ஆய்வு: பண்பாட்டு அபகரிப்பு

எழுத்தாளர் க.நவம்ஆங்கிலேய அரசியல்வாதிகள் பட்டு வேட்டி, நஷனல், சால்வை சகிதம் தமிழர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் காட்சிகளை அண்மைக் காலங்களில் கனடாவில் கண்டிருக்கின்றோம். அப்போதெல்லாம் இவர்களுள் பலரும் ‘வனக்கம்’ என்று பேசத் துவங்கி, ’நான்றி’ என்று பேசி முடிக்கக் கேட்டிருக்கின்றோம். 2012இல் ஓப்ரா வின்ஃப்றி நெற்றியில் பொட்டுடன் மும்பாய் வீதிவழியே நடந்து சென்றதை அறிந்திருக்கின்றோம். சாறியும் பொட்டும் அணிந்தவராய் மடோனா இசை நிகழ்ச்சியில் பங்குகொண்டதைப் பார்த்திருக்கின்றோம். இவையும் இவைபோன்ற இன்னபிறவும் சமூக, அரசியல், பொருளாதார பலாபலன்களை உள்நோக்காகக் கொண்ட பண்பாட்டுப் பகடைக்காய் நகர்த்தல்கள் மட்டுமே என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும் எருமைச் சருமத்தில் மழைத்துளி விழுந்தாற்போல, இவை குறித்து அக்கறை ஏதுமற்றவராய் ஏனோதானோவென்று வாழாதிருப்பதை விடுத்து, இவற்றின் பின்னணியில் தோன்றாப் பொருளாய் மறைந்திருக்கும் அதிகார அரசியலையும் – அதன் பெறுபேறாக வரலாற்று வழிவந்த வலிகள், வேதனைகள், அவமானங்கள் ஆகியவற்றைப் புதைபண்புகளாகக் கொண்ட ‘பண்பாட்டு அபகரிப்பு’ (Cultural Appropriation) எனும் எண்ணக்கருவையும் – நாம் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

‘ஒரு பண்பாட்டினரின் கூறு ஒன்றினை அல்லது கூறுகள் பலவற்றினைப் பிறிதொரு பண்பாட்டினர் தமதாக்கிக் கொள்ளல் ‘பண்பாட்டு அபகரிப்பு’ என்பது ஓர் எளிய, இலகுவான வரைவிலக்கணம். அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்களின் பாரம்பரிய உணவான ’பிற்ஸா’ இப்போது அமெரிக்கரது பாரம்பரிய உணவாகிவிட்டமையை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். ஆனால் பண்பாட்டு அபகரிப்பு என்பது இத்தகையதோர் இலகுவான விடயமல்ல. ‘ஒரு பண்பாட்டின் சில குறிப்பிட்ட மூலக்கூறுகளை அப்பண்பாட்டினரின் சம்மதமின்றி அல்லது விருப்பின்றி பிறிதொரு பண்பாட்டினர் தம்வசப்படுத்துதலே ’பண்பாட்டு அகரிப்பு’ என இன்னொரு வரைவிலக்கணம் கூறுகின்றது. ஒரு பண்பாட்டுக் குழுவினர், வேறொரு பண்பாட்டுக்கூறு ஒன்றினால் கவரப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என சிலர் வினவக்கூடும். தவறேதும் இல்லைதான். ஆனால் பண்பாட்டு அபகரிப்பு என்பது தன்னகத்தே ஓர் எதிர்மறை அர்த்தத்தைக் கொண்டிருப்பதை அவர்கள் அறிவதில்லை. குறிப்பாக, வரலாற்று ரீதியாக சமூக-பொருளாதார-அரசியல்-இராணுவ அந்தஸ்தில் தாழ்த்தப்பட்ட, அடக்கியொடுக்கப்பட்ட, விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்ட, ஒரு சிறுபான்மைப் பண்பாட்டின் கூறுகளை, பெரும்பான்மைப் பண்பாட்டினர் தம்வசப்படுத்தும்போதே அங்கு ஓர் எதிர்மறை அம்சம் தலைதூக்குகின்றது. ஆதிக்கமும் அதிகாரமும் கொண்ட தரப்பினர், ஏனையோரது மொழி, மதம், இசை, இலக்கியம், ஓவியம், நடனம், உணவு, உடை, ஆபரணம், மருத்துவம் போன்ற பல்வேறு பண்பாட்டுத் துறைகளின் கூறுகளைத் தமதாக்கிக்கொள்ளும்போது, அது பாதகமான பக்க விளைவுகளைத் தோற்றுவிக்கின்றது என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை!

‘றொக் அன்ட் றோல்’ என்னும் நடனக் கலையின் ’கிங்’ என, இறந்த பின்னும் இன்றுவரை போற்றிப் புகழப்படுபவர், எல்விஸ் பிரெஸ்லி. ஆனால் அக்கலையின் உண்மையான மூலவர்கள் கறுப்பு இன ஆபிரிக்க – அமெரிக்கர்களே. கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் இவர்களை அமெரிக்க வெள்ளையர்கள் அங்கீகரிக்க மறுத்தமைக்கு, பச்சை இனவாதமும் நிறவாதமும் காரணமாயிருந்தன. இதனால் இவர்களது பண்பாட்டுக் கலையை அச்சொட்டாகக் ‘காப்பி’ அடிக்கக்கூடிய வெள்ளைக் கலைஞர்களைத் தேடிய ஒலிப்பதிவுக் கம்பனியினர்வசம் எதேச்சையாய் அகப்பட்டவர்தான் எல்விஸ் பிரெஸ்லி. விளைவாக எல்விஸ் பெரும் பேரும் புகழும் பணமும் பெற்றார். ஒலிப்பதிவுக் கம்பனிகள் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்தன. ‘றொக் அன்ட் றோல்’ நடனக் கலையின் பிதாமகர்கள் பிச்சையெடுத்தனர். 

அமெரிக்காவின் தேசியக் காற்பந்துச் சுற்றுப்போட்டியில் (என்.எல்.எஃப்.) பங்குகொள்ளும் வாஷிங்ரன் அணியானது, ’வாஷிங்டன் றெட்ஸ்கின்ஸ்’ என்ற பெயரையும், தனது இலச்சினையாகப் பூர்வீக இந்தியரின் உருவப் படத்தினையும் பயன்படுத்தி வருகின்றது. பூர்வீக இந்தியர்களது பாரம்பரியங்களையும் சாதனைகளையும் பண்பாடுகளையும் மதித்து, அவர்களைக் கௌரவப்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கை இது என அணியின் உரிமையாளர்கள் தமது செய்கையை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் இது இனத்துவ வகைமாதிரிப்படுத்தலின் தீங்கான ஒரு வடிவம் என்றும், பூர்வீக இந்தியர்கள் முகம்கொடுத்துவரும் ஏனைய பல வாழ்வியல் பிரச்சினைகளுக்கு ஊட்டமளித்து வரும் பாரபட்சத்தையும் தவறான புரிந்துணர்வையும் இது ஊக்குவிக்கின்றது என்றும், வன்முறைத் தன்மைகொண்ட அடக்குமுறை வரலாற்றின் அடர்த்திச் செறிவை இது ஐதாக்கி, அற்பமாக்கிவிடுகின்றது என்றும் மனித உரிமையாளர்கள், கல்வியியலாளர்கள், விளையாட்டுத் துறையினர், அறிவியற் துறையினர், பூர்வீக இந்திய அமைப்பினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இயற்கையினதும், விலங்குகளினதும், மானுட விரோதிகளினதும் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி, உயிர்தரித்து வாழ்ந்துவந்த ஆபிரிக்க மக்களது ஆடைகளுக்கும், அணிகலன்களுக்கும், ஆடல்-பாடல் கலைகளுக்கும் ஒரு நீண்டகால வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அதனை உணராத வெள்ளை இனத்தவர், அம்மக்களதும் அவர்களது பரம்பரையினரதும் நடையுடை பாவனைகளையும் இசை-நடன-நாட்டியங்களையும் ’ஹலோயீன்’ கேளிக்கைக் கொண்டாட்டங்களிலும் களியாட்ட நிகழ்ச்சி அரங்குகளிலும் பயன்படுத்தி வருவதில் உள்ள அசௌகரியத்தையும் அவமானத்தையும் – சோகத்தையும் கோவத்தையும் ஆபிரிக்க வம்சாவழியினராலும், அவர்களையொத்த ஒரு சிறுபான்மைக் கலாச்சாரத்தினராலும் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

‘யோகா’ என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதாகம காலங்களின் போது இந்திய உபகண்டத்தில் உதயமான ஓர் உடலியல், உளவியல், ஆன்மீகவியல் ஒழுக்கப் பயிற்சி முறையாகும். இம்மூன்று துறைகளிலும் இந்திய மக்களது முன்னேற்றத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் எனும் நோக்குடன், பிரித்தானியர் தமது ஆட்சிக் காலத்தின்போது யோகாவை இந்தியாவில் தடை செய்திருந்தனர். இன்று அதே பிரித்தானியா உட்பட, சகல மேற்கு நாடுகளிலும், முக்கியமாகப் பெரும்பான்மைப் பண்பாட்டினர் மத்தியில், யோகா தனது உண்மை உட்பொருளின் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் இழந்து மூளியான நிலையிலும், ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடிப் பரவிக் கிடக்கின்றது. பெரும்பான்மைப் பலம் கொண்ட ஆதிக்க சக்தியினரால் தண்டனைக்குரியது என ஒரு காலத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒரு பண்பாட்டுக்கூறு, பின்னொரு காலத்தில் அதே ஆதிக்க சக்தியினரது பெருவிருப்புக்குரிய தத்துப் பிள்ளையானதன் முரண்நகையை என்னவென்று சொல்வது?

கதிர்காமத் திருத்தலம் ’கத்தரகம’ எனவும், கணநாதன் ’கணதெய்யோ’ எனவும் நாமகரணம் செய்யப்பட்டு, வழிபடப்படுவதில் விசனப்பட ஏதுமில்லை. பெருமையுடன் வரவேற்கப்பட வேண்டிய விடயந்தான். ஆனால் கதிர்காமக் கந்தனையும் கணநாதனையும் காலா காலமாகத் தமது கண்கண்ட தெய்வங்களாக வழிபட்டுவரும் இனத்தவர்கள், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவும், சிறுபான்மைப் பண்பாட்டினைச் சார்ந்தவர்களாகவும் இருக்கும்வரை, கதிர்காமம் ’கத்தரகம’ ஆகவும், கணநாதன் ’கணதெய்யோ’ ஆகவும் உருமாற்றம் பெறுவது, அவர்களுக்கு உவப்பான விடயங்களாக இருக்க முடியாது. சிறுபான்மைப் பண்பாட்டினரது இருத்தல் கேள்விக்கு உள்ளாக்கப்படும் பட்சத்தில், இவை விருப்புக்குரிய பண்பாட்டுப் பகிர்வுகளாக இருக்க முடியாது.

மேற்கூறப்பட்டுள்ள சில எடுத்துக்காட்டுக்களும் இவை போன்ற பல நூற்றுக்கணக்கான உதாரணங்களும் பண்பாட்டு அபகரிப்பில் அடங்கியிருக்கும் எதிர்மறை அம்சத்தினைத் தெட்டத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. ஒரு பெரும்பான்மைப் பண்பாட்டினர் இன்னொரு சிறுபான்மைப் பண்பாட்டினரது பண்பாட்டுக் கூறுகளைத் தமதாக்கிக் கொள்ளும்போது – அங்கு சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, கலை, பண்பாட்டுச் சுரண்டல்கள் இடம்பெற்றால், மூலப் பண்பாட்டுக் கூறுகளின் கர்த்தாக்களது ஆற்றல்களும் ஆக்கத் திறன்களும் இருட்டடிப்புச் செய்யப்பட்டால், இத்தகைய இருட்டடிப்புக்கள் மூலம் இவர்கள் ஆக்கத்திறன் அற்றவர்கள் எனவும், நுண்ணறிவு குறைந்தவர்கள் எனவும், புதுமை – புத்தாக்கச் செயலூக்கம் அற்றவர்கள் எனவும் இனத்துவ வகைமாதிரிப்படுத்தப்பட்டால், இவர்களது இருத்தல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டால், இவர்கள் காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டால், இவர்களது பண்பாட்டுக் கூறுகள் சுவையானவை, சுவாரஸ்யமானவை, கவர்ச்சியானவை என வெறுமனே வேடிக்கை காட்டப்பட்டால், கேலிக்குட்படுத்தப்பட்டால், இருசாராருக்கும் இடையிலான அதிகாரச் சமமின்மையை இவை வெளிப்படுத்தி, வலியுறுத்த முற்பட்டால், பாரபட்சத்தின் அடையாளங்களாக இவை இனங்காணப்பட்டால் – அது தீங்கானது; விருப்புக்குரியதல்ல; அதுவே அப்பட்டமான பண்பாட்டு அபகரிப்பு ஆகும்!

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் உணர்ச்சிவசப்படு நிலையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் இப்பண்பாட்டு அபகரிப்பு, காலனியாதிக்கம் பெற்றெடுத்த ஒரு தத்துப் பிள்ளை. மொழிதான் இப்பண்பாட்டு அபகரிப்பின் ஆரம்பப் பள்ளி. போத்துக்கேயரும், ஸ்பானியரும், பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்த நாடுகளின் மொழிகளிலிருந்து அபகரித்த சொற்களைத் தத்தமது மொழிகளுக்குள் உறிஞ்சி எடுத்துக்கொண்டனர். அந்தவகையில் ஆங்கில மொழிகூட, ரோமன், ஜேர்மன், பிரெஞ்சு மொழிகளுட்பட, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த ஏனைய நாடுகளது மொழிகளின் ஒரு ரஸக்கலவையாகக் காணப்படுவதற்கும் இதுவே காரணமாகும். இவ்வாறு மொழிவழியாகக் கருக்கொண்ட பண்பாட்டு அபகரிப்பு எனும் கருத்தாக்கம் இன்று பாரபட்ச அரசியலின் அடையாளச் சின்னமாக வடிவெடுத்துள்ளது. மடோனா, க்வென் ஸ்ரெஃபனி, மைலி சைரஸ், கேற்ரி பெரி போன்ற ஆங்கில இசை-நடனக் கலைஞர்கள் பலர், சிறுபான்மைப் பண்பாடுகளைச் சேர்ந்தோரது பண்பாட்டுக் கூறுகளைச் சிறுமைப்படுத்தும் வகையில் பண்பாட்டு அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

நவீன தாராண்மைவாத ஜனநாயகத்தின் பெறுபேறுபேறாக, மேற்குலக நாடுகள் யாவும் இன்று தமக்கேயான ஒற்றைப் பண்பாட்டுக் கட்டமைப்பினின்றும் வெளியேறி, பன்முகப் பண்பாடு எனும் பலவர்ணப் பூங்காவினுள் கால் பதித்துள்ளன. இந்நிலையில், மக்களைப் பிணைத்து வைத்திருக்கும் பன்முகப் பண்பாடு, இவ்வகைப்பட்ட புதிய சமூகத்தின் இருப்புக்கு அவசியம் என்பதிலும், பண்பாட்டு ஊடுபரவல் (Cultural Diffusion), பண்பாட்டுத் தன்மயகாக்கல் (Cultural Assimilation) என்பன தவிர்க்கவொண்ணா, பயன்மிக்க சமூகச் செயற்பாடுகள் என்பதிலும் எவ்வித மாறுக் கருத்தும் இருக்க முடியாது. மாறிவரும் இன்றைய புதிய உலக நடப்புகளுக்கு இது உகந்தது என்பது உண்மைதான். ஆனால் தமிழ் யுவதி ஒருத்தி ஜீன்ஸ் அணிவதும், ஆங்கிலப் பொப்பிசைப் பாடகி ஒருத்தி சேலையணிந்து, தன் நெற்றியில் திலகமிட்டு மேடையில் நடனமாடுவதும் ஒன்றல்ல. இங்கு யார் பண்பாட்டு அபகரிப்புச் செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? என்பதுதான் முக்கியம்.

சிறுபான்மைப் பண்பாட்டின் கூறு ஒன்றினைப் பெரும்பான்மைப் பண்பாட்டினர் தமதாக்கிக் கொள்ளும்போது, அப்பண்பாட்டுக்கூறு முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தையும்  குறைந்த முக்கியத்துவத்தையும் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. அதுவே பின்னர் ஒரு கட்டத்தில் அப்பண்பாட்டுக் கூற்றின் மூலத்தினது புது வடிவமாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு. உரிமைகோர அருகதை அற்றவர்களுக்கு உரிமையைப் பண்பாட்டு அபகரிப்பு வழங்குகின்றது. பிறரது பண்பாடுகளை விசித்திரமானவையாகவும் வெளிக் கவர்ச்சி மிக்கவையாகவும் காண்பிக்கின்றது. ஆழமான காரணங்களையும் விளக்கங்களையும் பெறுமதிகளையும் வரலாறுகளையும் கொண்ட பண்பாட்டு அம்சங்களை வெறும் வேடிக்கையானவையாக மலினப்படுத்தி வெளிக்காட்டுகின்றது.

எனவே பண்பாட்டின் பெயரால் பிணக்குப்படாத சமுதாயத்தை விரும்பும் ஒவ்வொருவரும், பண்பாட்டு அபகரிப்புக்கு உள்ளாகும் சமூகத்தினரின் மனவலியை உணர்ந்தறிந்து வைத்திருத்தல் வேண்டும்; பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கும், பண்பாட்டு அபகரிப்புக்கும் இடயிலான வேறுபாடுகளைத் தெளிவுறவே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்; இவையிரண்டினதும் தன்மைகளை வரலாறும் அதிகாரமும் வேறுபடுத்துகின்றன என்ற உண்மையை இனங்கண்டு வைத்திருத்தல் வேண்டும். அவ்வாறே இவை குறித்த உண்மைகள், இச்சிறு கட்டுரை வழியாகப் பன்முகப் பண்பாட்டு நாடுகளில் வேர்விட்டு வாழத் துவங்கியிருக்கும் எம்மவர் செவிப்புலன் சென்றிட வேண்டும்!

’கண் திறந்திட வேண்டும்….. மண் பயனுற வேண்டும்…… உண்மை நின்றிட வேண்டும்!’

ஆதாரங்கள்:
1.Borrowed Power: Essays on Cultural Appropriation, edited by Bruce Ziff & Pratima V. Rao.
2.Intercultural Communication in Context, by Judith N. Martin & Thomas K. Nakayama.
3.What’s wrong with Cultural Appropriation? by Maisha Z. Johnson
4.Cultural Appropriation: Homage or Insult? by Tami.
5.The conversations we need to have about cultural appropriation by Alyssa Rosenberg.
6.’ஒரு நாற்பது வருட நடைப் பயணம்,’ க. நவம், தமிழர் தகவல், 2012 ஆண்டு மலர்

knavam27@hotmail.com