ஆய்வு: மூலப்பாட இனவரைவியலாக்கத்தில் முல்லைப்பாட்டின் சூழமைவு!

- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -முல்லைப்பாட்டினை நப்பூதனார் எனும் நல்லிசைப் புலவர் ‘முல்லை’ப்பூவை, திணையாகவும் நிலமாகவும் கொண்டு அக ஒழுக்கத்தினை விரித்துரைத்து செய்யுளாக இயற்றியுள்ளார். ஒரு நிலத்தை தெரிந்து கொள்ள முற்பட்டால் முதலில் அந்நிலத்தில் வாழக்கூடிய கருப்பொருளான உயிரினங்களை உள்வாங்க வேண்டும். பின்பு நிலத்தில் வாழும் தெய்வம் தொடங்கி, மக்கள் புள், பறை, செய்தி, யாழ், பறை என இன்னபிற இனங்களையும் உள்வாங்கி இனங்கான வேண்டும். அவ்வகையில் முல்லைப்பாட்டு  அகமாக இருப்பினும் இரண்டு வகையான கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. அகவாழ்கையில் தலைவனைப் பிரிந்து தனிமையில் வாழும் தலைவி, அவளது ஊர் வாழ்க்கையும், அதற்கு நேராக போர்க்களத்தில் பாசறையின்கண் நிகழும் போர்ச்செயல்பாடு, அதனைச் சுற்றி நிகழும் வாழ்க்கை எனக் கட்டமைக்கிறது முல்லைப்பாட்டு.

தொல்காப்பியர் இதனை ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ (தொல்.1007)  என்பர். போர்களத்தில் போர்க்காகச் சென்ற தலைவன் முல்லை அகத்திணையின் புறத்திணையை ஒட்டியே வாழ்வதையும், தலைவி வீட்டில் தலைவனுக்காக ஆற்றியிருத்தலும், தலைவன் தலைவிக்காகப் போர்வினை முடிவுக்குக் காத்திருத்தல் என்ற இருமையும் முன்னின்று ‘முல்லை’க்கான இருத்தல் நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறது.
இனவரைவியல் ‘Ethnography’  விளக்கம்

இனவரைவியல் மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்பாட்டு நிலைகளை விளக்கமாக அமைக்கும் ஒரு வகை எழுத்தாக்கம். இது சமுதாயப்பண்பாட்டு மானிடவியலுக்கு ஊன்று கோலாகச் சுழல்வது. இப்பதம் ‘Ethnography’  என்னும் ஆங்கிலச்சொல். ‘ethnos’ ‘graphin’ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. ‘ethnos’ என்பதற்கு இனம் (race)  இனக்குழு (ethnic group)> மக்கள் (People) என்று பொருள். ‘graphinenin’ என்பதற்கு ‘எழுதுவது’ அல்லது ‘வரைதல்’  என்பது பொருள்” ஆகையால் தான் இனவரைவியல் தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி வரைவாக்கம் செய்வதாகும்.

மூலப்பாட இனவரைவியல் (Textualisam ethnography)
மூலம்,  மூலப்பாடம் என்பது முந்தைய தலைமுறைகளின் செயல்திறனைக் கலாச்சாரச் சூழல்களோடு எழுதுதல் ஆகும். அல்லது ஒரு பண்பாட்டில் பொதிந்துள்ள மரபுசார்ந்தவை (கதைகள்,  நம்பிக்கைகள், பழமொழிகள், விடுகதைகள், வாழ்க்கை முறைகள், சடங்கியல்கள்) என ஒட்டுமொத்தமாகவும் அல்லது சிறுசிறு பகுதிகளாக இலக்கிய வகைமைக்குப் பனுவலேற்றம் செய்யப்பெறுவதே மூலப்பாடம் ஆகும். இதில் உற்பத்தி கொள்வதற்கு பனுவல்களைத் தலைப்பாகங்களாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது. சான்றாக, கல்வெட்டுகள் அவை சார்ந்த தடித்த விளக்கங்கள் முதன்மை வழியாகக் கொண்டு கடந்த காலத்தின் கலாச்சாரம், அதுசார்ந்த பனுவல்களில் இனவரைவியலர் பகுத்தாயலாம். இதனையே “ஒரு திறந்த வெளிப்புத்தகம் என்றும், சலுகைகள் உடையது என்று கூறிவிடமுடியாது. இது பண்பாட்டின் மூலப்பாடம் ஆகும் (Geertz.1973:23-24).

முல்லைப்பாட்டும் இனவரைவியல் கட்டமைப்பும்

1 – 6  அடிகள்               :     முல்லை நிலத்தின் நிலமும்,  பொழுதும், தெய்வமும் வருணிக்கப்படுதல்.
7 – 18  அடிகள்              :     முதுபெண்டீர் நற்சொல்கேட்டல், கோவலர் வாழ்க்கைமுறை.
19 -23  அடிகள்              :     தலைவியின் இருத்தல், இல்லச்சூழல்.
24 -42  அடிகள்              :     போர்பாசறை – படைவீடு, யானைக்கு உணவு கொடுத்தல்,    அரண்வீடு உருவாக்கல்.
43- 49 அடிகள்               :     போர்க்களத்தில் பெண்கள் விளக்கேற்றி இரவினைப் பகலாக்கல்.         
50-80   அடிகள்              :     அரணில் மெய்க்காப்பாளர்கள் காவல் காத்தல் பொழுது விடிந்ததைக் கணித்துக் கூறும் மக்கள், பள்ளியறைக் காவலர்கள், அரசன் சிந்தனை.
81-103 அடிகள்              :      தலைவியின் நிலை, தலைவன் மீண்டும் திரும்பி வருதல்.

எனவாக, முல்லைப்பாட்டின் வருணனையை பின்வருமாறு கட்டமைத்துள்ளதைக் காணமுடிகிறது.

0.கருப்பொருள் வெளிப்பாடு நிலத்தின் மக்கள்களை உள்வாங்கிக் கொள்வதற்கு திணை பண்பாட்டின் முதற்;பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பயன்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தொல்காப்பியம்

“முதல் கரு உரிப்பொருள் உன்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடுங்காலை” (
தொல்.பொருள்.அகத்:963)

என்று முதற்பொருளுக்கு இலக்கணம் கூறினும், ஒரு மனிதனுக்கு, ஒரு இனத்திற்கு நிலமும், தட்பவெட்ப நிலையான காலமும் உயிராகப் பயன்படும். பின்பு அந்நிலத்தில் வாழும் கருப்பொருட்களானவைகள் அதன் ஒட்டுவாழ்வாதரங்களாகப் பயன்பட்டாலும் அவை தொடர்வாழ்க்கைக்கு முதல் காரணியாகப் பயன்படும் இதனை,

“தெய்வம் உணவே மா மரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப”
(தொல்.அகத்.964)

என்று அந்தந்த நிலத்தின் தன்மைக்கேற்ப அமையக் கூடும் என்கிறார். இதில் கருப்பொருள்கள் ஒரு நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு மாற்றம் பெறலாம். கருப்பொருள் பயன்பாட்டையே பண்பாட்டாளவில் இனவரைவியலில், இனவரைவியலாளர்கள் இடம், நிலம், பருவம், பொழுது, காற்று, மழை, தாவங்கள், விலங்குகள், பொருள்சார்ந்த பண்பாட்டு கூறுகளான புழங்கு பொருட்கள், வீடு, தொழிற்கருவிகள், குடும்பம், உறவுமுறை, சடங்குள், கைவினைகள், வழிபாடு, அழகியல், வழக்காறுகள், மரபுஅறிவு நிலைகள் போன்றவற்றை பொருள்சார்ந்த மற்றும் பொருள்சார தன்மையில் பண்பாட்டில் கருப்பொருட்களாக வகைமைப்படுத்திக் கொண்டு, ஒரு இனத்திற்கான அடையாளமாகவும் குடிகளுக்கான பண்பாட்டு அடையாளமாகவும் உருப்படுத்திக்கொள்கின்றனர். இதனையே தொல்காப்பியமும், அதன் நின்றவழி சங்க இலக்கியமும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலமாக வெளிப்படுத்துகிறது.

முல்லைப்பாட்டின் தன்மையைப் பார்க்கும் சூழலில் மூதூரில் நடக்கும் ஒட்டுமொத்தமான வாழ்க்கைமுறை என்று எண்ணமுறுகிறது. மூதூர் முல்லைக்கே உரித்தான ஊராக இங்கு பேசப்படுகிறது. முல்லையின்; உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். அத்தன்மையில் பேசப்படும்போது மேல்கட்டுமான மக்களுக்கானத் திணையாகவும் நிலமாகவும் முல்லைப்பாட்டு கட்டமைத்துள்ளதை இனங்கான முடிகிறது.

I1.மூதூர் சிறப்பு
மிகவும் பழமை வாய்ந்த ஊராகும். இதனை ‘அருங்கடி மூதூர்’ (முல்.7-வரி) என்று அழைத்தனர். இவ்வூரினில் பல்வேறு வகையான பழமையான குடிகள் வாழ்ந்தனர். இக்குடிகளில் முதுபெண்டீர்களே நீண்டகாலம் வாழ்ந்ததால் இவ்வூர் மூதூர் என்றாயிற்று.

இவ்வூரினை நன்னன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது ஆட்சி காலத்தில் மூதூர் செல்வ வளம் நிறைந்து காணப்பட்டன. அவனது ஊரைச் சுற்றிய மதில் சுவர்கள் உயர்ந்தும்,  பகைவர்கள் உட்புகாதவாறும் இருந்தன. அவ்வூரில் ஆங்காங்கே பழமையான தொல்குடிகள் நிறைந்து கானப்பட்டன. அதனருகில்,  அங்காடித்தெருக்கள் நெடுக நிறைந்து இருந்தது பகைவர்கள் உட்புக முடியாதவாறு வளமையுடன் காணப்பட்டன (மலைபடு.478-487). அவ்வூரில் தெய்வங்கள் பலவாக இருந்தாலும் முல்லைக்கே உரித்தானதாகக் கருதப்படும் திருமாலையே அதிகம் வணங்கியதாக எண்ண முடிகிறது.

1.1.முதுபெண்டீரின் தெய்வ நம்பிக்கை
‘முதுவாய்’ என்பது வாழ்கையில் அனைத்து நிலைகளையும் கடந்து முதிர்ந்த அறிவினைப் பேசி வெளிப்படுத்துவது. அவை மத மந்திர இணைப்பைக் கொண்டிருந்தன. என்பவற்றினோடு இணைக்கும் சூழலில் முதுபெண்டீர்கள் தெய்வ நம்பிக்கையுற்றவர்கள், தெய்வங்கள் தங்கள் மீது குடிகொண்டுள்ள நிலையில், தாங்களே தெய்வம் ஏறி ஆடுபவர்;கள் (அகம்.98.நற.288). வேலன் வெறியாடல் நிகழ்வில் முன்னின்று, பூசாரியை வெறியாட்டு களமான மணலின் நடுவே அமர்ந்து, நற்சொல்கேட்டல், சில நேரங்களில் தானே தெய்வம் ஏறிஆடுபவளாக மாறுதல், நன்நிமித்தங்களை அறிந்து கூறுதல், தெய்வங்களுக்கு நெல், மலர் போன்ற படையல்களை படைத்தல் போன்ற சடங்கு சார்ந்த நம்பிக்கைகளை பண்டைய காலத்தில் முதுபெண்டீர்களே செய்தனர். இச்சடங்கானது அகமரபு வாழ்க்கையில் பெரிதும் நிகழ்த்தப்பட்டன.

முல்லை நில தெய்வமாகக் கருதப்படும் திருமாலுக்கு முதுபெண்டீர், தலைவியின் பொருட்டு முல்லை மலரையும், நெல்லையும் சேர்த்துத் தூவி வழிபட்டனர்.

“—————- நெல்லோடு
நாழி கொண்ட நறுவீமுல்லை
அரும்பவிழ் அலரி தூவாய்க் கைதொழுது
பெருமுது பெண்டீர் விரிச்சி நிற்பச்”
(முல்.8-11).

விரிச்சி கேட்டலின் விளைவாக நல்ல நிமித்தங்கள் நிகழுமா என்ற எண்ணத்தில் தலைவி நிலைகொண்டிருக்கும் பட்சத்தில் நல்நிமித்தங்கள் (சகுணம்) நிகழுவதாக முதுபெண்டீர் கணித்து கூறினாள்.

கோவலர்கள் வீட்டின் முற்றத்தில் பசுவின் கன்றினை கயிற்றால் கட்டியிருந்தன. அவை பசியால் அங்கும் இங்குமாக சுற்றி தாய் பசுவை நோக்கி  எதிர்பார்த்து கொண்டிருந்தன. அதனைக் கண்ட இடைக்குலப் பெண் குளிரில் நடுங்கி ‘நீங்கள் வருந்தாதீர்கள், உங்கள் தாய்மார்களைக் (பசுக்களை) கோவலர் விரைந்து ஓட்டிக்கொண்டு வந்து விடுவார்’ என்ற நற்சொல்லை முதுபெண்டீர் தலைவியிடம் விரைவில் உன் தலைவன் வந்து விடுவான் என்ற இருத்தல் நிலையை ஆற்றுவிக்கிறாள்.

“இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்”
(முல்.16-17 வரி).

முதுபெண்டீர்கள் பிறர் கூறும் நன்மொழிகளை வைத்தே வரவினைக் கணித்து கூறினர்.

திருமாலுக்கு முல்லைமலர், நெல் இவைகளை சேர்த்துத் தூவி வழிபட்ட நிலையில் தொல்காப்பியர் கூறும் ‘மாயோன் மேய காடுரை’ தெய்வம் என்று திருமாலை எடுத்துக் கொள்ள நேர்கிறது. இன்றைய சூழலில் முல்லைப் பூவையும் நெல்லையும் காடுரை தெய்வங்களுக்கே பெரிதும் படைக்கப்படுகிறது. அறுவடைக் காலத்திலும், உற்பத்தி தொடங்கும் காலத்திலும் இச்சடங்குகள் செய்விக்கப்படுகிறது. திருமால் காட்டுக்கு உரியததால் தொல்காப்பியத்தில் ஏற்றுக் கொள்ள நேர்கிறது. மாறாக இன்றை நிலையில் திருமாலுக்கு துளசி மாலையும், மஞ்சள் கலந்த அரிசியும் மற்றும் தாமரை மலரையும் படைக்கப்படுவதை நேரும்போது பண்டைய காலத்தில் முல்லை நிலத்தில் பேசப்பட்ட திருமால், வழிபாட்டுக்குறிய படைபொருள்கள் மாற்றத்திற்குள்ளானது சற்று சிந்திக்க நேர்கிறது. இதில் முதுபெண்டீர்களே இச்சடங்குகளைத் திருமாலுக்குச் செய்வித்தனர் என்று முல்லைப்பாட்டு பகர்கிறது. ஆனால் இன்று வைதீகச் சமயச் சாயலினால் பிராமணர்கள் பூசை போன்ற சடங்குள் செய்து வருகின்றனர். தொடக்கத்தில் தாய்வழி சமூகம்; நிலவிய காலத்தில் பெண்களே பூசை செய்பவர்களாக இருந்துள்ளனர். தொடர் வளர்ச்சியால் அவை தந்தை வழி சமூகத்திற்கு ஆண்களிடத்திற்கு மாற்றம் பெற்றன என்பதை, சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்தியம்புகிறது. ஒரு வேலை பூசை வழிபாட்டிலும் உடமைப்பொருள்களை பெண்களிடத்தில் இருந்து பரிக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணமுடிகிறது.

1.2.பாவை விளக்கு ஏற்றுதல்
பெண்கள் இரவு நேரங்களில் பாவை (விளக்கு) ஏற்றுவதை நல்நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர். பாவையை வீடு, கோயில், தெருமுச்சந்தி, போன்ற இடங்களில் இரவு நேரங்களில் ஏற்றப்பட்டன. பாவை ஏற்றுவதால் தெய்வங்கள் வீடுகளில் குடிகொள்ளும். சீதனம் (செல்வம்) நாடி வரும். சென்ற தலைவன் மீண்டும் வருவான் என்ற கருத்தமைவு பெண்களிடத்தில் இருந்துள்ளன.

முதுபெண்டிர் கூறிய நன்மொழிகளை கேட்ட தலைவி ஆற்றியிருத்தலை தனிக்கும் முகமாக வருத்தத்துடன், “இங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம் பெருமான் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுங்கொலோ” என்று நினைத்து மனம் வருந்தி ஏழடுக்கு மாளிகையில் பாவையை ஏற்றி காத்திருந்தாள் தலைவி. இதனால் ஆற்றியிருத்தல் பெண்ணுக்கே உரித்த நிலையாக இங்கு அதிகம் பேசப்படுகிறது.

“பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல
இடம் சிறந்து உயரிய எழுநிலை மாடத்து”
(முல்.85-86)

இதற்கு நேர்மாறாக மேற்கூறிய கருத்தாக்கங்கள் அனைத்தும் அகவாழ்க்கையிலே நிகழ்த்தப்பட்டதை விளக்குகிறது.

போர்ப் பாசறையின்கண் நிகழும் தலைவனுடைய இருத்தல் வாழ்வியலைக் காணும் முகமாக,

2.காடுகளை/ நிலங்களை அழித்தல்
முல்லை நிலத்தின் வளர்ச்சி மாற்றத்தினாலும், போரின் தன்மையினாலும் நிலஅழிவு ஏற்பட்டன. முல்லை நிலத்தின் தொடக்கத்தில் காடுகளை அழிக்கும் வழக்கம் வேட்டுவர்களிடம் இருந்தன. அகவாழ்க்கையில் உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்ற நிலையிலும் காடுகளை அழித்தனர். மாறாக போர்க்களத்தில் படைவீரர்கள் தங்குவதற்காகவும்; காடுகளை அழித்தனர். இதனால் விரிந்து கிடந்த காட்டின் எல்லை போர், குடும்பம் என்ற மையத்தில் தனியொரு ஆளுகைக்கு உட்பட்டன.

வேட்டுவக் குடிகள் புறவுக்காட்டில் மணம் வீசிக் கொண்டிருந்த பிடிவஞ்செடிகளையும், பசுமையான புதர்களையும் அழித்து அதில் பிடுங்கப்பட்ட இடுமுள், கவைமுள்களைக் கடல்போல் அமைத்து எல்லையிட்னர்.

“கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேணாறு பிடவமொடு மைப்புதல் எருக்கி
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுள் புரிசை வளைஇப்
படுநீர்ப் புணிரியிற் பரந்த பாடி” (
முல்.24-28 வரி).

அவ்வாறு உருவாக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலும் தண்ணீர் செல்லக்கூடிய இடங்களாக இருந்துள்ளன. வீரர்கள் போர்க்களத்தில் முன்பு பயன்படுத்திய தற்போது பயன்படாமலிருக்கும் வில், அம்புகளை விரிவாக்கப்பட்ட இடத்தில் நட்டுவைத்து கூடராம் அமைத்தும் போர்க்கருவிகளைப் பாதுகாத்து வந்தனர்.

“கூடங் குத்திக் கயிறுவாங்கு இருக்கைப்
பூந்தலை குந்தம் குத்திக் கிடுகு நிறைத்து”    (
முல். 40-41).

அவ்விடங்கள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டன.

2.1.போர்களத்தில் பெண்கள் விளக்கு ஏற்றுதல்
போர்களப் பாசரையில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த படைவீரர்கள் தங்கி போரிடுவது பண்டைய மரபு. அச்சூழலில் அவர்கள் பேசும் மொழிநடை வௌ;வேறனாதாக இருக்கும். அத்தகைய போர்க்களத்;தில் பெண்கள்,  விளக்குகளை வளையல்கள் அணிந்துள்ள தன்னுடைய சிறிய கையில் இரவு முழுவதும் ஏந்தி இரவைப் பகலாக்கச் செய்தனர். விளக்கு அனையும் தருனத்தில் மாற்று திரியிட்டு இரவைப் பகலாக்கினர். முல்லைப்பாட்டில் போர்களத்தில் பெண்கள் விளக்கு ஏற்றினார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் எந்த பெண்கள் ஏற்றினார்கள் என்று கூறவில்லை.

வெற்றி பெற்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனின் அனைத்து வகையான உடமைகளையும் எடுத்துச் செல்வது பண்டைய மரபு. அதில் தோல்வியுற்ற நாட்டு மன்னர்களின் மக்கள்களையும் அவர்களது பெண்டீர்களையும் உடமைப்பொருட்களாக கூட்டிக்கொண்டு சென்றிருக்கலாம். அல்லது அடிமைக்கு உள்ளாக்கப்பட்டு வேலைகள் வாங்கி இருக்கலாம். அதற்காக பெண்களில் சிலரை இச்செயல் செய்யத் திணித்திருக்கலாம்.
இந்திரவிழா போன்ற நிகழ்வுகளில் பெண்களை உடமைப் பொருட்களாக அழைத்து வந்துள்ளனர்.

“இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி
எவ்வூர் நின்றன்று”
(ஐங்.மரு.62.4-4).

பரத்தையர்களையும் தேரில் ஏற்றி வந்துள்ளனர்.

மாட்டு மாட்டோடி மகளிர் தரத்தரப்
பூட்டுமான் திண்டேர்”
(கலி.98).

பெண்களைத் தேர்களில் அழைத்து வந்து பொதுவான நிகழ்வுகளில் கலந்து கொள்ள வைத்துள்ளனர். அதைப்போன்று, போர்களத்தில் இரவு முழுதும் படைவீரர்களுக்கு பெண்கள் விளக்கிட்டனர். அவர்களை “குறுந்தொடி மகளிர்கள்”  என்று கூறுப்படுகின்றன.

“குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ் கரையர் நெடுந்திரி கொளீஇக்
கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட”
(முல்.45-49வரி)

இவை ஒரு நிலையில் இருக்க பெண்களை சோழர் காலத்தில் திருக்கோயில்களுக்கு திரு அலகிடுதல், திருமெழுகிடல், திருவமுதுக்குறிய அரிசியைத் தூய்மை செய்தல்,  மலர் தொடுத்தல் போன்ற திருப்பணிகளை தேவரடியார்கள் செய்தனர். இவர்களில் சிலர் திருவாசகம், தேவாரம் ஓதுபவராகவும் இசையில் வல்லவராகவும், நடனம், கூத்து போன்ற இசைக் கலைகளில் வல்லவராகவும் சிறந்த பயிற்சி பெற்வர்களகா இருந்துள்ளனர்.

மூன்றாம் குலோத்ததுங்கன் ஆட்சிக் காலத்தில் தேவரடிள் ஒருத்தி சிவன் கோயிலை ஒட்டிய திருமடை வளாகத்தில் வாழ்ந்த தேவரடியாள் ஒருத்தி இக்கோயிலுக்கு இரண்டு நொந்தா விளக்குகளைத் தானமாகக் கொடுத்துள்ளாள். (ப.439) தகடூர் வரலாறும் பண்பாடும். இரா.இராமகிருட்டிணன் பதிவு செய்துள்ளார். மேலே சொன்ன ஒப்புமையிலிருந்து பார்க்கும்போது பெண்கள் – விளக்கு இரண்டும் பயன்பாட்டு பொருளாகச் சமூதாயத்தில் இருந்துள்ளது. இலக்கியத்தில் குறுந்தொடி மகளிர் என்று பயன்பத்தியுள்ளனர். பின்னர் வந்த வேந்தர்கள் காலத்தில் தேவரடியர்கள் என்று அவர்களை அழைத்துள்ளனர்.

3.பல்வகை மக்கள்
மூதூர்களில் வாழ்ந்த பழமையான குடிகளில் பலவகை மக்கள் இருந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரண்மணைகளில்,  அரசனுடைய ஆளுகைக்கு உட்பட்டு ஊருக்கு பொதுவான வேலைகளைச் செய்து வந்தனர். பின்னர் சோழர் காலத்தில் அவர்கள் செய்த தொழிலை வைத்து அவர்களுக்கு தொழில் வரியில் விளக்கு அளிக்கப்பட்டது.

3.1.மூதூரில் யானைகளை காவல் காத்தல்
மூதூரில் வீதிகள் தோறும் தெருக்கள் நிறைந்துக் காணப்பட்டன. பெரும்பாலும் கூறையால் வேயப்பட்ட குடிசை வீடுகள் நிரம்பிக் காணப்பட்டன. நாற்சந்தியின் முற்றத்தில் நகர வீதிகளை பாதுகாக்க சிறியகண்களை கொண்ட யானைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். அதனைப் பாதுகாப்பதற்கு யானைப் பாகர்கள் அமர்த்தப்பட்டுள்ளுனர். அதற்கு தேவையான கரும்பும், நெல்கதிர்களையும் உணவாகக் கொடுக்கப்பட்டன. ஆனால் யானை அதை உண்ணாமல், கரும்புத்தோகையை தனது துதிக்கையால் உடம்பில் தடவிக்கொண்டு இருந்தன. அதனைக்கண்ட யானைப்பாகர் தன் கையில் கொண்டுள்ள குத்தூசியைக் கொண்டு இடித்து அதன் பாசையில் பேசி வெளிப்படுத்தினர்.

“உவளைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல் துடைத்து
கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றிக்
கல்லா இளைஞர் கவளம் கைப்ப”
(முல்லைப்.29-36).

3.2.காலத்தை கணிக்கும் மக்கள்
ஊர்களில், தெருக்களில் விடிந்தது (புலர்ந்தது) என்று தெரிவிப்பதற்கு சிலர் இருந்துள்ளனர். இவர்களை இன்றைய நிலையில் தெருவிற்கு தண்டல்காரர், நாலிக்காரர் என்பர். அதிகாலையில் பொழுது விடிந்ததைக் கனிப்பதற்கு நாலிகை வட்டில் என்ற பாத்திரத்தைப் பயன்படுத்தினர். நாட்களைக், (காலத்தைக்) கனித்துக் கூறுவதற்கு கடாரம் போன்ற பெரிய பாத்திரத்தில (குறுநீர் கன்னல்) நீரை ஊற்றி நிரப்பி வைத்து அடியில் ஓட்டைபோட்டு இவ்வளவு நாழிகைக்கு இவ்வளவு நீர் என்று கசிவதை வைத்து கணக்கிட்டு வந்தனர். இது பண்டைய காலத்தில் வழக்கில் இருந்த முறையாகும். இவ்வாறு வாழ்ந்த மக்கள்கள் அரசு உடமைக்கு உட்பட்டே வாழ்ந்து வந்தனர்.

“பொழுது அளந்தறிறும்  பொய்யா மாக்கள்
தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னல் இனைத்தென்று இசைப்ப
” (முல்.55-58).

3.3.பார்ப்பனர்
பார்ப்பனர்கள் தங்களது உடைகளைத் தாங்களே துவைத்து உடுத்திக் கொண்டனர். அவ்உடை வெழுத்து காவிநிறத்தில் காணப்பட்டன. துவைத்த உடையை முக்கோல் எனும் பொருளில் இட்டு உலர வைத்தனர்.

“கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அவைநிலை” (
முல்லைப் பாட்டு. 37-38).

இங்கு பார்ப்பனர்கள் என்போர் துறவி நிலையில் வாழக்கூடியவர் என்றும், தங்களது உடையை மற்றவர்கள் தொடக்கூடாத நிலையில் தாங்களே துவைத்து உடுத்தினர். தொல்காப்பியர் இவர்களுக்குறியவையாக,

“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும்காலைஅந்தணர்க்குஉரிய”
(தொல்.மரபி.1570)

என்றுரைக்கிறார். முல்லைப்பாட்டில் மக்கள்- அந்தணர், உடமைப்பொருள்- முக்கோல் இவை இரண்டும் தொல்காப்பியத்தின் வழியாகப் பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

3.4.அரண்மனைக் காவலர்கள்
அரசனுடைய பள்ளியறையில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வகையினர் காவால் தொழில் செய்து வந்தனர். அவர்களில் யவனர் என்று கூறக்கூடியவர்களும் இருந்தனர். இயல்பிலேயே உடல் தோற்றத்தில் இவர்கள் வலிமையானவர்கள், இடுப்பில் குதிரைச் சவுக்குக் கயிற்றை சுற்றி அணிந்திருந்தனர். அதற்கு மேல் மேல்சட்டை அணிந்திருந்து பள்ளியறையில் காவலர்களாகக் காவல் காத்து வந்தனர்.

“ மத்திகை வளைஇய மறிந்து செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலபுணர் யாக்கை வன்கண் யவனர்
——————————– ஈரறைப் பள்ளி;யுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவற்
படம்புகு மிலோச்சர் உழையர்”
(முல்லைப். 59.66)

பள்ளியறைக் காவல் வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் அடிமைகளாக கவர்ந்து வரப்பட்டவர்கள் ஆவார். இவர்களில் வாய்பேச முடியாத நபர்களும் இருந்துள்ளனர். அவர்கள் பள்ளியறைக் காவலர்களாகக்  காவல் காத்துள்ளனர்.

முப்பொருள் வெளிப்பாடு
முதல்பொருள்
கருப்பொருள்
உரிப்பொருள்
சிறுபுன் மாலை
நறுவீமாலை, முனை(போர்களம்)
அகல் நெடும்புறவு
இரவு,பகல், பொழுது அளந்தரியும்(காலம்)
செந்நிலப் பெருவழி
முதிர்காய் வள்ளியங்காடு
வலம்புரி, நேமி, மாஅல். அருங்காடிமூதூர், இனவண்டு, நெல், நாழி, அலரி,பெருமுதுபெண்டீர், விரிச்சி, தாம்பு, கன்று, ஆய்மகள்,கொடுங்கோவலர், நன்மொழி, திறையர், காண்டாறு, சேணாறு,  பிடவம், இடுமுள், கவைமுள்,  பாடி, கூரை, கருப்பு, கதிர்,  கல்லா இளைஞர்,  கவளம், பார்ப்பான், முக்கோல், கயிறு, கிடுகு, குறுந்தொடி, ஒள்வாள், விளக்கு, வன்கண் யவனர், பள்ளி, மிலேச்சர், உழையர்,எஃகம்,  பிடிக்கணம்  வேழம்  பாம்பு  பகழி  பள்ளி  பாவைவிளக்கு  வயிறு  முறியிணர்க் கொன்றை  துணைபரி  நெடுந்தேர்
அலமரல்
இன்னே வருகுவர் தாயர் (இருத்தல்) பூப்போல்உன்கண் புலம்பு முத்துரைப்பின்
நெஞ்சாற்றுப் புகுத்தர நிறைந்த புலம்பொடு நீடு நினைந்து தோற்றியும்

முடிவுகள்
முல்லை நிலம் இருத்தலுக்கான நிலமாக காணப்படுகிறது. இருந்தாலும் பெண்களின் இருத்தல் வாழ்வே அதிகம் நிகழ்ந்துள்ளது. மூதூரில் முதுபெண்டிர்கள் நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். நற்சகுணம்,  சாமியாடுதல் பெண்களே முன்னின்று செய்துள்ளனர். வாழ்க்கை முறையில் பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். அவ்வாறு வாழ்ந்தவர்கள் அரசனின் ஆளுகைக்கு உட்பட்டே குடிகொண்டனர். பள்ளியறைக் காவல்களில் வேற்று மொழிபேசும் வீரர்களும்,  வாய்பேசாத மிலோச்சர்களும் காவல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முப்பொருள் சூழல் வெளிப்பாட்டை பொறுத்தவரையில் நிலம்; முல்லை நிலம் சார்ந்தும்,  அந்நிலத்திற்கான தெய்வத்தில் திருமாலே பேசப்படுகிறது. கருப்பொருள்களில்  விலங்குகளின் வாழ்க்கை நிலையும் அதனைப் பாதுகாக்கக் கூடிய மக்கள்களும் அதிகம் பேசப்பட்டுள்ளது. போர்க்களத்தில் பெண்கள் விளக்கு ஏந்தி இரவுமுழுவதும் காவல் காத்து வந்துள்ளனர். முல்லை வாழ்க்கை மேட்டிமை வாழ்க்கையாக அமைந்துள்ளதை இவ்வாய்வின் வழி;யாகக் காணமுடிந்தது.
மேலும் போர்க்களத்தில் குறுந்தொடி மகளிர் மட்டும் ஏன் விளக்கு ஏற்றினார்கள்? அதற்கான பின்புலம் என்ன? பின்னர் வந்த சோழர்கள் காலத்தில் கோயில்களில் தேவரடியார்கள் கோயில்களில் பணிவிடைசெய்ததும், கோயில்களில் பூசைசெய்ததும் கல்வெட்டுகள் ஆதாரங்கள் நமக்கு பறை சாற்றுகின்றன. அதே போன்று மூதூர் மட்டும் முல்லை நிலத்துக்கு எல்லையாகக் கொண்டு முல்லைப்பாட்டு இயற்றகாரணம் என்ன? அவ்வாறு பேசப்பட்ட நிலையில் பல்வேறு பழங்குடிகள் அவ்வூரில் வாழ்ந்த நிலையில் அந்தணர்கள், காவல்தொழில் செய்தவர்கள் மட்டும் பேசப்படக் காரணம் என்ன? அவற்றை எல்லாம் பிரித்துரைக்கும்போது மூதூரின் தற்கால வரலாற்றை அறிய வேண்டியிருக்கிறது. காலத்தை கணிக்கும் மக்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது, ஆனால் எந்த மக்கள் என்று தெளிவுபடுத்தவில்லை? முதுபெண்டிர்களும் முல்லை நிலத்திற்கு உரிய பெண்களா? என்றும் நினைக்கும் சூழலில் குறிஞ்சி நில பின்னணியில் வெறியாட்டு கலத்தில் முதுபெண்டிர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இவ்வகை வினாக்கள் அனைத்தும் ஆய்வுக்கு தேவையான ஒன்றாகும்.

பார்வை நூல்கள்
1.    தொல்காப்பியம் – மூலமும் உரையும் (தமிழண்ணல்)
2.    முல்லைப்பாட்டு- மூலமும் உரையும் (ச.வே.சுப்பிரமணியம்)
3.    முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை – மறைமலையடிகள்.
4.    பாணர் இனவரைவியல் – பக்தவத்சல பாரதி.
5.    ஐங்குறுநூறு மூலமும் உரையும் – NCBH  வெளியீடு.
6.    கலித்தொகை மூலமும் உரையும் – NCBH  வெளியீடு.
7.    அகநாநூறு மூலமும் உரையும் – NCBH  வெளியீடு.
8.    மலைபடுகடாம் – பெருமலைப் புலவர் சோமசுந்தரனார் உரை.

ramvini2009@gmail.com