இர.மணிமேகலை கவிதைகள்!

மனச்சித்திரம்

இர.மணிமேகலை கவிதைகள்!

தட்டான்கள் சிறகடிக்கும்
மழைக்காலத்து மலையென
அந்த நிகழ்வு நடந்துவிடும்
எதிர்பாராத வருகையில்
குல்மோஹர் மலர்கள் தூவப்பட்டிருக்கும் சாலையெங்கும்
என்றோ பூத்திருந்த மலரின் மணம் அப்பொழுது கசிந்துவிடும்
விடைபெறும் தருணங்களில்
யாரும் அறியாமல்
வெளிப்படத்தான் செய்கிறது
அது.
 

தளம் 

படபடக்கும் விழிகளில் நேயம் வழிகிறது
அசைய மறுக்கும் அதரங்களில்
பிரசவிக்க மறுத்த வார்த்தைகள்
எதிராளிகளின் கணைகளுக்குத் தொடர்ந்து இலக்காகிறாள்
ஆயுதங்களை இயக்கும் வகையறியாமல்
வண்ண மலர்களைத்தேர்கிறாள்
அவளது அசைவில்
நிலவையும் அளக்க வேண்டுதல்கள்
பாறைகளற்ற இலையின் தளத்துக்கு மீள்கிறது மனம்.

ஒளி

பௌர்ணமி ஒளி ததும்பி வழியும்
ஓர் இரவில்
கிண்ணங்களுடன் மாடிக்குச்செல்கிறேன்
அமுதன் என்னோடு
கிண்ணங்கள் வழிய வழிய ஒளிபிடிக்கிறோம்
கொள்கலம் மீறி எங்களுள் நிறைகிறது ஒளி
சிறு விரல்கள் தடவிய கண்களில்
உறக்கம் நிறைகிறது
அறையின் வெம்மையை மீறி.
– 
smekala10@gmail.com