இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்

முனைவர் மணிகண்டன்அகராதிகள், கலைச்சொற்கள் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் அந்தந்தக் காலக்கட்ட மொழியின் இயல்பிற்கும் ஏற்ற வகையில் வளர்ந்து வரும் துறையாகும். மொழிக்கு இன்றியமையாதது அகராதிகள் என்று கூறினாலும் அதன் காலத்தை உணர்ந்து புதிய புதிய சொல்லாட்சிகளை உருவாக்கித் தொகுத்து நூலாக வெளியிட்டனர். இஃது ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இன்று கணிப்பொறி இணையம் காலத்தில் நாம் இருப்பதால் அதற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சியை நம் செம்மொழித் தமிழ் பெற வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் இணையத்தில் தமிழ் மின் அகராதி என்ற ஒரு பகுதியைத் தமிழ் ஆர்வலர்கள், நூலக உரிமையாளர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.  மின் உலகில் தமிழ்மொழி சார்ந்த மின் அகராதிகள் எழுபத்தைந்து (75) உள்ளன. இவைகளின் பணிகள், எந்தெந்த மின் அகராதிகள் தமிழில் உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.

இணைய அகராதி  அல்லது மின் அகராதி
 
இணைய அகராதி அல்லது மின் அகராதி என்பது பொதுவாக உருவாக்கப்பட்ட ஓர் அகராதியை இணையத்துடன் இணைத்துக் கணினியின் மூலம் தரவுகளைப் பெறுவதாகும்.
 
இணைய அகராதி என்பது ஆங்கிலத்தில் (Online Dictionary) என்று பொருளாகக் கொள்ளலாம்.  இந்த ஆன்லைனுக்கு இணையாகத் தமிழில் கலைச்சொற்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன.  அவை உடன்நிகழ், தொடரறா, நேர்முகம், நேரடி என்பன.  எளிமையும் பயனும் கருதி இணையம் என்ற கலைச்சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமிழ் இணையக் கல்விக்குழுமம்
 
தமிழ் இணையக் கல்விக்குழுமத்தால் தோற்றுவிக்கப்பட்ட கலைச்சொல் மின் அகராதி இது. ஆய்வாளர்களுக்கும், மொழி அறிஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இதில் சமுதாயவியல் சார்ந்த சொற்களை நாம் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.  இவை போன்று மருத்துவயியல், கால்நடை மருத்துவவியல், உயிர்தொழில்நுட்பவியல், கலை மற்றும் மானுடவியல், தகவல் தொழில்நுட்பவியல், வேளாண்மைப் பொறியியல், அறிவியல், சட்டவியல், மனை இயல், த.இ.க. கலைச்சொல் பேரகராதி என்று ஒவ்வொரு துறையையும் பகுதி வாரியாகப் பிரித்துக் கொடுத்துள்ளனர்.

தொழில் நுட்பம்
 
தொழில் நுட்பம் மின் அகராதியில் தமிழ் மின்னியல், மின்னணுவியல், கணினியியல் சொல் அகராதி சிறந்த பல கலைச்சொற்களைத் தருகிறது.  எந்தெந்த துறையைச் சார்ந்தவரும் தனது கருத்தை வெளியிடவும் எழுத்தாளர்களும் அவரவர்களுக்குத் தேவையான கலைச்சொல்லினைப் பெற்றுக் கொள்ள இயலுகிறது.
 
கணிப்பொறி, மின்னணுவியல், மின்னியல் போன்ற துறைகள் கலைச்சொற்கள் இம் மின் அகராதியில் அதிகம் இடம்பெற்றுள்ளன.  நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் ((Glosary of Modern Tamil) என்ற பகுதியில் ஆங்கில எழுத்து வரிசைப்படி (A-Z) ஆங்கிலச் சொல்லுக்கு இணையானத் தமிழ்ச் சொல்லை அட்டவணைப்படுத்தியுள்ளனர்.

 எ.கா: Active Device  – செயல்படுச்சாதனம்
  Battery   – மின்கலம்
  Cable   – வடம்
  Element  –  தனிமம்
  File   – கோப்பு
  Gain   – பெருக்கம்
  Hard Disk  –  நிலைவட்டு

தென்னாசிய மின் அகராதி (Digital Dictionaries of South Asia)
 
இந்திய அரசுக் குழுமத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஆசிய மொழிகளின் கூட்டு அகராதியே தென்னாசிய மின் அகராதி ஆகும்.  இதில் தமிழ், அசாமி, பலுசி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, காசுமீரி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒரியா, பாலி, பஞ்சாபி, பெர்சியன், இராசத்தானி, வடமொழி, சிந்தி, தெலுங்கு, உருது மொழி அகராதிகளும், பர்ரோ, எமனோவின் திராவிட வேர்ச்சொல் அகராதி என 26-மொழி அகராதிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் மொழி அகராதி
 
தென்னாசிய மின் அகராதியில் தமிழ்மொழி அகராதி முதன்மையிடம் பிடித்திருக்கிறது.  பெப்ரியசு அகராதி, கதிரைவேற் பிள்ளை அகராதி, ஆல்பின் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக அகராதி, வின்சுலோ அகராதி என ஐந்து தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

எடுத்துக்காட்டாக, நாம் ஒரு சொல்லைக் கொடுத்தால் Gift –கொடை, favour – அருள், desire – ஆசை, Love – அன்பு, civility – உபசாரம், poverty – வறுமை
என்று நாம் கேட்கும் சொல்லுக்குக் கனநேரத்தில் பொருளை தேடிக் கொடுக்கின்றன.  இந்த மின் அகராதி ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மதுரம் மின் அகராதி
 
மதுரம் மின் அகராதியில் பதினைந்து இலக்கணக் கூறுகள் இடம் பெற்றுள்ளன.
 
1. பெயர், 2. வினை, 3. பெயரடை, 4. வினையடை, 5. துணைவினை, 6. சொல்லுருபு, 7. இடைச்சொல், 8. விளப்பு இடைச்சொல், 9. சுட்டுப்பெயர், 10. சுட்டுப்பெயரடை, 11. எதிர்மறை வினைமுற்று, 12. வினைப்பெயர், 13. வினைப்பெயரடை, 14. வினைமுற்று, 15. இடை என்பனவாகும்.
 
இதில் ஒரு கலைச்சொல் அல்லது ஒரு தமிழ்ச் சொல்லைக் கொடுத்தால் அதனைக் கொண்டு நமக்குத் தேவையான சொற்களைப் பெறலாம்.  எந்த வகையான சொல்லையும் உள்ளீடாகக் கொடுக்கலாம்.  மேலும் சொல்லுறுப்பு என்னும் இலக்கணக் கூற்றுடன் உலா வரும் ஒரே மின் அகராதி என்ற பெருமை மதுரம் அகராதிக்கு உண்டு.

தமிழ் விக்சனரி
 
தமிழுக்குப் பல ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்யும் தமிழ் விக்கிப்பீடியாவின் அகராதியின் பெயர் ‘தமிழ் விக்சனரி’.
 
விக்கிப்பீடியா தளம் உலகு தழுவிய தகவல் தளமாக விளங்குகிறது.  2001-ஆம் அண்டு ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டது.  வெகுவாக உலக அளவில் சுமார் 267-மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தொகுத்துத் தருகின்றன.  இதன் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன.  172 மொழிகளுக்கான விக்சனரிகள் இதில் செயல்படுகின்றன.  அகரவரிசைப்படுத்தப்பட்ட அகராதிகள், சொற்களஞ்சியங்களைக் கொண்டுள்ளன.
 
தமிழ்ச்சொற்களுக்குப் பொருள் தரும் முயற்சியாக 2004-இல் தொடங்கப்பட்ட இது, இன்று 1,918257 – சொற்கைளக் கொண்டு (18.11.2010) உலக இணைய அகராதியின் வரிசையில் 10-ஆம் இடத்தில் உள்ளது.
 
தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்ற வரிசையிலும், ஆங்கிலம் – தமிழ் என்ற வரிசையிலும் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.  தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன், இந்தி, மலையாளம், கன்னடம், சிங்களம்) உள்ளன.  ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளன.
 
அப்பா, அல்லது தமிழ் என்ற சொற்களை பற்றிய பகுதியாக இருக்கும் பக்கத்தில் அப்பா என்ற சொல்லுக்குரிய சொற்பிறப்பு, பெயர்ச்சொற்கள் என்ற இரண்டு பெரும்பிரிவில் செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.  சொற்பிறப்பு விவரிப்பதற்குத் தலைப்பும் உள்ளது.
 
கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ் என்ற இரு வகையில் சொற்கள் பகுக்கப்பட்டுள்ளன.  தமிழ் அகராதி என்ற பகுப்பில் பழந்தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள சொற்கள் குறித்த அகராதியாக இப்பகுதி உள்ளது.

கூகுள் ஆங்கிலம் – தமிழ் மின் அகராதி
 
கூகுள் தமிழ் ஆங்கில மின் அகராதி தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது.  வழக்கமான நிலையிலிருந்து, சொற்களுக்கேற்ற பொருளை மட்டும் காட்டாமல், பட விளக்கத்தினையும் தருகின்றது.  தொடக்க நிலையில் தமிழ் கற்பவர்களுக்குச் சிறந்த துணைவனாக இந்த மின் அகராதி செயல்படுகிறது.

தமிழ் டிக்சனரி 

ஆங்கிலம் – தமிழ் – செர்மன் மொழியில் அமைந்துள்ள இம்மின் அகராதி சிறப்பு வாய்ந்தது.  ஆங்கிலச் சொற்களை உள்ளிட்டால் அதற்கு இணையான தமிழ்ச்சொல்லும், பொருளும் வரும்.  உடனே செர்மன் மொழிப் பொருளும் தருகின்றன.  மேலும் தூய தமிழ்ச்சொற்களே மின் அகராதியில் இடம் பெற்றுள்ளன.  இது பல்வேறு தேடுதல் வசதிகள் கொண்டிருக்கிறது.  ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – செர்மன், செர்மன் – தமிழ் என்ற வகையில் இடம் பெற்றிருப்பதால் மாற்று மொழியையும் அதன் சொற்கூறுகளையும் இம்மின் அகராதியினால் நாம் பெற்று பயனடையலாம்.

ஆங்கிலம்-சிங்களம்-தமிழ் மின் அகராதி
 
தமிழ் டிக்சனரி போன்றே இந்த மின் அகராதியும் ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சிட்டால் அதற்குரிய சிங்களமொழிச் சொல்லையும், தமிழ்ச் சொல்லையும் தருகின்றது.  பயன்பாட்டில் ஆங்கிலச் சொற்களுக்குரிய சிங்களச் சொற்கள், தமிழ்ச் சொற்களின் விளக்கமும் உள்ளன.  ஆங்கில மொழியில் ஆங்கிலச் சொற்கள் உள்ளன.  இதில் 28,335 சொற்களுக்குரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பால்சு அகராதி
 
பழநியப்பா நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட இந்த மின் அகராதியில் ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் அகராதியும், தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதியும் உள்ளன.
 
இந்த அகராதி சுமார் 22,000 முக்கியச் சொற்களையும் மற்றும் 35,000 வழி சொற்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு சொற்களின் பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் அனைத்து சொற்களும் அதற்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் அதற்கான சொற்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த அகராதியில் சில பயனுள்ள தகவல்களான சுருக்கங்கள், இயல்பில்லா வினைச்சொற்கள், கோணங்களின் ஒப்பீடு மற்றும் கிரேக்க எழுத்துக்கள் போன்றவை உள்ளன.

தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதி
 
இந்த அகராதியில் 49,000 சொற்கள் உள்ளன.  இதிலும் நாம் தேடும் சொற்களுக்கு நிகரான ஆங்கிலம் அல்லது தமிழில் வெளிவரும்.  மேலும், விரிவாகத் தேடும்முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்துப் பொருளையும் கொடுக்கிறது.
 
இது தமிழ் இணையக் கல்விக் குழுமத்துடன் இணைக்கப்பட்டுச் செயல்முறையில் உள்ளது.

பயன்பாடு
 
இணையத்தில் மின் அகராதிகள் இடம் பெற்றதால் ஆய்வாளர்களும், மொழியியல் வல்லுநர்களும் பிறமொழியாளர்களும் பெரிதும் பயன்பாடு அடைகின்றனர்.

1. அச்சில் வெளிவந்த அகராதிகளைத் தேடி வாங்க வேண்டும்.  அது கிடைத்தால் உண்டு.  இன்று இணைய மின் அகராதியால் இது   உடைக்கப்பட்டு எளிமையாக நாம் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளன.
2. நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.  கால விரயம் இல்லை.
3. ஒரு அகராதியைக் கொண்டு பொருள் தேட வேண்டிய அவசியம் இல்லை. மின் அகராதியில் பலமொழி அகராதிகளைத் தமிழிலும், பிற   மொழியிலும் கண்டு உணரலாம்.
4. தமிழ் மின் அகராதியால் உலகத் தமிழர்கள் அதிகம் பயன்பாடு அடைகின்றனர்.
5. மின் அகராதியில் துறைவாரியாகச் சொற்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். இது சொற்களைத் தேடுபவர்களுக்கு எளிமையாக   இருக்கிறது.
6. உலக மின் அகராதியில் தமிழ் மொழிக்கு நல்ல வரவேற்பைத் தேடித் தந்துள்ளது.
7. ஒரு சொல்லுக்குப் பல மொழியில் விளக்கம் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
8. நாம் அனைவரும் மின் அகராதிக்கு நமக்குத் தெரிந்த வழக்குச் சொல், வட்டாரச் சொல்லை இணையத்தில் குறிப்பிட்ட மின் அகராதியில்   (தமிழ் விக்சனரி) பதிவேற்றம் செய்து மொழிக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும் விதத்தில் செய்யலாம். 
9. மின் அகராதியால் உலகப் பல்கலைக்கழகத் தொடர்பும் மாற்று மொழியைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதிகரிக்கிறது.
10. பல புதிய மின் அகராதிகளைத் தமிழக அரசோ, அல்லது நாமோ உருவாக்கிப் புதிய புதிய சொற்களை இணைக்க வேண்டும்.    அப்பொழுதுதான் தமிழின் மேன்மை உலகுக்குத் தெரிய வரும்.
11. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தங்கள் பகுதியில் உள்ள சொற்களைத் தொகுத்துப் பொருள் விளக்கத்துடன் அவரவர்கள் நிறுவன   வலைதளங்களில் பதிவிட்டாலே போதும்.  இது மின் அகராதியின் வளர்ச்சிக்கு நல்ல பயணமாக இருக்கும்.  தமிழுக்கும் பேருதவியாகவும்   இருக்கும்.
12. தமிழ் மின் அகராதிகளை ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட அயல் மொழிகளில் சொற்களுக்கான விளக்கங்களைக் கொடுக்கும்   செயல்பாட்டை இணையத்தில் தோற்றுவிக்க வேண்டும்.
 
 mani kandan <mkduraimani@gmail.com