ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய ‘யாழ்ப்பாணச்சரித்திரம்’ பற்றியதொரு பார்வை!

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் பற்றியதொரு பார்வை! இலங்கைத்தீவின் இனமுரன்பாடுகளிடையே தோன்றி, முப்பது வருடங்களுக்கு மேலாக உக்கிரங் கொண்டு தொடர்ந்த  யுத்தமானது, முடிவில் பாரிய இழப்புக்களையும் அழிவுகளையும் மாறாத வடுக்களையும் அனைத்து சமூகங்களிடையேயும் விட்டுச்சென்றுள்ளது.  இந்த இனமுரண்பாடுகளுக்கு முக்கியமாக சமூக, பொருளாதார, கலாச்சார வேறுபாடுகள் காரணங்களாக   இருந்துள்ள போதிலும் சமூகங்களுக்குள் இருந்துள்ள தவறான வரலாற்றுக் கண்ணோட்டங்களும்  அவை மக்களிடையே ஏற்படுத்தியிருந்த சிந்தனை முறைமைகளுமே பிரதான பங்குகளை வகித்துள்ளன.  சிங்கள மக்களிடையே இருந்த பொய்மையான மகாவம்ச சிந்தனைகளும் தமிழ் மக்களிடையே உணர்வுற்று இருந்த கங்கை கொண்ட கடாரம் வென்ற கருத்தாக்கங்களும் முஸ்லிம் மக்களிடையே கருக்கொண்டுள்ள  ஆதித்தந்தை ஆதாம் பதித்த கால்தடங்கள் போன்ற கற்பனைச் சித்திரங்களும் இனமுரண்பாட்டின் தீவிரத்தன்மையை வலிமைப்படுத்துபவையாக இருகின்றன.  இந்த ஆண்ட பரம்பரைக் கோஷங்களில் இருந்து அனைத்து சமூகங்களும் விடுபட வேண்டிய தேவையை உணர வேண்டும். இது நடை பெரும் சந்தர்ப்பத்திலும் இனமுரண்பாடுகளை உருவாக்கும் வலுவான அத்திவாரங்கள் தகர்க்கப்படும் என்பதில் பலரும்  திடமான நம்பிக்கையை வைத்துள்ளனர். இப் புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு பொய்மைகளும் தவறுகளும் நிறைந்த பழய வரலாற்று ஆவணங்கள் மீளாய்வு செய்யப்படுவதும், சரியானதும்  உண்மைகள் நிரம்பியதுமான தகவல்கள் நல்ல  முறையில் மக்களிடையே கொண்டுசெல்லப்பட வேண்டியதும் இன்று அனைவரிடையேயும் உள்ள  முக்கியமான  பணிகளாகும்.  இது குறித்த நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டியது  அறிவு ஜீவிகளினதும் துறைசார் வல்லுனர்களினதும் கடமையாகும்.

இவ்வகையில் தமிழ்  சமூகங்களை சேர்ந்த நாமும் எமது வரலாற்று ஆவணங்களை மீளாய்வு செய்ய வேண்டிய  ஒரு கடமைப்பாட்டிலும், காலகட்டத்திலும்  உள்ளோம் என்பதினை இங்கு குறிப்பிட வேண்டும். இதில் நாம் ஏற்கனவே பதிக்கப்பட்ட பல புத்தகங்களை பார்வையிட்ட போதும் அ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய “யாழ்ப்பாணச்சரித்திரம்” என்ற நூல்  மிக முக்கியமானதும் அதிக வரலாற்றுத் தகவல்கள் நிறைந்ததாகவும் மீண்டும் மீள் வாசிப்புக்கும் விமர்சனத்திற்கும்  உட்படுத்தப் பட வேண்டியதாகவும் எம்மால் கருதப்படுகின்றது. 1912 இல் தனது முதற்பதிப்பினையும் 1915 இல் தனது இரண்டாவது பதிப்பினையும் கண்ட இந்நூலானது 2001 இல் ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ் இனரால் புதிதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நூறு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இது தரும் தகவல்கள் இன்றும் எமக்கு அவசியமானதாகவும் தேவையானதுமாகத் தெரிகின்ற அதே வேளை, சமூகத்தில் உள்ள பல நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் இதிலிருந்து பல தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் எமது எண்ணமும் கருத்துமாகும்.

யாழ்ப்பாண வரலாற்றினை முழுமையாகவும் உண்மையாகவும் எடுத்துக் கூறும் நூல் எதுவும் இதுவரை பதிப்பிக்கப் படவில்லை என நாம் துணிவுடன் கூறலாம். இதற்க்கு முக்கிய காரணங்களாக யாழ்ப்பாண வரலாறானது இதுவரை விடுவிக்கப் படாத, வெளிப்படுத்தப் படாத பல சிக்கல்கள் நிறைந்த  கால கட்டங்களை தன்னகத்தே கொண்டிருப்பதும் , பலரும் ஏற்கனவே தவறுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பல மூல நூல்களை ஆதராமாகக் கொண்டு வரலாற்றை எழுத முற்பட்டதுமேயாகும். இது மட்டுமன்றி பலரும் தாம் வரித்துக் கொண்ட அரசியல், சமூக  நிலைப்பாடு காரணமாக உண்மைகளை அறிந்திருந்தும் அதனை வெளிப்படுத்தும் துணிவற்றிருந்ததும் ஒரு காரணமாகும். தவறான மூலநூலிற்கு உதாரணமாக மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலையைக் குறிப்பிடலாம்.  இநூலில் உள்ள  பல தவறுகளையும் குறைபாடுகளையும் ஆய்வாளர்களும் துறைசார் வல்லுனர்களுமான கா.இந்திரபாலா, ப. புஷ்பரட்ணம், க.குணராசா, சி.க.சிற்றம்பலம்  என்பவர்கள்  தகுந்த ஆதாரங்களுடனும் ஆய்வுகளுடனும்  எடுத்துக் கூறியுள்ள போதிலும், அதற்கு முன்னரே இந்நூலை ஆதாரமாகக் கொண்டு பல நூல்கள் தவறான தகவல்களுடன் ஆக்கப்பட்டுள்ளமையானது துரதிஷ்டவசமானது. இதற்கு உதாரணங்களாக வசாவிளானை சேர்ந்த க.வேலுப்பிள்ளை எழுதிய “யாழ்ப்பாண வைபவ கௌமுதி”  “சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய “யாழ்ப்பாண வைபவ விமர்சனம்”  , டானியல் ஜோன் எழுதிய “யாழ்ப்பாணச்சரித்திரம்”   முதலியார் செ.இராசநாயகம் எழுதிய “யாழ்ப்பாணச்சரித்திரம்” ,  சிவானந்தன் எழுதிய “யாழ்ப்பானக்குடியேற்றம்”  என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ. இராசநாயகம் போன்றோர் யாழ்ப்பாண வைபவமாலையை ஆராய்ந்து பல விமர்சனங்களை அதன் மீது வைத்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

இவையனைத்துக்கும் அப்பால் அ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் ஆனது முற்றுலும் வேறுபட்ட வடிவத்தையும் தன்மையையும்  கொண்டுள்ளது. ஏனெனில் இது ‘யாழ்ப்பாண வைபவமாலையையிட்டு வேறுபட்ட கருத்தினைக் கொண்டுள்ளது. “யாழ்ப்பாணப் பூர்வசரித்திரத்திற்கு ஆதார நூல்களாக இப்போதுள்ளன  வைபவமாலையும் கைலாசமாலையுமே. அவையும் சொரூபம் திரிந்து விட்டனவாய்த் தோன்றுகின்றன”  என்று  யாழ்ப்பாண வைபவ மாலையை விமர்சிக்கும் முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் தாம் இந்நூலை எழுதுவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் ஆதாரங்களையும் தனது பதிப்புரையில் எடுத்துரைக்கின்றார். “மருதங்கடவெளியிலே P.W.D. கிளாக்காயிருந்த அம்பலவாணர் கெக்கரியாக் கிராமத்திலே ஒரு சிங்கள வீட்டிலிருந்து எடுத்த கடலோட்டுக் காதைப்பிரதி 1887 ம் வருடம் காஞ்சிபுரத்தில் வசித்த சிறீமத் மாசிலாமணி தேசிகரிடத்தில் யாழ்ப்பாணக் குறிப்புக்கள் அடங்கிய 27 ஏடுகள் அடங்கிய பழைய பிராமணக் குறிப்பேடுகள் சாதி வரிசைகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய அச்சங்குளம் உடையார் சிறி மணியரத்தினம் அனுப்பிய ஏட்டுப்பிரதி – என்று பல்வேறுபட்ட ஆதாரங்களை முன்வைக்கிறார்.

“யாழ்ப்பாணச்சரித்திரம்” கூறும் வரலாறு
இந்நூலானது கி.மு. 161 இலிருந்து அரசு செய்த ஏலேலன் (எல்லாளன்) காலம் முன் தொடங்கி இது அச்சேறிய காலப்பகுதியான கி.பி. 1912 வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய வரலாற்றை தெளிவு படவும் ஆதார பூர்வமாகவும் விபரிக்கின்றது. மணற்றி என்ற பூர்வ நாமம் கொண்ட பிரதேசம் எப்படி யாழ்ப்பாணமாக மாறியது என்பதையும்  அதன் பின் அது எப்படி சரித்திரத்தில் கேந்திர  முக்கியத்துவம்  பெரும் இடமாக மாறுகின்றது என்பது பற்றியும் பல விளக்கங்களையும்  அளிக்கின்றது

‘இலங்கை ஈழமேயாயினும் வடபாகமும் காழ்பாகத்திலோருபகுதியும் ஈழமண்டலமெனப்படும். யாழ்ப்பாணம் ஈழமண்டலத்திலொரு பகுதியாம். சேர, சோழ பாண்டி மண்டலங்களோடு ஈழமண்டலமுமொன்றாகும். சேர சோழ பாண்டி மண்டலங்களில் இருந்துமே சனங்கள் ஈழமண்டலந்தில் குடியேறுவராயினர். இவர்கள் குடியேருமுன் இவ்வீழமண்டலத்தை கைக்கொண்டிருந்தவர்கள் நாகர்கள். சங்கப் புலவர்களில் ஒருவராயிருந்த முடி நாகராயர் என்பவரும் இந்நாகர் குலத்தவரே என்பர். அவர்கள் ஒரு ஜாதி மனுஷர். அவர்களை வென்று ஈழநாட்டை கைக்கொண்டவர்கள் சேர சோழ பாண்டி மண்டலங்கலென்னும் தமிழ் நாட்டிலிருந்து வந்த தமிழர். அவர்கள் தமக்கு இராசதானியாக கொண்ட நகரம் மாதோட்டம்.” (பக்கம் 03)


என விபரிக்கும் இந் நூலானது ‘அவர்கள் ஒரு ஜாதி மனிதர்’ என நாகர்களை சொல்வதின் மூலமும் அவர்களை வென்று இமண்டலத்தை கைக்கொண்டவர்கள் தமிழர்கள்’ என்று சொல்வதின் மூலம் நாகர் வேறு தமிழர் வேறு என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அது பற்றிய மேலதிக விபரங்கள் இந்நூலில் இல்லை. இதனை தொடர்ந்து ஏலேலன் ஆட்சி பற்றி விபரிக்கும் ஆசிரியர் அவனது நீதி வழுவாது ஆட்சி பற்றி விபரித்து அந்நாட்களில் தொண்டை நாட்டிலிருந்து வந்த கவிவீரராகவன் எனும் யாழ்வல்லாளன் ஒருவன் அரசன் மனங்குளிர யாழ்பாடி, மணற்றி எனும் பிரதேசத்தை பரிசாகப் பெற்று பின் அதனை யாழ்ப்பாணமாக மாற்றிய வரலாற்றை சுவைபட தகுந்த ஆதரங்களுடன் விபரிக்கின்றார்.

தெலுங்கர் வருகையும், கோவியரும்!
இதே காலப்பகுதியில் உப்பு வியாபாரம் செய்ய மரக்கலங்களுடன் வந்த தொண்டமான் எனும் பிரதானியும் அவன் கூட வந்த சனங்களும் வடமராட்சியில் குடியேறிய வரலாற்றையும் அவர்கள் அமைத்த தொண்டைமானாறு என்னும் கால்வாயைப் பற்றியும் இந்நூல் விரிவாக விபரிக்கின்றது. மேலும்

“ தொண்டைமான் கருமமாக சனங்கள் பெரும்பாலும் பெரும்பாலும் தொண்டை நாட்டின் வடபாகத்திளுருந்து வந்தவர்கள். அவர்கள் குடிகொண்ட பகுதி வடமராட்சி எனப்பட்டது. அவர்கள் பாஷை தெலுங்கு. அது பற்றியே யாழ்ப்பாணத்தில் கடவு, பிச்சுவாய்க்கத்தி முதலிய தெலுங்கு சொற்கள் வழங்குவதாயிற்று. அவர்கள் விஷ்ணுவை வழிபடுவோர். அதுபற்றி வல்லிபுரம் என்னும் குறிச்சியிலே ஒரு விஷ்ணுவாலயம் உண்டாவதாயிர்று. வல்லியதேவன் அதிகாரம் செய்த இடம் வல்லிபுரமென்னப்பட்டது. தெலுங்கு பாஷையும் தெலுங்கு நாடும் வடுகெனப்படும். அதுபற்றியே அந்நாட்டில் இருந்து வந்து குடிகொண்ட வடமரை வடுகர் என்று கூருவர். அவ்வடமுருள்ளே போகியர் ஒருதொகையினர். இடையராகிய கோபிகர் பெரும்பாலார். கோபிகர் பிற்காலத்திலே கோவியர் எனப்பட்டார்கள்” (பக்கம் 13)    

என்ற உரையின் மூலமும் மேலும் பல ஆதரபூர்வமான தகவல்கள் மூலமும்  ஆசிரியர் யாழ்ப்பாணத்திலே தெலுங்கரது குடியேற்றங்களையும் இத்தெலுங்கரே கோவியரென யாழ்ப்பாணத்தில் அழைக்கப்படும் சாதியரெனக்கூருகின்றார்.   இதுவே இன்றும் கூட தமிழகத்தில் தெலுங்கரை வடுகர் என்று அழைப்பத்தின் மூலமும் யாழ்ப்பாணத்தில் மற்றைய சாதியினர் கோவியரை வடுகர் என்று அழைப்பதின் மூலமும் கோவியர் என்பார் தெலுங்கரே என்ற ஆசிரியரின் கூற்றின் உண்மைத் தன்மையினை பறை சாற்றி நிற்கின்றது.

யார் இந்த வன்னியர் ?
மேலும் வன்னியர் பற்றியும் இந் நூலானது மிகவும் விரிவானதும் ஆதார பூர்வமானதுமான தகவல்களை வழங்குகிறது.

“ மனு நீதி கண்ட சோழனின் மகன் குளக்கோட்டன் என்பவன் திரிகோணமலையில் உள்ள சுவாமியை தரிசனம் செய்ய அங்கே சென்றான். அப்பொழுது மலை  மேலிருந்த அவ்வாலயம் பழுதுற்று இருந்தமையால் அதைப் புதுக்கிக் கோபுரங்களை திருத்தி அநேக மண்டபங்களையுன் கட்டி அற்புத அலங்காரமான ஆலயமாகினான். அவ்வாலய நித்திய நைமித்தியங்களுக்கு முட்டுற்று இருந்தமையால் அதற்கு வேண்டிய விலை நிலங்களை அமைத்து அந்நிலங்கள் நீர்வளம் பொருந்தி எக்காலமும் விளைவு கொடுக்குமாறு மகத்தான ஓர் ஏரியையும் கட்டினான். அவ்வேரியாற் பாயுநிலம் 1700 அ மன்ன விதைப்பாடு. இத்துனைப் பெரிய கிராமத்தை விளைவிக்க மருதங்கூர் முதலிய இடங்களில் இருந்து ஐம்பத்தொரு வன்னிய ஜாதி குடும்பத்தவர்களையும் அவர்க்குத் தலைவனாக தனியுன்னாப் பூ பாலவன்னியனையும் அழைத்து அங்கு குடியேற்றினான். இது நிகழ்ந்தது கலியுகம் 512 இடபமாசம் 10 ந் தேதி திங்கட்கிழமை.” (பக்கம் 24)

“ யாழ்ப்பாணத்திற்கு உட்படாத இடங்கள் ஆதலால் அவை அடங்காப் பற்றெனப்பட்டன. இவ்வன்னியர்கள் மதுரை, திரிசிபுரம் தஞ்சை முதலிய இடங்களில் இருந்து நானா சாதியிலும் வறியவர்களாயிருந்த குடிகளை வரவழைத்து குடியேற்றினார்கள்.”

மேற்கொண்ட தகவல்களை வழங்கும் ஆசிரியர் இவர்களில் சிலர் சிங்களவரோடு சேர்ந்து திசாபதிகளான வரலாறுகளையும் வழங்குகிறார்.

சிங்களவர் குடியேற்றம் மேலும் ஆசிரியர் ஆதியில் ஏற்பட்ட சிங்கள குடியேற்றங்களை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“———அவர்கள் (சிங்களவர்கள்) அக்காலத்திலே(AD 115) காடாய் கிடந்த அநேகவிடங்களை சிற்றூர்களாக்கி அங்கே குடியேறினார்கள். அவர்களால் குடியேற்றப் பட்ட இடங்கள் சிங்களப் பெயரால் வழங்குகின்றன. அவை  மானிப்பாய், சண்டிருப்பாய், கோப்பாய், சுன்னாகம், மல்லாகம், கொடிகாமம், சூராவத்தை, கற்போக்கனை, உடுவில், கோண்டாவில், கொக்குவில், மிரிசிவில், முதலியன. இவை சிங்கள அதிகாரத்தினால் உண்டான சிற்றூர்கள். சிங்கள அரசர் காலத்திலேயே புத்த கோயில்களும் பாஞ்சாலைகளும் சிலவுண்டாயின. கந்தரோடையில் புதைந்து கிடந்த புத்த விக்கிரகமொன்று சிறிது காலத்துக்கு முன்னே வெளிப்பட்டது. அவர்களால் அநேக குளங்களும் வெட்டப்பட்டன. வில் என்பது சிங்களத்தில் குளம்” (பக்கம் 29).

ஆதியில் ஏற்பட்டிருந்த இச்சிங்களக் குடியேற்றங்களை மற்றைய வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். கலாநிதி க. குணராசா தனது “எஸ்.ஜோனின் யாழ்ப்பாணச்சரித்திரம் : ஒரு மீள் வாசிப்பு” எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

“உக்கிரசிங்கன் கதிரமலையை (கந்தரோடை) விட்டு தனது தலைநகரை சிங்கைநகரிற்கு(பூநகரி) மாற்றிக் கொண்டமைக்கான காரணங்கள் தெளிவானவை. கந்தரோடைப் பிரதேசம்  பௌத்தமத மக்களது முக்கிய பிரதேசமாக மாறியிருந்தது. அத்துடன் சங்கமித்த தெரியின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பௌத்த யாத்திரிகர்கள் ஜம்புக்கோலப்பட்டின (திருவடி நிலை) மூடாக வந்திறங்கினர். ஜம்புக்கோலப் பட்டினத்தில் விகாரையொன்றும் அதனைவிட ஷாலிப்பத விகாரை, திஸ்ஸ விகாரை, என்பனவும் நாக தீவில் அமைந்திருந்தன. கந்தரோடையோடு வல்லிபுரத்திலும் பௌத்த மத மக்கள் பரவியிருந்தனர். பௌத்தம் நாகதீபப் பிரதேசத்தில் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளரின் ஆதிக்கத்திலிருந்து உக்கிரசிங்கன் விடுவித்திருந்தான். தீவிர சைவனாக இவன் விளங்கியுள்ளான் என்பதை இவன் ஆற்றிய திருப்பணிகள் நிறுபிக்கின்றன. எனினும் பௌத்ததினது செல்வாக்கு கந்தரோடை, வல்லிபுரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. அதாவது நாகதீபத்தின் மேற்குப்பகுதி, கிழக்குப்பகுதி என்பன வேற்று மத ஆதிக்கத்தில் இருக்க தென்பகுதி (யாழ்ப்பாணம்) மக்கள் விரும்பிக் குடியேறியிராத பிரதேசமாக விளங்கியது. இந்நிலையில் தனது தலைநகரை இடம் மாற்றுவதற்கு உக்கிரசிங்கன் விரும்பினான். சைவம் சிறப்புறக் கூடிய புதியதொரு பிரதேசத்தை அவன் தெரிவு செய்ய விரும்பியதன் விளைவே, சிங்கை நகர்( பூநகரி) புதிய தலைநகராக மாறியது.” (பக்கம் 16).

கன்னடர் குடியேற்றம்
மேலும் பல நுற்றாண்டு கல் கழித்து AD 1260 களில் நடந்த கன்னடர் குடியேற்றம் பற்றி இந்நூல் தெரிவிப்பது யாதெனில்,

“ —– இவனுடைய (குணவீர சிங்கையாரியன்) வீரத் திறனைக் கேட்டு மதுரையரசன் படைத்துனை கேட்க, ஆங்கும் ஒரு படைத்துணையை அனுப்பி அவனுக்கும் வெற்றிமாலை சூட்டி அதற்காக பெருந்திரவியமும் கன்னடர் சிலரையும் சிவிகையர் சிலரையும் மறவர் சிலரையும், வில்லியர் சிலரையும், வேடர் சிலரையும் பெற்றான். மறவரை மறவன் புலத்தில் இருத்தினான். வேடுவரை வேடுவங்கண்டில் இருத்தினான். இவ்வரசனே தனது நகரத்திற்கும் நாட்டுற்கும் அவசியமான அநேக தொழிலாளரை கொணர்ந்தவன். கன்னடர் இருந்தவிடம் மாடிட்டபுரத்திலே கன்னடியதெரு என வழங்குகிறது.” (பக்கம் 38)

பிராமணர் வருகை
“ A.D. 1025 இல் மாமூ துகஷ்ணி என்னும் துருக்கி கலகக்காரன் இந்தியாவில் நுழைந்து கோயில்களை இடித்து அங்கிருந்த திரவியங்களை கவர்ந்தும் சனங்களை வெட்டியும் சிறை செய்தும் வருத்திய காலத்தில், அவன் படைக்கஞ்சி அநேகர் இலங்கையில் வந்து ஒதுன்குவராயினர். அவருட் பிராமணர் சிலர் யாழ்ப்பாணத்தில் வந்து ஒதுங்கினர். இவர்கள் குச்சிலியப் பிராமணர் எனப்படுவர். இவர்கள் மரபினர் இவரென விசுவநாத சாஸ்திரி எழுதிய சம்பவக் குறிப்பினால் அறியலாம்.” (பக்கம் 35,36)

இது இலங்கையில் பிராமணர் குடியேற்றம் பற்றி இந்நூல் குறிப்பிடும் தகவல்களில் ஒன்று.

சோனகர் வருகையும் முரண்பாடும்.
 17ம் நூ ற்றாண்டில் ஏற்பட்ட முஸ்லிம் மக்களின் யாழ்ப்பாண வருகையையும், அந்நாட்களிலேயே ஏற்பட்ட முஸ்லிம் – தமிழர் பிரச்சினைகள் பற்றிய ஒரு நெருடலான தகவலையும் இநநூல் மிக விளக்கமாக தருகின்றது.

“இக்காலத்தில்  காயற்பட்டினத்திலிருந்து சில சோனகர் வந்து மிரிசிவில் என்னும் இடத்தில் குடியேறினார்கள். அவர்கள் குடி கொண்ட இடம் உசன் என்னும் சோனக தலைவனுக்கு உரியதாகையால் அது இன்றும் உசன் என்று வழங்குகின்றது. அச்சோனகர்கள் அங்கு நின்றும் அகன்று சோனகன் புலவிலே சிறுது காலம் வைகி, அதுவும் வாய்ப்பாகாமையால், இப்போது நல்லூர் கந்தசுவாமி கோயிலிருக்கும் இடத்திற்கு மேற்பாகத்திலே குடிகொண்டார்கள். அங்கே ஒரு பள்ளிவாயிலும் கட்டினார்கள். அப்பொழுது முன் இடிபட்ட கந்தசுவாமி கோயிலை மீளவுங் கட்டுவதற்கு தமிழர் முயன்று, சோனகரை அவ்விடத்தினின்றும் நீக்கித் தருமாறு ஒல்லாந்த தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தார்கள். ஒல்லாந்த தேசாதிபதி அதற்கு அனுகூலம் செய்வதாகக் கூறியும் செய்யாது காலம் போக்கினான். அது கண்டு தமிழர்கள் சோனகரை அவ்விடத்தை விடும்ப்படும்படி கேட்டும் இரந்தும் பார்த்தார்கள். முடிவில் அந்நிலத்திற்கு பெருவிலை தருவதாகவும் கேட்டார்கள். சோனகர் அதற்கும் இசையமை கண்டு தமிழர் ஒரு பன்றியைக் கொன்று அவர்களுக்கெல்லாம் பொதுவாக இருந்த ஒரு கிணற்றில் இட்டார்கள். அது கண்டு சோனகர் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு நாவாய்துறை ( நாவாந்துறை) க்குக் கிழக்கேயுள்ள இடத்தை வங்கிக் கொண்டு அங்கே குடியேறினார்கள். அது சோனக தெருவென வழங்குகின்றது. சோனகர்கள் அதுகால முதல் வியாபாரத்தையே பெரும்பாலும் தமது தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ன்றார்கள். அவர்களுக்குள்ளே முயற்சியின்றி இருப்பவர்களை காண்பதரிது. அவர்கள் சமயாபிமானமும் ஒற்றுமையும் பெரிதுமுடையவர்கள்.” (பக்கம் 88-89)

மலையாளிகள்
மலையாளிகளின் குடியேற்றம் குறித்து இந்நூல் விளக்கமான விபரங்கள் எதனையும் குறிப்பிடவில்லையாயினும் அவர்கள் தமது சாதி சின்னமாக முன் குடுமி வைத்துக் கொண்டு மற்றைய சாதியிரைவிட எப்படி வித்தியாசமாக வாழ்ந்தார்கள் என்பதை பற்றியும் அவர்கள் வகித்த பதவிகள் பற்றியும் குறிப்பிடுகின்றது.

யாழ்ப்பாணச்சாதியம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் எப்படி மற்றைய சாதியினர்  வெள்ளாளர்களாக உள்வாங்கப் பட்டார்கள் என்பது பற்றி தெளிவாக சொல்வார்கள். இது குறித்து ஒரு பழமொழி கூட உண்டு. “கள்ளர், மறவர், கனத்த அகம்படியர் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆவர்”.

யாழ்ப்பாணத்தவர் குறித்து நாம் ஆய்வு செய்யும் போதும் கன்னடர், தெலுங்கர், மலையாளியானோர் எல்லாம் எப்படி மெல்ல மெல்ல வந்து யாழ்ப்பாணத்தவர் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. இவ்வரலாற்று உண்மையை பாவலர் வல்வைதேவன் அவர்களும் தமது ‘ஆதிக்குடித்தமிழரும் மகாவம்சமும்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“நாகர்களினதும் தென்னிந்தியத் திராவிடர்களினதும் கலப்பாகவும் காலத்திற்குக் காலம் தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள்,மலையாளிகள், கலிங்கர்கள், என்போரது சேர்வினமாக தமிழ் மக்கள் உள்ளனர். இயக்கர்கள் ஆரியர்கள், தமிழர்கள் என்போரது கலப்பினமாக சிங்களவர்கள் உள்ளனர். இனத்தூய்மை என்பது இவ்விரு  மக்களிடையேயும் இல்லை என்பது மறுக்கமுடியாது.”(பக்கம் 69)

யாழ்ப்பாணச்சரித்திரம் கூறும் சாதியம் 
கடந்த 30 வருடங்களாகத் தமிழ் இனம் எழுச்சி கொண்டு போராடியிருந்தாலும், இத்தனை அழிவுகள், அனர்த்தங்கள், இழப்புக்களுக்கு பின்பும் யாழ்ப்பாணத்தில் வேரோடிப் போன சாதிய உணர்வில் பெரும் மாற்றம் எதுவும் நிகழவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கூற்று. இதற்கான காரணங்களாகவும் இது குறித்து எம்மிடையே சரியான வரலாற்றுப் பார்வை இல்லை என்பதே எமது கருத்தாகும். இது பற்றிய  சிந்தனைகளையும் விழிப்புணர்வுகளையும் அனைத்து சமூகங்களிடையேயும் ஏற்படுத்த தெளிவானதும் சரியானதுமான வரலாற்று நிகழ்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியதும் அது பற்றிய தெளிவான சிந்தனையை உருவாக்க வேண்டியதும் கூட  துறைசார் வல்லுனர்களினதும் கற்கை நெறியார்களினதும் கடமையாகும்.

யாழ்ப்பாணத்துச் சாதியம் குறித்தும் அ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் தனது “யாழ்ப்பாணச்சரித்திரம்” இல் மிக விரிவானதும் தெளிவானதுமான வரலாற்றுக் குறிப்புக்களை முன் வைக்கின்றார். ஆனாலும் இவரது எழுத்துக்களில் இருந்து இவர் கூட ஒரு ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட மனிதரெனத்தெளிவாகத் தெரிகின்றது. எனவே இவர் தனது நூலில் யாழ்ப்பாண ஆதிக்க வெள்ளாள சாதியினரின் கொடூரங்களையும் கொடுமையான சம்பவங்களையும் கூறாது மறைத்து விடினும், இவர் சாதிகள் குறித்து வெளிப்படுத்தும் சரித்திரக் குறிப்புகள் மிக முக்கியமானவையாகும்.
இதில் நாம் ஏற்கனவே இவர் கோவியர் குறித்து கூறியிருந்த வரலாற்றுத் தகவல்களை நோக்கியிருந்தோம். கோவியர் என்பது தெலுங்கரே என்று பல சான்றுகளுடன் நிரூபிக்கும் இவர், ஆதிக்க சாதியனரால் இழிவாகப் பார்க்கப் படும் இவர்களுக்கு ஒரு உயரிய அந்தஸ்தினை வழங்குகிறார். இக்கருத்தானது சாதாரண மக்களிடையே போய் சேருமானால், இவர்கள் குறித்த மற்றவர்களது பார்வையிலும் ஒரு மாற்றம் வரும் என்பது எமது நம்பிக்கையாகும்.

யார் இந்த நளவர்?
யாழ்ப்பாண சமூகத்தினால் மிகவும் கொடூரமாக ஒடுக்கப் பட்டவர்களாகவும் இழிவு படுத்தப் பட்டவர்களாகவும்  தீண்டத்தகாதவர்களாகவும் நளவர் என்னும் சாதியமைப்பு விளங்குகின்றது. ஆனால் இவர்கள் பற்றி இந்நூல் குறிப்பிடும் வரலாற்றுத் தகவலகள் சுவாரஷ்யம் நிறைந்த உண்மைகளாக விளங்குகின்றது.

“இச்சமயத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஐம்பது வன்னியர் தமது மனைமக்களோடு புறப்பட்டு வந்தனர். அவர்களுள் நாற்பத்தெட்டு வன்னியர் நெடுந்தீவிற்கு அண்மையில் மரக்கலம் கவிழ்ந்து இறந்தனர். எஞ்சிய வன்னியன் கந்தரோடையில் தங்கினான். அவன் சங்கிலி படையில் சேர்ந்து சிறு தலைவனாகி கரைப்பிட்டியிலிருந்தான். அவனுடைய படையில் அறுபது நம்பிகள் இருந்தார்கள். அவருள் ஒருவருடைய புத்திரியை கரைப்பிட்டி வன்னியன் கற்ப்புச்சிதைத்தான். அது கேட்டு அந்நம்பி அவ்வன்ன்னியனைக் கொன்றான். அவன் மனைவி அம்மை நாய்ச்சி அச்சோகத்தால் வாளைஎடுத்து தற்கொலை செய்து உயிர்விட்டாள். இதனைக் கேள்வியுற்ற சங்கிலி தண்டதிகாரியை அனுப்பி, அந்நம்பியைக் கொலை செய்வித்து மற்ற நம்பிகளை படை சேவகத்தினின்றும் விலக்கி அவன் திரவியத்தையும் அரசுக்க உரியதாக்கினான். படை சேவகத்தில் இருந்து விலக்கப்பட்ட நம்பிகள் அடுத்த சான்றார் குப்பத்திற்கு போய் சான்றார் தொழிலை மேற்கொண்டு, நளவர் என்னும் சாதியராயினரேன்பர். நறவர் என்னும் சொல்லே நளவர் ஆயிற்று. நறவு = கள். கள் விற்போர் என்பது அதன் பொருள்.” (பக்கம் 60)

இம்மேற்குறிப்பிட்ட வரலாறு மூலம் ஆசிரியர் நளவர் என்போர் அந்நாட்களில் வீரம் செறிந்த போர் வீரராக இருந்த வரலாற்றினை விளக்கி அவர்களது இழிந்த நிலையை இல்லாமல் ஆக்குகின்றார்.

இது தவிர ஆசிரியர் அந்நாட்களில் இருந்த சாதி வரிசைகளையும் எப்படி ஒரு சாதியினர் இன்னொரு சாதியினருடன் கலந்தனர் என்பதினையும் மிக விளக்கமாக எடுத்துரைக்கின்றார். “கள்ளர், மறவர், கனத்த அகம்படியர் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆவர்” என்ற பழமொழிக்கமைய இதில் தூய சாதி என்று எதுவுமே இல்லை என்பதே ஆசிரியரின் கருத்தாக அமைகின்றது.

அத்துடன் இந்நூலின் பின் இணைப்பாக 1790 ம் ஆண்டில் தலைவரிக்காக எடுக்கப்பட்ட குடிசனத்தொகையின்  16 முதல் 70 வயது வரையான ஆடவர் தொகையில் 50 இற்கும் மேற்பட்ட சாதியினரைப் பட்டியல் இடுகின்றது.  இந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட சாதியினரின் எண்ணிக்கையானது இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு குறைந்துள்ளமையும் இவர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இல்லாமல் ஆகி விட்டனர் என்பதற்கு தகுந்த ஆதாரமாக உள்ளது.

மேற்குறிப்பிட்ட அரிய தகவல்களுடன் இந்நூல் வெளி வந்திருந்தாலும் மற்றைய யாழ்ப்பான வரலாற்று நூல்களைப் போலவே இந்நூலிலும் பல தவறான வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன, பல தகவல்கள் விடுபட்டுள்ளன. இதில் முக்கியமானது யாழ்ப்பாணத்துக் கடைசி மன்னன் சங்கிலி குமாரன் பற்றியது. மற்றைய நூலசிரியர்களைப் போலவே இவரும் கி.பி. 1517 இல் அரியணையேறிய சங்கிலி மன்னனையும் 1616 இல் அரியணை ஏறிய சங்கிலி குமாரனையும் ஒருவரெனத் தடுமாறி எழுதியுள்ளார். இத்தவறுகளையே மற்றைய யாழ்ப்பாண வரலாறுகளை எழுதிய பலரும் விட்டு சென்றுள்ளனர். இதற்கு தவறான உதாரணமாக உள்ள யாழ்ப்பாண வைபவ மாலையை அடியொற்றி இவர்கள் எழுதியமையே காரணமாகும். உண்மையில் சங்கிலி மன்னன் போர்த்துக்கேயர்களுடன் இரண்டு முறை போரிட்ட போதிலும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுவது போல் அவன் கைது செய்யப்பட்டு மரணமடையவில்லை. சங்கிலி மன்னனுக்குப் பின்பு புவிராச பண்டாரம்,  காசி நயினார்(1565),  பெரியபிள்ளை செகராச சேகரன்(1570),        புவிராச பண்டாரம் பரராசசேகரன்(1616),  எதிமன்ன சிங்ககுமாரன்(1591),   சங்கிலி குமாரன் செகராச சேகரன்(1616) என ஆறு மன்னர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டதாக தொல்பொருள் ஆய்வாளர்களும் வரலாற்றாசிரியர்களும் கூருகின்ன்றனர். இந்த சங்கிலி குமாரன் செகராசசேகரன் என்பவனே கி.பி.1620 இல் போர்த்துக்கேயரின் இறுதிப் படையெடுப்பில் கைது செய்யப் பட்டு, கோவாவிற்கு அனுப்பப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்ட யாழ்ப்பாணத்து இறுதி மன்னன். இத்தகவல்களை அறியாத பலரும் இன்றும் கூட பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் சமூகவலைத் தளங்களிலும் பிழையான தகவல்களைப் பரப்பி வருவது வருத்தத்திற்குரியது. 

அத்துடன் மற்றவர் கூறுவது போலவே காக்கை வன்னியன் என்னும் கற்பனைக் கதாபாத்திரம்  இவ் வரலாற்று நூலிலும் வருகின்றது. இவனே சங்கிலியனை காட்டிக் கொடுத்து அவனது மரணத்திற்கு காரணமானவன் என்றும்  கூறுகின்றது. காக்கை வன்னியன் என்னும் பாத்திரத்தை சிலர் பண்டார வன்னியனின் பாத்திரத்துடனும் இணைத்து வரலாறு எழுதுவர். உண்மையில் சங்கிலியன் காலப் பகுதியிலும் பண்டாரவன்னியனின் காலப் பகுதியிலும் இப்படியாக ஒரே மனிதனால் நிச்சயம் வாழ்ந்திருக்கவே முடியாது.  இக் கற்பனைக்கதாபாத்திரம் ஆனது என்றுமே வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு  தலைவலியாகவே இருந்து வந்துள்ளது. வன்னிச்சரித்திரத்தை ஆய்வு செய்பவர்கள் சிலவேளைகளில் பண்டாரவன்னியனின் நடவடிக்கைகள் பற்றி பிரித்தானிய நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து வந்த கதிர்காம நாயக்க முதலியாராக இவன் இருக்கலாம் என்ற ஊகத்தை மட்டும் வெளிப்படுத்துகின்றனர்.

அ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் சாதி வெறியும், அடிமை மனோபாவமும்
அ.முத்துத்தம்பிபிள்ளை அவர்கள் பலத்த சிரமங்களிற்கு மத்தியிலும் ஒரு நல்ல வரலாற்று நூலை எமக்கு வழங்கியுள்ள போதும், இவ் வாசிப்பினூடே இவரது மற்றைய சாதியினர் மீதான ஆதிக்க சாதி வெறியும், பிரித்தானிய நிவாகத்தின் மீதான இவரது அடிமை மனோபாவமும்  ஆங்காங்கே இழையோடுவதை அவதானிக்க முடிகின்றது. நல்லூர் நகர் பற்றி விபரிக்கையில்,

“ நல்லூர் நகரத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வீதி இருந்ததென்பது தெரிகின்றது. அந்தணர்க்கு ஒரு தெருவும் செட்டிகளுக்கொரு தெருவும் .வேளாளர்க்கு ஒரு தெருவும் என இப்படி அறுபத்திநான்கு தெருக்கள் இருந்தன. இந்நகரத்திலே தீண்டா சாதிகளாகிய அம்பட்டர், வண்ணார், பள்ளர், நளவர், பறையர், துரும்பர், முதலியோருக்கு இருக்கையில்லை. அவர்கள் எல்லாரும்  புற சேரிகளிலேயே வசித்தார்கள். அவர்கள் தொழிலும் சரீரமும் இயல்பிலே சுத்தியிள்ளதவர்கள் ஆதலால் சுத்தியுல்லோரால் தீண்டத்தகாதவரானார்கள். இவ்வகை ஒழுக்கத்தினாலேயே தமிழரசர் காலத்தில் பேதி முதலிய கொள்ளை நோய்கள் இல்லாதிருந்தன. இலங்கையிலே கி.பி 1861 க்கு முன்  பேதி என்பது தெரியாதவொரு நோயாகும்.”

இது தீண்டாமைக்கு ஆதரவாக மிகக் கொடுமையாக முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் வைக்கும் வாதம். அத்துடன் கரையூர் பற்றிக் குறிப்பிடுகையில் “ புலால் மனம் நீங்காது நாறிப் புழுத்தொழுகும் பாழுங்குடிசைகள் நிறைந்த கொள்ளை நோயைக் கூவியழைக்கும் இடம்” என ஏளனம் செய்கிறார். மேலும் ஒவ்வொரு சாதியினரும் இவர் இன்ன வகுப்பினர் என்று அறிந்து கொள்ளும் வகையில் வெவ்வேறு ஆடை அணிகலன்களை அணிந்த வரலாறு கூறும் இவர் இவை எல்லாம் போர்த்துக்கேயர் காலத்திலும் ஒல்லாந்தர் காலத்திலும் இல்லாமற் போனதையிட்டு கவலை கொண்டு மீண்டும் ஆங்கில அரசு காலத்தில் மீண்டும் கடைப்பிடிக்கப்பட்டதையிட்டு கழிப்படைகிறார். 

இந்நூலின் கடைசி இருபது பக்கங்களிலும் ஆசிரியர் ஆங்கிலவரசை ஐந்தாம் ஜார்ச் மன்னரை போற்றி போற்றி புகழ்கின்றார். அங்கு அரசின் பிரதிநிதியாக இருந்த டைக் துரையை, ட்வைன் துரையை, பாண்ஸ் பிரபுவை  மற்றும் இன்னோரன்ன பிறரையும் தமிழ்க மக்களை ரட்சிக்க வந்த பாது காவலர்களாக விதந்துரைக்கின்றார்.  

“ஒல்லாந்தவரசு பரங்கியரசுகளில் நமக்குக் கனவிலும் சுயாதீனம் கிடைக்கவில்லை. ஆங்கிலவரசில் நமக்குக் கிடைத்திருக்கும் சுயாதீனம் எத்தனை பெரிது. அது போல ஒரு காலத்தும்  வாய்க்காது. இவ்வரசு போலும் தரும இராஜ்ஜியம் உலகத்தில் இல்லை. நாம் நன்னிலையை அடைய வேண்டுமென்பது  நம்மையாளும் மகாருண்ணிய மகிமாவது ஐந்தாம் ஜார்ச்சு வேந்தர் விருப்பு” – இத்தகையதொரு புகழ் மாலையை பிரித்தானிய அரசு தனது சொந்த மக்களிடமிருந்து கூட பெற்றிருக்குமோ தெரியவில்லை.

வடக்கே சுமார் இருபத்தைந்து மைல்களுக்கும் குறைவான தொலைவில் பாக்கு நீரிணைக்கும் அப்பால் இந்திய மக்கள் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போதும், தென்னிலங்கையில் சிங்களமக்களும் தமது எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்யும் போதும் எப்படி யாழ்ப்பாணத்து மக்கள் இத்தகைய அடிமை மனோபாவத்தில் இருந்தார்கள் என்பது வியப்பிற்குரிய விடயமாகும். இதற்கு இவர்களுக்கு கிடைத்த சலுகைகளும் பதவிகளும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

மேலும்  யாழ்ப்பாணத்தவர் புகழ் பாடும் விதமாக இந்நூல் இங்கு புகழ் பெற்ற சேர்.பொன். இராமநாதன், ஆறுமுகநாவலர், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் புகழ் உரைத்து பின்வருமாறு முடிவடைகின்றது. “ — அங்கனம் வாய்த்த பெருமையால் தருக்குற்ற குடிகளும் அரசும் தமது அறநெறி கடந்து தாமச குணத்தை மேற்கொண்ட கன்மத்தால் வேற்றரசர் கைப்பட்டு துன்புற்று வருந்தியதும், பழைய நல்வினை விசேடத்தால் ஆங்கிலவரசு வந்து  நமக்கு அபயம் தந்து செங்கோல் நடாத்துவதும், அதனால் பழைய சுவாதீனம் பெற்று தாழ்த்து வருவதும் இச்சரித்திரத்தை வாசிப்போர் ஊன்றிச் சிந்திக்கத் தக்கன. யாழ்ப்பாண மாதா மேன்மேலும் வாழி. ஆங்கிலவரசும் மகா காருண்ணிய மகிமாவது ஐந்தாம் ஜார்ச்சு வேந்தரும் நீடூழி வாழி.”

svs_vasan@outlook.com