ஆய்வு: பாறப்பட்டி இருளர்களின் சமூக அமைப்பில் உறவுமுறைச் சொற்கள்

ஆய்வுக் கட்டுரை!பண்டைக் காலத்தில் விலங்குகளைப் போன்று அலைந்து திரிந்த மனிதன் காலப் போக்கில் பல படிநிலைகளைக் கடந்து வளர்ச்சி பெறலானான். உணவினைத் தேடி அலைந்த மனித இனம் உணவினை உற்பத்தி செய்யத் தொடங்கி நிலையான ஒரு குடியிருப்பை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கியது முதல் சமூகம் என்ற ஒரு அமைப்பு தோற்றம் பெறலாயிற்று. அது முதல் அவர்களிடையே ஓர் உறவு ஏற்பட்டது. காலப்போக்கில் இவ்வுறவுகளே மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச் சென்றது. மேலும் ஒரு சமுதாயத்தின் உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாக வளர்ச்சி பெற்றது. ஓர் உறவு ஏற்பட வேண்டுமெனில் குறைந்த அளவு இருவர் தேவை இவ்விருவரும் ஒருவரை மற்றொருவர் ஏதோ ஒரு சொல்லால் குறிப்பிட முற்படும் பொழுது அவர்கள் குறிப்பிட்ட உறவுமுறையை ஏற்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு தனிநபரும் ஒரே வேளையில் பல உறவு நிலைகளை அடைய நேரிடுகிறது. அதே வேளையில் இந்த உறவுகளைக் குறிக்க பல வகையான உறவுமுறைச் சொற்களும் தோன்றியது. உறவுமுறைகள் பற்றிய ஆராய்ச்சியில் இவ்வுறவுமுறைச் சொற்கள் முக்கிய இடம் பெறுகின்றது. 

ஆய்வு நோக்கம்

உறவுமுறைச் சொற்கள் ஆய்வில் மானிடவியலார்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தில் காணப்படும் உறவுமுறைச் சொற்களைக் கண்டுபிடித்து வகைப்படுத்த பலவகையான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர். அவற்றின் அடிப்படையில் பாறப்பட்டி இருளர்களின் சமுதாய அமைப்பில் காணப்படும் உறவுமுறைச் சொற்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாறப்பட்டி இருளர்கள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இருளர் குடியிருப்பு பாறப்பட்டி ஆகும். இருளர்கள் இந்திய நடுவண் அரசால் இனம் காணப்பட்ட “பண்டைய பழங்குடி இனத்தவர்” (Primitive Tribes) ஆவர். மேற்கே வண்ணப்பாறை, தெற்கே மங்கலத்தாள் பாறை, கிழக்கே சங்கிலிப்பாறை இவ்வாறு மூன்று பக்கங்களும் பாறைகளை எல்லையாகக் கொண்டுள்ளதால் இவ்வூர் பாறப்பட்டி என்று பெயர் பெற்றது. பாறப்பட்டி இருளர்கள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த “இருள” மொழியைப் பேசுகின்றனர். இவர்களின் மொழியில் தமிழ், மலையாளம், கன்னடம் கலந்து காணப்படுகின்றது. இருளர்கள் தங்களுக்குள் உள்ள பிரிவுகளை ‘குலம்’ என்று குறிப்பிடுகின்றனர். இவர்களிடையே மொத்தம் 12 குலங்களும் 96 வகை உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இருளர்கள் ஆவி, ஆன்மா, மாந்திரீகம், பில்லிசூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் நுண்மதி படைத்தவர்கள். பாறப்பட்டி இருளர்கள் பேச்சு வழக்கு, சடங்குகள் போன்றவற்றால் மற்ற இருளர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர். தற்பொழுது இவர்கள் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி போன்ற பல காரணங்களுக்காக மலையை விட்டு கீழே இறங்கி மலையடிவாரங்களில் குடியேறியுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் பெருமாள் கோவில் பதி, மூங்கில் மடை குட்டை பதி, முருகன் பதி, புதுப்பதி, சின்னாம்பதி மற்றும் கேரள மாநிலத்தில் வாளையார் அருகே நடுப்பதி ஆகிய ஊர்களில் வசித்து வருகின்றனர். மேலும் தாங்கள் பாறப்பட்டியில் இருந்து வந்ததால் தங்களை பாறப்பட்டி இருளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

பாறப்பட்டி இருளர்களின் உறவுமுறைச் சொற்கள்

தந்தை வழி உறவுமுறைச் சொற்கள்

தந்தை வழி உறவுமுறைச் சொற்கள்

தாய்வழி உறவுமுறைச் சொற்கள்

தாய்வழி உறவுமுறைச் சொற்கள்

கணவன் வழி உறவுமுறைச் சொற்கள்

கணவன் வழி உறவுமுறைச் சொற்கள்

மனைவி வழி உறவுமுறைச் சொற்கள்

மனைவி வழி உறவுமுறைச் சொற்கள்

உறவுமுறைச் சொற்கள்
ஒரு மொழியில் காணப்படும் ஏனைய சொற்களைவிட உறவுமுறைச்சொற்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. உறவுமுறைச் சொல் ஒருவரைக் குறிப்பிடுவது மட்டுமின்றி, குறிப்பிட்ட சமுதாயத்தில் அச்சொல்லால் அழைக்கப்படுவதின் பொருள் என்ன என்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவே உறவுமுறைச் சொற்களானது உறவுமுறை அமைப்பையும் அது இயங்குகின்ற முறையையும் பிரதிபலிக்கின்றது. மேலும் ஒரு மொழியில் பிறமொழித்தாக்கம் ஏற்படும் போது ஏனைய சொற்களில் ஏற்படும் மாறுதல்களைப் போன்று உறவுமுறைச் சொற்களில் விரைவாக மாறுதல்கள் ஏற்படுவதில்லை. எனவே ஒரு மொழி ஆய்வுக்கு அம்மொழியில் காணப்படும் உறவுமுறைச் சொற்கள் மிகவும் துணையாக அமைகின்றன. உறவுமுறைச் சொற்கள் மொழி தோன்றிய காலம் முதல் வழங்கி வந்துள்ளன. தொல்காப்பியத்திலும் கூட உறவுமுறைச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் உறவுமுறைச் சொற்கள் குறித்த ஆய்வுகளோ அல்லது சிந்தனைகளோ அக்காலத்தில் தோற்றம் பெறவில்லை. உறவுமுறைச் சொல்லாய்வானாது தற்போதைய இரு நூற்றாண்டிற்கு உட்பட்ட ஆய்வே ஆகும். அதாவது 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆய்வாகும். அதன் பின்பே மானிடவியலாளர், சமுதாயவியலாளர், மொழியியலாளர் போன்றோர் இத்தகைய ஆய்வில் ஆர்வம் காட்டினர்.

உறவுமுறைச் சொல் ஆய்வு வரலாறு
உறவுமுறை பற்றிய ஆய்வு 1861-ஆம் ஆண்டு ஜே.கே பச்சியோலன் மற்றும் ஏ.எஸ். மைனே என்பவர்களின் பணியால் தொடங்கப்பட்டது ஆகும். அதனை அடுத்து பல்வேறு நிலைகளில் உறவுமுறைச் சொல் ஆய்வானது வளர்ச்சி பெற்றது எனலாம். உறவுமுறை ஆய்விற்கு மார்கன் (1871), ரிவர்ஸ் (1914), முர்டாக் (1949) போன்றோர் முன்னோடிகளாவர்.

உறவுமுறை அமைப்புகள்
உலகின் அனைத்து உறவுமுறை அமைப்புகளும் இரண்டு கூறுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஒன்று சில உறவினர்களை ஒரே வகையினராக்கி அவர்களை ஒரே சொல்லால் குறிப்பிடுவது. மற்றொன்று சில உறவினர்களைத் தனிமைப்படுத்தி தனித்தனிச் சொற்களால் குறிப்பிடுவதாகும். இவ்விதிகளின் அடிப்படையில் முர்டாக் (1949) உலகில் காணப்படும் உறவுமுறைகளை ஆறுவகையாகப் பிரிக்கின்றார்.

1. உறவாயன் முறை (Hawaiian System)
2. சூடானிய முறை (Sudanese System)
3. எஸ்கிமோ முறை (Eskimo System)
4. இரோகுவாய்ஸ் முறை (Iroquois System)
5. குரோ முறை (Crow System)
6. ஓமகா முறை (Omaha System)

இரோகுவாய்ஸ் முறை
பாறப்பட்டி இருளர்களின் உறவுமுறை இரோகுவாய்ஸ் உறவுமுறையைச் சார்ந்ததாகும். இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும். இரோகுவாய்ஸ் என்ற அமெரிக்க இந்திய பழங்குடிகளிடம் இம்முறை முதன்முதலில் மார்கனால் கண்டறியப்பட்டதால் இப்பெயர் உண்டாயிற்று. இந்த உறவுமுறை தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் சில பகுதிகள் முதலான பல பகுதிகளில் காணப்படுகின்றது. இம்முறையில் பேசுநரின் பெற்றோருடன் பிறந்த ஒத்த பாலினரின் மக்கள் அதாவது தகப்பனின் சகோதரனின் பிள்ளைகள் மற்றும் தாயின் சகோதரியின் பிள்ளைகள் ஆகியோரும் உடன்பிறப்புக்களாக ஒரு உறவுமுறைப் பிரிவினராக வகைப்படுத்தப்படுகின்றனர். பெற்றோருடன் உடன்பிறந்த எதிர்பாலினரின் மக்கள் அதாவது தகப்பனின் சகோதரியின் பிள்ளைகள் மற்றும் தாயின் சகோதரரின் பிள்ளைகள் ஆகியோர் ஒரு உறவுமுறைப் பிரிவினராக வகைப்படுத்தப்படுகின்றனர். மேற்கூறிய இரு உறவுமுறைப் பிரிவினர்களும் எதிர் பிரிவினரைத் திருமணம் செய்துகொள்ளும் முறையைக் கொண்டவர்களாகும்.

உறவுமுறையின் அடிப்படைப் பிரிவுகள்
உறவுமுறையினை இரண்டு அடிப்படைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, 

1. உருவாகும் விதத்தின் அடிப்படையில் உறவுகளின் வகைகள்
2. நெருக்கத்தின் அடிப்படையில் உறவுகளின் வகைகள்

1. உருவாகும் விதத்தின் அடிப்படையில் உறவுகளின் வகைகள்

i. இரத்த உறவு
இவ்வுறவு பிறப்பால் அமைகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் இரத்த வழியில் பிணைக்கப்பட்டவர்கள் இரத்த உறவுகளே. இவ்வுறவை பிரிக்கவும், மறுக்கவும், நீக்கவும், அழிக்கவும் இயலாது.

ii. மண உறவு
ஓர் ஆணும் பெண்ணும் மண வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளும் போது கணவனுக்கு மனைவி வழி உறவினர்களோடு பிணைப்பு ஏற்படுகிறது. மனைவிக்கு கணவன் வழி உறவினர்களோடு பிணைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு திருமணத்தில் ஏற்படும் உறவு மண உறவு எனப்படும்.

iii. புனைவியல் உறவு
ஒரு குடும்பத்தில் மண உறவும், இரத்த உறவும் அமைவது போன்று புனைவியல் உறவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது திருமணமான தம்பதியர் பல ஆண்டுகளாக குழந்தைபேறு பெற இயலாத போது இறுதியில் வளர்ப்பு பிள்ளையை தத்தெடுத்து அவர்களை சொந்தப்பிள்ளையாகவே கருதி வளர்ப்பர். இவ்வகையான உறவு புனைவியல் உறவு எனப்படும்.

2. நெருக்கத்தின் அடிப்படையில் உறவுகளின் வகைகள்

மனித வாழ்வில் இரத்த உறவு, மண உறவு, புனைவியல் உறவு ஆகிய மூன்றும் தனிக்குடும்பம் என்ற எளிய முறையில் தொடங்கி குடும்பத்தின் அளவு ஆலமரம் போல் பரந்து விரிந்து செல்கிறது. இந்த நிலையில் பரந்த எல்லைக்குள் உள்ள அனைத்து உறவினர்களும் ஒருவருக்கு நேரடியாகத் தொடர்புடையவர்களாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலையில் தொடர்புள்ளவர்களாக இருப்பர். இவர்களுக்கும் நிலவும் தொடர்பைக் கொண்டு உறவினர்கள் முதல்நிலை உறவினர்கள், இரண்டாம் நிலைஉறவினர்கள், மூன்றாம் நிலை உறவினர்கள் என்றும் இதன் பின்னரும் விரிந்து நிற்பவர்கள் நான்கு, ஐந்து… என்று வகைப்படுத்தலாம்.

முதல் நிலை உறவினர்கள்
பேசுநருக்கு எவர் ஒருவர் எவ்வித இடைத்தொடர்பும் இல்லாமல் நேரடியாக உறவு பெற்றுள்ளார்களோ அவர்கள் முதல்நிலை உறவினர் எனப்படுவர். இவ்வகை உறவினர் மண வழி உறவாலும், இரத்த வழி உறவாலும் அமைவர். எடுத்துக்காட்டாக, ஒருவரின் அப்பன், அம்மா, புறந்தான், புறந்தாள், மகன், மகள் ஆகியோர் முதனிலை உறவினர்களாவர். இவ்வுறவு இரத்த வழியில் அமைவதால் இவர்கள் இரத்த வழி முதல்நிலை உறவினர்கள் எனப்படுவர். மேலும் ஒருவரின் பெண்டு(மனைவி) அவருக்கு முதல்நிலை உறவினரே. இவ்வுறவு மண வழியில் அமைவதால் இவர் ‘மணவழி முதல்நிலை உறவினர்’ எனப்படுவார். இவ்வகையில் ஒருவருக்கு ஏழு முதனிலை உறவினர்கள் இருப்பார்கள் என்று மர்டாக் குறிப்பிடுகின்றார்.

இரண்டாம் நிலை உறவினர்கள்
தனியனின் முதல்நிலை உறவினர்களான மேற்கூறிய ஏழு பேருக்கு எவரெவர் முதல்நிலை உறவினர்களாக அமைகிறார்களோ அவர்களெல்லாம் பேசுநருக்கு இரண்டாம் நிலை உறவினர்களாவர். பாட்டன், அப்புச்சி, மாமன்(தாய்மாமன்), மாமி, வெளிப்பன், வெளிம்மே, சின்னிப்பன், சினிம்மே, பேரன், பேத்தி போன்ற உறவினர்கள் பேசுநரின் ஏழு முதல்நிலை உறவினர்களுக்கு முதல்நிலை உறவினர்களுக்கு முதல்நிலை உறவினர்களாக அமைகின்றனர். இவ்வகையில் ஒருவருக்கு 33 இரண்டாம் நிலை உறவினர்கள் அமைவார்கள்.

மூன்றாம் நிலை உறவினர்கள்
தனியனின் இரண்டாம் நிலை உறவினர்களுக்கு யார் யாரெல்லாம் முதல் நிலை உறவினர்களோ அவர்கள் எல்லாம் தனியனுக்கு மூன்றாம் நிலை உறவினர்களாவர். தனியனுக்கு மூன்றாம் நிலை உறவினர்களைத் தொடர்புபடுத்த இடையில் இரண்டு உறவு நிலைகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தனியனின் வெளிய பாட்டன், அப்பாவின் புறந்தாரின் பெண்டு, அம்மாவின் புறந்தாரின் பெண்டு, மறு(கொள்ளு)பேரன், போன்ற உறவுகளைக் கூறலாம். பொதுவாக, ஒருவருக்கு 151 வகையான மூன்றாம் நிலை உறவினர்கள் இருப்பார்கள். மொத்தத்தில் முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உறவினர்களின் எண்ணிக்கை 191 ஆகும். தனியனோடு உறவு கொள்வோரின் தொடர்பு நிலை நான்காம் நிலை உறவினர், ஐந்தாம் நிலை உறவினர் என உறவுப்பட்டியல் வளர்ந்து கொண்டே செல்லும் இவ்வாறு உறவின் நிலை மேலும் விரியும் போது அதனால் அமையும் உறவினர்கள் அனைவரையும் ‘தூரத்து உறவினர்கள்’ எனக் கூறலாம்.

உறவுமுறைச் சொற்பகுப்பு
உறவுமுறை அமைப்பானது சமுதாயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. பாறப்பட்டி இருளர்களின் உறவுமுறைச் சொற்கள் அவர்கள் சமூகக்கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளன. அவற்றை பின்வரும் காரணிகள் அடிப்படையில் பகுக்கலாம். 1. இரத்த உறவு, 2. மண உறவு, 3. போலி உறவு, 4. தலைமுறை, 5. பால், 6. வயது

1. இரத்த உறவு
குடும்ப அமைப்புகளில் முக்கிய அமைப்பாகக் கருதப்படுவது இரத்த உறவுகள் ஆகும். குடும்ப உறுப்பினர்களிடையே இரத்த சம்பந்தம் உடைய உறவுகள் இரத்த உறவுகள் என்று அழைக்கப்படுவர். இவர்கள் தனியனுடன் நேரடியான உறவினைக் கொண்டவர்கள் ஆவர். இவர்களை முதல்நிலை உறவினர் என்றும் அழைக்கலாம். அதாவது ஒரு தனியன் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், இந்த உறவில் மாற்றம் ஏதும் ஏற்படுவது இல்லை. இரத்த உறவானது உயர்நிலை உறவைக் கொண்டு விளங்குகின்றது. இந்த உறவில் இடம்பெறுவோர் அப்பன், அம்மா, புறந்தான், புறந்தாள் , மகன், மகள் ஆவர்.

2. மண உறவு
மண உறவு என்பது திருமணத்தின் மூலம் ஒரு ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கோ ஏற்படுவதாகும். திருமணத்தின் மூலம் ஏற்படும் உறவுகள் ஆளன், பெண்டு, மாமன், மாமி, நங்கை, நாத்தினி, மச்சான் போன்றவைகளாகும். திருமணத்தின் மூலம் பெறப்படும் உறவுகள் அறுந்துவிடும் தன்மை உடையன. திருமணத்தினை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகையில் உறவுமுறையினைப் பிரிக்கலாம்.

i. திருமண உறவு மூலம் கிடைக்கும் உறவுகள்
ii. திருமண உறவு செய்யும் உரிமையுடைய உறவுகள்
i. திருமண உறவு மூலம் கிடைக்கும் உறவுகள்
இந்த உறவுகள் தொடர்ந்து வருவதில்லை இடையிலேயே பிரிந்து செல்லும் தன்மை வாய்ந்தவை. இரண்டாம் நிலை உறவு என்று இவற்றைக் குறிப்பிடலாம்.

ii. திருமண உறவு செய்யும் உரிமை உடைய உறவுகள்
திருமண உறவு செய்யும் உரிமையுடைய உறவுகள் என்பவை தனியனின் தந்தையினுடைய புறந்தாள் (மாமி) மகன் / மகள், தாயின் புறந்தான் (தாய்மாமன்) மகன் / மகள் மற்றும் அவர்கள் மூலம் கிடைக்கும் உறவுகள் ஆகும். இவர்கள் திருமணம் ஆகாமலேயே அதே சொற்களைப் பயன்படுத்தும் உரிமை உடையவர்கள் ஆவர்.

இருளர்களின் இந்த திருமண உறவுமுறையானது திராவிட உறவுமுறையாகும். ஒருவர் தந்தையின் சகோதரர் (புறந்தான்) மற்றும் தாயின் சகோதரியின் (புறந்தாள்) பிள்ளைகளை மணம் செய்து கொள்ள இயலாது. மாறாக தந்தையின் சகோதரி(புறந்தாள்) அல்லது தாயின் சகோதரரின்(புறந்தான்) பிள்ளைகளைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும். உறவுகளை இரு பிரிவினர்களாக்கி ஒரு பிரிவினருடன் திருமண உறவு கொள்வதும் மற்றொரு பிரிவினருடன் திருமண உறவு கொள்வதற்குத் தடை விதிப்பதும் திராவிட உறவுமுறையின் முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது.

3. போலி உறவுகள்

இரத்த உறவோ திருமண உறவோ அன்றி வேறு இனக்குழுவினரைச் சார்ந்தவரை உறவுமுறை சொல்லி அழைத்தல் போலி உறவுமுறை எனப்படும். இது அன்பின் காரணமாகவோ அல்லது நட்பின் காரணமாகவோ அமையலாம். இதில் அப்பன், அம்மா, பாட்டன், அப்புச்சி, புறந்தான், மாமன், மாமி, மகன், மகள் என அனைத்து உறவுமுறைச் சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை போலி உறவுகள்.

4. தலைமுறை
உறவுமுறைச் சொற்கள் பயன்பாட்டில் தலைமுறையானது மிக முக்கிய இடத்தினை வகிக்கிறது. தலைமுறையாவது தனியன் அதாவது தலைமுறை கணக்கிடப்படுபவரிடம் இருந்து முன்னோக்கியும் பின்னோக்கியும் கணக்கிடப் படுகிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் உறவுமுறைச்சொல் வேறுபாடு காணப்படுகின்றது. எனவே தலைமுறையை தனியனை அடிப்படையில் கொண்டு மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம்.

அதாவது, 1. தனியன் தலைமுறை (Present Generation)
2. ஏறுதலைமுறை (Ascending Generation)
3. இறங்கு தலைமுறை (Descending Generation)

தற்போது யாரை மையப்படுத்தி தலைமுறை கணக்கிடப்படுகிறதோ அவரை தனியன் என்று வைத்துக் கொள்ள வேண்டும். அவரில் இருந்து அவருக்கு முன் உள்ள தலைமுறையினரை முன்னோக்கி ஏறுவரிசைப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். தனியன் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையினரை பின்நோக்கி இறங்கு வரிசைப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

ஏறுதலைமுறை    தலைமுறை 2 தலைமுறை +2
தலைமுறை 1 தலைமுறை +1
தனியன் தலைமுறை    தனியன்    தலைமுறை 0
தலைமுறை 1 தலைமுறை -1
இறங்கு தலைமுறை    தலைமுறை 2 தலைமுறை -2

உறவுமுறைச் சொற்கள் தலைமுறைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இச்சொற்களே தலைமுறையை அடையாளப்படுத்தி காட்டுவனவாகவும் அமைகின்றன.

ஏறு தலைமுறை – உறவுமுறைப் பெயர்கள்     
தலைமுறை  3  வெளிப்பாட்டன் / வெளிய அப்புச்சி
தலைமுறை 2 பாட்டன் / அப்புச்சி
தலைமுறை 1 அப்பன் / அம்மா
தனியன்    தலைமுறை 0 தனியன்
இறங்கு தலைமுறை – உறவுப் பெயர்கள்
தனியன் தலைமுறை    தலைமுறை 0  தனியன்
தலைமுறை 1  மகன் / மகள்
தலைமுறை 2  பேரன் / பேத்தி
தலைமுறை 3 மறுபேரன் / மறுபேத்தி

தலைமுறை அடிப்படையிலான உறவுகள் இரத்த உறவுகளே ஆகும். இவை தனியனுக்கு நேரடி உறவுமுறை கொண்டதாக உள்ளன. தலைமுறையானது ஒருவருக்கு இரண்டு வகையில் அமைந்துள்ளது.

1. தந்தை வழி உறவு
2. தாய் வழி உறவு

ஒருவருக்கு தந்தை, தாய் ஆகிய இருவழி உறவுகளும் ஏறு வரிசையில் அமைந்திருக்கும்.

தந்தை வழி உறவு
தனியன்  அப்பன்      பாட்டன்    வெளிப்பாட்டன் 
தாய் வழி உறவு
தனியன்     அம்மா  அப்புச்சி    வெளியப்புச்சி 
தந்தை வழி உறவிற்கும் தாய்வழி உறவிற்கும் உறவுமுறைச் சொற்களில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. தந்தை வழி உறவு “பங்காளி” உறவினைக் கொண்டிருக்கும். தாய்வழி உறவு “மாமன் – மச்சான்” உறவினைக் கொண்டிருக்கும்.

5. பாலினம்
சமுதாயத்தில் உள்ள பால் வேறுபாடானது உறவுமுறைச் சொற்களைக் குறிப்பதில் பெறும் பங்கு வகிக்கின்றது. தனியன் ஆணா, பெண்ணா என்பதைப் பொறுத்து உறவுமுறைச் சொற்கள் வேறுபடுகின்றன.

உதாரணமாக,
ஆண் பால்      பெண் பால்
பாட்டன்    அப்புச்சி
அப்பன்    அம்மா   
ஆளன்     பெண்டு
மகன்    மகள்
புறந்தான்     புறந்தாள்
பேரன்    பேத்தி   

மேற்காணும் உறவுமுறைச் சொற்களில் –அன், -ஆன் ஆகியவை ஆண்பாலைக் குறிக்கும் உருபன்களாகும். –இ, -ஆ, -உ, -ஆள் ஆகியன பெண் பாலைக் குறிக்கும் உருபன்களாகும். இவ்வாறு சொற்களின் இறுதி எழுத்தின் வழியே பால் வேறுபாடானது பிரித்துக் காட்டப்படுகின்றது.

6. வயது
பால் வேறுபாடு எவ்வாறு உறவுமுறைச் சொற்களில் முக்கிய பங்கு வகிக்கின்றதோ அதே போல் வயதும் உறவுமுறைச் சொற்களில் முக்கிய கூறாகும். தனியன் அதாவது கணக்கிடப்படும் நபருக்கும் தொடர்புறும் உறவினரின் வயதுக்கும் உள்ள வேறுபாடு அடிப்படையில் உறவுமுறைச் சொற்களில் மாற்றம் நிகழ்கின்றது. தனியனின் பாட்டன் தலைமுறை (த.மு. +2) – வயதின் அடிப்படையில்

வெளியபாட்டன்
தனியன்    நடு பாட்டன்
சின்ன பாட்டன்

தனியனின் அப்பா தலைமுறை (த.மு. +1) வயதின் அடிப்படையில்

வெளிப்பன்
தனியன்    அப்பன்
சினிப்பன்

என்றும்,

தனியனின் தலைமுறையில் வயது வேறுபாட்டிற்கு ஏற்ப அண்ணன், புறந்தான், அக்காயி, புறந்தாள் என்னும் உறவுமுறைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

வெளியண்ணன்    வெளிய புறந்தான்
தனியன்     நடு அண்ணன்     தனியன்    நடு புறந்தான்
சின்ன அண்ணன்    சின்ன புறந்தான்

அக்காயி – புறந்தாள் என்னும் சொற்களிலும் இதே போல் வயது வேறுபாட்டிற்கு ஏற்ப,

வெளியக்காயி     வெளிய புறந்தாள்
தனியன்     நடு அக்காயி    தனியன்    நடு புறந்தாள்
சின்ன அக்காயி    சின்ன புறந்தாள்

என்று வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் வயது வேறுபாட்டிற்கு வெளிய, சின்ன, நடு என்னும் முன் ஒட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏறு தலைமுறையில் தனியனைவிட வயது அதிகம் உள்ளவர்களும், இறங்கு தலைமுறையில் தனியனைவிட குறைந்த வயது கொண்டவர்கள் இடம் பெறுவர். இதனை,

ஏறு தலைமுறை (வயது அதிகம்)
தனியன்
இறங்கு தலைமுறை (வயது குறைவு)
இவ்வாறு அறியலாம்.

தனியனிடம் இருந்து கணக்கிடப் பெறும் ஒவ்வொரு தலைமுறையிலும், உறவுகளுக்கு இடையே காணப்படும் வயது வேறுபாட்டின் அடிப்படையில் வேறுபட்ட உறவுமுறைச் சொற்கள் காணப்படுகின்றன.

முடிவுரை

இவ்வாறு பாறப்பட்டி இருளர்களின் சமுதாய அமைப்பை ஆராயும் பொழுது இருளர்கள் தங்கள் உறவுமுறைகளைக் குறிக்க பல வகையான உறவுமுறைச் சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த உறவுமுறைச் சொற்கள் பாறப்பட்டி இருளர்களின் சமூக உறவின் பல படிநிலைகளில் உருவாகின்றன என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

துணைநூற்பட்டியல்
1. G.P. Murdock , 1949 ,Social Sturcture.
2. தாயம்மாள் அறவாணன், 1987, உறவுமுறைகள் ஓர் ஆய்வு, பாரிநிலையம்,  சென்னை.
3. அருவி, ப., 1989, பெற்றோரைப் போற்றி தமிழினத் தொண்டியக்கம், புதுச்சேரி.
4. பக்தவச்சல பாரதி, 1990, பண்பாட்டு மானிடவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை

sureshindu7@gmail.com

* கட்டுரையாளர் – – த. சுரேஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641046 –