ஆய்வு: பள்ளியெழுச்சி வளர்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனாரின் பங்களிப்பு

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்பண்டைய காலகட்டங்களில் ‘துயிலுணர்பாட்டு’ என்றும், ‘துயிலெழுப்பு பாட்டு’என்றும் பாணர்மரபில் வழங்கி வந்த இவை வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்தவையாகும். அதுவே, பிற்காலத்தில் புலவர்மரபில் தனிப்பாடல்களாக உருவெடுத்தன. தொல்காப்பியர் காலத்தில் ஒரு துறையாகக் குறிப்பிடப்படுகின்றது. பக்தி இயக்ககாலத்தில்  தனித்த ஒரு வகைமையாக இனங்காணப்பட்டது. மேலும், இது சிற்றிலக்கியங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையினை பன்னிருபாட்டியல், தொன்னூல் விளக்கம், பிரபந்த தீபம் முதலான பாட்டியல் நூல்களின் வாயிலாக அறிய இயலுகின்றது. ஆக, தொன்றுதொட்டு வழங்கிவந்த இப்பாட்டு மரபானது பல்வேறு  நிலைகளில், பல்வேறு பொருண்மை நிலையில் பாடப்பட்ட நிலைபாடுகளின் தன்மைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக சுந்தரனாரின் பொதுப்பள்ளியெழுச்சியில் காணப்படும் மாறுபட்ட நிலைபாடுகளை இனங்காண முயன்றுள்ளது.   

இலக்கண மரபில் பள்ளியெழுச்சி
பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும்  நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும்.  இலக்கணமரபில் இது துயிலெடைநிலை எனக் குறிப்பிடப்படுகின்றது. இது உறங்குகின்ற மன்னனை உறக்கத்தினின்று எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவதாகும். இது துயிலுணர், துயிலெடுத்தல், துயிலெடுப்பு, துயிலெடைநிலை என பல்வேறு சொல்லாடல் நிலையில் தொன்றுதொட்டு வழங்கி வந்திருக்கின்றது. இது கண்ணுறங்கும் வேந்தன் குன்றாத புகழோடு இன்னும் நன்றாக வாழ்ந்தோங்க  வேண்டும் என்றெண்ணி வேந்தனைச் சுற்றி நின்று, அவனை வாழ்த்துவது போன்ற நிலையில் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இதை, “தாவில் நல்இசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர்  ஏத்திய துயிலெடை நிலையும்”       (தொல்.பொருள்.புறம்-நூ:15)

எனப் பாடாண்திணையில் ஒரு துறையாகக் குறிப்பிடுவதைக் காண இயலுகின்றது. இதனையே புறப்பொருள் வெண்பாமாலை,

“வீரக்கழலை அணிந்த மன்னவனே! அகன்ற இவ்வுலகில் உன்னிடம் திரை செலுத்தும் மன்னர்கள் உனக்காக, உன்னை வணங்கும் பொருட்டு காத்திருக்கும் அவர்களுக்கு அருள்  செய்ய உறக்கத்தினின்று எழுவாயாக”  (பு.வெ.மா,ப-206)
என அருள் வழங்கும் அடிப்படையில் மன்னனது வீரம் சிறப்பிக்கப்படுகின்றது. இதனை,

“அடுதிறல் மன்னரை அருளிய எழுகெனத்
தொடுகழல் மன்னனைத் துயிலெடுப் பின்று”   (பு.வெ.மாலை, கொளு-9)

எனப் புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு குறிப்பிடுகின்றது. இவ்வாறு புறப்பொருள் வெண்பாமாலையும் துயிலுணர்த்தும் நிலையை ‘துயிலெடைநிலை’ என்றே வழங்குகின்றது. ஆக கி.பி-9ஆம் நூற்றாண்டுவரை இச்சொல்லாட்சியில் எவ்வித மாற்றமுமின்றி  வழங்கப்பட்டு வந்த நிலையினை உணர்ந்து கொள்ள இயலுகின்றது.

துயிலெடை பள்ளியெழுச்சியாக மாற்றம் பெறல்
துயிலெடை என்பது துயில் எழுப்பல் எனப்படும். இது ஆரம்பத்தில் மன்னருக்கு என்று இருந்த நிலை பக்தி இயக்க காலத்தில் இறைவனுக்கு என்று ஆயிற்று. அதாவது கோவில், இறைவன் என்னும் சொல்லாடல்கள் மன்னனிடமிருந்து இறைவனுக்கு என மாற்றமடைந்தது போலவே துயிலெடைநிலையும், பள்ளியெழுச்சி என்ற பெயரில் இறைவனுக்கு என வழங்கப்பட்டது. அதுவே, மனோன்மணியம் சுந்தரனார்  எழுதிய பொதுப்பள்ளியெழுச்சி என்ற கவிதைக்கு முன்னுரையாக  செந்தமிழ்ச்செல்வி  இதழில் இது பற்றிக் குறிப்பிடும் போது,

“மார்கழி மாதம் உதயகாலமாய்ப் படைப்புக் காலத்துக்கு ஏதுவாகும். உலகப் படைப்பைத் திருவுளத்து அமைத்து வைந்தவ சக்தியைப் படைக்கத் தொடங்குகிற காலமே திருப்பள்ளி எழுச்சி என வழங்கும். திருப்பெருந்துறைப் புராண ஆசிரியர், மகாவித்துவான், திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் திருப்பள்ளியெழுச்சியாவது, பணிவிடை கேட்டு ஆண்ட அரற்கு அன்பு செயும் இயல்பு”                           (செந்தமிழ் செல்வி, ப.20)

என்று குறிப்பிட்டிருப்பது அதன் மாறுபட்ட நிலைகளை உணர்ந்து கொள்ள ஏதுவாக அமைகின்றது. இது ஆரம்பத்தில் தனிப்பாடல்களாக இருந்து, பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற ஒரு தனித்த இலக்கிய வகையாக உருப்பெற்றிருக்கின்றது.

பாணர் மரபும், புலவர் மரபும்
பாணர்களால் பாடப்படும் பாடல்கள் வாய்மொழியாக பல காலம் பாடப்பட்டு வந்தவையாகும். அவர்கள் சூழலுக்கேற்றாற்போல்  கருத்தாக்கங்களில் சில மாறுபாடுகளை நிகழ்த்தி வழங்கி வந்திருக்கின்றனர். அதாவது,
“முன்னோர்களின் பாடல்கள், பாடல் நிகழ்த்தப்படும் இடம், சூழலுக்கு ஏற்ப இட்டுக் கட்டும் அடிகளே, பாடப்படும் இடத்தில் உள்ள மன்னன், தலைவனை அப்பாடலில் பொருத்தியுள்ளன”    (சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும், ப.49) என்பது பாணர் மரபில் தோன்றிய பாடல் நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. மேலும்,

“ஒரு பாணன் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும் பழம் பாடல்களைப் பாடவல்லவன் என்றுதான் அவன் குறிக்கப்படுவானே தவிர அவனை ஒரு படைப்பாசிரியன் என்று அக்காலச் சமுதாயம் கருதவில்லை”     (மேலது,ப.50)

என்ற சி.எம். பௌராவின் கருத்தை செண்பக ராமசாமி குறிப்பிடுவதை கே.பழனிவேலு எடுத்துக்காட்டுகிறார். ஆனால் புலவர்களால் பாடப்படும் பாடல் வழிவழியாக பாடப்பட்டு வந்தவை அல்ல. அவை அவ்வக்காலச் சூழலுக்கேற்றாற் போல் உருக்கொள்கின்றன. ஆகவேதான் புலவர் மரபில் தோன்றிய பள்ளியெழுச்சி வெவ்வேறு பொருண்மைகளில் பாடப்பட, துயிலெடைநிலை மன்னனை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பாடப்பட்டிருக்கின்றன
பள்ளியெழுச்சி பாடல்களின் அமைப்பு. பள்ளியெழுச்சி பாடல்களின் அமைப்பை இரு வேறு நிலைகளில் புரிந்து கொள்ள இயலும்.

1) அகவடிவம்
2) புற வடிவம்

அக வடிவ அமைப்பானது அதன் பாடுபொருள் மாற்றம், இசை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அந்தவகையில் இது ஆரம்பத்தில் காலை, இயற்கை வருணனை, தலைவனது பெருமை என்ற தன்மைகளின் அடிப்படையிலும், பக்தி இயக்க காலத்தில் இறைவனது பெருமை, அவனது அருட் செயல் என்பனவுமாக அடியவர் வரவால்  மாற்றம் பெறுகின்றன. அதுவே பிற்காலத்தில் சமுதாய சீர்திருத்தம் எனும் நோக்கில் பொருள் மாற்றம் பெறுகின்றது. இதற்கு பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியை உதாரணமாகக் கூறலாம். மேலும் இது தமிழ் இசைப் பாட்டு வகைமைகளில் ஒன்றாகவும் இனங்காணப் பெறுகின்றது. மேலும் ,

“சூதர் வாழ்த்த, மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க, ஏறுமாறு சிலைப்ப”  (மதுரைக்காஞ்சி-670)

என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுவதினின்று  இது முரசு கொட்டியும் பாடப்படும் என்பதை அறிய இயலுகின்றது. மேலும் பள்ளியெழுச்சிப் பாடல்கள் பூபாள ராகத்தில் பாடப்படுவன என்பதும் குறிப்பிடத்தக்கது.

புறவடிவ அமைப்பில் நோக்கும் போது இவை  தம்முள் அளவொத்து, நான்கடிகளால் ஆன எண்சீர் ஆசிரிய விருத்தங்களுடன் பத்துப்பாடல்கள் என்ற தன்மையில் அமைந்து காணப்படுகின்றன.  சங்க காலத்தில் ‘துயிலெடைநிலை’ என்ற நிலையில் கூறப்பட்ட இப்பாட்டு மரப்பனது  இடைக்காலத்தில் – ஆழ்வார் நாயன்மார்களின் பக்தியியக்கத்தின்போது-அது திருப்பள்ளியெழுச்சி என்ற பெயரால் வழங்கியது. நாயன்மார்களில் மாணிக்கவாசகரும் ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியுள்ளனர்.  சான்றோர்கள் இருவரும் ஒரே வகையான செய்யுள் வடிவிலேயே பாடியுள்ளனர். பிற்காலத்தில் தத்துவராயரும் சிதம்பர சுவாமிகளும் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியபோதும் அந்தச் செய்யுள் வடிவங்களை அப்படியே பின்பற்றிப் பாடினார்கள். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசீயக்கவி பாரதியார் பாடிய பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியிலும் அதே செய்யுள் வடிவத்தையே கையாண்டுள்ளார்.

இதில் பாரதியாரின் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி, ராய சொக்கலிங்கத்தின் காந்தி திருப்பள்ளியெழுச்சி போன்றவை சுதந்திர தேவியை முன்னிறுத்துகின்றன. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தம்முடைய ஞானாசிரியனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இதே காலகட்டத்தில் தமிழ்த் தாய் திருப்பள்ளியெழுச்சி என்னும் நூலும் வெளிவந்ததை வாழ்வியல் களஞ்சியம் காட்டுகின்றது. அண்மைக்காலத்தில் இசைஞானி இளையராஜா பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள் எனும் நூலை வெளியிட்டுள்ளார். இவரது பாவைப்பாடல்களில் பெண்களைத் துயில் எழுப்பி இறைவன் புகழ் பாடி அருள் பெற வைக்கின்றார். மேலும் இறைவனையே எழுப்பி அருள் கேட்கும் உரிமை பாமரனுக்கும் உண்டு என்பதையும் நிறுவுகின்றார்.

ஒவ்வொன்றும் பத்துப் பத்துப் பாடல்கள் கொண்டவை. எல்லாம் மேலே காட்டிய ஆழ்வார் நாயன்மார் பாடல்களின் பொருள் அமைப்பையும் வடிவத்தையும் இசையமைப்பையும் அவ்வாறே பின்பற்றி அமைந்துள்ளன. சிதம்பர சுவாமிகளின் முருகக் கடவுளைப்பற்றிப் பாடிய திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களும் அவ்வாறே வடிவமும் இசையமைப்பும் பெற்றுள்ளன.  பாட்டின் வடிவம், செய்யுளின் அடி சீர் அமைப்பு எல்லாம் பன்னிரண்டு நூற்றாண்டுகளாக ஒரே வகையாக இருந்துவருகின்றன என்பதும் நோக்குதற்குரியது.

பெரும்பாலும் ‘அரங்கத்தம்மா, அரங்கா,எம்பெருமானே’ என்பது போன்ற சொற்கள் இடம் பெற்றும், பள்ளியெழுந்தருளாயோ என முடிவதுமாகக் காணப்படுகின்றது. உதாரணமாக,

“………………………………………….திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயோ” (திருவாசகம்,பா-368)

என திருப்பெருந்துறையில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானை துயிலெழுப்பும் முறையில் அமைந்துள்ளது. அதே போல தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி,

“அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாயே” (திருப்பள்ளியெழுச்சி, பா-1)

என அமைந்துள்ளது. இது வடமொழி மரபில் சுப்பரபாதமாக கோயில்களில் அதிகாலையில் பாடப்படுகின்றது. வடமொழியில் வழங்கும் சுப்ரபாதத்தை சு+ப்ரபாதம் எனக் கொண்டால், இது சுகமான விடியல் என்னும் பொருண்மையில் தமிழில் திருப்பள்ளியெழுச்சி என வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தைக் குறிப்பிடலாம். இது திருப்பதியில் அதிகாலையில் ஆலயத்தில் இறைவனைத் துயிலெழுப்புதற்காகப் பாடப்படுகின்றது. இது வடமொழி அடிப்படையிலானது.

பள்ளியெழுச்சியின் துயில் நிலைகள்
பள்ளியெழுச்சியில் சொல்லப்படும் துயில் பலவகைப்பட்டது.
1)  அறிதுயில்
2)  நீடுதுயில்

துயிலெடை நிலையில் குறிப்பிடப்படும் துயிலானது இயல்பானது. யாரேனும்  துயிலுணர்த்தும் போது இயல்பாக விழிப்பு கொள்ளக் கூடியது. ஆனால் பள்ளியெழுச்சியில் குறிப்பியும் துயில் அப்படிப்பட்டதல்ல. பக்திக் காலத்தில்  இறைவனுக்காக பாடப்படும் பாடல்களில் இறைவனது துயிலை அறிதுயில் எனலாம். அதாவது தூங்காமல் தூங்குவதாம். அரங்கனும் திருவரங்கத்திலே அவ்வாறுதான் துயில் கொள்வானாம். இங்கு தூங்காமல் தூங்குவது தூக்கமுமல்ல, விழிப்புமல்ல. அது அறிவோடு கூடிய இனிமையான விழிப்பு நிலையாகும். இதையே மறைமலையடிகள் அறிதுயில் என்று குறிப்பிடுகின்றார். அதாவது வெளிமனம் அடங்கி, உள்மனதை மனக்கண்ணால் நோக்குகிற நிலை எனலாம். ஆகவேதான் பத்திரகிரியார்,

“தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்”
(பத்திரகிரியார் பாடல்கள், மெய்ஞ்ஞானப் புலம்பல்-1)

என்கிறார். அதாவது தூங்காமல் தூங்கியிருக்கும் நிலை உயர்வான விழிப்பு நிலை. இந்த நிலையில் பிரபஞ்ச  ஆற்றலோடு இணைந்து நிறைந்து இருக்கும் நிலை என்கின்றனர். இது மனிதனுக்கு பயிற்சியினால் சாத்தியமாகும் என்பதை சித்தர்கள் பாடல் வழி உணர்ந்து கொள்ள இயலும். அதே வேளையில் நீடுதுயில் என்பது தற்காலத்திற்குரியது. அதாவது எழ வேண்டிய நேரத்திலும் எழாமல் தூங்கிக் கொண்டிருப்பதாம். இது அடிமைப்பட்ட சமுதாயத்தின் தூக்கம். இத்தகைய தூக்கத்தைக் களைக்கவே பாரதியார் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பாடுகின்றார். ஆகவேதான் பாரதிதாசன்,
“நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா”
(பாரதிதாசன் கவிதைகள், புதுநெறி காட்டிய புலவன்,வரி-58)

என பாரதியாரைப் பாராட்டுகிறார்.  மேலும், இத்தகைய துயிலினை வெள்ளையன் வெளியேறிய பின்னரும் மக்கள் தொடர்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்தவர் போல,

“பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் இங்குன்
தொண்டர் பல்லாயிரம் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னுமெந்தாயே!”
(பாரதியார் கவிதைகள்,பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி,பாடல்-1)

என பாரதமாதாவை உருவகப்படுத்துகின்றார். அதாவது சூரியனின் கதிர்கள் பரவிய பின்னும் இருள் விலகாதது போன்ற மாயையினின்றும் மக்கள் வெளிவர வேண்டும். அடிமைத் தலையில் சிக்குண்ட மக்கள் ஆங்கிலேயரின் அடிமைச் சங்கிலியினின்று விடுபட்டு, மேட்டிமையினரின் அடிமைச்சங்கிலியில் அகப்பட்டுவிடக் கூடாது. ஆகவேதான் நீண்ட துயில் கொள்ளாமல் விரைவாக எழ வெண்டுமென்று உணர்த்துதற்காக சுதந்திர பாரதத்திற்கே பள்ளியெழுச்சி பாடியுள்ளார்.

இவ்வாறு பற்பல நிலைகளில் பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியை மனோன்மணியம் சுந்தரனார்  ‘பொதுப்பள்ளியெழுச்சி’ என்ற பெயரில் ஒரு கவிதையை  உருவாக்கியுள்ளார். இதில் ’பொது’ என்பதற்கு ,    “எத்தெய்வத்தையும் முன்னிலைப்படுத்தாது, கடவுட் கொள்கையுடைய எவரும் வேண்டும் முறையில் ‘எம்பெருமான்’ என்றழைத்து வேண்டுவது”   (செந்தமிழ்ச்செல்வி, ப-18)  என முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது சமய பொதுநிலையைக் காட்டுகின்றது. ஆயினும் இவரது பொதுப்பள்ளியெழுச்சி பாடல்களை நோக்கும் போது அவை சைவ சமய பின்னணியில்  தத்துவியல் சார்ந்து இயங்குதல் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன. இதற்குக் காரணம் இவர் ஒரு காலத்தில் கேரளத்து ஆலப்புழைக்குக் குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்தவர். இவர் இலக்கியம், வரலாறு, தத்துவம் ஆகிய துறைகளில் பாண்டித்யம் பெற்றவர். மகாராசாக் கல்லூரியில் தத்துவ பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மட்டுமல்ல இவர் தத்துவியலாளரும், வேதாந்தியுமாக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆக இவற்றின் பிரதிபலிப்பை இவரது பாடலின் ஒவ்வொரு வரியிலும் காண இயலுகின்றது. மற்றபடி பள்ளியெழுச்சி பாடுதற்குண்டான மரபு அனைத்தும் இவரது பாடல்களில் பின்பற்றப்பட்டிருக்கின்றது.

பொதுப்பள்ளியெழுச்சி
இக்காலச் சூழலுக்குத் தேவைப்படும் பல பொருண்மை நிலைகளில் பள்ளியெழுச்சி பாடப்பட்டிருப்பினும், சமயப் பொது நோக்கில் பாடப்பட்ட சுந்தரனாரின் பொதுப்பள்ளியெழுச்சி, மாந்தரின்  தவறான எண்ணங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருப்பது அவர்களது பற்றால் மேலோங்கும் பேராசையே ஆகும். அதனை விடுத்து இறைப்பற்றை நாட மனம் தூய்மைப் பட வேண்டும். அதற்கு மக்களனைவரும் மனத்தூய்மையுடையவராக இருந்து பிறரையும் நல்வழி நடத்த வேண்டும். இந்திரியங்களினால்  தோன்றும் அஞ்ஞான இருளை அகற்றி தீய நினைவுகளினின்று விடுதலை பெற வேண்டும். அதாவது, மன இரும்பு இறைவன் அருள் என்னும் காந்த வயப்பட வேண்டும் என்கிறார். அத்தகைய செயல்பாட்டை நிகழ்த்த இறைவா! நீ என்னுள் எழுந்தருள வேண்டும் எனுமாறு பாடியுள்ளார்.

“இருதயத் தினிச்சகம் ஏறிடு முன்னம்
எம்பெருமான் எம்முள் எழுந்தருளாயே”    (பொதுப்பள்ளியெழுச்சி, பா-1)

என்னும் பாடல் வரிகளில் வெளிப்படுத்துகிறார். இதுவரை பாடப்பட்ட  பள்ளியெழுச்சியைப் போன்றே இது பாடப்பட்டிருப்பினும் அவை பிறரைத் துயிலெழுப்புதல் போல அமைய, இவர் அதனின்று சற்று வேறுபட்டு தன்னையே துயிலுணர்த்திக் கொள்ளுதல் என்ற தன்மையில் பாடியிருக்கின்றார். பிறவற்றைப் போன்றே இவரும் பத்துப் பாடல்களிலேயே பாடியுள்ளார். குறிப்பாக எண்சீர் ஆசிரிய விருத்தத்தில் பாடப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களும் ‘எம்பெருமான் எம்முள் எழுந்தருளாயோ’ என்னும் இறுதித் தொடரை உடையனவாகப் பாடப்பட்டுள்ளன.

கவிதையில் காணப்படும் சில நயங்கள்

1)“நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலையாற்

கல்வி அழகே அழகு”                         (நாலடியார்-131)

என்பதில் மனதில் தோன்றும் நடுவுநிலை செயல்பாட்டிற்கு கல்வியே காரணம் என சமண முனிவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் சுந்தரனாரோ,

“நன்றுடன் தீதுணர் நடுநிலைப் பேறே
நல்கிய நின்னருட் கென்ன கைம்மாறே”     (பொதுப்பள்ளியெழுச்சி-2)

என்று அந்நிலை இறைவனால் ஏற்பட்டதாகப் பாடுகின்றார்.

2) யானையினைக் குட்டியாக இருப்பது முதலே சங்கிலியால் பிணைத்து வளர்த்து வந்த பழக்கத்தினால், அது பெரிதான பின்னும் அதனை விடுவிக்க முயலுவதில்லை. காரணம் தன்னால் இயலாது என அதுவாகவே நினைத்து வந்ததனால், அதனால் இயலும் காலத்தில் கூட அதனை அறியாமல் இருந்து விடுகின்றது. அதுபோலவே கன்றை தாயிடம் விடுக்க, அதன் கயிற்றை அவிழ்த்து விடுப்பினும் அது கயிறு கட்டப்பட்டுள்ளதாக நினைத்து அவ்விடமே நிற்கும். அச்சமயத்தில் அதனைத் தட்டி ஏவுதல் போன்று, நீயும் என்னுள் நல்வழி காட்டாவிடில் என்றும் என்னால் நல்லருள் எய்தவியலாது என்கிறார்.  இதே போன்று,

“புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுத்தறியை காணலாமே”
(6வது திருமுறை, திருக்கன்றாப்பூர், பா-5)

என்ற அப்பர் அடிகளின் அருட்கருத்தும் நோக்குதற்குரியது.

3)    ஞானேந்திரியங்கள் சேட்டை செய்தலை நிறுத்த மறுக்கின்றன. எப்புறம் நோக்கினும் கேடுகளால் சூழ்ந்த ஒரு நிலையே நிலவுகின்றது. இதற்கிடையில் என்னுடைய உடலானது கடலின் நடுவே மிதக்கும் தோணி போல விடப்பட்டுள்ளது. இதனின்று எங்ஙனம் என்னால் துழாவி வீடு பேற்றை அடைய இயலும்? என்கிறார். இதே போன்று இவர் தமது மனோன்மணியத்திலும் ஆடவர் நெஞ்சை மரக்கலனுக்கு உவமித்துள்ளார். அப்பரோ மனதைத் தோணி எனக் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தனக்கேற்ப பல்வேறு இடர்பாடுகளைக் கூறும் அவர், அதனின்று தன்னை விடுவித்து முக்தியாம் வீடுபேற்றை அடைய பக்தியே சிறந்த வழி எனக் காட்டுகின்றார். அத்தகைய வழியினை கண்டடைய இறைவனைத் தன்னுள் எழுந்தருளுமாறு வேண்டுவதாக பாடப்பட்ட  பாடல்களே பொதுப்பள்ளியெழுச்சியாக உருவாக்கம் பெற்றிருக்கின்றது.

நிறைவாக,
‘துயிலெடை நிலை’ என்ற நிலையில் ஒரு துறையாகக் கருதப்பட்ட துயிலுணர் பாடல்கள், பிற்காலத்தில் பள்ளியெழுச்சியாக மாற்றம் பெற்றிருக்கின்றன. மட்டுமல்லாது, அது ஒரு சிற்றிலக்கிய வகையாகவும் உருப்பெற்றிருக்கின்றது. சாதரண நிலையில் தலைவனின் புகழ்ச்சியினையும், இறைவனின் பெருமையினையும் பாடிய இவை மாந்தரின் மனநிலையினையும், சமுதாய சிக்கல்களையும் பாடுவதற்குப்  பயன்பட்ட நிலையினை இக்கட்டுரை வாயிலாக உணர்ந்து கொள்ள இயலும். பாணர் மரபில் உருவாக்கம் பெற்ற இவ்வகை இலக்கியம் இன்றும் கேரளாவில் ‘துயிலுணர்த்து பாட்டு’ என்ற பெயரில் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

துணை நின்ற நூற்கள்
1.    இராமனாதன் வி.கரு(பதிப்பாசிரியர்),  ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், 2008.
2.    சங்க இலக்கிய பாட்டு மரபும் எழுத்து மரபும், கே.பழனிவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2010.
3.    சுதாகர் ம.வி, பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம்,1990.
4.    சோமசுந்தரனார் பொ.வே(விளக்கவுரை), புறப்பொருள் வெண்பாமாலை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2004.
5.    தமிழண்ணல், தொல்காப்பியம் பொருளதிகாரம் தொகுதி-1, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2010.
6.    திருவாசகம் மூலமும் உரையும், கா.சுப்பிரமணிய பிள்ளை, ஸ்ரீ செண்பக்கா பதிப்பகம்,2014.
7.    திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரம் வரலாற்று முறையில் மூலமும் உரையும், பி.ரா.நடராசன், உமா பதிப்பகம், 2012.
8.    பத்திரகிரியார் , சித்தர்  பாடல்கள்- மெய்ஞானப் புலம்பல், library.senthamil.org.
9.    பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010.
10.    பாரதியார்,பாரதியார் கவிதைகள், அம்மன் பதிப்பகம்,1993.
11.    ஜெயராமன்(பூ), சந்திரிகா ராஜமோகன், நாலடியார் மூலமும் உரையும், வசந்தா பப்ளிகேஷன்ஸ்,2010.

rathi.r1988@gmail.com