இறைநிலைக்கே உயர்ந்து விட்டாள் ! [ சர்வதேச மகளிர் தினத்துக்காக இக்கவிதை சமர்ப்பணம் ]

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

பொறுமைக்கு இலக்கணமாய்
புவிமீது வந்திருக்கும்
தலையாய பிறவியென
தாயவளும் திகழுகிறாள்
மலையெனவே துயர்வரினும்
மனமதனில் அதையேற்று
குலையாத நிலையிலவள்
குவலயத்தில் விளங்குகிறாள்

சிலைவடிவில் கடவுளரை
கருவறையில் நாம்வைத்து
தலைவணங்கி பக்தியுடன்
தான்தொழுது நிற்கின்றோம்
புவிமீது கருசுமக்கும்
கருவறையை கொண்டிருக்கும்
எமதருமை தாயவளும்
இறைநிலைக்கே உயர்ந்துவிட்டாள்

பெண்பிறவி உலகினுக்கே
பெரும்பிறவி எனநினைப்போம்
மண்மீது மகான்கள்பலர்
கருசுமந்த பிறவியன்றே
காந்திமகான் உருவாக
காரணமே தாயன்றோ
சாந்தியொடு சமாதானம்
சன்மார்க்கமும் தாய்தானே

பெண்புத்தி  தனைக்கேட்டால்
பின்விளைவு நன்றாகும்
நன்புத்தி நவில்பவளே
நம்முடைய தாயன்றோ
துன்மதிகள் தானகல
துணிச்சலுடன் நின்றிடுவாள்
துயர்துடைக்கும் கரமாக
துணையாக அவளிருப்பாள்

வாழ்க்கைக்கு துணையெனவே
வந்தவளே பெண்ணன்றோ
வள்ளுவரே இச்சொல்லை
வண்ணமுற கொடுத்தாரே
வாழ்வென்றும் வசந்தமாய்
ஆக்குவதும் பெண்தானே
வையகத்தில் வாழ்வாங்கு
வழங்குவதும் பெண்ணன்றோ

பெண்மையைப்  போற்றிடா
மண்ணுமே உருப்படா
பெண்மையை வெறுத்திடும்
வாழ்க்கையே விடிந்திடா
பெண்மையே மண்ணினில்
பெருங்கொடை  ஆகுமே
பெண்மையை தெய்வமாய்
போற்றியே வாழுவோம்

jeyaramiyer@yahoo.com.au