இற்றைத் திங்கள்: சகாயம் ஆய்வுக்குழு விவகாரம், சிறையாளிகளின் சிக்கல்கள்…

இற்றைத் திங்கள்: சகாயம் ஆய்வுக்குழு விவகாரம், சிறையாளிகளின் சிக்கல்கள்...இந்த மாதம் இற்றைத் திங்கள் நிகழ்வு: அகநாழிகை புத்தக உலகம், 390 அண்ணா சாலை, KTS வளாகம், (RG Stone மருத்துவமனை அருகில்), சைதாப்பேட்டை, சென்னை – 600 015.

நிகழ்ச்சி நிரல்:  தமிழகத்தில் கனிமவள, தாது மணல், ஆற்றுமணல் கொள்ளைகளும் சகாயம் ஆய்வுக்குழு விவகாரமும்: உண்மை என்ன?

சிறப்புப் பேச்சாளர்கள்: முகிலன், ஒருங்கிணைப்பாளர், கனிமவளக் கொள்ளை சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் | சிவ இளங்கோ: தலைவர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் | தமிழகச் சிறைகளில் கைதிகளின் அவல நிலை: உமர்கயான். தமிழினியன். சே.ஜெ , ஒருங்கிணைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்

வணக்கம் நண்பர்களே,  இற்றைத்  திங்கள் நிகழ்வு இந்த மாதம் இரண்டு முக்கிய விவகாரங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது: சகாயம் குழு தொடர்பான அரசியல்கள் ஒன்று, நமது சிறைகளில் காணப்படும் நம்பமுடியாத அளவுக்கான அவலங்கள் மற்றொன்று. இவற்றைப் பேசவுள்ள நண்பர்கள் திரு. முகிலன், திரு. சிவ இளங்கோ. திரு. உமர்கயான் ஆகியோர் வெறும் பேச்சாளர்கள் அல்ல. களத்தில் நின்று போராடுபவர்கள்.

சுமார் முப்பது லட்சம் கோடி இழப்பை தமிழகத்துக்கு ஏற்படுத்தியிருப்பதாக நம்பப்படும் கனிமவள, தாதுமணல் கொள்ளைகள் தொடர்பாக பிரமாண்டமான எதிரிகளோடு மோதிவரும் முகிலனும் எல்லோரையும் சட்டத்துக்கு மு்ன்பு சமமாக்கவேண்டும் என போராடும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சிவ.இளங்கோவும் நம் கண்முன்னால் நடந்துகொண்டிருக்கும் ஒரு பெருங்கொள்ளையின் பின்புலத்தை உங்கள் முன்பு விரிவாக எடுத்துவைக்கவுள்ளார்கள்.

நீதிமன்ற உத்தரவால் வேறுவழியின்றி ஏற்பாடு செய்யப்பட்ட சகாயம் ஆய்வுக்குழு இன்று எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாக குறுக்கப்படுகிறது. அரசு தன்னால் இயன்ற காரியங்களையெல்லாம் செய்து அதை ஒரு செல்லாக்காசாக ஆக்க நினைக்கிறது.

இயற்கைவள கொள்ளைக்காரர்களின் பக்கமே தாங்கள் நிற்போம் என்கிறது அரசு. மடியில் கனமுள்ள எந்த எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை எதிர்ப்பதில்லை. ஊடகங்களும் கணக்குபோட்டுதான் உண்மையை வெளியிடுகின்றன. இந்த நிலையில் உயிரச்சம் இன்றி துணிச்சலாக இறங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ஒரு குழு. அதில் அங்கம் வகிப்பவர்கள் முகிலனும் சிவ இளங்கோவும் பிறரும். அவர்களின் குரலை கேட்க இற்றைத் திங்களின் இந்த நிகழ்வு ஒரு நல்ல வாய்ப்பு. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபிறகும். 2ஜிகளைவிட பெரும் எண்ணிக்கையிலான இழப்பு ஏற்பட்ட பிறகும் தமிழ்ச் சமூகம் விழித்துக்கொள்ளவில்லை.

மற்றொரு பக்கம், சிறைகளின் மீது வெளிச்சம் காட்ட வருகிறார் திரு.உமர்கயான். குறிப்பாக இஸ்லாமிய. தலித் அல்லது அரசியல் காரணங்களுக்காக சிறையிலடப்பட்டவர்களின் வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருக்கிறது என்பதை அவர் அம்பலப்படுத்தவருகிறார்.

உங்களது வருகையும் எதிர்வினையும் சமூகத்தின் இத்தகைய முக்கிய விவகாரங்கள் குறித்து பலரும் பேச வழிவகுக்கும்.

வாருங்கள்.

தகவல்: ஆழி செந்தில்நாதன்