ஆய்வு: பூக்களை சூடிக்கொண்ட கவிதையல்ல இது ஈழத்துப் பெண் எழுத்து

* கட்டுரையாளர் - - முனைவர் சு.செல்வகுமாரன்,  தமிழ் உதவிப்பேராசிரியர்,  அரசு கலைக்கல்லூரி,  பரமக்குடி ) -ஈழத்தில் நிகழ்ந்த போர் அங்கு பல பெண் கவிஞைகளை உருவாக்கியுள்ளது. இவர்கள் போர்ச்சூழல்சார் அரசியல் விமர்சனக் கவிதைகளையும், போர் ஏற்படுத்தியுள்ள துயரினையும், காதலையும் பேசுவதோடு பெண் விடுதலையினையும் மிகநுட்பமாக தமது கவிதைவழி மொழிகின்றனர். ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில், அம்புலியின் கவிதை ஒன்று ஈழத்துப்போரின் ஊடாக வாழ எத்தனிக்கும் ஒரு பெண்ணின் முயற்சியாக புரிந்து கொள்ளமுடிகிறது. அம்புலியின் நாளையும் நான் வாழ வேண்டும், எரிமலைக்  குமுறல், தேடி அடைவாய், நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை உள்ளிட்ட பல கவிதைகள் இத்தகைய பாடுபொருளையே கொண்டுள்ளன. “தேடி அடைவாய்” போரின் நெருக்குதலில் ஒரு தாய் தன் குழந்தைக்கு வழங்க வேண்டிய எதையும் வழங்க முடியாத இயலாமையின் வெளிப்பாடாக விரிகின்றது. மாரிக்குளிரில் நனைந்திடினும் உள்ளம் தணல் பூத்துக் கிடக்கின்றது. துயரங்களின் நடுவினில் நான் உன்னை வாரியணைக்க முடியாத தாயாகியுள்ளேன். ஓர் அழகிய காலையை உனக்குக் காட்டமுடியாத, உன்னோடு விளையாட முடியாத பாலைவன நாட்களையே உனக்கு பரிசளிக்கிறேன் என்று கழிவிரக்கத்தைப் பதிவு செய்கின்றது.

மேலும் எந்த நேரமும் வீழ்ந்து வெடித்து உயிர்குடிக்கும் எறிகணைக்குள், மேகம் கலைய வானத்துள் வட்டமிடும் போர் விமானங்களுக்கிடையில், துப்பாக்கி வெடியோசையின் சத்தங்களுக்கிடையில் எப்படி உனக்கு இனிமையை வழங்கிடமுடியும் என்னும்          கேள்வியினையும் எழுப்புகின்றது. இது ஒரு பெண்ணின் மூலமாக எழுப்பப்படுவதன் மூலம் குழந்தைகளை வளர்ப்பதற்கான எந்த ஒரு சூழலும் ஈழத்தில் இல்லாமலிருப்பதை கவிதை அடையாளப் படுத்துகின்றது. இறுதியாக  தீயச்சூழல் மாய்ந்து புதிய வாழ்வு பிறக்கட்டும் என்று ஒரு தாயின் ஏக்கமாக, வாழ்த்தாக நீளும் கவிதை என்னால் பரிசளிக்க முடியாத வாழ்வை நீயே சென்றடைவாய். வழிகளில் சிவப்பும் இறக்கைகளில் நெருப்பும் உனக்குச்           சொந்தமாகட்டும். எம்மை வேகவைத்த காலம் உன்னால் வேகி சாம்பராகட்டும். ஒரு புதிய வாழ்வு உன் கரங்களில் மலரட்டும் என்பதாக எதிர்ப்புணர்வினையும் நம்பிக்கையினையும் ஒருங்கே வெளிக்கொணர்கின்ற கவிதையாக அம்புலி இந்த கவிதையினை முடிவுக்கு கொண்டு வருகின்றார்.

“எரிமலைக் குமுறல்” போரினால் அனுபவிக்க முடியாது போன பாலியல் சார் எண்ணங்களை ஏக்கங்களை அதன் துயரினை பதிவு செய்கின்றது. என் தோழர் எல்லையில் துயிலாமல் நானோ வெம்புகிறேன் நள்ளிரவில். தனியாக உரத்த குரலில் கானம்பாடுவதற்கு சத்தம் வரவில்லை என்பதாக பேசுகின்றது. “நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை” எனக்கு யுத்தம் பிடிப்பதில்லையாயினும் அதன் முழக்கத்தினிடையே எனது கோபம் காலநிர்பந்தத்தில் மாற்றமடைந்து விட்டது என போர் மனித வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை முன்வைக்கின்றது. தொடர்ச்சியாக குண்டுகளின் அதிர்வோசை கேட்காத ஒரு தேசத்தை தேடும் அம்புலி ஒரு மயானத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மகிழ்வோடு பூரிக்கும் என் தேசத்தை தேடி கால்கள் விரைகின்றன என்கிறார். அம்புலியின் கவிதை ஆக்கத்தில் துயரின் ஊடாக தேசத்தைக் காக்கின்ற எண்ணங்களும், போரிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு ஒரு புனரமைக்கப்பட்ட தேசத்தை கண்டடைய முயற்சிப்பதும் அதன் மீது முழு நம்பிக்கை கொள்வதும் பெரிய விஷயமாக தென்படுகிறது.

‘ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாக
தாலாட்டவும்
என்னால் முடியும்
குளத்தடி மரநிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதை பேச
நான் தயார்” 1

என்னும் பதிவும், எனது மரத்துப் போன கரங்களுள் பாய்வது துடிப்புள்ள இரத்தம், நான் இன்னமும் மரணிக்கவில்லை என்று குறிப்பிடும் வரிகளும் நெகிழ்வான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான பன்முக அர்த்தப்பாடு மிக்க கவிதையாகவே வெளிப்படுகின்றது.

ஜெயாவின் “நிமிரும் எங்கள் தேசம்” அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கவிதையாக விளங்குகின்றது. ஈழப்போர் குறித்த கவிதை படைப்புகள் அரசியல் ரீதியாக வெவ்வேறு முகங்களையும் விமர்சனங்களையும் உடையவை. ஈழத்தின் இனஒடுக்கு முறை, அவற்றை எதிர்கொண்ட இயக்கங்கள் குறித்த முரண்பட்ட பார்வைகளை ஈழத்துப் கவிதைகளில் காணலாம். குறிப்பாக சேரன், ஷோபாசக்தி போன்றவர்கள் விடுதலைப்புலி இயக்கத்தின் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஜெயாவின் இக்கவிதை மக்களும் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து வேலை செய்வதானப் பதிவை யதார்த்தமாக புலப்படுத்துகின்றது. நண்டுவந்து வளை அமைத்து ஒடுங்குகின்ற மணற்பரப்பில் அரண் அமைத்து எதிரி வரவை எதிர்நோக்கி நின்ற ஓர் பெண் போராளியிடம் ஒரு மூதாட்டி அவள் அருகில் வந்து பிள்ளைக்கு சாப்பாடு வேளைக்கு வந்ததுவோ? சோறும், புளிமாங்காய் போட்ட சிறுமீன் குழம்பும் நான் தரட்டோ? வாங்கோ என்பதாய்  தொடர்கிறது கவிதை. கவிதையில் உரையாடும் அந்த மூதாட்டி நாளை நான் இந்த மண்ணில் நாறிப்போகாமல் தலைசாய, சுடுகாட்டில் வேக, நாட்டிற்காய் பணிசெய்யும் குழந்தைகளே என்று உள்ளம் விரும்புகின்றாள்.

மூதாட்டி போராளியிடம் கொஞ்சம் காலற வேண்டுகின்றாள். அருகிலிருக்கும் தன் வீட்டிற்கு உணவு உண்ண போகச் சொல்லி அங்கே இருக்கிறதெல்லாம் உங்களுக்கே என்று பசியாறச் சொல்லுகின்றாள். கொஞ்சம் படுத்திருங்கோ, பொழுது விடிகின்ற வேளை வரை நான் பார்ப்பேன் போங்கோ என அவள் தலையைக் கோதி விடுவதுமாக முடிவுக்கு வருகின்றது கவிதை. தமிழீழ விடுதலைப் போரில் பெண்ணின் கணிசமான, உயிர்த்துவமான பங்களிப்பை இது புலப்படுத்துகின்றது. பெண்கள் மண்ணின் மக்களாகவும், போராளிகளாவும், இருந்து செய்துள்ள சேவையை இக்கவிதை அடையாளப்படுத்துகின்றது. இது ஒரு வரலாற்றுப் பதிவு இத்தகைய தன்மையிலானப் பதிவை எந்த ஒரு படைப்பாளியிடமும் குறிப்பிடும் படியாக காண முடியவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் அதனை ஒரு பெண் கவிஞர் பதிவு செய்திருப்பது இந்த சமூகமும், வரலாறும் சமநிலை அடைவதை உணர்த்துகின்ற ஒன்றாகின்றது.

ஆதிலெட்சுமியின் “நிழல் விரிக்கும் நினைவுகள்” ஈழத்தில் தாங்கள் சிறுவயதில் சுற்றித்திரிந்து விளையாடிய நினைவுத் தடங்களாக விளங்குகின்றன. புளியமரத்தடியில் நின்றிருந்த ஐஸ்கிரீம் தாத்தா, புழுதிகுடித்து விளையாடிய மைதானம், வைரவர் சூலத்தைப் பார்த்து செருப்பை கழற்றி வைத்த பக்தி. புத்தகப்பையை புளியங்கொப்பில் தொங்கவிட்டமை யானவை. நினைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இவை எல்லாவற்றையும் சடமாகப் பார்த்துக் கொண்டிருந்த பாடசாலைக் கட்டிடம், ஊரில் காசுபிரித்து எழுப்பிய மாடிகட்டிடத்தின் அரைகுறை உருவம் என பலவற்றையும் நம் நினைவில் கொண்டு வந்து சேர்க்கிறது பின்னர் பாடசாலையைச் சுட்டி இங்கேதான் இந்திய ஆமி குடியிருந்தது. மேசை, நாற்காலி, கதவு, சன்னலை உடைத்து சப்பாத்தி சுட்டது. பள்ளி காம்பவுண்டில் நின்ற தென்னை மரத்தையேத் தறித்து வீதிக்கு தடையாய் போட்டது என்பதான வரிகள் ஆமி புகுந்த வீடும் ஆமை புகுந்த வீடும் கடைத்தேறாது என்ற பழமொழியை நினைவு படுத்துவதாகவே உள்ளது.

“எல்லாம் இப்போது கனவாய்
எனது நண்பர்களில் பலர்
களத்தில்
சிலர் கல்லறையில்
நான் மட்டும்
கையில் பேனாவுடன் கவிஞையாய்!” 2

எனத் துயரம் சுமந்த வரிகளோடு கவிதை முடிவுறுகின்றது.

மண் ஒன்றாயினும் மனங்கள் வேறுதானே. பிரச்சனை ஒன்று என்றாலும் புரிதல் வேறுதானே. காதலை, புணர்ச்சியை ரசித்துத் திழைக்கும் அனாரின் கவிதையும் போருக்குள் இருந்துதான் பிறந்திருக்கிறது. காதலின் புதிய பரிணாமத்தைப் பாடும் நாமகளின் கவிதையும் போருக்குள் இருந்துதான் பிறந்திருக்கிறது. ஆக பாடுபொருளில் மிகப்பெரிய இடைவெளி இவர்களிடம் இருக்கின்றது. போரின் வலைப் பின்னலில் காதல் எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றாகிறது. ஆனாலும் நாமகளின் கவிதை காதல் செய்கிறது. தமிழீழ விடுதலைப் படையில் பணி செய்கிறான் காதலன். அவனைக் காண்பதே கடினம். கட்டுப்பாடுகள் ஏராளம். சிரிக்கவும், சிறகசைக்கவும் முடிவதில்லை. அதனையும் தாண்டி காதலியின் தேடலில் அகப்படும் அவனைக் கவிதைப் பூடகமாய் மொழிகின்றது. எப்போதாவது தெருவில் அவசர கதியில் கண்டுவிட நேர்கையில் சந்திப்பை வரவேற்பதாய் அவன் கண்கள் ஒருமுறை விரியும். மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும். அவனுக்குத் தெரியும் எனக்கு அது போதுமென்று என்னும் கவிதை வரிகள் மனவியலை காலம், இடம், சூழலின் பின்னணியோடு விவரிக்கின்றது.           

கவிதாவின் “எமது கவிதை” கவிதைக்கான வீரியத்தோடும், ஈழத்துக் கவிதை எந்தச் சூழலில் இருந்து உருவாகிறது என்பதை உலகுக்கு உணர்த்துவதாகவும் உள்ளது. எழுத, பேச, செயல்பட, உயிர்வாழ என அனைத்து நிலைகளிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்ட ஈழத்தமிழ்ச் சமூகத்திலிருந்து இந்தக் கவிதை வந்துள்ளதை கவிதா மிக அழுத்தமாக உணர்த்துகின்றார்.
பூக்களையும்
பனித்துளிகளையும்
சூடிக் கொண்ட கவிதையல்ல
இது.
நிமிர்ந்து நடந்தே
நாட்களாகிப் போன
நரகத்திலிருந்து வந்திருக்கிறது
குண்டுச் சத்தத்தில்
செவிடாகியதில்
இசையும் சந்தமும்
இது அறியாது” 3

என்பதோடு மொழி இழந்த ஊமையின் அலறலாக கவிதை ஒலிக்கின்றது. ஒரு சமூகத்தின் சோகம் சுமந்த பாரத்தில் கூனிமுடமாகி உருக்குலைந்து போன கொலைக்களத்திலிருந்து உயிர் தப்பிய கவிதையாக விளங்குகின்றது. போர்ப்பூமியில் மொழியப்பட்ட உதிரத்திலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட வந்து நிற்கின்ற கவிதையாக நம்மிடம் அது வந்து சேர்ந்துள்ளது. தம்மை ஆற்றுப்படுத்திக் கொள்ள சில வார்த்தைகளும், ஒரு மடியும் வேண்டி வந்துள்ளதாக கவிதை நம்மிடையே உரையாடுகின்றது. கவிதாவின் கவிதைகள் சொற்சிக்கனமும் அதே நேரம் அடர்த்தியும், வீரியமும், கருத்தை நேரடியாக உணர்த்தி விடுகின்ற தன்மையும் மிக்கவையாக விளங்குகின்றன.

றஞ்சனியின் “நாடற்றவனின் இயலாமை” செல்வீச்சில் எரிந்த உடல்களும், சிதறிய குழந்தைகளும் அரைகுறை உயிருடன் புதை குழிக்குள் மௌனிப்பதையும், இறந்த உடல்கள் ஆவியாக நாதியற்று அலைவதையும், இருக்கும் உயிர்களும் உறுப்புகளை இழந்து அரைகுறை மனிதராக மீதமுள்ள உயிருக்காக ஓடிக்கொண்டிருப்பதையும் குறிப்பிடுகின்றது. அத்தோடு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களின் பீதியை, அவர்களின் கூக்குரலை, ஏக்கங்களை, பசியையும் நினைவு படுத்துவதோடு, யாதுமற்று அங்கும் இங்குமாய் அலையும் என் மக்களை யார் காப்பாற்றுவார் என்பதான கேள்வியும் பெண்ணுக்கே உரித்தான கேள்வியாக இனங்காணத்தக்கது. இறுதியாக இந்நிலைக்கு காரணமானவர்களை தன் கவிதையில் அடையாளம் காட்டும்  அவள் மனிதவாடைகளை சுவாசித்தபடி, குருதியை சுவைத்தபடி பெண்களைத் தின்று கொண்டு ஆவேசமாக நகருகிறது அரச பயங்கரவாதம் என இனங்காட்டுவதும் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்மத்தை புலப்படுத்துகின்றது. 

நளாயினியின் “புரியும் வேதனை” பெண்ணின் துயரத்தைப் புரிந்து கொள்ள ஆணே நீ சற்றே வாழ்வில் பெண்ணாக மாறிப்பார் என்பதாக வற்புறுத்துகின்றது. வேலை முடித்து காலுக்குள் இருந்து ரீவி பார்த்தபடி அதிகாரம் செய்யும் கணவனே சற்று நேரம் நீ மிதிக்கும் மனைவியாக மாறு புரியும் வேதனை என்று அறிவுறுத்துகிறது. தொடர்ச்சியாக வேலைக்குப் போய்வா, சமைத்துப் போடு, சலவை செய், பிள்ளைகளைப் பராமரி பாடம் சொல்லிக்கொடு, கணவனுக்காய் நடுங்கு, தூக்கம் வந்தாலும் கணவனுக்காய் தூங்காமல் நடுநிசி வரை சாப்பாட்டுக் கோப்பையுடன் காத்திரு, உடம்பை சோர்வு தாக்கினாலும் கணவனின் உடற்பசி தீர்த்து ஜடமாய்த் தூங்கு, காலையிலே கண் எரிய விழித்து அரக்கப் பரக்க சமையல் உள்ளிட்ட வேலைகளை முடித்து வேலைக்கு புறப்படு என்பதாக சொல்லப்படும் கவிதை பெண்ணின் துயரை வெட்ட வெளிச்சமாய் அடையாளப்படுத்துவதோடு ஆணினத்தை கேள்விக்கு உள்ளாக்கு வதுமாக பெண்ணிய நோக்கில் முதன்மை பெறுகின்ற கவிதையாகின்றது.

பஹீமா-ஜகானின் “எனது சூரியனும் உனது சந்திரனும்…” ஈழத்துப் போரின் வன்மமும் அதனால் விழைந்த புலப்பெயர்வும் ஏற்படுத்திய காதலர்களின் பிரிவுத் துயரைப் பாடுகின்றது. அன்பு பொங்கி பிரவாகித்த அபூர்வ நாட்களில் நிழல் போலப் பிரிவைச் சொல்லி பின் வந்தது காலம். நான் வரச் சாத்தியமற்ற இ4டங்களில் நீயும், நீவரத் தேவையற்ற இடங்களில் நானும் என்பதாக பதிவாகியுள்ள கவிதைவரிகள் தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்க்கின்ற சாதி, மதம், பொருளியலைத் தாண்டி ஈழத்துப் போர் சார்ந்த ஒரு துயரமான சூழலுக்குள் நம்மைப் பயணிக்கச் செய்கின்றது. மட்டுமல்லாது இயலாமையாகவும், கையறு நிலையாகவுமே கவிதை விரிகின்றது. போரின் உக்கிரத்தில் சிதைவுற்றுப் போன ஈழ மக்களின் வாழ்வு இதுவரையில் மறுகட்டமைப்பு செய்து மேம்படுத்தப்படாத நிலையில் இங்கு போரின் தன்மையே மீள மீள மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் அங்கு வாழும் மக்களைக் காட்சிப்படுத்தும் பஹிமாஜஹான், பறத்தலையும் மறந்து பாடலையும் இழந்து வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின் அடிக்கட்டை மீது அமர்ந்துள்ளது பறவை என குறியீட்டு நிலையில் அடையாளப்படுத்துவது கவனத்தில் கொள்ளவேண்டியதாகிறது.

அரங்கமல்லிகாவின் “உழைப்பு” முற்றத்தில் புல்லுக்கட்டை இறக்கி நிமிர முடியாமல்       களைப்போடு தண்ணீர் கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் முகம் திருப்பிச் செல்லும் மருமகளை வேடிக்கை பார்க்கும் பக்கத்தூட்டு இளஞ்சியத்தின் உரையாடல் மூலம் பெண்ணியத்தின் உள்முரண்களையும் பன்முக எதிர்வினைகளையும் அடையாளப்படுத்து கின்றது.

பொதுவாக தமிழ்ச்சூழலில் எழுதப்படும் தமிழ்ப்பெண் கவிஞர்களின் கவிதைகளுக்கும் ஈழத்திலிருந்து வெளிவரும் பெண்கவிஞர்களின் கவிதைக்கும் நிரம்பவே வேறுபாட்டை உணரமுடிகிறது. ஈழத்துக் கவிதைகளில் பெண்விடுதலையானது தலித் பெண்களின் விடுதலை, இஸ்லாமியப் பெண்களின் விடுதலையென பல தனித்துவ அடையாளக்குரல்களோடு ஒலித்திருப்பினும் அடிப்படையில் ஈழத்துப் பெண் கவிதைகள் ஒரு நிலையில் போரில் இருந்து உருவாவதால் இதனை நாம் போர் இலக்கியமாகவே பார்க்கமுடிகிறது.

கற்பகம் யசோதராவின் கவிதை ஒன்று போரின் எதிர்ப்பை பெண் உடல் மொழி சார்ந்து  பேசுகின்ற போது. என் யோனி அடைத்துக் கொண்டு அதனுதடுகள் பிறப்பின் இன்பச் சொற்களை மறந்தன என்கிறது. உணர்ச்சிகள் செத்து நாங்கள் மரங்களாக எழுகிறோம். எங்கள் பிள்ளைகளின் பிணங்களின் மேல். இதைவிட அரிதாக பெண் எழுத்தில் போர் எதிர்ப்பை தனனுடைய உடல் மொழி சார்ந்து பேசிவிட முடியாது. மேலும், கொலை செய்யப்பட்ட உன்னுடைய இரத்தம் என் முலைகளில் வடிய நான் கொலை நடந்த இடத்தை மறந்து செல்வேன். எப்படி எனில் தாரில், புல்லில் காய்ந்திருக்கும் இரத்தத்தை ஓர் நாயென முகரத் திரியும் ஆழ்மனதுடன் என்கிறார். போரும் குறிப்பாக குழந்தைகளின், ஆண்களின் இறப்பும் எப்படி ஒரு பெண்ணை பாதிக்கிறது என்பதனை இந்தக் கவிதை பேசுகின்றது. ரத்தம் முலைகளில் வடிகிறது என்பதும், யோனிகள் பிறப்பின் சொற்களை மறத்தல் என்பதும் பெண்ணின் போர் சார்ந்த நேரடிப் பாதிப்புகளாகவே விளங்குகின்றன. எனினும் நிர்கதியற்ற நிலையில் இத்தகைய பாதிப்புகளைத் தாண்டி உயிர்வாழ்தல் பழக்கத்துக் குள்ளாதவையும் இந்தக் கவிதை பேசிவிடுகின்றது.
“வீடு
தன் உள் ஒடுங்குதலைப் பழக்குகையில்
குடும்பம்
பழக்கத்தை நீட்சிப்பதையும் போல்
மரணத்தைப் பழக்குது சூழல்
உணர்ச்சியோ மரக்குது ஒவ்வொன்றாய்…..” 4

“நீத்தார்” பாடல் ஒரு நெடுங்கவிதையாக நீள்கின்றது. ஈழத்தின் இறப்பு என்னென்ன வகையில் எல்லாம் நிகழ்ந்தன என்பன குறித்து பேசும் இந்த கவிதை பன்முகம் சார்ந்த விரிவு கொண்ட ஒரு கவிதையாகிறது. போரில் கணவனை இழந்த துணைவியை, தந்தையை இழந்த மகளின் குரலை பதிவு செய்துள்ளது. ஈழத்தில் திசையெங்கும் துப்பாக்கி முளைத்துள்ளது. அதன் சுடுவிசைக்கு கருத்தியல் ரீதியாக வெவ்வேறு நோக்கங்கள் இருக்குமாயினும் அதன் பொதுமை இலக்கு என்பது மனிதக் கொலைதான். ஒவ்வொரு கொலைகளின் பின்னாலும் எத்தனையோ இழப்புகளும், கண்ணீரும் நமக்கு காட்சியாகின்றன. மரணிப்புகளில் வடிகின்ற இரத்தங்கள் எல்லாமும் சிவப்பாயினும் அதன் அடர்த்தியிலும் அழுத்தத்திலும் வேறுபாடுகள் நிறையவே உள்ளன. துவக்குகளை சுமந்து திரியும் கொலைக்காரர்களைப் பார்த்து துவக்குகளின் எசமான்களே என கூச்சலிடும் யசோதராவின் வார்த்தைகளின் அதிர்வுகளால் ஈழம் மட்டுமின்றி உலகெங்குமாய் நிகழ்த்தப்படும் கோடான கோடி பெண்களின் கதறல் கசிந்து உருகின்றன.

‘உயிருடன் எறியுங்கள்
எத்தனையோ நாளாகப்
பவளமல்லிப் பந்தலின் கீழ்
நான் வெறி பிடித்து முத்தமிட்ட
அவனினது சுந்தர உதடுகளோ
ஆலிங்கித்துக் களைத்திராச் சிறு தோளுகளோ
பிரிய மகளின் ஸ்பரிசம் தருகிற வாஞ்சை கொண்ட
விழுந்த சிறு துண்டொன்றை
நாய்க்குப் போடும் எலும்பொன்றாக
எறியுங்கள்” 5

வாசுகி குணரத்தினத்தின் “உரிமைகளின் கருவாவாள்” பெண் வளர்ப்பு, திருமணம் தொடர்பான பிரச்சனையை பேசுகின்றது. கவிதையில் அப்பா, அம்மா, சகோதரன், மாமிதான் எனது திருமணத்தை நிச்சயிப்பார்களா? என்னிடம் எதுவுமே கேட்கமாட்டார்களா என்ற கேள்வியினை எழுப்பும் கவிதை இறுதியாக எது எப்படியாயினும் எனது பெண் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை நானே நிச்சயிக்க வேண்டும் என்பதாக முடிவுக்கு கொண்டு வருவது பெண்ணிடத்திலே இன்னும் பெண்ணுக்கெதிராக விடுபடாமல் கிடக்கின்ற மாயையை உணர்த்துகின்றது.

ஈழத்துக்கவிதை வெளியில் கவிதைவழி கருத்தியலைச் சொல்லும் முறையில் தனித்த அடையாளங் கொண்டிருப்பவர் தமிழ்நதி. அவருடையக் கவிதைகள் போர், புலப்பெயர்வு, பெண் விடுதலைக் கருத்தினைப் பதிவு செய்வதில் முதன்மை வகிப்பன. போர்ச்சூழலை விவரிக்கும் அவரின் கவிதை ஒன்று நேற்றிரவை குண்டு தின்றது. மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது. சூரியன் தனித்தலையும் இன்றையப் பகலில் குழந்தைகளுக்குப் பாலுணவும் தீர்ந்தது. பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றன வளர்ப்புப்பிராணிகள். சோறு வைத்து அழைத்தாலும் விழியுயர்த்திப் பார்த்து விட்டுப் படுத்திருக்கும் நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது? திரும்பமாட்டாத எசமானர்கள் குறித்து என்று அவர் எழுப்புகின்ற கேள்விக்கு மானுடர்கள் எவரிடத்திலும் விடை கிடைப்பதில்லை. இன்னொரு கவிதையில் பொதுவான வாழ்வியல் பற்றி பேசும் தமிழ்நதி,

“குறுக்கித் தறித்து
இதை எழுதிக் கொண்டிருக்கிற போது
காட்டுப்பு+ போல மலர வேண்டும் கவிதை…
என்ற வரி உள்ளோடிச் சுடுகிறது
காற்றில் தனித்தசையும் காட்டுப்பு+வை
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது வெளிச்சம்!” 6

என்கிறார். கவிதையில் தமிழ்நதி குறிப்பிடும் காட்டுப்பூ குறியீடாக அமைகின்றது. பெண், ஏழைப் பெண், விதவைப் பெண், அனைத்தையும் இழந்து நிற்கும் ஈழத்து அகதித் தமிழன் என்பதாகப் பல்வேறு பரிமாணங்களில் அர்த்தம் பெறுகின்றது.

சந்திரா இரவீந்திரனின் “பிணவலி” பெண்வாழ்வில் திருமணம் ஏற்படுத்துகின்ற விரிசலை, வலியினை பறை சாற்றுகின்றது. திருமணத்திற்கு முன்னான வாழ்வு முற்பகுதியில் நினைவுவழி கவிதையாக்கப்பட்டுள்ளது. எங்கோ தொலைந்து போயிருக்கும் சுகமான கற்பனைகளும் என்னை விட்டுப் பிரிந்திருக்கும் இனிய உலகமும் வெறும் நினைவுகளாகவே மீளவும் மீளவும் என்று கவிதை தம்மை முன்னிலைப்படுத்துகின்றது. இழப்பின் வதையில் அழுவதைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை என்று கழிவிரக்கமாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றது. சட்டப்படியாகவும் சடங்கியல் ரீதியாகவும் செய்யப்பட்ட திருமணத்தில் என்னோடு இரண்டறக் கலந்துவிட்ட இன்னுயிருக்காக என் சுயங்களை அழித்து அர்ப்பணமாக்கிய பொழுதுகளிலிருந்து என்னிடமிருந்து விலகிச்சென்ற இனிய வாழ்வை எண்ணி நேற்று வரையிலும் நான் கண்ணீர் சிந்தியதில்லை என்று குறிப்பிடும் கவிதை பெண்ணின் வாழ்விலிருந்து அவள் அடைகின்ற துயரினை மிக நுட்பமாக பேசி விடுகின்றது.

“முதிர்ந்து போன நினைவுகளில்
என்னிதய சிம்மாசனத்தில்
ராஜாவாயிருந்த
எனதருமை ஆத்மாவின்
இன்னோர் முகத்தில்
முளைத்திருந்த கோரப்பற்கள்
நானறியாமலே என்றோ என்னைக்
கொன்று விட்ட சேதியினை
கொல்லைப் புறத்தில் உலாவும்
பழைய மூச்சுக் காற்றும்
பறக்கும் சேலைத் துண்டுகளும்
மெல்ல மெல்லக்
கதை சொல்லிக் கொண்டிருக்கின்றது” 7

பெண்ணைச் சூழ்ந்துள்ள அடர்ந்த இருள் பக்கங்களை “பட்டஞ்சூட்டல்…” கவிதையில் பதிவு செய்யும் தர்மினி பெண்ணுக்கான சுயவிடுதலையின் புதியவரையறைகளை கவிதையில் வெளிப்படுத்துகின்றார். பெண்ணுக்கானப் பாதுகாப்பு வளையத்தை காட்சிப்படுத்துகின்ற போது அகழி போல் வீடு, சுற்றி உள்வேலி, வெளிவேலி, அப்பா, அண்ணன், தம்பி, அயற்சிறுவன் தெருவில் நடந்தால் உதவிக்கு வருவர் என்று குறிப்பிடுகின்றார். மேலும் அவளின் சுயமுடிவுக்குத் தடை ஏற்படுத்தும் விதமாய் அவளிடம் மயக்கத்தை ஏற்படுத்தும் குடும்ப ஆணாதிக்கத்தைப் பதிவு செய்யும் அவர், கன்னி மாடத்தைப் போல நம் வீடு கட்டப்பட்டதென்பதும், அதிகப்படியான பாதுகாப்பு கருதி மேலும் ஓரு காவலனை அதிகரிப்பதும், அவனையே கணவனாக அறிவிப்பதும், சம்மதமில்லையெனில் கோட்டைக்கு நீ இளவரசி இல்லை என்பதான அறிவித்தலும் ஆணாதிக்கத்தின் வரம்பு மீறியச் செயலாக இனங்காணத்தக்கவையாகும். மேலும்,

கோட்டையும் கொத்தளமும் சூழ
அவர்கள் கொடி பறக்க
அவளிருந்தாள்.
பின்னொரு நாளில்
காதலின் வெக்கையில்
காமத்தின் தகிப்பில்
கட்டிய கோட்டை தணலாயிற்று
வீதிகளில் அவளுமொரு வேசியாய்
பாடகியாய்   
பிச்சைக்காரியாய்அவளிருந்தாள்             

இப்போது இளவரசி இல்லை 
இராணியாக அவளிருந்தாள்.” 8   

என்பதன் மூலம் பெண்விடுதலைக்கான ஒரு சமூகப்புரட்சியை தர்மினி இந்த கவிதையில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஆகப் பல்வேறு களங்களில், பல்வேறு முகங்களில் வெளிப்பட்டுள்ள ஈழத்துப் பெண்கவிஞர்களின் கவிதைகள் பெண்ணிய எழுத்தாகவும், சமூகத்தை கூர்ந்து கவனித்து பன்முகப்பட்ட பிரச்சனைகளுக்கான கேள்வியினை எழுப்பி தீர்வினைக் கோருகின்ற பெண்ணால் எழுதப்பட்ட எழுத்தாகவும் பரிணமிப்பதை இக்கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன. 

சான்றெண் விளக்க நூல்கள்

1. பெயரிடாத நட்சத்திரங்கள், ப- 17, ஊடறு (தொகுப்பு), விடியல், கோயம்புத்தூர், முதல் பதிப்பு – ஜீலை 2011.  
2. மேலது, ப-49  
3. குட்டிரேவதி – முள்ளிவாய்க்காலுக்குப் பின், ப-37,  ஆழி பதிப்பகம், சென்னை, முதல்பதிப்பு, டிசம்பர் 2010.
4. யசோதரா. கற்பகம்  – நீத்தார் பாடல்கள் ப -81,  வடலி, சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2013.
5. மேலது, ப -81
6. http:// tamilnathy.blogspot.in
7. ஊடறு,  (தொகுப்பு),  ப- 102  விடியல், கோயம்புத்தூர், முதல் பதிப்பு – ஜீலை 2008.  
8. தர்மினி –  சாவுகளால் பிரபலமான ஊர் ப-41, கருப்பு பிரதிகள், சென்னை, முதல்பதிப்பு, ஆகஸ்டு 2010.

mugadu.kumaran@gmail.com