இந்தியா: ஆட்சியில் இருந்தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறியது திமுக!

கலைஞஎ மு.கருணாநிதிகுதிரையைக் குளத்துக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். ஆனால் குதிரையைத் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. அது தானாகத் தண்ணீர் குடித்தால்தான்  (Well, you can lead a horse to water, but you cannot make him drink) உண்டு. இது ஒரு ஆங்கிலப் பழமொழி.  ஒருவர் தனது மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் செய்வார். எடுத்துக் காட்டாக ஒருவருக்கு விமானப் பயணத்துக்குரிய சீட்டை வாங்கி அவரை விமானநிலையத்துக்கு உரிய நேரத்தில் அழைத்துச் சென்று அவரை விமானத்தில் ஏற்ற ஒருவர் முயற்சி செய்யலாம். ஆனால் அந்த ஆள் விமானத்தில் ஏற மறுத்தால் அவரை ஒன்றும்  செய்ய முடியாது. சென்ற ஆண்டு அய்.நா. மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை   இந்தியா முதலில் எதிர்த்தது. “தனியொரு உறுப்பு நாடொன்றைக் குறிவைத்துக்  கொண்டுவரப்படும் தீர்மானம் எதனையும் இந்தியா எதிர்க்கும். காரணம் அய்.நா. மனித உரிமை பேரவையின் ஆக்க பூர்வமான பேச்சு வார்த்தையையும் கூட்டு அணுகுமுறையையும் அது பலவீனப்படுத்தும் (India said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC.) என இந்தியா வாதிட்டது.

சிறீலங்காவைப் பன்னாட்டு சமூகத்தின் தலையீட்டில் இருந்து காப்பாற்றும் நோக்கோடு அமெரிக்கா கொண்டு வந்த  தீர்மானத்தில் ஒரு முக்கிய வாசகத்தைச் சேர்த்துக் கொள்ள இந்தியா அமெரிக்காவை நிர்ப்பந்தித்தது.  அய்.நா. மனித உரிமை அவை போர்க்குற்றம் தொடர்பாக சிறீலங்காவுக்கு அறிவுரை மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கலாம் ஆனால் அவை சிறீலங்கா அரசோடு கலந்தாலோசித்து அதன் இசைவோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் (UNHRC can provide advice and technical assistance “in consultation with, and with the concurrence of, the government of Sri Lanka) திருத்தமாகும்.  இந்தத் தீர்மானம் கொலை செய்தவனை விசாரித்து தண்டிக்க வேண்டும் என்றால் அவனோடு கலந்தாலோசித்து அவனது இசைவோடு செய்ய வேண்டும் என்று சொல்வதற்குச் சமமாகும்.  இந்தத் திருத்தத்தின்  பின்னரே இந்தியா தீர்மானத்தை வேறு வழியின்றி ஆதரித்து வாக்களித்தது.

இந்தியா ஆதரித்து வாக்களித்தாலும் அது மனப்பூர்வமாக எடுத்த முடிவு அல்ல. வேண்டா வெறுப்பாக எடுத்த முடிவு.  வாக்கெடுப்பு எடுத்து முடிந்த கையோடு இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் சிறீலங்காவின் சனாதிபதி மகிந்த இராசபக்சேயிடம்  மன்றாடும் பாணியில் மார்ச்சு மாதம் 24 ஆம் நாள் ஒரு கடிதம் எழுதினார். அதில் “அ.நா.மனித உரிமைப் பேரவையில்  கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றி நான் எமது தூதுக்குழுவுக்கு விடுத்த அறிவுறுத்தலில் மேற்கொண்டு நேர்மறையில் பயணிப்பதற்கு சிறீலங்கா தூதுக் குழுவோடு தொடர்பில் இருக்குமாறு பணித்துள்ளேன். தீர்மான வாசகத்தில் சமன் நிலை ஏற்படுத்த நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதில் வெற்றிபெற்றதையும் மாண்புமிகு சனாதிபதி அவர்கள் அறிந்திருப்பீர்கள்” (With regard to the matter of the resolution in the UN Human Rights Council, I had instructed our delegation to remain in close contact with its Sri Lanka counterparts in an attempt to find a positive way forward. Your Excellency would be aware that we spared no effort and were successful in introducing an element of balance in the language of the resolution.) என்று எழுதியிருந்தார். (http://www.ndtv.com/article/india/full-text-pm-manmohan-singh-writes-to-lankan-president-rajapaksa-189651)

மன்மோகன் சிங்கின் மன்றாடக் கடிதம் இந்தியா தமிழர்களோடு  ஓடிக் கொண்டு  சிங்களவர்களோடு வேட்டையாடுவதை எடுத்துக் காட்டியது. 

அமைச்சர் மயித்திரிபால சிறிசேனா இந்தியாவின் திருத்தத்தை வரவேற்றுப் பேசினார். இந்தத் திருத்தம் சிறீலங்காவை “அ.நா. அவையின் அமைப்புகளின் தலையீட்டில் இருந்து”  காப்பாற்றி இருப்பதாகக் கூறினார். 

இந்தியா தமிழர்களது சிக்கலில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஏன் நடந்து கொள்கிறது என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

இந்தியாவை மதியாத சிறீலங்கா அரசைக் காப்பாற்ற ஏன் பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் சல்மான் குர்ஷ்டியும் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் என்பதற்கான காரணம் அல்லது காரணங்கள் தெரியவில்லை.

போர்க் காலத்தில் இந்திய அரசு,  சிறீலங்கா அரசு தமிழ்மக்களுக்கு அதிகாரப்பரவல் மூலம் வடக்கு கிழக்குக்கு தன்னாட்சி உரிமை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது.  தமிழர்கள் ஏனைய இனத்தவர் போல் சமவுரிமைகளுக்கு உரித்துடையவர்கள் எனச் சொல்லியது. அவர்கள் கண்ணியமாகவும் தன்மானத்தோடும் வாழ வழி செய்யப்பட வேண்டும் என்றும் சொல்லியது. போருக்குப் பின்னரும் எஸ்.எம். கிருஷ்ணா போன்ற அமைச்சர் ஒருமுறைக்கு பலமுறை அவ்வாறு சொன்னார்.

மகிந்த இராசபக்சேயும் போர் முடிந்தபின் இனச் சிக்கலுக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று சொல்லி வந்தார். இதனை இந்தியா உட்பட எல்லோரும் நம்பினார்கள். ஆனால் போர் முடிந்து 4 ஆண்டுகள் முடியும் தறுவாயில் மகிந்த இராசபக்சே இன அடிப்படையில் நிருவாகம் அமைக்க முடியாது என்று கடந்த பெப்ரவரி 4 ஆம் நாள் திருகோணமலையில் நடந்த 65 ஆவது சுதந்திர நாள் செய்தியில் சொன்னார். இதன் பின்னரும் எதற்காக? யாருக்காக? இந்திய அரசு மகிந்த அரசைக் காப்பாற்ற முயற்சிக்கிறது?

சென்றமுறை அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா நீர்க்கச் செய்தது. அதன் விளைவு கற்றபாடங்கள் மீளிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. வடக்கில் படைக்குறைப்பு,  சிவிலியன்களிடம் ஆட்சிப் பொறுப்பு, வடமாகாண சபைக்குத் தேர்தல், இடம்பெயர்ந்த தமிழ்மக்களது மீள்குடியிருப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை அல்லது அவர்கள் மீது சட்டநடவடிக்கை, காணாமல் போனோர் பற்றிய தரவுகள் எதனையுமே சிறீலங்கா செய்யவில்லை. 

காவல்துறையைப் பாதுகாப்பு அமைச்சில் இருந்து விடுவித்து பொதுநிருவாக அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஒரு நாள் போதும். ஆனால் மகிந்த இராசபக்சே அதனைச் செய்யவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணியோடு ஆன பேச்சு வார்த்தையை இழுத்தடித்துப்  பின்பு அதையும் கைவிட்டது.

இவை கூடப் பருவாயில்லை. மகிந்த இராசபக்சே அரசு கற்றபாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றான அதிகாரப் பரவலாக்கல் பற்றி எதிர்மறைவான நிலையை எடுத்துள்ளது. 

தமிழ்மக்கள்  அவர்களது தகப்பன் தாய், பாட்டன் பாட்டி ஆண்டாண்டு காலமாக, வாழையடி வாழையாக  தொடர்ச்சியாக வாழ்ந்து வந்த  வீடுவளவுகள், காணிகள், தோட்டங்கள், கமங்கள் அபகரிக்கப்படுகின்றன.

இடம்பெயர்ந்த சுமார் 94,000 பேர்கள் போர் முடிந்த பின்னரும் அவர்களது சொந்த வீடுவாசல்களில மீள் குடியமர்த்தப்படவில்லை. காரணம் அந்த மக்களுக்குச் சொந்தமான வீடுவளவுகளை இராணுவம்  ஆக்கிரமித்துள்ளது. 

வலிகாமம் வடக்கு 24 கிராம சேவையாளர் பிரிவுகளும் வலிகாமம் கிழக்கில் 3 கிராம சேவகர் பிரிவுகளுமாக மொத்தம் 27 கிராம சேவகர் பிரிவுகள் யாழ்.குடாநாட்டில் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இராணுவம் மக்களை மீள்குடியமர அனுமதித்த பிரதேசங்களில் 17 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன.  எஞ்சியுள்ள உள்ள 4 ஆயிரத்து 857 குடும்பங்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை. 

முப்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் மீளக்குடியமர முடியாமல் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு உயர்பாது காப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு படைத்தரப்பும் கடற்படையும் கட்டாயப்படுத்துகின்றன. 

பலாலி, மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கவுள்ளது. பலாலி விமானத்தளம் விரிவாக்கம் மற்றும் காங்கேசன் துறை துறைமுக அபிவிருத்தி ஆகியவற்றிக்காக இக்காணிகள் சுவீகரிக்கப்படுவதாக இராணுவம் கூறுகிறது. 

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 23 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 7,410 ஏக்கரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 370 ஏக்கரும் இதில் அடங்குகிறது.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் சுமார் 2,200 ஏக்கர் நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் மக்களை அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் மீள்குடியேற்றுவது சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குத்தொடுவாய் வடக்கு, கரடிக்குளம் கிராமத்தில் 500 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்காக 500 அரை நிரந்தர வீடுகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மத்தியில் இராணுவ முகாம் ஒன்றை புதிதாக அமைப்பதற்காக 5 ஏக்கர் காணியை உடனடியாக வழங்குமாறு இராணுவம் பொது மக்களை அச்சுறுத்துவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.  இங்கே சுமார் 70 தமிழ்க் குடும்பங்கள் 1984 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகின்றன. 

மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவம் தலையிடுகிறது. வட கிழக்கில் இராணுவ ஆட்சியே தொடர்கிறது. ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ தளபதிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். திருகோணமலை, மன்னார், அம்பாரை, வவுனியா மாவட்டங்களுக்கு அரசாங்கம் சிங்களவர்களை அரச அதிபர்களாக நியமித்துள்ளது. இந்த நியமனங்கள் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தவே செய்யப்பட்டுள்ளன.

இந்திய நாடாளுமன்றத்தில்  தமிழ்நாடு வேண்டுமா? சிறீலங்கா வேண்டுமா? என்பதை இந்திய அரசு தீர்மானிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காட்டமாகப் பேசியிருக்கிறார். தமிழ்மக்கள் என்று வரும்போது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது. இந்தச் சூழலில் கலைஞர் கருணாநிதி தொடர்ந்து அரசில் இருப்பதில் அர்த்தமில்லை என்று பலர் நினைக்கிறார்கள்.  அதுதான் உண்மை. அரசில் இருந்து கொண்டு கலைஞர் கருணாநிதி வீதியில் இறங்கிப் போராடுவது ஒரு நாடகம் என அவரது எதிரிகள் வருணிப்பதற்கு அதுதான் காரணம். அந்தக் குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எடுபடுகிறது. போர்க்காலத்தில் விட்ட தவறுகளுக்கு ஒரே கழுவாய் திமுக அய்க்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும். மம்தா பனார்ஜியின் திரிணாமூல் கட்சி விலகியதற்கு சொல்லப்பட்ட  காரணங்களை விட பல மடங்கு காரணங்கள் திமுக வுக்கு உண்டு.  தமிழ்மக்களது  சிக்கல் தன்மானம் பற்றியது. அடிப்படை மனித உரிமைகள் பற்றியது. சனநாயகம் பற்றியது. சட்டத்தின் மாட்சி பற்றியது.  

சரி, ஒரு வாதத்துக்கு சென்ற ஆண்டு கற்றபாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை என்பதை சரியென்று எடுத்துக் கொண்டாலும் கடந்த ஓர் ஆண்டு காலத்தில் சிறீலங்கா அரசு உருப்படியாக எந்தவொரு பரிந்துரையையும் நடைமுறைப்படுத்தவில்லை. நடைமுறைப்படுத்தப்படாததற்கு காரணம் சிறீலங்கா அரசிடம் அதற்கான அரசியல் விருப்பம் அல்லது அக்கறை இல்லை.
 
இது இந்திய அரசுக்குத் தெரியும். தெரிந்த பின்னரும் எதற்காக இந்திய அரசு மகிந்த இராசபக்சே அரசை தாங்கோ தாங்கென்று தாங்கிக் கொள்கிறது?

எத்தனை போராட்டம் நடத்தினாலும் மத்திய காங்கிரஸ் அரசு வளைந்து கொடுப்பதாக இல்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

ஒன்று, வி.புலிகளுக்கு எதிரான போரை இந்தி்யாதான் பின்னுக்கு நின்று கொண்டு நடத்தியது. சிறீலங்கா அரசுக்கு ராடர், போர்க்கப்பல், புலனாய்வு, பயிற்சி, நிதி போன்றவற்றை இந்தியா கொடுத்து உதவியது. அதனால்தான் இந்தியாவின் போரைத்தான் சிறீலங்கா நடத்தி முடித்தது என்று மகிந்த இராசபக்சே நீளமும் சொல்லி வருகிறார். அதனை இந்தியா மறுக்கவில்லை.  சிறீலங்கா அரசுக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணை நடந்தால் அதில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, எம்.கே. நாராயணன் போன்றோர் சிக்குப்பட  வாய்ப்பிருக்கிறது.

இரண்டு, தமிழர்களை வடநாட்டு அரசியல்வாதிகள் மதிப்பதில்லை. அவர்களை இளக்காரமாகவே பார்க்கிறார்கள்.  

மூன்று,  திமுக அய்க்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் காங்கிரஸ் அரசு கவிழப் போவதில்லை என்ற தைரியம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

மொத்தம் உள்ள 248 ஆளும் கட்சி உறுப்பினர்களில் திமுக வெளியேறினால் மிச்சம் 230  உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  இவர்களோடு 22 முலாயம் சிங்கின் சமஜவாதக் கட்சி,  21  மாயாவதியின் பகுஜன் சமாஜவாதக் கட்சி மேலும் 9 சுயேட்சைகள் உட்பட 16   உறுப்பினர்களது ஆதரவு காங்கிரசுக்கு இருக்கிறது. இதனால் ஆளும் அய்க்கிய முற்போக்கு அணியின் மொத்த பலம் 289 எட்டுகிறது.  இது தேவையான  பெரும்பான்மைப் பலத்தை (272) விட 17 அதிகமாகும். எனவே ஆளும் கூட்டணி அரசு கவிழ வாயப்பில்லை. 

“இலங்கையில், 2009 இல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள், மிகவும் கவலையை அளிக்கின்றன. இந்திய மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், மிகவும் கவலைக்குரிய விடயம்” என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியிருக்கிறார்.  பின் எதற்காக “சிறீலங்கா நமது நட்பு நாடு” எனச் சொல்கிறீர்கள்? 

பிந்திக் கிடைத்த செய்தியின் படி திமுக ஆட்சியில் இருந்து மட்டுமல்ல அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டாதாக கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரது  கோபத்துக்குக் காரணம் மன்னிப்பு சபையின் அறிக்கை.  மன்னிப்பு சபை விடுத்த அறிக்கையில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற சொற்றொடர் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா கைவிட்டுவிட்டது என்ற செய்தியாகும். 

“இலங்கைத் தமிழர் சிக்கலில், செல்வா காலந்தொட்டு, அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும் தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் திமுக  குரலெழுப்பி வந்துள்ளது. இலங்கையில், இனப்படுகொலை நடத்தப்பட்டது, உலக நாடுகளின் விவாதத்திற்கு உரியதாகி விட்டது. இவைகளையெல்லாம் அய்.நா. அவையிலும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதிநெறியோடு ஆராய்ந்து பார்த்து, அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வர் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்குகே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும் இந்த சனநாயக விரோத செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை, இன உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு, திமுக  முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் மத்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே, இலங்கைத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பின் மத்திய ஆட்சியில், திமுக நீடிப்பது தமிழினத்திற்கு இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், மத்திய அமைச்சரவையிலிருந்தும் அய்.மு. கூட்டணியிலிருந்தும் தி.மு.க., உடனடியாக விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளது” இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.  இந்தியாவுக்கு தமிழ்மக்கள் மீது உண்மையான பற்றுக் கிடையாது.  சீரான அணுகு முறை கிடையாது. இப்போது கூட அமெரிக்கத் தீர்மானத்தை நீற்றுப் போக வைத்த இராசபக்சே அரசைக் காப்பாற்றவே இந்திய அரசு முனைப்புடன் செயலாற்றுகிறது.

ஆட்சியில் இருந்தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறியதன் மூலம் கடந்த காலங்களில் திமுக விட்ட இமாலயத் தவறுகளுக்கு ஓரளவாவது கழுவாய் தேடியுள்ளது.  அந்தளவில் திமுக வின் முடிவை நாங்கள் வரவேற்க வேண்டும்.  திமுக வின் முடிவு போராட்டத்தில் குதித்திருக்கும் மாணவர்களுக்கு உற்சாகும் கொடுக்கும் செய்தியாக அமையும் என எண்ணுகிறோம்.

athangav@sympatico.ca