இலங்கையின் துயரம்: குண்டு வெடிப்புகள் ஏற்படுத்திய பேரழிவு!

இலங்கையில் குண்டு வெடிப்பு

அண்மைக்காலமாக அமைதியாக விளங்கிய இலங்கையின் தலைநகரான கொழும்பிலும், கொழும்புக்கு அண்மையிலுள்ள நீர்கொழும்பிலும் , மட்டக்களப்பிலும் கிறித்தவ ஆலயங்களில் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹொட்டல்கள் சிலவற்றில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிறித்தவர்களின் புனித நாளான ஈஸ்ட்டர் ஞாயிறான இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மீண்டும் யுத்தச்சூழல் நினைவுகளையெழுப்புகின்றன. குண்டு வெடிப்புகள் கிறித்தவ ஆலயங்களிலும், கொழும்பிலுள்ள ஹொட்டல்களிலும் நடைபெற்றதாக இன்னுமோர் ஊடகம் தெரிவிக்கின்றது.

ஆட்சியைப்பிடிக்க முனைவதற்காகத் தீய சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பாவித்து , நாட்டில் உறுதியற்ற நிலையினை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் பெற முயற்சிகள் செய்யக்கூடுமென்ற நிலையில், மத, இன வெறி பிடித்த அமைப்புகள் தம் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் பெற இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடுமென்ற நிலையில் இக்குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் உறுதியற்ற நிலை தோன்றாத வகையில் இலங்கை அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமென எதிர்பார்ப்போம். விரைவில் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான சக்திகளை இனங்கண்டு , நாட்டில் சட்ட ஒழுங்கினை நிலை நாட்டிட விரைவான , உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ள இக்குண்டு வெடிப்புகள் திட்டமிட்ட செயல் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இக் குண்டு வெடிப்புகளில் பலியாகிய அனைவருக்கும் எமது ஆழ்ந்த அஞ்சலி. காயமடைந்த அனைவரும் விரைவில் மீண்டும் பூரண சுகத்துடன் எழுந்துவர வேண்டுகின்றோம். அத்துடன் துயரகரமான இச்சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் , பலியாகியவர்களின் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றோம்.