பாயிரத்தில் வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரிமுனையும் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிலமாகத் திகழ்ந்ததை எடுத்துரைக்கின்றது. பண்டைத் தமிழகத்தின் எல்லைப் பகுதியைச் சிலப்பதிகாரம்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு
(சிலம்பு. 8 : 1-2)

என்று வேனிற்காதையில் குறித்திருக்கிறது. இங்கு நெடியோன்குன்றம் என்பது வடவேங்கடத்தையும் தொடியோன்பெளவம் என்பது குமரிமுனைக் கடலையும் குறிக்கும். புவியியல்படி, திக்குகளைக் கூறத் தொடங்குவோர் முதற்கண் ‘தலைப்பக்கம் வடக்கு’ என்று உரைப்பர். இத்தகைய மரபு இங்குக் கடைப்பிடிக்கப்பட்டமையை அறியலாம். வேங்கடம் என்பது வடஎல்லைப் பகுதியாக விளங்கியமை கருதத்தக்கது (இராமசுப்பிரமணியம்,2008:17). சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்திலும் நன்னூல் சிறப்புப்பாயிரத்திலும் தமிழகத்தின் எல்லைகளைக் காணமுடிகின்றன. தமிழகத்தின் எல்லைகளாகத் தெற்கே குமரி (முதலில் இது மலையாகவும் பின்பு ஆறாகவும் கடல்கோளுக்குப் பின்பு குமரிக்கடலாகவும் இருந்துள்ளது), வடக்கே திருவேங்கடமலை, கிழக்கும் மேற்கும் கடல்கள் இருந்துள்ளன.

குமரி, வேங்கடம், குண, குடகடலா
மண்திணி மருங்கின் தண்தமிழ் வரைப்பில்
(சிலம்பு.வஞ்சி.நூல்கட்டுரை.1-2).

குணகடல் குமரி குடகம் வேங்கடம் 
எனும்நான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
(நன்னூல் சிறப்புப்பாயிரம்.8 -9).

தொல்காப்பிய இலக்கண நூலில் வேங்கடமலை தமிழகத்தின் வட எல்லையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சரியான வடஎல்லை வேங்கடத்துக்கு அப்பால் உள்ள ‘வட பெண்ணை ஆற்றின் தென்கரையாகும்’. வட பெண்ணையாற்றிலிருந்து அக்காலத்துத் தமிழ்நாடு தொடங்கியது. இதற்குச் சில சான்றுகள் உள்ளன. கல்லாடனார் வேங்கடமலைக்கு வடக்கில் ஓர் ஊரில் இருந்தவர் என்பதே இதற்குரிய சான்றுகளில் ஒன்றாகும் (வேங்கடசாமி,2001:162). திருவேங்கடமலை தமிழ்நாட்டின் வட எல்லையாக இருந்தது என்பதில் சற்றும் ஐயமில்லை. ஏனென்றால், பண்டை ஆசிரியர்கள் அனைவரும் அதனையே வட எல்லையாகக் கூறியுள்ள்னர் என்று மயிலை சீனீ. வேங்கடசாமி கூறியுள்ளார் (2001:294). இவர் திருவேங்கடமலையைத் தாண்டியும் (அதற்கு அப்பாலும்) தமிழ்கூறும் நல்லுலகம் இருந்துள்ளது என்பதை இலக்கியப் பாடல்கள் வழிச் சான்று காட்டுகிறார். திருவேங்கடமலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்டது என்பதை,

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் (அகம்.211)

என்று மாமூலனார் என்னும் புலவர் கூறுகிறார். அக்காலத்து, திருவேங்கடமலையையும் அதைச் சூழ்ந்த நாட்டினையும் புல்லி என்னும் சிற்றரசன் ஆண்டான் என்றும் (அகம்.61) அப்புலவரே கூறுகின்றார். அன்றியும் வேங்கடமலைக்கு அப்பால் உள்ள மொழிபெயர் தேயத்தில் வடுகர் வாழ்ந்ததாக அப்புலவரே கூறியுள்ளார்.

புடையல்அம் கழற்கால் புல்லி குன்றத்து
நடைஅரும் கானம் விலங்கி நொன்சிலைத்
தொடைஅமை பகழித் துவன்நிலை வடுகர்
பிழிஆர் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் (அகம்.295)
.

எனவே, வேங்கடமலை தமிழ்நாட்டின் வட எல்லை என்பதும் அம்மலைக்கு அப்பால் வேறு மொழி பேசப்பட்ட ‘மொழிபெயர் தேயம்’ இருந்தது என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது. ஆனால், வேங்கடமலையை மட்டும் வட எல்லையாகக் கூறியது எவ்வாறு பொருந்தும்? வேங்கடமலை தமிழகத்தின் வடக்கே குணகடல் முதல் குடகடல் வரையிலும் கிழக்கு மேற்காய் நீண்டு கிடக்கும் ஒரு மலையன்று; அது குணகடலின் பக்கமாகக் கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஒரு பகுதி மட்டுமே. எனவே, கீழ்க்கடற் பக்கமுள்ள ஒரு மலையை மட்டும் வடஎல்லையாகக் கூறியது தமிழ்நாட்டின் வடஎல்லையை முற்றும் குறிப்பிட்டதாகுமோ? தமிழ்நாட்டின் வடக்கே மேற்கடற் பக்கமாகவும் ஓர் எல்லை கூற வேண்டுவது இன்றியமையாததன்றோ? அவ்வாறு ஓரெல்லை இருந்தே தீரவேண்டும். இல்லையென்றால், அது தமிழகத்தின் வடஎல்லை முழுவதும் கூறப்பட்டதாகாது. கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வேங்கடமலையை வடஎல்லையாகக் கூறியதுபோல மேற்குத் தொடர்ச்சி மலையிலும் ஓர் எல்லை கூறப்படவேண்டும். அவ்வாறு ஏதேனும் ஓர் எல்லை இருந்ததா? சங்க நூல்களில் இதற்கு ஏதேனும் விடை கிடைக்கின்றதா? இந்த ஆராய்ச்சிக்கும் மேற்குறித்த சங்கப்புலவர் மாமூலனாரே நமக்குத் தோன்றாத்துணையாக இருந்து வழி காட்டுகின்றார். குடகடலுக்கு அருகில் தமிழ்நாட்டின் வட எல்லையாக ஒரு மலையை அவர் குறிப்பிடுகின்றார். அது ஏழில்மலை அல்லது ஏழிற்குன்றம் என்பதாகும். தலைமகன் (காதலன்) பிரிவின்கண் தலைமகள் (காதலி) தோழிக்குச் சொல்லியதாக இப்புலவர் பெருமான் செய்த செய்யுள் ஒன்றில் தற்செயலாக இதனைக் குறிப்பிடுகின்றார். அது வருமாறு:

அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய
எவன்ஆய்ந் தனர்கொல் தோழி ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக
அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு
ஏழிற் குன்றத்துக் கவாஅன் கேழ்கொள
திருந்துஅரை நிவந்த கருங்கால் வேங்கை
எரிமருள் கவளம் மாந்தி களிறுதன்
வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
கல்ஊர் பாம்பின் தோன்றும்
சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே (அகம்.349).

நன்னன் என்னும் சிற்றரசனது ஏழிற் குன்றத்துக்கப்பால் மொழிபெயர் தேயம் அதாவது தமிழ் அல்லாத வேறு மொழி வழங்கும் தேசம் இருந்தது என்பது இப்பாட்டினால் பெறப்படுகின்றது. இந்த ஏழிற்குன்றம் குடகடற் பக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த கொங்கண நாடாகிய துளுநாட்டில் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வடஎல்லை மேல்கடற் பக்கமாகவுள்ள ஏழிற் குன்றத்தையும் கீழ்க்கடற் பக்கமாகவுள்ள வேங்கடமலையையும் கொண்டிருந்தது என்பது நன்கு விளங்குகின்றது. ஏழில்மலை இப்போது மலபார் மாவட்டத்தில் உள்ள கண்ணனூருக்கு வடக்கே பதினெட்டு மைலுக்கப்பால் இருக்கிறது. இங்கு ஏழில்மலை என்பதை உச்சரிக்கத் தெரியாதவர்கள் அதனை எலிமலை என்று வழங்கினர். பிற்காலத்தில் அந்த எலிமலையை வடமொழியில் மூஷிகமலை (மூஷிகம் – எலி) என்று மொழிபெயர்த்துக் கொண்டனர். அந்த மலைப் பகுதியை ஆண்ட அரசகுலத்தைப் பற்றி முஷிக வம்சம் என்னும் வடமொழி நூலையும் எழுதிவிட்டனர். பிற்காலத்துப் போர்ச்சுகீசியர் இந்த மலையை மவுண்ட் டி எல்லி என்று கூறினர். தமிழ்நாடாக இருந்த சேரநாடு பிற்காலத்தில் மலையாள மொழிபேசும் நாடாக மாறிவிட்ட பிறகு ஏழில்மலை தமிழகத்தின் வடஎல்லையைக் குறிக்காமற் போயிற்று. ஆனால், சங்க காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கரையில் வடஎல்லையாக இருந்தது ஏழில்மலை என்பது நன்கு தெரிகின்றது. பண்டைத் தமிழ்நாட்டின் வடஎல்லை கீழ்ப்புறமாக வேங்கடமலையும் மேற்புறமாக ஏழிற்குன்றமும் விளங்கியது (வேங்கடசாமி,2001:296). வேங்கடமலைக்கும் ஏழில்மலைக்கும் இடையில் உள்ள நாடுகளில் வடஎல்லையாக இருந்தவை எவை என்பதை மாமூலனார் பின்வருமாறு கூறுவதை,

குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் (குறு.11)

என்று கட்டி என்னும் சிற்றரசனது நாடு தமிழ்நாட்டின் வடஎல்லையாக இருந்தது என்றும் அவனது நாட்டுக்கப்பால் வேறுமொழி பேசப்படும் தேயம் இருந்தது என்றும் அவர் கூறுகிறார். அகநானூறு 44-ஆம் பாட்டில் சோழனுக்கும் சேரனுக்கும் நடந்த போரில் பல சிற்றரசர்கள் சேரனுக்குத் துணையாக இருந்தனர் என்றும் அவர்களுள் கட்டி என்பவனும் ஒருவன் என்றும் அறியக்கிடக்கின்றது. குறுந்தொகை கூறும் கட்டியும் அகநானூறு கூறும் கட்டியும் ஒருவனே என்பது ஆராய்ச்சியினால் விளங்குகின்றது. கட்டியரசன் கொங்கு நாட்டின் வடபகுதியை ஆண்டனர். அன்றியும் சேரனுக்கு உதவியாகச் சென்றவர்களுள் கங்கன் என்பவனும் கூறப்படுகின்றான் (அகம்.44). இந்தக் கங்கன் என்பவனும் தமிழ்நாட்டின் வடஎல்லையில் இருந்த நாட்டினை அரசாண்ட ஒரு சிற்றரசன் ஆவான். சிலப்பதிகாரம் கட்டி, கங்கன் என்பவர்களைக் கட்டியர், கங்கர் என்று இரண்டு குழுவினராகக் கூறுகின்றது. பங்களர் என்பவர் பங்கள நாட்டை ஆண்டனர். பங்கள நாடு இப்போதைய சித்தூர், வடார்க்காடு மாவட்டங்களில் இருந்தது. இது வங்காள நாடு என்னும் வங்கநாடு அன்று. சிலப்பதிகாரம் காட்சிக்காதை 157-ஆம் அடியில் ‘பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்’ என்று பங்களரையும் கூறுகிறது. பங்களரும் தமிழகத்தின் வடஎல்லையில் இருந்தனர். பங்களர், கங்கர், கட்டியர் ஆகிய இவர்கள் தமிழ்நாட்டின் வடஎல்லையில் இருந்தவர்கள் (வேங்கடசாமி,2001:297). அகநானூற்றில் மேற்குறித்த செய்திகளுக்குச் சான்றுகள் உள்ளன. அவைகள் வருமாறு:

எழாஅப் பாணன் நல்நாட்டு உம்பர் (அகம்.113:17).
நல்வேற் பாணன் நல்நாட்டு உள்ளதை (அகம். 325:17).

மேற்குறித்த பாடல் சான்றுகள் வாணாதிராயரின் நாடும் தமிழகத்தின் வடஎல்லையில் இருந்ததாகும். எனவே, பங்களர், கங்கர், கட்டியர், பாணர் (வாணாதிராயர்) ஆகியோர் தமிழகத்தின் வடஎல்லையில் இருந்தவர் என்பது தெரிகின்றது. வேங்கடமலை மட்டும் தமிழகத்தின் வடஎல்லை இல்லை என்றும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஏழில்மலையும் ஓர் எல்லை என்றும் இம்மலைகளுக்கிடையில் இருந்த நாடுகளில் கங்கர், பங்களர், கட்டியர், பாணர் முதலியோர் வாழ்ந்து வந்தனர் என்றும் இவர்கள் வாழ்ந்த நாடுகள் தமிழகத்தின் வடஎல்லைகளாக இருந்துள்ளன என்பதை வேங்கடசாமி கூறுகிறார் (2001:297-298). பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறியது பங்காளரைத்தானா? வங்காள தேசத்தவரையா பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது? மேல்நோக்காகப் பார்க்கும்போது, பங்களரும் வங்காளரும் ஒருவர் போலக் காணப்பட்டாலும் ஊன்றிப் பார்க்கும்போது பங்களரும் வங்காளரும் வெவ்வேறு நாட்டினர் என்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் கூறுகிற பங்களர் வங்காள நாட்டுப் பங்காளரை அன்று என்பது தெரிகிறது. பங்களர், பங்காளர் என்னும் சொற்கள் ஒரே ஒலியுடையனவாகக் காணப்பட்டாலும் இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றன என்று தோன்றுகிறது. இதற்குச் சாசனச் சான்றுகளும் கிடைக்கின்றன. தென்இந்தியச் சாசனங்கள் என்னும் நூலிலே எட்டாவது தொகுதியிலே கீழ்க்கண்ட செய்திகள் கிடைக்கின்றன:

1. சயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்களநாட்டு வடக்கில் வன்முகைநாட்டு உய்யக்கொண்டான் சோழபுரம் (S.I.I., Vol. VII, No.7).
2. சயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்களநாட்டு முகைநாட்டுக் காட்டுத்தும்பூர் (S.I.I., Vol. VII, No.11).
3. பங்களநாட்டுக் காட்டுத்தும்பூர் நந்திகம்பீஸ்வரம் (S.I.I., Vol. VII, No.11).
4. பங்களநாட்டு வடக்கில் வன்முகை நாட்டு உய்யக் கொண்டான் சோழபுரம் (S.I.I., Vol. VII, No.8).

மேலே காட்டப்பட்ட சாசனப் பகுதிகளிலிருந்து பங்களநாடு, சயங்கொண்ட சோழமண்டலத்தில் இருந்தது என்பது தெரிகிறது. சயங்கொண்ட சோழமண்டலம் என்பது தொண்டைமண்டலமாகும். தொண்டைமண்டலத்துக்குப் பழைய பெயர் அருவாநாடு என்பதாகும். சயங்கொண்ட சோழமண்டலம், தொண்டைமண்டலம், அருவாநாடு என்னும் பெயருடைய நாடு தமிழகத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் (தமிழகத்தின் வடஎல்லையில்) சேர்ந்ததுதான் பங்களநாடு என்பது இந்தச் சாசனங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பங்களநாடு சில உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும் அப்பிரிவுகளில் இரண்டு வன்முகைநாடு, முகைநாடு என்பன என்பதும் இந்தச் சாசனங்களினாலே தெரிகின்றன. இந்தச் சான்றுகளைக் கொண்டு, சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற பங்களர் என்பவர் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்திருந்த பங்கள நாட்டினர் என்பது நன்கு விளங்குகிறது. பங்களர் என்னும் சொல் வங்காளரைக் குறிக்கவில்லை; தமிழரில் ஒரு பகுதியாரைக் குறிக்கிறது என்பதற்குச் சாசனச் சான்று காட்டி நிறுவப்பட்டது. கொங்கணர், கங்கர், கட்டியர் முதலிய பெயர்களைப் போலவே பங்களர் என்னும் பெயரும் சங்ககாலம் முதல் தொன்றுதொட்டு உள்ள பெயராகும். பங்களர் என்னும் பெயர் பிற்காலத்து வழக்குச்சொல் அன்று என்று கூறுகிறார் (வேங்கடசாமி,2002:141-145).

கி.மு.7-ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழ்தவிர வேறு எந்த மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது. கடைச் சங்ககாலத்திலும் இந்நிலைமையே இருந்தமை சங்ககாலச் செய்யுள்களாலும் சங்கம் மருவிய வனப்புகளாலும் அறியப்படும். திராவிடம் (தமிழ்), ஆந்திரம், கன்னடம், மகாராட்டி, கூச்சரம் என்னும் ஐந்தையும் பஞ்சதிராவிடம் என்று பண்டைக் காலத்தில் வடவர் வழங்கியதால், ஆரியர் வந்தபின்பும் விந்தியமலை வரை தமிழும் அதன்திரிபான திராவிடமுமே வழங்கியமை பெறப்படும். ஆரியர்கள் வருகைக் காலத்தில் வட இந்தியாவிலும் திராவிட மொழிகள் வழங்கியதைப் பிராகுவீயும் இராசமகாலும் இன்றும் காட்டும் என்கிறார் ஞா.தேவநேயபப்பாவாணர் (வேங்கடராமன்,2006:10).

“சிந்துச் சமவெளியில் புதையுண்ட மொகஞ்சொதாரோ, அரப்பா நகரங்களில் தமிழ்முத்திரைகள் காணப்படுகின்றன என ஈராசு பாதிரியார் கருதுகிறார். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்நாகரிகம் திராவிடருடையது என நிறுவப்பட்டமையால், கற்கால இந்தியா முழுமையிலும் வழங்கியமொழி தமிழே. சமஸ்கிருதம் பிராகிருதம் தொடர்பான மொழிகள் வழங்கவில்லை என்று ந.சி.கந்தையாபிள்ளை குறிப்பிடுகிறார். ரிசுலி என்னும் ஆசிரியர் திராவிடரே இந்தியப்பழங்குடிகள் என்றும் இந்தியாவி்னின்றும் சென்ற மெசபதோமியநாகரிகம் செமித்தியநாகரிகத்திற்கு அடிப்படையாக இருந்ததென்றும் கூறுவர். சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவு தொல்பொருள் ஆய்வுக்கருத்துகளுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைகிறது. எனவே, இந்தியத் துணைக்கண்டத்தின் முதன்மொழி தமிழ் என்பதும் அது காலப்போக்கில் மேற்கு ஆசிய நாகரரீக நாடுகளுடையே பரவி மாற்றமுற்றது என்பதும் தெளிவாகின்றன”(கா.கோ.வேங்கடரமன்,2006:12). ‘ஹெக்கெல் என்னும் ஜெர்மானிய அறிஞர் குமரிமுனைக்குத் தெற்கேயுள்ள ஞாலத்தின் நடுக்கோட்டிற்கு இருமருங்கும் இருந்த நிலப்பகுதிகளே மக்கள் வாழ்விற்குத்தக்க நிலையை முதற்கண் அடைந்தன என்றும் அங்கு மக்கள் முதற்கண்தோன்றி வளர்ந்து நாகரிகத்துக்கு வித்திட்டனர் என்றும் கூறியுள்ளார். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பாறைகள் மிகவும் பழமையான காலத்தில் உண்டாயின என்றும் ஒருபெரிய மலைத்தொடர் இந்தியாவியின் மேற்கரையில் இருந்து தெற்கேசென்று மேற்கும் கிழக்குமாக நீண்டிருந்தது என்றும் இழந்த இலெமூரியர் என்னும் நூலில் ஸ்காட் எலியட் என்பவர் கூறியுள்ளார். அம்மலைத்தொடர்ச்சியே ஆசியாவிற்கு இமயமலையும் ஐரோப்பாவிற்கு ஆல்ப்சு மலையும் வடஅமெரிக்காவுக்கு இராக்கிமலையும் தென்அமெரிக்காவுக்கு ஆண்டசுமலையும் பேர்அரணாக இருப்பதுபோல இலெமூரியா கண்டத்திற்கும் பேர்அரணாக இருந்தது என்றும் பெரும்புலவராகிய அக்கிலி என்பர் கருதுகின்றார்’ (கா.சுப்பிரமணியபிள்ளை,2010:13-14). ‘லினார்மென் என்ற ஆய்வாளர் ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதற்குமுன்னரே தமிழர்கள் குமரிமுனையில் இருந்து இமயமலைவரை பரவியிருந்தனர் என்று கூறுகிறார். மேலும், ஹேவல் என்ற அறிஞர் சுமேரியப்பகுதியில் தமிழர் இருந்துள்ளனர் என்று கூறுகிறார். மாம்கர் என்ற அறிஞர் கி.மு.2500 அளவில் இந்தியாவில் மிகச் சிறந்த நாகரிகமுடைய இனம் வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறார். ரைஸ்டேவிட்ஸ் என்ற ஆய்வாளர் தமிழர் கிரேக்கர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால்தான் கிரேக்க மொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று கூறுகின்றார் இராபர்ட் கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும் இக்கருத்தை ஏற்றுக் கொள்கின்றனர்’ (கா.வாசுதேவன்,2008:1). தமிழர்கள் பேசியமொழியும் பழந்திராவிடமொழியாகிய தமிழ்மொழியாகும். இப்படிப் பரந்தும் விரிந்தும் வாழ்ந்து வந்த தமிழர்கள் நாளடவில் தங்களுடைய எல்லையைச் சுருக்கிக் கொண்டே வேங்கடமலைவரையில் வந்துள்ளனர். அவர்கள் அதனைத் தங்கள் எல்லையாகவும் வகுத்துக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். தற்பொழுது தமிழகத்தின் எல்லைப்பகுதி திருத்தணிகை மலைவரையில் அமைந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தின் எல்லைப்பகுதி வடவேங்கடம் முதல் தென்குமரிவரையில் சுருங்கிக் காணப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் சான்றுகளாக அமைகின்றன.

துணைநூல் பட்டியல்

ஆறுமுகநாவலர்., 1992, நன்னூல் காண்டிகையுரை சொல்லதிகாரம், சென்னை: முல்லை நிலையம்.
இராகவையங்கார்., 1947, குறுந்தொகை விளக்கம், சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் சொல்லதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
கருணாநிதி,ந., 2008, தொல்காப்பியம், சென்னை: வசந்தா பதிப்பகம்.
கலியாணசுந்தரனார், சா., 1947, குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை: கபீர் அச்சுக்கூடம்.
குருநாதன் (மற்றும் பலர்.)., 1988, சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிமூன்று, தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
சண்முகம் பிள்ளை, மு., 1994, குறுந்தொகை மூலமும் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
சிவலிங்கனார், ஆ., 1988, தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைவளம் எச்சவியல், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
சிவலிங்கனார், ஆ., 1988, தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைவளம், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
சுப்பிரமணியன், ச.வே., 2003, பத்துப்பாட்டு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.
சுப்பிரமணியன், ச.வே., 2004, சிலப்பதிகாரம், சென்னை: கங்கை புத்தகநிலையம்.
சுப்பிரமணியன், ச.வே., 2006, சங்க இலக்கியம் (முழுவதும்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
சுப்பிரமணியன், ச.வே., 2009, அகநானூறு, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
தண்டபாணி தேசிகர், ச., 2003, நன்னூல் விருத்தியுரை, சென்னை: பாரிநிலையம்.
தண்டபாணி தேசிகர், ச., 2008, நன்னூல் விருத்தியுரை, சென்னை: சாரதா பதிப்பகம்.
தமிழண்ணல்., 2002, குறுந்தொகை, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.
தாமோதரன்., 1999, நன்னூல் மூலமும் விருத்தியுரையும், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
வில்வபதி, கோ., 2003, நன்னூல் மூலமும் உரையும், சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.
வேங்கடசாமி நாட்டார், நா.மு., 2009, மணிமேகலை, சென்னை: சாரதா பதிப்பகம்.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி – 6, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 1, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி – 4, சென்னை: மக்கள் வெளியீடு.
வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி-3, சென்னை: மக்கள் வெளியீடு.

S A ANNAIYAPPAN <annaiyappan.s.a@gmail.com>

* கட்டுரையாளர் – – முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. –