இலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)

இலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)விலங்குகள் என்பதற்குப் பொதுவாக ‘நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகைகளைச் சார்ந்தன@ பலவகை உணவு உண்ணும் பழக்கங்களைக் கொண்டன@ இனப்பெருக்கத்துக்காக குட்டிகளை ஈன்று கொள்வன’ என்று பொதுமையான ஒரு வரையறைக் கொடுக்கலாம். நற்றிணையில் ஆடு, எருது, எருமை, கரடி, குதிரை, குரங்கு, சிங்கம், புலி, செந்நாய், பசு, பன்றி, மான், யானை உள்ளிட்ட 27 வகை விலங்கினங்கள் 221 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்வுப் பொருண்மை, அதிகப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலங்கினம் என்ற இரண்டின் அடிப்படையில் யானை, புலி, மந்தி, மான் செந்நாய் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட பாடல்கள் மட்டும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்விலங்கினங்களின் செயல்கள் மனிதச் செயல்களோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதை உளவியல் நோக்கில் ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

யானை
நற்றிணையில் யானைப்பற்றிய பாடல்கள் 70 ஆகும். களிறு, பிடி, வேழம், கோட்டுமா, ஒருத்தல், நன்மான் என்ற சொல்லாடலில் இவை குறிக்கப்படுகின்றன. விலங்குகளைப் பற்றிய செய்திகளில் யானைகளைப் பற்றியே செய்திகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. யானையின் செயல்கள் பெரும்பாலும் தலைவியுடன் ஒப்புமைப்படுத்திக் கூறுவதை நற்றிணையில் அறிய முடிகிறது. களிறு பிரிந்ததனால் பிடியானது தன் குட்டியுடன் வருந்தியிருக்கின்ற செயலினைக் கூறி, அதுபோல் தலைவன் பிரிந்திருப்பதனால் தலைவியும் வருந்துகிறாள் என்று அதோடு தொடர்;புப்படுத்திக் கூறுகின்ற முறையினை நற்றிணையில் காண முடிகிறது (நற்.85,114). இவை பெரும்பாலும் உவமையாகக் கூறப்படுகின்றன. யானையது வருத்தத்தை பின்வரும் பாடலால் அறியலாம்.

“பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்          
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்  (நற்.47)

புலியை அஞ்சிய பிடியானை, அதனை உணராத தன் இளங்கன்றைப் பேணி நிற்றலைப் போலப் பிரிவால் தலைவிக்கு வரும் துயரத்திற்கு அஞ்சிய தோழி, அதனை அறியாதே களவு உறவில் திளைக்கும் தலைவியைப் பேணிக் காத்து நிற்கின்றாள் (நற்.85).

தலைவன் தலைவியைத் திருமணம் செய்ய காலம் தாழ்த்துகின்றான். இதனால் அலரானது பரவி தன் துன்பத்திற்கு வழி செய்யும் என்பதனை யானையின் செயலைக் கூறி அதனோடு ஒப்புமை செய்கின்றனர். ‘சூழ் முதிர்ந்த இளம்பிடியானது, தனது அறியாமையினாலே இறுமாப்புற்றதாய்த் தன் வயிற்றுக் கருப்பிண்டம் வழுவி வீழுமாறு பெரு மூங்கில்களிலே துளிர்த்திருக்கும் வேல் முனை போன்ற கொழுமையான முளைகளை விடியற்காலை வேளையிலே சென்று தின்னும். அத்தகைய மலைப்பகுதி விளங்கும் நாட்டிற்கு உரியோன் தம் தலைவன், என்று தலைவி கூறுகிறாள். இங்கு சூல் முற்றிய யானை, தன் வயிற்றுப் பிண்டம் கலைந்து விழும் என்பதை அறியாதாய்ச் சென்று மூங்கில் முளைகளைச் சுவை கருதித் தின்னுகின்ற யானையின் செயலானது, அவ்யானையைப் போன்றே என் உயிரானது தலைவன் உறவினது பயனாலே உடலை விட்டு வழுவிப்போம் என்பதனை அறியாராய் இவ்வூரவர் அலர் எடுத்துத் தூற்றுவர் என்று கூறுகின்ற தலைவியின் நினைவோடு ஒப்புமைப்படுத்த முடிகிறது. இதனை,

“வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று,
இருவெதிர் ஈன்ற வேல் தலைக் கொழுமுளை,
சூல்முதிர் மடப்பிடி நாள்மேயல் ஆரும்”  (நற்.116)

என்ற பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.

தலைவன் பொருள் ஈட்டுவதற்காகச் சென்று விடுகிறான். அப்பொழுது தலைவிக்குக் குழந்தைப் பிறக்கிறது. தலைவன் இல்லாது தலைவி தன் குழந்தையுடன் வருந்துகிறாள். இவ்வருத்தத்தினை, யானையின் வருத்த நிலையோடு உவமைப்படுத்தி ‘கடிய நடையுடைய யானை தன் கன்றோடும் சேர நின்று வருந்தியிருக்க, நெடுகிலும் நீரற்றும் நிழற்றும் கிடக்கின்றதான இடம், (நற்.115) என்று புலவர் எடுத்துரைத்துள்ளமையை அறியமுடிகிறது.

யானையின் செயல்கள் பெரும்பாலும்    தலைவியின் வருத்த நிலையோடு தொடர்புடையதாகவே பிணைக்கப்பட்டுள்ளன. களவுக் காலத்தில் தலைவன் பிரிவை நினைத்தும், தனக்கு வரும் துன்பத்தை எண்ணியும், தலைவனுக்கு வரும் இடையூறு எண்ணியும், அலர் குறித்தும் வருந்துகிறாள். கற்பு காலத்திலும், குழந்தை பிறப்பின்போதும் வருந்துகிறாள். தலைவி மென்மையானவள், அவள் மனம் எதற்கும் களங்கக் கூடியது என்ற உளவியல் பண்பினை அடிப்படையாகக் கொண்டே களவு காலத்திலும் கற்பு காலத்திலும் தலைவி துன்ப செயல்களோடே புனையப்பட்டிருக்கலாம்.   

புலி
நற்றிணையில் புலியைப் பற்றின பாடல்கள் 26 ஆகும். யானைக்கு அடுத்தாற்போல் அதிக பாடல்களில் இடம்பெறும் புலி, ‘உழுவை’, ‘வயமான்’ என்ற சொல்லாடலில் குறிக்கப்படுகின்றன.

புலியின் செயல்கள் பெரும்பாலும் தலைவனின் செயல்களோடு ஒப்புமைப்படுத்திக் கூறுகின்ற முறையினை நற்றிணையில் அறிய முடிகிறது. இச்செயல் உள்ளுரை, இறைச்சி என்ற இரு நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண் புலியானது பிரசிவித்துள்ள பெண் புலிக்கு பாலை நிலத்தில் உணவு தேடுகிறது. அதற்காக ஆண்புலி இரை தேடிப் பதுங்கியிருக்கிறது. புலியின் இச்செயல் புலியைப்போல தலைவனும் தம்மையும் தம் பிள்ளைகளையும் பாதுகாப்பதிலிருந்துத் தவறமாட்டான் என்று மகிழ்தல், பெண்புலியின் பசியைத் தீர்ப்பது போல தலைவன் என்னுடைய மனக்கவலையை உணர்ந்து அதை தீர்ப்பான் என்று நம்புதல் என்ற தலைவியின் கருத்து ஒப்புமைப்படுத்தப்படுவதைக் காண முடிகிறது.

“நின்ற வேனிலி; உலர்ந்த காந்தள்
அழலவிர் நீள்இடை@ நிழிலிடம் பெறாஅது,
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென,
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,
புலிபார்த்து உறையும் புல்லதர்ச் சிறுநெறி”  (நற்.29)

என்ற பாடலடிகளால் புலி தன் மனைவியின் பசிக்காக உணவு தேடியதை அறியமுடிகிறது.

பெண் புலியானது பசியை உணர்ந்து அதைப் போக்கக் கருதும் ஆண்புலி சிறுவழியிடத்தே பதுங்கியிருக்கும் செயலானது கொடிய குணம் கொண்ட அதுவே, அதன் பிணையின் துயர்போகக் கருதிச் செயற்படுகின்றது. அவ்வாறே, தலைவன் விரைவிலே வரைபொருளோடு வந்து எம்மை மணந்து கொள்ளுதல் வேண்டும் என்று தலைவி வருந்துகின்ற செயலோடு ஒப்புமைப்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிகிறது (நற்.322).

பெண்புலியின் பசியைத் தீர்ப்பதற்கு, ஆண்புலி இரை தேடிப் பதுங்கி இருக்கின்றதான பாசத்தின் செவ்வியைக் கண்டேனாகியும், என்னுடைய மனக்கவலையை உணர்ந்து, அது தீர்த்தற்கு என்னை மணந்து கொள்ளும் முயற்சியிலே மனஞ் செலுத்துகின்றான் இல்லையே என தலைவி மனம் நொந்து வருந்தும் செயலையும் நற்றிணையில் அறியமுடிகிறது. (நற்.332)

கொடிதாகக் கருதப்படும் புலிகூட தன் மனைவி, குழந்தையிடத்து அன்புள்ளதாக விளங்குகிறது. எனவே தலைவன் அத்தகைய கொடியவன் அல்லன்@ அவன் தம்மை வரைந்துகொண்டுக் காப்பான் என்ற மன உறுதியைக் கலக்கமுற்ற தலைவியிடம் ஏற்படுத்துவதற்காக புலியின் செயல் எடுத்துரைக்கப்பட்டுள்ள உளவியல் பண்பை அறியமுடிகிறது.

குரங்கு
நற்றிணையில் குரங்கு இடம்பெற்றுள்ள பாடல்கள் 14. மந்தி, கடுவன் என்ற சொல்லாடலால் இவை குறிக்கப்படுகின்றன.    குரங்கின் செயல்கள் தலைவன், தலைவியோடு ஒப்புமைப்படுத்துகின்ற முறையினை நற்றிணையில் அறியமுடிகிறது. குரங்குகளின் நடத்தை, அவை உறவுகளோடு இணைந்திருத்தல் ஆகிய செயல்களை எடுத்துரைத்து தலைவி, தலைவணைத் திருமணம் செய்ய விரும்புதல், தலைவன் தம்மைத் திருமணம் செய்வான் என நம்புதல் ஆகிய கருத்துக்களோடு  உவமிக்கப்படுகின்றன.

குரங்கு தினையைக் கசக்கி தன் வாயில் போட்டுக்கொண்ட செயல், ‘நோன்புடையோர் தம் கையிடத்தே உணவைப் பெற்று உண்ணுதற்குக் குந்தி இருந்தாற்போல’ இருந்தது என்று உவமிக்கப்படுகிறது. இங்கு மந்தி கடுவனோடு நல்வரை ஏறித் தினைக்கதிரைத் தின்றபடி இன்புற்றிருக்கும் நாடன் என்றாள் தலைவி. அதனால் அவனோடு வதுவை பெற்றுச் சென்று இல்லறமாற்றி இன்பத்திலே திளைப்பாள் என்ற அவளது செயல் அறியப்படுகிறது. இதனை,

“திரைஅணற் கொடுங்கவுள் நிறைய முக்கி,
வான்பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன்” (நற்.115)

என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

தலைவி புதல்வனைப் பெற்று தலைவனுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறாள். இதனை, ‘வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு ஒன்று, சிங்கம் முதலாய விலங்குகளின் கூட்டம் நிரம்பியிருந்ததான குன்றிடத்தே, ஓர் வேங்கை மரத்தடியிலே தன் கன்றோடும் தங்கியிருந்தது. அந்தப் பசு தூங்குகின்றதான தன்மையைக் கண்டு, பஞ்சு போன்ற தலையுடைய ஒரு மந்தியானது, கல்லென்று ஒலித்தபடியிருந்த தன் சுற்றத்தைக் கையமர்த்திவிட்டு அந்தப் பசுவிடத்தே நெருங்கிச் சென்றது. பால் நிரம்பிப் பருத்திருந்த அப்பசுவினது மடிக்காம்பினை அழுந்தும்படி பற்றி இழுத்து, இனிதான அந்தப் பாலினைத் தன் குலத் தொழிலையும் கற்றறியாத வலிய தன் குட்டியின் கைந்நிறையப் பிழிந்து தந்தது’ என்று கூறப்படுகிறது. இதனால் அவ்வாறே தலைவியும் புதல்வனைப் பெற்று வாழும் இல்லற வாழ்வினை விரும்புகிறாள் என்பது பெறப்படுகிறது (நற்.57).

தலைவியின் களவொழுக்கத்தினால் அலரானது ஏற்பட்டது. இதனால் தனக்குத் துன்பம் வருமோ என்று வருந்தினால். அதனால் தோழி தலைவன் சிறைப்புரமாக இருந்து கேட்குமாறு தலைவியிடம், ‘தோழீ! மிளகுக் கொடிகள் வளர்ந்து படர்ந்திருக்கின்ற மலைச்சாரற்புறத்தே ஒரு கடுவனோடு களவுப் புணர்ச்சியிலே கூடிய இன்புற்றது சிவந்த முகத்தையுடைய மந்தி ஒன்று. புணர்ச்சியால் தன் மேனியிடத்துத் தோன்றிய வேறுபாடுகளைத், தளிர்களைத் தின்றபடி இருக்கின்ற தன் பெரிய சுற்றமெல்லாம் அறிந்துகொள்ளுமோவென அஞ்சியது. அதனால், பொன் போன்ற பூங்கொத்துக்களையுடைய வேங்கையினது பூக்கள் மலிந்திருக்கும் ஒரு கிளையின் மீது ஏறிச் சென்று அமர்ந்ததாய், ஆழமான நீர்நிலையை உடையதான நெடிய சுனையை நோக்கித் தலை கவிழ்ந்து, தன்னுடைய புல்லிய தலையிடத்துக் கலைந்திருக்கும் மென்மயிரைத் திருத்திக் கொள்ளவும் செய்தது. அத்தன்மையுடைய நாட்டின் தலைவன்’ என்று கூறுகிறாள். இதனால் தலைவி பொருத்திருக்கிறாள் (நற்.151).

குரங்கு தன் உறவுகளோடு இணைந்திருத்தல், தன் குட்டிகளுக்குப் பாலூட்டுதல், களவில் ஈடுபட்ட குரங்கு தன் மென்மயிரைத் திருத்திக்n;காள்ளுதல் ஆகிய செயல்களால் தலைவியானவள் தலைவனின் வரைவிற்குப் பொருத்திருத்தல், குழந்தைப்பேறினை விரும்புதல் ஆகிய செயலினை அறியமுடிகிறது.

மான்
நற்றிணையில் மான் பற்றிய பாடல்கள் 18. கலை, இரலை, உழை, நவ்வி என்ற சொல்லாடலால் இவை குறிக்கப்படுகின்றன.  தலைவன் தலைவியிடையே ஏற்பட்ட பிரிவு அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிதற்கு மானின் செயல்கள் உவமையாக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. தலைவன் பிரிந்துச் சென்றதால் தலைவி வருத்தம் கொள்கிறாள். கலை, பிணை மான்களைக் கண்டு அவைகள் ஒன்றாக இணைந்திருக்கின்றன. தான் மட்டும் தனித்து இருக்கின்றேனே என்று வருந்துவதாகவே நற்றிணையில் மானை உவமையாகக் கொண்டுள்ள அனைத்துப் பாடல்களும் அமைந்துள்ளன.

தலைவன் பொருள்வயின் பிரிவுக்குச் செல்வதாகத் தோழிக்குக் கூறுகிறான். அதனைக் கண்ட தோழி, நீ தலைவியைப் பிரிந்து செல்லும் செயலினால் அவள் கலைமானைப் பிரிந்த பிணையைப்போல் வருந்துவாள்@ இவளையும் நும்முடன் அழைத்துச் செல்வபராக, நீவிர் பொருளினைத் தேடி வருவதற்குச் சென்றீராயின் நலமாயிருக்கும் என்பதை,

“கலையொழி பிணையின் கலங்கி, மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம்” (நற்.37)

என்று தோழி எடுத்துரைக்கின்றாள். இவற்றால் தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கும் தலைவனது செயல் அவளின் துன்பத்திற்கு வழிவகுக்கும் (நற்.204). அச்செயல் நடைபெறாமலிருக்க இவளையும் உன்னுடன் அழைத்துச்செல்க என்பது பெறப்படுகிறது.

தலைவன் வினை முடித்துத் திரும்பி வரும் வழியில் மானின் செயலைப் பார்க்கின்றான். அதன் இணைபிரியா வாழ்க்கையை நினைத்து, தலைவி நம் பிரிவால் வருந்துவாளே என்று நினைத்து தேர்ப்பாகனிடம் ‘நின் தேர்தானும் மிக விரைந்து செல்வதாக’ (நற்.242) என்று கூறுகின்றான். இணைபிரியா வாழ்க்கை நடத்தும் மானின் செயல் தனது பிரிவினால் மனைவி வருந்துவாளே என்றெண்ணி விரைந்து செல்கின்ற செயலுக்குக் காரணமாக அமைந்த உளவியல் பண்பினை அறியமுடிகிறது.

தலைவன் களவு காலத்தும் கற்பு காலத்தும் தலைவியைப் பிரிந்து பொருள்வயின் செல்கிறான். அவனது இச்செயல் இருவருக்குமே துன்பமளித்தது. இணைபிரியா மானின் செயலே இருவரின் துன்பத்தை அறிதற்கும், போக்குதற்கும் காரணமாக அமைந்தன.

செந்நாய்
நற்றிணையில் செந்நாய் பற்றிக் குறிப்பிடும் பாடல்கள் 5. ஞமலி, செந்நாய் என்ற சொல்லாடலில் இவை குறிக்கப்படுகின்றன.  செந்நாயின் செயல்கள் தலைவனின் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்ற பாங்கினை நற்றிணையில் அறியமுடிகிறது. தலைவனது பிரிவால் தலைவிக்கு பசலை ஏற்பட்டு வருந்துவதற்கு உவமையாக செந்நாயின் செயல்கள் உவமையாக்கப்படுகின்றன. ‘வெயிலின் மிகுதி விளங்கிய வெப்பத்தை உடைய மலைப் பக்கமானது, வெண் துகிலினை விரிந்து மூடியிருந்தாற் போலத் தோன்றும், கோடை நீடிய அத்தகைய குன்றத்தின் பக்கத்தே, பசியினாலே தளர்ந்துபோன செந்நாயானது, கோடைக் காற்றானது வாடியிருந்த மரை ஆவைக் கொன்று தின்று, தன் பசி தீர்ந்தது. அங்ஙனம் தின்ற பின் எஞ்சிக் கிடந்த மிச்சம், நெடுந்தொலைவிடத்து நாட்டினைக் குறித்தவராகக் கடத்தற்கரிய அச்சுர நெறியிலே செல்லும் பயணிகளுக்கு உணவாகப் பயன்படும்.’ என்று தோழி கூறுகிறாள். இங்கு செந்நாய் தின்று கழித்த மரை ஆவின் ஊன் வழிச் செல்வார்க்கு உணவாகும் என்பது ‘நீ நுகர்ந்து கைவிட்டதனால் இவளது மேனியிற் எழிலைப் பசலை நோய் பற்றி உண்ணும்’ என்பதை உணர்த்துகிறது. இதனை,

“துகில்விரிந்த்; தன்ன வெயில்அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு
அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்” (நற்.43)

என்ற அடிகள் எடுத்தியம்புகின்றன. மரையாவினைக் கொன்று அழித்த மரைஆவின் செயல்  தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனின் செயலால் அவளுக்குப் பசலை ஏற்பட்டு அவளின் அழகு அழிதற்கு காரணமான செயலோடு ஒப்புமைப்படுத்தமுடிகிறது.

முடிவுகள்
விலங்கினங்களில் யானையைப் பற்றிய பாடல்களே மிகுதியாக இடம்பெறுகின்றன. யானையின் செயல்கள் பெரும்பாலும் தலைவியின் வருத்த நிலையோடு ஒப்பிடுவதாகவே பிணைக்கப்பட்டுள்ளன. களவுக் காலத்தில் தலைவன் பிரிவை நினைத்தும், தனக்கு வரும் துன்பத்தை எண்ணியும், தலைவனுக்கு வரும் இடையூறு எண்ணியும், அலர் குறித்தும் வருந்துகிறாள். கற்பு காலத்திலும், குழந்தை பிறப்பின்போதும் வருந்துகிறாள்.

யானைக்கு அடுத்தாற்போல் அதிக பாடல்களில் இடம்பெறும் விலங்கு புலி. புலி தலைவனோடு ஒப்பிடப்படுகிறது. கொடிதாகக் கருதப்படும் புலிகூட தன் மனைவி, குழந்தையிடத்து அன்புள்ளதாக விளங்குகிறது. எனவே தலைவன் அத்தகைய கொடியவன் அல்லன்@ அவன் தம்மை வரைந்துகொண்டுக் காப்பான் என்ற மன உறுதியைக் கலக்கமுற்ற தலைவியிடம் ஏற்படுத்துவதற்காக புலியின் செயல் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

குரங்கின் செயல்கள் தலைவன், தலைவியோடு ஒப்புமைப்படுத்தப்படுகின்றன. குரங்கு தன் உறவுகளோடு இணைந்திருத்தல், தன் குட்டிகளுக்குப் பாலூட்டுதல், களவில் ஈடுபட்ட குரங்கு தன் மென்மயிரைத் திருத்திக்n;காள்ளுதல் ஆகிய செயல்களால் தலைவியானவள் தலைவனின் வரைவிற்குப் பொருத்திருத்தல், குழந்தைப்பேறினை விரும்புதல் ஆகிய செயலினை அறியமுடிகிறது.

தலைவன் தலைவியிடையே ஏற்பட்ட பிரிவு அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிதற்கு மானின் செயல்கள் உவமையாக்கப்பட்ட பாடல்களால் அறியமுடிகிறது. தலைவன் களவு காலத்தும் கற்பு காலத்தும் தலைவியைப் பிரிந்து பொருள்வயின் செல்கிறான். அவனது இச்செயல் இருவருக்குமே துன்பமளித்தது. இணைபிரியா மானின் செயலே இருவரின் துன்பத்தை அறிதற்கும், போக்குதற்கும் காரணமாக அமைந்தன.

செந்நாயின் செயல்கள் தலைவனின் செயல்களோடு ஒப்புமைப்படுத்துகின்றன. தலைவனது பிரிவால் தலைவிக்கு பசலை ஏற்பட்டு வருந்துவதற்கு உவமையாக செந்நாயின் செயல்கள் உவமையாக்கப்படுகின்றன.

moorthy12353@gmail.com