இணையத்தள அறிமுகம்: திசைகள் – வான் வழியே ஒரு வாசிகசாலை!

எழுத்தாளர் மாலன்– எழுத்தாளர் மாலனின் ‘திசைகள்’ மின்னிதழ் தற்போது ‘வான் வழியே ஒரு வாசகசாலை’ என்னும் தாரக மந்திரத்துடன் இணையத்தில் மின் நூலகமாகப் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றது. ‘திசைகள்’ மின்னூலகத்தினை www.thisaigal.in என்னும் இணைய முகவரியில் பாவிக்கலாம். ‘திசைகள்’ மின்னூலகத்தில் எழுத்தாளர் மாலன் அதனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள அறிமுகக்குறிப்பினைப் பகிர்ந்து கொள்கின்றோம். –


திசைகள் என்பது எனக்கு ஒரு மந்திரச் சொல். எட்டுத் திக்கையும் குறிப்பது என்பது அதற்குச் சொல்லப்படும் வழக்கமான பொருள். ஆனால் என்னைப் பொருத்தவரை அது 360 பாகைகளை (டிகிரியை) குறிப்பது.

தமிழின் விளிம்புகளை இயன்றவரை விரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் சொல். அது.

தமிழ் வெகுஜன இதழ்களை வணிக வெறியும், இலக்கியச் சிற்றேடுகளை கோஷ்டிப் பூசல்களும், மொய்த்துக் கொண்டிருந்ததின் விளைவாக இளந்தலைமுறையினர் இடையே சோர்வும் கசப்பும் முளை கட்டத் தொடங்கியிருந்த நேரத்தில் முதியவர்களைத் தவிர்த்து விட்டு, முற்றிலும் இளைஞர்களைக் கொண்டு நம்பிக்கை விதைக்க முற்பட்ட முயற்சி அச்சுத் திசைகள்

நம்பிக்கையையும் உற்சாகமும் சந்தோஷமும்தான் மனிதர்களையும் பூக்க வைக்கிற விஷயம்… எண்ணற்ற பத்திரிகைகள் மண்டியிருக்கிற இந்த நேரத்தில் திசைகள் இவற்றுக்குத்தான் நாற்றுப்பாவ ஆசைப்படுகிறது…

இது முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், திசைகள் என்ற இளைஞர்கள் பத்திரிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது எழுதிய வரிகள். இத்தனை காலத்திற்குப் பின் திரும்பிப் பார்க்கும் போது, திசைகள் பாவிய நாற்றுக்கள் விளைந்து செழித்து அடுத்த தலைமுறைக்குக் கனிகளையும் கனிகளுக்குள் பொதிந்து வைத்த விதைகளையும் தந்திருப்பதைக் காணமுடிகிறது.

நான் மட்டுமல்ல, பலர் இன்னும் அந்தத் திசைகளைப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் பல்வேறு தருணங்களில் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் சுஜாதா, 2001ஆம் ஆண்டு டிசம்பரில் (29.12.02) ஆனந்த விகடனில் எழுதுகிறார்: ….” இளைஞர்களை முன்னணியாக வைத்து ‘திசைகள்’ பத்திரிகையை சாவி தொடங்கினார். தற்போது பிரபலமாக இருக்கும் பல எழுத்தாளர்களும், சித்திரக்காரர்களுக்ம், ஏன் சினிமா டைரக்டர்கள் கூட ‘திசைகள்’ பள்ளியில் வந்தவர்கள். அதன் ஆசிரியர் மாலன் முதல் இதழிலிருந்தே விஞ்ஞானக் கதைகள் எழுதக் கேட்டுக் கொண்டார். திமலாவில் தொடங்கி பத்துக் கதைகள் எழுதினேன்….. இப்படியே 50 கதைகள் எழுதிவிட்டேன். பிரமிப்பாக இருக்கிறது.இவற்றைத் தொகுப்பாகப் பார்க்கும் போது ஒரு முன்னோடியின் திருப்தி ஏற்படுகிறது “

புதிய இலக்கிய வடிவங்கள், நவீன ஓவியங்கள், அதுவரை தமிழில் அறியப்படாத இதழியல் உத்திகள், புதிய திறமைகள் இவற்றிற்கெல்லாம் அந்தத் திசைகள் ஒரு விளைகளனாக இருந்தது. வடிவங்களும் வார்த்தைகளும் என்னவாக இருந்தாலும் அதன் அடி நாதமாக நம்பிக்கையும், உற்சாகமும் தருவதே அதன் நோக்கமாக இருந்தது.

நீண்ட காலம் வாழ முடியாமல் போனது என்றாலும், அன்றையச் சூழலில் தமிழுக்குப் புதிய இதழியல் அணுகுமுறையை அச்சு இதழாக மலர்ந்த திசைகள் அளித்தது.

தமிழ் யூனிகோட் நடைமுறைக்கு வந்து தமிழ் கணிமை ஒரு நவீன உலகை நோக்கி ஒரு பாய்ச்சலை நிகழ்த்த இருந்த தருணத்தில், தொழில்நுட்பத்தின் வலிமைகளை ஊகித்துக் கூட அறிய இயலாத சிலர், அழுகையும் முனகலுமாகத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என்று ஆங்காங்கே கவலை கொண்டு அரற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ் ஓர் உலக மொழி என்பதை இணையம் மூலம் நிறுவ வேண்டும் என்ற வேட்கை எழுந்த போதும் நினைவில் வந்த சொல் திசைகள்தான்.

நமக்குத் தேவை நம்பிக்கை. நாம் தனித்துப் போய், ஒற்றை மரத் தோப்பாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிற மனம். உலகம் முழுதும் பரவிக் கிடக்கிற நாம் ஒன்று சேர்ந்தால், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால், நம் தாய் மொழி தழைக்கும் என்ற ஊக்கம்.இதை இந்தத் திசைகள் விதைக்கும்.

ஒரு காலத்தில் இளைஞர்கள் என்ற ஒரு பிரிவினருக்காகத் தோன்றிய திசைகள் இப்போது ஓர் உலகு தழுவிய இதழாக மலர்கிறது. இதற்கு எந்த நாட்டிலிருந்தும் நீங்கள் எழுதலாம். இதை எந்த நாட்டிலிருந்தும் வாசிக்கலாம். எந்தக் கணினியின் உதவியோடும் வாசிக்கலாம். எந்த இயங்கு தளமாக இருந்தாலும் சரி, இதைப் படிக்க இயலும். உங்களை இணையத்திற்கு இட்டுச் செல்லும் ஏணி (browser) எதுவாக இருந்தாலும் இதைப் படிக்க முயலும். எழுத்துருக்கள் எதையும் இறக்கிக் கொள்ள தேவையில்லை. திசைகள் முழுமையான உலகு தழுவிய இதழ் (truly universal) யூனிகோட் குறியீட்டில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழும் இதுதான்.

வாருங்கள் இந்த மின் வெளியில் கை கோர்த்துக் கொள்வோம். காலாற நடப்போம்.நேசமாய்ப் பேசுவோம். நெஞ்சார சிரிப்போம். நம்பிக்கை விதைப்போம்.

வெற்றியின் திசை நோக்கிய பயணத்தில் இன்று முதலடி வைக்கிறோம். சுவடுகள் பின்னால் வரும்.

என்று 2003 மார்ச்சில் திசைகள் மின்னிதழாக மலர்ந்த போது அதன் முதல் இதழில் எழுதினேன்.

தமிழ் யூனிகோட் நடைமுறைக்கு வந்த போது, தேடு பொறிகளின் பருந்துப் பார்வைக்குள் அகப்படும் அளவிற்கு, யூனிகோடில் அமைந்த தமிழ் இணைய தளங்கள் எண்ணிக்கையில் அதிகமில்லை. அதனால் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று திசைகள் மின்னிதழ் முயற்சித்தது. யூனிகோடைக் கொண்டு தமிழில் வலைப்பூக்கள் எழுத முடியும் என்பதை அறிமுகப்படுத்தி விளக்கி எழுதிய அதே நேரம் நம்முடைய தொல்லியல்,கலைச் செல்வங்களையும் அது ஆவணப்படுத்திக் கொண்டிருந்தது

இன்று இணையத்தில் தமிழ் அருகுபோல் வேரோடி, ஆல் போல் தழைத்து நிற்கிறது. வலைப் பூக்களையும் தாண்டி வெகு தூரம் வந்து விட்டோம்.

இணையத்தில் தமிழ் தழைத்திருக்கிற இந்த நேரத்தின் தேவை, அந்த எழுத்துக்கள் உதிரி உதிரியாகச் சிதறிப் போய்விடாமல் அவற்றை ஒரு வளமாகத் தொகுப்பது. நிகழ்கால நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவும், எதிர்காலத்திற்கு இவற்றை ஓரிடத்தில் சேமித்து வைக்கவும் ஓர் களஞ்சியம் தேவை.

அதுதான் இந்தத் திசைகள். இது வித்தியாசமானது.தனித்துவமானது

தமிழின் செவ்வியல் இலக்கியம், இடைக்காலப் பக்தி இலக்கியம் இவற்றைச் சேமித்து வைத்துள்ள இணைய தளங்கள், சமகாலத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்களை வருடி (Scan) சேர்த்துள்ள தளங்கள், நவீனச் சிறுகதைகளை சேகரித்து வைத்துள்ள தளங்கள், மின்னூல்களை பதிப்பிக்கும் தளங்கள், வலைப்பூக்கள், செய்தித் தளங்கள் என ஒற்றைப் பரிமாணத்தில் கட்டமைக்கப்பட்ட தளங்கள் எனப் பல இணையதளங்கள் உணடு. ஆனால் மின்நூல் பதிப்பு, ஆவணக் களஞ்சியம், மின்னிதழ் தொகுப்பு, செய்திகள், வலைப்பூக்கள் என எல்லாவற்றையும் ‘ஒரு கூரை’க்குக் கீழ் கொண்ட, அவற்றை இலவசமாகப் வாசிக்க அளிக்கும் தளம் திசைகள். சுருக்கமாகச் சொன்னால்-

இது வான் வழியே உங்களை வந்தடையும் ஒரு வாசகசாலை. இந்த வாசகசாலையை உங்களுடன் எங்கும் எடுத்துச் செல்லலாம். எந்த நேரத்திலும் படிக்கலாம். இதற்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம்.

இது மின்பதிப்பு (e-publishing) மின் சேமிப்பு (e-archives) மின் எழுத்து, மின் செய்தி (news feed) என்று நான்கு தூண்களில் எழுந்து நிற்கும்

மின் பதிப்பு முயற்சியின் கீழ் மின் நூல்கள் பதிப்பிக்கப்படும். சொல் சார்ந்தவை (text based) , ஓவியங்கள், புகைப்படங்கள் கொண்டு மெருக்கூட்டப்பட்டவை (image based), காணொளிக் காட்சிகள் கொண்டவை (video books) என்று எல்லா வகையான நூல்களும் பதிப்பிக்கப்படும். பார்வைத் திறனை இழந்தவர்களும் நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் ஒலிப் புத்தகங்களும் (audio books) வெளியிடப்படவுள்ளன. (முதலில் ஆங்கிலத்தில். தமிழ்ப் பிரதிகளை குரல் வழியே தரும் மென்பொருட்கள் தொடர்பாக வல்லுநர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறோம்)

சொல் மாத்திரம் சார்ந்த (text based) நூல்களைப் பதிப்பிக்க எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மற்ற வகை நூல்கள் அதி நுட்ப தொழில்நுட்பங்களைக் கோருவதால் அவற்றைப் பதிப்பிக்க ஆகும் செலவை பிரதிகள் அனுப்புவோர் ஏற்க வேண்டும்.

வாசகர்கள் இலவசமாக நூல்களை வாசிக்கும் வசதி செய்வதே நோக்கம் என்பதால் விலை குறிப்பிடும் நூல்களை ஏற்பதற்கில்லை. எழுத்தை பொருளீட்டும் ஒரு வாய்ப்பாகக் கருதாமல், அறிந்தததைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகக் கருதுபவர்களை இதில் பங்கேற்க மகிழ்வோடு அழைக்கிறோம். இது புத்தகச் சந்தை அல்ல. நூலகம். உலகமும் முழுதும் பரவிக் கிடக்கும் வாசகர்கள் நூல்களை வாசிக்கும் வாய்ப்பளிக்கும் தலம்.

படைப்பிலக்கிய நூல்களை மாத்திரம் பதிப்பிப்பது என்று எங்கள் எல்லைகளைக் குறுக்கிக் கொள்ளப் போவதில்லை. திசைகள் மின்னிதழைப் போலவே அரசியல், அறிவியல் வரலாறு, தொல்லியல், வணிகம், சுயமுன்றேற்றம், வேளாண்மை என எந்தப் பொருள் குறித்தும் தரமாக எழுதப்படும் நூல்களைப் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளோம். எனினும் எந்த ஒரு நூலையும் பதிப்பிற்கு ஏற்பதில் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது

இங்கு பதிப்பிக்கப்படும் மின்னூல்களைப் படிக்க உங்களுக்குத் தனியே எந்த கருவியும் தேவைப்படாது. உங்கள் மேசைக் கணினியிலோ, மடிக்கணினியிலோ, டேப்லெட்களிலொ, கைபேசிகளிலோ கூட நீங்கள் படிக்கலாம். எந்த நூலையும் நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டியிராது என்பதால் உங்கள் நினைவகம் (memory) ஆக்கிரமிக்கப்படாது.

இந்தத் தளம் வெறும் மின்நூல்களைப் பதிப்பிக்கும் தளம் மட்டுமல்ல. என்றென்றும் பாதுக்காக்கப்பட வேண்டியவை எனக் கருதப்படுபவற்றை சேமித்து வைக்கும் களஞ்சியமும் கூட. குரல், காட்சி, ஆவணங்கள் ஆகிய மூன்று வடிவங்களும் காப்பகத்தில் இடம் பெறும்

கடந்த காலத்தின் பதிவுகளை மட்டுமல்லாமல் நிகழ்கால சம்பவங்கள் குறித்த எழுத்துக்களுக்கும் இடமளிக்க உள்ளோம். வலைப்பதிவுகள் என்ற பகுதி அதற்கு வாய்ப்பளிக்கும். இதைக் குறித்து அறிந்து கொள்ள மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க

உலகின் பல பகுதிகளிலிருந்தும் வெளியாகும் மின்னிதழ்களை வாசிப்பதற்கான ஒரு வாயிலாகவும் திசைகள் விளங்கும். மின்னிதழ் வெளியிடுபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கங்கள் பெறலாம்.

இவற்றைத் தவிர புதிதாக வெளியாகும் நூல்கள், நூல்கள் குறித்த அறிமுகங்கள், இலக்கிய, சமூக நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள், எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த உரைகள், நேர்காணல்கள் இவற்றையும் நீங்கள் இங்கு காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு நூலகம். வான் வழியே உங்கள் உள்ளங்கைக்குள் வந்திறங்கும் நூலகம் எந்த விதக் கட்டணமும் இன்றி .இலவசமாக நீங்கள் வந்து பயன்பெறுவதற்கான ஓரு தல(ள)ம்.

உங்களை உள்ளன்போடு வரவேற்கிறோம்

அன்புடன்
மாலன்
நிறுவனர் -திசைகள்